பேராலயம்

raymondcarver

ரேமண்ட் கார்வர்

இந்தக் குருடன் இருக்கானே, என் மனைவியுடைய நெடுங்கால நண்பன், இண்ணைக்கு ராத்திரி எங்களோட தங்க வந்துகிட்டிருக்கான். அவன் மனைவி இறந்துட்டா. இறந்து போன அவன் மனைவியுடைய சொந்தக்காரங்கள கனெக்டிகட்ல பார்க்க வந்திருக்கான். அங்கிருந்து என் மனைவிக்கு தொலைபேசினான். உடனடி ஏற்பாடுகள். ரயிலில் வருவான், அஞ்சு மணிநேரப் பயணம், என் மனைவி கூப்பிடுறதுக்கு ரயில் நிலயத்துக்குப் போவா. பத்து வருஷத்துக்கு முன்பு சியாட்டல்ல அவன்கிட்ட இவ வேலை பார்க்கும்போது கடைசியா பார்த்தது. ஆனா ரெண்டுபேரும் தொடர்பிலிருந்து வந்தாங்க. ஒலிநாடாக்களில குரல் பதித்து மாறி மாறி அனுப்பிக்குவாங்க. எனக்கு அவன் வருகை குறித்த ஆர்வமெதுவுமில்ல. அவன் எனக்குத் தெரிந்த எவனுமில்ல. அவன் குருடனாயிருப்பது எனக்கு அசௌகரியமாயிருந்துச்சு. பார்வையில்லாததப் பத்தி நான் திரைப்படங்கள் வழியாத்தான் தெரிஞ்சுகிட்டிருக்கேன். படங்களில பார்வையில்லாதவங்க மெதுவா நடந்தாங்க, சிரிக்கிறதேயில்ல. சில நேர‌ங்களில வழிகாட்டி நாய்கள் அழைத்துச் செல்லும். பார்வையில்லாத ஒரு ஆள் என் வீட்டுக்கு வர்றத‌ நான் பெருசா எதிர்பார்த்துக் காத்திருக்கல.

அந்தக் கோடையில், சியாட்டலில் அவளுக்கு ஒரு வேலை தேவைப்பட்டுது. காசு எதுவுமில்ல. அவள கட்டிக்கப் போறவன் ராணுவ அதிகாரிக்கான பயிற்சியிலிருந்தான். அவங்கிட்டேயும் காசில்ல. ஆனா அவளுக்கு அவன்மேல கொள்ளை காதல், அவனுக்கும் காதல்..அதெல்லாம். செய்தித்தாளில் விளம்பரம் பார்த்தா: ‘பார்வையற்றவருக்கு வாசித்துக்காட்ட ஆள் தேவை’, தொலைபேசி எண்ணுடன். அழைச்சுட்டு நேரில் போனா. உடனடித் தேர்வு. அந்த கோடை முழுதும் அவன்கிட்ட வேலைபார்த்தா. பலதையும் படிச்சுக் காட்டுவா, ஆய்வுக் கட்டுரைகள், செய்திகள், அந்த மாதிரி. அவனுடைய சிறிய ‘வட்டார சோஷியல் செர்வீஸ்’ துறைய‌ செம்மை செய்ய உதவினா. அவங்க நல்ல நண்பர்களானாங்க. என் மனைவியும், அந்தப் பார்வையற்றவனும். எனக்கு எப்படித் தெரியும்? அவ சொன்னா. அவ இன்னொண்ணும் சொன்னா. அலுவலகக் கடைசி நாளில அந்தப் பார்வையற்றவன் அவளுடைய முகத்த தொடுறதுக்கு அனுமதி கேட்டான். அவ சம்மதிச்சா. அவன் தன் விரலால அவளுடைய முகத்தின், மூக்கின் எல்லா பாகங்களையும் தொட்டுபார்த்தான், களுத்தையுங்கூட. அவ மறக்கவேயில்ல. அவ ஒரு கவிதைகூட எழுதியிருக்கா. ஒரு வசருஷத்துக்கு ஒண்ணோ ரெண்டோ எழுதுவா, வழக்கமா ஏதாச்சும் முக்கியமா அவளுக்கு நடந்தா.

நாங்க முதல்ல சேர்ந்து சுத்த ஆரம்பிச்சப்போ அந்த கவிதைய எனக்கு காட்டினா. அவனோட விரல் வருடின விதத்த எழுதியிருந்தா. அப்போ அவளோட உணர்ச்சிகள் எப்படி இருந்துச்சுங்கிறதையும், மூக்கையும் உதட்டையும் தொட்டப்போ அவளோட எண்ண ஓட்டங்களையும் எழுதியிருந்தா. எனக்கு நியாபகமிருக்கு, அந்தக் கவிதைமேல எனக்கு பெரிய மதிப்பொண்ணுமில்ல. கண்டிப்பா நான் அவகிட்ட இதச் சொல்லல. எனக்கு கவிதைகள் புரியலியோ என்னமோ. ஒத்துக்குறேன், எனக்கு வாசிக்கணும்னு தோணுச்சுண்ணா நான் முதல்ல தேடுறது கவிதைகளில்ல.

அப்புறம், அந்தக் காதலன் இருக்கானே, அந்த வருங்கால இராணுவ அதிகாரி, அவன் இவளோட பால்கயகால ஸ்நேகிதன். அதனால ஒண்ணுமில்ல. நான் என்ன சொல்றேண்ணா அந்த கோடைகாலத்தின் கடைசில இவ அந்தப் பார்வையற்றவன் தன் கைகளால முகத்த வருட விட்டுட்டு, விடைபெற்று, அந்த பால்யகால ஸ்நேகிதனும் இன்னும் பலதுமான அவன‌ கல்யாணம் பண்ணிகிட்டா, இப்ப அவன் இராணுவப் பதவியிலிருந்தான். இவ சியாட்டலிலிருந்து மாறிப்போனா. ஆனா அவங்க தொடர்பிலிருந்தாங்க, அவளும் அந்தப் பார்வையற்றவனும். அவதான் ஒரு வருஷத்துக்கப்புறமா முதல்ல தொடர்புகொண்டா. ஒரு ராத்திரி அவனுக்கு அலபாமா விமானப் படை தளத்திலேர்ந்து அழைத்தாள். அவளுக்குப் பேசணும்னு தோணுச்சு. பேசினாங்க. அவன் அவளோட வாழ்கை குறித்துப் பதிந்து ஒலிநாடா அனுப்பச்சொன்னான். அவ செய்தா. ஒலிநாடாவ அனுப்பினா. அதுல அவளுடைய கணவன் பத்தியும் இராணுவ வாழ்க்கை குறித்தும் பதித்திருந்தா. அவளுடைய கண‌வன் மேல அன்பிருக்குது ஆனா அவங்க வாழ்விடம் சரியில்லை, இராணுவத் தடவாளங்களில ஒண்ணா தானும் இருக்கிறது அவளுக்குப் பிடிக்கல. அவ ஒரு கவித எழுதியிருக்கிறதாவும் அந்தப் பார்வையற்றவன் அதில இருக்கிறதாயும் பதிந்திருந்தா. ஒரு விமானப் படை அதிகாரியின் மனைவியா இருப்பது குறித்த கவிதை ஒண்ண எழுதிகிட்டிருக்கிறதாகவும் சொன்னா. அத இன்னும் முடிக்கல. எழுதிகிட்டிருக்கா. அந்தப் பார்வையில்லாதவன் ஒரு ஒலிநாடா பதிந்தான். அத அனுப்பினான். இவ இன்னொண்ணு. இது வருஷக்கணக்கா நடந்தது. என் மனைவியோட ‘அதிகாரி’ ஒவ்வொரு தளமா மாற்றலாகிட்டிருந்தான். மூடி, மெக்கோயர், மெக்கானல் கடைசிய சாக்ரமென்டோக்கு பக்கதிலிருக்கிற ட்ராவிஸ்லேர்ந்து ஒலிநாடாக்கள இவ அனுப்பினா. அங்கதான் ஒரு ராத்திரி அவ தனிமைய உணர ஆரம்பிச்சா. மாற்றலாகும்போதெல்லாம் நண்பர்கள இழந்துகிட்டிருந்தா. இப்படியே இன்னொரு அடிகூட‌ வைக்க முடியாதுண்ணு அவளுக்குத் தோணுச்சு. உள்ளே போய் மருந்துப் பெட்டியிலிருந்த மாத்திரைகளையெல்லாம் வாயில போட்டுட்டு ஒரு புட்டி ஜின்ன குடிச்சு விழுங்கினா. தொட்டியில வென்னீர நிறைச்சுகிட்டு உள்ள இறங்கி மயங்கிக் கிடந்தா.

