பொறாமை எனும் விஷம்

குறிப்பு : வரலாற்றாய்வாளர் கெட்ஸ் ஆலி-யின் “Why the Germans? Why the Jews? Equality, Envy and Racial Hatred 1800-1933″ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1808 முதல் 1812ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ப்ரஷய (ஜெர்மனியின் முன்னாள் பெயர்)  சீர்திருத்தங்கள்  அனைத்து குடிமக்களுக்கும் வர்த்தகம் செய்யும் சுதந்திரத்தை வழங்கின. மேலும், நிலவுடைமை சார்ந்த அடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்ததோடல்லாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், யூதர்கள் காரணங்களின்றியும் தண்டிக்கப்படக்கூடும் என்று அதுவரை இருந்த நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. . இருந்தும், யூதர்கள் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டுமே அரசாங்க ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். அப்படியும் அவர்களால் என்றும் ராணுவத்தில் உயர்பதவிகளை அடைய முடியவில்லை. ஆனால், பெரும்பான்மை கிறித்துவர்களைப் போலல்லாமல், தங்களுக்குப் புதிதாய்க் கிடைத்த வாய்ப்புகளை யூதர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.. அவர்கள் தங்களைத் தளைகளிலிருந்து அதிவேகமாக விடுவித்துக் கொண்டனர். ஜெர்மனியின் அரை மனதாகச் செயல் படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், (1870 வரையிலான) மந்தமான பொருளாதார வளர்ச்சி, மற்றும் சட்டம் அளித்த வலுவான பாதுகாப்பு, இவையனைத்தும் ஒரு வளமான களத்தை அளிப்பதாக இருந்தன. இவை அனைத்துக்கும்மேல், ஐரோப்பாவின் சிறந்த உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களும் ஜெர்மனியில் இருந்தன. அவற்றுடன், மோசமான ஆரம்பக்கல்வி அமைப்பும் இருந்தது.

பெரும்பான்மை கிறித்துவ, கல்வியறிவற்ற சிறுவர்களைப் போலல்லாமல் யூதச் சிறுவர்கள் ஹீப்ரூ மொழியை வாசிக்கவும் எழுதவும் கற்றிருந்தனர். இச்சிறுவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் செல்வம் செழிக்கும் சூழலை வழங்கவில்லை, மாறாக, அனைத்து வகையிலும் சிறந்த கல்வி வாய்ப்பை அளித்தனர். வாசிப்பு, எழுத்து, கணிதம் போன்ற கலாச்சார திறமைகள் தங்கள் குழந்தைகளுக்கு கூடுதலாக எவ்வளவு சிறந்த வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்பதை யூத பெற்றோர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர். ஆனால், கிறித்துவ பெற்றோர்களும், சமயாச்சார்யார்களும், 20-ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட ‘படித்தால் கண் கெட்டுப் போய் விடும்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.

இத்தகைய சூழலமைப்பு, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் மாபெரும் வேறுபாடுகளைத் தோற்றுவித்தது. 1869-ஆம் ஆண்டு, பெர்லினின் ஆரம்பப் பள்ளிகள் மொத்த மாணவர்களில், 14.8 சதவீதத்தினர் யூத குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே மோசஸ் வழி வந்தவர்களாகப் பதிவு செய்து கொண்டனர். 1886-ஆம் ஆண்டு, யூத மாணவர்களில் 46.5 சதவிகிதத்தினர், ஆரம்ப கல்வியை அடுத்து மேற்படிப்பைத் தொடர்ந்தனர். 1901-ஆம் ஆண்டு இந்த சதவீதம் 56.3-ஆக அதிகரித்து விட்டது. ஆனால் இதே காலகட்டத்தில், கிறித்துவர்களின் கல்வி ஈடுபாடு 6.3-லிருந்து 7.3-ஆக மட்டுமே உயர்ந்தது. கிறித்துவ பள்ளி மாணவர்களை விட எட்டு மடங்கு அதிக அளவில் யூத மாணவர்கள் தங்கள் மத்திய மற்றும் மேநிலைக் கல்வியை நிறைவு செய்தனர். அதே போல், 1901-ஆம் ஆண்டு, பெர்லினில், மேனிலைப் பள்ளிகளுக்கு சென்ற கிறித்துவ மாணவிகளை விட யூத மாணவிகள் 11.5 சதவீதம் அதிகம்.

