செப்டம்பர் – நவம்பர் 2010 ‘நேர்காணல்’ இதழில் வண்ணநிலவனுடன் பவுத்தர் அய்யனார் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து புலம் பெயர்ந்த பிறகான வாழ்வனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
திருநெல்வேலியிலிருந்தால் முன்னேற முடியாது என்று தோன்றியது. எஸ்.எஸ்.எல்.சி.யில் மார்க் மிகக் குறைவு. வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து ஒரு இண்டர்வியூ கார்டு கூட வரவில்லை. அக்கால இளைஞர்களைப் போல் டைப் ரைட்டிங் பயிற்சிக்குச் செல்வதற்கான வசதி இல்லை. கடைசியாகப் பாளையங்கோட்டையில் பார்த்த வக்கீல் குமாஸ்தா வேலையில் இரண்டு நேரம் சாப்பாடு போக முப்பது ரூபாய்தான் சம்பளமாகக் கிடைத்தது. துணிமணி வாங்கக்கூட வழியில்லை. செல்வக்குமார் வீட்டில் கொடுத்த வேஷ்டியும், கல்யாணி கொடுத்த சட்டைகளும் தான் என்னிடமிருந்த சொத்து. இது தவிர சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில இழப்புகளும் ஊரை விட்டுக் கிளம்பக் காரணமாக இருந்தன.
சென்னையில் தி.க.சி., எனது உறவினரான பாப்பையா அண்ணாச்சி, நம்பிராஜன் மூவருக்கும் கடிதம் எழுதிப் போட்டு விட்டுச் சென்னைக்குப் புறப்பட்டு விட்டேன். சென்னைக்கு அப்போது திருநெல்வேலியிலிருந்து 16 ரூபாய் டிக்கெட். இந்தத் தொகையை கல்யாணியிடம் கேட்டால் கொடுத்து உதவியிருப்பார். ஆனால், கேட்கவில்லை. கையில் இருந்த நான்கு ரூபாயை எடுத்துக் கொண்டு மதுரைக்கு ரயிலேறினேன். மதுரைக்கு மூன்றேகால் ரூபாய்தான் ரயில் சார்ஜ். மதுரை மேலமாசி வீதியில் ஒரு சித்தப்பா இருந்தார்கள். அந்தச் சித்தப்பாதான் எனக்கு எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வு எழுத பீஸ் கட்டி உதவியவர்கள். அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்னைக்குப் போகலாம் என்று முடிவு செய்து மதுரைக்குப் போனேன்.
சித்தப்பா வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் இருந்தேன். சித்தப்பா பதினைந்து ரூபாய் கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்டு 1973 ஜூன் 21ஆம் தேதி சென்னைக்குப் பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறினேன். ரயில் ஏற மங்கம்மா சத்திரத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது கவிஞர் பரிணாமனைப் பார்த்தேன்.
கவிஞர் பரிணாமனை ஏற்கெனவே ஒரு முறை, மதுரையில் நா. வானமாமலை வெளியிட்ட ‘புதிய முளைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு விழாவில் காலேஜ் ஹவுசில் வைத்துச் சந்தித்திருக்கிறேன். புதிய முளைகள் சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய சிறுகதையும் இருந்தது. தொகுப்புக்கு அட்டைப்படம் கல்யாணி வரைந்து கொடுத்தார். வெளியீட்டு விழாவுக்கு திருநெல்வேலியில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய பா.ஜெயப்பிரகாசத்தின் அலுவலக ஜீப்பில் ஜே.பி.யுடன் நானும், கல்யாணி, கலாப்ரியாவும் சென்று வந்தோம்.
பரிணாமன் டீ வாங்கிக் கொடுத்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தோம். நான் பாண்டியனில் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். நம்பிராஜன், அப்போது கவிஞர் நா.காமராஜன் நடத்திவந்த ‘சோதனை’ பத்திரிகையில் சேர்ந்திருந்தார். நா.கா.வின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
அவருடன் ராம.சுப்பையாவும் தங்கியிருந்தார். ராம.சுப்பையாவும் ஆசிரியர் குழுவில் ஒருவர். ராம.சுப்பையா மைலாப்பூர் நல்லியில் வேலை பார்த்து வந்தார். கோடை விடுமுறைக்காக நா.கா. குடும்பத்துடன் ஊருக்குச் சென்றிருந்தார். சோதனை அலுவலகமான நா.கா.வின் வீடு லாயிட்ஸ் ரோட்டில், லாயிட்ஸ் காலனிக்கருகே இருந்தது. (அந்த வீடு இருந்த இடத்தில் இப்போது அபார்ட்மெண்ட் வந்துவிட்டது).
