ஆயிரம் தெய்வங்கள் – 16

டி மீட்டரின் பயணத்தால் புறக்கணிக்கப்பட்ட விவசாயம்

உலகில் நிலவும் பல்வேறு புராணக்கதைகளையும் கவனித்தால் ஆண்டவன் கட்டளையால்தான் விவசாயம் நிகழ்வதாக நம்பப்பட்டது. விவசாயத்தை கவனிக்க ஆண்டவரால் நியமிக்கப்பட்ட தெய்வமே டி மீட்டர். டி மீட்டருடன் ஆண்டவர் ஸீயஸ் கொண்ட உறவில் பிறந்த பெர்சிஃபோன் பேரழகியாவாள். பெர்சிஃபோன் மீது தாயான டி மீட்டருக்குக் கொள்ளை ஆசை. ஸீயஸ் தன் தம்பியான ஹேடசின் ஆசையை நிறைவேற்ற, பெர்சிஃபோனை டிமீட்டர் அறியாதவண்ணம் கடத்திக்கொண்டு போக உதவினார். பெர்சிஃபோன் கடத்தப்பட்டுப் பாதாள உலகில் காவலில் வைக்கப்பட்டாள்.

டீமிட்டரின் தேடும் படலமே சுரவையானதுதான் என்றாலும் பெண்ணைத் தேடிய காரணத்தால் விவசாயம் கவனிக்கப்படவில்லை. ஊண், உறக்கம் இல்லாமல் ஒன்பது பகல் ஒன்பது இரவு டீமிட்டரின் பயணம் உலகத்தையே ஒரு சுற்று வந்ததும் கூட மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவில் வெளிச்சத்திற்குத் தன் இருகரங்களிலும் அக்னிப்பிழம்பை ஏந்திச் சென்றாள். பத்தாவது நாள் ஹெக்கேட், யாரோ ஒரு நபர் பெர்சிபோனை பலவந்தமாகத் துõக்கிச்சென்றதைத் தான் பார்த்ததாகவும், அந்த நபரின் முகம் தெரியவில்லை என்றும் கூறினான். மிகவும் வெறுப்புற்ற டிமீட்டர், நல்ல அறுவடைக்கு அருள் வழங்க மறுத்துவிட்டதால் உலகில் பசியும் பஞ்சமும் ஏற்பட்டது. தனது புதல்வியை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாத துயரத்தில் டிமீட்டர் எலீசஸ் மலையில் உள்ள பாறையின் மீது அமர்ந்தாள். இன்னமும் அந்தப் றைக்கல், “துயரக்கல்” என்று வழங்கப்படுகிறது.

