ஈர்ப்பு : ஒரு வியப்பு

தரையில் நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள்.

இப்போது, அப்படியே முன்பக்கமாகக் குனிந்தவாறு தோயங்களைக் (கால்விரல்களை) கைவிரல்களால் லேசாகப் பிடித்துக்கொள்ளுங்கள். முழங்கால்களை வேண்டுமானால் லேசாக வளைத்துக்கொள்ளலாம்.

இந்த நிலையில் உங்களை இருத்திக்கொண்டு அப்படியே முன்பக்கம் குதிக்கப் பாருங்கள். கைவிரல்கள் தோயங்களைப் பிடித்தபடியே இருக்கவேண்டும்.

முயன்று பார்த்தீர்களா? முன்பக்கமாக குதிக்க முடியாது. குதிக்க இயலாது. செய்தே தீர வேண்டும் என்று உங்களை வருத்திக்கொள்ளவேண்டாம்.

இது எப்படி முடியாமல் போகிறது?

ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி குதிக்க விழைந்து, குதிக்கும்போது நம் உடலின் மைய ஈர்ப்பு, அத்திசையை நோக்கி மாறுகிறது. உடனே நம்மைத் தாங்கும் அடித்தளத்தை அதே திசையை நோக்கி மாற்றுகிறோம். அப்போதுதான் நாம் விழுந்துவிடாமல் சமநிலையில் இருக்கமுடியும்.

குனிந்தவாறு தோயங்களைக் கைவிரல்களால் பிடித்துக்கொண்டு கால்களூன்றி நிற்கையில் , பின் பக்கமாக குதிப்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் அப்போது நாம் நம் குதிகால்களைப் பயன்படுத்தி எளிதாக பின்பக்கம் குதித்துவிடுவோம். முன்பக்கமாக இதே நிலையில் குதிக்கவேண்டுமானால், நம் தோயங்கள் ஒத்துழைக்கவேண்டும். விரல்கள் தடுத்துக்கொண்டிருக்கும்.

என்ன செய்துபார்த்துவிட்டீர்களா?

ஏதேனும் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவும் (உங்களுடையதை தான்). நீங்கள் இருக்கும் அறையில் உள்ள சுவர் ஒன்றிலிருந்து சுமார் 50 சென்ட்டிமீட்டர் தொலைவில் அந்த நோட்டை வையுங்கள். இப்போது நீங்கள் அந்தச் சுவரை ஒட்டியவாறு நின்றுகொள்ளுங்கள். இருகால்பாதங்களும் ஒட்டியவாறு இருக்கவேண்டும். இப்போது பாதங்களை அசைக்காமல், முழங்கால்களை மடக்காமல், அந்த நோட்டை எடுக்க முடியுமா என்று பாருங்கள். முடியவே முடியாது.

உடனே என்னால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்லிக்கொண்டு எடுக்கப்பார்க்காதீர்கள். தொப்பென்று விழுவீர்கள் அல்லது கடுமையான காயம் ஏற்படலாம். எச்சரிக்கை.

இத்துணை அருகில் இருக்கும் நோட்டை ஏன் எடுக்க முடியவில்லை?

சுவரை ஒட்டி இருகால் பாதங்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்கும்போது, நம் உடலின் மைய ஈர்ப்பு கால்பாதங்களில் இருக்கும். முன்பக்கமாகக் குனியும்போது, உடலின் மைய ஈர்ப்பு முன்பக்கமாக நகர்த்தப்படுகிறது. நாம் விழாமல் சமநிலையோடு இருக்கவேண்டுமானால், நம்மைத் தாங்கிக்கொண்டிருக்கும் அடித்தளமாக விளங்கும் கால்பாதங்களை முன்பக்கமாக நகர்த்தியே ஆகவேண்டும். அப்போதுதான் உடலின் மைய ஈர்ப்பு முன்னே நகர்ந்து நம்மை விழாமல் காக்கும். பாதங்களைச் சுவர்ப்பக்கமாக ஒட்டியவாறு வைத்துக்கொண்டு விட்டதால், எடுப்பது சாத்தியப்படாமல் போகிறது.

நின்றவாறு இரண்டு சோதனைகள் செய்து பார்த்தாயிற்று.