எக்மோர் ஸ்டேஷனில் இறங்கும்போது சட்டைப் பையில் ஒரு ரூபாய் முப்பது பைசாதான் இருந்தது. அப்போது அது பெரிய தொகைதான் எனக்கு. ஒரு ரூபாய்க்கு மதியச் சாப்பாடே ஹோட்டலில் சாப்பிடலாம். டீ பத்து பைசாதான். நா.கா. வீட்டு முகவரியை விசாரித்தபோது, எக்மோரிலிருந்து 23பியில் சென்றால் லாயிட்ஸ் ரோடு போகலாம் என்றார்கள். 23பி ஏறி லாயிட்ஸ் ரோட்டில் இறங்கினேன். நா.கா.வின் வீடு மாடியில் இருந்தது. வீட்டைக் கண்டுபிடித்து மாடி ஏறினேன். அப்போது ஒருவர் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். எதிரேவந்த என்னை விசாரித்தார். நான் விபரத்தைச் சொன்னதும் “வீடு பூட்டிக் கிடக்கிறது. நம்பிராஜன் வெளியே போயிருக்கிறார் போல. என்னுடன் என் வீட்டுக்கு வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார். அவர்தான் பாலகுமாரன். பாலகுமாரனுடைய வீடு பக்கத்திலிருந்த டீச்சர்ஸ் காலனியில் இருந்தது.
பாலகுமாரன் என்னைக் குளிக்கச் சொன்னார். இருவரும் சாப்பிட்டோம். பாலகுமாரனைப் போலவே அவரது அம்மா, தங்கை, தம்பி எல்லோரும் ரொம்பப் பிரியமாக இருந்தார்கள். சிறிதுநேரம் கழித்து பாலகுமாரன் அலுவலகத்துக்குப் புறப்பட்டார். நான் என் துணிப் பையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் நா.கா. வீட்டுக்கு வந்தேன். நம்பி, ராம.சுப்பையா இருவருமே இருந்தார்கள்.
சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தபின் நம்பிராஜன் என்னை அழைத்துக் கொண்டு தி.க.சி.யைப் பார்க்கக் கிளம்பினார். தி.க.சி. வேலை பார்த்த சோவியத் நாடு அலுவலகம் தி. நகர் தியாகராய ரோட்டில் (பாண்டிபஜாரின் கிழக்குப் பகுதி) இருந்தது. தி.க.சி. எங்களை உற்சாகமாக வரவேற்றார்கள். இருவரையும் உடனே செக்ரட்டேரியட் சென்று கந்தர்வனைச் சந்திக்குமாறு கூறி, கந்தர்வனுக்கு ஒரு கடிதமும், செலவுக்குப் பணமும் கொடுத்து உதவினார்கள். நம்பி என்னை அழைத்துக் கொண்டு செக்ரட்டேரியட் வந்தார். தேடி விசாரித்து கந்தர்வனைப் பார்த்தோம். அவர் உடனே ராம.கண்ணப்பனைச் சந்திக்குமாறு கூறினார். அப்போதுதான் ‘கண்ணதாசன்’ மாத இதழ் மீண்டும் வெளிவர ஆரம்பித்திருந்தது . ராம.கண்ணப்பன் தான் பொறுப்பாசிரியர். கண்ணதாசனில் வேலைக்குச் சேரலாம் என்று கந்தர்வன் சிபாரிசு செய்தார்.
ராம.கண்ணப்பன் கவிஞர் கண்ணதாசனின் தம்பி. கவிஞருடனேயேதான் எப்போதும் இருப்பார். பகல் பூராவும் ஸ்டூடியோக்களில் இருப்பார். சாயந்திரம் பாண்டி பஜார் அருகே ராஜாபாதர் தெருவின் எதிரே இருந்த ஆந்திரா கில்லி ஷாப்பில் (இந்தக் கடை இப்போதும் இருக்கிறது) கண்ணப்பனைச் சந்திப்பது எளிது என்றார் கந்தர்வன். அவர் சொன்னபடியே இரவு ஏழு மணி சுமாருக்கு கண்ணப்பனிடம் என்னை நம்பிராஜன் அழைத்துச் சென்றார். விஷயத்தைச் சொன்னோம். நாளைக்கே வேலைக்கு வந்து விடுங்கள் என்றார் கண்ணப்பன்.
இப்படித்தான் கண்ணதாசனில் முதல் முதலாக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது கண்ணதாசன் அலுவலகம் பிராட்வே பிரான்ஸிஸ் ஜோசப் தெருவில் இருந்தது. கண்ணதாசனை நடத்தியவர் ராமச்சந்திர ரெட்டியார் என்பவர். இவர்தான் ‘பிலிமாலயா’ என்ற சினிமா மாத இதழையும் (ஆசிரியர் பஞ்சு அருணாசலம்), வேறு இரண்டு தெலுங்குப் பத்திரிகைகளையும் நடத்தினார். எல்லா அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கி வந்தன. 1974 ஜனவரி பொங்கல் மலருடன் கண்ணதாசன் நின்றுவிட்டது. 150 ரூபாய் சம்பளமும் போய் விட்டது.
