வாசக நண்பர்களே,
இது சொல்வனத்தின்’ 61-ஆவது இதழ்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை சொல்வனம் பதிப்பகத்தின் வெளியீடாக லலிதா ராம் எழுதிய ‘துருவ நட்சத்திரம்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிலிக்கான் கடவுள், தாயார் சன்னதி புத்தகங்களுக்கு அடுத்து சொல்வனம் வெளியிட்டிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. இப்புத்தகம் ‘உடுமலை’ இணையதளத்திலும், சென்னை கர்நாடிக் புக் செண்டரிலும், பிற புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
துவக்கத்திலிருந்து ’சொல்வனம்’ இலக்கியம் மட்டுமல்லாமல் பல்துறை சார்ந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் வெளியிட்டுவருகிறது. இவற்றுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மறுவினைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து சொல்வனம் இதே திசையில் செல்லும் .
சமீபத்தில் பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோருக்கு அவர்களின் பல பத்தாண்டு கால இலக்கிய இயக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் பொருத்தமான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அவர்களை எம் பங்குக்குக் கெளரவப்படுத்தும் விதமாக, இந்த இதழில் எப்போதும் போல் பல்துறை சார்ந்த கட்டுரைகளுடன், அவர்கள் சம்பந்தப் பட்ட சில படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.
1. பூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்
2. வண்ணநிலவன் – ஒரு சந்திப்பு
3. வண்ணதாசன் – பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்
மேலும், எங்கள் (அச்சு) வெளியீடுகளான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘தாயார் சன்னதி’ ஆகிய இரு புத்தகங்களிலிருந்தும் ஒவ்வொரு பகுதியை வாசகர்கள் முன் வைக்கிறோம்.
வணிக நோக்கற்று நடத்தப்படும் சொல்வனத்திற்குக் கிட்டும் வாசகர்களின் ஆதரவும், மறுவினையும் வருகிற வருடத்தில் மேலும் கூட வேண்டும் என்பது எங்கள் அவா. அதுவே அவர்களிடம் எம் குழுவினர் முன்வைக்கும் வேண்டுகோளும்.
நன்றி
ஆசிரியர் குழு