சீனா: பலவித இடப்பெயர்வுகள்

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பே விவசாயிகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் சீனப்பெருந்தேசத்தில் திணறியிருக்கிறார்கள். 1940களில் மாவ் ட்ஸ டுங் விவசாயத்தை அடிப்படையாக வைத்தே நாட்டில் பொருளாதாரச் சுதந்திரத்தைக் கொணர முயன்றார். கம்யூனிஸ ஆட்சியில் விவசாயிகள் நிலத்தை விட்டுப் பிரியாமல் இருந்தார்கள். நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையில் மனித போக்குவரத்துகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதிகாரிகள் விவசாயத் தொழிலாளிகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றனர். சென்ற நூற்றாண்டின் இறுதியில் சீனம் உலகமயத்தையும் நகரமயத்தையும் உள்வாங்கத் தொடங்கிய போது அதுவரை அடக்கி வைக்கப்பட்ட விவசாய வர்க்கம் நகர வாய்ப்புக்களைத் தேடி பலநாட்களாகப் பட்டினியாகக் கிடந்த யாசகனைப் போலப் பாய்ந்தனர்.

1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கின்றன. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர்தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

1985 வது வருடம் பேய்ஜிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய 8 பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி வெளியூர்காரர்கள் 662,000. இது மொத்த மக்கள் தொகையில் 12.5%. பேய்ஜிங்கிற்குள்ளும் வெளியேயும் மக்கள் 880,000 தடவை போய் வந்தனர். இது கடந்த 26 ஆண்டுகளில் பன்மடங்கு கூடியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவில் கூடியிருக்கிறது என்றால் பொருந்தும். இன்றைக்கும், மூன்று நாட்கள் நகருக்குள் இருக்க முறையாகப் பதிய வேண்டும், அதற்கு மேல் என்றால் காவல் நிலையத்திற்குச் சென்று தற்காலிக அனுமதிக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்று இருக்கிற விதி, 1986 முதல் நடைமுறைக்கு வந்தது.

பல நகரங்களில் விவசாயிகள் தற்காலிக ஹூகோவ்விற்கு விண்ணப்பிக்க முடியும். அது கிடைத்தால், குறிப்பிட்ட காலத்துக்கு நகரில் வசிக்கலாம் என்பதே சட்டம். இருப்பினும், அதனால் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளோ அல்லது கல்வி, சுகாதார மற்றும் மருத்துவச் சலுகைகள் கிடைப்பதில் நிலவும் விதிமுறைகளில் இருக்கும் வேறுபாடுகளோ மறைவதில்லை.

சீனாவில் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்வோரில் 18-35 வயதினர் தான் அதிகமானோர்; எல்லாவித இடப்பெயர்வுகளிலும். 36-45 மற்றும் 46-55 வயதுப் பிரிவினரிடையே பெரிய வித்தியாசங்களில்லை. தற்காலிகமாக இடம்பெயர்வோரை விட நீண்ட காலம் ஓரிடத்திற்குப்போய் வாழ்வோரில் குடும்பத்துடன் போவோர் அதிகம். தொழில் சார்ந்தும் நிரந்தர மற்றும் தற்காலிக இடப்பெயர்வுகள் நிகழ்கின்றன. தொழிற்சாலைகள், பல்கடை வளாகங்கள், உணவகங்கள் ஆகிய இடங்களில் வேலைப்பளு பருவ மாற்றங்களால் எந்த மாற்றமும் கொள்ளாது. ஆகவே, சேவைத் துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் பணிபுரிவோர் தான் நீண்டகால இடப்பெயர்வினராக இருக்கிறார்கள். ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் கட்டுமானப் பணிகள் குறைவு என்பதால், கட்டுமானத்துறையில் இப்பிரிவினரின் விழுக்காடு மிகக்குறைவு தான். அதுவுமில்லாமல் கொடுக்கப்படும் கெடுவுக்குள் முடிக்கும் தொழில்திறன்கொண்ட சிறுதொழில் ஒப்பந்ததாரர்கள் ஏராளமிருக்கிறார்கள் என்பதுவும் கூட ஒரு காரணமாக இருக்கிறது.
பெண்களை எடுத்துக் கொண்டால் நீண்டகால குடிபெயர்வோர் ஆண்களை விட அதிகம். கலாசார, பண்பாட்டுக் காரணங்களால் இன்னமும் பெண்களைச் சொந்த கிராமத்தை விட்டு வெளியூர்களுக்கு அனுப்பத் தயங்குவோர் மிக அதிகம். கணவன் அல்லது குடும்ப இடப்பெயர்வுகளால் வேறிடம் போகும் பெண்களே அதிகம். தனியே இடம்பெயர அனுமதிக்கப் பட்டால், நீண்டகாலம் ஒரே இடத்தில் வசிக்கும் பெண்கள் தான் அதிகம்.