ஆரம்பப் பள்ளிகளில் யூதர்கள் அடைந்த வெற்றி பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்தது. புருஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த யூதர்கள், 1886/1887ம் ஆண்டு பல்கலைக்கழகங்களின் மொத்த மாணவர்களில் கிட்டத்தட்ட பத்து சதவீதமாக இருந்தனர். எழுதிவைக்கப்பட்ட விதியைப் போல், யூதர்கள் கிறித்துவர்களை விட முன்னரே பல்கலைக்கழகக் கல்வியைத் துவக்கி, அவர்களைவிட வேகமாகவே தங்கள் கல்வியை நிறைவு செய்தனர். புருஷ்ஷிய புள்ளியியலாளர்கள் இதை உறுதிசெய்கின்றனர் : “யூத மாணவர்கள் கிறித்துவர்களை விட மேன்மையான திறன்கள் கொண்டவர்களாகவும், செய்யும் பணியில் ஆழ்ந்த கவனம் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்று பொதுவாகக் கருத முடியும்”

1913-14-ஆம் கல்வி ஆண்டில், வியன்னா (Viennese) வணிகக் கல்லூரி ஆசிரியரான முனைவர். ஓத்தோகார் நெமெசெக் (Ottokar Nemecek) கிறித்துவ மற்றும் யூத வணிக கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை ஆராய்ந்தார். அவரது நோக்கம் இரு குழுவிலும் எத்துணை சதவீத மாணவர்கள் உயர் கல்வி பயில வந்தனர் என்பதை நிறுவுவதாக இருக்கவில்லை (அந்த வேறுபாடு அனைவரும் அறிந்த ஒன்றே). மாறாக, ஒரு மாணவனின் சராசரி செயல்திறனை அறிவதற்கான அளவைகளை முன்வைக்க முயற்சித்தார். இதை அறிய அவர் 1539 பள்ளி மாணவ மாணவியரின் மதிப்பெண் சான்றிதழ்களை அலசினார். இன்னும் சில கூடுதல் தேர்வுகளை நடத்தி அம்மாணவர்களின் பேச்சுத் திறமை, ஞாபக சக்தி, துரித இணைப்புத் திறன் மற்றும் எழுத்துத் திறன் குறித்து அறிய முற்பட்டார்.

அந்த ஆய்வு முடிவுகள் பெருமளவிற்கு யூத மாணவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தன, உடை தோற்றம் மற்றும் கவனகம் ஆகியவற்றை தவிர. ”தங்கள் ஆசிரியர்களால் வாயாடிகள் என்றும் அமைதியை குலைப்பவர்கள் என்றழைக்கப்படும் மிகுந்த உயிர்ப்புடன் இருக்கும் யூத மாணவர்கள் கிறித்துவர்களை விட அனைத்து வகையிலும் உயர்ந்து நிற்கின்றனர்” என்றார் நேமெசேக். ஒழுங்கின்மை மற்றும் கவனகக் குறைவு கொண்டிருந்தாலும், யூத மாணவர்கள் வகுப்பின் “மிகச் சிறந்த” மற்றும் “சிறந்த” பிரிவுகளில் அதிக அளவில் இருந்தனர் (26:16). “சராசரி” பிரிவில் யூதர்கள் மிகக் மிக குறைந்த சதவிகித அளவிலேயே இருந்தனர் (4:23). ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில், தொடர்ச்சியாக நல்ல முறையில் தேறியிருந்தனர். கணிதம், வேதியியல், இயற்பியல், வணிகம் மற்றும் சட்டம் ஆகிய பாடங்களிலும் இதே நிலை. இதற்கான காரணங்களை நெமெசெக் பின்வருமாறு சொல்கிறார் : “யூதர்களின் அருவ சிந்தனை (abstract thinking), துரித சிந்தனைத் திறன், வேகமான எழுத்துத் திறன், விரிவான வார்த்தைக் களஞ்சியம், உணர்ச்சிகளை விழிப்புடன் கையாளுதல். வரைகலை, கையெழுத்து மற்றும் விளையாட்டுத் துறைகளில் மட்டுமே கிறித்துவர்கள் சிறந்து விளங்கினர்”.