சாகிறதுக்குப் பதிலா அவளுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. வாந்தி எடுத்தா. அவளோட ‘அதிகாரி’ – அவனுக்கு எதுக்குப் பேரு? அவந்தானே ‘பால்யகால ஸ்நேகிதன்’, வேறென்ன வேணும் அவனுக்கு? – திரடீர்னு எங்கிருந்தோ வந்தான், பார்த்தான், ஆம்புலன்ஸக் கூப்பிட்டான். கொஞ்ச நாட்களுக்கப்புறம் அவ இதையெல்லாம் பதிவு செஞ்சு பார்வையில்லாதவனுக்கு ஒலிநாடா அனுப்பினா.இத்தன வருஷங்கள்ல பல விஷயங்களையும் பதிவு செஞ்சு ஒலிநாடாக்கள சுடச்சுட‌ அனுப்பிடுவா.

வருஷத்துக்கு ஒரு கவிதை எழுதுறதுக்கடுத்து இதுதான் அவளோட முக்கிய பொழுதுபோக்கு. ஒரு பதிவுல அவளுடைய ‘அதிகாரி’கிட்டேர்ந்து பிரிந்து வாழ முடிவெடுத்தத பார்வையில்லாதவங்கிட்ட‌ சொன்னா. இன்னொண்ணுல விவாகரத்து பற்றி. நானும் அவளும் சேர்ந்து சுத்த ஆரம்பிச்சோம். அதையும் அவங்கிட்ட சொன்னா. அவங்கிட்ட எல்லாத்தையும் சொன்னா, அல்லது எனக்கு அப்படித் தோணுது. ஒருமுறை எங்கிட்ட இப்ப கடைசியா வந்த பதிவ கேக்குறியாண்ணு கேட்டா. ஒரு வருஷமிருக்கும். என்னப்பத்தி பேசியிருக்கானுண்ணு சொன்னா. ஒத்துகிட்டேன். ஆளுக்கொரு ட்ரிங்க் எடுத்துகிட்டு ஹாலில் உட்கார்ந்தோம். கேட்கிறதுக்குத் தயாரானோம். ஒலிநாடாவை உள்ளே போட்டு ஒன்றிரண்டு பொத்தான்களை சரி செஞ்சா. ஒலிநாடா கிரீச்சிடது அப்புறமா யாரோ சத்தமான குரலில் பேச ஆரம்பிச்சாங்க. ஒலிஅளவை குறைச்சா. சில நிமிட உபயோகமில்லாத வம்புப் பேச்சுகளுக்கப்புறம் என் பெயரை அந்த அன்னியனின் வாய் உச்சரிக்கக் கேட்டேன், நான் பழகியிராத அந்தப் பார்வையற்ற மனிதனின் வாய். அதுக்கப்புறமா இது:”நீ அவனப்பத்தி சொன்னதையெல்லாம் கேட்டபிறகு எனக்கு என்னத் தோணுதுன்னா…”. அந்த இடத்துல தடை வந்தது. கதவு தட்டப்பட்டது. யாரோ எதுவோ. அவ்வளவுதான் நாங்க அதுக்கப்புறம் பதிவ கேட்கல. ஒருவேள அவ்வளவுதானோ என்னமோ. நான் கேட்கவேண்டியத கேட்டுட்டேன்.

இந்தப் பார்வையில்லாதவந்தான் இப்ப எங்க வீட்டுல தங்குறதுக்கு வந்துகிட்டிருக்கான்
“அவ‌ன‌ பௌலிங்குக்கு கூட்டிட்டுப் போக‌ட்டுமா?” நான் என் ம‌னைவிகிட்ட‌ சொன்னேன். அவ‌ உருளைக்கிழ‌ங்குக‌ள‌ச் சீவி க‌ழுவிகிட்டிருந்தா. க‌த்திய‌ கீழ‌ வ‌ச்சிட்டு திரும்பி பார்த்தா. “உன‌க்கு என்மேல‌ அன்பிருந்தா உன்னால‌ இத‌ச் செய்ய‌ முடியும். இல்லைண்ணா, ப‌ர‌வாயில்ல‌. ஆனா உன‌க்கு ஒரு நண்பன் இருந்தா, எவ‌னாச்சும் ஒருத்தன், அவன் நம்ம வீட்டுக்கு வந்தா நான் அவன நல்லா கவனிச்சுக்குவேன்.” சொல்லிவிட்டு கைய சமையல்கட்டுத் துணியால துடைச்சிகிட்டா.

“என‌க்கு எந்த‌ குருட்டு ந‌ண்ப‌னுமில்ல‌.” நான் சொன்னேன்.

“உன‌க்கு எந்த‌ ந‌ண்ப‌னுமில்ல. அவ்வளவுதான். அப்புறம், கடவுளே… அவன் மனைவி இறந்து கொஞ்ச நாள்தான் ஆச்சு. புரியலியா? அந்த மனுஷனோட மனைவி இறந்துட்டா!”

நான் ப‌தில் சொல்ல‌ல‌. அவ‌ அந்த‌ப் பார்வையற்ற‌வ‌னின் ம‌னைவி ப‌த்தி கொஞ்ச‌ம் சொன்னா. அவ‌ளோட‌ பெய‌ர் பியூலா. பியூலா! அது க‌றுப்பின‌த்துப் பெண்ணின் பெய‌ராச்சே.

“அவ‌ன் ம‌னைவி நீக்ரோவா?” நான் கேட்டேன்.

“ஒன‌க்கு பைத்திய‌மா? ம‌ரை கிரை க‌ழ‌ண்டிடுச்சா?” உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்தாள். அது த‌ரையில் விழுந்து அடுப்பின் கீழே உருண்ட‌து. “என்ன‌ பிர‌ச்ச‌னை உன‌க்கு? குடிச்சிருக்கியா?” என்றாள்.

“சும்மாத்தான் கேட்டேன்.” என்றேன்.

அப்ப‌வே என் தேவைக்கும் அதிக‌மாக‌த் த‌க‌வ‌ல்க‌ளைக் கொட்டினா. ஒரு ட்ரிங்க் எடுதுகிட்டு அடுப்ப‌டி மேசையில் கதைகேட்க உட்கார்ந்தேன். துண்டு துண்டா க‌தைக‌ள் திர‌ண்டு வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌.

அந்தக் கோடையில் என் மனைவி வேலைய விட்டதுக்கப்புறம் பியூலா அவன்கிட்ட வேலைக்குப் போனா. கொஞ்ச‌ நாட்களிலேயே ரெண்டுபேருக்கும் ஆலயத்துல வச்சி கல்யாணம் நடந்தது. சின்ன கல்யாணம்தான்-மொதல்ல யார்தான் இந்தமாதிரி கல்யாணத்துக்குப் போவாங்க?-அவங்க ரெண்டுபேர், அப்புறம் போதகரும் அவருடைய மனைவியும். இருந்தாலும் அது ஆலயத்துல நடந்த கல்யாணமாக்கும். அதுதான் பியூலாவுக்கு பிடிச்சிருந்தது. ஆனா அப்பவே அவளோட சுரப்பியில புற்று இருந்திருக்கணும். எட்டுவருஷம் இணைபிரியாம அவங்க வாழ்ந்ததுக்கப்புறம் – ‘இணைபிரியாம’ என் மனைவியின் வார்த்தை – பியூலாவுடைய உடல்நிலை திடீர்னு மோசமாச்சு. ஒரு சியாட்டல் மருத்துவமனையில, இவன் அவ பக்கத்துல உட்கார்ந்து அவளோட கைய பிடிச்சுகிட்டிருக்க…இறந்துபோனா. கல்யாணமாச்சு, சேர்ந்து வாழ்ந்தாச்சு, வேலை செஞ்ச்சாச்சு, ஒண்ணா படுத்து புணர்ந்தாச்சு, (கண்டிப்பா!) இப்ப இந்த பார்வையில்லாத மனுஷன் அவள அடக்கம் செய்யவேண்டியிருக்கு. இதெல்லாமும் அவ எப்படி இருப்பாங்கிறதையே தெரிஞ்சுக்காம. என்னுடைய மூளைக்கு எட்டல. அந்த ஆளு மேல எனக்கு கொஞ்சம் இரக்கம் வந்துச்சு. அதுக்கப்புறம் அந்தப் பெண்ணுடைய அவலமான வாழ்கைய நினைக்க ஆரம்பிச்சேன். தன்னுடைய அன்புக்குரிய காதலனுடைய கண்கள் வழியாகத் தன்னை பார்க்க முடியாமப் போன ஒரு பெண்ண கற்பனை செஞ்சுபாருங்க. துன்பமோ நல்லதோ, தன்னுடைய‌ முகபாவங்களை தெரிஞ்சுக்க முடியாதவனுடைய மனைவி. அவள் தன்னை அலங்கரிச்சுகிட்டாலும் இல்லைண்ணாலும் அவனுக்கு என்ன வித்தியாசம் தெரியும்? அவள் விரும்பினா ஒரு கண்ணுல பச்சைக் கண் மையும், மூக்குக்குள்ள ஒரு நீண்ட மெல்லிய கம்பியையும், மஞ்சள் கால்சட்டையும் திராட்சைக் கலர் ஷூவைம் போட்டுக்க‌லாம். வித்தியாசமேயில்ல. அப்படியே செத்தும் போகலாம், அவன் கை அவள் கைமேலிருக்க, அவன் குருட்டுக் கண்கள் நீர் வார்க்க – நான் இப்ப கற்பனை செய்து பாக்குறேன் – அவளுடைய கடைசி எண்ணம் இப்படி இருந்திருக்கலாம் ‘நான் எப்படி இருப்பேன் எங்கிறதையே இவன் பாக்கல இப்ப நான் கல்லறை எக்ஸ்பிரஸ்ல வேகமா போய்கிட்டிருகேன்’. ராபெட்டுக்கு ஒரு சிறிய காப்பீட்டுத் தொகையும் இருபது பெசோ மெக்சிக்கன் நாணயத்தின் பாதியும் கிடைச்சது. மீதி பாதி அவளோட பெட்டியில போயிடுச்சு. பரிதாபம்.

