முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

aanai-vathakkal2

நானும் என் அண்ணன் மகளும் விரும்பி விளையாடும் விளையாட்டு ஒன்றுண்டு. அதைச் சொன்னால் வேடிக்கையாக இருக்கும் – ஆனை வதக்கல் செய்வதுதான் விளையாட்டு. நேரம் காலம் போவது தெரியாமல் யானைகளை வதக்கிக் கொண்டிருப்போம். எங்கள் கற்பனைகள் எல்லையற்று விரியும். யானைகளை வாணலியில் முழுசாக இட்டு வதக்கும் எங்களிருவரின் கன பரிமாணங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். யானைகளின் பிரம்மாண்டம், அவற்றைக் கட்டியாள்பவர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு பேருருவத்தைக் கொடுத்துவிடுகிறது. விலங்குகளை மையமாகக் கொண்டிருந்த பண்டைய இந்தியப் போர்முறைகளில் இதனால்தான் யானைகளுக்கென்று தனித்த இடமும், மதிப்பும் இருந்திருக்கவேண்டும். பண்டைய இந்தியக் குடிமுறையில் யானைகள் ஒரு அரசின் சொத்தாக மதிக்கப்பட்டன. ஒரு அரசனுடைய படையில் உள்ள யானைகளின் எண்ணிக்கையை வைத்தே அவனுடைய படைபலம் மதிப்பிடப்பட்டது.

பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று. தமிழின் முற்கால இலக்கியங்களில் பல விலங்குகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் யானைகள் அளவுக்கு வேறெந்த விலங்கைப் பற்றியும் இவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டதில்லை. முத்தொள்ளாயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சேர சோழ பாண்டியர்கள் மேல் ஆளுக்கு தலா தொள்ளாயிரம் என்று பாடப்பட்ட முத்தொள்ளாயிரம் பாடல்களில் நமக்கு கிடைத்திருப்பவை வெறும் 108 பாடல்கள் மட்டுமே. அந்த நூற்றியெட்டில் 33 பாடல்களில் யானைகள் பேசப்படுகின்றன.

tamil-nadu-ind648[தாராசுரம் யானை ரதம்]

கவித்துவ உணர்வும் கற்பனைத் திறமும் இனிய சொல்வடிவம் பெரும் முத்தொள்ளாயிரம் வெறும் நூற்று எட்டு பாடல்களாக அருகியது ஒரு சோகக்கதை. இவ்வளவு சிறப்பான பாடல்களைப் பாடிய கவிஞரின் பெயர் மற்றும் காலத்தை நாம் மறந்து விட்டோம், காலப்போக்கில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் அனைத்தையும் மொத்தமாகத் தொலைத்திருப்போம். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட இந்த பாடல்கள், நானூறு ஐநூறு ஆண்டுகள் முன் வரை இலக்கியத்தில் பேசப்பட்டு வந்துள்ளன. அதன்பின் இவை குறித்த பதிவுகள் நம் இலக்கியங்களில் இல்லை. வெகு காலம் கழித்து புறத்திரட்டு என்ற தொகுப்பு நூலை உருவாக்கிய புண்ணியவான் ஒருவர், கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நீத்தார் பெருமை, பொறையுடைமை, அரண், நகர், கைக்கிளை என்றெல்லாம் அதிகாரங்களை உருவாக்கி, அவற்றில் பொருந்தக்கூடிய பாடல்களை வெவ்வேறு நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டார். அந்த வகையில் நமக்குக் கிடைத்த பெரும்பேறே இந்த நூற்று எட்டு பாடல்களும்.

முத்தொள்ளாயிரத்தில் யானைகளைக் குறித்து செய்யப்பட்டிருக்கும் பதிவுகள் அந்தந்த அரசர்களின் பெருமைகளையும் அவர்களுடைய நாடுகளின் பெருமையையும் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், யானைகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவை என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றன. இக்காரணத்தால் யானைகள் மிகுந்த நேசத்துக்கு உரியனவாக இருக்கின்றன.

