நிழல்குத்தில் நுழைந்த பனைமரம்

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தன் திரையனுபவங்களையும், பிற திரைக்கலைஞர்களையும் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘சினிமா அனுபவங்கள்’ என்ற புத்தகமாக வெளியாகியிருக்கிறது. மலையாளத்திலிருந்து இதைத் தமிழில் நேர்த்தியாக மொழிபெயர்த்திருப்பவர் கவிஞர் சுகுமாரன். 2006-ஆம் ஆண்டு ‘கனவுப்பட்டறை’ மூலம் வெளியிடப்பட்ட இப்புத்தகம், 2010-இல் காலச்சுவடு பதிப்பகத்தால் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. சினிமா ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்கவேண்டிய அருமையான புத்தகம் இது. இந்த இதழில் எஸ்.சுரேஷ் ‘நிழல்குத்து’ திரைப்படம் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைக்கு இணை கட்டுரையாக ‘சினிமா அனுபவம்’ புத்தகத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமாவில் சூழலொலி குறித்து எழுதியிருக்கும் ‘பனைமரம் சொன்னது’ என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன.

நன்றி: காலச்சுவடு

adoor-gopalakrishnan1தொலைவிலிருந்து ஆர்ப்பரித்து வருகிறது பெரும் மழை. வீசியடித்த காற்றில் மர உச்சிகள் நிலைகுலைந்து ஆடின. செடிகளும் கொடிகளும் நிபந்தனையற்றுக் குனிந்து காற்றுக்கு வழிவிட்டு நின்று நடுங்கின. பறவையினங்கள் அங்கலாய்த்துப் பறந்து மரப்பொந்துகளில் அடைக்கலம் தேடின.

கீழே வயலில் எங்கிருந்தோ ‘இப்போ மழை வந்துவிடும். ஓடி வா’ என்று முளையில் கட்டிய பசு பதட்டமாகக் கத்தியது. வேலிகளுக்கு மேலே துள்ளிப் பறந்த சருகு, வயலும் பாதையும் தாண்டி காசிக்குப் போகும் திசையில் அலைந்தது. எங்கோ தூரத்திலிருந்து சிறுவர்கள் காற்றின் குரலுக்கு எதிரொலியாகக் கூட்டமாகக் கூவினார்க்ள் ‘ஓஓஓஓ….ய்ய்ய்’. பெரும் மழைத்துளிகள் சரளைக்கற்களை வீசியது போல கூரைமேல் விழுந்தடைந்து கண்ட திசையெல்லாம் தெறித்து உருண்டன. ஓடுகளின் பரப்பில் ஒன்று சேர்ந்து பிறகு அவசரமாக மணல் பரப்பிய முற்றத்தில் துள்ளி விழுந்தன. மழைப்பொழிவுக்குத் தாளம் முறுக்கேறி ‘சட – பட – சட – பட’ மாறி சட – பட – பட – படவும், சட- சட – சட – சடவுமானது.

திமிர்த்துப் பெயத மழைத்துளிகள் முறிந்து தூறலாக மாறத் தயாரானதும், அதுவரைக்கும் பொறுமையில்லாமல் காத்திருந்த பறவைகள் மெதுவாக எதிர்பார்ப்புடன் தனித்தனியாக ஒவ்வொருவிதமாகக் கீச்சிடத் தொடங்கியதும் ஒன்றாகவே இருந்தது. மர உச்சியில் ஒளிந்திருந்த அணில் ‘கிக் – கிக்’ என்று அவசரப்பட்டு வெளியே எட்டிப்பார்த்தது. இனிமையான பறவைக் குரல்களுக்கு அபகீர்த்தி போல எல்லாவற்றுக்கும் மேலே காகங்களின் கரகர சத்தம் எழுந்தது. பின்னர் ‘நிறைய வேலை இருக்கு, போகணும்’ என்பது போல அவை நான்கு திசைகளிலும் அவசரமாகப் பறந்தன.