நேரம் வந்தப்போ என் மனைவி அவனக் கூப்பிட ரயில் நிலையத்துக்குப் போனா. செய்யுறதுக்கு ஒண்ணுமில்லாம – கண்டிப்பா அதுக்கும் அவனத்தான் குறை சொன்னேன் – ஒரு டிரிங்க் எடுத்துட்டு டி.வி பாத்துகிட்டிருந்தேன். கார் வருகிற சத்தம் கேட்டது. சொஃபாவிலேர்ந்து எழுந்து ஜன்னல் வழியா பாத்தேன்.

என் மனைவி சிரிச்சுகிட்டே கார நிறுத்தினா. காரிலிருந்து இறங்கி கதவை அடைச்சா. புன்னகைத்துக்கொண்டே. அதிசயந்தான். சுத்திப்போய் காரோட மறுபக்கத்துக்குப் போனா, அங்க அந்தப் பார்வையில்லாதவன் ஏற்கனவே இறங்க ஆரம்பிச்சிருந்தான்.இந்தக் குருடன், கற்பனை செஞ்சு பாருங்க, முழுசா தாடி வச்சிருந்தான்! பார்வையில்லாதவனுக்கு தாடி! ரெம்ப அதிகமுங்க. பின் இருக்கையிலேர்ந்து ஒரு பயணப்பெட்டிய எடுத்தான். என் மனைவி அவனோடக் கைய பிடிச்சுகிட்டா, கார் கதவ மூடினா. அவன்கூட பேசிகிட்டே நடந்து வந்து முற்றத்துபடிக்கட்டில் ஏறினா. நான் டி.விய நிறுத்தினேன். ட்ரிங்க முடிச்சேன், மதுக்கோப்பைய அலசினேன், கையத் துடைச்சிகிட்டு கதவுபக்கம் போனேன்.

என் மனைவி அறிமுகப்படுத்தினா,” இவர்தான் ராபர்ட். ராபர்ட் இது என் கணவர். இவரப்பத்தி எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்.” உற்சாகமாயிருந்தா. அவனுடைய கோட் கைநுனிய பிடிச்சிருந்தா.

அவன் பயணப்பெட்டிய கீழ வச்சான், கை மேலே எழுந்தது. நான் கை குடுத்தேன். கைய ரெம்ப அழுத்தினான், கொஞ்ச நேரம் பிடித்துக்கொண்டிருந்தான், அப்புறமா விட்டான்.

“நாம ஏற்கனவே சந்திச்சுகிட்டதப்போல ஒரு எண்ணம்.” உற்சாகமா சொன்னான்.

“எனக்குந்தான்” என்றேன். வேற‌ என்ன சொல்றதுண்ணு தெரியல. அப்புறம் சொன்னேன். “வாங்க. உங்களப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.” நாங்க முற்றத்திலிருந்து ஹாலுக்கு நகர்ந்தோம், ஒரு சிறிய குழுவாக, என் மனைவி அவன் கையப் பிடிச்சு வழிநடத்துனா. “இடப்பக்கமா, ராபர்ட், அப்படித்தான். சேர் இருக்கு, கவனம். இங்க உட்காருங்க‌. இதுதான் சோஃபா. ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் வாங்கினோம்” என்று சொல்லிகிட்டிருந்தா என் மனைவி.

எங்க‌ளோட‌ ப‌ழைய‌ சோஃபா ப‌த்தி ஏதோ சொல்ல நினைத்தேன். சொல்ல‌ல‌. வேறேதோ, சில்ல‌றை விஷ‌ய‌ங்க‌ள் பேச சினைத்தேன், ஹ‌ட்ச‌ன் ஓர‌மா ப‌ய‌ணிக்கும்போது காண‌க்கிடைக்கும் இய‌ற்கை எழில‌ப்ப‌த்தி, எப்ப‌டி இரயிலில் நியூயார்க் போகும்போது வ‌ல‌ப்ப‌க்க‌மும் வ‌ரும்போது இட‌ப்ப‌க்க‌மும் உட்கார‌ணும்னு. இதெல்லாம்.

“ர‌யில் ப‌ய‌ண‌ம் ந‌ல்லாயிருந்துச்சா?” என்றேன்.” எந்த‌ப் ப‌க்கமா உட்கார்ந்திருந்தீங்க‌?”

“இதென்ன‌ கேள்வி, எந்த‌ப் ப‌க்க‌ம்ணு?” என் ம‌னைவி கேட்டா “எந்த‌ப் ப‌க்க‌ம்ணா என்ன‌?”

“சும்மாதான் கேட்டேன்.” என்றேன்

“வ‌ல‌ப்ப‌க்க‌ம்” அவ‌ன் சொன்னான். “ர‌யில்ல‌ ப‌ய‌ணிச்சு நாற்ப‌து வ‌ருஷ‌மிருக்கும். சின்ன‌ப்பைய‌னா இருக்கும்போது போன‌து. குடும்ப‌மா. ரெம்ப‌ நாளாச்சு. அந்த‌ உண‌ர்வே கிட்டத்தட்ட ம‌ற‌ந்து போச்சு. இப்ப‌ என்னோட‌ தாடியெல்லாம் ந‌ரைக்க‌ ஆர‌ம்பிச்சிடுச்சு, அப்படீன்னு எனக்குச் சொன்னாங்க‌‌.” என்று அவ‌ன் என் ம‌னைவிகிட்ட‌ சொன்னான்.

“நீங்க‌ க‌ச்சித‌மா இருக்ககீங்க‌ ராப‌ர்ட்.” என் ம‌னைவி சொன்னா. “ராப‌ர்ட். ராப‌ர்ட்.. உங்க‌ள‌ப் பார்த்த‌துல‌ ரெம்ப ம‌கிழ்ச்சி.”

என்ம‌னைவி ஒருவ‌ழியா அவ‌ன்கிட்டேர்ந்து பார்வைய‌ வில‌க்கி என்ன‌ப் பார்த்தா. அவ‌ளோட‌ பார்வையில‌ ப‌ட்ட‌து அவ‌ளுக்குப் பிடிக்க‌லைண்ணு தோணுச்சு. தோள்களைக் குலுக்கினேன்.

பார்வையில்லாத யாரையும் நான் சந்திச்சதில்ல, அப்படி யாரையும் தனிப்பட்டமுறையில எனக்குத் தெரியாது. இவனுக்கு வயது ஐம்பதுக்கருகிலிருக்கும், கொஞ்சம் குண்டு, மென்வழுக்கை, ஏதோ பெருங்கனத்த தூக்கிகிட்டிருப்பதப்போல கவிழ்ந்த தோழ்கள். பழுப்பு நிற பேன்ட், ஷூக்கள், மிதமான பழுப்பு நிறத்தில் சட்டை, ஒரு டை, ஸ்போர்ட்ஸ் கோட். நச். அப்புறம் அந்த முழு தாடியும். ஆனா அவன்கிட்ட கைத்தடியில்ல, கறுப்புக் கண்ணாடியும் போடல. பார்வையில்லாதவங்க கட்டாயம் கறுப்புக்கண்ணாடி போடணும்னு நான் நெனச்சிருந்தேன். உண்மை என்னண்ணா அவன் கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும். சட்டுன்னு பாத்தா அவன் கண்கள் எல்லார் கண்களையும்போலவே இருக்கும். கூர்ந்து பாத்தீங்கண்ணா வித்தியாசம் தெரியும். கருவிழிகள் ரெம்ப வெள்ளையா இருக்கும், கட்டுப்படுத்த முடியாததப்போலவும், நிறுத்த முடியாததப்போலவும் தன்னிச்சையா சுத்திகிட்டிருப்பதப் போலிருக்கும். அறுவருப்பா! அவனப் பார்த்துகிட்டேயிருந்தப்ப, அவனுடைய இடது கருவிழி அவன் மூக்க நோக்கி நகர்ந்துச்சு, இன்னொண்ணு அப்படியே நின்ன இடத்திலேயே நிக்க முயற்சி செய்துச்சு, முயற்சி மட்டும்தான், ஏண்ணா அதுவும் தெரியாம, முடியாம அலைஞ்சுகிட்டிருந்துச்சு.