’யானை கட்டிப் போர் அடித்த காலம்’ என்று சொல்வார்களே, இன்றைக்கு அத்தனை விளைச்சல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அத்தனை யானைகள் நம்மிடம் இன்று இல்லை. ஒரு முத்தொள்ளாயிரப் பாடலில் சேரனுடைய யானை வளம் பற்றிய குறிப்பொன்று கிடைக்கிறது. அந்நாட்டு வீரர்கள் கைமாற்றிக் கைமாற்றி கள் அருந்துகிறார்கள். அருந்தும் முன், அந்தக் கள் பானையின் மேலே தேங்கி வரும் நுரையைத் தம் கைகளால் வழித்து வீதியில் வீசுகிறார்கள். அவர்கள் சென்றபின் அந்த வழியே வரும் சேரனின் யானைகள் இந்த நுரையை மிதிக்கின்றன-

ஓங்கெழில் யானை
மிதிப்பச்சே றாயிற்றே,-
பூம்புனல் வஞ்சி
அகம்.

என்று பாடுகிறார் முத்தொள்ளாயிரப் புலவர்.

10-mahabalipuram-elephant-carving

[மகாபலிபுரம் பல்லவ யானைகள்]

ஒரு மன்னனின் போர் திறத்தைப் பற்றி பேச வேண்டும் – அவன் மிகவும் பலமுள்ளவன் என்று சொன்னால்தானே பாடப்படும் அரசனுக்குப் பெருமை? இங்கும் புலவருக்கு யானைகளே துணை வருகின்றன – “பல்யானை மன்னீர்!” என்று அழைத்து, “படுதிறை தந்துய்ம்மின்,” என்று அறிவுறுத்துகிறார். சாமானிய அரசர்களிடம் திறை பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது?- ஒரு அரசனின் புகழைப் பாடவும் பல யானைப் படைகள் கொண்ட பேரரசர்கள் தேவைப்படுகிறார்கள்.

கோதை என்று சேரனை அழைத்து ஒரு மிக அழகிய பாடல். சேரன் “செங்கண்மாக் கோதை”- சிவந்த கண்கள் கொண்டவன், போர் நாட்டம் மிகுந்தவன். அவனைப் போலவே இருக்கிறது அவனது யானையும்- அது ஒரு “சினவெங் களியானை”. வீரம் நிறைந்த பல மன்னர்களின் வெண்கொற்றக் குடையை பிடுங்கி தூர எறிந்த இந்த யானை நிலவைப் பார்த்ததும், பழக்க தோஷத்தால் அதுவும் யாரோ ஒரு மன்னனுடைய வெண் குடைதான் என்று நினைத்துக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய கை நீட்டுகிறதாம்.

வீறுசால் மன்னர்
விரிதாம வேண்குடையைப்
பாற எறிந்த
பரிசயத்தால்த் தேறாது,
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை,-
திங்கள்மேல் நீட்டும்தன்
கை.

கை என்ற பதம் ஈற்றடியாகத் தனித்துப் பொருத்தப்பட்டிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது.

சாதாரணமாகவே யானை நடந்து செல்லும்போது அதன் நடையை ரசித்தபடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அதன் பின் செல்லலாம், அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் திங்கள் மீதே கை வைக்கப் பார்க்கும் போர் யானை நடப்பதைப் பார்க்கும் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனை எப்படி விரிகிறது பாருங்கள், இது ஒரு கவியுள்ளத்தில் மட்டுமே தோன்றக்கூடிய கருத்து.

கச்சி ஒருகால்
மிதியா, ஒருகாலால்த்
தத்துநீர்த் தன்தஞ்சை
தான்மிதியாப்- பிற்றையும்
ஈழம் ஒருகால்
மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி
களிறு!