யோசித்துப் பார்த்தால் ஏராளமான ஒலிகளின் நடுவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கையும், பறவைகளும், விலங்குகளும், மனிதனும், எந்திரங்களும், வாகனங்களும் சேர்ந்து ஓசைகளின் பரப்பையும், வீச்சையும் பெரிதாக்கிக்கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் நமது கேள்விப்புலனில் பதிவாகிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றுக்குச் செவிசாய்ப்பதில்லை. அவையிருப்பதையே கூட அநேக நேரங்களில் நாம் அறிவதுமில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நாம் தேவையானதை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கேட்கிறோம் என்பதே உண்மை. சினிமாவில் ஒலியின் அர்த்தபூர்வமான பிரயோகத்தை மேற்கொள்வது இத்தகைய அனுபவ அறிவின் அடிப்படையில்தான்.

வேலையின்மை ஏற்படுத்திய சுணக்கத்திலும், செயலற்ற தன்மையிலும் மனம் சோர்ந்து தன்னுடைய சிறிய வாடகை வீட்டின் வெளித்திண்ணையில் வெறுமனே எதையோ யோசித்தபடி உட்கார்ந்திருக்கும் ‘சுயம்வரம்’ கதையின் மையப்பாத்திரமான விஸ்வத்தின் மேல் மழையின் முத்தாய்ப்பான தாளத்தை இணைத்தது இதுபோன்ற அறிவு சார்ந்துதான். மழை ஒரே சமயம் சிறையும் விடுதலையும் ஆகலாம்; மகிழ்ச்சியும் துக்கமும் ஆகலாம். பெய்து தீர்ந்த மழையின் துளிகள் குப்பைக்குழியருகில் தேங்கியிருக்கும் நீரில் ஒவ்வொன்றாகச் சொட்டி விழுந்து உடையும் ‘க்ளும் க்ளும்’ என்ற சோக லயம் ‘எலிப்பத்தாயத்தில்’ கனத்த துக்கமாகிறது.

nizhalkuthu_pond11

[நிழல்குத்து திரைப்படத்தின் ஒரு காட்சி]

நீண்டகாலத் தயாரிப்புகளுக்குப் பிறகு எழுதி முடிக்கப்பட்டது நிழல்குத்தின் திரைக்கதை. நாகர்கோயிலின் எல்லையோரப் பகுதியில், குடியிருத்தப்பட்டிருந்த கழுவேற்றுபவரின் (ஆராச்சார்) தமிழ்க்குடும்பத்தைப் பற்றியும், சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியும் விவரமறிந்தவர்-களிடமிருந்தும், ஆவணங்களிலிருந்தும் முடிந்தவரை தகவல்களைத் திரட்டியிருந்தேன். வரலாறும், புவியியலும், உண்மையும், நினைவும், தனி நபரும், சமூகமும், பிரஜையும், அரசநீதியும், எல்லாமும் இணையும் ஒரு வேதிச்செயலிலிருந்து பரிணாமம் பெற்றது அதன் வரலாற்றுக் கருவும், வெளிப்பாட்டு முறையும்.

கதைக்குப் பொருத்தமான சூழலையும், பின்புலத்தையும் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கவில்லை. அறுபது வருடங்களுக்கு முந்தைய உள்கிராமத்தையும், சுற்றுப்புறங்களையும் மறு உருவாக்கம் செய்யவேண்டியிருந்தது. நெடிதுயர்ந்த கரும்பனைகளையும், ஓங்கியுயர்ந்த பாறைக்கூட்டங்களையும் தேடிப் பயணம் செய்தோம். ஆனால், மாற்றத்தின் அடையாளங்களாகவும், நவீனமயத்தின் அடையாளங்களாகவும் மாறிய தார் ரோடுகளும், மின்கம்பிகளும், சிமெண்டு போட்ட குடியிருப்புகளும் பனைமரத்தை எரிபொருளாக்கிய செங்கற்சூளைகளுமாகக் கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் மாறிப்போயிருப்பதை நாங்கள் ஏமாற்றத்துடன் புரிந்துகொண்டோம். எனினும் தேடலைக் கைவிட மனம் வரவில்லை. மீண்டும் சுற்றியலைந்தோம். கடைசியில் ஒருநாள் அஸ்தமனத்துக்கு சில நாழிகைகள் மிஞ்சியிருந்தபோது மருத்துவர் மலைக்குப் பின்னால் பொட்டல்குளம் என்ற பகுதியை அடைந்தோம். நம்பமுடியவில்லை. தேடியலைந்த இயற்கை மட்டுமல்ல; ஆராச்சாரின் பழைய வீடும் அதோ முன்னால் நிற்கிறது. சந்தோஷத்தில் மனம் துள்ளியது.

