அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’

“குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு மகாராஜா ஆணையிடுவார். அந்த ஆணை, குற்றவாளி தூக்கிலிடப்படும் தினத்தன்று பிறப்பிக்கப்படும். ஆணைப்பத்திரம் அதிகாரிகள் கையில் கிடைக்கும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். அவன் உயிர் அந்த பத்திரம் வரும் முன் உடலை விட்டுப் பிரிந்திருக்கும்.”

“எதற்காக அப்படிச் செய்கிறார்கள்?”

“ஒரு வேளை தூக்கில் இடப்படுபவன் நிரபராதியாக இருந்தால் அவனைக் கொன்ற பாவம் மகாராஜாவைச் சேரும் அல்லவா? இப்படி ஒரு ஆணையைப் பிறப்பித்தால் அந்த குற்றம் மகாராஜாவைச் சேராது. அதனால்தான் இந்த ஏற்பாடு.”

“அப்படியென்றால் நிரபராதியைக் கொன்ற குற்றம் யாரைச் சேரும்?”

nizhalkuthu5

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘நிழல்குத்து’ என்னும் படத்தின் பிரதான கேள்வி இதுதான். 1940-களில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் இந்த விசித்திரமான வழக்கம் இருந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்ட எல்லோரின் தண்டனையையும் மகாராஜா ரத்து செய்துவிடுவார். அனால் அந்தச் செய்தி வரும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். மகாராஜா மரணதண்டனையை ரத்து செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதைப்போல, அந்தப் பத்திரம் வரும் முன் குற்றவாளியைத் தூக்கில் ஏற்றி விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே நடத்தப்படும் நாடகம் இது.

அடூர் இந்த விஷயத்தை பற்றி ஒரு முறை ஏதோ ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறார். அது அவரை மிகவும் பாதித்தது. அந்தச் செய்தியை வைத்து ‘நிழல்குத்து’ திரைப்படத்தை உருவாக்கினார். ‘நாகர்கோயிலின் எல்லையோரப் பகுதியில், குடியிருத்தப்பட்டிருந்த கழுவேற்றுபவரின் (ஆராச்சார்) தமிழ்க்குடும்பத்தைப் பற்றியும், சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியும் விவரம் அறிந்தவர்களிட-மிருந்தும்,  ஆவணங்களிலிருந்தும் முடிந்தவரை தகவல்களைத் திரட்டியிருந்தேன்.’ என்று நிழல்குத்து திரைப்படம் குறித்து எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் அடூர்.

ஒருவரை நேரடியாகக் கொல்லாமல் அவருடைய நிழலிலோ, அவரைப் போன்ற ஒரு பொம்மையிலோ, ஒரு ஊசியை ஏற்றிக் கொல்வதற்கு ‘நிழல்குத்து’ என்று பெயர். மகாபாரதத்தில் துரியோதனன் நிழல்குத்து வழியாகப் பாண்டவர்களைக் கொல்ல ஆணையிட்டதாக ஒரு கதை வருகிறது. இந்த மகாபாரதக் கதை இன்றும் கேரளப் பாரம்பரியக் கலையான கதகளியில் நடித்துக் காட்டப்படும் முக்கியமான படைப்பாக இருக்கிறது.

‘நிழல்குத்து’ திரைப்படம் வெளிவருவதற்குப் பல வருடங்கள் முன்பே ‘ஸ்வயம்வரம்’, ‘கொடியேட்டம்’, ‘எலிப்பத்தாயம்’, ‘முகாமுகம்’, ‘மதிலுகள்’ போன்ற பல சிறந்த படைப்புகள் மூலமாக இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரானவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சர்வதேச அளவிலும் இந்தியாவின் சிறந்த திரைப்படங்களைப் பற்றிப் பேசும்போது அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்கள் அவற்றில் தவறாமல் இடம்பெறுகின்றன. ‘நிழல்குத்து’ 2002-இல் வெளிவந்தது.

