மகரந்தம்

[stextbox id=”info” caption=”உலகப் பொருளாதாரமும் முதலிய வலைப்பின்னலும்”]

உலகில் உள்ள பெருவாரி வர்த்தகத்தை/ பொருளுற்பத்தியை ஒரு சில நூறு நிறுவனங்களே இன்று தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் (Transnational Corporations – TNCs) எனப்படும் இவை இன்று எந்த அரசையும் விடப் பெரியவை, சக்தி வாய்ந்தவை. பல அரசுகளைக் கவிழ்க்க இவற்றால் முடியும், பல நாடுகளை செல்லாக் காசு நாடுகளாகவும் இவற்றால் ஆக்க முடியும். பல நாடுகளின் அரசியல் அமைப்பில் இவை தொடர்ந்து ஊடுருவி அழிப்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றன; தமக்கெதிராக இயக்கங்கள் எதுவும் எழாமலும் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதிலும் வல்லவையாகி விட்டன. இப்படிக் கருதுவதெல்லாம் வெகுநாள் இடதுசாரி மன உளைச்சல் என்றாலும், அதில் உண்மையே இல்லாமல் இல்லை. அதே நேரம் இப்படி ஒரு உளைச்சலை வைத்துக் கொண்டு பதவிக்கு வரும் எந்த இடதுசாரி இயக்கமும் இன்னொரு பெரும் ராட்சத மக்களெதிரி அமைப்பைத்தான் கட்டுகிறார்கள், அதை வைத்து மக்களை நசுக்கவே செய்கிறார்கள். எனவே இந்த பநாநிகளைப் (பல நாட்டு நிறுவனங்கள்- பநாநி) பற்றிய விவர அறிவையும், அவை எப்படி உலகை ஆள்கின்றன என்ற தகவலறிவையும் சாதாரண மக்கள் தம்மிடையே நிறைய வளர்க்க வேண்டி இருக்கிறது. உலகெங்கும் சமூக அமைப்புகளிலும், பண்பாட்டு வெளியிலும், பநாநிகளின் அசாதாரணமான, அநீதி நிறைந்த ஊடுருவலைத் தடுக்கவும், மக்களின் அரசாட்சியில் இவை இடையிடாமல் செய்யவும் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பல நாட்டு மக்களின் அமைப்புகள் சேர்ந்து யோசித்துக் கவனமான, தொலை நோக்குள்ள வழிகளில் செயல்பட்டால்தான், உலகப் பொருளாதாரத்தைச் சிறு கும்பல்கள் தம்முள் அழிப்புத் திட்டங்களுக்கான உடன்பாடுகளோடு இயங்கித் தொடர்ந்து மக்கள் வாழ்வைக் குலைப்பதை நிறுத்த முடியும். அதற்குச் சில துவக்கங்கள் இப்போது காணப்படுகின்றன. ஒரு துவக்கம் இங்கே.

http://www.newscientist.com/article/mg21228354.500-revealed–the-capitalist-network-that-runs-the-world.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”உலகப் பொருளாதாரமும் முதலிய வலைப்பின்னலும் – 2″]
முதல் பதிவில் சொன்னபடி, சில நிறுவனங்களால் வல்லரசாக இருந்த நாடுகளைக் கூட ஆட்டிப் படைக்க முடியும். இதற்கு அவை பிரமாதமாக எதையும் செய்யக் கூட வேண்டாம். அரசமைப்புகள் முட்டாள்தனமாக தம் அதிகாரங்களை எல்லாம் வர்த்தகத்தின் ஆணவத்துக்கும், சிக்கலான நிதி நிர்வாக முறைகளுக்கும் அடிமையாக்கி விடவும், அவை இன்று அரசமைப்புகளைப் பல்லைப் பிடித்துப் பார்க்கத் துவங்கி விட்டன. அரசுகள் இவற்றின் கையில் வர்த்தகப் பொருட்களாகி விட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது.

