மரம் மெல்ல பறக்கும்

1. முதலில்
ஒரு காகம் வந்தது
பிறகு
ஒரு தெருநாய்
அப்புறம்
ஒரு பைத்தியக்காரன் வந்தான்.
வாயில்லாத மரம்
கணக்கில்லாத காதுகளால்
கேட்டுக்கொண்டிருக்கிறது.

2. இருவேறு நிறங்களில் துளிர்க்கின்றன
இந்த மரத்தின் இலைகள்
வெண்ணிறத்திலும்
சாம்பல் நிறத்திலும்.
சாம்பல் இலை
அசையும் சமயங்களில்
தலை சாய்ந்து
இமை சுருங்க
பார்க்கும் கண்கள்.

3. ஒரு
அற்புதத்துளி போதும்
வேர்களை விடுவிக்க
பெருங்கருணைமுன்
ஆயிரங்கரமுயர்த்தி
மன்றாடும் மரம்.

4.கூடுமறந்த பறவையொன்று
திசைதோறும் அலையும்
படர்கிளைகள் தளர்ந்ததும்
இமைமேல் இறங்கும் மென்கால்கள்
இனி
மரம் மெல்ல பறக்கும்.