கோழியர்கோக் கிள்ளி- உறையூர்ச் சோழனது யானை, தன்னுடைய முதல் அடியை காஞ்சி (கச்சி) நகரில் வைக்கிறது, அடுத்த அடியைத் தஞ்சையில் வைக்கிறது. அப்படியே போய் அதன் அடுத்த மிதி ஈழத்தில் விழுகிறது! இத்தனை நாடுகள் வென்ற வேந்தனே என்று சாதாரணமாகச் சொல்லாமல், இத்தனையையும் மிதித்து நடக்கிறது இந்த யானை என்று எத்தனை நயத்தோடு சொல்லியிருக்கிறார்கள் – நம் கண்முன் சோழனது யானைப் படையின் பராக்கிரமம் விரிகிறதல்லவா?

4716529145_9a477b5cd1

[பேளூர் ஹோய்சாள யானைகள்]

மனிதர்கள் யானையைப் பழக்கப்படுத்த கற்றுக் கொண்டு அதைப் பல வேலைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றுள் போர்த் தொழில் முதன்மையானது. யானைகள் மெதுவாகவே நகருமென்றாலும் அவற்றுக்கான பிரத்யேகப் பயன்பாடுகள் இருந்தன. ஒரு யானையின் மேல் ஏழு முதல் 10 வீரர்கள் வரை ஏறிப் போர் புரிந்தார்களாம். யானையால் மட்டுமே அத்தனை மனிதர்களைச் சுமக்க முடியும். உயரமான விலங்கு என்பதால் களப்போரில் யானை மேலிருந்து தெளிவாக அம்பு எறிய முடியும். ஆனால் இவற்றைவிட முக்கியமானது, பகைவர்களின் மதிற் சுவர்களை உடைப்பது.

பலமான மதிற்சுவர்களை உடைக்க யானை பலம் வேண்டும். எத்தனை முயன்றாலும் மனிதர்களால் அது முடியாது. போதாக்குறைக்கு இந்த மதில்களின் வாயிற் கதவுகளில் கூரிய ஈட்டிகளை வேறு பொருத்தியிருந்தார்கள். இந்த முத்தொள்ளாயிரப் பாடலின் காட்சியைப் பாருங்கள்,

அயில்க்கதவம் பாய்ந்துழக்கி,
ஆற்றல்சால் மன்னர்
எயில்க்கதவம் கோத்தெடுத்த
கோட்டால்ப்.- பனிக்கடலுள்ப்
பாய்தோய்ந்த நாவாய்போல்த்
தோன்றுமே,- யெங்கோமான்
காய்சினவேல்க் கிள்ளி
களிறு!

அயிற்கதவை (அயில் – அம்பு) உடைத்து பின் எயிற்கதவை தன்னுடைய தந்தத்தில் குத்தி தூக்கிக் கொண்டு ஓடும் கோதையின் யானை, கடலில் செல்லும் கப்பல் போல் இருக்கிறது என்கிறார் புலவர்: “எயில்க்கதவம் கோத்தெடுத்த கோட்டால்”- யானை தன் தந்தத்தில் கோட்டையின் வாசல் கதவைக் கோத்து உயர்த்திப் பிடித்து நடக்கிறது, இது பார்ப்பதற்கு பாய்மரக் கப்பல் ஒரு கடலில் பயணிப்பது போல் இருக்கிறது: ‘பனிக்கடலுள்ப் பாய்தோய்ந்த நாவாய்போல்த் தோன்றுமே” என்று பாடுகிறார் புலவர். யானைகளை நேசிக்கக் கூடியவர்களால் மட்டுமே இந்தக் காட்சியை உருவகப்படுத்திப் பார்த்து ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

போர், வீரம் பற்றியெல்லாம் பேசும்போது யானைகளைப் பாடலாம். ஏனெனில், அவை வலிமையானவை, கம்பீரமானவை. ஆனால் அக்கால வழக்கங்களைப் பற்றிச் சொல்லவும் அவற்றையே பயன்படுத்தியிருக்கிறார் முத்தொள்ளாயிரப் புலவர்.