‘நிழல்குத்து’ திரைப்படத்தில் காளியப்பன் என்பவர் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுபவராக வேலை பார்க்கிறார். நாகர்கோயிலில் ஊருக்கு வெளியில் ஒரு இடத்தில அவருக்கு அரசு வீடு கொடுத்திருக்கிறது. அவருக்கு மகாராஜா பல சலுகைகளை அளிக்கிறார். ஒவ்வொரு முறை தூக்குத் தண்டனை நிறைவேற்றியவுடன் அவருக்கு சன்மானம் அளிக்கப்படுகிறது. மனைவி, ஒரு மகன், கல்யாணமான மூத்த மகள், வயதுக்கு வந்த இளைய மகள் – இதுதான் அவர் குடும்பம். அவர் ஒரு காளி உபாசகர். ஒரு முறை அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது கைதியைத் தூக்கிலிட உத்தரவு வருகிறது. தனக்கு உடல் நலமில்லாததால் தன்னுடன் தன் மகனையும் சிறைக்கு அழைத்துச் செல்கிறார். அடுத்த நாள் காலையில் கைதியைத் தூக்கிலிடவேண்டும். அன்று இரவு அவர் தூங்கக் கூடாது என்பது நியதி. அவருக்கு சாராயம் கொடுக்கப்படும். சிறை அதிகாரிகள் கதைகள் சொல்லி அவர் இரவு முழுவதும் விழித்திருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

ஒரு சிறை அதிகாரி சொல்லும் கதை காளியப்பனை மிகவும் பாதிக்கிறது. அது ஒரு பன்னிரண்டு – பதிமூன்று வயது சிறுமியைப் பற்றிய கதை. ஒரு அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள குக்கிராமத்தில் அவள் வாழ்கிறாள். அங்கு புல்லாங்குழல் ஊதும் ஒரு அனாதை இளைஞனை அவள் விரும்புகிறாள். ஆனால் அவளையோ அவள் அக்கா புருஷன் மோகிக்கிறான். வயதுக்கு வந்த அவளை அடையவேண்டும் என்று வெறி கொண்டு ஒரு நாள் அவளைக் கற்பழிக்கிறான். கற்பழிக்கப்பட்ட சிறுமி இறந்து விடுகிறாள். அங்கு இருக்கும் புல்லாங்குழலைப்  பார்த்து– அனாதை இளைஞன் அந்த சிறுமிக்கு கொடுத்தது- போலீஸ் அந்த இளைஞனே குற்றவாளி என்று முடிவெடுக்கிறது. அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

அதிகாரி சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்கும் காளியப்பன் அந்தக் கதையைத் தன் குடும்பத்திற்குப் பொருத்திப் பார்க்கிறார். கொலை செய்யப்பட்ட பெண் தன் பெண்ணாக இருந்தால்? கொலை செய்தவர் தன் மாப்பிள்ளையாக இருந்தால்? அப்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞன் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு அந்த அதிகாரி காளியப்பனிடம் சொல்கிறார்: “நீங்கள் நாளை காலை தூக்கிலிடப்போகும் பையன் அவன்தான்.” இதைக் கேட்டு உடல்நிலை சரியில்லாத காளியப்பன் மயங்கி விடுகிறார். தூக்கு தண்டனை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மகாராஜாவின் மரண தண்டனை ரத்து செய்யும் பத்திரம் வந்துவிடும். அதனால் சிறை அதிகாரிகள் காளியப்பனின் மகனைக் கொண்டு மரணதண்டனையை நிறைவேற்றுகிறார்கள். “உரிய சமயத்தில் கைதி தூக்கிலிடப்பட்டான். அதே போல் உரிய சமயத்தில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்தது.” என்ற வாசகத்துடன் படம் நிறைவடைகிறது.

oduvil2

[ஒடுவில் உன்னிகிருஷ்ணன்]

