எம்மைப் பறித்தால், எம் குருதி வடியாதா

தாவரங்களின் அனுபவத்தைப் புரிதல் மனித அனுபவத்தையும் புரிந்து கொள்ள உதவும்.

தாவரங்கள்,
அவற்றின் நாளங்களூடே
ஜீவன் ஓடுகிறது,

ஆனால் என்ன
வகை ஜீவன் அது?

1914-ம் ஆண்டு வாக்கில் ’த நேஷன்’ பத்திரிக்கையின் செய்தியாளர் ஒருவர் எழுதினார்: மெய்ட வேல் (Maida Vale)[1] அருகே ஒரு அறையில் பரிதாபமான ஜீவன் ஒன்று உரிமம் இல்லாத உயிரறுவையாளர் ஒருவரின் மேஜையில் கட்டப்பட்டுள்ளது. இடுக்கி கொண்டு இறுக்கப்படும்போது அது துடிக்கிறது. அதன் வலியில் உருவாகும் மின்சார அதிர்வு ஒரு சின்னஞ்சிறு ஆடியைத் தூண்டும் ஓர் மிகநுண்ணிய நெம்புகோலின் நீண்ட கையை இழுக்கும்வகையில் அது கட்டப்பட்டுள்ளது. இந்த அசைவு அறையின் அடுத்த மூலையில் இருக்கும் துணித்திரையின் மேல் ஒரு ஒளிக்கற்றையை வீசுவதன் மூலம் அந்த ஜீவனின் நடுக்கத்தை பிரும்மாண்டமாய் மிகைப்படுத்தும். வலக்கைப்புறம் இருக்கும் குழாயின் அருகில் ஒரு கிள்ளு கிள்ளினால் அது ஒளிக்கற்றையை 7 அல்லது 8 அடி வலப்புறம் செலுத்தும், அடுத்தக் கம்பியின் அருகில் ஒரு ஊசிக் குத்து அதே அளவு தூரம் இடப்பக்கம் செலுத்தும்.

”இவ்வாறு விஞ்ஞானத்தால் கேரட் போன்ற மந்தமான ஒரு காய்கறியின் உணர்ச்சிகளைக் கூட வெளிக்காட்ட முடியும்,” என்று அந்த பத்திரிக்கையாளர் முடித்தார்.

Profileமுன்பு சொல்லப்பட்ட கேரட்டை உயிரோடு கூறு போட்ட அறுவையாளர் ஸர் ஜகதீஷ் சந்த்ர போஸ், தன் துறையில் தேர்ச்சி மிகுந்த ஒரு விஞ்ஞானி. இன்று பாங்க்ளாதேஷ் என அறியப்படும் நிலப்பகுதியில் 1858ல் பிறந்த இவர் பல்துறை அறிவாளி என்று சொல்லப்படுவோருக்கு உரிய அனைத்து குணங்களும் கொண்டவர்: இயற்பியல், உயிரியல், தாவரவியில், தொல்பொருளியல் போன்ற துறைகளில் வல்லுனர். இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து அமெரிக்கக் காப்புரிமை (patent) ஒன்றைப் பெற்ற முதல் மனிதர். டெஸ்லா, மார்கோனி, பாபோ(ஃப்)வ் என்று வானொலி விஞ்ஞானத்தின் பிதாமகர்களாகக் கருதப்படும் விஞ்ஞானிகளின் வரிசையில் இவரும் ஒருவர். ராயல் சொஸைடியின் ’ஃபெலோ’ எனப்படும் கௌரவத்தை 1920-ல் விஞ்ஞானத்துக்காகப் பெற்ற முதல் இந்தியர் இவர். ஸர் ஜகதீஷ் சந்த்ர போஸ் செல்வாக்குள்ள விஞ்ஞானி என்பது தெளிவானதாகும். செல்வாக்குடைய மற்ற விஞ்ஞானிகளைப் போல இவரும் தன் சர்ச்சைக்குரிய முயற்சிகளுக்காகப் பிரபலமானவர் – அப்படி ஆனது தாவரங்களின் உடற்கூறு பற்றிய இவரது ஆராய்ச்சிகளுக்காக.

வானொலி அலைகள் மற்றும் மின்சாரம் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் கண்ணுக்குப் புலனாகாதது என்று நாம் சொல்லக்கூடிய உலகத்தைப்பற்றிய இவரது ஆராய்ச்சிகளுக்கு உந்துகோலாய் இருந்திருக்கலாம். பௌதிகம் வெறும் கண்ணுக்குப் புலனாவதற்கும் அப்பால் செல்லக்கூடியது என்று போஸ் அழுத்தமாய் நம்பினார். 1900ஆம் ஆண்டு வாக்கில் போஸ் தாவரங்களின் ரகசிய உலகம் பற்றிய தனது புலனாய்வுகளை ஆரம்பித்தார். அனைத்துத் தாவரங்களுக்கும், தாவரங்களின் உறுப்புகளுக்கும், பிராணிகளை ஒத்த கூர் உணர்வுடைய நரம்பு மண்டலம் இருப்பதையும், புறத்தூண்டுதல்களுக்கு அவற்றின் எதிர்வினைகள் அளக்கப்பட்டு பதிவு செய்யக்கூடியவை என்றும் அவர் கண்டறிந்தார். கூர் உணர்வுடைய சில தாவரங்களின் எதிர்வினைகள் எளிதாய் பார்க்கக்கூடியவை, இவை மீமோஸா செடியைப்போல உறுத்தப்பட்ட உடனே உதிர்ந்தோ அல்லது சுருங்கியோ எதிர் செயலாற்றும். எதிர்செயலை காணக் கடினமான காய்கறிகள் போன்ற சில தாவரங்களுக்கு அவரது உருப்பெருக்குத் திறனுடைய சாதனத்தை போஸ் பொருத்தியபோது, அவையும் உறுத்தப்படுகையில் கிளர்ச்சியும், எரிச்சலும் அடைவதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தார். நம்மைச் சுற்றிலும் தாவரங்கள் நமக்குத் தம் வினைகளைத் தெரிவிக்கின்றன என்று போஸ் உணர்ந்தார். நாம்தான் அதை கவனிப்பதேயில்லை.

