திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
கடவுளர்களை, மற்றும் மக்களுள் மாண்புற்றவர்களைக் குழவிப் பருவத்தினராக்கி, அவர்தம் இளம் பருவத்தை, சுவைபடப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்றறிந்தோம். தமிழையே பிள்ளைத் தமிழ், காதல் தமிழ், வீரத் தமிழ், தத்துவத் தமிழ், முக்தித் தமிழ் எனப் பகுத்து விடலாம் போல. எவரோ ஒரு முறை சொன்னதைக் கேட்டேன்- தமிழ் எனும் புத்தகத்தில் பக்தி எனும் பக்கங்களை நீக்கி விட்டால் வெறும் இரண்டு அட்டைகள்தாம் மிஞ்சும் என. தமிழில் பக்தியை மட்டுமே கற்றவர் கூற்று எனத் தெரிந்து கொள்ள அப்போதே எனக்கு அறிவிருந்தது. என்றாலும், தமிழ் இலக்கியத்தில் பக்தியின் பங்கை மறைத்து விடுவதற்கும் இல்லை. பங்கென்று சும்மா சொல்லிவிட்டுப் போய் விடுவதற்கும் இல்லை அப்பெரும்பங்கை.
செம்பி நாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவப் பார்ப்பனக் குலத்தில் பிறந்தவர் பகழிக் கூத்தர். திருமால் மருகன் முருகையன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் வாழ் செந்திலாதிபனின் மீது பாடப்பட்ட நூல் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்.
தீபாவளி கழித்து கந்த சஷ்டி விரதம் இருந்து, முருகன் சூரபத்மனை வதம் செய்யும் நாளில் எனக்கிது எழுத நேர்கிறது. எங்களூரில் சூர சம்ஹாரம் என்று சொல்வதில்லை. சூரன் பாடு என்பார்கள். படுதல், படுகளம், பாடு என்றால் வதைப்படுதல். ‘பட்டனன் என்ற போதும் எளிதினிற் படுகிலேன் நான்’ என்பது கம்பன் மொழியில் இராவணன் கூற்று.
திருச்செந்தூரின் பெருமையை அருணகிரியாரின் மொழியில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்க வேண்டும்.
‘சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்
தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம்
மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும்
வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது என்தலை மேலயன்
கையெழுத்தே’
‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்று பாடிய குமரகுருபரர் பிள்ளைத் தமிழுக்கு சற்றும் குறைவில்லாதது பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ். இந்தப் பிள்ளைத் தமிழில் வேறு சில பருவங்களின் தமிழ் வளத்தைப் பார்க்கலாம். பகழிக் கூத்தரின் தமிழ் ஆளுமைக்கும் எடுத்துக் காட்டாக அமையும்.
1. ‘தார்கொண்ட மணிமார்ப செந்தில் வடிவேலனே
சப்பாணி கொட்டி அருளே
தரளம்எறி கரையில் வளைதவழ் செந்தில் வேலவா
சப்பாணி கொட்டி அருளே.
2. தவளமணி முத்தை அலை எரியும் நகர்க்கு அதிப
சப்பாணி கொட்டி அருளே’
3.. குறைகடல் அலையெறி திருநகர் அதிபதி
கொட்டுக சப்பாணி
4. சந்தப் பொறுப்பு இறைவ செந்தில் பதிக்குமர
சப்பாணி கொட்டி அருளே
என்பன சப்பாணி பருவத்து சில பாடல் வரிகள்.
முத்தம் எனில் முத்து எனும் பொருள் உண்டு. முத்து எனில் முத்தமிழ் என்றும் பொருள் உண்டு. பிள்ளைத் தமிழ் நூல்களின் ஐந்தாம் பருவம் முத்தப் பருவம். திருச்செந்தூர் முருகனின் முத்தத்துக்கு விலையில்லை, மற்ற எல்லா முத்துக்களுக்கும் விலையுண்டு எனப் பகழிக் கூத்தரின் பாடல் ஒன்று.