மரண தண்டனை என்னும் ஒரு சிக்கலான விஷயத்தைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. உலகெங்கும் மரண தண்டனை பற்றி பல விவாதங்கள் நடந்திருக்கின்றன, நடந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் மரண தண்டனையை நீக்கிவிட்டார்கள். இந்தியா போன்று சில நாடுகளில் இன்னும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரணதண்டனைக்கு எதிராகச் செய்யப்படும் வாதங்களில் இரண்டை இந்தப் படம் முன் வைக்கிறது. ஒன்று, மரணதண்டனை என்பது ஒரு நாடு ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொலை செய்வதற்கு சமானம் அல்லவா? இதை ஒரு நாடு செய்யலாமா? இரண்டாவது, ஒரு நிரபராதியைத் தூக்கிலிட்டால், அவருக்கு மறுபடியும் நம்மால் உயிர் கொடுக்க முடியாது. திருத்தவே முடியாத அந்தப் பிழைக்கு யார் பொறுப்பேற்பார்கள்? முன்பொரு காலத்தில் அரசர்கள் இருந்தார்கள். அளித்த தண்டனைக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டி இருந்தது. ஆனால் ஜனநாயக ஆட்சியில் சிக்கல்கள் அதிகமாகின்றன. ஒரு தவறான தீர்ப்புக்கு அரசியல் சாசனப்படி அமைந்த விதிகள் காரணமா, நீதிபதிகள் காரணமா, இல்லை ஒட்டு மொத்த சமுதாயமே காரணமா? அவர்களுக்கு என்ன தண்டனை?

அரசர்கள் சமுதாயம் இதை எப்படி எதிர் கொண்டது? படம் காளியப்பன் சாராயக்கடையில் கேட்கும் ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கிறது: “நேற்று நான் ஒருவனை தூக்கில்லிட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா?” அதற்கு சாராயம் ஊற்றுபவர், “வேற என்ன சொல்லியிருப்பான்? நான் நிரபராதி என்று சொல்லி இருப்பான்.” காளியப்பனுக்குச் சவரம் செய்ய வந்த நாவிதன் அவரிடம் கேட்கிறான், “நீங்க தூக்கில் போட்டும் ஒருவன் சாகவில்லை என்றால் இன்னொரு முறை தூக்கில் போடுவீர்களா? இரண்டாவது முறை தூக்கில் போடக்கூடாது என்று சொல்கிறார்களே?” கிராமத்தில் இருவர் பேசிக்கொள்கிறார்கள்:”எப்படியும் ஏழைகள்தான் தூக்கில் தொங்குகிறார்கள். அவர்களுக்கு நல்ல வக்கீல்களை அமர்த்திக்கொள்ள காசு கிடையாது. பணக்காரர்கள் தப்பி விடுகிறார்கள்.” இது போன்ற சிறு சம்பாஷணைகள் மூலம் அந்த ஊரில் உள்ளவர்களின் மனோநிலையை நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர். ஒன்று, மக்கள் நீதி என்று ஒன்றின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள், அதை நடைமுறைப்படுத்துவது அரசின் செயல் என்றும், அரசு அதைத் திண்ணமாகச் செய்யும் என்று நம்புகிறார்கள். அதே சமயம் நடைமுறையில் உள்ள சிக்கல்களும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் இதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும் என்ற நிலையில் தான் சாதாரண மக்கள் இருக்கிறார்கள் என்பதே இயக்குனர் நமக்கு அளிக்கும் காட்சி.

இது போன்ற சிக்கலான விஷயங்களை எதிர்கொள்ள மனிதன் மதத்தை நாடுகிறான். நீதி, ஒழுக்கம், அறம் போன்ற அடிக்கல்கள் மேல்தான் மதங்கள் எழுப்பபட்டிருக்கின்றன. தூக்கிலிட்ட பிறகு காளியப்பன் அந்த தூக்குக் கயிறை வீட்டிற்கு கொண்டு வருகிறார். அதிலிருந்து ஒரு திரியை உருவி எரித்து சாம்பலாக்கி அந்தச் சாம்பலைத் தடவினால் காய்ச்சல் விட்டுப் போகும், மனநிலை குன்றியவர்கள் குணமாவார்கள் என்று பல விதமான நம்பிக்கைள் ஊரில் நிலவுகின்றன. மரண தண்டனையை நிறைவேற்றப் போகும் ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்து அந்த ஊர் காளியப்பனைக் காளியின் உருவமாகவே காண்கிறது. மரண தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்க நெருங்க அவருக்குள் காளி இன்னும் உக்கிரமாகிறாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதாவது, அந்த கைதியைத் தண்டிக்கக் காளியே வருகிறாள் என்று மக்கள் நம்புகிறார்கள். அதே சமயம் காளியப்பனுக்கோ தான் ஒரு உயிரை எடுக்க போகிறோமே என்ற மன உளைச்சல். அதனால் தினமும் அவர் காளியை பிரார்த்திக்கிறார். “இதையெல்லாம் செய்வது நானல்ல. என் வழியாக செய்பவள் நீயே,” என்று கூறி சமாதானம் அடையப் பார்க்கிறார்.

