கைகழுவப்பட்டவன்

tumblr_lmbgvmwmfh1qjfz9fo1_500

ந்த அறை பாதி இருண்டிருந்தது. கல்தரை. மேடும் பள்ளமுமாய் தன் செப்பனிடப்படாத தன்மையைக் காட்டிக் கொண்டிருந்தது அது. அந்த அறையைச் சுத்தம் செய்ய நுழைந்த பணிப்பெண் தெரசா கதவைத் திறந்தபோது உள்ளிருந்து எழுந்த முடை நாற்றத்தை சட்டை செய்யவில்லை என்பது அவள் முக பாவனையிலிருந்து தெரிந்தது.

அறையின் ஓரத்தில் ஒரு காலி மது புட்டி படுத்தவாக்கில் கிடந்தது. ஏராளமான பொத்தல்களுடன் நைந்து போன கனத்த போர்வை ஒன்று ஒரு மூலையில். தாழ்ப்பாள் உடைந்த தகரப்பெட்டி திறந்து கிடக்க, அதனுள் இருந்த காகிதங்கள் திடீர் வெளிக் காற்றால் வெடவெடத்தன. படுப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த கல் மேடை காலியாகவும் அதில் துயில வேண்டிய நபர் தன் உடலைக் குறுக்கிக் கொண்டு வினாக்குறியை ஒத்த வடிவில் தரையில் படுத்துக் கொண்டிருந்ததும் வியன்னாவின் வேறு எந்தப் பகுதியிலாவது நடந்திருந்தால் வியப்படையலாம். மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான விடுதியின் ஒரு மூலையில் உள்ள அந்த அறையில் சுருண்டு கிடந்தது ஒரு ஜீவன் என்பதை நம்ப வேண்டியிருந்தது.

அந்த உருவம் மெல்ல அசைந்தது. அதனுடைய ஒரு கணுக்கால் இரும்பு வளையங்களாலான நீண்டதொரு சங்கலியால் பிணைக்கப்பட்டு, அதன் மற்றொரு முனை அறைச்சுவரில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு வளையத்தில் முடிந்திருந்தது. இரும்பு வளையம் இருந்த இடத்தின் மேல் பகுதியில் சுவரில் இன்னாஸ் செம்மெல்வீஸ் என்ற பெயர் இடப்பக்கம் சாய்வாக கரிக்கோடுகளால் எழுதப்பட்டிருந்தது.

‘ யாரு, தெரசாவா?’ முனகல் வார்த்தைகள் வெளிவந்தன.

‘என்ன இது, இந்தக் குளிரில் இப்படிக் கிழே படுக்கலாமா?’ என்று பதறியவாறு தெரசா அந்த உருவத்தை மெல்ல எழுப்பி, கல்மேடைக்குக் கைதாங்கலாக இட்டுச் சென்றாள். உடைகள் ஈரமில்லையா என்று சோதித்து அவை உலர்ந்திருந்ததைப் பார்த்து நிறைவடைந்த முகபாவத்துடன் தான் கொண்டு வந்த களிம்பை அந்த ஜீவனின் உடல் புண்களில் பூசினாள். போர்வையை எடுக்கப் போனாள். அது ஈரம் சொட்டச்சொட்ட இருந்தது.

‘நாசக்கார பாவிகள், இப்படி போர்வையை ஈரம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த ரொட்டியை முதலில் சாப்பிடுங்கள், நான் இந்த எண்ணெய் விளக்கை ஏற்றுகிறேன்,’ என்றவாறு தரை பெருக்கத் துவங்கினாள்.

‘அவர்கள் முட்டாள்கள். அவர்களைப் பாவிகள் என்று சொல்லாதே. கொலைகாரப் பாவிகள் யார் தெரியுமா? இந்த ஐரோப்பா முழுக்க மருத்துவம் படித்துவிட்டு தாய்மார்களைக் கொன்று தீர்க்கிறார்களே, அவர்கள்தான்,” என்றவாறே, ரொட்டியை நொடியில் காலி செய்து அவள் ரகசியமாக கொண்டு வந்திருந்த பானத்தை ஒரே மூச்சில் குடித்தார் இன்னாசு.