‘கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலையுண்டு
தத்தும் கரட விகடதட
தத்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம் தனக்கு விலையுண்டு
தழைத்துக் கருத்து வளைந்தமணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தகுநித் திலம்தனக்கு
கூறும் தரமுண் டுன்கனிவாய்
முத்தம் தனக்கு விலையில்லை
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடலலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.
கத்தும் கடலலை எடுத்தெறியும் கடும் சூல் உளைந்த வலம்புரிச் சங்குகள், கரையில் தவழ்ந்து, மணலில் சொரிந்த முத்துக்கு விலை உண்டு. தத்தி நடை பயிலும் மலை போன்ற மதம் பிடித்த யானையின், உன்மத்தம் பிடித்து விகடக் கூத்து ஆடும் யானையின், பிறைச் சந்திரன் போல் வளைந்திருக்கும் தந்தத்தில் விளையும் முத்துக்கு விலை உண்டு. தழைத்து, அழுந்தி வளைந்து, மணிக் கொத்தும் சுமந்த, பசிய நெல்லின் குனித்த முத்தினுக்கு விலை உண்டு. மேகம் தரும் நித்திலம் தனக்குக் கூறும் தரம் உண்டு. உன் கனிவாய் முத்தம் தனக்கு விலை இல்லை. முருகா முத்தம் தருகவே. முத்துக்களைச் சொரியும் கடல் அலைவாய் முதல்வா முத்தம் தருகவே!
பெரும்பாலும் முத்தைச் சொரியும், ஈனும் சங்குகளின் பேறுகால வலி பேசப்படுகின்றது, இத்தகு பாடல்களில். ‘கடும் சூல் உளைந்து வலம்புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில் கான்ற மணி’ எனும் போலும், ‘குவளைத் தடத்தின் மடை வாயில் குடக்கூன் சிறுமுள் பணிலம் ஒரு கோடி கோடி ஈற்று உளைந்து முத்தம் சொரியும்’ எனும் போதும் பகழிக் கூத்தர் சங்கினங்களின் பேறு வலியை உணர்ந்து பேசுகிறார்.
‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’ என்று குமரகுருபரர் முத்துக் குமாரசாமிப் பிள்ளைத் தமிழில் முருகனை ஏற்றுவது போல, பகழிக் கூத்தர் ஏற்றும் பாடல்கள் பல உண்டு இதனுள். தமிழைக் காதலிக்கும் எவரும் பகழிக் கூத்தரின் தமிழில் மெய்மறந்து போவார்கள்.
வயலும் செறிந்த கதலிவன
மாடம் செறிந்த கதலிவள
மலர்க்கால் எங்கும் தேனின் நிரை
மாலை தோறும் தேனின் நிரை
புயலும் செறிந்த கனக வெயில்
புடையே பரந்த கனக வெயில்
பொதும்பர் தோறும் ஓதிமம் என்
புளினம் தோறும் ஓதிமம் செங்
கயலும் செறிந்த கண் கடையார்
கலவி தரும் போர்க் கண் கடையார்
கருணை புரியும் அடியாருள்
காதல் புரியும் அடியார் சீர்
முயலும் படிவாழ் திருச்செந்தூர்
முருகா முத்தம் தருகவே
மொழியும் சமயம் அனைத்தினுக்கு
முதல்வா முத்தம் தருகவே’
முதலில் அருஞ்சொற் பொருள் :
கதலிவனம் – 1. வாழை வனம்
2. கொடிக் கூட்டம்
தேனின் நிரை – 1. மது வரிசை
2. வண்டு இனம்
கனக வெயில் – 1. கல் நக எயில்
2. பொன் வெயில்
பொதும்பர் – சோலை
புளினம் – மணற்குன்று
கட்கடையார் – கடைக் கண் காட்டும் பெண்டிர்.
கலவி தரும் போர்க் கட்கடையார் – கலவி தரும் போரின் கண் பின்வாங்காதவர்.
சீர் – புகழ், கீர்த்தி.
இனி எனக்குத் தெரிந்த வகையில் பொருள் கூறுகிறேன்.