உள்ளடங்கிய ஊர்களிலோ மனைவியைக் குழந்தைகளுடன் விட்டுவிட்டு வேறிடம் செல்லும் கணவர்கள் தான் அதிகம். மணமுடிக்க மட்டுமே கிராமத்துக்கு வந்து விட்டு விரைந்து பணிக்குத் திரும்பும் கணவர்களைப் பிரிந்து வாடும் யுவதிகளின் நிலை குறித்து சீன இலக்கியங்கள் நெடுக நிறையவே பேசுகின்றன.

அறிய மிக ஆசை எனக்கு
விட்டகலும் முன்னர் என்னை ஏன் நீ
ஒரு முறை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை என்று.
முன் தினம் அப்படி என் உள்ளத்தைக் கொட்டியிருக்கக் கூடாதோ?
கொட்டியிராவிட்டால் ஒருவேளை
இது போலச் செய்திருக்க மாட்டாய்
ஹூம், இப்போது நீ இங்கில்லை.
இனி யார் சரி யார் தவறென்று
தர்க்கிப்பதில் தான் என்ன பயன்?
எனக்குத் தெரிய வேண்டாம்,
தவறியது
நானா
அல்லது
நீயா என்று.
யார் கர்வி?
நீயா
அல்லது நானா என்றும் தான்.
உனக்கு வேண்டியதென்ன என்று நான் புரிந்திருந்தால்
போயிருக்க மாட்டாயோ?
எப்படியிருப்பேனோ இனி
உன் காதலில்லாமல்
உன் அன்பில்லாமல்?
என் உளக்குரல் கேட்கிறதா உனக்கு?
கொஞ்சமிரு, சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறேன்.
வாழ்நாளெல்லாம் என்னைக் குற்றவுணர்வில் உழல விடாதே
நமது பிரிவு எனக்கான விடுதலையாகுமென்றே எண்ணினேன்
இப்போது தான் புரிகிறது, வாழ்நாளெல்லாம் தனியாவேன் என்று
ஹூம், இப்போது நீ இங்கில்லை.
இனி யார் சரி யார் தவறென்று
தர்க்கிப்பதில் என்ன தான் பயன்?
எனக்குத் தெரிய வேண்டாம்,
தவறியது
நானா
அல்லது
நீயா என்று.
யார் கர்வி
நீயா
அல்லது நானா என்றும் தான்.
உனக்கு வேண்டியதென்ன என்று நான் புரிந்திருந்தால்
போயிருக்க மாட்டாயோ
எப்படியிருப்பேனோ இனி
உன் காதலில்லாமல்
உன் அன்பில்லாமல்?
எது எப்படியோ,
பிரிந்து போய்விட்டாய்
நீ என்னை
நிரந்தரமாக
நிறமிழந்த எனது கனவுகளோடு
என்னைத் தன்னந்தனியே விட்டுவிட்டு.

நகர்புறங்களில் பெண்கள் வேலை தேடி தைரியமாக வேறிடங்களுக்குச் செல்வது இன்றைய காலங்களில் மிக வேகமாக அதிகரித்து தான் வருகின்றது. தொழிற்சாலைகளுக்குச் சென்று கடுமையாக உழைக்கும் இவர்கள் பொருளாதாரச் சுதந்திரமும் பலமும் பெற்று வாழ்வில் முன்னேறத் தான் செய்கிறார்கள்.

மோ மெய்ச்சுவான் என்ற இளம் பெண் ஒரு மின்சாதனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களைச் சோதிக்கும் பிரிவில் வேலை செய்தார். மிங்குவாசுன் என்ற அவரது மலைக்கிராமம் அவர் வேலைசெய்த நகரிலிருந்து 29 மணிநேர ரயில் பயணத்தொலைவில் இருக்கிறது. சுமார் ஐம்பது மரவீடுகள் கொண்ட அந்த கிராமம் பசுமையான மலைவெளியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த எல்லோருக்குமே மோ என்ற குலப்பெயர் இருக்கிறது. தென்மேற்கில் அமைதியான அழகிய சொந்த கிராமத்தை விட்டு விட்டு நகருக்குப் போக என்ன காரணம் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, கேள்விக்கு நேரடியான பதிலைச் சொல்லவில்லை. நீண்ட பணிநேரத்தையும் ஒரே மாதிரியான வேலை செய்ய வேண்டிய அலுப்பையும் குறித்து கோர்வையில்லாமல் ஏதேதோ பேசினார். கிராம நினைவுகள் அவருக்கு இருந்ததென்று முகபாவத்தில் அறிய முடிந்தது.