தாவரங்களிடமிருந்து எதிரியக்கம் கிடைக்கக் கிடைக்க போஸுக்கு ஊக்கம் மேம்பட்டு அவரது முயற்சிகள் இன்னும் விரிவடைந்தன. தாவரங்கள் சாகும்போது அவற்றில் ஒரு மின்சார மரணத்துடிப்பு தோன்றுவதை போஸ் கண்டுபிடித்தார். இதனால் தாவரங்களின் சரியான இறப்புத் தருணத்தை பதிவு செய்ய முடியும் என்பதையும் அறிந்தார். தாவரங்களின் இறப்புத் தருணத் துடிப்பில் உருவாகும் இந்த மின்னியக்கு விசை சில சமயங்களில் கணிசமானதாகும் என்று ஸர் பாட்ரிக் கெட்டிஸ் என்பவர் 1920ல் போஸின் வாழ்க்கை வரலாற்றில் விவரிக்கிறார். உதாரணமாய், ஒரு அரைப் பட்டாணி அரை வோல்ட் அளவு வெளியேற்றும் என போஸ் கணக்கிட்டார். இதன்படி, 500 ஜதை கொதிக்கும் அரைப் பட்டாணிகள் ஒரு வரிசையாய் அடுக்கப்பட்டால் 500 வோல்ட் மின்சார அழுத்தம் உண்டாகும். அப்பாவிகள் மின்சாரம் பாய்ந்து சாக இந்த அளவு போதும். ஒரு சாதாரண சமையல்காரிக்கு பட்டாணிகளை சமைக்கும்போது ஏற்படக்கூடிய அபாயம் தெரியாது. “அவளது அதிருஷ்டம் பட்டாணிகள் வரிசையாய் அடுக்கப்படுவதில்லை,” என்று போஸ் எழுதினார்.

கருத்தார்ந்த இதர விஞ்ஞானிகளுக்கு தாவரங்களின் புலனுணர்வு அற்புதங்களை மட்டுமன்றி தாவரங்கள் மற்றும் பிராணிகளின் எதிர்செயல்களில் உள்ள வியக்கவைக்கும் ஒற்றுமைகளையும் காட்டும் உறுதியுடன் அவர் இருந்தார். உயிர்கள் மற்றும் உயிரற்றவைகளின் மறுமொழிகள் (“Responses in the Living and Non-Living” ) என்ற அவரது 1902ம் வருடத்திய கட்டுரையில் உள்ள ஒரு முழு அத்தியாயம் தவளை, பல்லி மற்றும் ஆமையின் தோலின் மின் கணத்தாக்க மறுவினையைத் தக்காளி மற்றும் திராட்சை தோல்களின் மறுவினையோடு ஒப்பிடுகிறது. இவற்றினிடையே அவர் மிகக்குறைந்த வித்தியாசத்தையே கண்டார்.

