ஒரு மரம்; தனி மரம்

வாசலில் கதவு திறக்கும் சத்தம். சத்யாதான் வருகிறாள். அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் என்னால் அதை உணர முடிகிறது. மணி இப்பொழுது மாலை ஆறு. சரியாக ஆறைத் தொடும்போதுதான் அவள் நுழைவாள். அந்த நேரம் என்றும் தப்பியதில்லை. மாதத்தின் கடைசி நாளில்தான் சில சமயம் அது மாறுவதுண்டு. அன்றெல்லாம் அலுவலகத்தில் யாருக்காவது பார்ட்டி என்று நான் புரிந்துகொள்ள வேண்டும். அவளாகச் சொல்ல மாட்டாள். என்னத்தச் சொல்றது என்ற ஒரு அலுப்பு உண்டு அவளுக்கு.

மாதா மாதம் அவள் அலுவகத்தில் யாராவது ஓய்வு பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லது என்னமாவது ஒரு காரணத்தைச் சொல்லி யாராவது ஒருவர் பார்ட்டி என்று வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆபீஸில் வேலை நடக்கிறதா அல்லது இந்தப் பார்ட்டி மட்டும்தான் நடக்கிறதா என்று தோன்றும் நமக்கு. மதிய விருந்து என்றால் மணி பன்னிரெண்டரைக்கே எல்லாரும் கிளம்பிப் போய் விடுகிறார்கள். பிறகு அவர்கள் வந்து உட்காரும் போது மணி மூன்றரை. இதை நான் சொன்னால் அவளுக்குக் கோபம் வரும். நான் சொல்வது ஒரு பொது அபிப்பிராயம். ஆனாலும் அது அவளுக்குத் தாங்காது. ஆமா, உங்க ஆபீஸ்ல எல்லாம் ஒழுங்கா இருந்ததாக்கும்…என்பாள். ஓய்வு பெற்றவனுக்கு எதையும் சொல்ல அருகதையில்லை. பார்ட்டி, பார்ட்டி…சதா இதுதானா உங்க ஆபீஸ்ல…
அன்றெல்லாம் எப்படியாவது மணி ஏழு ஆகி விடும் அவளுக்கு. பொழுது இருட்டும் சமயம், தெருவில் நிசப்தம் நிலவும் ஏகாந்த அமைதியில் அவள் கதவின் கொண்டியை உயர்த்தும் சத்தம் மட்டும் துல்லியமாய்க் கேட்கும். நேரமாகி விட்டதாலேயே அன்று ஏதாவது பார்ட்டியாக இருக்கும் என்று ஏற்கனவே உணர்ந்து வைத்திருப்பேன் நான். அவளின் வருகையை எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல்; எதிர்நோக்குவேன். ஆறு மணிக்கு வருவது போலவே இன்றும் இருக்கிறானே என்று கூட அவளுக்குத் தோன்றலாம்தான்.

ஆனால் இன்று மிகச் சரியாக ஆறுக்கு நுழைகிறாள். இது அவளின் மற்ற நாட்களிலான வழக்கமான நேரம். முன்பெல்லாம் எழுந்து சென்று திண்ணைக் கதவைத் திறப்பதுண்டு. இப்பொழுது நான் அதைச் செய்வதில்லை. அவள் வரும் நேரம் நெருங்குகையில் முன்னதாகவே பூட்டைத் திறந்து வைத்து விடுகிறேன்.

அவள் நுழைகையில்; முகத்திற்கு முன்னே நான் நிற்பதில்லை. அது ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை. அவளுக்கும் பிடிக்காது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவளாகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகையில் முதல் அறையில் அமர்ந்து கொண்டிருக்கும் என்னை அவள் திரும்பிக் கூடப் பார்க்காத அந்த நாளிலிருந்துதான்; இந்த முடிவுக்கு வந்தேன். சரிதான் போடீ…!

முன்பெல்லாம் அவள் வந்து நின்ற பின்னால்தான் திறப்பேன். அப்படித் திறப்பதில் அப்பொழுது ஒரு உற்சாகம் இருந்தது. அது எங்கே போனது? ஏன் போனது? இருவருக்குமே தெரியவில்லை. அவளுக்கும் அப்படியான மனநிலைதான் இருக்கிறது. முன்னதாகவே நான் திறந்து வைத்திருந்த அன்று அவள் எதுவும் சொல்லியதில்லை.