வயல்கள் எல்லாம் வாழை வனமாகச் செறிந்துளது. மாடங்களில் எல்லாம் கொடிகள் கூட்டமாகச் செறிந்துள்ளன. கொடி என்பதற்குப் பெண்கொடி எனவும் பொருள். மலர்க்கால்களில் எல்லாம் தேனின் வரிசை. மாலைகளில் எல்லாம் வண்டினம். புயல் மோதுகின்ற கற்கோட்டைகளின் இடையே பரந்த கனக வெயில். மென்மணற் குன்று எங்கும் அன்னப் பறவை, பொதும்பர் எனில் சோலை, சோலை தோறும் அன்னப் பறவை. செங்கயல் போன்ற கடைக்கண் பார்வை உடைய பெண்கள். அவர்கள் கலவி எனும் போர்களில் பின்னடைய மாட்டார்கள். இங்கு செங்கயல் என்பது காமத்தினால் சிவந்த கயல் போன்ற கண்கள் எனப்படும். கருணை புரியும் உன் அடியாரும் உன்மேல் காதல் புரியும் அடியாரும் புகழையும் கீர்த்தியையும் முயன்று வாழும் திருச்செந்தூர் முருகா, முத்தம் தருகவே! மொழியும் சமயம் அனைத்தினுக்கும் முதல்வா முத்தம் தருகவே! பேசப்படும், பயிலப்படும், ஒழுகப்படும் அத்தனை சமயத்துக்கும் முதல்வனே என்பது ‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’ எனும் குமரகுருபரரின் வரியை நினைவுபடுத்தவில்லையா?
வாரானைப் பருவத்துப் பாடல்களில் மிகுந்த நயம் உடையவை ‘வளரும் களபக் குரும்பை முளை வள்ளிக் கணவா வருகவே’ என முடியும் பாடல்கள்.
இறைவனைக் காதலியாகவும் காதலனாகவும் பெண்பிள்ளையாகவும் ஆண்பிள்ளையாகவும் பாடுவது ஒரு மரபு. முன்பு, இஸ்லாமிய சுஃபி மரபுச் சித்தரான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைப் பற்றி எழுதும்போது இத்தன்மை பற்றிப் பார்த்தோம். ஆண்மகவாக, பெண் மகவாக உருவகித்துப் பாடும்போது, கவிதையில் நேர்த்தியாகத் தொனிக்கும் பாவங்களும் மொழி அழகும் சிறப்புற அமைந்து விடுகின்றன.
வாரானைப் பருவத்துப் பாடல் ஒன்று, பாடலின் பருவம் பார்ப்பதற்காக:
‘இறுகும் அரைஞாண் இனிப் பூட்டேன்,
இலங்கு மகரக் குண்டலத்தை
எடுத்துக் குழியின் மீது அணியேன்
இனியன் முகத்துக் கேற்ப ஒரு
சிறுகும் திலதம தினித் தீட்டேன்
திருக்கண் மலர்க்கு மையெழுதேன்
செம்பொற் கமலச் சீறடிக்குச்
சிலம்பு திருத்தேன் நெரித்து விம்பி
முறுகு முலைப்பால் இனிது ஊட்டேன்
முகம் பார்த்திருந்து மொழி பகரேன்
முருகா வருக சிவசமய
முதல்வா வருக திரை கொழித்து
மறுகு மலைவாய்க் கறை சேர்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே’
இதில் சில நயங்கள் சொல்வதற்கு உண்டு. வளரும் குழந்தைக்கு வளர வளர அரைஞாண் இறுகும். அதனைத் தளர்த்தி மறுபடி பூட்டுவது தாயின் வேலை. ‘இறுகும். அதனைத் தளர்த்தி மறுபடி பூட்டேன்,” என்றுரைக்கும் நயம். உன் முகத்துக்கு ஏற்ப சிறு குங்கும திலகம் தீட்டேன் என்பதன் நயம், ஓரோர் முகத்துக்கு ஏற்ப தாயார் கோவிப் போட்டோ, சிறு புள்ளிப் பொட்டோ, அர்த்த சந்திர வடிவத் திலகமா, நெடிதாய்த் தீட்டும் வரையோ வைப்பார்கள். திலகத்தின் வடிவம் முகத்தின் வடிவத்துக்கு