நல்ல இசை, மென்மையான தாழ்ந்தகுரல் பேச்சு போன்றவைகளின் இடையே இருக்கும் தாவரங்கள் வேகமாக வளர்வதையும், கடூரமான இசை மற்றும் உரத்த பேச்சினிடையே தாவரங்கள் நலிவாய் இருப்பதையும் பற்றி போஸ் எழுதுவார். பல வருட ஆராய்ச்சியினூடே தாவரங்கள் பலவித புறத்தூண்டுதல்களுக்கும் கண்கூடாய் எதிரியக்கம் காட்டுவதை அவர் கண்டறிந்தார்: ஒளித் தெறிப்புகள், தட்பவெப்ப மாறுதல்கள், பிய்த்தல், குத்தல், கத்தல் போன்றன இத்தூண்டுதல்கள். தாவரங்களும் மருந்துகளினால் உணர்ச்சி மரத்தும், ஆல்கஹாலினால் போதைநிலைக்கும் போகும். மாசுபட்ட காற்றினிடையே – கருமேகம் கடக்கும்போது கூட – அவை சோர்ந்து போகும். இந்துக்களையும், யூரோப்பியர்களையும் ((கிருஸ்தவர்களையும்?) விட மின்சாரத்திடம் அதிக கூச்சத்தை அவை வெளிப்படுத்தின. சுருக்கமாய், தாவரங்கள் இன்பத்தையும், வலியையும் உணரும் ஆற்றல் உள்ளவை என்று போஸின் ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. தாவரங்களுக்கும் உணர்வுகள் இருந்தன.
ஆகவே மைடா வேலில் இருந்த போஸின் சொந்தப் பரிசோதனைக் கூடம் வியப்பும் அவநம்பிக்கையும் சேர்ந்த ஒரு களமானது. விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க பலரும் தாவரங்களின் புலனுணர்வு பற்றிய போஸின் பரிசோதனைகளில் ஆர்வம் கொண்டனர். ராயல் மற்றும் லின்னியன் சொஸைடிகளின் விஞ்ஞானிகளுடன், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆவல் கொண்ட தாவர உணவு பழக்கம் கொண்ட நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா இவற்றில் ஆர்வம் காட்டினார். பெர்னார்ட் ஷா கொதிக்கும் நீரில் மூச்சுத் திணறிக் கடுமையாய் துடிக்கும் ஒரு முட்டைக்கோசுத் துண்டைக் கண்டு பீதியடைந்தார். வானொலி அலைகள் பற்றிய போஸின் கண்டுபிடிப்புகள் பெரிதும் மதிக்கப்பட்டப் போதிலும், தாவரங்கள் சார்ந்த உயிர் இயற்பியலில் இவரது ஆய்வுகளைப் பொறுத்தவரை, மேலை விஞ்ஞான உலகில் அவற்றுக்குரிய மதிப்பை பெறப் போராட வேண்டி இருந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை. கேரட்டை வைத்து இவர் செய்த ஃப்ராங்கென்ஸ்டெயின் போன்ற, உயிருடன் இருக்கையில் செய்த அறுவைப் பரிசோதனையைப் பற்றி மேலே சுட்டிய நெஞ்சை உருக்கும் வருணனை, தாவரங்கள் பற்றி போஸ் செய்த ஆய்வுகளை கேலிக்கூத்தாய் சித்திரித்தவர்களின் பேச்சின் நகலே.

1911ல் பெங்கால் இலக்கிய மாநாட்டில் வழங்கிய சொற்பொழிவில் போஸ் கேட்டார்:

தாவரத்தினுள்ளே கண்ணுக்குத் தெரியாமல் மாறுதல்கள் நிகழ்வதை நாம் எப்படி அறிவது? அது சில விசேஷ சூழ்நிலைகளில் கிளர்ந்தோ அல்லது சோர்ந்தோ போனால் அதை வெளியிலிருந்து நாம் எப்படி தெரிந்துகொள்வது?…ஒரு மிருகம் வெளியிலிருந்து அதிர்ச்சி பெறுகையில் பல வகைகளில் பதிலளிக்கும், குரலிருந்தால் கத்தும், இல்லை என்றால் உறுப்புகளை அசைத்து சொல்லும்.

மாற்றாய், ஒரு தாவரத்துக்கு குரல் கிடையாது. விஞ்ஞானம் வந்து அதன் குரலை கேட்கச் செய்திருக்கிறது. சரியான கருவிகளின் மூலம் தாவரங்களின் ரகசிய வாழ்க்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாய் போஸ் கருதினார்.
’த நேஷன்’ போன்ற ஒரு பத்திரிகை இதை மறுக்காமல் என்ன செய்யும்? தாவரங்களுக்கு பிராணிகளைப் போல உணர்வுகள் உண்டு என்பது அபத்தமானதும், சிரிக்கத்தக்கதுமாகும், இல்லையா? அது உயிரியலில் விஞ்ஞானத்தால் விளக்கமுடியாதவைகளைக் கொண்ட, கருத்துலக விளிம்பில் இருக்கும் ஒரு துறை. மரங்கள் வெட்டப்படுகையில் துன்பம் அனுபவிக்கின்றன என்றும், பட்டாணிகள் இன்னும் இணைந்து செயல்படாததால் அவற்றின் கோபத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் இருப்பதாகவும் நாம் நிஜமாகவே நம்ப வேண்டுமா என்ன? எத்தனை விளைவுகளை நாம் ஒப்புக்கொள்ளத் தயாராய் இருக்கிறோம்? காய்கறிகளின் இத்தகு துன்பங்களைப் பார்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

***

போஸ் இறந்து பல வருடங்களாகின்றன, ஆனால் இன்று தாவர உடற்கூறியல் மதிக்கப்படும் ஒரு விஞ்ஞான ஆய்வுத்துறையாகி உள்ளது. முன்பு நினைத்தது போல் தாவரங்கள் பிராணிகளை விட மிகவும் வேறுபட்டவை அல்ல என்ற போஸின் கருத்துக்களுக்கு இந்தப் பல பத்தாண்டுகளில் ஏராளமான விஞ்ஞானிகள் இன்னும் கனம் சேர்த்திருக்கிறர்கள். ஸெயிண்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் துணைப் பேராசிரியரான எலிஸபெத் ஹாஸ்வெல் என்பவர் காலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியை சார்ந்த்த தனது துறைச் சகாக்களுடன், அண்மையில் ஸ்ட்ரக்சர் என்ற ஆய்விதழுக்கு தாவரங்களில் உள்ள எந்திரஇயக்க நுண்ணுணர்வு வடிகால்கள் (mechanosensitive channels) பற்றி ஒரு மதிப்புரைக் கட்டுரை எழுதினார். கட்டுரையின் தலைப்பு “Mechanosensitive Channels: What Can They Do and How Do They Do It?

