இரண்டு குளங்கள்
கல்விழ
துளிகள்தெறித்து
அலைந்தடங்கும்
ஓர் குளம்.
விழாத கல்
எழாத அலை
உறைந்த குளம்.
இமையற்ற கண்
காற்றில் அசைகிறது
ஒற்றைக்கொடி
பிடி தளர
பறந்து போகும்
பறந்தவாறே
எதிர்க்கும் பொழுதில்
மரித்து விழும்
காற்றுலவ
நிழல் மேவா நிலமென
கிடக்கையில்
இமையற்ற கண்ணொன்று திறக்கும்.
பெரும்பொறுப்பு
பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.