ராம.கண்ணப்பன் கண்ணதாசனிடம் சொல்லி அவருடைய கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் அலுவலகத்திலேயே எனக்குத் தங்குவதற்கும் வசதி செய்து கொடுத்திருந்தார். கண்ணதாசன் புரொடக்ஷன் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் ராணி சின்னம்மா ரோட்டில் இருந்தது. இப்போது பிரபலமான வி.டி. என்கிற சினிமா எடிட்டர் அப்போது எங்களுடன் தங்கியிருந்தார். அவரை நாங்கள் ‘விஜி’ என்று அழைப்போம். அவரது சொந்த மாநிலம் கேரளா. அவரது அண்ணன் கருணாநிதியின் பூம்புகார் பிக்சர்ஸில் டிரைவராக வேலை பார்த்தார். கண்ணதாசன் நின்றுவிட்டாலும் மேலும் சில வாரங்கள் கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் ஆபீஸிலேயே இருந்து வந்தேன். மீண்டும் வேலை தேடும் படலம்.
அகிலன் கண்ணன் எனக்கு நல்ல பழக்கம். அவர் கஸ்தூரி ரங்கனிடம் பேசி என்னைக் ‘கணையாழி’யில் சேர்த்து விட்டார். அதே 150 ரூபாய் சம்பளம். ‘கணையாழி’ அலுவலகம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு எதிரே சேப்பாக்கத்தில் பெல்ஸ் ரோட்டில் இருந்தது. நான் ஸ்டார் டாக்கீஸ் எதிரே என் அண்ணாச்சி பாப்பையா அவர்களின் உதவியுடன் ஒரு லாட்ஜில் குடியேறினேன்.
சோதனை மூன்றே மூன்று இதழ்கள் தான் வந்தது. அதனால் நம்பிராஜன் வாசுதேவ நல்லூருக்குச் சென்று விட்டார். நான் கணையாழியில் சேர்ந்த போது அவர் மீண்டும் சென்னைக்கு வந்து வேலை தேடினார். கவிஞர் நாரா. நாச்சியப்பனின் அச்சகம் திருவல்லிக்கேணி ஜானிஜான்கான் ரோட்டில் இருந்தது. அங்கே புரூப் ரீடராக நம்பிக்கு வேலை கிடைத்தது. கணையாழி வேலை ஒத்துவரவில்லை. 1974 மார்ச்சில் கணையாழியில் சேர்ந்தேன். ஜூனில் வேலையை விட்டுவிட்டேன். பெங்களூரில் என் நண்பன் ரவி பாரத் எலெக்ட்ரானிக்ஸில் வேலை பார்த்து வந்தான். அங்கே ஏதாவது வேலை தேடலாம் என்று பெங்களூர் சென்றேன்.
எங்கே சென்றாலும் நண்பர்களுடன் கடிதத்தொடர்பு இருந்தது. பெங்களூரில் ரவியுடன் இரண்டு மாதம் இருந்தேன். வேலையும் கிடைக்க வில்லை. அப்போது பாண்டிச்சேரியிலிருந்து பிரபஞ்சன் கடிதம் எழுதி, என்னை உடனே வரச்சொல்லியிருந்தார். ஒரு தினசரிப் பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார்கள், அதில் வேலை இருக்கிறது என்று எழுதியிருந்தார். ரவி என்னை பெங்களூரிலிருந்து பாண்டிச்சேரிக்கு அதிகாலை ஆறு மணி பஸ்ஸில் ஏற்றிவிட்டான். பாண்டிச்சேரி வரும்போது இரவு ஏழு மணி ஆகிவிட்டது. ஒரே மழை. பிரபஞ்சன் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். இரவு அவர் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு அவருடன் படுத்துத் தூங்கினேன்.
காலையில் என்னை ‘வண்ணங்கள்’ என்ற சிறு பத்திரிகையை நடத்திவந்த சொக்கு சுப்பிரமணியம் என்ற நண்பரிடம் வைத்தி (பிரபஞ்சன்) அழைத்துச் சென்றார். சொக்கு சுப்பிரமணியத்தின் நண்பரான எம்.பி.ஜான் என்பவர் புதுவைக் குரல் என்ற தினசரியைத் தொடங்கியிருந்தார். அதில் சொக்கு சுப்பிரமணியம் என்னைச் சேர்த்து விட்டார். அது நான்கே பக்கங்களைக் கொண்ட மாலை தினசரி. செய்திகளை மொழி பெயர்ப்பது, புரூப் பார்ப்பது எல்லாம் நான்தான். எப்படியோ வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். என் துரதிருஷ்டம் புதுவைக் குரலும் நிறுத்தப் பட்டது. 1974 ஆகஸ்ட் முதல் 1975 மார்ச் வரை புதுவைக் குரலில் வேலை பார்த்தேன். பிறகு பாண்டிச்சேரியை விட்டு ஊருக்கே சென்று விட்டேன்.
1975 ஜூன் வாக்கில் தி.க.சி. சென்னை யிலிருந்து ‘அன்னை நாடு’ என்ற காங்கிரஸ் தினசரியில் வேலை இருக்கிறது, வாருங்கள் என்று எழுதியிருந்தார்கள். கல்யாணி சென்னை செல்லப் பணம் தந்தார். மீண்டும் சென்னை வாசம். அன்னை நாட்டில் உதவி ஆசிரியர் வேலை. மலர்மன்னன்தான் ஆசிரியர். செய்திகளை மொழிபெயர்க்க வேண்டிய வேலை. அன்னை நாடு வேலை டிசம்பர் வரை ஓடியது. அன்னை நாடும் நின்றுவிட்டது.