அவள் என்னைத் திரும்பிப் பார்க்காதது என் மனதில் ஒரு ஆதங்கமா?அதுவுமில்லை. என்னவோ அது தானாகவே இப்படி ஆகிப் போனது. அவள் அவள்பாட்டுக்கு இருக்கிறாள் நான் நான்பாட்டுக்கு இருக்கிறேன். அவ்வளவே!

இந்த வாழ்க்கையே அடிக்கடி சலித்துப் போகக் கூடியதாகத்தானே இருந்து தொலைக்கிறது? நாமாகவே என்னத்தையாவது செய்து செய்துதானே அதை உற்சாகமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறோம் அல்லது பாவித்துக் கொள்கிறோம்?

இதோ சத்யா உள்ளே நுழைகிறாள். நேரே சென்று பீரோவின் கைப்பிடியில் தன் பேக்கை மாட்டிவிட்டு, பாத்ரூம் நோக்கிச் செல்கிறாள். அடுத்தது அவள் இருக்கை, உள்ளே அமர்ந்து கணினியில் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் பையனுடனாகத்தான் இருக்கும்.

இன்னிக்கு என்ன விசேடம்? ஏதாச்சும் தபால் வந்ததா? பாங்க் வேலையெல்லாம் முடிச்சிட்டீங்களா? சில சாமான்லாம் சொல்லியிருந்தேனே, வாங்கிட்டீங்களா? முக்கியமா அரிசி தீர்ந்து போயிடுச்சின்னு சொன்னேனே, வாங்கினீங்களா? அவனுக்கு செவன் க்ரெயின்ஸ் இல்ல…அதுவும் வாங்கணும்…வாங்கியாச்சா? – இப்படிக் கேட்க நிறையக் கேள்விகள் அவளிடம் இருக்கத்தான் செய்கின்றன. அவள் கேட்பதில்லை.

கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் முடித்து வைத்திருக்கப் போகிறேன். ஒருவேளை அதுவே அவளின் எண்ணமாகக் கூட இருக்குமோ என்னவோ?

அவளாக என்றோ ஒரு நாள் கேட்காமல் இருக்க ஆரம்பித்து, இன்றுவரை அப்படியே இருந்து வருகிறாள். இப்படியும்தான் இருந்து பார்ப்போமே என்பது போல். இது குறித்து நானும் அவளை வற்புறுத்துவதில்லை. உனக்குச் சலிப்பாகத் தோன்றும் விஷயம் எனக்கும் சலிப்பாகாதா அல்லது ஆகக் கூடாதா? என்னாலும் உன்னை மாதிரியே இருக்க முடியும். உனக்கு மேலும் இருப்பேன் நான்.

நீ சலித்தால் நான் சலிப்பேன் சிங்காரப் பெண்ணே…நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொண்ணே….இப்படி என்னமாவது மனதுக்குத் திகிடு முகடாகத் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. எனக்குக் காமெடியாகத் தோன்றும் விஷயம் அவளுக்கும் சிரிப்பாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லையே?

ஆனாலும் மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு என்பது இல்லையென்றால் இந்த வாழ்க்கை வெறுத்துத்தான் போகும். அது சத்யாவிடம் துளிக் கூடக் கிடையாது. மனிதன் கலை, கலாச்சாரம், இவைகளோடு கலந்தவனாய் இருக்க வேண்டும். அப்படியானால்தான் வாழ்க்கை ஸ்வாரஸ்யப்படும். ஒரு வேளை இதுவே அவளின் தற்போதைய வறண்ட மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம்.
வறண்ட என்று சொன்னேனல்லவா? தவறு…தவறு…தன் பையனைப் பொறுத்தவரை அவள் மனம் வறண்டவளில்லை. என்னைப் பொறுத்து மட்டும்தான் அது அப்படியாகிவிட்டது.

நாற்பது வயதைத் தாண்டிய பொழுதில் அலுத்துப் போய், இன்று ஐம்பதைக் கடந்துவிட்ட நிலையில் காய்ந்து வறண்டு சருகாகிப் போனதோ என்னவோ? அடுத்து உதிர வேண்டியதுதான் பாக்கி.