பின்னர் டிமீட்டர் எலீசஸ் அரண்மனைக்குள் நுழைந்து அரசி மீத்தேனரியாவின் அன்புக்குப் பாத்திரமாகி அரசியின் குழந்தை டிமோஃபோனின் செவிலித்தாயாகிறாள். ஒரு நாள் இரவில் டிமீட்டர் அந்தக் குழந்தையைத் தலைகீழாகக் கால்களை ஒரு கரத்தில் பிடித்துத் தலையைக் கீழே தொங்கவிட்டுத் தன் கரத்திலிருந்த அக்னி ஜீவாலையைப் பாய்ச்சியதை கவனித்த அரசி ‘ஓவென்று’ அலறியபோது டிமீட்டர் தான் ஒரு தாய்தெய்வம் என்றும் குழந்தைக்கு சாகாவரம் அளிப்பதாகவும், எலிசிஸ் நாட்டைப் பஞ்சமில்லாமல் காப்பாற்றுவதாகவும் கூறினாள். அந்தக் குழந்தைதான் சாகாவரம் பெற்ற டிமோஃபோன். டிமோஃபோனின் சகோதரனாகிய டிரிப்டாலமசை டிமீட்டர் முன்பே வசியம் செய்துவிட்டதால் டிமீட்டர் ஆணைப்படி வானரதத்தில் பறந்து எலிசிஸ் மண்மீது மக்காச்சோள விதைகளை விதைத்துப் பசுமையாக்கியதாக ஒரு மரபுக் கதை உண்டு. டிரிப்டாலமஸ் பின்னர் டிமீட்டர் அருளால் பாதாளஉலகில் நீதிபதியாகிறான். ஆனால் தான் யார் என்று வெளிப்பட்டுவிட்ட சூழ்நிலையில் டிமீட்டர் யார் கண்ணிலும் படாதவாறு ஒலிம்பிக்கைவிட்டு வெளியேறிவிட்டதால் மண்ணில் மீண்டும் பசி-பஞ்சம் ஏற்பட்டு தெய்வங்கள் ஒன்றுகூடி ஸீயெஸ்ஸிடம் முறையிடவே, ஸீஸஸ் மணம் கனிந்து பாதாள உலகிலிருந்து பெர்சிஃபோனை மீட்டு டிமீட்டரிடம் வழங்கி, நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் போக்க ஹேடசுக்கு உத்தரவிட்டார். ஹேடசுக்கு மனம் இல்லை. ஒரு புதிய பிரச்சினையைக் கிளப்பினார். ஹேடஸ் ஒளித்துவைத்த இடம் டார்ட்டாரஸ் எல்லைக்கு அப்பால் என்பதால் மீண்டும் பூமிக்கு வர சில விரதங்கள் உண்டு. ஹேடஸ் தோட்டத்து மாதுளம்பழத்தை உண்டதால் பூமிக்கு வர இயலாது என்று ஹேடஸ் அரசியல் செய்தார், வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல் மாதுளம்பழத்தை உண்ட செய்தியை நீர்தேவதையான ஸ்டாக்ளின் மகன் அஸ்காலஃபஸ் தன்னிடம் கூறியதாக ஹேடஸ் கூறியதும் டிமீட்டர் செய்த முதல் வேலை அஸ்காலஃபசை ஆந்தையாக மாற்றியதுதான். தனக்குத் தன் பெண் வேண்டுமென்ற கோரிக்கையை டிமீட்டர் மீண்டும் முன்வைக்கவே, ஸீயஸ் நியாயம் வழங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். டிமீட்டர் பழையபடி விவசாயத்தில் நல்ல அறுவடைக்கு அருள் தரவேண்டும் என்றும் இதற்கு ஈடாக விதியை மீறி ஆறுமாதம் டார்ட்டாரஸ்லிருந்து பூமிக்கு வந்து டிமீட்டருடன் வசிக்கலாம், என்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு டிமீட்டர் தலைவணங்கி கிரேக்க தேசத்தைப் பழையபடி பசுமையாக்கினாள்.

ஒளிக்கடவுள் அப்போல்லோவின் கதை

ஒளிக்கடவுள் அப்போல்லோ பிறந்து வளர்ந்ததே ஒரு புனர்ஜன்மம். ஸீயஸ் லெட்டாவுக்கு வழங்கிய தெய்வக்குழந்தையே அப்போல்லோ. கர்ப்பவதியான லேட்டாவுக்கு ஹீரா வழங்கிய துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பூமியில் குழந்தையை விழச்செய்ய ஒரு துளி இடத்தைக்கூட ஹீரா வழங்கவில்லை. பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக குவாயில் தீவில் தலைமறைவாய் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். குவாயில் ஆர்த்தை ஜியாத் தீவில் பாறைகளைத் தவிர வேறு புல் பூண்டுகூட முளைக்காத இடமாகும். முதலில் பிறந்த குழந்தை ஆர்ட்டமிஸ். இரண்டாவது அப்போல்லோ. இவ்வாறு இரண்டு தெய்வக் குழந்தைகளைப் பெற்றெடுத்த லெட்டாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாறையும் பாழ்நிலமுமாயிருந்த குவாயில் தீவை ஸீயஸ் வளமாக்கி, அத்தீவுக்கு “டெலோஸ்” என்று பெயரிட்டார். “டெலோஸ்” என்றால் பிரில்லியண்ட் அல்லது “ஒளிபடைத்தது” என்று பொருள்.