தி.க.சி.யின் வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலுமாகச் சாப்பிட்டுக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். நண்பர் ஜெயபாரதியை சென்னைக்கு வந்த காலம் முதலே தெரியும். ஒரு நாள் ஜெயபாரதியும் நானும் ராயப்பேட்டையிலிருந்த ஒரு பிரிவியூ தியேட்டரில் பி.வி.காரந்தின் ‘சோமன துடி’ படம் பார்க்கச் சென்றோம். படத்துக்கு வந்திருந்த ருத்ரய்யாவை எனக்கு ஜெயபாரதி அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ஜெயபாரதியும் நானும் அடிக்கடி ருத்ரையாவைச் சந்தித்து வந்தோம். ருத்ரையா மூலம் அனந்து பழக்கமானார்.
எல்லோரிடமும் புலம்புவது போல் அனந்து சாரிடமும் வேலை இல்லாமலிருப்பதைப் பற்றிப் புலம்பினேன். (இந்த அனந்துதான் டைரக்டர் பாலசந்தரின் உதவியாளர்). ஊருக்கே திரும்பிப் போய் விடலாம் என்று இருக்கிறேன் என்றேன். அனந்து சார் என்னை, ஒரே ஒரு வாரம் மட்டும் இருக்கச் சொன்னார். வேலைக்கு முயற்சிப்போம். முடியாவிட்டால் நானே உங்களை ரயில் ஏற்றி அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது சினிமா கம்பெனியின் ஆர்ட் டைரக்டர் ராமசாமி. இதே ராமசாமிதான் சோவின் நாடகக் குழுவுக்கும் ஆர்ட் டைரக்டர். அந்த ராமசாமியிடம் ‘துக்ளக்’கில் ஏதாவது வேலையில் சேர்த்து விடும்படி அனந்து சார் கேட்டுக் கொண்டார். ஏதோ என் நல்ல நேரம் அப்போது ‘துக்ளக்’கில் புரூப் ரீடர் வேலை காலியாக இருந்தது. எனக்கு அந்த வேலை கிடைத்தது. 1976 ஜூனில் துக்ளக்கில் வேலைக்குச் சேர்ந்தேன்.
பதின்மூன்று ஆண்டுகள் துக்ளக்கில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். நியூரோஸிஸ் என்ற நோய் வந்து வேலையை விட்டுவிட்டேன். மீண்டும் மூன்று நான்கு ஆண்டுகள் வீட்டில் பொழுதைப் போக்கினேன். 1993 ஜூனில் சுபமங்களாவில் வேலை கிடைத்தது. ஆனால், சுபமங்களாவும் 1995 டிசம்பருடன் நின்றுவிட்டது. இப்போது துக்ளக்கில் ரீடெய்னராக பணிபுரிகிறேன்.
சென்னை வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்ன?
நிறைய பத்திரிகைத் தொழில் சம்பந்தமாக, குறிப்பாக எழுத்து சம்பந்தமாக நிறையத் தெரிந்து கொண்டேன்.
கிராமம் நல்லவர்களைக் கொண்டதாகவும், நகரம் கெட்டவர்களைக் கொண்டதாகவும் பொதுப் புத்தியில் உறைந்துள்ள கருத்து சரியானது தானா?
தவறு. நல்லவர் – கெட்டவர் என்பது கிராமம், நகரம், இனம், மொழி, ஜாதி, நாடு எவை சார்ந்தும் இல்லை. முழுக்க முழுக்க நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ யாரும் இல்லை. இரண்டும் கலந்த கலவைதான் மனிதர்கள்.
அன்பும் குரோதமும் வெறுப்பும் எல்லாம் கலந்த உங்கள் எழுத்தில் அன்புக்கு மட்டும் அதிக முக்கியம் வருகிறது. கிறித்துவ வாழ்க்கை முறை உங்களுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ?
எனது மொழிநடையில் கிறிஸ்தவ வேதமான பைபிளின் தாக்கம் ‘கடல்புரத்தில்’ நாவலிலும், ‘எஸ்தர்’ போன்ற சிறு கதைகளிலும் உண்டு. பாளையங்கோட்டையில் படித்த காலத்திலிருந்தே பல கிறிஸ்தவ நண்பர்கள் எனக்குப் பழக்கம். குடும்ப வறுமை காரணமாக என் நண்பன் ரவியின் குடும்பத்தில் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலவே இருந்திருக்கிறேன்.
எனது கதைகள் அன்பைப் பற்றி மட்டும் பேசவில்லை. பல்வேறுவிதமான மானுட குணங்களையும் என்னால் இயன்றவரை படைப்புகளில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
‘கடல்புரத்தில்’, ‘கம்பா நதி’ நாவல்களை 80களில் நான் படித்தபோது இருந்த freshness இப்போதும் அனுபவித்தேன். மேலும் அப்போது புரிபடாத வாழ்வின் அபாயங்கள், கவனங்களை இப்போது என் வாழ்வின் ஊடே உணர்கிறேன். அப்போதே எப்படி வாழ்வின் உண்மைகளை உணர்ந்தீர்கள்?
ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப் படித்ததுதான் காரணம். கல்கியின் நாவல்களை என் பால்ய காலத்தில் படித்தேன். அவரது நாவல்களில் உள்ள கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் இன்றும் பசுமையாக அப்படியே நினைவில் உள்ளன. இலக்கியத்தின் பக்கம் வந்தால் புதுமைப்பித்தனிடமும் இந்தத் திறமை இருக்கிறது. ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் தனித்துவமானவை. கு.ப.ரா.வின் நூருன்னிஸா, ‘ஆற்றாமை’ கதைகளில் வருகிற மென்மையான உணர்வுகள் படிக்கும் போது நம்மைத் தொற்றிக் கொள்கின்றன.
கதைகளின் வழியாகவும் உலகத்தைப் பார்க்கிறோம். நமது நேரடி அனுபவங்களின் மூலமாகவும் உலகத்தைப் பார்க்கிறோம். புஸ்தகங்கள், நேரடி அனுபவங்கள் இவைதான் நம்மைப் பட்டை தீட்டுகின்றன. உலகத்தைப் புரிய வைக்கின்றன.
ஒரு சிறுகதை, ஒரு நாவல், ஒரு கவிதை உங்களிடம் எப்படி உருவாகிறது? அதன் படிநிலை (Process) பற்றி விளக்க முடியுமா?
ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில் பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியாகிறது என்று நினைக்கிறேன்.
என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச் சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான் சிறுகதையாக எழுதினேன்.
குலசேகரன்பட்டிணம், உடன்குடியில் இருந்தபோது சில மீனவர்களைத் தெரியும். குலசேகரன்பட்டிணத்தில் அடிக்கடி கடற்கரைக்குச் செல்வேன். குலசேகரப் பட்டிணத்தை விட்டு பாளையங்கோட்டைக்கு வந்த பிறகு தினமலர் நாளிதழில், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டிணத்தில் இயந்திரப் படகுக்காரர்களுக்கும், கட்டுமரத்துக்காரர்களுக்கும் ஏற்பட்ட மீன்பிடிக்கும் போட்டியில் கொலைகள் விழுந்தன என்ற செய்தியைப் படித்தேன். கடல்புரத்தில் நாவல் எழுதத் தூண்டியது அந்தச் சிறு செய்திதான். பிலோமி, வாத்தி, செபஸ்தி, குரூஸ் மைக்கேல் என்று கதாபாத்திரங்கள் தானாகவே மனதில் உருவாகின.
ஒருமுறை திருநெல் வேலியிலிருந்து பாணடிச் சேரிக்குப் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மாநிலமெங்கும் கடும் வறட்சி நிலவியது. கிராம மக்கள் குடும்பம்குடும்பமாக வேலை தேடி ஊர் விட்டு ஊர் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். இதுதான் எஸ்தர், மிருகம் ஆகிய சிறுகதைகளின் பொறி.
‘காலம்’ நாவல் எனது வக்கீல் குமாஸ்தா, கோர்ட் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியது. எழுதுவதற்கு ஏதோ ஒரு பொறி தேவைப்படுகிறது. அதை ஊதி ஊதிப் பெரிதாக்குகிறான் எழுத்தாளன்.
அன்பும், மென்மையும், தீவிரமும் கொண்ட எழுத்துக்களை எழுதிய நீங்கள் ‘துர்வாசர்’ ஆகி தார்மீகக் கோபம் கொண்ட எழுத்துக்களை எழுதத் தூண்டியது எது?
துக்ளக்கில் ஆரம்ப காலத்திய சினிமா விமர்சனங்களை இயக்குனர் மகேந்திரன் எழுதி வந்தார். நான் துக்ளக்கில் சேர்ந்த பிறகு சினிமா விமர்சனங்களை எழுதும் வாய்ப்பை எடிட்டர் என்னிடம் கொடுத்தார். என்னுடைய மயான காண்டம், யுகதர்மம் போன்ற ஆரம்ப காலத்துச் சிறுகதைகளில் கிண்டலும், கோபமும் உண்டு. அந்தக் கிண்டல், கோபத்தை சினிமா விமர்சனப் பகுதியில் காட்டினேன்.
பிறகு நான் தனிக்கட்டுரைகளை எழுதலாம் என்று ஆசிரியர் கூறினார். அப்போது எடிட்டர் எனக்கு ‘துர்வாசர்’ என்ற பெயரை வைத்தார். துர்வாசர் என்ற பெயரில் நான் துக்ளக்கில் எழுதிய கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
80களில் எனக்கு வெங்கட்சாமிநாதனின் ‘பாலையும் வாழையும்’, ‘கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு’ முதலிய நூல்கள் பல நூல்களைத் தேடிப் படிக்கத் தூண்டுவதாகவும், ஓவியம் மீதான ஈடுபாட்டையும், விமர்சனப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள உதவியது. 70, 80களின் இலக்கியச் சூழல் எப்படி இருந்தது?