உள்ளே அவன் என்னவோ சொல்லிக் கொண்டேயிருக்கிறான். அவளும் ம்…ம்…ம்…என்று ம் கொட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். அப்படி என்னதான் விஷயம் இருக்குமோ அம்மாவுக்கும் பிள்ளைக்கும்? அவனின் எல்லாப் பேச்சுக்களையும் அவள் அவனுடைய சாதனையாக நினைக்கிறாள். அதனால்தான் சொல்ல வேண்டியது தவறிப்போனது என்கிறேன் நான். என்னையும் சொல்ல விடவில்லையே!

பையன்தான் முக்கியம். இது அவள் அடிக்கடி சொல்வது. நானென்னவோ அப்படியில்லை என்பது மாதிரி. அவ்வாறு நினைப்பதற்கு எனக்கு மட்டும்தான் உரிமை என்பது போல் அதைச் சொல்வாள் அவள். அதைக் கேட்கச் சிரிப்புத்தான் வரும். என்றாலும் நான் அதை வெளிக் காட்டிக் கொள்வதில்லை.
கடமைகளை எந்நேரமும் இப்படித் தலையில் தூக்கிச் சுமந்து கொண்டுதான் திரிய வேண்டுமா? நாமாகச் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டே போனோமென்றால் தானாகவே அது சென்றடைய வேண்டிய இடத்திற்குப் போய்த்தானே ஆக வேண்டும். அவன்தான் முக்கியமென்றால் அவனின் கல்வியில் தீவிரக் கவனம் செலுத்தி அவனைத் தேற்றியல்லவா விட்டிருக்க வேண்டும்? அது அவன் போக்கில் என்று ஆகிப் போனது ஏன்? இதை நான் நினைக்கத்தான் முடியும். சொல்ல முடியாது. சொன்னால் பொpய சண்டைதான். பிறகு அடித்துப் பிறண்டு படுத்துக் கொள்வாள். நாலு நாளைக்கு அவளை எழுப்ப முடியாது. எதையென்று சொல்வது? இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான மனோவியாதியால் அவதிப் படுகிறார்கள். யாராலும் தீர்க்க முடியாத ஆயுள் பரியந்தம் அது.

தீபக் ஆறு பேப்பர்ஸ் அரியர்ஸ் வைத்திருக்கிறான்.

என்னடா இது? ஏண்டா இப்டி?

என்னவோ ஆயிப் போச்சுப்பா…விட்ரு பார்த்துக்கலாம்.

இதென்ன நான் சொல்ல வேண்டியதை இவன் சொல்கிறான்.

எல்லாம் முடிச்சிருவான்…பேசாம இருங்க…இது சத்யா.

நான் ஏதாவது சொல்லி விடுவேனோ என்று முந்திக் கொண்டு அவள் சொல்கிறாள். என் வாய் ஒரேயடியாக அடைத்துப் போனது.

என்ன காரணம் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?

கொஞ்சம் காலேஜ்ல பிரச்னை பண்ணிட்டாங்கப்பா…அதுல அப்செட் ஆயிட்டேன்…

சரி விடு…போனாப் போறது…இப்போ முடிச்சிர்லாமா?

முடிச்சித்தான் ஆகணும்…

ஒரே ஸ்ட்ரோக்குல அடிச்சித் தள்ளிடு…உன்னால முடியாதா என்ன?

மொக்கை போடாத…ரொம்பச் சொன்னேன்னா அப்புறம் ஒண்ணொண்ணாத்தான் பாஸ் பண்ணுவேன்…
என்ன பாஷை இது…மொக்கை மொழங்கை என்றுகொண்டு…லேசாகச் சொன்னதற்கே இப்படி ஒரு பதிலா? கல்லூரி இவனுக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்திருக்கிறதா? கல்வியின் பலன் இதுதானா? இதுக்குத்தான் எதுவும் பேச வேண்டாம் என்றாளா அவள்?

அதற்குப் பின்தான் சத்யாவின் பேச்சு என் சார்பாகக் குறைந்திருக்கிறது என்பதாக இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. எதற்காக இவள் இப்படி ஆகிப் போனாள்? தன்னைத் தானே ஏன் இப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறாள்? இயல்பாக இல்லையே இது?