அப்போல்லோ பூமியில் பிறந்தவுடன் புனித அன்னப்பறவைகள் டெலோசை ஏழுமுறை வலம் வந்தன. ஏனெனில் மாதத்தில் ஏழாம் நாள் அப்போல்லோ பிறந்தான். அகமகிர்ந்த ஸீயஸ் அப்போல்லோவுக்கு ஒரு தங்கக்கிரீடம், ஒரு அன்னரதம், ஒரு வீணை ஆகிய 3 பரிசுகளை வழங்கினார். இப்பரிசுகளை வழங்கிய ஸீயஸ் டெல்ஃபிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். வீண் வழியே அன்னரதத்தில் பறந்த அப்போல்லோவால் உடனேயே டெல்ஃபிக்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் அன்னபட்சிகள் அப்போல்லோவை அன்னங்களின் சரணாலயத்திற்கு இட்டுச் சென்றன. அது கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட அமைதியான இடம். அங்கு ஹைப்பர் போரியர்கள் வாழ்ந்தனர். வாழ்வை விளையாட்டகவே மதிப்பவர்கள். இன்பமாக வாழ்வார்கள். வாழ்வு சலித்துப் போனபின்பு முதியவர்கள் கடலில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்வார்கள். அம்மக்களுக்கு அப்போல்லோ காட்சி தந்த பின்னர், அன்னப் பறவைகள் ஸீயஸ் கட்டளைப்படி டெல்ஃபிக்கு இட்டுச் சென்றன. ஹைப்பர் போரிய மக்களுக்கு அப்போல்லோ தன்னிகரற்ற தெய்வமாக விளங்குகிறார்.

அப்போல்லோ தெய்வத்திற்கு டெல்ஃபியில் ஆலயம் கட்டப்பட்டது. பாலமுருகனுக்குப் பழனியில் ஆலயம் உள்ளது போல் அப்போல்லோவின் ஆலயம் டெல்ஃபியில் உள்ளது. ஸீயெஸ்ஸின் விருப்பமும் அதுவே. டெல்ஃபியின் தலவரலாற்றின்படி, டெல்ஃபியைப் பைத்தான் (மலைப்பாம்பு) என்ற நாகாசூரன் ஆண்டுவந்தான். தெமிஸ் என்ற தெய்வத்தின் அருளைப் பெற்றிருந்த பைத்தான் வெல்ல முடியாதவனாகவும் இருந்தான். ஸீயஸ் உத்தரவுப்படி அப்போல்லோ அவன் மீது அம்புமாறிகளைப் பொழிந்தும் கூட உடலைத்தான் கொல்ல முடிந்தது. ஆவியாக வந்து அப்போல்லோவைத் தாக்கியபோது பைத்தானுடன் சமாதானம் செய்துகொண்டான். பைத்தானின் நினைவாக வீரவிளையாட்டுக்களை டெல்ஃபியில் தொடங்கி அப்பொல்லோ தன் அருள்வாக்குகளை வழங்கும் மரபு ஏற்பட்டது. சென்னை மாநகரத்து மக்கள் அருள்வாக்குப் பெற திருவேற்காடு செல்வார்கள். திருவேற்காடு மாரியம்மனின் அருளைப் பெற்றுள்ளதாக நடிக்கும் பூசாரிகளின் பிழைப்புக்கும் டெல்ஃபியில் குறிசொல்லும் அப்பொல்லோ பூசாரிணிகளுக்கும் என்ன உறவோ? ஆண்டவன்தான் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எல்லாகிராமங்களிலும் குறிசொல்வதும் குறிகேட்பதும் உண்டு. சிலருக்கு முருகன் அருள் உண்டு. சிலருக்கு அம்மன் அருள் உண்டு. இதை மறந்துவிட்டு அப்பொல்லோ கதைக்குள் வருவோம். டெல்ஃபி ஆலயத்தில் ஒரு ஸ்டூல் உண்டு. அந்த ஸ்டூலில் அமரும் தகுதி பைத்தியாவுக்கு மட்டும் உண்டு. ஸ்டூல் அப்பொல்லோவால் வழங்கப்பட்டது. பைத்தானின் ஆவி பைத்தியாவாகி ஸ்டூலில் அமர்ந்து வருவதை உரைக்கும். நாளடைவில் பெண்பூசாரிகள் டெல்ஃபியில் அந்த ஸ்டூலில் அமர்ந்து குறிசொன்னார்கள்.