‘தெரசா நீ என் தாய்’

‘வைத்தியரே, நான் உங்கள் பெண் வயது’

‘இருக்கலாம். என் அம்மா பெயரும் தெரசா, தெரியுமா?’

‘ஆமாம் வைத்தியரே,’ என்றாள் தெரசா.

மருத்துவர் இன்னாசின் தந்தை மளிகை, வீட்டுவசதி பொருள்கள் விற்கும் பெரிய வணிகர் என்றும் தாய், ஹங்கேரி நாட்டில் கோச்சுகளை (coach) கட்டும் பெரும் வணிகர் என்றும் இன்னும் அவரைப் பற்றிய பல செய்திகளையும் அவ்வப்போது வந்து போகும் அவருடைய மாணவர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்தாள் அவள்.

“தொலைகிறது போ, என் பெட்டியை விட்டார்களே, அந்தப் போர்வையை அப்புறம் உலர்த்தலாம். இப்படி வந்து உட்கார்,” என்றவாறு கரித்துண்டை கையில் எடுத்துக்கொண்டார் இன்னாசு.

தெரசா கையில் இருப்பதை அப்படியே போட்டுவிட்டு அறைக் கதவை மூடினாள். தரையில் அவரருகில் அமர்ந்து, “சரி வைத்தியரே,” என்றாள்.

இன்னாசு தன் வலுவையெல்லாம் திரட்டி சங்கிலிக் காலை நீட்டிக் கொண்டு மற்றொரு காலை மடக்கி அமர்ந்தார்.

கரிக்குச்சியை எடுத்து தரையில் முதலில் நீளவாக்கில் ஒரு கோடு கீறினார். அதனடியில் குறிப்பிட்ட இடைவெளிகளில் 1841, 1842, என்று வரிசையாக 1846 வரை எழுதினார். அடுத்து அதற்கு இடப்புறம், இடக்கையைக் குறுக்காக மடக்கி மேல் நோக்கி வைத்தாற்போல் ஒரு கோடு கீறினார். அதில் 0, 5, 10, 15, 20 என்று குறிப்பிட்ட இடைவெளிகளில் குறித்துக்கொண்டார். இப்போது நீளவாக்கு கோடுக்கு மேற்புற இடைவெளிகளில் மூன்று கோடுகள் கீறினார். அதன்மீது நேர்க்கோடுகளை மடக்கி மடக்கி வரைந்தார்.

semmelweis

‘நல்லாக் கேட்டுக்க’, என்றவாறு படத்தில்  உள்ள கோட்டுக் கீறல்களைச் சுட்டிக் காட்டினார் இன்னாசு.  “பிள்ளை பெறுவதற்காக, வியன்னா பொது மருத்துவமனைக்கு வரும் தாய்மார்கள் இவர்கள். இந்த இரு கோடுகளும் இருவேறு மகப்பேறு மருத்துவ நிலையங்களுக்கு வருபவர்களைக் குறிக்கின்றன. இந்தப் படத்தைப் பார்த்தாயா, பிள்ளை பெற வரும் பெண்களில் முதல் நிலையத்தில் மருத்துவம் பார்த்துக் கொள்ள வந்தவர்கள்தான் அதிக அளவில் செத்துப் போகிறார்கள். இரண்டாம் நிலையத்தில் சேர்ந்தவர்களில் சாவு எண்ணிக்கை குறைவு, எப்படி சொல்லு?” என்று கேள்வி கேட்டார்.

