பர்வீன் சுல்தானாவின் ஆட்டோகிராஃப்

ஸ்டெல்லா புரூஸ் எழுதிய ‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற நெடிய கட்டுரையில் ஆத்மாநாமுக்கும், ஸ்டெல்லா புரூஸுக்கும் இசை மீது இருந்த ஆர்வத்தையும், ரசனையும் குறிப்பிடும் சில பகுதிகள் இந்த இதழின் இயலிசை பகுதியில் இடம்பெறுகின்றன.

நன்றி : நவீன விருட்சம்.

லக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அப்பாற்பட்டு வீட்டில் ஒலிநாடாக்களின் இசைகளும் கேட்கப்படுகின்றன. கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் தணிந்த ஸ்தாயியில் கசிந்துகொண்டிருக்கின்றன. கேட்கின்ற சில சில இசைகள் ஆத்மாநாமை ஞாபகப்படுத்தும். எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவில் இசை ரசனை மிக அழுத்தமான தளமாக இருந்ததை மறக்கவே முடியாது. நானும் நானும் ஆத்மாநாமும் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றது மிகமிகக் குறைச்சல். இசை நிகழ்ச்சிக்களுக்குப் போனதுதான் அதிகம். நிஜத்தில் அவை எண்ண முடியாதவை. எம்.டி.ராமநாதன், பாலமுரளி கிருஷ்ணா, மஹாராஜபுரம் சந்தானம், பட்டம்மாள், எம்.எஸ், சாருமதி ராமச்சந்திரன், சேலம் ஜெயலஷ்மி, மணி கிருஷ்ணசாமி, எம்.எல்.வி – போன்ற அந்தக் காலகட்ட மேதைகள் அனைவரின் சங்கீதங்களையும் கேட்பதற்கு நானும் ஆத்மாநாமும் சலிக்காமல் போயிருக்கிறோம்.

அந்த மாதிரி போகின்றபோது சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சங்கீத வித்வான்களை சந்தித்து ஒருசில நிமிடங்கள் அவர்M.D.Ramanathan பேசிக்கொண்டிருப்பார். இப்படி ஒருசில நிமிட சந்திப்புகளிலேயே எம்.டி.ராமநாதனுடன் ஆத்மாநாமுக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது ராமநாதனின் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இரண்டு முறை ஆத்மாநாமுடன் எம்.டி.ராமநாதனின் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆத்மாநாமைப் பார்த்ததும், “வாடா மது,” யென்று ராமநாதன் அவருக்கே உரித்தான தொனியில் அழைப்பார். அவருடைய அழைப்பில் ஆத்மாநாமிடம் அவர் கொண்டிருந்த வாஞ்சையின் அந்நியோன்யத்தை உணர முடியும்.

1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது. 1976 ஆம் வருட பிப்ரவரி மாத பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சிக்கு ஆத்மாநாமும் நானும் செல்வதற்குத் தீர்மானித்திருந்தோம். நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு ஆரம்பம். அம்பத்தூரில் இருந்து என் அறைக்கு ஆத்மாநாம் நான்கு மணிக்கு வந்து விட்டார். உத்தேசித்திருந்தபடி ஐந்து மணிக்கு கிளம்பத் தயாரானோம் . அப்போது ஒரு வாரத்திற்கு முன்பு நான் வாங்கியிருந்த பர்வீன் சுல்தானாவின் பெரிய எல்.பி இசைத்தட்டு ஒரு அழகுப்பொருள் போல என்னுடைய மர ஷெல்பில் முதன்மைப் படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பர்வீன் சுல்தானா இளமையின் வசீகரங்களோடு அழகிய நட்சத்திரமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்குக் கிளம்பிய நிமிடம் ஆத்மாநாம் சட்டென அந்தப் புதிய இசைத்தட்டையும் எடுத்து அவருடைய பெரிய ஜோல்னா பையில் வைத்துக்கொண்டார். “இது எதுக்கு?” – நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். “இருக்கட்டும்… முடிஞ்சா இதுல பர்வீன் சுல்தானாவோட ஆட்டோக்ராஃப் வாங்குவோம்,” என்றார் ஆத்மாநாம். எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் கிடையாது. அதனால், “ஆட்டோகிராஃப்பெல்லாம் வேண்டாம் மது. கூட்டத்ல எதுக்குப்போய் அவளைப் பாத்துக்கிட்டு..சங்கீதத்தை கேட்டுவிட்டு வந்திட்டே இருப்போம்.” “ச்சூ… சோம்பேறி… பேசாம நீங்க வாங்க. நான் அவகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறேன்.” ஆத்மாநாமின் முடிவை என்னால் மாற்றமுடியவில்லை. இம்மாதிரியான செயல்கள் அவருக்கு வாடிக்கைதான். நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிச் சென்றோம்..எப்போதும்போல பர்வீன் சுல்தானாவின் நாதவெள்ளம் அதற்கே உரித்தான தாளகதிகளில் சுழித்துக்கொண்டிருந்தது.