அதில் புவியீர்ப்பு, தொடுகை, மனிதர்கள் போன்றவற்றுக்குத் தாவரங்களின் எதிர்செயல்களைப் புரிந்து கொள்வதற்காக அரபிடொப்ஸிஸ் என்ற வகைத் தாவரங்களில் தான் பரிசோதனை செய்து வருவதாக எழுதுகிறார். இந்தச் செய்தி மட்டுமே சாதாரண மனிதரின் ஆர்வத்துக்குரியதில்லைதான். ஆனால் இந்த ஆய்வறிவு செறிந்த கட்டுரை உலகம் முழுதும் பத்திரிகைகளால் எடுத்துக்கொள்ளப்பட்டது ஏன் என்பது ஆச்சரியத்துக்குரியது. இவ்வருடம் மார்ச் மாதம் ’த ந்யூ யார்க் டைம்ஸ் ’முகமற்றவன் மட்டுமில்லை, ஆனால் தாவரங்களுக்கும் உயிர் விருப்பமா?’ (“No Face but Plants Like Life Too?”[2] ) என்ற கட்டுரையை ஏன் பிரசுரித்தது? ”தாவரங்களால் சிந்திக்கவும், நினைவுபடுத்திகொள்ளவும் முடியும்” (“Plants can think and remember” ) என்ற பி பி ஸி யின் செய்தி அறிக்கை ஏன் சென்ற வருடத்தின் பெரியதொரு விஞ்ஞானச் செய்தியாய் இருந்தது? ஜகதீஷ் சந்த்ர போஸின் “தாவரங்களின் உறுத்தலுணர்ச்சி பற்றிய ஆய்வுகள்” (“Researches on irritability of plants”) பிரசுரமாகி ஏறத்தாழ 100 வருடங்களுக்குப் பின் ஏன் தாவர உடற்கூறு செய்தியாய் இருக்கிறது?

ஹாஸ்வெல் பத்திரிகையாளர்களிடம் சொன்னார் “மரங்கள் அடர்ந்த பகுதியில் நீண்ட நடை செல்கிறீர்கள் அல்லது புல்வெளியைக் கடந்து நடக்கிறீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: இந்தப் புதர்களுக்கு அவற்றை யாரோ உரசிக்கொண்டு செல்கிறார்கள் என்று தெரியுமா? காலினடியே நசுக்கப்படுகிறதென்று இந்த புல்லுக்குத் தெரியுமா? தாவரங்கள் எண்ணங்களை சிந்திப்பதில்லைதான். ஆனால் அவைகள் நிச்சயம் தொடுகைகளுக்கு பலவிதமாய் எதிர்வினை காட்டுகின்றன.

தாவர ஆர்வலர்களும், தோட்டக்காரர்களும் ஹாஸ்வெல்லின் கூற்றைக் கேட்டு அதிர்ச்சி அடைய மாட்டார்கள். தாவரங்களின் இடையே வாழ்வதால் அவை மனிதர்களுக்கு பதில் குறிப்பு அளிக்கும் பல வகைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
பல வருடங்களுக்கு முன் கல்லூரியில் படிக்கும்போது மியா மஸாவ்கா என்ற ஒலிக் கலைஞரின் கலை எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவரது “தாவரங்களுக்கென இசைத்துணுக்குகள்” (pieces for plants) என்னும் இசை அமைப்பில் மஸாவ்கா (போஸின் காலடிகளைப் பின்பற்றி) வீட்டுச்செடிகளை மிக நுண்ணிய கூரறிவு கொண்ட மின்வாய்களுடன் பொருத்தி அவற்றை ஒரு மடிக்கணினி மற்றும் இணைப்படுத்தியுடன்  (synthesizer)  பொருத்துவார். இந்த அமைப்புடன் மஸாவ்கா தன் செடிகளை இசைப்பார். அவற்றின் முன் குனிந்து, இலைகளை வருடி, அவற்றின் மேல் தன் கைகளை அசைத்து, செடிகளை ஆட்டி, அவற்றின் அருகே நகர்ந்து பின்னே தூரமாய் விலகுவார். இப்படி ஒவ்வொரு அசைவுக்கும் பதிலாய் செடிகள் ஒரு சப்தத்தை எழுப்பி அவை மின்மம் சார்ந்த நீளதிர் ஒலிகளாய் காற்றில் பரவும். செடிகளைப் பேச இயலாதவை என்றும் உணர்ச்சிகளற்றவை என்று நினைக்கப் பழகிய நம்மில் பலருக்கு இந்த இசையின் விளைவு உறுதி குலைப்பதாய் இருக்கும். திறந்த வெளியில் இசைக்கும்போது மஸாவ்கா பொதுமக்களையும் பல சமயங்களில் தன் செடிகளுடன் ஆட விடுவார். பெரும்பாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் திரும்பி வருவார்கள், சிலசமயம் தங்களின் செடிகளைப் பற்றிப் பேசவும், பொதுவாய் சொல்லப்படுவதைவிட அவற்றுக்கு அசாதாரணமான ஆற்றலும், விழிப்புணர்வும் உண்டு என்ற தங்களது நம்பிக்கையைப் பற்றிப் பேசவும் வருவார்கள் என்று அவர் எங்களிடம் சொன்னார். செடிகள் இசைப்பதைப் பற்றியோ அல்லது மனிதர்களுடன் இருக்கும் பரிமாற்றங்கள் கிட்டத்தட்ட உள இயல் சார்ந்த பதில் குறிப்பாய் இருப்பதையோ பற்றி அவர்கள் ஆச்சரியம் அடைவதில்லை. இவர்கள் விஞ்ஞானிகள் இல்லை. இவர்கள் தங்கள் அனுபவத்தில் அறிந்து நம்புவதை மஸாவ்காவிடம் சொல்கிறார்கள். மஸாவ்கா செடிகளுக்குப் புலன் விழிப்புணர்வு இருப்பதாய் சொல்ல முயற்சிக்கவில்லை. ஆனால் தாவரங்கள் நம்மை விழிப்புணர்வு நிலையின் இயல்பைப் பற்றியே –அவற்றினுடைய மேலும் நம்முடைய இயல்புகள் இரண்டையும் பற்றித்தான்- சிந்திக்கத் தூண்டும் ஆற்றல் உள்ளவை என்று அவர் நம்புகிறார்.