கல்வியில் யூதர்கள் முன்னேற்றமடைய வல்லுநர்கள் எத்தகைய காரணங்களைச் சொன்னாலும், யூதரல்லாதோர் வேற்றுமையை உணர்ந்தனர். யூதர்களுக்கு எதிராக மூர்க்கமாக செயல்பட்டனர். 1880-ஆம் ஆண்டு தாராளவாதத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான Ludwig Bambeger யூதர்களின் ‘அசாதாரண கல்வி தாகத்தை’ குறித்தும், யூதர்களிடம் ’வெளிப்படையாகத் தெரியும் முன்னேற்றத்திற்கான அவசரம்’, இவற்றைக் கொண்டு இது நாள் வரை அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்த அனைத்தையும் யூதர்கள் கைப்பற்றுவதை சுட்டிக்காட்டி பேசிய அவர், தனது உரையை இப்படி முடித்தார் : “சந்தேகமேயில்லாமல் யூதர்கள் மீதான வெறுப்பு மீண்டும் அதிகரிப்பதற்கான காரணங்கள் இவையே”.

சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆகஸ்டு பீபெல் (August Bebel), கல்வியைப் பெறுவதில் இருந்த உத்வேகத்தில், யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே நிலவிய வேறுபாடு குறித்து இதே போன்ற சித்திரத்தை அளித்தார் கிறித்தவர்களின் உறுதியான மாறாத மன நிலைக்கும், சூழலுக்கு தகுந்தவாறு மாறுபடும் யூதர்களின் இளகும் தன்மைக்கும் இருக்கும் வேறுபாடுதான் அறிவுதளத்தில் இருவருக்குமிடையே இருந்த ஏற்றத்தாழ்விற்கான காரணம் என்றும், இதுவே பொறாமையின் உந்துதலால் சமூகத்தில் பரவிவரும் சமகால யூத-எதிர்ப்பிற்கு காரணம் என்று கூறிய சமூகவியலாளர் வெர்னர் சோம்பர் (Werner Sombart), இந்த விஷயத்தை மையப்படுத்தி தன் ஆராய்ச்சியை தொடர்ந்தார். “இறுகிய, கெட்டித்த, வணிகத் தன்மை குறைந்த” சமூகங்களில்தான் யூதரகள் ஆதிக்கம் செலுத்தினர் என்று சோம்பர் கண்டறிந்தார். மேலும், சராசரியாக யூதர்கள் “நம்மைவிட அதிக அறிவுடனும் துடிப்புடனும் இருக்கின்றனர்” என்றும் முடிவு செய்தார் அவர். தன்னுடைய இந்த முடிவின் மூலம் பல்கலைக்கழக ஆசிரிய பணிகளிலிருந்து யூதர்கள் விலக்கி வைக்கப்படுவதை அவர் நியாயப்படுத்தினார். வேளைக்கு விண்ணப்பிக்கும் இருவரில் அனைத்து வகையிலும் அறிவு குறைந்த ஒருவரே எப்போதும் யூதரைக் காட்டலும் பணி நியமனம் பெறுவது அறிவியலுக்கு நல்லதல்ல என்று அவர் எழுதினார். இருந்தாலும் அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமானவை என்பது அவரது கருத்தாக இருந்தது. இத்தகைய தடைகள் இல்லாவிட்டால், “அனைத்து விரிவுரையாளர், பேராசிரியர் பதவிகளும் யூதர்களால் கைப்பற்றப்படும் என்று அவர் நம்பினார்- “ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்” யூதர்கள் யூதர்கள்தான். இன அடிப்படையிலான யூத வெறுப்பு எங்கே துவங்குகிறது என்பது இப்போது தெளிவாகிறது. கிறித்தவர்களாக மதம் மாறுவதால் யூதர்களின் சிந்தனைத் திறன் ஆதிக்கம் எவ்வகையிலும் நசிக்கப்படுவதில்லை என்ற எளிய அனுபவத்தின் அடிப்படையில் அவர் இந்த முடிவுக்கு வந்தார்.