[பர்வீன் சுல்தானா வேறொரு சமயத்தில் பாடிய பஜன்]

இருபது நிமிட இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆத்மாநாம் அவருடைய ஜோல்னா பையுடன் எழுந்து கொண்டார். “வாங்க அவளைப் பாத்திட்டு வந்திரலாம்,” என்றார். எனக்கு வழி கிடையாது. எழுந்து அவருடன் போனேன். உள் அரங்கத்திற்குள் செல்கிற வழியை நோக்கி ஆத்மாநாம் நடந்தார். மேடைக்குச் செல்கிற வழியின் கதவின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆத்மாநாம் இசைத்தட்டை அவரிடம் எடுத்துக்காட்டி விஷயத்தை சொன்னார். அந்த மனிதர் உள்ளே போய் இரண்டொரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார். எங்களை உள்ளே போகச் சொன்னார். உள்ளே சிறிது தூரம் நடந்து மற்றொரு பெரிய அறைக்குள் நுழைந்தோம். பர்வீன் சுல்தானா நின்றவாறு யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அது மகத்தான தரிசனம்! ஒருநாள் கூட நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. இத்தனை அருகில் அந்த மனுஷியைப் பார்ப்பேனென்று. சங்கீத உபாசனை அந்த மனுஷியின் தோற்றத்தில் பிரகாசமான ஒளியைப் பாய்த்திருந்தது. மனுஷியின் பார்வை எங்களை வரவேற்றது. ஆத்மாநாம் அவளுக்கு நமஸ்தே சொன்னார். நான் சொல்லவில்லை. மெய்மறந்த தரிசனத்தின் ஒடுங்கிப்போன மௌனத்தில் நான். ஆத்மாநாம் ஜோல்னா பையில் இருந்து இசைத்தட்டை எடுத்தார். பர்வீன் சுல்தானாவிடம் ஆங்கிலத்தில் சொன்னார் : “இந்த இசைத்தட்டு இவருடையது. இதில் நீங்கள் உங்களுடைய கையெழுத்திட்டுத் தரவேண்டும்…” உடனே பர்வீன் சுல்தானா புன்னகையுடன் எதிர்பாராத கேள்வியை ஆத்மாநாமிடம் கேட்டார்: “இசைத்தட்டு இவருடையது என்கிறீர்கள்..ஆனால் ஆட்டோக்ராஃப் நீங்கள் கேட்கிறீர்களே…” கேள்வியைக் கேட்டபிறகு பர்வீன் சுல்தானாவின் கண்கள் என்னை நோக்கின. ஆத்மாநாம் ஒரு மாதிரியாக திணறிப் போனார். அந்தக் கேள்வி ஏதோ ஒரு தடங்கல் போலாகி விட்டது அவருக்கு. பர்வீன் சுல்தானா – அந்தச் சில விநாடிகள்தான் -கம்பீரமாகக் காத்திருந்தார் – பதிலுக்காக. வழி தவறிவிட்ட தொனியில் ஆத்மாநாம் பதில் சொன்னார் : “உங்களுடைய கையெழுத்தும் அவருக்கும்தான் தேவை. அவர் சார்பாக நான் கேட்கிறேன். அவ்வளவுதான்..” “அப்படியானால் சரி. கொடுங்கள்..”