ஓரிரு வருடங்களிலேயே மோ மெய்ச்சுவான் நகர வாழ்க்கைக்கு முழுமையாகப் பழகிவிட்டார். இடையில் ஒரு முறை கிராமத்துக்கு வந்தவர் அறுவடை சமயத்தில் அறுத்த கதிர்ப் பொதிகளை வீட்டுக்குக் கொண்டு வர பெற்றோருக்கும் அண்ணன்களுக்கும் உதவினார். கிராமத்துக்கு விடுப்பில் வருவது பிடித்திருந்தாலும் அங்கேயே தங்குவதென்பது அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நகர வாழ்க்கையையும் வேலையிடத்தில் நடக்கும் விஷயங்களையும் பற்றியறிய அவரிடம் கிராமத்தினருக்குக் கேட்டுத் தீரவில்லை. அங்கிருக்கும் வரை அவரே எல்லோருடைய கவனத்தின் குவிமையம்.

அடையாள அட்டை காலாவதியாகி விட்டதால், அதைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் நகருக்குத் திரும்புவதே அவரது திட்டம். அதில்லாமல் நகருக்குள் நுழைவது கஷ்டம். அப்படியே போனாலும், போலிஸில் பிடிபடுவோமோ என்ற பீதியுடன் வாழ வேண்டியிருக்கும். சில நாட்களிலேயே அவருக்கு கிராமம் அலுக்கிறது. தொலைபேசி வசதியில்லை. நகரிலிருக்கும் நண்பர்களை அழைக்க முடியாது. பாப் இசையோ, வணிக வளாகங்களோ இல்லாத கிராமம் மோ மெய்ச்சுவான்னுக்கு அந்நியமாகத் தெரிகிறது. அந்த கிராமத்தில் மலைகளைத் தாண்டி பேருந்திலோ ரயிலிலோ போனவர்களே மிகக் குறைவு. சுமார் 3000 கிராமத்தினரில் 60 பேர் மட்டும் தான் வெளியேறியிருக்கிறார்கள். ஓரிரு வருடங்களுக்குப் போய் கொஞ்சம் காசு பார்த்துக் கொண்டு திரும்பிவிடும் திட்டத்தோடு நகருக்குப் போய் பிறகு அங்கேயே காலூன்ற நினைப்பவர்கள் இவரைப் போல பலர்.

வெள்ளத் தடுப்பு மற்றும் மின் உற்பத்தி ஆகிய காரணங்களுக்கு சீன ஆறுகளுக்குக் குறுக்கே அணைகள் அமைக்கும் போது ஆற்று நீர் மட்டம் உயர ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஊராக நீருக்குள் மறைந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, மில்லியன் கணக்கான மக்கள் கூட்டமாக வேறிடத்தில் குடிபெயர வேண்டியுள்ளது. சீன அரசாங்கமே வேறோர் இடத்தில் நிரந்தர வசிப்பிட வசதி செய்துகொடுப்பதை பெரும்பாலோர் விரும்புகின்றனர். மூத்த குடிமக்களில் பலர், ஊர் நீரில் மூழ்கி மறைய இன்னும் ஒரே மாதம் இருக்கும் போதும் கிராமத்தை விட்டுக் கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றனர்.

ஊடகங்களுக்கு சுதந்திரம் என்பது சீனத்தில் கிட்டத்தட்ட இல்லை என்பதே நிலை. எல்லா விதமான தோல்விகளையும், அபத்தங்களையும், முட்டாள்தனங்களையும் மூடிமறைக்க முயல்வதே சீன அரசின் தன்மை. அதையும் கடந்து பல்லாண்டுகளாக பல திக்கிலிருந்தும் கிளம்பி வரும் எதிர்ப்புக்குரல்களையும் தாண்டி அணைகள் கட்டும் பணி நடந்தபடியே தான் இருக்கின்றன. பல பத்தாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய இருபதாம் நூற்றாண்டின் 3 வெள்ளப் பேரிடர்கள் இனி நடக்காதென்கிறது அரசு. அதற்கு அணைத்திட்டங்கள் உதவும் என்பதே அரது தரப்பு வாதம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களில் சிலர் சொல்வதோ வேறு மாதிரி, ஆறுகளில் அடியில் கூடித் தேங்கும் படிமங்களினால் நீரடியில் நிலப்பரப்பும் அதனால் நீர்ப்பரப்பும் சதா மாறக் கூடியதென்பதால், வெள்ளம் வேறு ரூபத்தில் இன்னல்களை ஏற்படுத்தத் தான் செய்யும் என்கிறார்கள். ஏற்கனவே ஹென்னன் மாகாணத்தில் கட்டப்பட்ட அணை 1975ல் இது போன்ற தோல்வியைச் சந்தித்ததில் 200,000 உயிர்களைக் குடித்து விட்டது. அதை மறைக்க முயன்று, செய்தி சமீபத்தில் தான் வெளியானது. யாங்சே ஆற்றின் கரைகளில் மட்டுமே நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வசித்து வந்தனர். பெரிய எண்ணிக்கையில் இடம்பெயர்ந்தபடியே இருப்பதால், அவ்வட்டார மக்களின் எண்ணிக்கை குறைந்தபடியே இருக்கிறது. அணைகள் உருவாகியபடியே இருக்கும் காலகட்டத்தில் 1.5-2 மில்லியன் பேர் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எண்ணற்ற கிராமங்கள் ஏற்கனவே நீருக்கடியில். இன்னும் நிறைய கிராமங்களுக்கான கதியும் அதுவாகவே எதிர்பார்க்கப் படுகிறது.