ஒரு தேர்ந்த மருத்துவக் கல்வி மாணவர் உடனடியாக பதில் சொல்வதைப் போல், தெரசா, “முதல் க்ளினிக்கில் உள்ள தாய்மார்களை சோதிக்க வரும் மருத்துவர்கள், பிணங்களை ஆய்வு செய்துவிட்டு கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் அப்படியே வந்து சோதிப்பார்கள். இரண்டாம் க்ளினிக்கில் தாய்மார்களை சோதிக்க வரும் மருத்துவர்களுக்கு ஆட்டாப்சி வேலை இல்லை, அவர்கள் மகப்பேறுக்கு உதவி செய்யும் தாதிகளுக்கு பாடம் எடுக்க வேண்டும், எனவே இங்கு சாவு குறைவு,” என்றவாறு அவர் முகத்தையே பார்த்தாள். நாள்தோறும் கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல் அல்லவா அவளுக்கு முதல் நான்கு நாள்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைத் திருப்பிச் சொல்வது எளிதுதான்.

“உம், அப்புறம் தாய்மார்கள் என்ன செய்தார்கள்?”

“பயந்து கொண்டு இரண்டாம் க்ளினிக்கில் தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடினார்கள், காலைப் பிடித்துக் கெஞ்சினார்கள், சிலர் தெருவிலேயே தங்களுக்கு பிரசவம் ஆகுமாறு பார்த்துக் கொண்டார்கள். உயிராவது மிஞ்சும் அல்லவா? என்ன கொடுமை பாருங்கள்- பொதுமருத்துமனைக்கு வருபவள் செத்துப் போகிறாள். தெருவில் பிள்ளை பெறுபவள் தப்பிப் பிழைக்கிறாள்!”

“நான் என்ன சொல்லியிருக்கிறேன்?”

“பிணங்களைச் சோதித்துவிட்டு வரும் மருத்துவர்கள், க்ளோரின் கலந்த சுண்ணாம்பு நீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்; அதற்குப் பிறகுதான், மகப்பேறுக்கு வரும் தாய்மார்களைச் சோதிக்க வேண்டும். அப்போதுதான் கொடிய கிருமித் தொற்று பிணங்களின் மருத்துவ சோதனைக்குப் பின், மருத்துவர்களின் நகங்கள் அல்லது விரல்கள் மூலம் தாய்மார்களுக்கு நோய் பரவி, கொடிய புவெர்புரெல் காய்ச்சல் ஏற்பட்டு பரிதாபமாக இனியும் செத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  “இதை நானே செய்து காட்டுகிறேன்,” என்று சொல்லி நீங்களும் உங்கள் ஆலோசனைக்கேற்ப மருத்துவம் பயிலும் மாணவர்களும் செய்தார்கள்”

“முட்டாள் ப்ரொபசர் க்ளெயின் கேட்டானா? வியன்னா பொது மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பில் இருந்தால் போதுமா?தலையில் எதாவது இருக்க வேண்டாமா? உனக்குப் புரிகிறது. ஐயோ! எத்தனை தாய்மார்கள் செத்தார்கள்! ஏழைப் பெண்கள், பாலியல் தொழில் புரியும் மகளிர், வயிற்றில் உள்ள குழந்தையை வெளியுலகத்திற்குக் கொண்டு வருவார் மருத்துவர் என்று நம்பி வந்த பேதைகள்! மூடர்கள். சாவு உலகிற்கல்லவா அவர்களை அனுப்பித் தொலைத்தார்கள். மருத்துவர்கள் என்றால் கனவான்களாம்! கொலைகாரப் பாவிகள். கனவான்கள் என்றாலும் அவர்களுக்கும் மனிதக் கைகள்தானே? கனவான்களுக்கு கைகளில் அழுக்கே படியாதாம், அதனல் கைகளைக் கழுவவே வேண்டாமாம்! இவர்களையெல்லாம் முதலில் உள்ளே தள்ள வேண்டும். சே, முதலில் ஓராண்டு சட்டம் படித்துவிட்டு, பின் மருத்துவம் படித்தேனே, சட்டத்தையும் படித்துத் தொலைத்திருந்தால் நானே இந்த கொலைகாரர்களுக்காக மரணதண்டனை வாங்கித் தந்திருப்பேன். இங்கிலாந்தோ, ஹங்கேரியோ, ஆஸ்திரியாவோ, எல்லோரும் அயோக்கியப் பசங்க- மருத்துவராம் மருத்துவர்! அந்தச் சொல்லைச் சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள். சாவுகளுக்கு ஏதோ பொருந்தாத காரணங்களையெல்லாம் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒருத்தன் என் பேச்சுக்கு செவி சாய்த்தால் மீதி அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் மறுப்பாளர்களாக இருக்க வேண்டுமா? எத்தனை நாட்டு மகப்பேறு நிலையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நானும் என் மாணவர்களும் கைகளொடியக் கடிதங்கள் எழுதினோம்! மருத்துவ சஞ்சிகைகளில் என்னுடைய கட்டுரைகளையும் என் மாணவர்களில் ஆய்வு குறிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால் மடப்பசங்கள் என்ன செய்தார்கள்?” என்று சொல்லிவிட்டு ஒரு முறை மூச்சு வாங்கினார் இன்னாசு.