நான் சொன்னேன் “உனக்கு ஒரு ட்ரிங்க் எடுத்திட்டு வரவா? என்ன பிடிக்கும்? இங்க‌ எல்லத்துலேயும் கொஞ்சம் இருக்கும். அது எங்களுடைய பொழுதுபோக்கு.”

“தோழா, நான் ஒரு ஸ்காட்ச் ரசிகன்.” கனத்த குரல்ல வேகமாகச் சொன்னான்.”சரி” என்றேன். தோழா!?

“நீ ஸ்காட்ச் ரசிகனாத்தான் இருப்பேண்ணு அப்பவே நெனச்சேன்.” விரல்களால் சோஃபாவுக்குப் பக்கத்திலிருந்த பயணப்பெட்டியைத் தொட்டான். தன் சுற்றிடத்தை அளந்துகொண்டிருந்தான். அதுக்காக அவன குறை சொல்ல முடியாது.

“இதக் கொண்டு மேல வைக்கிறேனே” என் மனைவி கேட்டாள்.

“இல்ல விடு.” அவன் சத்தமா சொன்னான்,”நான் மேலபோகும்போதே இதுவும் போனா போதும்.”

“ஸ்காட்ச்ல கொஞ்சம் தண்ணி விடவா?” நான் கேட்டேன்.

“ரெம்ப கம்மியா.”

“நினைச்சேன்.” நான் சொன்னேன்.

“கொஞ்சூண்டு.” அவன் சொன்னான். “ஐரிஷ் நடிகர், பேரி ஃபிட்ச்ஜெரால்ட் இல்ல? எனக்கு அவனப் பிடிக்கும். நான் தண்ணி குடிக்கும்போது, ஃபிட்ச்ஜெரால்ட் சொல்வான், தண்ணிய குடிப்பேன், விஸ்கிகுடிக்கும்போது.. விஸ்கிய குடிப்பேன்.” என் மனைவி சிரிச்சா. பார்வையற்றவன் மெல்ல தாடிய வருடினான், மெதுவா தூக்கி கீழ விழவிட்டான்.

மூணு பெரிய கிளாஸ்களில ஸ்காட்ச் நிரப்பினேன் சொற்பத் தண்ணீரும் சேர்த்தேன். விளம்பினேன். வசதியா உட்கார்ந்து ராபர்ட்டோட பயணங்களப் பத்தி பேச ஆரம்பிச்சோம். முதலில் மேற்கு எல்லையிலிருந்து ஒரு நீண்ட விமானப் பயணம், கனெக்டிக்க‌ட்டுக்கு. அதப்பத்தி பேசினோம். அடுத்து கனெக்டிக்கெட்டிலிருந்து இங்கே ரயில் பயணம். அதப் பத்தி பேசையில இன்னொரு ரவுண்ட் ட்ரிங்க் போச்சு.

பார்வையில்லாதவங்க புகைபிடிக்கிறதில்லைண்ணு எங்கேயோ படிச்ச நியாபகம். அவங்க வெளிவிடுற புகைய அனவங்களால பார்க்க முடியாததுதான் காரணம்ணு ஒரு யூகமுண்டு. எனக்கு பார்வையில்லாதவங்களப்பத்தி அவ்வளவுதான் தெரியும்ணு தோணுச்சு.ஆனா இந்த ஆள் அவனோட சிகரெட்டோட கடைசி அற்றம் வரைக்கும் இழுத்து அடிச்சான், அப்புறம் டக்குன்ணு இன்னொண்ண எடுத்தான். ஆஷ்ட்ரேய நிறைச்சான். என் மனைவி அதக் கொட்டிட்டு வந்து வச்சா.

சாப்பிட உட்கார்ந்தப்போ ஆளுக்கு இன்னுமொரு ட்ரிங்க். என் மனைவி ராபர்ட்டுடைய தட்டுல மாட்டுக்கறியையும், உருளைக்கிழங்குத் துண்டுகளையும், பீன்ஸையும் குவிச்சு வச்சா. நான் ரெண்டு துண்டு ரொட்டிகளில் வெண்ணெய் தடவினேன். “பிரெட்டும் பட்டரும் இந்தா” என்றேன். கொஞ்சம் குடித்தேன். “செபம் சொல்லலாம்” என்றேன், அவன் தலை தாழ்த்தினான். என் மனைவி என்னை வாய் பிளந்து பாத்தா. “தொலைபேசி அடிக்காமலிருக்கட்டும், சாப்பாடு ஆறிப்போகாமலிருக்கட்டும் என்று செபிப்போமாக.” என்றேன்.

c_a

சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பாட்டு மேசையை காலி செய்தோம். நாளை இருப்பதை மறந்ததைப்போல சாப்பிட்டோம். பேசவேயிலை. சாப்பிட்டோம். அள்ளி விழுங்கினோம். மேசையை மேய்ந்தோம். தீவிரமாகத் தின்னோம். பார்வையில்லாதவன் சட்டுன்னு அவனுடைய உணவுகள் எங்கிருக்குண்ணு தெரிஞ்சுகிட்டான். தட்டுல எதெல்லாம் எங்கேயிருக்குண்ணு அவனுக்குத் தெரிந்திருந்துச்சு. அவன் கத்தியையும் முள்கரண்டியையும் வெச்சு கறிய வெட்டித் திங்கிறத ஆச்சரியமா பாத்துகிட்டிருந்தேன். ரெண்டு துண்டு கறி வெட்டுவான். வாயிலப் போடுவான். அடுத்து உருளைக்கிழங்க ஒரு கட்டு கட்டுவான், அப்புறம் பீன்ஸ், கடைசியா ஒரு பெரிய துண்டு வெண்ணை தடவிய ரொட்டிய பிச்சு தின்பான். தொடர்ந்து ஒரு பெரிய மடக்கு பால். அப்பப்ப தயங்காம விரல்களையும் பயன்படுத்தினான்.

பாதி ஸ்ட்ராபெரி பை உட்பட எல்லாத்தையும் முடிச்சோம். கொஞ்ச நேரம் பேயறைஞ்சதப்போல உட்கார்ந்திருந்தோம். முகத்துல வியர்வை முத்துவிட ஆரம்பிச்சுது. ஒருவழியா சாப்பாட்டு மேசையிலிருந்து எழுந்தோம். திரும்பிகூடப் பார்கல.ஹாலுக்குப் போய் திரும்பவும் அவங்கவங்க இடங்களில அமிழ்ந்தோம். ராபர்ட்டும் என் மனைவியும் சோஃபாவில‌ உட்கார்ந்திருந்தாங்க. நான் பெரிய இருக்கைய எடுத்துக்கிட்டேன். இன்னும் ரெண்டு மூணு ட்ரிங்குகளுக்கிடையில அவங்க கடந்த பத்து வருடங்களில் கடந்து போனதுகளப்பத்தி பேசிக்கிட்டாங்க. நான் பொதுவா கேட்டுகிட்டுத்தானிருந்தேன். அப்பப்போ உள்ளே புகுந்தேன். நான் அறையில இல்லைண்ணு நினச்சிடக்கூடாதில்ல. என் மனைவியும் நான் தனிச்சு உட்கார்ந்திருக்கிறதா நினைப்பா. கடந்த பத்து வருஷமா அவங்களுக்கு – ஆமா ‘அவங்களுக்கு!’ – நடந்த விஷயங்கள பேசிக்கிட்டாங்க. என் மனைவியினுடைய இனிமையான இதழ்களில என் பெயர் வந்து விழும்ணு காத்திருந்து ஏமாந்தேன்: “அப்பத்தான் என்னுடைய அருமையான வீட்டுக்காரர் என்னுடைய வாழ்கையில நுழைஞ்சார்.”- அதப்போல ஏதாச்சும். அப்படி எதுவும் நான் கேட்கல. ராபர்ட்ட பத்தியே பேச்சு. அவன் எல்லாத்துலேயும் கைவச்சிருந்தான், அப்படித்தான் தோணுச்சு, ஒரு ‘சாதாரண’ பார்வையில்லாத எல்லாம் செஞ்ச ஏகாம்பரம். ஆனா இப்ப கொஞ்ச நாளா அவங்க ஒரு ஆம்வே டீலர்ஷிப் எடுத்து வாழ்கைய அப்படி இப்படி ஓட்டியிருக்காங்க. அவன் ஹாம் ரேடியோ வச்சிருக்கானாம். அவனுடைய சக‌ ஹாம் ரேடியோ நண்பர்களுடனான உரையாடல்களப்பத்தி சத்தமா பேசினான். குவாம், ஃபிலிப்பைன்ஸ் அலாஸ்கா, அப்புறம் தகித்திலேர்ந்தும் கூட. நாங்க அங்க போக விரும்பினா அவனுடைய அநேக நண்பகளை அறிமுகப்படுத்த முடியுமாம். அப்பப்ப அவனுடைய பார்வையற்ற முகத்த என் திசைக்கு திருப்பினான், தாடிய வருடிகிட்டே எங்கிட்ட ஏதாச்சும் கேப்பான். எத்தன வருஷமா இந்த வேலையில இருக்க? (மூணு) வேல பிடிச்சிருக்கா? (இல்ல) இதே வேலைய தொடரப் போறேனா? (வேற வழி?). ஒருவழியா அவனுக்குப் பேச எதுவுமில்லைண்னு தோணுச்சு. எழுந்து டி.விய போட்டேன்.