எந்நாட்டிலும், அரசும், வர்த்தகமும் எதிரெதிராகவோ மேல் கீழாகவோ இருக்கத் தேவை இல்லை. குறிப்பாக, வர்த்தகம் மேலாகவும், அரசு கீழாகவும் இருக்கவும் தேவை சிறிதும் இல்லை. எளிய சூத்திரம். ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம், ஏன்?  வர்த்தகத்திற்கு எப்போதும் அரசு ஊழியர்களை விலைக்கு வாங்குவது எளிது. அதைத்தான் இவை பல காலமாகச் செய்து வந்திருக்கின்றன, அதன் வழியே அரசின் கட்டுப்பாடுகளை எளிதே உடைத்தன. விளைவு கிரீஸ், ஸ்பெயின், இட்டலி போன்ற நாடுகளில் உள்ள சட்டத்தை மீறியே அனைவரும் வாழ்வது என்பது இயல்பான ஒரு வாழ்வு நிலையாகி விடும்.  இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன?  சட்டத்தை மீறுவது என்பது இங்கு அவசியமாகக் கூட ஆகி விட்ட நிலை.

ஆனால் முன்பு மேற்கிலும், கிழக்கிலும் அரசு ஊழியர்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தவை, சமீப காலங்களில் ஊடகங்கள் வழியே முழுதும் மக்களெதிரி அரசியல் கட்சிகளையே புதிதாகக் கட்டி எழுப்பவும், தமக்கென மட்டுமே அவை இயங்கும்படியாக அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைக்கவும் துவங்கி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ‘குடியரசு’க் கட்சி என்ற ஒரு அமைப்பு பூராப் பூரா பெரும் பணக்காரர்கள், பநாநி நிறுவனங்களின் ஏவலைச் செய்வதையே தம் கடமையாகக் கொண்ட ஒரு கட்சி.  கடந்த சில பத்தாண்டுகளாகப் பல நாடுகளில் ஊடகங்களில் எதிர்ப்பற்ற பெருந்தலையாக இருந்த ரூபர்ட் மர்டாக் என்னும் ஒரு அதிகார வெறியர், பல நாடுகளில அரசுகளைக் கவிழ்க்கவும், அரசில் யார் இருப்பார் என்பதைத் தீர்மானிப்பதிலும் தம் ஊடகங்களின் வழியே பிரசாரம் செய்து அரசியலில் குழப்பம் விளைவித்து தம் தேவைக்கேற்ப அரசுகளை மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார் என்பது இப்போது தெரிய வருகிறது.

அதே போன்ற பெரும் சக்தி நிதி நிர்வாகத்தில் ஈடுபடும் பல பநாநிகளுக்கும் கிட்டி இருக்கிறது. கீழே செய்தியில் அப்படி ஒரு பநாநி நிதி நிறுவனம், ஃப்ரான்ஸ் நாட்டை எப்படி அலற அடித்திருக்கிறது என்பது பேசப்படுகிறது. அதுவும் அந்த நிறுவனம் அதிகம் ஒன்றும் செய்யவிலை. ஃப்ரான்ஸிற்கு கடன் வசதி பெறுவதில் உலகப் பணச்சந்தையில் மூன்று ஏக்கள் (AAA) என்று இத்தனை நாட்களாக இருந்த தர நிர்ணயத்தை, இரண்டு ’ஏ’க்கள் என்று மாற்றலாம், ஏன் ஒரு ’ஏ’ என்கிற எழுத்தை எடுக்கலாம் என்று ஒரு கடிதம் எழுதியது. ஃப்ரான்ஸிற்கு அஸ்தியில் ஜுரம் கண்டு விட்டது. படியுங்கள், எப்படி ஒரு எழுத்தால் ஒரு நாட்டின் நலனுக்கே உலை வைக்கலாம் என்பது தெரியும்.

http://www.spiegel.de/international/europe/0,1518,797182,00.html

சும்மாவா சொன்னார்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் என்று?
[/stextbox]


[stextbox id=”info” caption=”நார்வேயில் ஒரு விநோதத் தீவு”]