nizhalkuthu12

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் பாடம் எடுப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அதில் அந்த வாத்தியார் துஞ்சத்து எழுத்தச்சன் கவிதை ஒன்றை மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார். “எப்பொழுது மரணம் வரும் என்று நமக்கு தெரியாது. ஆனாலும் மனிதன் தனக்கு மரணமே வராது என்பதைப் போல் நடந்துக்கொள்கிறான்.” சமுதாயம் மதத்தை நீதியுடன் கோர்த்து விட்டிருப்பதை நாம் இங்கு காணலாம். நீதியைக் காப்பது அரசன் அல்ல, அது காளியே என்று ஒரு தளத்தில் மக்கள் நம்புகிறார்கள். அதே போல் தனி மனிதனாகிய காளியப்பன் தன் செய்கைகளை நியாப்படுத்த காளியின் உதவியை நாடுகிறார். “ஒருவன் வாழ்வு அவன் கையில் இல்லை. எல்லாம் விதி,” என்ற தத்துவத்தைக் கொண்டு ஒரு பிழையான தீர்ப்பை மக்கள் கடந்துவிடுகிறார்கள்.” சமுதாயம் எப்படிப் பல சிக்கலான விஷயங்களைக் கதைகளாக மாற்றிக் கடந்து சென்றுவிடுகிறது என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதே சமயம், காலங்காலமாகப் பேசப்பட்டுவரும் கதைகள் சமுதாயத்தின் மனச்சாட்சியாக மாறிவிடுகின்றன. அவை ஒரு சமுதாயத்தை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. [துரியோதனன் பாண்டவர்களைத் தந்திரமாகக் கொல்ல முயற்சித்த நிழல்குத்து கதை இன்னும் கத களியாக நிகழ்த்தப்பட்டுவருவதை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும்.]

Adoor Gopalakrishnan

இத்திரைப்படத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அடூரின் கதை சொல்லும் பாணி. அடூர் என்றைக்கும் கோஷங்கள் எழுப்பியவர் அல்ல, மென்மையாகவே கதை சொல்கிறார்.அதே சமயம் நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகிறார். தவறாகத் தூக்கிலிடப் பட்டவன் ஒரு அனாதை இளைஞன்.  அந்த கதாபாத்திரத்தை அனாதையாக வைக்க இரண்டு காரணங்கள் இருந்திருக்க வேண்டும் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று, அந்த இளைஞனுக்காக அழ யாருமில்லை. பல சமயங்களில் இறந்தவர்களை விட அவர்கள் விட்டுச் சென்றவர்களுக்காகத்தான் நாம் பச்சாத்தாபம் படுகிறோம். ஆனால் இங்கு நம்மால் அது முடியாது. அவன் இறந்தால் யாரும் அழ மாட்டார்கள். யாரும் அழாத ஒருவனுக்காக நாம் போராடத் தயாரா? நமக்கு அவன் மேல் உண்மையாகவே அனுதாபம் இருக்கிறதா? இரண்டாவது காரணம்: அனாதையான ஒருவனுக்கு அரசு அல்லது சமுதாயம்தானே புகல்? இப்படி நம்மைச் சார்ந்து இருப்பவனை நாமே கொல்வது முறையா? கொலைக்குற்றம் அவன் மேல் சுமத்தியபோது அவன் என்ன சொன்னான், மரணத்தின் தருவாயில் எப்படித் தவித்தான் என்பதை நமக்கு சொல்ல மறுக்கிறார் அடூர். அப்படிச் சொல்ல மறுப்பதினாலேயே அவனை ஒரு குறியீடாக மாற்றிவிடுகிறார். நம்மை நோக்கி இப்பொழுது கேட்கப்படும் கேள்வி அந்த இளைஞனைப் பற்றியது அல்ல. இது போல் தவறான தீர்ப்பினால் பலியாகுபவர்களைப் பற்றியது. தண்டிக்கப்படுபவரோடு நேரடியாகத் தொடர்பில்லாதவர்களுக்கு மரணதண்டனை ஒரு நிழல்குத்து போன்றது. யாரோ ஒருவன் தூக்கிலிடப்பட்டான் என்பதை நாம் ஒரு செய்தியாகப் படிக்கையில் அந்த மனிதன் ஒரு நிழல் போல்தான் இருக்கிறான். ஒரு நிழல் குத்தப்பட்டதாகத்தான் நாம் அதைக் காண்கிறோம். உண்மை மனிதன் கொல்லப்பட்டதாக அல்ல.