ஏற்ப அமைவது. பால் முறுகுவது அதனைக் காய்ச்ச அடுப்பில் ஏற்றிச் சூடாக்கும்போது மட்டுமே என நினைத்திருந்தோம். ஆனால் இங்கு ‘நெறித்து, விம்மி, முறுகு முலைப்பால்’என்கிறார் புலவர். குழந்தைக்கு பாலூட்டும் நேரம் நெருங்க, பால் சுரக்க, முலைகள் நெறிந்து, விம்மி, உடற்சூட்டில் முலைப்பால் முறுகுகிறது என்பது நயம். குரும்பை என்பது தெங்கின் இளம்பருவத்துக் காய். கொச்சங்காய் என்போம் நாஞ்சில் நாட்டில். கொச்சு எனில் சிறிய எனப் பொருள். இளநீர் பிடிப்பதற்கும் முந்திய பருவம். எலுமிச்சை அளவிலான காய். அது குரும்பை. ‘வாரிய தெங்கின் குரும்பை’ என்பது முற்றுப் பெற்ற வடிவம் அல்ல. வளரும் தன்மை கொண்டது. எனவே, ‘வளரும் களபக் குரும்பை முலை வள்ளிக் கணவா’ என்கிறார் புலவர்.
மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ்
அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் அமைந்த பாடல்கள். சிற்றிலக்கியங்கள் பலவற்றின் பாடல்களின் ஓசை நயம் உணர வேண்டின் சீர் பிரிக்காமல் சேர்த்து வாசிக்க வேண்டும். கேட்க இனிமையாக இருக்கும். பல பாடல்கள் சந்தம் பொங்கும் ஆசிரிய விருத்தங்கள். ஆனால் பிரித்து வாசித்தால்தான் நமக்கு முக்கால்வாசியாவது பொருள் புரிகிறது. இது காலத்தின் கோலம் அல்லது அலங்கோலம்.
அதென்னவோ தெரியவில்லை, முத்தப் பருவத்துப் பாடல்களே நான் அதிகமும் எடுத்தாள நேர்கிறது. முத்து பிறக்கும் இடங்கள் பற்றி, முத்தப் பருவத்துப் பாடல் இது.
‘சங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின்,
மீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின்
ஆவெயிற்றின்
மங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின்
அந்தின், மதியின், அரவில், கிடங்கர் என வகுத்த
இருபான் தரு முத்தம்
தங்கட்கு ஒழிவும் மறுவும் இழிதகையும் அளவும் மாற்றும் உள
சண்முகவ நீ தரும் முத்தம் தனக்கு முனம் கூறியது
இலதாம்
வங்கத் தடம் சேர் மருதவரை மணியே முத்தம் தருகவே
வல்லி இரண்டு படர் நிழலின் வாழ்வே முத்தம்
தருகவே’
உரையாசிரியர் எழுதுகிறார் : வலம்புரிச் சங்கு, மூங்கில், கரும்பு, செந்தெல், இப்பி(சிப்பி), மீன், வயல், மலை, யானை மருப்பு(தந்தம்), தாமரை மலர், உழும் கலப்பையின் கொழு நுனி, மேகம், வாழை, கமுகு, கற்புடை மாதர் கழுத்து, குருகு, சங்கு, நிலவு, பாம்பு, கடல் எனும் இருபது இடங்களில் தோன்றும் எனக் கூறப் பெற்ற முத்தம்களுக்கு குறைவும், களங்கமும், இழிவும், அளவும், விலையும் உள்ளன. ஆயினும் அலைவீசும் பொய்கைகள் நிறைந்த மருதமலையில் விளங்கும் மணியே, ஆறுமுகப் பெருமானே, நீ தரும் முத்தத்திற்கு முற்கூறிய குற்றங்கள் இல்லை. தெய்வானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களை உடைய அருளின் உறைவிடமே, முத்தம் தருகவே!