உடலின் எந்திர இயக்க (மெக்கானொபயலாஜிகல்) வழிமுறைகள் பலவித இயக்கமுறைகளை உபயோகிக்கின்றன என்று ஹாஸ்வெல்லும் அவரது சகத் துறையாளர்களும் மெகனொஸென்ஸிடிவ் சேனல்ஸ் என்ற கட்டுரையின் சுருக்கக்குறிப்பில் எழுதினர். அவற்றின் மையத்தில் இருப்பவை அணுத்திரள்களின் கட்டமைப்பிலும் இயக்கவியலிலும் இருக்கும் விசை உந்திய கலக்கங்கள். இவை பின்நிகழ்வுகளைத் தூண்டும் ஆற்றல் உள்ளவை. அன்றாடப் பேச்சில் மொழிபெயர்த்துச் சொன்னால் தாவரங்கள் தெரிவுடையவை. விஞ்ஞானம் அப்படிச் சொல்கிறது. செடிகள் தெரிவுடையவையானால் நாம் அதைப்பற்றி என்ன செய்யவேண்டும் என்றும் நாமும், போஸ் பல காலங்களுக்கு முன் வியந்ததைப் போல, யோசிக்கத் துவங்குகிறோம்.
தாவரங்கள் சூழல்சார்ந்த காரணிகளை உணர்ந்து அவற்றுக்கு பதில் குறிப்பளிக்கின்றன. இதைப் பலகாலமாய் நாம் அறிந்துள்ளோம். அவை சூரியனை நோக்கியொ அல்லது வேறுபுறமாகவோ திரும்பும்; காற்று வீசுகையில் அதனுடன் அசையும். இவற்றுக்கும் கீழே புரிதல் என்பது இன்னும் ஆழமாய் போய், செடிகளுக்கு ஒருவிதமான புலனறிவாற்றல் இருக்கிறது என்று விஞ்ஞானம் நமக்கு சொல்கிறது. அப்படியானால் அவற்றுக்கு விழிப்புணர்வு உண்டு என்று அர்த்தமா? விழிப்புணர்வு இருக்கிறதென்றால், அவை துன்பத்தை அனுபவிக்குமா? அந்தத் துன்பத்துக்கு நாம் சிலசமயங்களில் காரணமானால், அதை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டாமா? அது நம்மால் முடியுமா? பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறாயொ அதை நீ பிறருக்குச் செய் – என்பது பொன்மொழி. போஸ் காட்டியது போல பிடிக்காத தூண்டுதல்களுக்கு தாவரங்களின் பதில்வினை நம்முடையதைப் போலவே இருக்கிறது. இதை நாம் வலி என்று சொன்னால், அலங்காரத்துக்காக ஒரு பூவை வெட்டுவதையோ, விளையாட்டாய் புல்லில் உருள்வதையோ எப்படி நம்மால் ஒப்புக்கொள்ளமுடிகிறது? மரத்தை சிதைக்காமல் பறிக்கக் கூடிய உணவை மட்டுமே அல்லது இன்னும் மேலாய், மரத்திலிருந்து தானே உதிருவதை மட்டுமே நாம் உண்ண ஆரம்பிக்க வேண்டுமா? ஏற்கனவே இறந்து போன உணவுப்பொருட்களை? இதை எல்லாம் பார்த்தால் தாவர உணவுப் பழக்கமும் முரட்டுத்தனமானதுதான், மாமிசம் உண்பதை விட வெகுவாய் வேறுபட்டதல்ல என்பது போல் தெரிகிறது. ஆனால் எங்கே நிறுத்துவது? ப்ரோடோஜோவாக்களுடனா? பாக்டீரியாக்களுடனா?

சூழலைப் பற்றிய கேள்விகளை நாம் கேட்க ஆரம்பித்திருக்கவே கூடாதோ என்னவோ. ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது. இயற்கை உலகத்துடன் நமது உறவு எக்காலத்துக்கும் அச்சம் விளைவிக்கின்றதாய் ஆகிவிட்டது. நாம் கண்காணிப்பவர்களா? குறுக்கிடுபவர்களா?