அடுத்து, இப்போது ஒரு நாற்காலியில் நன்றாக நிமிர்ந்தவாக்கில் உட்கார்ந்துகொள்ளுங்கள். கால்களைத் தொங்கப்போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் முதுகு, நாற்காலியின் முதுகுப்பகுதியோடு ஒட்டியிருக்கவேண்டும். கைகள் வைக்கும் இடம் (கைதாங்கிகள்) இல்லாத நாற்காலியாகப் பார்த்து அமர்ந்துகொள்ளவும். கால்பாதங்கள் தரையைத் தொட்டவாறு இருக்க, முதுகும் நாற்காலியுடன் ஒட்டியவாறு இருக்க, இப்போது அப்படியே நிற்கமுயலுங்கள். முடியவே முடியாது. இல்லை நான் அசகாய சூரன், சூரி என்று நினைத்து ஏதும் செய்துவைக்காதீர்கள்.

நிற்க, இல்லை- உட்கார்ந்திருக்க,..

நாம் உட்கார்ந்திருக்கும் நிலையில், முதுவடத்தின் அடிப்பகுதியில் நம் உடலின் மைய ஈர்ப்பு இருக்கும். அப்படியே எழுந்து நிற்கப்பார்க்கும்போது, உடலின் மைய ஈர்ப்பை நகரவிடாமல் செய்துவிடுவதால் நம்மால் எழுந்து நிற்க முடியாமல் போய்விட்டது.

இறுதியாக இன்னும் ஒரே ஒரு சோதனை, உங்கள் உடலின் வலப்பக்கத்தைச் சுவரோடு ஒட்டினாற் போல் வைத்து நின்று கொள்ளவும். உங்கள் வலது கன்னம் சுவருடன் ஒட்டியவாறும், வலது பாதம் சுவருடன் ஒட்டியவாறும் இருக்கவேண்டும். இரண்டும் சுவரோடு ஒட்டினாற்போல் வைத்தாயிற்றா? இப்போது இடது காலைத் தரையிலிருந்து தூக்க முயன்று பாருங்கள் ( கைகளால் எதையும்/ யாரையும் பிடித்துக்கொள்ளக்கூடாது). இதுவும் சாத்தியப்படாது.

இது சாத்தியப்படுவதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது. அது சுவரை நகர்த்துவதுதான். ஏனேனில் இடது காலைத் தூக்கவேண்டுமானால், வலப்பக்கமாக நம் உடலின் மைய ஈர்ப்பை நகர்த்தவேண்டும். அப்போதுதான் முடியும்.
இந்தச் சோதனைகள் மூலம் நம் உடல் அசைவுகளில், உடலின் மைய ஈர்ப்பு வகிக்கும் பங்கை நாம் உணர்ந்திருப்போம்.

நம் அன்றாட வாழ்வின் எல்லா அசைவுகளிலும் உடலின் மைய ஈர்ப்பு தேவைக்கேற்ப மாறி நம் சமநிலையைக் காப்பது நடந்துகொண்டே இருக்கிறது. தானாக நடப்பது போல் நடந்துவிடுவதால், நாம் இதுகுறித்து சிந்தித்துப்பார்ப்பதில்லை.

ஈர்ப்பு என்பது என்ன. அது ஒரு கவர்ந்திழுக்கும் விசை.

பொருண்மை (mass) உள்ள பொருள்கள் இடையே ஏற்படும் கவர்ந்திழுக்கும் விசைதான் ஈர்ப்பு என்பது.

அமர்ந்திருக்கும்போது அல்லது நின்றுகொண்டிருக்கும் போது, நம் உடலின் எடை முழுவதும் ஏதோ ஒரே ஒரு புள்ளியில் குவிந்திருப்பதைப் போல் தோன்றும்படி, ஈர்ப்பு விசையை அளிப்பதுபோல் தோன்றும். பொருளுக்கு ஒன்று ஓர் அடித்தளம் கொண்டிருக்குமானால் அந்த அடித்தளத்தின் மீது பொருளின் ஈர்ப்பு மையம் இருக்கும்; அப்போதுதான் அந்தப்பொருள் தடுமாறி விழாமல் இருக்கும்.

சீரான உருவம் (ஆங்கிலத்தில் சிமெட்டிரிகல்) கொண்ட ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் எங்கே இருக்கும் என்பதை எளிதாக கணிக்க இயலும்.

உருண்ட வடிவம் கொண்ட பூமியின் ஈர்ப்பு மையம் அதன் வடிவின் மையத்தில் உள்ளது.