போர் என்றால் நிறைய உயிரிழப்பும் இருக்குமே. அக்காலத் தமிழரிடையே உடன்கட்டை ஏறுவது வழக்கத்தில் இருந்திருக்கிறது. பாண்டியன் மேற்கொண்ட போரில், மரணமடைந்த வீரர்களின் மனைவியர் தங்கள் கணவர்மார்களோடு எரி மூழ்குகிறார்கள். அதைக் காணச் சகியாது பாண்டியன் கண்ணை மூடிக் கொள்கிறான். போரில் நிறைய யானைகளும் இறந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு அவ்வானைகளின் துணை பெடைகள் புலம்புகின்றன. அதைக் காணச் சகியாது உயிர் பிழைத்த போர் யானைகளும் தங்கள் கண்களை மூடிக் கொள்கின்றன என்று பொருள் தரும் பாடலில் இந்த வழக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பெண்டிர்
எரிமூழ்கக் கண்டுதன்
தானையால்க் கண்புதைத்தான்
தார்வழுதி – யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத்
தாம்கண் புதைத்தவே!-
பல்வாயால்ப் பட்ட
களத்து.

காதல் இல்லாமல் இலக்கியமா? முத்தொள்ளாயிரத்தில் போருக்குச் சென்ற யானைகளின் வீர காதல் வெவ்வேறு பாடல்களில் இவ்வாறு பாடப்பட்டிருக்கின்றன-

ஏற்கனவே நாம் பார்த்தது போல் எதிர் அரசனின் மதிற்சுவர்களைத் தகர்க்க யானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்போது யானைகளுக்கும் காயங்கள் ஏற்பட்டு விடும். அவற்றின் தந்தங்கள் உடைந்துவிடும். இப்படிப்பட்ட ஒரு இழப்பை பாண்டிய நாட்டு யானையொன்று எவ்வளவு புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறது பாருங்கள்:

பிடிமுன் அழ(க)ழிதல்
நாணி- முடியுடை
மன்னர் குடையால்
மறைக்குமே…

என்று செல்கிறது கற்பனை!

பகைவர்களின் மதிற்சுவர்களை இடித்து உடைத்ததால் தந்தங்களும், அவர்களின் மணிமுடிகளை நசுக்கியதால் நகங்களும் உடைந்த சோழனின் யானைக்கு இவ்வளவு சாமர்த்தியம் இல்லை- அது,

…பிடிமுன்பு
பொல்லாமை நாணிப்
புறங்கடை நின்றதே!

என்று பாடுகிறார் புலவர்.

4408921-carved-elephants-decorating-the-ancient-lakshmana-hindu-temple-at-khajuraho-uttar-pradesh-india-10th

[கஹுராஜோ சிற்பங்களில் யானைகள்]

பொதுவாக, சங்கப்பாடல்களில் காதல் கொண்ட பெண்கள் தங்கள் ஏக்கத்தைத் தங்கள் தோழிகளிடம் சொல்வார்கள். முத்தொள்ளாயிரத்திலும் பல பாடல்கள் அப்படி உண்டு. அவற்றைத் தவிர அபூர்வமாக யானையிடம் பெண்கள் பேசுவதாக சில பாடல்கள் உண்டு…

இது அருமையான பாடல். சோழநாட்டுப் பெண் ஒருத்தி பாடுகிறாள். சோழன் நீல நிற மலர் அணிந்து கொண்டு ஒரு பெண் யானை மீதேறி வருகிறான். அந்த யானை ஆடிக்கொண்டே வருகிறது. இவள் அந்த யானையைப் பார்த்து “அடி யானையே! சோழன் உன் மேல் இருக்கிறான் என்கிற கர்வத்தில் இப்படி ஆடிக் கொண்டு வருகிறாயே! காவிரி பாயும் நாட்டுப் பெண்கள் இப்படி நாணமில்லாமல் நடக்க மாட்டார்கள் என்பது உனக்குத் தெரியாதா?” என்கிறாள்.

நீள்நீலத் தார்வளவன்
நின்மேலான் ஆகவும்
நாணாதே என்றும்
நடத்தியால் – நீள்நிலம்
கண்தன்மை கொண்டலரும்
காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை அல்ல
பிடி!