என் மனைவி எரிச்சலா பாத்தா. கொதிநிலைக்கு போய்கிட்டிருந்தா. திரும்பி ராப‌ர்ட்ட பாத்து “ராபட், உங்ககிட்ட டி.வி இருக்குதா?” என்றாள்.

அவ‌ன் சொன்னான். “செல்ல‌ம். எங்கிட்ட‌ ரெண்டு டி.வி இருக்குது. ஒண்ணு க‌ல‌ர், இன்னொண்ணு க‌றுப்பு வெள்ளை, ஒரு அரிய‌ தொல்பொருள். வேடிக்கை என்ன‌ தெரியுமா, நான் எப்ப‌வுமே க‌ல‌ர் டி.விய‌த்தான் போடுற‌து. வேடிக்கைதான், இல்ல‌?”

அதுக்கு என்ன‌ ப‌தில் சொல்ற‌துன்ணு எனக்குத் தெரிய‌ல‌. சொல்லுற‌துக்கு எங்கிட்ட எதுவுமேயில்ல. ‘க‌ருத்தில்லை’. அத‌னால‌ நான் செய்தி பார்க்க‌ ஆர‌ம்பிச்சேன்.

“இது கல‌ர் டி.வி,” பார்வையில்லாத‌வ‌ன் சொன்னான் “எப்ப‌டீண்ணு கேக்காதீங்க‌ என்னால‌ சொல்ல‌ முடியும்.”

“கொஞ்ச‌ நாள் முன்னாடிதான் மாத்தினோம்.” நான் சொன்னேன்.

இன்னொரு மிட‌று குடித்தான். தாடியை எடுத்து முக‌ர்ந்துவிட்டு கீழேவிட்டான். சோஃபாவிலிருந்து முன்னோக்கி குனிந்தான். காஃபி மேசையில் ஆஷ்டிரேயை வைத்தான், சிக‌ரெட்டை பற்ற‌வைத்தான். அப்புற‌ம் சோஃபால‌ கால் மேல கால் போட்டு சாஞ்சி உட்கார்ந்தான்.

என் மனைவி வாய பொத்திகிட்டே கொட்டாவி விட்டா. சடவெடுத்தா. அப்புறம்” நான் மேல‌ போய் கவுன் மாத்திட்டு வந்திரலாம்ணு நினைக்கிறேன். ஏதோ ஒண்ணு மாத்திகிட்டு வந்துட்றேன். ராபர்ட், நீ வசதியா உக்காந்துக்க.” என்றாள்.

“எனக்கு பிரச்சனையில்ல.” அவன் சொன்னான்.

“இந்த வீட்ல நீங்க‌ வசதியா இருக்கணும்.” என்றாள்.

“வசதிதான்.” என்றான்.

+++

என் மனைவி போனதுக்கப்புறம் வானிலைச் செய்திகள் கேட்டோம், அப்புறம் விளையாட்டுச் செய்திகள். அவ போய் ரெம்ப நேரமாகியிருந்துச்சு, திரும்பி வரமாட்டாளோண்ணு நினைச்சேன். தூங்கியிருப்பான்ணு தோணுச்சு. அவ திரும்பி வந்தா நல்லாயிருக்கும்ணு நினைச்சேன். ஒரு பார்வையில்லாத ஆளோடு தனியா இருக்கிறது எனக்குப் பிடிக்கல. இன்னொரு ட்ரிங்க் வேணுமான்னு அவனக் கேட்டேன். சரிண்ணான். என்கூட கொஞ்சம் கஞ்சா அடிக்கிறியா, இப்பத்தான் ஒண்ண சுருட்டினேன் என்றேன். உண்மையில் நான் இன்னும் கஞ்சாவ சுருட்டியிருக்கல, ஆனா திட்டமிருந்துச்சு.

“சரி அடிச்சு பாக்குறேன்.” என்றான்.

“அது. அதுதான் ச‌ர‌க்கு.” என்றேன். இர‌ண்டு ட்ரிங்க்ஸ் எடுத்துவிட்டு வ‌ந்து சோஃபாவில் அம‌ர்ந்தேன். ரெண்டு த‌டித்த‌ க‌ஞ்சா சிகெர‌ட்டுக‌ளை சுருட்டினேன். ஒன்றை ப‌ற்ற‌வைத்து அவ‌னுக்குத் த‌ந்தேன். அவ‌ன் விர‌ல்களிலெடுத்தான், இழுத்தான்.

“எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வுக்குப் புகைய உள்ளேயே வ‌ச்சுக்க‌.” என்றேன். அவ‌னுக்கு க‌ஞ்சா இழுக்கிற‌துப‌த்தி ஒண்ணுமே தெரியாதுண்ணு சொல்ல‌லாம்.

என் ம‌னைவி திரும்பி வ‌ந்தா. பிங் மேலாடை, பிங் செருப்பு.

“இதென்ன‌ ம‌ண‌ம்?” என்றாள்.

“கொஞ்ச‌ம் க‌ஞ்சா அடிக்க‌லாம்ணு…” என்றேன்.

கொல‌வெறிப் பார்வை பார்த்தா. அப்புற‌ம் அவ‌ன‌ப்பார்த்து கேட்டா,”ராப‌ர்ட் நீங்க‌ அடிப்பீங்க‌ண்ணு என‌க்குத் தெரியாதே.”

அவ‌ன் சொன்னான் “தெரிய‌ல‌ செல்ல‌ம்.எல்லா‌த்துக்கும் ஒரு துவ‌க்க‌மிருக்கில்ல‌. ஆனா இன்னும் எதுவும் தோண‌ ஆர‌ம்பிக்க‌ல‌.”

“இது கொஞ்சம் சாதாரணம்தான். வீரியம் குறைவு. அறிவக் கெடுக்காத போதைப்பொருள்.” நான் சொன்னேன் “மனுசனப் பைத்தியமாக்காது.”

“ஆமா ரெம்ப இல்ல தோழா.” சொல்லிட்டு சிரிச்சான்.

என் மனைவி சோஃபாவில் அவனுக்கும் எனக்கும் நடுவில உட்கார்ந்தா. அவளுக்கு கஞ்சா சுருட்ட குடுத்தேன். ஒரு இழு இழுத்திட்டு திரும்பக் கொடுத்தாள். “இது எங்க போயிட்டிருக்குது?” அவ சொன்னா “நான் இத அடிச்சிருக்கக்கூடாது. எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது. சாப்பாடே அதிகம். அவ்வளவு சாப்பிட்டிருக்கக்கூடாது”

“அந்த ஸ்ட்ராபெரி பைதான்.” அந்த பார்வையில்லாதவன் சொன்னான் “அதுதான் வயித்த அடைச்சது.” சொல்லிட்டு பெருசா சிரிச்சான். தலைய ஆட்டிகிட்டான்.

“இன்னும் மீதி இருக்குது” என்றேன்

“ராபர்ட். உனக்கு வேணுமா? என்றாள் என் மனைவி.

“கொஞ்சம் கழிச்சு பாப்போம்.” என்றான்.

டிவி பார்க்க ஆரம்பிச்சோம். என் மனைவி திரும்பவும் கொட்டாவி விட்டா.

“உன்னுடைய படுக்கை தயார். எப்ப தோணுதோ அப்ப போய் தூங்கலாம். பயணமெல்லாம்.. அசதியா இருக்கும். தூங்கப் போகுறதுக்கு முன்னால சொல்லிடு.” என்மனைவி சொன்னா. “ராபர்ட்?” அவன் கையப் பிடிச்சு இழுத்தா.அவன் மீண்டு வந்து “எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குது. டேப் கேட்குறதவிட இது நல்லாயிருக்கில்ல?” என்றான்.