இன்னும் சற்று சிந்தித்தால் நமக்கு வேறு ஒரு பார்வையும் கிடைக்கிறது. நமக்கு அந்தக் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தைப் பற்றித் தெரிந்ததெல்லாம் அந்த சிறை அதிகாரி கூறுவதே. உண்மையாக என்ன நடந்தது? அதிகாரி அந்த இளைஞன் நிரபராதி என்றும், உண்மைக் குற்றவாளி தன் பண பலத்தினால் தப்பிவிட்டான் என்றும் திடமாக நம்புகிறான். அந்த இளைஞன் குற்றவாளி இல்லை என்று சொல்வதற்குச் சான்றுகள் எதாகிலும் உள்ளனவா என்றால், ஒன்றும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இயக்குனர் நமக்கு அது போன்ற எதுவும் காட்டுவதும் இல்லை, என்ன நடந்து என்று சொல்வதுமில்லை. இங்கும் நமக்கு நிழல்தான் தெரிகிறது. கதைசொல்லியின் திறமையைப் பொருத்தும், நம் மனோநிலையைப் பொருத்தும் நாம் இது உண்மையாக இருக்குமோ என்று ஊகிக்கிறோம். சில சமயங்களில் அந்த நிழலையே நிஜமாக ஏற்றுக்கொள்கிறோம். காளியப்பனுக்கு இள வயதில் ஒரு பெண் இல்லாதிருந்தால் அவரை இந்தக் கதை பாதித்திருக்குமா? அவருடைய மூத்த மாப்பிள்ளை அவர் இரண்டாவது பெண்ணைப் பார்க்கும் பார்வையைச் சந்தேகப்படவில்லை என்றால் அவரால் அந்த இளைஞன் குற்றமற்றவன் என்று அவ்வளவு சுலபமாக நம்பியிருக்க முடியுமா? ஒரு விதத்தில் பார்த்தால் நிழலிலிருந்து உண்மையை அறிவது எவ்வளவு கடினம், அல்லது அது முடியாத ஒன்று என்பதை இந்தப் படம் நமக்குச் சொல்கிறது. இப்படி உண்மையை அறிந்துகொள்வது கடினமாக இருக்கும்போது, கிடைத்ததை வைத்துக்கொண்டு மரண தண்டனை விதிக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது. எல்லா தரமான படைப்புகளையும் போல் இந்தப் படமும் நம்மைப் பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

அடூருக்கு நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் உறுதுணையாக இருக்கிறார்கள். முதன்மையாக, காளியப்பனாக நடிக்கும் ஒடுவில் உன்னிகிருஷ்ணனை குறிப்பிட வேண்டும். மலையாளத் திரைப்படங்களோடு பரிச்சயம் இருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது தெரியும். (‘தேவசுரம்’ என்னும் படத்தில் ‘வந்தே முகுந்த ஹரே’ என்ற பாடலுக்கு அவர் கொடுக்கும் முகபாவத்தை அந்தப் படம் பார்த்த யாராலும் மறக்க முடியாது.)