இந்தச் செய்தியைப் படிக்க அதிக நேரமாகாது. வெறும் தகவல்தான் இருக்கிறது. ஆனால் எப்படி ஒரு தகவல்? இந்தத் தீவில் இருக்கும் ஜீவராசிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அதிசயமாக இருக்கும். 3600 துருவக் கரடிகள். ஆமாம் வெள்ளைக் கரடிகள்தாம். ஆனால் மனிதர்கள் 2500 பேர்தான். அதுவே அதிகம் என்று யோசிப்பவராக நீங்கள் இருக்கக் கூடும், ஜாம்பவானின் வம்சாவளி மனிதராக இருந்தால். எங்கே இருக்கிறது இது? நார்வே நாட்டில், நார்வேயின் வடகோடியில், வடதுருவத்துக்கும் நார்வேக்கும் இடையில். அங்கெல்லாம் எப்படி மனிதர் போய் வாழ்ந்தார்கள்? ஏன்? மனிதரை ஏதோ பகுத்தறிவு விளக்குகள் என்று நம் ஊரில் சொல்கிறார்களே, இப்படி எல்லாம் தேர்வு செய்யும் மனிதரை பகுத்தறிவு ஜோதிகள் என்று கருத முடியுமோ?

http://www.norwaypost.no/attractions/3000-polarbears-and-2500-humans-svalbard-25835-25835-25835-25835.html

ஆனால் கொடும்பாலை சஹாராவில் வாழும் மனிதர் கூடத்தான் இருக்கிறார்கள். அந்தப் பக்கத்திலிருந்து வந்த ஒரு மதத்தை ஏதோ தம் நெடும் பாரம்பரியம் என்று நினைத்து அந்தப் பாலை வழக்கங்களை உலகெங்கும் பரப்பியே தீருவேன் என்று அடம்பிடித்து அதற்கு உடன்பட மறுப்பவர்களைக் கொல்வது கூட தம் கடவுளுக்கு உகந்தது என்று கருதும் நபர்களும் இருக்கிறார்கள். அதைவிட சோக நகைப்புக்கான விஷயம் என்னவென்றால் இப்படிக் கொல்பவர்களே பகுத்தறிவு நாயகர்கள் என்று தமிழ்நாட்டிலேயே பிரச்சாரம் செய்யும் அதி புத்திசாலிகளும் இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது அத்தனை மலினமான சொல்லாகிப் போய் வெகுநாளாயிற்று. மார்குஸா(Marcuse) சும்மாவா சொன்னார், ஒரு பரிமாண மனிதர் நாமெல்லாம் என்று? புத்தி அத்தனை தட்டையாகிக் கொண்டிருக்கிறது உலகெங்கும். இதில் முன் பதிவில் சொன்ன மர்டாக்கிய ஊடகங்களின் பங்கு நிறையவே உள்ளது.
[/stextbox]


[stextbox id=”info” caption=”நார்வேயும் மீனும்”]
எம்ஜியார் படங்களில் மூளைக்கு அதிக வேலை இராது என்றாலும், பாடல்கள் சிலவாவது நல்ல கேள்விகளைக் கேட்கும் பாடல்களாக இருக்கும். அவருடைய புத்தி இசை, பாடல்கள் ஆகியன வழியேதான் ஒழுங்காகச் செயல்பட்டதோ என்று நாம் யோசிக்கலாம். அவர் பாட்டொன்று. ’என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’ என்று போகும். வாசகர்கள் சுட்டிக் காண்பிக்க வேண்டியதில்லை, தெரியும், இந்தப் பாட்டை எம்ஜியார் எழுதவில்லை. ஒரு பாடலாசிரியர்தான் எழுதினார். ஆனால் பாடலைத் தேர்ந்தெடுத்து படத்தில் பொருத்துவதில் எம்ஜியாருக்கு நிறையவே பங்கு இருக்கும். ஏனெனில் அவர் இடையிட்டுப் படங்களை நகர்த்தும் வகை நடிகர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இங்கு அந்தக் கேள்விக்கு அந்தப் பாட்டில் கிட்டும் விடைகள் போதுமானவையா என்பது யோசிக்கப் படவில்லை. அந்தக் கேள்வி மட்டும்தான் கருதப்படுகிறது. ஒரே ஒரு சிறு திருத்தத்தில் வேறு ஒரு நாட்டின் வரலாறு உடனே யோசிக்கப் படலாம் என்பதைச் சொல்லத்தான் இத்தனை பீடிகை.