“இந்தா வருது.” என்று சொல்லி அவன் விரல்களுக்கிடயே கஞ்சா சுருட்டை வைத்தேன். எடுத்து இழுத்தான் புகையை உள்ளே பிடித்து வைத்தான், வெளிவிட்டான், எதோ ஒன்பது வசிலிருந்தே கஞ்சா இழுப்பவனைப்போல. “நன்றி தோழா. எனக்கு இவ்வளோ போதும்ணு நினைக்கிறேன். கிர்ர்ர்ருண்ணு இருக்குது.” என்றான். எரியும் சுருட்டை என் மனைவியிடம் தந்தான்.

“அதேதான் எனக்கும். போதும்.” சுருட்டை என்னிடம் தந்தாள். “நான் இங்க உங்களுக்கு நடுவில கண்ண மூடிகிட்டு உட்கார்ந்திருக்கேன். யாரையும் தொந்தரவு செய்யல, ரெண்டுபேர்ல யாரையும். தொந்தரவுண்ணா சொல்லுங்க. இல்லைண்ணா நீங்க தூங்கப் போகிறவரைக்கும் நான் இங்க கண்ண மூடிகிட்டு உட்கார்ந்திருக்கேன்.” என்றாள். “படுக்கை தயார் ராபர்ட், தூக்கம்ணா சொல்லுங்க‌. எங்க அறைக்குப் பக்கத்துலதான், மாடிப்படிக்கு பக்கமா. நாங்க கூட்டிகிட்டுப் போறோம். தூங்கிட்டேன்னா என்னை எழுப்புங்க‌, என்ன? ரெண்டுபேரும்.” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள். தூங்கிவிட்டாள்.

செய்திகள் முடிவடைந்தன. எழுந்து அலைவரிசையை மாற்றினேன். திரும்பி சோஃபாவில் உட்கார்ந்தேன். இவ தூங்காம இருந்தா நல்லாயிருந்திருக்கும். தலை சோஃபாவுக்குப் பின்னால தொங்கிகிட்டிருந்தது, வாய் பிளந்து. திரும்பினப்போ அவளுடைய ஆடை விலகி வளப்பான தொடையை வெளிக்காட்டியது. சட்டென்று அதை சரி செய்யப்போனப்போதான் அந்தப் பார்வையற்றவனைப் பார்த்தேன். என்ன பெரிய விஷயம்? திரும்பியும் விலக்கி விட்டேன்.

“உனக்கு ஸ்ட்ராபெரி பை வேணுமின்னல?” என்றேன்.

“சாப்பிடுறேன்.” என்றான்.

“அசதியா இருக்கா? உன்ன படுக்கைக்கு கூப்பிட்டுப்போகவா? தூங்கத் தயாரா?” என்றேன்.

“இன்னும் இல்ல‌” என்றான்.” உன்கூட‌ உக்காந்திருக்கேன் தோழா. உனக்கு பிரச்சைனையில்லைல? உனக்கு தூக்கம் வரும்போது நானும் தூங்கப்போறேன். நாம பேசிக்கிறதுக்கு வாய்ப்பில்லமப் போச்சு. புரியுதா? நானும் அவளும் ஒரேயடியா பேசிகிட்டேயிருந்துட்டோம்.” தாடிய தூக்கி விட்டான். சிகெரட்டையும் லைட்டரையும் எடுத்துக்கிட்டான்.

“அது பரவாயில்ல.” என்றேன். “நீ வந்ததுல சந்தோஷம்.”

அப்படித்தான் தோணுச்சு. ஒவ்வொரு ராத்திரியும் கஞ்சா அடிச்சிட்டு நல்லா தூக்கம் வ‌ர்ற வரைக்கும் முழிச்சிருப்பேன். நானும் இவளும் ஒரே நேரம் படுக்கப் போறது ரெம்பக் குறைவு. துங்கினா, கனவுகள். சிலநேரம் கனவு வந்து முழிச்சுக்குவேன், இதயம் பயங்கரமா துடிக்கும்.

பழங்காலத்து தேவாலயங்களப்பத்தி ஒரு நிகழ்ச்சி ஒடிகிட்டிருந்துச்சு. வழக்கமா வர்ற நிகழ்ச்சிகளப்போல இல்ல. வேறெதாவது பாக்கலாம்ணு நினச்சேன். ஆனா வேற எதவும் இல்ல. திரும்ப இதையே வச்சேன். அவன்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டேன்.

“நண்பா, அதெல்லாம் பரவாயில்ல.” என்றான் பார்வையில்லாதவன்,”எனக்கு பிரச்சனையில்ல. உனக்கு எது பாக்கணுமோ பாக்கலாம். நான் எப்பவுமே எதாச்சும் புதுசா தெரிஞ்சுக்குவேன். கத்துக்குறது முடிவற்றது. இன்றைக்கு இரவு புதுசா ஏதாச்சும் கத்துக்கிறதுல குறைஞ்சு போகாது. எனக்கு காதிருக்குது.”

+++

கொஞ்ச நேரம் எதுவும் பேசிக்கல. தலைய என்பக்கமா திருப்பிகிட்டு உட்ககார்ந்திருந்தான், அவனது வலதுக் காது டிவி நோக்கி திரும்பியிருந்துச்சு. ஒருமாதிரி இருந்துச்சு. அப்பப்போ அவன் இமைகள் கீழிறங்கும், சட்டுண்ணு திறக்கும். அப்பப்போ தாடிய விரல்களால வருடிக்குவான் டிவில சொல்றது எதையோ யோசிச்சிட்டிருப்பதப்போல.

திரையில அங்கி போட்டிருந்த ஆட்கள் சிலர எலும்புக்கூடு போலவும், பேயப்போலவும் வேஷம் போட்டிருந்த சிலர் கொடுமைபடுத்திக்கொண்டிருந்தாங்க. பேய்போல வேஷம்போட்டிருந்தவங்க முகமூடி, கொம்பு, நீளமான வால் எல்லாம் போட்டிருந்தாங்க. அது ஒரு ஊர்வலம். அது ஸ்பெயின் நாட்டில் வருடத்துக்கு ஒருமுறை நடப்பதாக ஆங்கிலேய அறிவிப்பாளன் சொன்னான். என்ன நடக்கிறதுண்ணு அவனுக்கு சொல்ல முயன்றேன்.

“எலும்புக்கூடா” அவன் சொன்னான், ” எனக்கு எலும்புக்கூடுகளப்பத்தி தெரியும்”, சொல்லிட்டு தலையசைச்சான்.

டிவியில ஒரு பேராலயம் தோன்றியது. அப்புறமா மெதுவா இன்னொன்று தோன்றியது. கடைசியா பாரிஸ்ல இருக்கிற பேராலயத்துக்கு காட்சி மாறியது, அதனுடைய பிம்மாண்டமான வளைந்த தூண்கள், மேகங்களைத் தொடும் ஆலய உச்சிகள். கேமெரா பின்வாங்கி விண்ணளாவிய பேராலயம் மொத்தத்தையும் காண்பித்தது.

அவ்வப்போது அந்த ஆங்கிலேய அறிவிப்பாளன் கேமராவை பேராலயத்தின்மீது உலாவவிட்டுவிட்டு மௌனமாகிவிடுவான். அல்லது கேமரா கிராமப்புறங்களில் சுற்றிவரும், எருமைகளைப் பின்தொடரும் மனிதர்களுடன். முடிந்தவரை காத்திருந்தேன். அப்புறமா ஏதாவது சொல்லணும்னு தோணுச்சு. “பேராலயத்துக்கு வெளிப்புறத்த காமிக்கிறாங்க இப்ப. விகாரங்கள். பூதங்களப்போலத் தோற்றமளிக்கிற சின்ன சிலைகள். இது இத்தாலில இருக்குதுண்ணு நினைக்கிறேன். ஆமா இத்தாலிதான். ஒரு ஆலயத்துக்குள்ள ஓவியங்களெல்லாம் இருக்குது.”

“ஈரச் சுவரோவியங்களா, நண்பா?” ட்ரிங்கை குடித்துக்கொண்டே அவன் கேட்டான்.