இவளுக்கு முன்பாகவே தீபக் என்றோ என்னிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டு விட்டான். இன்றைய வயதுப் பையன்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றார் என் நண்பா;. அவருக்கு அம்மாதிரி அனுபவம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவருக்குப் பிள்ளைகளே இல்லை. எதிலோ படித்ததை, பார்த்ததை அல்லது கேள்விப் பட்டதை வைத்து அவா; சொல்லியிருக்கலாம். ஆனால் அவாpன் முடிவு பல சமயங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் இந்த விஷயத்தை நான் அவாpடம் பகிர்ந்து கொண்டேன்.

விடுங்க…விடுங்க… என்றார். நானென்ன பிடித்துத் தொங்கிக் கொண்டா இருக்கிறேன். எதையுமே அத்தனை அழுத்தமாக நான் மனதில் போட்டுக் கொள்வதில்லை. எல்லாமும் அப்படி இப்படித்தான் இருக்கும. எந்த விஷயமும் என்னை அத்தனை அதிர்ச்சிப் படுத்துவதில்லை. இதுவே எனது அனுபவத்தின் அடையாளம். எது என்னை அப்படி நினைக்க வைக்கிறது என்பது தெரியவில்லை. பொதுவாக என் மனதில் தோன்றுவது இது.

எதைச் சொன்னா என்ன? சொல்லாட்டா என்ன? எல்லாமும் கிணத்துல போட்ட கல்லுதான் உங்கப்பாவுக்கு…

சத்யா என்றோ இப்படிச் சொன்னதாக நினைவு. பட்டென்று ஒரு விஷயத்திற்கு ரியாக்ஷன் காண்பிப்பதைவிட, அதை ஆறப் போட்டு, ஊறப்போட்டு, ஒரு நல்ல முடிவைக் காணலாம் அல்லது ஒன்றுமே செய்யாமல் விட்டும் விடலாம். இம்மாதிரி வசதி உள்ள ஒரு ஒத்தி வைப்பு என்னிடம் இருப்பதை நான் மறுக்கக் கூடாதுதான். பல சமயங்களில் அது நல்லதையே விளைவித்திருக்கிறது.
ஆனால் ஒன்று. இன்றைய இளைஞா;களுக்கு வயதானவர்களிடம் பேச எதுவுமில்லை. அவர்களின் உலகம் தனி. அது அவர்களின் வயதொத்தவர்களின் உலகம். அவர்களுக்குள் அவர்கள் ஏராளமாய்ப் பேசிக் கொள்கிறார்கள். என்னென்னவோ விஷயங்களை அலசுகிறார்கள். அவற்றில் நல்லவைகளும் இருக்கிறது, நிறையக் கெட்டவைகளும் இருக்கின்றன. ஒரு வேளை இதெல்லாம் அப்பாவிடம் பேச முடியாது என்று நினைத்திருக்கலாம். ஆனால் அப்பாவிடம் பேச வேண்டியதும் விட்டுப் போகிறதே? எதற்கும் அவன் இப்போது என்னிடம் வருவதில்லை.

அவனிடம்தான் ஒரு ஏ.டி.எம் கார்டு இருக்கிறதே, பிறகு நானெதற்கு? அவள்தான் கொடுத்து வைத்திருக்கிறாள். தேவைக்குக் கேட்டுப் பெறுவது எப்படி? இப்பொழுதே எழுதி வைப்பது எப்படி? எல்லாம் காலத்தின் கோலம்.

என்னவோ சொல்ல வருவதுபோல் வருவான்..ஒண்ணுமில்லப்பா…என்றுவிட்டு நகர்ந்து விடுவான்.
அவனுக்கு அவன் அம்மாவிடம்தான் நிறையப் பேச இருக்கிறது. அதில்தான் ஒரு தன்னிச்சையான சுதந்திரத்தை உணர்கிறான். அப்பாவிடம் சொல்லி அவர் ஏதாவது மறுத்து விட்டால் அதை அவனால் தாங்க முடியாது. அம்மாவிடம் சொன்னால்தான் உடனே ஓ.கே. ஆகும்.

கேட்டுவிட்டு அவள் என்னிடம் வந்து சொல்கிறாள். பையனுக்காக வாதாடுகிறாள். நான் அதற்கு மாற்றாகத்தான் இருப்பேன் என்று அவளாகவே முடிவு செய்து விட்டாள். இவளாவது வந்து சொல்கிறாளே என்று சமாதானம் செய்து கொள்கிறேன் நான். என்னிடம் சொல்லாமலும் செய்து விட முடியும் அவளால். இன்றுவரை அவள் அந்த எல்கைக்குப் போகவில்லை. எதுவோ அவளைத் தடுத்தாட்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு ஆறுதல்தான்.