கோளம் அல்லது செவ்வகம் போன்றில்லாமல், சீரற்ற வடிவம் கொண்ட மனித உடலைப் பொறுத்தவரை, ஈர்ப்பு மையம் , வடிவத்தின் மையத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மனித உடலின் வெவ்வேறு செய்கைகளுக்கேற்ப, அதன் ஈர்ப்பு மையம் ஒவ்வொரு செய்கையின் போதும் ஒவ்வொரு இடத்தில் ஈர்ப்பு, மையம் கொண்டிருக்கும். பனிச்சறுக்கு, நடனம், சில ஆரோக்கியமான (!) விவாதங்கள் போன்றவை நிகழ்த்தப்படும்போது, நம் உடலின் ஈர்ப்பு மையம் வேகவேகமாக மாறிக்கொண்டே இருக்கும்.

ஈர்ப்புக்கும் பூமியின் எடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? எடை (weight) என்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், பொருண்மை (mass) என்பது எடை இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பூமியின் எடை என்று நாம் குறிப்பிடுவது, பூமியின் பொருண்மை அன்று; ஒரு மனிதர் அல்லது ஒரு பொருளின் எடை என்பது அவர் அல்லது அப்பொருள் மீதான பூமியின் ஈர்ப்பின் இழுப்பு ஆகும். இதன்படி பூமியின் எடை என்று சொல்லும்போதே வேறொரு பொருள், பூமி மீது காட்டும் ஈர்ப்பின் இழுப்பை வைத்தே சொல்லமுடியும்.

என்றாலும் பூமியின் பொருண்மையை [ (பொருண்மை- ஒரு பொருளின் அணுக்களின் தொகுதி. இது எங்கும் ஒரே அளவாக இருக்கும். இடத்திற்கு இடம் மாறாது) எடை என்பது ஒரு பொருளின் மீது ஏற்படும் ஈர்ப்பு இழுப்பின் (gravitational pull) அளவு; இது இடத்திற்கு இடம் மாறும்)] அல்லது நிறையைக் (எடை அன்று) கணிக்க, ஏற்கனவே பொருண்மை கணக்கிடப்பட்ட ஒரு பொருளின் இயக்கத்தின்மீது பூமி காண்பிக்கும் ஈர்ப்பு இழுப்பைக் கொண்டு அறியலாம், கணக்கிடலாம். விஞ்ஞானிகள் பூமியின் பொருண்மையைக் (நிறை என்றும் சொல்லலாம் ) கணக்கிட்டிருக்கிறார்கள்;

அதிகமில்லை, 5.98 X (10 த்தின் மீது 24, கிலோகிராம்கள்). சுருக்கமாக, 598 உக்குப் பின்னால் 22 பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொள்ளுங்கள், அத்தனை கிலோக்கள் அவ்வளவுதான்.

ஈர்ப்பைப் பற்றி நாம் அவ்வளவாக சிந்திப்பதில்லை. காரணம் பூமியின் ஈர்ப்பு மாறுவதில்லை. இது எதனால் என்பதைப் பார்ப்பதற்கு முன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது.

ஈர்ப்பு (gravity) என்பது என்ன? இரண்டு அணுக்களுக்கிடையே உள்ள கவரும் விசைதான் (attractive force) ஈர்ப்பு ஆகும். இரண்டு சிறு பந்துகளை ஒரு மேசையின் மீது வைத்தால், இரண்டிலும் உள்ள அணுக்களிடையே மிக மிக நுண்மையான அளவு ஈர்ப்புக் கவரல் (gravitational attraction) இருக்கும்.

இரண்டு பெரிய ஈயக் குண்டுகளை ஒரு மேடைமீது வைத்து மிகத்துல்லியமாய் கணிக்கக்கூடியக் கருவிகள் இருந்தால் இவற்றினிடையே உள்ள ஈர்ப்புக்கவரலைக் கூட கணக்கிட முடியும். குறிப்பிடத்தகுந்த வகையில் ஈர்ப்புக்கவரலை கணக்கிட வேண்டுமானால், மிக பிரும்மாண்டமான எண்ணிக்கையில் அணுக்கள் உடைய பொருளாக இருக்கவேண்டும். பூமியின் ஈர்ப்புக்கவரல் விசை குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பதன் காரணம் இப்போது நமக்குப் புரிந்திருக்கும்.

பூமியின் ஈர்ப்பு மாறுவதே கிடையாது . இதற்கான காரணம் மிக எளிமையானது. பூமியின் பொருண்மை மாறுவதில்லை.