“யூதர்களின் அறிவார்ந்த, நம்பிக்கை மிகுந்த துணிச்சலான நகைச்சுவை (frivolous)அற்பத்தனத்தைத் தொடுகிறது,”, அதன், “அபரித விரைவான கேலியும், ஒடுக்கப்படமுடியாத நம்பிக்கையின்மையும்” அமைதியாக அடங்கிப் போகும் பெரும்பான்மை கிறித்தவர்களை எரிச்சலூட்டியது. சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கார்ல் காட்ஸ்கியின் முடிவான சொற்களில், “யூதர்களின் அறிவாற்றலே பிரச்சினைகுரிய காரணமாக இருக்கிறது”. 1915ஆம் ஆண்டு ஜான் பாஸ்டர் பிரேசர் இது குறித்து கேலி செய்தார்: “சுருள் முடியும் சோம்பல் அறிவும் கொண்ட வடக்கின் மைந்தர்களுக்கும் கரும் கண்களும் விழிப்பான அறிவாற்றலும் கொண்ட கிழக்கின் மக்களுக்கும் இடையில்” உள்ள போட்டி ஒருதலைபட்சமாக உள்ளதால் ஜெர்மானிய கல்வியாளர்கள் யூதர்களை விலக்கி வைக்கத் தங்களால் ஆன மட்டும் முயற்சி செய்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், புதிதாய் முன்னேறி வரும் யூதர்கள் எந்த அளவிற்கு தற்போது வளர்ந்து வந்தார்களோ அதே அளவிற்கு கல்வி மற்றும் dexterity (adjustment to changing environment என்ற பொருளில்) தாம் பின்தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவர்களின் இக்குறைகள் அவர்களுக்கே சங்கடத்தைத் தந்தன. எனவே, இவற்றை இனக் கோட்பாட்டின்பின் மறைத்துக் கொள்வது எளிதாக இருந்தது இதற்கான ஒரு நல்ல உதாரணத்தை 1890-களில் குர்ட் முல்லர் என்ற ஒரு லேப்சிச்த்(Leipzig) மாணவன் எழுதிய ”ஜெர்மன் மாணவர்கள் மத்தியில் யூத மதம்” என்ற துண்டறிக்கையிலிருந்து நாம் பெறமுடியும். தன் சக மாணவர்களிடம் இருந்த இரு விஷயங்களை அவன் விரும்பவில்லை : தங்கள் சக மதத்தவர்களுக்காக எதையும் செய்ய, “தங்களையே தியாகம் செய்யும் அளவிற்கு”க்கூட, தயாராக இருப்பதும், தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதக் கணக்கின்படி “ஜெர்மனிய மாணவர்களைப் போல் யூத மாணவர்கள் பெருமளவு தோல்வியடையவில்லை” என்பதும்தான் இவை. ஏன் இப்படி? என்ற கேள்விக்கு முல்லரிடம் பதிலிருந்தது. யூதர்கள் “கடின உழைப்பாளிகளாகவும், கவனத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுவோராகவும்” இருந்ததை ஒப்புக் கொள்ளவேண்டுமென்றும், ”பைத்தியம் பிடித்தது போல் பாடங்களை வீட்டில் மனப்பாடம் செய்தனர்” என்றும் சொன்னார் அவர். “பணப்பித்து கொண்ட எல்லா குழுக்களையும் போல” யூதர்கள் மிகக் குறைவாகவே உண்டனர். ஒரு பீர் கோப்பையை காலி செய்தவுடனேயே யூத மாணவன் தன் கல்வி குறித்து தேவைக்கதிகமாகவே பேசத் துவங்கிவிடுகிறான்! அவன் நிறுத்தாமல் பேசுகிறான், அது அனைவரையும் கவர்கிறது. அவன் மிக வேகமாக கற்கிறான், ஆனால் ஆழமாக கற்பதில்லை. ஏன் அவன் ஆழமாக கற்கவேண்டும்? இப்படி படிப்பதன் மூலம் அவன் தேர்வுகளை குறிப்பிட்ட காலத்தில் தேற முடிகிறது. மேலும், ஜெர்மானியர்களுக்கு மற்றுமொரு யூத உயரதிகாரி கிடைத்துவிடுகிறான்”. பிறகு அவர்கள் மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் வேதியியலாளர்களாக மிக வேகமாக பணம் சம்பாதிக்கக் துவங்கி விடுகிறார்கள்!” அந்த துண்டறிக்கையின் மொழி முழுக்க முழுக்க இப்படித்தான் இருக்கிறது. அது இவ்வாறு முடிவடைகிறது : “யூத மாணவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற பெருமையுடனும் எதிர்த்து நில்லுங்கள்!”. ஜெர்மானிய இனப் பெருமை தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு ஊட்டி வளர்க்கப்பட்டது.