இன்னொரு நாட்டில் இதே பாட்டு இப்படிப் பாடப்பட்டிருக்கலாம் ஒரு காலத்தில். ‘எண்ணெய் வளமில்லை இந்தக் குளிர்நாட்டில், கரியைச் சாம்பலைத் தின்ன வேண்டும் நம்பாட்டில்?’ என்று அமையலாம்.  19ஆம் நூற்றாண்டு வரை கூட அப்படி ஒரு வறிய நாடாக இருந்த நாடு நார்வே. நிலத்தடி, கடலடி எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்படுமுன் நார்வே ஒரு மீன்வளமிக்க நாடாக மட்டுமே இருந்தது என்று படித்திருப்பீர்கள். அங்கு ஒரு பெரும் தீவிபத்தில் கொடவுனில் இருந்த மீன்கள் எரிந்து போய் எஞ்சியது வெறும் சாம்பலும், கருகிய மீனுமாம். அன்று இருந்த வறுமையில் அந்த சாம்பலை நீரில் கழுவி விட்டு, கரிந்திருந்த மீனை உண்டு உயிர்பிழைத்தனராம் மக்கள். அப்படி உருவான ஒரு சாப்பாட்டுப் பொருள் -ல்யூடவிஸ்க் எனப்படும் ஒருவித கருவாட்டு மீன். இதை எப்படி ஒரு மரபுசார் உணவு வகையாக்கி விட்டனர் நார்வீஜியர், இன்றைய எண்ணெய் வளத்தால் பெரும் செல்வம் மிகுந்த நாடாகி இருக்கிற நார்வேயில் கிருஸ்த்மஸ் காலத்தில் பெருமளவு கிட்டும், உண்ணப்படும் ஒரு விசேஷ உணவு வகையாகி இருக்கிறது இது என்பதை இந்தச் செய்தியைப் படித்தால் தெரியும். அதைவிட, இது இன்று எப்படித் தயாராகிறது என்று பார்த்தால் பெருவியப்பு எழும்.

இந்த மீனைப் பதப்படுத்தப் பயன்படும் லை (Lye) என்கிற ஒரு வித அல்கலை கடும் எதிர்ப்பு வினைகளை மனித உடலில் ஏற்படுத்தக் கூடிய ஒரு ரசாயனப் பொருள். இதைக் கண்ணாடிப் பாத்திரங்களில் சேமித்தால் ஆபத்து. கண்ணாடியை இந்த உப்பு அரித்து விடுமாம். இன்று இதைப் ப்ளாஸ்டிக் பாத்திரங்களில் காற்றுப் படாமல் அடைத்து வைக்கிறார்கள். இந்த உப்பைத்தான் மேற்படி மீனைப் பதப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். மனிதருக்குத்தான் என்னென்னவோ ருசி. காந்தலும் ஒரு ருசி என்று நம் ஊரில் சொல்வதில்லையா? நண்பர்கள் நண்பகல் உணவில், கருவாட்டுக் குழம்பு என்று நாக்கை நொட்டை போட்டபடி சாப்பிட அமர்வதைப் பர்ர்த்திருப்பீர்களே? ல்யூடவிஸ்க் என்பது ஒருவித கருவாடுதான். ஆனால் நம் ஊர்க் கருவாடு போல காய்ந்த மீனாக இல்லாமல், உலர்ந்து மறுபடி கொழ கொழத்த மீனாக இருக்கும் என்று வருணனையில் தெரிகிறது.

http://www.norwaypost.no/food/the-lutefisk-has-arrived-25870.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”சில தொழில்நுட்ப தகவல்கள்”]
கணிணி வல்லுநர்கள் உலகின் அதிவேகக் கணிணிகளை உருவாக்குவதில் மிகுந்த முனைப்புடன் ஈடுபடுகின்றனர். சில மாதங்களுக்கு முன் விநாடிக்கு ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை(petaflop barrier) முடிக்கும் ஆற்றல் வாய்ந்த கணிணி ஒன்றை செய்துகாட்டினர். தற்போது அதை விட பல மடங்கு வேக கணிணிகளை உருவாக்குவதைச் சாத்தியபடுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் ஆராய்ச்சித் தேவைகளைச் சொடக்கு போடும் நேரத்தில் நிறைவேற்றுவது இதனால் சாத்தியமாகும். அதுபோக, தங்கள் தயாரிப்புகளைப் பெரு நிறுவனங்களுக்கென்று மட்டுமல்லாமல், சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் கொண்டு செல்ல எண்ணியிருக்கிறார்கள். வருங்காலங்களில் தெரு மூலை மளிகைக் கடைகளில் சூபர் கம்ப்யூட்டர்கள் விற்பார்கள் என்று நம்பலாம்.