“கைகொட்டிச் சிரித்தார்கள்.  கைகொட்டிச் சிரித்தார்கள். அறிவியல் ஆதாரம் இல்லையாம். கைகொட்டிச் சிரித்தார்கள். என்னைப் பற்றி அவதூறுகளைக் கண்டமேனிக்குப் பரப்பினார்கள். பின் கைகொட்டிச் சிரித்தார்கள்…” ‘கை கொட்டிச் சிரித்தார்கள்’ என்ற சொற்களை மீண்டும் மீண்டும் ஆவேசக் குரலில் மருத்துவர் இன்னாசு சொல்லச் சொல்ல தெரசாவிற்கு சற்று பயமேற்பட்டது.

“இவர்கள் எனக்கு நியாயமாகக் அளிக்கவேண்டிய தலைமைப் பதவியை அளிக்காது என்னை வெளியேற்றினார்களே- அதன்பின் ஹங்கேரியின் பெஸ்ட் நகரத்தின் புனித ரோச்சஸ் மருத்துவமனையில் 1851 ஆம் ஆண்டு நான் இணைந்த அடுத்த நான்கு ஆண்டுகளில் சாவின் எண்ணிக்கையைக் குறைத்து கிட்டத்தட்ட இல்லைவேயில்லை என்றாகிவிட்டது”

“இங்கு இருக்கிற படிச்சவங்களுக்கு ஏன் ஒண்ணும் தெரியலை டாக்டர்? சுவிட்சர்லாந்தில் உங்கள் அருமையைத் தெரிந்துகொண்டு, அவர்கள் மருத்துவமனையில் பெரிய பதவி கொடுத்தார்களே, அதை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை?” என்று கேட்டாள் தெரசா மெய்யான கரிசனத்துடன்.

“பணம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே குறியானால் போயிருப்பேன்.  ஆனால் என் தாய்நாட்டில், நான் வேலை பார்த்த நாட்டில் இந்த மூடப்பசங்களுக்கு புத்தி புகட்டுபவன் யார்? ஏழைத் தாய்மார்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குக் குரல் கொடுக்க ஒருவன் வேண்டாமா? இது போன்றதொரு சங்கிலியால் இந்தக் கொலைகாரப் பாவிகளைக் கட்டியிழுத்து அடைக்க வேண்டும்!” என்றவாறு தன் காலைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியை கைகளால் ஏதோ சாதாரணக் கயிறுபோல் அழுத்தி முறுக்கி அறுக்க முயன்றார் இன்னாசு.