பூமியின் ஈர்ப்பை திடீரென்று மாற்றவேண்டுமானால் பூமியின் பொருண்மையை (நிறையை ) முதலில் மாற்றவேண்டும். ஈர்ப்பை மாற்றக்கூடிய அளவுக்கு பூமியின் பொருண்மை மாற வாய்ப்பில்லை, இப்போதைக்கு இல்லை.

இயல்பியல் நோக்கில் ஆராய்வதை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு, யதார்த்தத்தை அறிவியல் நோக்கில் பார்ப்போம்.

பூமியின் ஈர்ப்பு இப்போது இருப்பதைவிட இரண்டு மடங்காகிவிட்டால் என்ன ஆகும்.

எப்போதுமுள்ள சாதாரணமான ஈர்ப்புக்கு ஏற்றவாறு தாங்கிகள் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கும் பாலங்கள், கட்டடங்கள் எல்லாம் இருமடங்கு எடை கூடி,…. அவ்வளவுதான். செடிகள், மரங்கள், வீடுகள், மின்கம்பி தாங்கிகள் (மின்கம்பங்கள்) எல்லாமே சிக்கல். போதாததற்கு காற்றின் அழுத்தம் வேறு இரண்டுமடங்காகிவிடுவதால், வானிலை மாற்றங்கள் பயங்கரமாக பயமுறுத்தும். இது சரிவராது.

ஈர்ப்பு மாறினாலும் சிக்கல், இல்லாவிட்டாலும் சிக்கல். இப்படியே பூமியின் ஈர்ப்பு மாறிலியாக இருந்துவிட்டுப் போகட்டும்.

இப்போது, திடீரென்று பூமியில் ஈர்ப்பு விசை இல்லவே இல்லை என்று வைத்துக்கொள்வோம்.

என்ன ஆகும்? மேசைகள், நாற்காலிகள், கணினிகள், சிற்றேடுகள், பேரேடுகள், சிற்றுந்துகள், பேருந்துகள், மகிழுந்துகள், இவையும் இவை ஒத்த, ஒக்காத அனைத்தும் மிதந்துகொண்டிருப்பதைக் கண்டு மகிழலாம். மகிழ்ந்தவாறு மிதக்கலாம். அல்லது மிதந்துகொண்டு மகிழலாம்.

அவ்வளவுதானே என்று அலட்சியமாக நினைத்தால், பின்னோடு வரும் பகீர்’ தகவல்;

வேரொன்றுமில்லை, காற்றுவெளியில் [( atmosphere) காற்றுவெளி- நிலப்பரப்பிலிருந்து 700 கிலோமீட்டர் உயரம் வரை உள்ள இடம் )] உள்ள காற்று , பூமியில் உள்ள ஆறுகள், ஏரிகள், கடல்கள், பெருங்கடல்கள் இவற்றில் உள்ள நீர் இவையனைத்தும் விண்வெளியில் பறந்து,…. வேண்டாம் இத்தோடு நிறுத்திவிடுகிறேன்.

காற்றுவெளிதான் நமக்கு சுவாசிக்க காற்று தருகிறது; விண்கற்கள், புறஊதாக் கதிர்களிடமிருந்து நம்மைக் காக்கிறது, உயிரினங்கள் வாழ வழிவகுக்கும் அளவுக்கு பெரும்பான்மையான வெப்பத்தை உறிஞ்சிவிடுகிறது.

இப்போது சந்திரனைக் கொஞ்சம் கவனித்து ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். அங்கு இதுதான் பிரச்சனை. தனக்கென ஒரு காற்றுவெளியை வைத்துக்கொள்ளத் தேவையான ஈர்ப்பு சந்திரனிடம் இல்லை, எனவே அது வெற்றிடத்தில் (vaccum) உள்ளது.

இப்போது உங்கள் எடை 70 கிலோ என்று வைத்துக்கொள்வோம்.

இதைக் குறைக்கவேண்டுமானால் சந்திரனில் எடைபார்த்துக் கொள்ளலாம், உங்கள் எடை 11.62 கிலோதான் இருக்கும்.

அவ்வளவு குறையத்தேவையில்லை, 63 அருகில் இருந்தால் போதும் என்பவர்கள் நேராக வெள்ளி கோளத்திற்குப் (venus) போய் எடை பார்த்துக்கொள்ளலாம், 63.49 இருக்கும், சாப்பாடு, இன்னபிற எல்லாம் சரியாக கிடைக்கும் பட்சத்தில்.