பைத்தானையும் அப்பொல்லோவையும் நினைவுபடுத்தும் திருவிழாக்கள் கிரேக்க தேசத்தில் கொண்டாடப்படுவதுண்டு. பைத்தானைக் கொன்றதால் தெமிசின் சாபத்திற்கு அஞ்சி தெஸ்ஸாலியில் உள்ள ஒரு புண்ணிய நதியில் ஸ்நானம் செய்து பைத்தானுக்கு அப்பொல்லோ எட்டாண்டுக்கு ஒருமுறை தர்ப்பணம் செய்தானாம். அப்பொல்லோவின் பாவ விமோசன விழா பைத்தானையும் நினைவுபடுத்துவதாயுள்ளது.

மஹாபாரதக் கதைகளில் கிருஷ்ணார் ஜுன யுத்தம் பற்றிய குறிப்புண்டு. அது போலலே அப்பொல்லோவுக்கும் ஹீராக்ளீசுக்கும் டெல்ஃபியில் யுத்தம் நிகழ்ந்தது. ஹீராக்ளீவுக்கு ஒரு பிரச்சினை வந்தது. டெல்ஃபி சென்று குறிகேட்க முடிவு செய்தான். ஆனால் பைத்தியா குறிசொல்ல மறுக்கவே, சினமுற்ற ஹீராக்ளீஸ் அப்பொல்லோவின் ஸ்டூலைப் பிடுங்கிக்கொள்ளவே, நேரில் வந்த அப்பொல்லோ ஹீராக்ளீசுடன் யுத்தம் செய்தான். ஹீராக்ளீசும் ஸியஸ்ஸின் குழந்தை.தனது இரு புதல்வர்களும் போராடுவதை நிறுத்த அவர்களுக்கு மத்தியில் ஸீயஸ் தனது வஜ்ராயுதத்தை எறிந்தார். இருவரையும் சமாதானப்படுத்தி ஸ்டூலை மீட்டு உரிய இடத்தில் வைக்கப்பட்டது. பின்பு பைத்தியா ஹீராக்ளீசுக்கு வருவதை உரைத்தாள்.

அப்பொல்லேவும் அழகிய வாலிப தெய்வம் என்பதால் அப்பொல்லாவுக்கு அடிமையான பெண்களுக்குப் பஞ்சமே இல்லை பீனியஸ் என்ற நதி தெய்வத்தின் மகள் தாஃப்னே. தெஸ்ஸாலியில் ஓடம் நதி பீனியஸ். தெய்வமகன் நதி தேவதையின் மகளைக் காதலித்ததில் வியப்பு இல்லை. ஆனால் தாஃப்னேயேத் துரத்திக் கொண்டு அப்பொல்லோ ஓடும்போது தன்னைக் காப்பாற்றுமாறு பீனியஸிடம் வேண்டவே, அப்பொல்லோவைப் பிடித்து லாரஸ் மரத்தில் கட்டினாள். தனது தெய்வசக்தியால் பின்னர் அப்பொல்லோ விடுபட்டாலும் இதை நினைவுபடுத்தி கிரீசில் லாரஸ் மரம் ஒரு புனிதவிருட்சம்õக இன்னமும் கருதப்படுகிறது. லாரஸ் மரம் அப்பொல்லாவின் சின்னமானது. தாஃப்னே பின்னர் அப்பொல்லோவை மணந்துகொண்டாள்.