சமீப நாட்களாக அதுவும் குறைந்து கொண்டு வருகிறதோ என்று சந்தேகம். தீபக்கும் அவளும்; கிளம்பிப் போகிறார்கள். என்னென்னவோ பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதெல்லாம் எதற்கு என்பதுபோல் நிறைய அதில் இருப்பதைப் பார்க்கிறேன் நான். சொன்னால் சண்டை வரும். தேவை என்பதற்கான காரணத்தைச் சொல்வாள் அவள். அந்தக் காரணங்களின் செயற்கைத் தன்மை அவளுக்கே நன்றாகத் தொpகிறது. எப்படி எப்படியோ கூட்டிக் குறைத்துச் சொல்லி முடிக்கிறாள். நானும் தலையசைத்துக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். தேவை என்று நீட்டிக் கொண்டே போனால் பின்னா; அதற்கு ஒரு முடிவே இருக்காது என்பது என் கருத்து.

உள்ளே அவன் படிக்கிறான் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். படித்தவைகளை அம்மாவிடம் சொல்லிக் காண்பிக்கும் பழக்கம் அவனுக்கு உண்டு. புரிகிறதோ புரியவில்லையோ தலையசைத்துக் கொண்டிருப்பாள் அவள். அதற்கும் ஒரு பொறுமையும் சகிப்புத் தன்மையும் கண்டிப்பாக வேண்டும்தான். நிச்சயம் அவனின் பாடங்கள் அவளுக்குப் புரியப் போவதில்லை. அம்மாதிரிப் புரியாத பாடங்களை அப்பாவிடமும் சொல்லிக் காண்பிக்கலாமில்லையா? அது ஏன் இல்லாமல் போனது? ஒரு வேளை ஒரு பெண் இருந்தால் அது என்னிடம் அப்படிச் செய்யுமோ என்னவோ?

ஒரு பெண் பிள்ளை இல்லாதது பெரிய குறைதான். அது எனக்கு ரொம்பத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. அதாவது நான் உணர்ந்ததைச் சொல்கிறேன். அது இருந்தால் என்ன நீ சதா இவன்கிட்ட வந்து இப்டி உட்கார்ந்திட்டிருக்கே என்று கேட்கலாம். அப்பாவைத் தனியா விட்டிட்டு அப்படி என்னம்மா அவன்ட்டப் பேச்சு என்று அவளைக் கண்டிக்கலாம். அப்பொழுது அது அவளுக்கு உறுத்தலாம். சரி, படி…என்றுவிட்டு எழுந்து வரலாம்.

இப்பொழுதும் அவள் அதைச் செய்யத்தான் செய்கிறாள். படி என்று அவனிடம் சொல்லிவிட்டு உறாலுக்கு வந்து அவள் படிக்க ஆரம்பித்து விடுகிறாள். தினசரி படிப்பதில் அத்தனை ஆர்வம் அவளுக்கு. ஒரு செய்தி விடாமல் மேய்ந்து விடுவாள். என்ன அரசியல் நிகழ்வினைக் கூறினாலும் அதற்கு ஒரு எதிர் வினை அவளிடம் கண்டிப்பாக இருக்கும். நாட்டு நடப்பு அப் டு டேட்டாக வைத்திருப்பாள். அதெல்லாம் எனக்கு சந்தோஷம்தான். ஆனால் பேச்சு என்பது இல்லையே?

நீங்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும் இந்த இடத்தில். பேசவில்லை என்பதை நான் இங்கே குறையாகச் சொல்ல வரவில்லை. ஏனென்றால் நானே ஒரு புத்தகப் புழு. பேசும் நேரத்தை படிப்பதில் கழிக்கலாமே என்று நினைப்பவன். இன்றைக்கு இந்தப் புத்தகம் என்று எடுத்து வைத்துக் கொண்டு படித்துத் தீர்ப்பவன். படித்துக் கழிக்க என்னிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அவள் என்னிடம் வந்து சேருவதற்கு முன்பே இளம் பிராயத்திலிருந்து இந்தப் புத்தக வாசிப்பிற்கு அடிமையானவன் நான். ஆகையினால் தனிமை என்றுமே எனக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் நான்தான் தனியனாகவே இருப்பதில்லையே? பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட அனுபவமும் செழுமையும் மிக்க மனிதர்களோடு அல்லவா நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நானெப்படி தனியனாக முடியும்? சற்றுத் தாமதமாகத்தான் இதை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு.