அவர் கோபப்படுவதைத் தவிர்க்க சட்டென்று பேச்சை மாற்ற வேண்டும், என்று தவித்தாள் தெரசா. “உங்கள் குழந்தை ரோசிக்குட்டியைப் பற்றிச் சொல்லுங்கள்,” என்றால், கதை கதையாய் சொல்லுவார் அவர். இளம் மனைவி மரியாவின் அழகு, ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனது, பிறந்தவுடனேயே இறந்த ஆண்சிசு, நான்கு மாதக் கைக் குழந்தையாக இருந்தபோது மரித்த பெண் சிசு, 23 வயதில் தற்கொலை செய்துகொண்ட மகன், திருமணமே செய்து கொள்ளாத மகள், குழந்தைகளுடன் வாழும் ஒரு மகள்… வேண்டாம், நினைவுபடுத்தக் கூடாது. பேச்சை மாற்றினாலும் அது அவருக்கு வருத்தத்தைத் தரும். சொல்லி முடிக்கும்முன் அழத் துவங்கிவிடுவார்,

நேரமாகிவிட்டால், காவலாளிகள் கடுப்பேற்றுவார்கள். ஓரிருவர், “என்ன டாக்டர் பைத்தியத்திற்கு ஏதேதோ தருகிறாய், எங்களுக்குக் கிடையாதா?” என்று ஜாடை பேசுவர். இவர் வந்து ஒரு வாரம்தன் ஆகிறது. யாரோ தப்பாக இங்கனுப்பி விட்டார்கள். சீக்கிரம் அழைத்துக் கொண்டுபோய் விடுவார்கள். அவர்தான் எத்தனை கருணையுள்ளம் கொண்டவராக இருக்கிறார்- ஏழைப் பெண்களுக்கு கண்ணீர் விடும் இவரைப் போன்றவர்களின் சேவைதான் இவ்வுலகிற்குத் தேவை. இவர் மட்டும் நான் பிறக்கும் காலத்தில் இங்கு இருந்திருந்தால், பிள்ளை பெற்றவுடனேயே காய்ச்சல் ஏற்பட்டு என் தாயை இழந்திருப்பேனா? டாக்டர் விரைவில் குணமாகிப் போகட்டும், சமயம் பார்த்து இருவரையும் தனித்தனியாக முழங்காலால் குறி பார்த்து அடிக்கவேண்டும், என்று நினைத்துக்கொண்டாள் தெரசா.

“கிளம்புகிறேன் வைத்தியரே. நான் ஒருவாரம் விடுப்பு எடுத்துக் கொண்டிருப்பதால் நாளை ரெஜினா வருவாள். அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடுங்கள்,” என்றவாறு கவலையுடன் கிளம்பினாள் அவள்.

பாவம் டாக்டர் இன்னாசு. மருத்துவ விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவரா பைத்தியம்? வெளியில் இருக்கும் படித்த பெரிய டாக்டர்கள்தான் பைத்தியம், என்ற உறுதியான எண்ணம் தெரசாவிற்கு ஏற்பட்டது. அதே நேரம் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று வந்த ஒரு டாக்டரே இவரைக் கேலி பேசியபோது கிட்டத்தட்ட அவர் கழுத்தை நெறிக்கவே செய்து விட்டார் டாக்டர் இன்னாசு; இரண்டு மூன்று காவலாளிகள் சேர்ந்து அவரை எப்படியோ பாடுபட்டு அடக்கினார்கள்.

பொதுவெளியில் குடித்துவிட்டு கலாட்டா செய்தார், நினைத்த மாத்திரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் செல்கிறார், கோபப்பட்டு கத்துகிறார் என்று அவரை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் சூழ சேர்க்க வந்தபோது பேசிக்கொண்டது அவள் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்தப் பெண்களிடமும் இதைப் போல் மருத்துவப் பாடம்தான் எடுத்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றியது. டாக்டரின் இளம் மனைவியின் கவலை தோய்ந்த முகம் மங்கலாக நினைவிலாடியது. மரியா என்றுதான் சொன்னாள் விண்ணப்பபடிவங்களை நிரப்பும்போது.