இவற்றுக்கெல்லாம் ஏதானும் முக்கியத்துவம் இருக்கிறதா?

ஜ. ச. போஸின் அக்கறை புலனறிவைப் பற்றியதுதான். தாவரங்கள் எவற்றை உணர்ந்து அறிகின்றன என்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதை விட முக்கியமாய், நாம் அவற்றைப் பற்றி என்ன உணர்கிறோம், புலனறிவைப்பற்றி அவற்றிடமிருந்து நாம் என்ன கற்கலாம் என்பதையும் பற்றி அவர் ஆர்வம் கொண்டிருந்தார். விஞ்ஞானக் கருவிகளுடனும், அதிகரித்துள்ள அறிவுடனும் நம் கருத்தைச் சத்தமற்ற, கண்ணுக்குத்தெரியாத நிகழ்வுகளை நோக்கிச் செலுத்துவதன் மூலம் நம் உலக அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று போஸ் நிரூபித்தார்.

1918ல் போஸ் ’தாவரத்தின் தன்னியக்க எழுத்து’ ( “The Automatic Writing of the Plant”) என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார். அதைக் கேட்க வந்திருந்த ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளர் இப்படி எழுதினார்:

ஸர் ஜே ஸி போஸ் அறிவைப் பெறுவதற்கு இரண்டு வழிகளைப் பற்றிப் பேசினார், அவற்றில் தரம் குறைந்த வழி, மேம்போக்கான வித்தியாசங்களில் கவனம் செலுத்துவது. இந்த மனப்பாங்கு சிலரை ”நான் அவர்களைப் போல் இல்லாமல் இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி,” என்று பேச வைக்கும். இன்னொரு வழி போலியான வேற்றுமைத் தோற்றங்களுக்கு அப்பாலுள்ள அடிப்படை ஒற்றுமையை உணர்வது.

போஸ் எல்லா உயிர்களுக்கிடையேயும், எல்லாவற்றிலும் அடிப்படையான ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர் – ”விதிகளின் சீரான தொடர்ச்சியான நடை” என்பது அது. ஆனால் இது நம்பிக்கை மட்டும் அல்ல. போஸிடம் விஞ்ஞானச் சான்று வழி விளக்கம் இருந்தது.

போஸைப் பொருத்தவரையில் ஒருமைப்பாட்டைப்பற்றி யோசிப்பதென்பது கோட்பாடுகளைப்பற்றியது மட்டுமல்ல அதற்கு நிஜவாழ்க்கை விளைவுகள் இருந்தன. போஸுக்கு ஆக்கவுரிமைகள் வழங்கப்பட்டன என்றாலும் அவர் அவற்றை சொந்த லாபத்துக்குப் பயன்படுத்த விழையவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் “உலகில் எல்லோருக்கும் நடைமுறையிலும் பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்திக் கொள்ளும்படி திறந்ததாக” இருப்பதையே அவர் விரும்பினார். அதே போல் எல்லாவற்றிலும் உள்ள ஒருமைப்பாடு போஸின் புதுமையான கண்டுபிடிப்பு அல்ல, அது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பும் அல்ல. ப்ரிட்டிஷ் நிதியுடன் அமைக்கப் பெற்ற அவரது சோதனைக்கூடத்தினுள், பல ஆயிரம் வருடங்களின் கீழை தத்துவங்களை தான் கொண்டு வருவதை அவர் நன்கு அறிந்திருந்தார். 20ம் நூற்றாண்டில் ப்ரிட்டிஷ் அரசின் காலகட்டத்தில் மேன்மேலும் துண்டாகிக் கொண்டிருந்த இந்தியாவில், சாதி அமைப்புக்கு எதிராய் பகிரங்கமாய் பேசிய ஒரு விஞ்ஞானிக்கு, ஒருமைப்பாட்டைப் பரப்புவது விஞ்ஞானம் மற்றும் தூலம் கடந்த தத்துவம் சார்ந்த ஒன்றாய் மட்டும் இருக்கவில்லை. அதற்கு அரசியல் விளைவுகளும் இருந்தன. போஸின் விஞ்ஞானப் புதுமைகள், விஞ்ஞான முயற்சிகளுக்குப் பின்னே இருக்கும் மூல முன் முடிவுகளுக்கும், அவை மேலை கலாச்சாரத்தால் வரையறுக்கப்படவேண்டுமா என்ற கேள்விக்கும் மறுதலிப்பான் விடையாய் இருந்தன. மிருகங்கள் தாவரங்கள், உயிரியல், பௌதிகம், கிழக்கு, மேற்கு – இவற்றுக்கிடையேயான தடுப்புகள், எல்லோருக்கும் பொதுவான உண்மைகளை அணுகுவதற்கு தடைகளாய் இருக்கின்றன.

”இத்தகைய நிகழ்வுகளுக்கிடையே நாம் எப்படி பிரிவுக்கோடுகளைப் போடுவது – இங்கே இயற்பொருள் சார்ந்தவைகள் முடிகின்றன, அங்கே உடலியக்கம் சார்ந்தவைகளின் ஆரம்பம் என்று- எப்படிப் பிரிப்பது?”என்று போஸ் 1901ல் எழுதினார்.