உங்களுக்கு இந்த புஸ்தகம்தான் முதல் பொண்டாட்டி…

இருக்கட்டுமே…அதனால உடலும் மனமும் கெடப் போறதில்லையே…

அதெப்படிச் சொல்ல முடியும்…என்ன புஸ்தகம் படிக்கிறீங்கங்கிறதைப் பொறுத்ததாச்சே அது…

அது உன் பார்வை… எனக்குன்னு நிறைய உறுதிகள் உண்டு…வேணும்னா வந்து பாரு…

வேண்டாம்ப்பா…அதெல்லாம் உங்களோடவே இருக்கட்டும்….எனக்கு ஆன்மீகப் புஸ்தகங்கள்தான் பிடிக்கும்…இதெல்லாம் வேண்டாம்

ஆன்மீகம் ஆன்மீகம்ங்கிறியே…அப்படீன்னா என்னன்னு சொல்லேன் பார்ப்போம்…

உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?

தெரியாதுன்னுதான் வச்சிக்கயேன்…எனக்கு இதை மத்தவங்ககிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுல வெட்கமில்ல…நீதான் சொல்லேன்…

எனக்கு விளக்கமெல்லாம் சொல்லத் தெரியாது. உணரத்தான் தெரியும்.

அடேயப்பா…உணர்ற அளவுக்குப் பக்குவமாயாச்சா?

அது உணர்றவங்களுக்குத்தான் தெரியும்…

நீ உணர்றதை நான் உணரமாட்டேன்னு எப்படிச் சொல்ற? முதல்ல நீ சரியாத்தான்
உணர்றையாங்கிறதை தெரிஞ்சிக்க வேண்டாமா?

யாரும் தெரிஞ்சிக்க வேணும்னு அவசியமில்ல….

ம்…அப்போ இதுதான் உன் ஆன்மீகம் போலிருக்கு…

பதிலில்லை அவளிடம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் மனுஷனை எதெல்லாம் பக்குவப் படுத்துதோ அதெல்லாம் ஆன்மீகம்தான்…

எதிலும் அவள் சற்றும் கீழிறங்கி நான் பார்த்ததேயில்லை. சொல்லப் போனால் அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ஆனாலும் அவள் பேச்சு இத்தனை குறைவாக இருக்கக் கூடாதுதான்.
நீ இப்டியே இருந்தேன்னா நாளடைவில் உனக்கு மொழி மறந்து போகும்;…அப்புறம் தாய்பாஷை எதுன்னு தேடணும். புதுசாப் பேச ஆரம்பிச்சு வார்த்தைகளுக்குப் பழகணும்…ஜாக்கிரதை…
அவளின் அமைதி அதீதமானது.

ஏன் இத்தனை புலப்பம். நீ பேசி விட வேண்டியதுதானே? என்று நீங்கள் கேட்கலாம். நான் ஒரு வள வளாப் பேச்சுக்காரன். பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன். அதில் நிறைய நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். என்னிடம் சற்று லூஸ் டாக் அதிகம். அது அவளுக்குப் பிடிக்காது. ஒரு வேளை எனது இம்மாதிரியான பைத்தியக்காரப் பேச்சுக்கள் பிடிக்காமல்தான் அவள் அறவே என்னிடம் பேச்சை நிறுத்தி விட்டாளோ என்னவோ? ஏனென்றால் பைத்தியம் தானேதான் பேசிக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப கால சத்யாவை நான் நன்கறிவேன். வீட்டுக் காரியங்களில் அவள் என்ன பிஸியாக இருந்தாலும் கூட காரியார்த்தமாய் நாம் ஏதாவது கேட்டால் டக்கென்று பதில் சொல்வாள். என்னதான் ஓய்வாக இருந்தாலும் அசட்டுத்தனமாய் ஏதாவது பேசினால் மலையே இடிந்து விழுந்தாலும் அவளிடம் ரியாக்ஷனே இருக்காது. ஏதோ கிறுக்கு ஔருது…அவ்வளவுதான்.