ஏரிகள் மற்றும் ஆற்றோரங்களிலிருக்கும் ஊர்களிலிருந்து மில்லியன் கணக்கில் வலுக்கட்டாயத்தினால் இடம்பெயரும் மக்களைக் குறித்து உலக மனித உரிமை சங்கம் அக்கறை கொண்டு வருகிறது. தொடக்கத்தில் இப்படிப் பிடுங்கிய மக்களை வேறு மாகாணங்களில் நடுவதே திட்டமாக இருந்தது. ஆனால், அவ்வந்த மாகாண அரசுகள் அம்மக்களை வரவேற்கத் தயாராக இல்லாத நிலையில் அத்திட்டம் தோற்றது. இப்போது, ஊர்களைச் சுற்றிலும் இருக்கும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கும் உள்நோக்குடன் எளிய விவசாயக் குடும்பங்களை அங்கே வசிக்க ஏற்பாடு செய்கிறது மத்திய அரசு. இதன் மூலம் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வீடு கொடுக்கப்படுவதில்லை. கேள்வி கேட்டால், நிலம் கொடுத்தோமே, பிழைத்துக் கொள் என்பது போன்ற பதிலாக வருகிறது. ஊரை விட்டு, விளைநிலத்தை விட்டுவிட்டு குடும்பத்துடன் இடம்பெயரும் இம்மக்கள் சந்திக்கும் இன்னல்கள் எண்ணிலடங்காதவை. முறையான குடியிருப்புகளை ஒதுக்கும் போதும் நெரிசலாகவே அமைக்கும் அரசை மக்கள் விமரிசிக்கிறார்கள். வீடுகளோ, விளைநிலங்களோ, தொழிற்சாலை வளாகங்களோ அகற்றப்படும் போது உரிமையாளர்களுக்கு ஈடுசெய்ய முடியாமல் மத்திய அரசு திணறுகிறது. தற்காலிக குடியிருப்புகளில் வைத்திருந்து பிறகு நிரந்தர வாழ்விடமும் பிழைப்பும் ஏற்பாடு செய்வதாகப் பேச்சு. இருப்பினும், மில்லியன் கணக்கானோர் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பல இடங்களில் இருக்கும் தற்காலிகக் குடியிருப்புகளிலேயே வருடக்கணக்கில் அகதிகள் போல வாழ நேர்கிறது. குடிபெயர்ந்தோரில் பலர், “வேற இடத்துக்குப் போறோம்னு ஒத்துகிட்டது உண்மை தான். ஆனா, நல்ல வசிப்பிடமாத் தரேன்னு சொன்னதால தான் ஒத்துகிட்டோம். இப்ப இப்டி பொழப்பும் போச்சு, வீடும் போச்சு, கிராமமே போச்சு,” என்று அங்கலாய்க்கிறார்கள்.

சரியான திட்டமிடல் இல்லாததும் நிதிகளை முறையற்று கையாள்வுதும் முக்கிய காரணங்களாகச் சொல்லப் படுகின்றன. முன்பெல்லாமும் இது போன்ற குடிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறன என்றாலும் தற்காலத்தில் நடப்பதைப் போன்று பெரிய அளவில் நடக்கவில்லை. இந்த அளவில் பெருந்தோல்விலும் முடிந்ததில்லை. “அரசு ’அணை’யைத் தனியாகப் பார்க்கிறது. அணையின் வெற்றி, குடிபெயர்ந்து வேறிடத்தில் அமைக்கப்படும் சமூகத்தின் வெற்றியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இரண்டில் ஒன்று தோல்வியென்றாலும் அணைத் திட்டம் தோல்வி தான்,” என்பது போன்ற விமரிசனங்கள் தொடர்ந்து வந்தபடியே தான் இருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு தற்காலம் போல கடும் விமரிசனங்களையும் கொண்டு வரவில்லை. முன்பு, ஷுயிகோவ் மின் உற்பத்தி வளாகத்திலிருந்து இடம்பெயர்க்கப் பட்ட 67,000 பேர் வேறிடத்தில் வேறு தொழிலில் சராசரி 10% பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குடிபெயர்வுச் சலுகைகள் தவிர, வங்கிக் கடன்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், சமீப வருடங்களில் அதுபோன்ற எந்த நன்மையும் குடிபெயர்வோருக்கு நடக்கவில்லை. எடுத்துக் காட்டாக, ஸியாலாங்தி அணைக்கு அருகில் 400,000 பேரை வேறிடம் குடியமர்த்திய போதும் இதே நடைமுறைகளை முயன்ற பிறகும் பலன் இல்லை.

நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களினாலும் இடப்பெயர்வுகள் நிறையவே சீனமெங்கிலும் ஏற்படுகின்றன. அணை நிர்மாணிக்கும் பணிகள் ஏற்படுத்தியதைக் காட்டிலும் மிகப்பெரிய இடப்பெயர்வு சென்ற 2010 ஜூலையில் அந்நாட்டில் நடந்துள்ளது. ஷான்ஸி மாகாணத்தில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் உயிரிழந்ததுடன் எண்ணற்றோர் வேறிடங்களுக்குப் போகும் படியானது. ஆக அதிகமாக பாதிக்கப் பட்டது ச்சியான் கிராமம். கடந்த 200 ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய இந்நிலச்சரிவினால் இந்த வட்டாரத்தில் எண்ணற்ற விளைநிலங்கள் மற்றும் வசிப்பிடங்கள் மறைந்ததால் படிப்படியாக 2.79 மில்லியன் மக்கள் மாகாணத்தை விட்டும் வட்டாரத்தை விட்டும் இடம்பெயர்ந்தனர். இதில், பெரிய பெரிய முற்றங்களும் மாடங்களும் கொண்ட மாளிகைகளில் வாழ்ந்த ச்சிங் முடியாட்சி வழித்தோன்றல்களாகக் கருதப்படும் குடும்பங்களும் அடங்குவர்.

குடிபெயரும் இம்மக்களுக்காக பத்தாண்டு திட்டத்தில் வீடமைப்புப் பேட்டைகள் உருவாகி வருகின்றன. வீட்டையும் உடமைகளையும் உற்றாரையும் இழந்த சிலர் புதுக் குடியிருப்பு தயாராகவென்றே காத்திருக்கின்றனர். எப்படியிருந்தாலும் அந்த வீடொன்றும் இலவசமில்லை. ஒவ்வொரு குடும்பமும் 120,000 யுவான்னிலிருந்து 140,000 யுவான் வரை இரண்டு கட்டமாகக் கட்ட வேண்டும். சிலர் இதைக் கட்ட மிகத் திணறுகிறார்கள். மற்றவர்கள் அனைத்து சேமிப்புகளையும் திரிட்டிய பிறகும் திண்டாடுகிறார்கள். “உங்க வாழ்க்கைத் தரம் உயரும். அதிபர் சாதாரண எளிய குடிமகனையும் நடுத்தர வசதி படைத்தவரா ஆக்க நெனைக்கிறார்ன்றது ரொம்ப நல்ல விஷயம் தானே?” என்று கேட்டதற்கு, “ம், அதெல்லாம் சரி. ஆனா, எங்களுக்கு அப்டி ஆக முடியாது. காசு வேண்டியதிருக்கே, அப்ப நாங்க என்ன செய்ய?” என்கிறார் ஒருவர். “புது வீட்டுக்கு கடன ஒடன வாங்கி தான் கட்டினோம். வருஷத்துக்கு ஒரு முறை சந்திரப்புத்தாண்டு சமயத்துல வந்து பத்து நாள் தங்கப் போறோம். முடிஞ்சதும் நகரத்துக்குப் போயிருவோம். வாங்கின கடன அடைக்க எங்க ரெண்டு பேருக்கும் 55 வயசு வரை ஆயிடும்,” என்கிறார் இன்னொருவர். தற்காலிக வசிப்பிடங்கள் மலைப்பாங்காக இருப்பதால் விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. இவ்விடங்களுக்கு சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லை. இதுபோன்ற குடிமாற்றங்களை இளைஞர்கள் ஆதரவாகவும் முதியோர் எதிர்ப்புடனும் அணுகுகின்றனர்.