இந்தப் படத்தின் பிரதான பாத்திரம் காளியப்பனாக அவர் நடிப்பில் அசத்தியிருக்கிறார். தூக்கிலிடுவது அவர் தொழிலாக இருந்தாலும் அதை மனமார ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவரை தத்ரூபமாக சித்திரித்திருக்கிறார். சதா சோகம் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதனாக, குடிபோதையில் தள்ளாடும் ஒரு குடிகாரனாக, குளிரில் நடுங்கும் வயதானவராக, ஒரு அன்பான கணவனாக, மகாராஜாவின் ஆணையை மீற முடியாத ஒரு கையாலாகாத மனிதனாக, காளியப்பனின் பல்வேறு பரிணாமங்களை அனாயாசமாக நமக்கு உணர்த்திவிடுகிறார் உன்னிகிருஷ்ணன். சற்று நேரமே வரும் நெடுமுடி வேணுவையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவர் ஜெயில் அதிகாரியாக வந்து காளியப்பனுக்குக் கதை சொல்கிறார். அந்தக் குறுகிய சமயத்தில் அவரின் வினாடிக்கு வினாடி மாறும் முகபாவம், கதை சொல்ல அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், அவர் கதையைச் சொல்லும் விதம், எல்லாமே ஒரு தேர்ந்த கதைசொல்லியை நம்முன் நிறுத்துகின்றன. நெடுமுடி வேணுவின் பாத்திரத்தின் மூலம் அடூர் நமக்கு இன்னொரு விஷயத்தை உணர்த்துகிறார். இன்றைய அநீதிகள் நாளைய கதைகளாக மாறிவிடுகின்றன. அங்கு கூடி இருக்கும் அதிகாரிகளுக்குக் கதைதான் சுவாரஸ்யமாக இருக்கிறது. (“முக்கியமான இடத்தில் நிறுத்திவிட்டீர்களே?” என்று இன்னொரு அதிகாரி கேட்கிறார்.) நேரே இருக்கும் இளைஞன்? அவன் நிழலாகி நாட்களாகி விட்டன.

தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமாக சண்ணி ஜோசப் மற்றும் மங்கட ரவிவர்மாவின் படப்பிடிப்பும், இளையராஜாவின் இசையையும் குறிப்பிடவேண்டும். அடூர் இந்த படத்தை இரு பாகங்களாகப் பிரிக்கிறார். ஒரு பாகத்தில் உண்மையாகக் காளியப்பன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள். இன்னொரு பாகத்தில் எங்கோ நடந்த சம்பவங்களைத் தன் குடும்பத்தாருக்கு நடந்ததாக காளியப்பன் நினைத்துக்கொள்வது. ஒன்று உண்மை. இன்னொன்று உண்மையின் நிழல். இந்த வித்தியாசத்தை நமக்கு உணர்த்த அடூர் உண்மைச் சம்பவங்களை வேறு மாதிரியும், நிழல் சம்பவங்களை வேறு மாதிரியும் படமாக்கியிருக்கிறார். நிழல் சம்பவங்களில் வணிக சினிமாவின் பல அம்சங்களைப் புகுத்துகிறார். காற்றுக்குச் சாய்ந்தாடும் வயல்கள், நீலவானில் திட்டு திட்டாக வெள்ளை மேகங்கள், தாமரைகளைக் கொண்ட தடாகம் என்று அந்த ஊரையே ஒரு கனவுலகமாக மாற்றுகிறார் அடூர். அந்த உலகத்தை சண்ணி ஜோசப் மற்றும் மங்கட ரவிவர்மாவின் படப்பிடிப்பு அற்புதமாக நம் கண் முன் கொண்டுவந்து விடுகிறது. இதற்கு மாறாக உண்மைச் சம்பவங்கள் நிகழும்போது அடக்கி வாசிக்கிறது சண்ணி ஜோசப் மற்றும் மங்கட ரவிவர்மாவின் கேமரா. அதேபோல் இயக்குனரின் மனதைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. உண்மைச் சம்பவங்கள் நிகழும்போது பின்னணி இசை அதிகமாக இசைக்கப்படுவதில்லை. இசைக்கப்படும்போதும் மிகக் குறைவான வாத்தியங்களை உபயோகிக்கிறார் இளையராஜா. ஒரு சோக ராகத்தைப் பாடும் வயலின், அதன் கூட சற்று அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு தாள வாத்தியம் (drum) இவைதான் அப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு நேர் மாறாக கனவுலகக் காட்சிகளுக்கு இசையமைக்கிறார் இளையராஜா. அவர் இசை நம்மை உடனேயே அந்த அழகான கனவுலகிற்குள் கொண்டு சென்று விடுகிறது.