பிரச்சினைகளும் பொறுப்புகளும் நிறையவே இருந்தன. இருப்பினும் கடைசியாகப் பொட்டல்குளம் வீட்டையே உறுதி செய்தோம். கூரைச் சார்ப்புகள் விழுந்துவிடும் நிலையில் இருந்த அந்தக் கட்டடத்தையும் மதிலையும் புதியதாகக் கட்டினோம். சிலவற்றை மாற்றினோம். ஆராச்சாரும் (தூக்கிலிடுபவர்) அவர் குடும்பம் இருக்கவும், கிடக்கவும், புழங்கவும் வசதியான இருப்பிடத்தை உருவாக்கினோம்.

ஒரு நாள் மாலை, மழை ஓய்ந்திருந்த நேரம். மெதுவாக வீசிய சிறுகாற்றில் கரும்பனைக்கு மேலிருந்து அதைக் கேட்டேன். அந்த வீட்டின் இதயத்துடிப்பு. ‘டப் டப் டடப் டடப்’ என்று கரும்பனையில் காற்றடிக்கும் அந்தத் தாளம் மனதில் எங்கோ மோதி மறு தாளமாக ஒலித்தது. ஒரே சமயத்தில் அது எனக்கு துயரமும் கொண்டாட்டமுமாக இருந்தது. எழுதி முடித்த திரைக்கதையில், படப்பிடிப்புக்குச் சொற்பமான நாட்கள் மட்டுமே இருக்கையில், மாற்றங்கள் செய்ய நேர்ந்தது. புதிய ஒரு கதாபாத்திரம் அனுமதி கேட்டுக்கொண்டு நுழைந்தது. கூரைக்குப் பின்னால் ஒதுங்கி நின்றிருந்த பனைமரம் அதற்குள்ள உரிமையோடு சமீபக் காட்சிகளுக்கு நெருங்கியது. எல்லாவற்றிடமிருந்தும் தனித்து வீட்டுக்காரர்களின் யோசனைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஞானத்துடனும் பரிவுடனும் இரவும் பகலும் அது காவலாக நிற்க ஆரம்பித்தது. மெல்லிய காற்றில் பனை மட்டைகள் சிணுங்கின. இரவில் நிச்சலனத்தில் அலைமோதி வந்த புல்லாங்குழலுக்கு ஆர்வமாகச் செவிசாய்த்தது. உறக்கம் வராமற் கிடந்த பெண்ணுக்கு ஒரு சப்தவாகினி போல அமுதமழையைக் கொண்டு வந்தது. ஆராச்சாரின் உள்மனப் போராட்டங்களில் பரிதாபப்பட்டு அவ்வப்போது மூச்சடக்கி நின்றது. வீசியடித்த ஊதற்காற்றில் தாய்த் தெய்வத்துக்கு திமிலை வாசித்தது. ஆராச்சாரின் மந்திரச் சடங்குக்குப் பணிந்து இறக்கிவிடப்பட்ட துர் பூதங்களைத் திரும்ப அழைத்தது.

அப்படியாக ஒற்றையாகக் கிடந்த ஒரு ஏழைக்குடும்பத்தின் வாழ்க்கைத் திருப்பங்களில் மெளன சாட்சியாக மாறியது அந்தப் பனைமரம்.

சினிமா அனுபவம்,
அடூர் கோபாலகிருஷ்ணன் (தமிழில்: சுகுமாரன்)
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 134, விலை: ரூ.100
இணையத்தில் இங்கே வாங்கலாம்.