அலுவலக அறை வாயிலில் இருந்த வாரப்பணி அட்டையில் அடுத்து வரும் நாள்களுக்கான காவலாளிகளின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பெஞ்சமின், மைக்கேல் என்ற பெயர்களைக் கண்டு தேள் கொட்டியது போல் திடுக்கிட்டுப் போனாள் தெரசா. மனநலம் பேணும் விடுதியின் உள்ளே மனிதர் என்ற முறையில்கூட வரத் தகுதியில்லாதவர்கள். சாப்பிடவோ, சுத்தம் செய்து கொள்ளவோ உடனடியாகக் கீழ்படியாத நோயாளிகளை இரக்கமின்றி தொடர்ச்சியாக அடித்து நொறுக்குபவர்கள்; நோயாளிகள் இவர்களைக் கண்டால் மறுபேச்சின்றி கீழ்படிவர். டாக்டர் இன்னாசு புதியவராயிற்றே, வந்து ஒரு வாரம்தான் ஆகிறது? இருந்தாலும் எதையும் நல்லதாகவே நினைப்போம், என்று தெரசா நினைத்துக்கொண்டாள்.

தனக்கு பதிலாக அறையைச் சுத்தம் செய்ய வரும் ரெஜினாவிடம் டாக்டர் இன்னாசுக்கு எந்தத் தீங்கும் நேரா வண்ணம் அவள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரசா உறுதி பெற்றுக் கொண்டிருக்கிறாள். இந்த ஒரு முறை தீராது, வேறு வழியில்லை- நோய்வாய்ப்பட்டிருக்கும் தந்தையைப் பார்க்க புடா’ விற்குப் போயே தீரவேண்டும். இனி டாக்டர் இன்னாசு குணமாகும்வரை விடுப்பே எடுக்கக்கூடாது, என்ற தீர்மானத்துடன் சற்றுத் தயங்கியே விடுதியை விட்டு வெளியேறினாள் தெரசா.

ஒரு பின்குறிப்பு

தெரசா, பதினைந்தாம் நாள் விடுமுறை முடிந்து பணிக்கு வந்தபோது டாக்டர் இன்னாசு இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டபோது திடுக்கிட்டுப் போனாள். கடுமையாக அடி உதைபட்டு புண்களுடன் இருந்தார் என்றும், யாரோ ஒரு பார்வையாளருடன் கைகலப்பு ஏற்பட்டு, நான் கைகளைக் கழுவத்தானே சொன்னேன், கழுவத்தானே சொன்னேன், என்று விடாது உரத்த குரலில் அரற்றினாராம். மைக்கேலும் பெஞ்சமினும், கைகளை மட்டும் கழுவச் சொல்கிறாயே, எல்லாதையும் கழுவுகிறோம் என்றவாறு, கடும்பனிக்காலம் என்றும் பார்க்காமல், அவர் மீது இருவரும் சேர்ந்து குளிர்ந்த நீரை வாளி வாளியாக ஊற்றியதால், அவருக்கு ஜன்னியும் ஏற்பட்டது என்றும், போர்வையைக்கூட குளிர்ந்த நீரில் நனைத்து போர்த்தி நகைத்தார்கள் என்றும் புண்கள் புரையோடி செப்டிசிமியா என்ற நோய்த்தொற்று ஏற்பட்டு மாண்டார் என்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாகவும், தடுக்க முயன்ற தானும், சாமுவெல்லும் அவ்விரு முரட்டுக் காவலாளிகளிடம் தோற்றுப்போனதையும் கண்ணீருடன் தெரிவித்தாள் ரெஜினா.

தெரசாவின் பின்குறிப்பு

மருத்துவர் இன்னாசின் பதவிகாலத்திற்குப்பின், பெஸ்ட் பல்கலைக்கழகத்தின் மகப்பேறு விடுடியில் மகப்பேறுக்கு வரும் தாய்மார்களில், மாண்டவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்காகி விட்டது என்பதை அங்கிருக்கும் ஒரு தோழி மூலம் தெரிந்துகொண்டேன். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், டாக்டர் இன்னாசின் கட்டுரைகள் மீள்வாசிப்பு செய்யப்பட்டு மருத்துவர்களால் ஏற்கப்பட்டது. இவருடைய ஆய்வு முடிவுகளை லூயி பாஸ்சர் என்பவர் கிருமித் தொற்று நோய் என்ற ஆதாரத்துடன் மெய்யென்று நிருவினார்.