எழுபது, எண்பதுகளில் இப்போது உள்ளதைப் போல் அந்த நாட்களிலும் தீபம், கணையாழி, தாமரை, எழுத்து, கசடதபற, அஃ, வானம்பாடி, ஞானரதம், சதங்கை, தெறிகள், பிரக்ஞை என்று ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சுதேசமித்திரன் ஆண்டுதோறும் வெளியிட்ட தீபாவளி மலர்கள் கூட இலக்கியத்தரமாக இருந்தன. இடதுசாரி மனோபாவம் கொண்டவர்கள் முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம் என்று கூறிவந்தனர். இன்று பிரபல மார்க்ஸிய விமர்சகராக அறியப்படுகிற கோவை ஞானி வானம்பாடியில் எழுதிய ‘கல்லிகை’ என்ற நெடுங்கவிதையின் மூலம் இலக்கிய உலகத்துக்கு அப்போதுதான் அறிமுகமானார்.
இடதுசாரி இலக்கியத்துக்கென்று ‘தாமரை’, ‘செம்மலர்’, கோவை ஈஸ்வரனின் ‘மனிதன்’, இளவேனிலின் ‘கார்க்கி’, கே.எம். வேணுகோபாலின் ‘சிவந்த சிந்தனை’, ‘வானம்பாடி’, புதிய தலைமுறை, உதயம் முதலான பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆர்.ராஜேந்திரசோழன் ‘அஸ்வகோஷ்’ என்ற பெயரில் செம்மலரிலும், உதயத்திலும் பிரச்சார வாடை வீசாத பல அற்புதமான சிறுகதைகளை எழுதி வந்தார். ஆர்.ராஜேந்திரசோழன் தொடர்ந்து கதைகள் எழுதாமல் போனது ஒரு பேரிழப்புதான். அவரை அசோகமித்திரன் ‘Promising Writer’ என்று பாராட்டியிருக்கிறார். இதேபோல் பிரக்ஞையிலும், கணையாழியிலும் அற்புதமான சிறுகதைகளை எழுதிய சிவசங்கரா, ஆர்.பழனிவேலு போன்றோர் பின்னால் எழுதாமல் போய்விட்டார்கள்.
இந்த இடதுசாரி இதழ்களில உதயமும், பிரக்ஞையும் தீவிரமான இடதுசாரி அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டன. தாமரையும், செம்மலரும் இன்றுபோல் அன்றும் வலது இடது கம்யூனிஸ்ட் ஆதரவு இலக்கியப் பத்திரிகைகளே. இதனுடன் இலங்கையிலிருந்து வெளிவந்த டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ என்ற பத்திரிகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆனால் மல்லிகையைவிட 80களில் இலங்கையிலிருந்து வெளியான ‘அலைகள்’ பத்திரிகை மிக முக்கியமான சிற்றிதழ். சிறிகனகரட்ணா என்ற அற்புதமான இடதுசாரி விமர்சகரின் கட்டுரை அலைகளில்தான் படித்தேன்.
கைலாசபதியின் கட்டுரைகள் அப்போதே புத்தகமாக வெளிவந்து விட்டது. கா.சிவத்தம்பியும் அப்போது நூல்களை எழுதியிருக்கவில்லை என்றாலும், தனது கட்டுரைகளின் மூலம் தமிழகத்தில் பரிச்சயமாகி இருந்தார். இது இடதுசாரி இயக்கத்தின் சூழல்.
வலதுசாரி இலக்கியம் என்பது தெளிவாக வரையறுத்து விடமுடியாது. ஆனால், க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் தங்களது கட்டுரைகளின் மூலம் இலக்கியத்தில் உணர்ச்சிக்கும், கலாபூர்வமான அழகியலுக்கும் அதிக அழுத்தம் தந்து எழுதினர். புதுக்கவிதையை இயக்கமாக வளர்த்தெடுத்த பெருமை க.நா.சு.வுக்கும், செல்லப்பாவுக்குமே உண்டு. க.நா.சு. பண்டித மனோபாவத்தை எதிர்த்த மாதிரி, வெங்கட்சாமிநாதன் திராவிட, இடதுசாரி மனோபாவத்தை இலக்கியத்தில் எதிர்த்தார்.
இலங்கையில் மு.தளையசிங்கம் தனது போர்ப்பறை, மெய்யுள் முதலான கட்டுரைத் தொகுதிகளில் இடதுசாரி இலக்கியத்தைச் சாடினார். இலக்கியத்திலும், தத்துவச் சிந்தனையிலும் ‘நற்போக்கு’ என்ற கருத்தை வலியுறுத்தினார். அவரது சிந்தனை கொஞ்சம் வறட்சியானதுதான் என்றாலும், தளையசிங்கம் மிக முக்கியமான பாதிப்பை அங்கு ஏற்படுத்தியவர். வறட்சி தட்டாத, கலைக்கு அழுத்தம் கொடுத்த இடதுசாரி விமர்சகர்களில் சிறிகனரட்ணாதான் முக்கியமானவர் என்று எனக்குப் படுகிறது.