அயல்நாட்டுக்குப் போவோரின் இடப்பெயர்வுகளை ஒத்திருக்கின்றன சீனாவின் உள்நாட்டு இடப்பெயர்வுகள். பெரியவர்களை விட இளையர்கள் அதிகமாக இடம்பெயர்வது, பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே இடம்பெயர்வது, இடம்பெயர்வோரில் பெரும்பகுதியினர் விவசாயமல்லாத கட்டட மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்வது ஆகிய மூன்று முக்கிய இயல்புகள் உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இருக்கும் நிலவரம் தான் இது.
நிறைய விவசாயிகள் இடம்பெயர்ந்து போன பிறகும் கிராமங்கள் விவசாயிகளாலே நிறைந்திருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கூட்டுறவு அங்காடிகள் வெளியூர்காரர்களை ஈர்க்கின்றன. உள்ளடங்கிய வட்டாரங்களில் இருக்கும் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் மொத்த மக்கள் தொகை நகரங்களின் கூட்டு மக்கள் தொகையை விட மிக அதிகம். கிராமத்து விவசாயத்தொழிலாளிகளின் விலை குறைந்த உடலுழைப்பு தான் நகரங்களுக்கு வேண்டியிருக்கிறது. மற்றபடி, சிறுநகரங்களுக்குக் கிடைக்கும் கவனத்தில் சிறு பங்கு கூட கிராமங்களுக்குக் கிடைப்பதில்லை என்பதே நிலமை. நகருக்குள் வந்து சில மாதங்களில் வெளியேறும் விவசாயத் தொழிலாளிகள் சதா அலைந்து திரிகிறார்கள். ஒருமுறை ஒரு நகருக்குப் போனால், அடுத்த முறை அதே நகருக்குப் போவார்கள் என்றே சொல்ல முடியாது. சிற்றூர் மற்றும் கிராமங்களுக்குப் போகும் ஆட்கள் 20.24% பேர் தான். நாட்டின் மொத்த இடம்பெயர் மக்கள் தொகையில் 80% பெரும் மாற்றங்களையொட்டி நடக்கும் விவசாயத் தொழிலாளர்களுடையவை. இவை பெரும்பாலும் தற்காலிக இடப்பெயர்வுகள். 50%க்கும் மேலானோர் நீண்டகாலம் தங்குகிறவர்கள். நகருக்குள் வரும் 65.72% பேர் நீண்டகாலம் தங்குகிறார்கள். நகரங்களுக்குள் வருவோரில் 87% பேரும் சிற்றூர்களுக்கு வருவோரில் 48.7% பேரும் நிரந்தரமாகத் தங்குகிறார்கள். ஊருக்குள்ளிருந்து வெளியே போவோரையும் ஊருக்குள் வருவோரையும் உற்று நோக்கினால் நிரந்தர நீண்டகால இடம்பெயர்வோர் மாவட்டத்துக்குள் 24.25% பேர், மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு 22.39% பேர், மாகாணம் விட்டு மாகாணம் 44.78% பேர். என்றுமே சீனாவில் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருப்பதில்லை என்பதை இங்கே நாம் மறந்துவிடக் கூடாது.

தற்காலிகமாகத் தங்கிச் செல்வோரால் தான் சமூகப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன என்று சமூகவியலாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதற்குத் தீர்வு சிந்திப்பது கடினம். திட்டமிடுவதைச் செயல்படுத்துவதும் மிகவும் சவாலாக இருக்கிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், நகரமயமாக்கலில் பெரும்பங்கு மடைதிறந்த வெள்ளமாய் கிராமங்களிலிருந்து வழிந்தோடும் விவசாயத் தொழிலாளர்களுடையது தான். அறிஞர்கள் பரிந்துரைப்பது தற்காலிக வேலையனுமதி மற்றும் வசிப்புரிமை கொடுப்பதை படிப்படியாகக் குறைத்து கட்டுக்குள் கொண்டு வருவது. கூடவே, நிரந்த வேலையனுமதிகளைக் கூட்டி ஹூகோவ் விதிமுறைகளை மேம்படுத்துவது.

நகரமயமாகும் பயணத்தில் அரசு விவசாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறதோ என்று தோன்றலாம். ஆனால், உண்மை அது இல்லை. பருவமாற்றங்களையும் விவசாயத்தையும் ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்ட எளியோர் நிரந்தரமாக இடம்பெயரவும் வழியில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது. இதில் வேறொரு உளவியல் கோணமும் இருக்கிறது. நெடுந்தொலைவு பயணம் செய்து இடம்பெயர்வோரில் சூதாடும் பழக்கமுள்ளவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அவ்வந்த நகரில் உழைத்துச் சேர்ந்த பணத்துடன் கிராமத்துக்குத் திரும்பாமல் கையிலிருக்கும் பணத்தைப் பன்மடங்கு பெருக்கும் ஆர்வத்தில் சூதாடுகிறார்கள். இதனால், குண்டர் கும்பல்களும் குற்றச் செயல்கள் கூடுகின்றன.