என் கோப்பையை தேடினேன். காலியாயிருந்தது. எனக்கு முடிந்ததை நினைவில்வைத்துக்கொண்டு கேட்டேன் “ஈரச் சுவரோவியங்களாண்ணா கேட்ட? நல்ல கேள்வி. எனக்குத் தெரியல”

லிஸ்பனுக்கு வெளியேயுள்ள ஒரு பேராலயத்தை நோக்கி கேமரா திரும்பியது. போர்ச்சுகீசியப் பேராலயங்களுக்கும், பிரான்ஸ், இத்தாலியப் பேராலயங்களுக்கும் வித்தியாசங்கள் பெருசா இல்ல. ஆனா இருந்துச்சு. அநேகமா உள்வடிவமைப்பு. அப்ப எனக்கு ஏதோ நடந்துச்சு. “எனக்கு ஏதோ ஆயிடுச்சு. பேராலயம்ணா என்னண்ணு உனக்கு ஏதாச்சும் தெரியுமா? பார்க்க எப்படி இருக்கும்ணு? புரியுதா? யாராச்சும் பேராலயம்ணு சொன்னா எதப்பத்தி சொல்றாங்கண்ணு ஒரு யூகமிருக்குமா உனக்கு? இப்ப, ஒரு பாப்ட்டிஸ்ட் ஆலயத்துக்கும் பேராலயத்துக்குமான வித்தியாசம் தெரியுமா ?”

வாயிலிருந்து புகையை மிதந்தாடவிட்டான். “கட்டி முடிக்க அம்பதோ நூறோ வருடங்களாகும்ணு தெரியும்” என்றான் “இப்பத்தான் அவன் சொன்னானே? பரம்பர பரம்பரையா சில குடும்பங்கள் பேராலயக் கட்டுமானங்களில ஈடுபட்டிருக்குதுங்க. அதையும் அவன் சொல்லிக் கேட்டேன். தன்னுடைய‌ வாழ்நாள் சாதனைய உருவாக்கத் துவங்குகிற‌ ஆட்கள் அது நிறைவாகிறதப் பாக்க முடியுறதில்ல. அப்படிப்பாத்தா, ந‌ண்பா, அவங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமுமில்ல. இல்ல?” சிரிச்சான். அப்ப அவனோட கண்ணிமைகள் திரும்பவும் கீழிறங்கின. தூங்கிட்டதுபோலிருந்தது. ஒருவேளை போர்ச்சுக்கல்லில் இருக்கிறாப்ல கற்பன செஞ்சுக்கிறானோ? இப்போது டிவியில் வேறொரு கத்தீடரல் தெரிந்தது. இது ஜெர்மனியிலிருந்தது. அந்த ஆங்கிலேயனின் குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. “பேராலயங்கள்” குருடன் சொன்னான். நிமிர்ந்தமர்ந்து தலையை அசைத்துக்கொண்டே சொன்னான்.”உண்மையச் சொல்லணும்ணா தோழா, எனக்கு அவ்வளவுதான் தெரியும். இப்ப சொன்னேன்ல? அவன் சொல்லக் கேட்டது. நீ முடிஞ்சா எனக்கு அத விளக்கலாம். எனக்கு பிடிக்கும். உண்மை என்னண்ணா, எனக்கு ரெம்பத் தெரியாது.”

பேராலய டிவிக் காட்சியை வெறித்துப் பார்த்தேன். இத எப்படி இவனுக்கு விளக்கிச் சொல்லுறது? என் உயிரே போயிடும்ணு வச்சுக்குவோம். ஒரு பைத்தியம் ‘நீ இவனுக்கு விளக்கிச் சொல்லலைண்ணா …’ என்று மிரட்டுறதா இருந்தா?

நான் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்துகிட்டிருக்கும்போதே கிராமப்புறத்தை நோக்கி காட்சி திரும்பியது. வேலைக்காகாது. நான் பார்வையற்றவனை நோக்கித் திரும்பினேன். “அடிப்படையில ரெம்ப உயரமானவை.” ஏதாவது உதாரணங்கள் கிடைக்குமாண்ணு அறைய நோட்டம் விட்டேன். “ரெம்ம்ம்ம்ப‌ உயரமாப் போகும். வானத்த நோக்கி. ரெம்ப பெரிய கட்டிடங்கள், சிலதுங்களுக்கு ஒருமாதிரி வளைந்த‌ தூண்கள் வேணும். தாங்கிப்பிடிக்க. அந்த தாங்கிகளுக்கு பட்ரெசஸ்ணு பேரு. வளைவுப் பாலங்களப்போலண்ணு எனக்குத் தோணும். ஏன்னு தெரியல? ஆனா உனக்கு வளைவுகளாலான பாலம் எப்படியிருக்கும்ணு தெரியுமா தெரியல? சில பேராலயங்களுக்கு முகப்புல‌ பேய், பிசாசு முகங்கள செதுக்கி வச்சிருக்காங்க. சில நேரங்கள்ல பிரபுக்களும் சீமாட்டிகளும். ஏன்ணு என்னக் கேட்காத.” என்றேன்.

தலையசைத்துக் கேட்டுக்கொண்டிருந்தான். உடம்பின் மேல்பகுதி முழுவதும் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருப்பதைப்போலிருந்தது.
“நான் சரியா சொல்லல, இல்ல?” என்றேன்.

தலையாட்டுறத நிறுத்தினான், சோஃபாவின் நுனிக்கு வந்தான். எனக்கு செவிகொடுத்துக்கொண்டே தாடியை வருடினான்.

நான் அவன் மண்டைக்குள் ஏறல. எனக்கு அது தெரிந்தது. இருந்தாலும் நான் தொடர்வதற்கு காத்திருந்தான். என்னை உற்சாகப் படுத்துவதைப்போல தலையசைத்தான். வேறு என்னவெல்லாம் சொல்லலாம்ணு யோசிக்க முயற்சி செஞ்சேன். “பேராலயங்கள் ரெம்ப பெரியவை, மாபெரும் கட்டிடங்கள், கல்லால கட்டப்பட்டிருக்கும். சில நேரம் பளிங்கும். முன்னாலெல்லாம் பேராலயம் கட்டினப்போ மக்கள் கடவுளுக்கு பக்கத்துல இருக்கணும்னு விரும்பினாங்க. பழங்காலங்களில கடவுள் எல்லோருடைய வாழ்கையிலேயும் முக்கியமானவராயிருந்தார். பேராலயக் கட்டிடங்களப் பாத்தாலே இத சொல்லிடலாம். மன்னிச்சிரு, என்னால இவ்வளவுதான் முடியுது. எனக்கு இது ஒத்து வரல.” என்றேன்.

“ப‌ர‌வாயில்ல‌ தோழா.” அவ‌ன் சொன்னான்,” இங்க‌பாரு, நான் ஒண்ணு கேக்க‌லாமா? ஒரு சின்ன‌ கேள்வி. ஆமா இல்லைண்ணு ப‌தில் சொல்ல‌ணும். ஆர்வ‌க்கோளாறு அவ்வ‌ள‌வுதான், த‌ப்பா எடுத்துக்காத‌. நீ என்ன‌ விருந்துக்கு கூப்பிட்டிருக்க‌, இருந்தாலும் கேட்கிறேன் உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? த‌ப்பா கேட்டுட‌ல்லைல?”

நான் த‌லைய‌சைத்தேன். அவனால‌ அத‌ப் பார்க்க‌ முடிய‌ல‌. க‌ண்ண‌டிச்சாலும் த‌லைய‌சைச்சாலும் எல்லாம் பார்வையில்லாதவனுக்கு ஒண்ணுதான். “ந‌ம்பிக்கையில்லைன்ணுதான் நினைக்கிறேன். எதுமேலேயும். சில‌நேர‌ங்க‌ள்ள‌ ரெம்ப‌க் க‌ஷ்ட‌மாயிருக்கும். புரியுதா?” என்றேன்.

“க‌ண்டிப்பா. புரியுது.”

“ச‌ரிதான்.” என்றேன்.

அந்த‌ ஆங்கிலேய‌ அறிவிப்பாள‌ன் இன்னும் விடுற‌தாயில்ல‌. என் ம‌னைவி தூக்க‌த்துலேயே பெருமூச்சொண்ணு விட்டா. நீண்ட‌ மூச்சை உள்ளிழுத்துவிட்டு தூக்க‌த்தை தொட‌ர்ந்தாள்.

“என்ன‌ ம‌ன்னிச்சிரு” நான் சொன்னேன் “என்னால‌ ஒரு பேரால‌ய‌ம் எப்ப‌டி இருக்கும்ணு உன‌க்குச் சொல்ல‌ முடிய‌ல. எங்கிட்ட‌ அந்த‌த் திற‌மையில்ல‌. இதுக்கு மேல‌ என்னால‌ முடியாது.”

அவ‌ன் அசையாம‌ உட்கார்ந்தான், த‌லை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தான். “உண்மை என்னண்ணா” நான் சொன்னேன் “பேரால‌ய‌ங்க‌ள் என‌க்கு எந்த சிறப்பான அர்த்தத்தையும் த‌ர‌ல‌. எதுவும். பேரால‌ய‌ங்க‌ள். பின்னிர‌வு டிவி நிக‌ழ்ச்சிகளில‌ பார்க்க‌க்கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ள்தான் அதெல்லாம். அவ்வ‌ள‌வுதான்.”