நசரின் என்ற வனதேவதையையும் அப்பொல்லோ விரும்பி மணமுடித்து அவள்மூலம் அரிஸ்டேஷியஸ் என்ற இசை தெய்வத்தை மகனாகப்பெற்றார். தலியாவில் கோரிபாண்டஸ்களின் ஜனனத்திற்கும் காரணமானார். யுரானியாவில் லைனஸ், ஆர்ஃபியஸ் என்ற இரு இசைக்கலைஞர்களுக்கும் அப்பொல்லோ தந்தையாவார்.

தெஸ்ஸாலி மன்னன் ஃப்லீக்யாசின் மகள் கோரோனிஸ் அப்பொர்லோவுடன் இணைவதற்கு முன்பு எலாட்டஸ் மகன் இஸ்கைசுடன் உறவு வைத்திருந்த ஒரு ரகசியத்தை வெள்ளைக் காகம் அப்பொல்லோவிடம் கூறியதால் கோபமுற்று கோரோனிசைக் கொன்றுவிடுகிறான். ரகசியத்தைச் சொன்ன காரணத்தால் வெள்ளைக் காகம் பின்ன கறுப்பானது. கோரோனிசின் சாபத்தால் ஏற்பட்டது.

கோரோனிஸ் உடலை எரிக்க முடிவானபோது அவள் நிறைகர்ப்பிணி. அவள் உடல் எரிந்துகொண்டிருந்தபோது தக்க சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்ட குழந்தை அஸ்க்ளீப்பியஸ் உண்மையில் அப்பொல்லோ உறவால் பிறந்தவனே. அஸ்க்ளீபியசுக்கு அவன் தந்தை எல்லா மருத்துவ ரகசியங்களையும் கற்றுக்கொடுத்தான். இதனால் அஸ்க்ளீப்பியஸ் புகழ்மிக்க மருத்துவனாக மாறினான்.

அஸ்க்ளீப்பியசுக்கு மருத்த அறிவை ஊட்டியதால் அப்பொல்லோவுக்கு சனியன் பிடித்தது.இந்திய புராணத்திலும் காகம் சனிபகவானின் வாகனமாயிற்றே. காக்கை பேச்சைக் கேட்டு மனைவியின் யாக்கையை எரித்த காரணத்தால் அஸ்க்ளீப்பியசின் வளர்ச்சி பேராபத்தானது. அஸ்க்ளீப்பியஸ் ஸீயஸ்ஸின் அருமைப்பெண்ணாண எத்தினாவின் பக்தனாகி, எத்தினாவின் பக்தர்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்துவந்தான். எத்தினாவின் இடதுபுற ரத்தம் விணம் என்றும் வலதுபுற ரத்தம் உயிர்காக்கும் மருந்து என்றும் கண்டுபிடித்தான். அஸ்க்ஸீப்பியசின் அபார அறிவைக் கேள்வியுற்ற ஹேடஸ் அவ்வப்போது ஸீயஸ்ஸிடம் முறையிட்டான். சட்டம் ஒழுங்குக்கு விரோதமாக யாருக்கு உயிர்ப்பிச்சை வழங்கும் அதிகாரம் ஸீயஸ்ஸுக்கு மட்டுமே உண்ட என்று பழிசும்த்தி அஸ்க்ஸீப்பியசை வஜ்ராயுதத்தை ஏவி ஸீயஸ் கொன்றுவிடுகிறார். அப்பொல்லோ வெகுண்டு ஸீயஸ்ஸுக்கு வஜ்ராயுதத்தை வழங்கிய சைக்களோப்பசைத் தன் நாகபாணத்தால் கொன்றுவிடவே வெகுண்ட ஸீயஸ் டார்ட்டாரஸுக்கு அதாவது பாதாள உலகத்திற்கு அனப்பி சிசிஃபசுக்கு வழங்கியதைப்போல் ஒரு தண்டனையை வழங்கினார். பின்னர் லேடாவின் தலையீட்டால் தண்டனை மாற்றப்பட்டது. தெஸ்ஸாலி மன்னன் அட் மீட்டசின் ஆட்டு மந்தைகளை மேய்க்கும் பணி-மானடனுக்கு தெய்வம் அடிமையாகி ஓராண்டு தண்டனை வழங்கப்பட்டது. அப்பொல்லோவின் அடுத்த தோல்வி மார்ப்பெஸ்ஸா. அப்பொல்லோவின் அன்புக்கு மார்ப்பெஸ்ஸா பாத்திரமானான். ஆனால் மார்ப்பெஸ்ஸாவோ ஐடாஸ் என்ற வாலிபனுடன் ஓடிவிட்டாள்.