இப்படிப்பட்ட பூரணமான தடுப்புகள் நடைமுறையில் கிடையாது… (அவை) தாமே உருவாக்கிய மௌனமான சாட்சியங்களான இந்தப் பதிவுகளை நான் கண்ணுற்ற போதுதான், அவற்றினிடையே – ஒளியலைகளில் துடிக்கும் சிறு அணுத்துகள்களில், நம் பூமியில் பல்கிப் பெருகியுள்ள ஜீவராசிகளில், நமக்கு மேலே ஜ்வாலையாய் ஒளிரும் சூரியன்களில் இடையே- உறைந்த ஏகத்தை நான் உணர்ந்த போது, அப்போதுதான் முதன்முறையாக என் மூதாதையர்கள் கங்கையின் கரைகளில் 3000 வருடங்களுக்கு முன்னால் அறிவித்த அருஞ்சேதிகளில புதைந்திருந்தவற்றில் சிலவற்றைப் புரிந்து கொண்டேன்: “இந்த அண்டபேரண்டத்தின் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் பல பரிமாணங்களிடையே, ஏகத்தை, ஒருமையைக் காண்கிறவர் எவரோ, அவருக்கே புலப்படும் நித்திய சத்தியம், வேறு யாருக்கும் அல்ல, வேறு யாருக்கும் அல்ல!”

போஸைப் பற்றி ஒரு கடைசிச் செய்தி. அவர் வாழ்வின் இணைந்த தன்மையைப் பற்றிப் பேசிய போது விளையாட்டாய் பேசவில்லை. உயிரியல் துறையைச் சார்ந்தவர் ஒரு தசையையோ, நரம்பையோ பரீட்சிப்பதைப் போலவே அசேதன விஷயங்களையும் படித்த முதல் விஞ்ஞானி போஸ். தாவரங்கள் பற்றிய தனது பரிசோதனைகளை போஸ் பாறைகள் மேலும் உலோகங்களின் மீதும் செய்தார். ‘உயிர் அற்றவை” யும் இயந்திரம், வெப்பம் மற்றும் மின்சாரத் தூண்டுதல்களுக்கு ஆட்படுத்தப்பட்டபோது எதிர்செயல் காட்டின. பாறைகளும், உலோகங்களும் கூட குளிரால் மரத்தன, மின்னோட்டத்தால் அதிர்ச்சி அடைந்தன, மயக்க மருந்தால் திகைத்துப் போயின. அவர் ஒருமுறை கேம்ப்ரிட்ஜில் முதிர்ந்த அனுபவம் உள்ள உடற்கூறு நிபுணர் ஸர் மைகெல் ஃபோஸ்டர் என்பாரை ஒரு விஷமூட்டப்பட்ட தகரத்துண்டின் மின்சார மறுவினையை நேரில் காண அழைப்பு விடுத்தார். (இதைப்பற்றி பேட்ரிக் கெட்டிஸ் எழுதியது):

”அடப் போங்க போஸ், (ஃபோஸ்டர் சொன்னார்) இந்த வளைவில் என்ன புதிதாய் இருக்கிறது? இது நாம் கடந்த அரை நூற்றாண்டாக அறிந்ததுதானே?”

“இது என்னவென்று நினைக்கிறீர்கள்?” போஸ் கேட்டார்.

“ஏன், தசையின் எதிர்செயலைக் காட்டும் வளைவுதான் இது.”

“மன்னிக்கவும், இது ஒரு தகரத்தின் எதிர்வினை.’

“என்ன?” ஃபோஸ்டர் துள்ளி எழுந்தார். “தகரம்! தகரம் என்றா சொன்னீர்கள்?”

ஒரு உயிரியல் வல்லுனராய் மட்டுமே இருந்திருந்தால் போஸ் அத்துறையின் மரபுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பார். எந்த உயிரியல் வல்லுனர் ஒரு தகரத்துண்டுக்கு விஷமேற்ற யோசித்திருப்பார்? ஆனால் ஒரு இயற்பியல் வல்லுனராய் தூலப்பொருளைப் படித்தது வினையையும் எதிர்வினையையும் செய்துகாட்டும் எளிய சோதனைகளின் மூலம் உயிரின் அடிப்படைகளைப் பற்றிப் பெரும் கேள்விகளை எழுப்ப அவருக்கு இடமளித்தது. எதேனும் ஒன்று துன்பப்படுவது போல் காணப்பட்டால் அது துன்பப்படுகிறது. அது சோர்ந்து காணப்பட்டால் அது சோர்ந்திருக்கிறது. எல்லாப் பொருள்களும் – சேதனம், அசேதனம் யாவும் – தெரிந்துகொள்ளமுடியாத, மனம்போனபோக்கான சக்தியால், ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான விதிகளுடன் தீர்மானிக்கப்படவில்லை. அவை பிரபஞ்சத்துக்குப் பொதுவாய் எல்லோருக்கும் பொருந்தும் ஒரே விதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளன, என்றே போஸ் உண்மையில் நம்பியிருக்கிறார்.

