20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 22

எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) (1905 – 1940s)

04) DIE NEUE SAXHLICHKEIT (THE NEW OBJECTIVITY) 1923
முதலாம் உலகப் போரும், சமூக அரசியல் விமர்சனமும்

மான்ஹெய்ம் (Mannheim) நகரக் காட்சிக்கூடத்தின் (குன்ஸ்தால் Kunsthalle) இயக்குனர் கஸ்டாவ் ஃரெய்ட்ரிச் ஹாட்லாப் (Gustav Friedrich Hartlaub) 1923 இல் தனது மற்ற காட்சிக்கூட நண்பர்களுக்கு தனது புதிய ஓவியக் காட்சியை விவரிக்கும் விதமாக, ‘எக்ஸ்ப்ரெனிஷம் காலம்தொட்டு ஜெர்மன் ஓவியத் துறையில் புதிய குறிக்கோள் அறிமுகம்’ (‘Introdution to New Objectivity: German Painting since Expressionism’) என்று குறிப்பிட்டார்.

முதலாம் உலகப் போருக்குப்பின்பு ஜெர்மன் நாட்டில் ‘ஓடொ டிக்ஸ்’, ‘ஜார்ஜ் க்ரோட்ஸ்’ (Otto Dix, George Grosz) என்ற இரு ஓவியர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதை எக்ஸ்ப்ரெஷன் (Experssion) பாணியின் போலி (Pseudo- Expressionist) என்று அடையாளப் படுத்தினர் அன்றையக் கலை திறனாய்வாளர். கடுமையான சமூக விமர்சனம், குறை கூறி வெறுக்கும் அணுகு முறை, தத்துவார்த்த நிலைப்பாடு, இவற்றுடன் தத்ரூபப் பாணி கலந்த ஒரு புதிய உத்தியாக அவர்கள் படைப்புகள் அமைந்தன. இந்த இயக்கத்தில் இரண்டு முக்கிய வழி அணுகல்கள் கவனம் பெற்றன.

01) ‘வெரிஸ்ட்ஸ்’ (Verists) (கலை என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே, அதில் அழகற்றதும் அசிங்கமும்கூட இடம் பெறும் என்ற கோட்பாட்டுடன் செயற்பட்டவர்கள்.) இந்த வழியில் சென்ற ஓவியர்கள் உலகப்போரின் எதிர் விளைவுகளையும், தனி மனிதன் எதிர்கொள்ள நேர்ந்த பொருளாதார நெருக்கடி பற்றியும், வெறியாட்டம் போடும் தீமைகளையும், ட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் பற்றியும் அங்கதம் செய்தும் கடுமையாக விமர்சனம் செய்தும் தமது ஓவியங்களைப் படைத்தனர்.

02) ‘மேஜிக் ரியலிஸ்ட்ஸ்’ (Magic Realaists) (தத்ரூப அணுகு முறையில் மந்திர வித்தையின் விளைவுகளை தமது படைப்புகளில் கருப்பொருளாகியவர்கள்.) இந்த வழியில் ஒரு குழுவாக செயற்படாத பலர் அடையாளம் காணப்பட்டனர். Germen Expressionist Art என்று கருதப்பட்ட பாணியில் பின்பற்றப்பட்ட ஓவியனின் உள்ளுணர்வு சார்ந்த அனுபவங்களைக் கருப் பொருளாக்கிய போக்கைக் கண்டித்தும், அதை முற்றிலும் எதிர்த்தும், அதற்கு எதிராகச் செயற்பட்டும் அவர்கள் ஓவியங்களைப் படைத்தனர்.

இந்த இரு இயக்கத்திற்கும் இருந்த வேறுபாடு என்பது திடமானது அல்ல. இருவரிலும் Verists இயக்கத்தினர் அதிகப் புரட்சித் தன்மை உடையவர்களாக இருந்தனர். அவர்களது படைப்புகள் அழகியலை விலக்கியும், அருவெறுப்பை முதன்மைப் படுத்தியும், தத்ரூப உத்தியை முரட்டுத்தனமாகக் கையாண்டும், காண்போருக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கக் கூடியவனவாகவும் அமைந்தன. ஒரு புகைப் படத்தின் பிரதிபோல நுணுக்கங்களுடன் கூடிய தத்ரூப அணுகலுடன், அனுபவ உலகுக்கு அப்பாற்பட்டதை, புலனுணர்வுகளுக்கு புரிபடாதவற்றை நாடியறியும் முயற்சியையும் உள்ளடக்கியதாக அது இருந்தது.

1925 இல் கலைத் திறனாய்வாளர் பிரான்ஸ் ரோ (Franz Roh) The New Objectivity, Expressionism இரண்டுக்கும் வெளிப்படையாகத் தெரியும் வேறுபாடுகளைப் பட்டியலிட்டு, The New Objectivityயை Post Expressionism என்றும் அழைத்தார்.

அவற்றில் சில

Expressionism Post Expressionism

அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வடிவத் தோற்றங்கள் சலனமற்ற வடிவத் தோற்றங்கள்

மிகுதியான மதம் சார்ந்த கருப் பொருளைக் கொண்டவை அவ்விதக் கருப்பொருளை மிகக் குறைவாகக் கொண்டவை

மன உணர்வுகளை எழுப்பும் விதத்தில் அமைந்தவை காண்போரின் முழு கவனத்தையும் ஈர்க்கும் வகையன.
வலிமை மிக்க இயக்கம் கொண்டவை இயக்கமற்றவை, நிலையானவை
உரத்துப் பேசுபவை அமைதியானவை
வெம்மையை வெளிப்படுத்துபவை குளிர்ந்து, இறுகிய விதமானவை
திடமான வண்ணங்கள் கொண்டவை நீர்த்த வண்ணங்கள் கொண்டவை
சுறசுறப்பான பரப்பு கொண்டது வழுவழுப்பான அணுகுதல் கொண்டது
பட்டை தீட்டப்படாத வைரம் ஒளிரும் உலோகம்
உணர்வுகளை வெளிப்படுத்தும் உருவ மாற்றம் கொண்ட தோற்றங்கள் ஒத்திசைவுகொண்ட தூய்மைப் படுத்தப் பட்ட உருவத் தோற்றங்கள்
பழமை சார்ந்தது நாகரிகம் நோக்கி நகர்வது

இந்த இயக்கம் மார்ச் 1933 இல் வெய்மர் குடியரசு (Weimar Republic) ஹிட்லர் தலைமை வகித்த National Socialists யிடம் தோல்வி கண்டபோது முடிவுக்கு வந்ததாகக் கொள்ளப்படுகிறது. நாசி தலைவர்கள் அப்படைப்புகளை ‘தரம் குறைந்தவை’ என்று கூறி அவற்றைப் பறித்து அழித்து விட்டனர். பல ஓவியர்கள் தமது படைப்புகளைக் காட்சிப்படுத்த அனுமதி மறுக்கப் பட்டனர். சில ஓவியர்கள் படைப்பதையே அரசு தடை செய்தது. ஓவியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அடைக்கலமாகச் சென்றனர். சிலர் தங்கள் ஓவியப்பாணியையும் மாற்றிக் கொண்டனர்.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
01-the-new-objectivity02-by-rudolf03-adultery04-still-life-by-beckmann05-by-otto-dix06-the-salon-by-dix07-war-shell-by-dix08-the-poet-max-herman-by-george-grosz09-eclipse-of-the-sun-by-grosz10-essays-by-karl-hubbuch
[/DDET]
(தொடரும்)