nizhalkuthu_murali

அடூர் இந்த படத்தில் 1940-களில் ஒரு இந்திய கிராமம் எப்படி இருந்ததோ அதை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதற்காக அவருடைய ஆர்ட் டைரக்டரை நாம் பாராட்ட வேண்டும். கிராமத்தில் இருப்பவர்களின் உடைகள், அரசு அதிகாரியின் சீருடை, அரசு அதிகாரியிடம் மக்கள் செலுத்தும் மரியாதை, காந்தியின் போராட்டம் என்று எல்லா கோணங்களிலும் 1940-களில் நாம் இருக்கிறோம் என்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார். அந்த கிராமத்தில் உள்ள பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள், சடங்குகள், என்று ஒவ்வொரு விஷயத்தையும் வெகு நுணுக்கமாக கவனித்து அதைத் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார் அடூர். அவரின் ‘attention to detail’ நம்மை பிரமிக்க வைக்கிறது. அதே போல் அடூரின் வசனங்களும் இந்த காலகட்டத்தையும், மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்க வெகுவாக உதவுகின்றன. சிறியதாக இருந்தாலும் ஒவ்வொரு வசனமும் மிகுந்த அர்த்தபூர்வமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார் அடூர்.

பொதுவாகவே தன் எல்லாத் திரைப்படங்களிலும் சுற்றுப்புற ஒலியை நேர்த்தியாகக் கொண்டுவருவதில் வெகுவாகக் கவனம் செலுத்தும் அடூர், இத்திரைப்படத்திலும், அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் காளியப்பன் வீட்டுக்கருகிலிருக்கும் ஒரு பனைமரம் எழுப்பும் ஓசைகளை வைத்து, அம்மரத்தை இத்திரைப்படத்தின் இன்னொரு கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார். ‘ஒற்றையாகக் கிடந்த ஒரு ஏழைக்குடும்பத்தின் வாழ்க்கைத் திருப்பங்களில் மெளன சாட்சியாக மாறியது அந்தப் பனைமரம்,’ எனத் தன் ‘பனைமரம் சொன்னது’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார் அடூர்.

நான் மரண தண்டனையின் சிக்கல்கள் பற்றிய கோணத்தை மட்டுமே இங்கே பேசியிருக்கிறேன். ஆனால் எல்லா உன்னதப் படைப்புகள் போலவே இதைப் பல கோணங்களில் பார்க்கலாம். ஒரு தனிமனிதனின் தவிப்பாகவோ, தனிமனிதனுக்குச் சமூகத்தில் உள்ள இடத்தைப் பற்றியதாகவோ, அநீதி என்று தெரிந்தும் ஒரு தனி மனிதன் அரசுக்குத் தன் கடமையை ஆற்றவேண்டுமா என்ற கேள்வியாகவோ இந்தப் படத்தை நாம் பார்க்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் படம் பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டும் என்பதில் ஐயம் இல்லை. அடூர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுவதற்கான காரணம் இந்த படத்தை மட்டும் பார்த்தால்கூடப் புரியும். ஒரு மிகச் சிக்கலான பிரச்சினையை மிகுந்த மனிதாபிமானத்துடன் அணுகுவதால் இது அடூரின் சிறந்த படம் என்பதை தாண்டி, இந்தியாவின் முக்கிய படங்களில் ஒன்றாக ஆகிறது.