யானையானாலும் பெண்ணென்றால் நாணம் இருக்க வேண்டாமா என்று கேட்கிறாள் இவள் – இந்த சோழ நாட்டுப் பெண்ணின் வயிற்றெரிச்சல் தெளிவாகவே வெளிப்படுகிறது, இல்லையா?

அது சோழ நாடு. இது பாண்டிய நாடு. அவ்வளவுதான் வித்தியாசம். பாண்டியனின் யானைக்கு இந்தப் பெண் செய்யும் அறிவுறுத்தல் என்னவோ அதேதான் – “ஏ! மட யானையே! பகைவர்களின் சதை ஒட்டிக் கொண்டிருக்கும் வேலையுடைய எங்கள் கோமான் உன் மீது ஏறி உலா வரும் போது மெதுவாக நடந்து செல். இல்லையென்றால் நீ ஒரு பெண்தானா என்கிற ஐயமே வந்துவிடும்” என்கிறாள்.

எலாஅ மடப்பிடியே!
எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல்
மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந்
தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ(து)
உடைத்து!

பாவம் இந்த யானைகள், இவைகளும் பெண்கள் வாயில் விழுந்து எழாமல் தப்ப முடிவதில்லை!

மேலே பார்த்த பாடல்கள் இரண்டிலும் பெண்கள் யானைகளைப் பார்த்து கோபப்படுவதாக பாடப்பட்டுள்ளன. பின் வரும் பாடலில் உள்ள பெண் கோபப்படுவதில்லை, கெஞ்சுகிறாள்.

பாண்டியன் தெருவிலே வருகிறான். அவன் மீது ஆசை வைத்து விட்டாள் இந்தப் பெண், தன் வீட்டு ஜன்னல் வழியாக அவன் வருவதைப் பார்க்கிறாள். அவனை ஆசை தீர பார்க்க முடியவில்லையோ என்னவோ, பாண்டியனை சுமந்துவரும் பெண் யானையிடம் கெஞ்சுகிறாள் அவள். “உடுக்கை போன்ற பாதத்தையும் கேடயம் போன்ற காதுகளையும் உடைய யானையே! பாண்டியனைச் சுமந்து வரும் போது என் ஜன்னலுக்கு அருகே நட” – என்று.

துடியடி, தோற்செவி,
தூங்குகை, நால்வாய்ப்
பிடியேயான் நின்னை
யிரப்பல் – கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு
சேரி புகதலும்எம்
சாலேகம் சார
நட!

காதலுக்கும் வீரத்துக்கும் யானைகளைத் துணை சேர்த்துக் கொண்டு இத்தனை பாடியிருக்கிறார் புலவர். ஏன்? இவர் போன்ற பண்டைத் தமிழ் புலவர்களுக்கு வேறு உவமையே கிடைக்கவில்லை என்பதாலா? இல்லை. எல்லாம் ஒரு பற்றுதான். யானைகள் மீதான பற்று. முத்தொள்ளாயிரத்தில் வரும் யானைகளை மட்டும் பேசுவதானாலும்கூட இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இது தவிர சங்கப் பாடல்களில் எத்தனை யானைகள் வருகின்றன, என்னென்ன செய்கின்றன.

தமிழ் இலக்கியத்தில் யானைகளின் இடம் மிக முக்கியமானது. அவை வீரத்தின் குறியீடுகளாக, அரசனுடைய ஆற்றலின் ஆதாரமாக மட்டும் இல்லை- நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உள்ள குழந்தைகள் விளையாடிப் பார்க்க விரும்பும் நேசத்துக்கும் உரியனவாக இருக்கின்றன.

(இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள பாடல்களின் வடிவம் காவ்யா வெளியீடான, டி.கே.சிதம்பரநாத முதலியார் பதிப்பித்துள்ள முத்தொள்ளாயிரம் நூலை ஒட்டி கையாளப்பட்டுள்ளது)