அப்ப‌த்தான் அவ‌ன் தொண்டையை க‌னைத்து ச‌ரிசெய்தான். எதையோ எடுத்தான். பாக்கெட்டிலிருந்து ஒரு கைக்குட்டை. “புரியுது ந‌ண்பா. ப‌ர‌வாயில்ல‌. இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்க‌த்தான் செய்யும். க‌வ‌லைப்ப‌டாத‌.” என்றான். “இங்க‌பாரு. என‌க்கொரு உத‌வி செய்வியா? ஒரு வ‌ழி இருக்குது. கெட்டியான‌ தாள் ஏதாச்சும் இருக்குதா? ஒரு பேனாவும். நாம‌ ஒண்ணு செயய‌லாம். ஒரு பேரால‌ய‌த்த‌ சேர்ந்து வ‌ரைஞ்சு பார்க்க‌லாம். ஒரு பேனாவும் கெட்டியான‌ தாளும் எடு. போ, ந‌ண்பா, எடு.”

நானும் மாடிக்குப் போனேன். என் கால்க‌ள் ப‌ல‌மில்லாததப்போல‌ இருந்த‌ன‌. ஓடிட்டு திரும்புறப்போ இருக்கிறதப்போல‌. என் ம‌னைவியின் அறைய‌ சுத்திப்பார்த்தேன். மேசையில‌ சில‌ பால்பாயின்ட் பேனாக்கள் ஒரு பெட்டியிலிருந்த‌ன. அவன் சொன்னமாதிரி கெட்டியான‌ தாள் எங்கேயிருக்கும்ணு யோசிச்சேன்.

கீழே ச‌மைய‌ல‌றையில், காய்ந்த வெங்காயத் தோல்கள் படிந்திருந்த பேப்பர் ஷாப்பிங் பை ஒன்றைப் பார்த்தேன். அதை காலி செய்து த‌ட்டினேன். ஹாலுக்கு வ‌ந்து அவன் கால் கிட்ட உட்கார்ந்தேன். அந்த‌ இட‌த்தை ச‌ரி செய்த்தேன், கெட்டித் தாள் பையை சுருக்கம் நீக்கி ச‌ம‌ன் செய்தேன், காஃபி மேசையில் விரித்தேன்.

அவ‌ன் சோஃபாவிலிருந்து இற‌ங்கி என் பக்கத்துல‌ தரை விரிப்பில‌ உட்கார்ந்தான்.

கைகளை தாளின் மேல் ஓடவிட்டான், ஓரங்களில் மேலேயும் கீழேயுமா. விளிம்புகளிலேயும், ஆமா விளிம்புகளிலும். மூலைகளைத் தொட்டு உண‌ர்ந்தான்.

“சரி. சரி. செய்யலாம்” என்றான்.

என் கையத் தேடி பிடித்தான், பேனா வைத்திருந்த கையை. அவன் கைய வச்சு என்கைய மூடினான்.

“சரி நண்பா, வரையலாம்” என்றான் “வரை. பாரு. நான் உன்னைத் தொடர்ந்துக்கிறேன். நல்லாயிருக்கும். நான் சொல்றேன்ல துவங்கு. உன்னால முடியும். வரை.” அந்தப் பார்வையிலாதவன் சொன்னான்.

நான் வரையத் துவங்கினேன். வீடு போல ஒரு பெட்டி வரைஞ்சேன். என் வீடாகக்கூட இருக்கலாம். அப்புறம் அதுக்கு கூரை போட்டேன். கூரையுடைய‌ ரெண்டு ப‌க்க‌ங்க‌ளிலேயும் உய‌ர்கோபுர‌ங்க‌ள‌ வரைஞ்சேன். பைத்திய‌க்கார‌த்த‌ன‌ம்.

“அருமை” என்றான்.”அற்புத‌ம். நீ ந‌ல்லா வ‌ரையுற. உன் வாழ்கையிலேயே இதுபோல‌ ஒரு அனுப‌வ‌ம் கிடைக்கும்ணு நீ நினைச்சுகூட‌ப் பாக்க‌ல‌, இல்லையா தோழா? பாரு வாழ்கைய புரிஞ்சுக்கவே முடியாது, நாம எல்லாருக்கும் அது தெரியும். தொடர்ந்து வரை. வ‌ரைஞ்சுகிட்டேயிரு”

வ‌ளைவுகள் கொண்ட‌ ச‌ன்ன‌ல்க‌ளை வ‌ரைந்தேன். தொங்கும் தாங்குதூண்க‌ள் வ‌ரைந்தேன். வ‌ன்மையான‌க் க‌த‌வுக‌ளைத் தீட்டினேன். என்னால‌ நிறுத்த‌ முடிய‌ல‌. டிவி ஒளிப‌ர‌ப்பு நிறை‌வுற்றிருந்த‌து. பேனாவ‌க் கீழ‌ போட்டுட்டு விர‌ல்க‌ள‌ மூடித் திற‌ந்தேன். பார்வையிலாத‌வ‌ன் அந்த‌த் தாளை தொட்டுண‌ர்ந்துகொண்டிருந்தான், நான் வ‌ரைஞ்ச‌ இடங்க‌ளெல்லாம், அப்புற‌மா த‌லைய‌சைச்சான்.

“ந‌ல்லா செஞ்சிருக்க‌.” என்றான்.

பேனாவ திரும்ப எடுத்தேன். என் கைகளத் தேடிப் பிடித்தான். வரையுறதத் தொடர்ந்தேன். நான் கலைஞனெல்லாமில்ல. இருந்தாலும் வரைஞ்சுகிட்டேயிருந்தேன்.

என் மனைவி கண்திறந்து எங்களப் பார்த்தா. சோஃபாவில நிமிர்ந்து உட்காந்தா, அவளுடைய ஆடை திறந்து தொங்கியது.”என்ன செஞ்சுட்டிருக்கீங்க? சொல்லுங்க நான் தெரிஞ்சுக்க‌ணும்.”

நான் பதில் சொல்லல.

பார்வையில்லாதவன் சொன்னான் “ஒரு பேராலயத்த வரைஞ்சுகிட்டிருக்கோம். நானும் இவனும் சேர்ந்து.” “அழுத்தமா” என்று என்கிட்ட சொன்னான். “அப்படித்தான், இது நல்லாயிருக்குது. உனக்கு பிடிகிடைச்சுடுச்சு தோழா. என‌க்குத் தெரியுதே. நீ நம்பலைல? ஆனா உன்னால முடியும். இல்லையா? இப்ப பாரு கேஸ் அடுப்பில சமைக்கிற இப்ப. நான் சொல்றது புரியுதா? இன்னுமொரு நிமிஷத்துல நமக்கு சிறப்பானதொண்ணு கிடைக்கப்போகுது. வயசான கை எப்படி இருக்குது? கொஞ்சம் மக்களையும் வரை. மக்களில்லாத பேராலயம் என்ன பேராலயம்?”

என் மனைவி கேட்டா “என்ன நடக்குது? ராபட், என்ன செய்யுறீங்க? என்ன நடக்குது?”

“ஒண்ணுமில்ல” அவன் அவளிடம் சொன்னான். “உன் கண்கள மூடு.” என்கிட்ட‌ சொன்னான்.

செஞ்சேன். அவன் சொன்னதப் போலவே கண்களை மூடினேன்.

“மூடிட்டியா. ஏமாத்தாத.”

“மூடிட்டேன்” என்றேன்.

“அப்படியே வச்சிரு. அப்படியே. இப்ப வரை.”

அப்படியே தொடர்ந்தோம். என் கை தாளின் மீது நகர்ந்துகொண்டிருந்துச்சு, அவன் விரல்கள் என் கைகள் மேலிருந்தன‌. அதப்போல என் வாழ்க்கையில எந்த அனுபவும் இருந்ததில்ல.

அப்போ அவன் சொன்னான் “அவ்வளவுதான்ணு நினைக்கிறேன். நீ முடிச்சிட்ட. இப்ப பாரு. என்ன நினைக்கிற?” என்றான். ஆனா நான் என் கண்களை மூடிகிட்டேயிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே வச்சிருக்கலாம்ணு நினைச்சேன். அப்படித்தான் நான் செய்யணும்ணு தோணுச்சு.

“என்ன? பாக்க‌றியா?”

என் க‌ண்க‌ள் இன்னும் மூடியேயிருந்த‌ன‌. நான் என் வீட்டினுள் இருந்தேன். என‌க்கு அது தெரியும். ஆனா எதுக்குள்ளேயும் நான் இருந்த‌த‌ப்போல‌ என‌க்குத் தோண‌ல‌.

“இது உண்மையிலேயே அற்புத‌ம்” என்றேன்.