பர்வீன் சுல்தானா இசைத் தட்டை வாங்கிக்கொண்டார். அவரின் அருகில் நின்றவர் உடனே பேனா கொடுத்தார். இசைத் தட்டின் பின்புறத்தில் “வித் லவ்” என எழுதி கையெழுத்திட்டார் பர்வீன். மீண்டும் வாய்க்கவே முடியாத அற்புத கணம் அது. மொத்த சூழலுமே மேற்கு அடிவான சூரியனாக தகதகத்தது. என்னுடைய மொத்த உணர்வுகளும் அந்த மனுஷிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. மனுஷி கையெழுத்திட்டு மட்டும் தரவில்லை. ‘P’ என்ற எழுத்தின் மத்திய வெளியில் இரண்டு கண் மூக்கு வாய் வரைந்தார். வாயின் அமைப்பில் அந்த முகம் -அழுவது போலிருந்தது! Sஎன்ற எழுத்தில் இருக்கும் வெளியில் அதேபோல கண்கள் வாய் மூக்கு வரைந்தார். வாயின் அமைப்பு அந்த முகம் மலரச் சிரிப்பது போலிருந்தது. மறுபடியும் புன்னகைத்த மனுஷியிடம் இருந்து எதிர்பாராத கேள்வி என்னை நோக்கி, “இசைத்தட்டு உங்களுடையதுதானே?” “ஆம்,” என்றேன். “அப்படியானால் இதை உங்களிடமே தருகிறேன்..” சங்கீத உபாஸகியிடம் இருந்து இதற்கு மேலான ஒரு பரிசு ஏதாவது இருக்கிறதாயென்ன? என் இரண்டு கைகளாலும் இசைத்தட்டைப் பெற்றுக்கொண்ட போது ஆத்மாநாமின் முகம் வாடிச் சுருங்கிப் போய்விட்டது. அன்றைய மீதி நிகழ்ச்சியில் அவரின் மனம் லயிக்கவில்லை. சுருங்கிப்போன அவரின் முகம் சுருங்கியது சுருங்கியதுதான். “என்ன அவளுக்கு மேனர்ஸ தெரியலை..ரெக்கார்டை என்கிட்டதானே வாங்கினா..திருப்பி என்கிட்டதானே தரணும்!”

திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேஇருந்தார். பர்வீன் சுல்தானாவின் கையெழுத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். P என்ற எழுத்திலும் S என்ற எழுத்திலும் வரையப்பட்ட முகங்களை கவனித்தார். பின் சொன்னார் : “P லெட்டர்ல சிரிக்கிற முகம் உங்களுடையதுபோல! S லெட்டர்ல இருக்கிற முகம் என்னோடது போல! ” நான் சட்டென ஆத்மாநாமின் கையைத் தொட்டேன்..”இதுக்குத்தான் ஆட்டோக்ராஃப்பெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..” என்றேன். “இட்ஸ் ஆல்ரைட் ராம்மோஹன்..லைஃப்ல என்னோட பொசிஸன் இதான். உங்களோட பொசிஸன் இதான்..இன் ஏ வே எனக்கு உங்கமேல பொறாமையாத்தான் இருக்கு..அனா என்ன பண்ண முடியும்..ஐம் ஹெல்ப்லெஸ்…” அந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து சில நாட்களுக்கு ஆத்மாநாம் மீளாமலேயே இருந்தார். ஆத்மாநாமின் மாற்றமுடியாத ஆளுமை இது. பர்வீன் சுல்தானா கையெழுத்துப் போட்டுத் தந்த இசைத் தட்டு இன்றும் வீட்டு கண்ணாடி அலமாரியில் பார்வையில் படும்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னைப் பொருத்தவரை அந்த இசைத் தட்டு நண்பன் ஆத்மாநாமின் சோகம் தோய்ந்த ஞாபகச் சின்னம் மாத்திரம் இல்லை..அது வேறொரு இம்சையான தருணத்தின் பிரத்யேக வரைபடமும்தான். இன்னும் ஒலி நாடாக்களின் சுழற்சியில் பர்வீன் சுல்தானாவின் ஆலாபனைகள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பன் ஆத்மாநாம் இல்லை.