படித்த, பண்பாட்டு பாவனைகள் கொண்ட நடுத்தரவர்க்க யூத வெறுப்பாளர்களுக்காக, 1922-ஆம் ஆண்டு வில்ஹெல்ம் ஸ்டேபெல் (Wilhelm Stapel) ’செமிதிய எதிர்ப்பு’(AntiSemitism) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அவர் அதில் இப்படி எழுதியிருந்தார் : “ஒரு வேறு வகை அறிவுசார் இனத்தால் நம்மவர்கள் குழப்பப்பட்டு, அசெளகரியத்தின் புள்ளிக்கு நகர்த்தப்படுவது உறுதியாகும்பட்சத்தில், ‘சாத்தானே என்னை எடுத்துக் கொள்’, அந்த எதிரி எத்துணை அறிவாளியாகவும், புகழ்பெற்றவனாக இருந்தபோதும் என்னை தற்காத்துக் கொள்ள அனைத்து வகையிலும் எனக்கு உரிமையுண்டு”. பத்து வருடம் கழித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, ‘”ஏன் யூதர்களின் புத்திசாலித்தனமான உடனடி பதில்கள் எரிச்சலைக் கிளப்புகின்றன?’, பதில் அளித்தவர் இப்படிச் பதில் சொன்னார் : ‘யூதர்கள் வாயைப் பொத்திக்கொண்டு இருக்க ,முடியுமானால் யூத-எதிர்ப்பென்பதே இருக்காது. தங்கள் வாயை பொத்திக் கொண்டு இருப்பதை தவிர அவர்களால் மற்ற அனைத்தையும் செய்யமுடியும்”. தன் காலத்தில் மிகப் பரவலாக வாசிக்கபப்ட்ட இந்த தத்துவஞானி, ஜெர்மனியிர்களின் மெளனத்தை தலைசிறந்த குணமாக முன்மொழிய பின்வரும் வார்த்தைகளை உபயோகித்தார் : “கருணை”, “உயர்குலத்தின் இயல்பு”, ”மேன்மை நிரம்பியது” மற்றும் “ஆழம் கொண்டது”.

1936-ஆம் வருடம், உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் தத்துவ ஞானி ரூடோல்ப் ஸ்காட்லியாண்டர் (Rudolf Schottlaender)-க்கு நேர்ந்த ஒரு அனுபவம், அவர் அதை பின்னாளில் நினைவுபடுத்தினார். ரூடோல்ப் தனது கிறித்துவ மனைவி மற்றும் குழந்தைகளுடன் விலைவாசி குறைவாயிருந்த பெர்லினின் Heiligensee மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. அந்த நிர்பந்தத்தை அவர் அண்டை வீட்டார் அறிவர். பொருளாதார நெருக்கடிகளால் பீடிக்கப்பட்ட அவர், தன் வீட்டின் இரு அறைகளை ஒரு உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்திற்கு உள்-வாடகைக்கு விட்டிருந்தார். இந்தக் குடும்பத்தின் குழந்தைகள் தங்கள் வீட்டின் எதிர்புறமிருந்த SS குடும்பத்தின் குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று வந்தனர். அவர்களின் பள்ளி தேர்வறிக்கையும் சிறப்பானதாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த உயர்ந்த இன SS தாய் தன் வீட்டுத் தோட்டத்தின் வேலிக்குள் நின்றபடியே இப்படி கத்தினாள் : ‘யூதர்களுடன் தானே வாழ்கிறாய், இதிலென்ன அதிசயம்!’.