மக்கள் தமது நலனைக் குறித்துத் தாமே பேசிப் பகிர்ந்த, 124 உலகநாடுகளில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் சீனா 92ஆமிடத்தில் வந்தது. அசுரவேக நகரமயமாதலில் சீனர்கள் பணத்தின் பின்னால் ஓடும் ரோகம் பிடித்தலையும் வேளையில், சீனாவும் சில மாதங்களுக்கு முன்னால் தன் தேசத்துக்குள் மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கிறதா, எந்தளவிற்கு இருக்கிறது என்றெல்லாம் அவர்களிடமே கேட்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. நகரமக்களில் 94% பேர், ‘ஹூஹும், மகிழ்ச்சியே இல்லையே,’ என்றோ ‘வாழ்க்கை ஏதோ ஓடுது,’ என்றோ அலுத்துக் கொண்டனர். இந்த ’மகிழ்ச்சி’ அளவீட்டில், ஷாங்தோங்கின் லின்யி மற்றும் ஜியாங்ஸுவின் யாங்ஜோங் இரண்டும் இரண்டாமிடத்திற்கு வந்தன. பேய்ஜிங் ஒன்பதாமிடத்தில் இருந்தது. 290 நகரங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் வடக்கு ஹீபேய் மாகாணத்தில் இருக்கும் ஷிஜியாஜோங் நகரம் தான் முதலிடம் பிடித்தது. மத்திய அரசு உயரதிகாரிகள் இதை மிகுந்த ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் எதிர்கொண்டனர். மற்ற நகரங்களைக் காட்டிலும் முன்னேற்றமும் வளமும் மிகக் குறைந்த இந்நகரம் எப்படி ‘மகிழ்ச்சி’யில் முதலிடம் பிடித்ததென்று அவர்கள் குழம்பினர். மக்களின் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில் சமீபத்திய மத்திய அரசின் கவனம் குவிந்திருக்கும் இவ்வேளையில் இந்நகரம் இப்படியான முக்கியத்துவம் பெற்றதைப் பற்றி மற்ற நகர அதிகாரிகள் பொறாமையுடன் பார்த்தனர். இந்நகரையே மாதிரி நகரமாகக் கொண்டு அடுத்தகட்ட நகரமயமாக்கலை மேற்கொள்ள சீனா திட்டமிடுகிறது. 1980களில் பேய்ஜிங், ஷாங்காய் நகரங்களை இதே போலத் தான் மாதிரி நகரங்கள் என்றது இதே அரசு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஷிஜியாஜோங்கிலிருந்து பேய்ஜிங் சென்று பணியாற்றும் ஒருவர், “அப்டியொண்ணும் சொர்கமில்ல எங்க ஊரு. பேய்ஜிங்ல இருக்கற பிரச்சனைகள ஒப்பு நோக்க அங்க கொஞ்சம் குறைவா வேணும்னா இருக்கலாம். அதனால், அங்க மக்கள் அழுத்தம் குறைவா இருப்பாங்கன்னு சொல்லலாம். மத்தபடி குறைகள் அங்கும் நிறையவுண்டு,” என்கிறார். பணியிடப் போட்டிகள், பணத்தின் பின்னாலான அயராத ஓட்டம், சொத்துகளின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் கட்டற்ற விலையுயர்வு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல், சமூக குற்றங்கள் என்று அல்லாடும் நகர மக்களோ, “சீனாவின் மகிழ்ச்சி பொங்கும் நகரமாக இருப்பது அவ்வந்த அதிகாரிகளுக்கு வேண்டுமானால் அனுகூலமாகலாம். அதற்காகவே கணிப்பின் முடிவுகளைத் தத்தமது மனம் போல மாற்றியும் காட்டுவார்கள்,” என்கிறனர். அரசோ மக்களின் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்ட வாழ்க்கைக்குத் தேவையான ஐந்தாண்டுத் திட்டம் போட்டுள்ளதாகக் கூறுகிறது. அதை நடைமுறைப் படுத்துவதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% குறையும் என்றாலும் கூட மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாகவும் சொல்லிக் கொள்கிறது.
கல்வியறிவு பெற்ற மக்களில் சிலர், “மக்களோட மகிழ்ச்சியில அரசு கவனமும் அக்கறையும் கொள்கிறதென்பது மிகவும் நல்ல விஷயம் தான். ஆனா, நடைமுறையில் முன்னேற்றம் ஏற்படுத்துவது சாத்தியமில்லை. இது போன்ற கணக்கெடுப்புகளாலும் ஒரு பிரயோஜனமுமில்ல. மத்தவங்களப் பார்த்து ஒப்பிட்டே மன மகிழ்ச்சியக் குலைச்சிப்போமே சீனர்களாகிய நாங்க. அதோட, முன்ன மாதிரியா? இப்ப அதிகாரமும் பணமும் தானே எல்லாம். சமூகமும் முன்னேறாது, மக்களோட மகிழ்ச்சியும் கூடாது.”