இதோ நான் சொன்னதுபோல்தான். சத்யா இப்பொழுது உறாலுக்கு வந்திருக்கிறாள். அடுத்தாற்போல் தினசரியைக் கையில் எடுக்கப் போகிறாள். அவள் வழக்கமாய்ப் படிக்கும் இடத்தில் நாற்காலி கிடக்கிறது. அது அவளை இருத்திக் கொள்ளப் போகிறது. அவளோடு சேர்ந்து எத்தனை ஆயிரம் செய்திகளைக் கண்டிருக்கிறது அது!

என் அறையில் நான். உறாலில் அவள். உள் அறையில் அவன். வீடே ஒரு நூலகமாய்த் தோன்றுகிறது. ஏகாந்த அமைதி. பல மணி நேரங்கள் இந்த வீடு இப்படி இருப்பதற்கு அனுபவப்பட்டிருக்கிறது. என் வீட்டிற்குப் பெயா; சாந்தி இல்லம். அது என் மனதை ஈர்த்த ஒரு ஏழைப் பெண்ணின் ஞாபகமானது. முட்டி முட்டிக் கேட்டிருக்கிறாள் சத்யா அது யார் என்று? அது என்னோடு தோன்றி என்னிலேயே அழியக் கூடிய ரகசியம். நீங்களும் அறியக் கூடாத, அறிய முடியாத ஒன்று. சாந்தி நிலவ வேண்டும் – பாட்டு ஞாபகம் வருகிறது எனக்கு. அதுதான் தாராளமாய் நிலவிக் கொண்டிருக்கிறதே! நீங்கள் நினைப்பீர்கள் அமைதியை அப்படிச் சொல்கிறான் என்று. அது அல்ல இது. சாந்த சொரூபம். என் வீட்டில் என் எதிரில் என் மன அமைதிக்காக என் முன்னே எப்பொழுதும் திகழும் சாந்த சொரூபிணி அவள்.

உறாலில் இருக்கும்; சத்யாவின் உருவம் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் என் அறையில் நான் அமர்ந்திருக்கும் இடம் அப்படி. ஒவ்வொருவரும் அவரவருக்குள் அப்படி ஒரு இடத்தைச் சுயமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

சற்றுக் கழித்து அவள் குரல் மட்டும் கேட்கிறது. அந்தக் குரலில்தான் என்ன ஒரு உறுதி. ஏற்கனவே முடிவு செய்து விட்ட ஒன்று அது.

அவனுக்கு Nஉறாட்டலுக்குப் போகணுமாம். நான் கூடப் போயிட்டு வர்றேன்…

கிளம்பியாயிற்று. இதோ அவனும் படியிறங்கி விட்டான். சத்தம் கேட்கிறது. நிச்சயம் அவளும் அவனோடு சேர்ந்து இரவு டிபனை முடித்து விட்டுத்தான் திரும்புவாள். அவனாவது விடுவதாவது! அம்மாவை விதம் விதமாய்ச் சாப்பிட வைத்துப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு அலாதிப் பிரியம். அது போல் அப்பாவுக்கும் ஒரு நாக்கு உண்டு என்று ஏனோ அவனுக்குத் தெரியவில்லை. பாவம் அவள். அவன் ரசனைக்கு அவள் ஆகமாட்டாள். விதம் விதமாய்த் தேடி, ரசித்துச் சாப்பிடும் பழக்கமெல்லாம் உடம்போடு ஒட்டியதாய் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ரசித்து எதிர்நோக்கும் திறன் வேண்டும்.
வெறுமே போயிட்டு வர்றேன் என்ற அவளின் மெப்பனை வார்த்தை உள்ளே இருக்கும் தவறின் உறுத்தலை அவள் உணர்ந்ததின் அடையாளம். அது போதும் எனக்கு. வாழ்க வளமுடன்.

கையிலென்ன கொண்டு வந்தோம்…கொண்டு செல்ல… – சட்டென்று தோன்றும் பாட்டு வரிகள். மனசு லேசாகிப் போகிறது எனக்கு. அது என் இயல்பு.

பதிலொன்றும் நான் சொல்லவில்லை. எதிர்பார்க்கவுமில்லை. அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.