1924-ஆம் ஆண்டு, பெர்லினில், கார்ல் கெளஸ்(Karl Kraus) ”உண்மையான ஜெர்மானிய பெண் செய்தித்தாள் விற்பனையாளர்” ஒருவர், அன்றைய செய்தித்தாளை உரக்கக் கூவி விற்கக் கேட்டாள்: “ஏன் யூதர்கள் கிறித்துவர்களை விட அதிகமாகவும் வேகமாகவும் பணம் சம்பாதிக்கின்றனர்?”, என்று கேட்டார். 1933-ஆம் ஆண்டு Kraus “The Third Walpurgis Night”-ல் இதே சம்பவத்தை நினைவு கூர்கிறார் : “திடீரென எனக்கு பிடிபட்டது, நான் வேரை கண்டுவிட்டேன். எதை நான் வார்த்தைகளில் சொல்லமுடியாததோ, அதை நான் உணர்ந்தேன்”. அதே வருடம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பவாரியன் பொது ஊழியரான ஜீஸ்க்பிரீட் லிஸ்டென்ஸ்டெயிட்டர் (Siegfried Lichtenstaedter) நாஜி கட்சியை சமூக முன்னேற்றத்திற்கான கட்சி என்று வர்ணித்தார். இந்தப் பார்வையின் அடிப்படையில் தன் வருங்காலம் குறித்தும், ஜெர்மனியில் வாழும் பிற யூதர்களின் எதிர்காலம் குறித்தும் அவர் தன் முடிவுகளை கண்டடைந்தார். அவரது முடிவுகள் இப்படி இருந்தன : சராசரியாக, மத்திய மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் உயர் பதவிகளை வகித்தனர். இது முன்னேற வழியில்லாத யூதரல்லாதோரால் யூதர்களுக்கெதிரான வாதமாக முன்வைக்கப்பட்டது.. யூதர்களின் உழைப்பு எந்தளவிற்கு அவர்களை சமூகத்தில் முன்னேற்றியதோ அதேயளவிற்கு அவர்களின் எதிரிகள் பெருகினர் என்று பொருள் கொள்ளலாம். ஜீஸ்க்பிரீடின் கருத்துப்படி, இத்தகைய (யூத வெறுப்பு கொண்ட) யூதரல்லாதோர் மோசஸீய மதம் மற்றும் யூத இனம் ஆகியவை “நடைமுறையில் பொருட்படுத்தக்கதல்ல” என்று நினைத்தனர். அவர்கள் “உணவு, பெருமை மற்றும் மரியாதை” ஆகியவற்றிற்காக யூதர்களுடன் போட்டியிட்டனர். ஜீஸ்க்பிரீடை பொருத்தவரை யூத-எதிர்ப்பு, சமூக பொறாமை, போட்டி மற்றும் சமூக லட்சியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. யூதர்கள் வேறு யாரை விடவும் ’அளவுக்கதிகமான மகிழ்ச்சி’யுடன் இருப்பதாக பிறருக்கு தோன்றினால், “அந்த எண்ணமே (யூதர்கள் மீது) பொறாமை மற்றும் கசப்பிற்கான பொது காரணமாக இருக்கக் கூடாதா? மேலும், ஒருவர் மனதிலும் மூளையிலும், தங்கள் எதிர்காலம் குறித்து கவலையும், வருத்தங்களும் நிறையும் போது இது சாத்தியமே. தனிமனித உறவுகளில் கூட இது அடிக்கடி நடப்பது தானே?”

தனி மனிதனை அரித்துத் தின்னும் பொறாமையை, அவன் தனக்கும் பிறரிடத்தும் மறைக்கும்போது அது சக மனிதர்களிடம் பரவியிருக்கும் ஒரு கூட்டுக் கனவாகி, அவர்களை இன வாதத்திற்கு இட்டு சென்றது. தங்களை குறித்து தாங்களே மகிழ்ந்திராத ஒடுக்கப்பட்ட ஜெர்மனியர்களுக்கு இந்த இன வாதம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. மந்தமான (maladroit) கிறித்துவ மாணவர்கள், சிந்திக்கத் தெரியாத விற்பனையாளர்கள் மற்றும் தப்புக் கணக்கு போட்ட தொழில் முனைவர்கள் யூதர்களின் தொடர்ந்த வளர்ச்சி குறித்து குற்றம் சொல்லிக் கொண்டே இருக்க முடியவில்லை. இது தார்மீக உணர்வுக்கு உவப்பானதாகவுமில்லை, தோல்வி குறித்த பயத்தை அதிகரிக்கவும் செய்தது. அதனால், தங்கள் பொறாமையையும், யூத-எதிர்ப்பையும், இன அவதூறாக மாற்றிக்கொண்டனர். இந்த இன வாதக் கோட்பாடு, தங்களைக் குறித்து சந்தேகமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த பலவீனமான ஜெர்மானியர்களை, தாங்கள் ஒரு வலுவான மற்றும் உயர்ந்த அறிவுஜீவிகளாகக் கற்பனை செய்துகொள்ளும் கூட்டத்தினராக மாற்றியது. இனவாதம் என்பது பலவீனத்தால் உந்தப்பட்டு மந்தைக்குள் சென்று சேர்வதன்றி வேறல்ல.

நன்றி : http://www.signandsight.com/features/2198.html