http://www.gizmag.com/fujitsu-primehpc-fx10-supercomputer/20475/

மேலே petaflop barrier குறித்து பேசினோம். அது முடித்து மூச்சு வாங்குவதற்குள் அடுத்த மைல்கல்லை நோக்கி கணிணி விஞ்ஞானிகள் பயணிக்கத் துவங்கிவிட்டனர். இந்த முறை exascale computing எனப்படும் அளவை நோக்கியது தான் இந்தப் பயணம். மேலும் தகவலறிய இதை படிக்கவும் :
http://www.gizmag.com/scientists-lay-foundations-for-exascale-computing/10039/
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஜப்பான் – முதலியமும், குற்றக் கும்பல்களும்”]

ஜப்பானின் முதலியம், பல நாடுகளின் முதலியம் போலவே, குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய உறவுள்ளது. ஒய்யாரக் கொண்டையில் இருக்கும் ஈறும் பேனும்போல, முதலியத்தின் பளபளா அலுவலகங்கள், பல நிறக்கண்ணாடி போர்த்திய நெடுங்கட்டிடங்கள் இவற்றுக்குப் பின்னே தொடர்ந்த சட்ட மீறல்கள், பொய்கள், ஊகச் சூதாட்டங்கள், தவிர பலவித வன்முறைகள் இருக்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னவர்கள் அதன் சக்தியைக் குறித்துச் சொல்லவில்லை, அது தொடர்ந்து மனிதரை எத்திசையில் அனுப்பும் என்று குறித்தார்கள் போலிருக்கிறது. ஏதோ ரஷ்யா, சீனாவின் முதலியம்தான் கம்யூனிஸ்டு என்ற பெயர் தாங்கிய குற்றக் கும்பல்களின் விளையாட்டரங்கு என்று நினைக்கத் தேவையில்லை. உலகெங்கும் இதே கதைதான்.

ஜப்பானின் புகழ்பெற்ற ஒலிம்பஸ் நிறுவனம், பிரமாதமான கண்ணாடி/ குவி ஆடித் தொழில் திறன், நுட்பமான ஒளிப்படக் கருவிகள், அப்பழுக்கற்ற மருத்துவ சோதனைக் கருவிகள் என்று தயாரித்து உலகத் தரம் பெற்ற நிறுவனம் ஆனது 50-களிலிருந்து 80-கள் வரை. அதற்குப் பிறகு உலகில் படமெடுக்கும் தொழில் நுட்பத்தில் எக்கச் சக்க மாறுதல்கள். குறிப்பாக ஃபில்ம் எனப்படும் ப்ளாஸ்டிக்/ செலுலாய்ட் நாடாவில் பதிக்கப்படும் பிம்பங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் நுட்பம் ஓரம் கட்டப்பட்டு டிஜிடல் பதிவு எனப்படும் ஒரு தொழில் நுட்பம் எழுந்தது. 90-களில் துவங்கிய இந்தத் தொழில் நுட்பம் படிப்படியாக வளர்ந்து இன்று ஃபில்ம் டெக்னாலஜியை அனேகமாக இல்லாமல் ஆக்கி விட்டது. ஃபில்ம் உற்பத்தி செய்து பெரும் சக்தியாக வளர்ந்த கோடாக் நிறுவனம் இன்று ஓட்டாண்டியாக தெருவில் நிற்கும் நிலையில் உள்ளது என்று பார்த்திருப்பீர்கள். அதேதான் ஒலிம்பஸ் நிறுவனத்துக்கும் நடந்திருக்கிறது. சரிவில் தொடர்ந்து வீழும் பெரும் பணக்காரர்கள் ஏதேதோ சூதாட்டத்தில் இறங்கித் தம் சரிவை நிறுத்தப் பார்ப்பார்கள், ஆனால் பெரும் பங்கு சூதாட்டங்கள் தோற்பதே நியதி. அதுதான் ஒலிம்பஸின் நிறுவன மேலாளர்களுக்கும் ஆயிற்று. மேலே விவரங்களுக்குப் படியுங்கள் இந்தக் கட்டுரையை.

http://www.nytimes.com/2011/11/18/business/global/japanese-police-investigate-olympus.html?_r=1&hpw=&pagewanted=all
[/stextbox]