சி.சு.செல்லப்பாவின் கட்டுரைகள் கூட வறட்சியானவைதான். ரொம்ப டெக்னிக்கலாக செல்லப்பா இலக்கியத்தைக் கல்லூரிப் பேராசிரியர் மாதிரி அணுகுவார். ஆனால், வெங்கட்சாமிநாதன் அப்படியல்ல. அவரது எழுத்தில் வறட்டுத்தனம் தலைகாட்டாது.
க.நா.சு.வின் எழுத்துக்களைப் படித்திருக்கிறீர்களா?
தொகுதிகள், இலக்கிய விசாரம் இம்மூன்றும் மிக முக்கியமானவை. இலக்கிய விசாரத்தில், எழுத்தாளன் சோதனை முயற்சிகளைச் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியிருப்பார். இது எனக்கு வேத வாக்காயிற்று. எனது சிறுகதை, நாவல்களில் பல்வேறுவிதமான நடை, உருவ சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறேன். இதற்குக் க.நா.சு. தான் காரணம். வறட்சியைப் பற்றிய சிறுகதைகள்தான் எஸ்தரும், மிருகமும். ஆனால், இரண்டிலும் வித்தியாசமான மொழிநடை, உருவங்களைக் கையாண்டிருக்கிறேன். பாம்பும் பிடாரனும் போன்ற சில சிறுகதைகள் வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சிறுகதைகள். கடல்புரத்தில் நாவலில் மேலோங்கி நிற்கும் உரைநடை பைபிள் உரைநடை.
வெங்கட்சாமிநாதன் ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து’ என்று எழுதிய கட்டுரை அப்போது பரவலாகச் சர்ச்சிக்கப்பட்ட, பேசப்பட்ட கட்டுரை. நவீன நாடகம், ஓவியங்கள், சினிமா என்று வெ.சா., தனது கலையனுபவத்தை இலக்கியம் தாண்டி பிற கலைத் துறைகளுக்கும் விரித்திருக்கிறார்.
ஒரு நல்ல மிடில் மேகஸின் எப்படி இருக்கும் என்பதற்கு 70க்கள் வரையிலான தீபம் இதழ்களைச் சொல்லலாம். இதே தீபம் 80களில் வறட்டுத்தனமான சிறுகதைகள், கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துவிட்டது என்பது வேறு விஷயம். சில இதழ்களே வெளிவந்தாலும் அஃ ஒரு அருமையான இலக்கியச் சிற்றிதழ். அதன் விஷயத் தேர்வுகளிலும், வடிவமைப்பிலும் கலையம்சம் ஓங்கி நின்றது.
இதேபோல ‘நடை’யும் சில இதழ்களே வெளிவந்தாலும், அதுவும் தனித்துவத்தோடு வெளிவந்து நின்றது. நடையைப் பின்பற்றி ‘கசடதபற’ வெளிவந்தது. ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானரதம்’ வெளியானது. முதலில் கிரௌன் சைஸில் வெளியான ஞானரதம் பின்னர் ராயல் சைஸில் வெளியாக ஆரம்பித்தது. ஆறேழு ஆண்டுக்காலம் எழுதாமலிருந்த சுந்தர ராமசாமியின் சிறுகதை, நீண்ட இடைவெளிக்குப்பின் ஞானரதத்தில் வெளிவந்தது.
எழுபதுகளின் இறுதியில்தான் நவீன நாடகங்கள் மேடையேற ஆரம்பித்தன. ‘கூத்துப்பட்டறை‘, ஞாநியின் ‘பரீக்ஷா’ போன்ற நாடக இயக்க முயற்சிகள் தோன்றின. பாதல் சர்க்கார் தமிழகத்துக்கு வந்தார். காந்தி கிராமத்தில் நாடகப் பயிற்சிப்பட்டறை நடந்தது. சினிமாத் துறையில் பிரக்ஞை நண்பர்கள் எழுபதுகளின் இறுதியில் ‘பூர்வா’ என்ற திரைப்படச் சங்கத்தைத் துவக்கினார்கள்.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’ பாபுநந்தன் கோடின் ‘தாகம்’, ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’, ஜான் ஆபிரஹாமின் ‘அக்கிரஹாரத்தில் கழுதை’ போன்ற புதிய அலைத் திரைப்படங்கள் இதே 70, 80களில்தான் வெளிவந்தன. பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து சதீஷ் பகதூர் என்பவர் வந்து சென்னையில் சினி அப்ரிஷியேஷன் கோர்ஸ்களை நடத்தியதெல்லாம் இந்தக் காலக்கட்டத்தில்தான். கலை எழுச்சி மிகுந்த காலகட்டம் அது.
இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி,
இருவருமே நிறைய எழுதி வருகின்றனர். இந்தத் தலைமுறை நான் லீனியர், பின் நவீனத்துவம் என்று பேசுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், க.நா.சு. கூறிய பரிசோதனை எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அறுபதுகளிலேயே நகுலன் செய்து பார்த்திருக்கிறார். அவரது ‘நினைவுப்பாதை’ தமிழின் மிக முக்கியமான நாவல். நேர்கோட்டில் சொல்லப்படாத சில சிறுகதைகளையும் நகுலன் எழுதிப் பார்த்திருக்கிறார். நகுலனுக்குப் பிறகு தமிழவனும் நேர்க் கோட்டில் சொல்லப்படாத நாவலை எழுதியுள்ளார். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் மிக வெற்றிகரமான, தமிழ் இலக்கியச் சூழலைப் பாதித்த முக்கியமான நாவல். இதுவும் மையம் அழிந்த எழுத்து வகையைச் சேர்ந்ததே. இந்த மரபைத்தான் தற்காலத்துக்கு ஏற்ப ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் செய்து வருகின்றனர்.
ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ மிக முக்கியமான நாவல். ஆனால், அவரது ‘விஷ்ணுபுரம்’ அலுப்பூட்டுகிறது. எஸ். ராமகிருஷ்ணன் ‘ஷங்கண்ணா’ என்ற பெயரில் பல அற்புதமான சிறுகதைகளை எழுதியுள்ளார். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதியுள்ள தற்காலச் சிறுகதைகளும் நன்றாக இருக்கின்றன. அவரது நாவல்கள் எதையும் என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
இருவருமே சினிமாத் துறையில் தொடர்ந்து செயல்பட முயற்சிக்கின்றனர். ஜெயமோகனை விட எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படத் துறையில் அதிகமாகப் பங்கு பெறுகிறார். இருவரது திரைப்படப் பங்களிப்புகள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை.
70கள் 80களில் குறைவாக எழுதுவதே நல்ல எழுத்து என்ற போக்கு இருந்தது. இப்போது ஒரு எழுத்தாளர் 10 நூல்களை ஒரே சமயத்தில் வெளியிடுகிறார்களே?
குறைவாக எழுதுவது நிறைய எழுதுவது என்பது ஒரு விஷயமே அல்ல. எழுதியவற்றில் கலாபூர்வமாக, இலக்கியபூர்வமாக எத்தனை தேறும் என்றுதான் பார்க்க வேண்டும். புதுமையான நடை, உருவ சோதனைகளில் எந்தளவுக்கு ஒரு ஆசிரியன் அல்லது கவிஞன் ஈடுபடுகிறான், அவற்றில் எத்தனை படைப்புகள் தேறுகின்றன, மொழியை அவனது படைப்புகள் எந்தளவுக்கு வளப்படுத்தியிருக்கின்றன என்பதையெல்லாம் தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நிறைய எழுதும்போது அழகுணர்ச்சி குன்றிப் போய், காலப்போக்கில் வறண்டுவிடும் ஆபத்து நிறைய உண்டு. 90 சதவீத எழுத்தாளர்களின் ஆரம்பகாலப் படைப்புகளில் உள்ள கலையுணர்வு, இறுக்கம், அழகு எல்லாம் போகப் போகக் காணாமல் போய்விடுகின்றன. வயதான காலத்தில் அவர்கள் எழுதும் எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை. அந்தளவுக்கு வறட்டுத்தனமாகி விடுகிறது அவர்களுடைய எழுத்து. எனக்குத் தெரிந்தவரை மிகக் குறைவாக எழுதியதால் மௌனியின் சிறுகதைகள் அதன் அழியா இளமையுடன் இருக்கின்றன. இறுதி வரை தன்னைச் சட்டை உரித்துக் கொண்டு, வறண்டு போகாமலிருந்த ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். பெரும்பாலான, எழுதிய, எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கிழடு தட்டிவிட்டது என்பதே உண்மை.
காவேரிக்கரை எழுத்தாளர்கள், தாமிரபரணிக் கதை எழுத்தாளர்கள் முக்கியப் படைப்புக்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்கள். அவற்றுக்கும் நல்ல எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
ஆற்று நாகரீகத்துக்கும் எழுத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி பிறந்த எட்டயபுரம், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணனின் இடைசெவல் போன்ற ஊர்கள் வறண்ட கரிசல் பூமிதான். இந்த ஊர்களிலிருந்து இவர்கள் எழுதி பல படைப்புகளைத் தமிழில் தரவில்லையா?
நதிக்கரை என்பதைவிடச் சூழல்தான் மிக முக்கியம் என்று தோன்றகிறது.
நேரடியான கதை சொல்லல் முறை மட்டுமே உங்களுக்குப் பிடித்தமானதா?
இல்லை. தற்போது எழுதப்படும் நான்லீனியர் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படிக்கிறேன். ரசிக்கிறேன். சிலர் சற்று விரசமாக எழுதுகிறார்கள் என்பதைத் தவிர, மௌனியையும், நகுலனையும் விரும்பிப் படித்த மாதிரி, இன்று எழுதுகிற ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.யுவன் போன்றோரின் நான்லீனியர் எழுத்துக்களையும் ரசித்துப் படிக்கிறேன்.
நன்றி : ‘நேர்காணல்’ இதழ்
One Reply to “வண்ணநிலவனுடன் ஒரு சந்திப்பு”
Comments are closed.