மூன்று கவிதைகள்

“1984-ஆம் வருடம் ஆத்மாநாம் வாழ்க்கை முற்றுப்பெறாமல் இன்றும் தொடர்ந்திருந்தால் நவீன தமிழ் கவிஞர்களான பிரமிள், கலாப்ரியா, ஞானக்கூத்தன் போன்றோரின் வரிசைக் குறிப்பில் ஆத்மாநாமும் முக்கிய இடத்தை பெற்றிருப்பார். அதற்கான அடிநாதங்களையும் வீச்சையும் அவருடைய கவிதைகள் உள்ளடக்கியிருந்ததின் அடையாளங்கள் சாதாரணமானவை இல்லை. நட்பான புளியமரம் பற்றி அவர் எழுதியதை ஒரு சிறு உதாரணமாக சுட்டிக் காட்டலாம்.

ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்…”

– ‘என் நண்பன் ஆத்மாநாம்’ கட்டுரையில் ஸ்டெல்லா புரூஸ்.

ஒரு புளியமரம்

ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்
நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு.

-o00o-

a_tamarind_tree_seedling

அந்தப் புளியமரத்தை

நேற்றிலிருந்து
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிர சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின

சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது

மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்

புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்து
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய

நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்லாம்
வெட்டிவெட்டி அடுக்கினார்கள்

கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்

இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது.

-o00o-

2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.

புத்தக விவரங்கள்:

ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
டிசம்பர் 2008, காலச்சுவடு பதிப்பகம்.