மார்ப்பெஸ்ஸா எட்டோலிய நாட்டு இளவரசியும்கூட. ஒரு தெய்வமே வந்து தன் காதலைத் தெரிவித்தும்வட ஏனோ அவள் மறுத்துவிட்டாலும் அப்பொல்லோ விடுவதாயில்லை. அவர்களைவிடாமல் துரத்திச் சென்று மெஸ்ஸோனியாவில் பிடித்தான். அப்பொல்லோவும் ஐடாசும் கட்டிப்புரண்டனர். ஐடாஸ் மாவீரன் ஆபேரியசின் புதல்வன். பாசிடோனால் கவுரவிக்கப்பட்டவன். சொல்லப்போனால் பாசிடோன் வழங்கிய தங்க ரதத்தில்தான் அவன் மார்ப்பஸ்ஸாவைக் கடத்திக்கொண்டு விண்ணில் பறந்தான். அந்த வகையில் ஐடாசும் அப்பொல்லோவும் கட்டிப்புரண்டபோது ஸீயஸ் தலையிட்டு சமாதானப்படுத்தி மார்ப்பஸ்ஸாவின் கருத்துப்படி அவள் விரும்பும் ஒருவருடன் வாழுமாறு தீர்ப்பளித்தார். மார்ப்பஸ்ஸாவோ அப்பொல்லோவைப் புறக்கணித்துவிட்டு ஐடாசையே தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள். என்ன காரணம் என்று கேட்டபோது, தேவன் மனைவிக்கு துரோகம் செய்வான். ஆனால் மனிதன் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தாள்.

அப்பொல்லோதெய்வமாயினும் தெஸ்ஸாலியில் ஆட்டு மந்தைகளை மேய்க்கும் தண்டனை பெற்ற காரணத்தினால் அவனால் மேய்ச்சல் பொருளாதாரம் மேம்பட்டது. ஒரு வகையில் அவன் சூழலின் நண்பன். ஏராளமான மரங்கள் அப்பொல்லோவுக்கு அர்ப்பணமாயுள்ளன. காகம், அன்னம், அணில், நாய், ஓநாய், மான் என்று பல பிராணிகளும் அவன் பெயரில் அர்ப்பணமாயுள்ளன. டால்ஃபின் என்ற கடல் பிராணி அப்போல்லோவின் ஆலயமான டெல்ஃபியின் மரூவு, இந்தியாவில் அப்பொல்லோ மருத்துவமனைகள் நிறைய உண்டு. ராக்கட்டுகளுக்கும் அப்பொல்லோ என்று பெயர் சூட்டப்படுகிறது. அப்பொல்லோவின் அக்காள் அர்ட்டமிஸ் உண்மையில் ஒரு மருத்துவச்சி. அவளைப்பற்றி

(தொடரும்)