அவரவர் கிராமங்களை விட்டுவிட்டு வெளியூருக்குப் போவதைப் பொதுவாக விவசாயிகள் விரும்புவதில்லை. பொருளீட்டும் இடங்களாகவே நகரங்களைக் காண்கிறார்கள். நீண்ட நிரந்தர வேலை இருக்குமென்றால், சிலருக்கு நிரந்தரமாக இடம்பெயரவும் போன இடத்தில் காலூன்றவும் தோன்றலாம். காலப்போக்கில் குடும்பத்தையும் கூட்டிக் கோண்டு போக நினைக்கலாம். ஆனால், இவர்கள் செய்யும் தொழில்கள் எல்லாமே உடலுழைப்பை வேண்டுபவை. பெரும்பாலும் சிறு மற்றும் பெரும் முதலாளிகளின் கீழ் அவர்களுக்குக் கிடைக்கும் வேலையைப் பொருத்தே நாள், வார, மாத ஊதியம் கிடைக்கும். வேலை முடிந்ததுமே, பெரும்பாலும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்று அறுவடை வேலையில் ஈடுபட்டு, அதெல்லாம் முடிந்ததும் மீண்டும் கட்டட வேலை அல்லது தொழிற்சாலை வேலை கிடைக்குமா என்று நகருக்கு வந்து தேடுகிறார்கள். காடாறு மாதமும் நாடாறு மாதமும் !

தவிர்க்க முடியாத கட்டாய இடப்பெயர்வுகள் பலவும் நிகழ்கின்றன. இவை கலகங்கள், நகரமயம் மற்றும் இயற்கைப் பேரிடர் ஆகிய மூன்று பொதுப்பிரிவுகளில் அடங்கும். உள்நாட்டுப் போர் அல்லது கலகங்களினால் உயிர் உடமைகளைப் பாதுகாக்க அவரவர் ஊர்களை விட்டு தனியாகவும் குடும்பத்தோடும் இடம்பெயர்வோர் இருக்கிறார்கள். தேசியம், சமயம், இனம், சமூகக் குழு அல்லது அரசியல் கருத்தாக்கம் ஆகிய காரணங்களால் ஏற்படும் கொந்தளிப்புகளின் போது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அல்லது உதவ முடியாத நிலையில் தான் இவை நிகழ்வுதுண்டு. பெரும்பாலும் இது போன்ற தருணங்களில் தஞ்சம் தேடி நாட்டின் எல்லைகளை நோக்கி பொதுமக்கள் ஓடுவது வழக்கம். அயலில் தஞ்சம் கிடைக்காத போது சொந்த நாட்டுக்குள்ளேயே வேறொரு ஊரில் வாழ ஆரம்பிப்பவர்களே அதிகம். பிரச்சனைகளில் ஈடுபடுவோரில் சிலர் உயிருக்கு பயந்து இது போல இடம்பெயரும் போது வேறொரு பெயரில் வேறொரு அடையாளத்துடன் உள்ளடங்கிய ஊர்களிலும் கிராமங்களிலும் வசிக்க நேர்கிறது. கலாசாரப் புரட்சியின் போதும் அதற்கு முன்பும் பின்பும், இன்று வரையில் இது போன்ற பல்லாயிரக்கணக்கான ஆட்கள் சீனமெங்கும் வசிக்கிறார்கள்.

சீனாவில் 2010ல் எடுக்கபட்ட ஆகச் சமீப மக்கள் கணக்கெடுப்பின் படி மக்கள் பெருக்க வேகம் 2000 நடந்த முந்தைய கணக்கெடுப்பை ஒப்பு நோக்க பாதியாகக் குறைந்திருக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், சுமார் 665 மில்லியன் பேர் நகரங்களில் தான் வசிக்கின்றனர். சரியாகச் சொல்வதானால், இது 36.1%லிருந்து 49.7%க்கு எகிறியுள்ளது. முன்பைவிட இரட்டிப்புக்கும் அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆண்- பெண் விகித எண்ணிக்கையில் முன்பைவிடவும் இன்னும் குறைந்த பெண்களின் எண்ணிக்கை தான் இப்போதும் இருக்கிறது. சதா மிதந்து திரியும் சீனாவின் இடம்பெயர்வோர் எண்ணிக்கையும் 83% கூடியுள்ளது. அதாவது, 221.4 மில்லியன் பேர். அதேபோல முதியோர் 10.4%லிருந்து 13.3%க்கு கூடியுள்ளது. முக்கியமாக சீன அரசிடம் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முன்னேற்றம் நிகழ்ந்திருக்கிறது. இம்முறை மக்கள் கணக்கெடுப்பு தனிநபரின் ’ஹூகோவ்’வின் அடிப்படையில் நடக்காமல் வாழ்விடம், பணியிடத்தின் அடிப்படையில் நடந்திருக்கிறது. இது வெளியாள் என்று பார்க்கும் நகரவாசிகளின் போக்குகள் மாறியமையும் சமத்துவ எதிர்காலத்தின் முதலடி என்று சமூகம் பார்க்கிறது.

(முற்றும்)

இணையத்தில் மேலும் தகவல்கள் :

http://current.com/shows/vanguard/76385082_dam-of-progress-doom.htm

http://vimeo.com/4273757