ஒரு மிருகத்திடம் நாம் நயமாய் நடக்கும்போது அது மகிழ்ச்சி அடைகிறது என்பதை ஒப்புக்கொள்வது எளிதாய் இருக்கிறது. ஒரு செடியிடம் அன்பாய் நடக்கையில் அது அளக்கக் கூடிய முறையில் நன்றாய் வளர்கிறது என்பதை ஒப்புக்கொள்வது சற்றே கடினமாய் இருப்பினும் செய்யமுடியாததல்ல. நாம் நடக்கையில் நம் பாதங்களினால் புல் வேதனைப்படுகிறது என்பதைப் பற்றிக் கவலைப்படுவது அதை விடக்கடினம். அதை விடக் கடினமானது ஒரு பாறை சோகமாய் இருக்கிறது என்ற கருத்து. மனிதர்களை ஒத்த தன்மையிலிருந்து பொருள்கள் விலக விலக, அவற்றின் உணர்வுகளை புரிவதும் அவற்றைப் பற்றிக் கவலைப்படவேண்டும் என்ற உணர்வும் நமக்குக் கடினமாகிறது.

போஸை ஒரு பித்தன் என்று ஒதுக்கித் தள்ளுமுன், போஸ், ஹாஸ்வெல் மற்றும் அவரது சகாக்களின் ஆராய்ச்சிகளின் உண்மையான முக்கியத்துவத்தை அறிவது முக்கியமாகிறது. எல்லாப் பொருட்களிலும் அடிப்படையில் ஒரு வித மானுடம் இருக்கிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நாம் அவற்றைப் பேண வேண்டும் என்பதல்ல போஸின் கருத்து. இருப்பும், விழிப்புடன் உணரும் நிலையும் ஒன்றொடொன்று ஆழமாய் இணைந்தவை, ஆகையால் பொருட்களின் ஒன்றுபட்ட தன்மையை புறந்தள்ளுவது வாழ்வைப் பற்றிய ஒரு அடிப்படை உண்மையை புறந்தள்ளுவதாகும். நம்மில் பலரும் நமது காய்கறிகளை அவசியம் என்ற நோக்கோடு சாப்பிட்டுக் கொண்டுதான் இருப்போம். ஆனால் இனிமேல் நம்மால் முன்போலவே நமது சாலடை அணுக முடியுமா? அல்லது நம் முள்கரண்டியைத்தான்? (22 நவம்பர் 2011)

———————————————————————————————

ஆசிரியர் பற்றி: ஸ்டெஃபனி ஆன் கோல்பெர்க் நியுயார்க் நகரைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், இசைக் கலைஞர், பல விஷயங்களை அறிவதைத் தம் தொழிலாகக் கொண்டவர். ஃப்லக்ஸ் ஃபாக்டரி (Flux Factory) என்ற ஒரு கலைக் கூட்டு அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். இந்தக் கட்டுரையை ’த ஸ்மார்ட் ஸெட்’ (The Smart Set) என்கிற பத்திரிகை வெளியிட்டது. ஆசிரியருக்கும், அப்பத்திரிகைக்கும் சொல்வனம் பத்திரிகையின் நன்றி உரித்தாகும்.

தமிழாக்கியவர்: உஷா வை.

இங்கிலீஷ் மூலக் கட்டுரை இங்கே: http://www.thesmartset.com/article/article11221101.aspx

[1] மெய்ட வேல் (Maida Vale) என்பது லண்டனில் வெம்ப்ளி ஸ்டேடியம் அருகே உள்ள ஒரு பகுதி. ஜகதீஷ் சந்த்ர போஸ் தனது சொந்த சோதனைச் சாலை ஒன்றை இங்கு அமைத்திருந்தார். அதில் வெளிநாட்டு அறிவியலாளர்கள், பல்கலை மாணவர்கள், பிரமுகர்களை வரவேற்றுத் தம் சோதனைகளை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டும் இடமாக இதை வைத்திருந்தார்.

[2] நியுயார்க் டைம்ஸின் அந்தக் கட்டுரையை இங்கு காணலாம்:

http://www.nytimes.com/2011/03/15/science/15food.html?pagewanted=all

இது பற்றிச் சொல்வனத்தின் குறிப்பு- No Face’ என்று இந்தத் தலைப்பில் குறிக்கப்பட்டது ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம். ஸ்பிரிடட் அவே (Spirited Away) என்ற ஒரு படம் அது. அசாத்தியமான திறமை படைத்த மியாசகி ஹயாவ் (Hayao Miyazaki- 宮崎 駿) என்ற ஒரு ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட இயக்குநரின் பிரசித்தி பெற்ற படம் இது. நோ ஃபேஸ் என்கிற ஒரு பாத்திரம் ஒரு ஆவி போன்ற மாயாஜாலப் பாத்திரம், அது தனிமைப் பட்டதாக உணர்வதால் மனிதர்களில் பார்த்தவர்களை எல்லாம் விழுங்கித் தனக்கு நெருக்கமானவர்களாக, தன்னுடையவர்களாக ஆக்க முயலும். அதை விட அவர்களோடு நல்லுறவு கொள்வதே தனிமையைப் போக்க நல்ல வழி, தங்கத்தையும் மணியையும் கொட்டிக் கொடுத்து அபிமானத்தைப் பெறத் தேவை இல்லை என்று ஒரு சிறுமி, படத்தின் மையப் பாத்திரம் அத்ற்குக் காட்டிக் கொடுப்பாள். அதைத்தான் இந்தத் தலைப்பு லாகவமாகச் சுட்டுகிறது.