இதில் உரையாசிரியரின் சுவையான குறிப்பு ஒன்றுளது : முத்துக்கள் தோன்றுமிடம் பதின்மூன்று என்று திருவிளையாடற் புராணம் கூறும். சங்கம், மைக்கரு முகில், வேய்(மூங்கில்), பாம்பின் மத்தகம், பன்றிக் கோடு, மிக்க வெண்சாலி(நெல்), இப்பி(சிப்பி), மீன் தலை, வேழக் கன்னல், கரிமருப்பு, ஐவாய் மான்கை, கற்புடை மடவார் கண்டம், இருசிறைக் கொக்கின் கண்டம் என்ப. மாணிக்கம் விற்ற படலம், பாடல் 52-53.
கோவை மாநகரின் பெருமையான இறைத்தலங்களில் ஒன்று மருதமலை. மருதமலை என்பதுவே மருதாசலம். பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து அடங்கிய இடம். எம்.எம்.ஏ.சின்னப்பத் தேவரின் திரைப்படம் ஒன்றில், மதுரை சோமசுந்தரம் பாடிய ‘மருதமலை மாமணியே முருகையா’ எனும் பாடல் இத்தலத்தின் புகழை ஏற்றம் பெறச் செய்தது. சப்பாணிப் பருவத்தில் புலவர் பாடும் ‘சகம் முழுதும் இசை புகலும் மருதவரை முருகனே சப்பாணி கொட்டி அருளே’ எனும் விதத்தில் கேட்பர் யாவரும் இன்றும் சப்பாணி கொட்டும் பாடல் அது.
முத்துக்களின் நிறம் எது நண்பர்களே! மனக் கண்ணில் உடனே தோன்றுவது வெள்ளை நிறம். ஆனால் இந்த பிள்ளைத் தமிழ் மூலம் ஒவ்வொரு முத்தின் நிறம் என்ன என்பதை முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.
‘கோல மருப்பின் உயிர்த்த முத்தம் குருதி நிறத்த, செஞ்
சாலிக் குலைவீழ் முத்தம் அரி நிறத்த, கொடுநா அரவச்
தருமுத்தம்
நீல நிறத்த, முடங்கன் முத்தம் ஆலி நிறத்த, வேழமுத்தம்
நிரைசேர் மாடப்புறாவின் முட்டை நிறத்த, வானிற்
பாடர்மேக
சாலம் குவித்த முத்தம் ஒளிர் சவிதான் நிறத்த, என
மேலோர் சாற்ற அறிந்தார், நினது முத்தம் தனக்கு
ஈண்டு உவமை வகுத்தறியார்,
மாலும் மயனும் புகழ் மருதவரை வேள் முத்தம் தருகவே
வல்லி இரண்டு படர் நிழலின் வாழ்வே முத்தம்
தருகவே’
என்பது பாடல்.
உரையாசிரியரின் விளக்க உரை : திருமாலும், நான்முகனும் போற்றும் மருதமலைச் செவ்வேளே! அழகிய யானையின் கொம்புகள் ஈன்ற முத்தம் குருதி நிறம் வாய்ந்தது; செந்நெல் கதிரில் விளைந்த முத்தம் பொன்னிறத்தது; கொடுமையான நாவினைக் கொண்ட நாகம் உமிழும் முத்தம் நீல நிறத்தது; மூங்கிலில் பிறந்த முத்தம் வெண்ணிறங் கொண்டது; கரும்பில் தோன்றும் முத்தம் கூட்டமாக வாழும் மாடப்புறாவின் முட்டை நிறத்தது; வானில் படரும் மேகக் கூட்டம் சொரிந்த முத்தம் ஒளிவீசும் கதிரவனது நிறம் கொண்டது எனப் பெரியோர் தம் முன்னோர் சொல்ல அறிந்தனர்; ஆயினும் நின் முத்தத்துக்கு இங்கு உவமை வகுத்துச் சொல்ல அறியாது நின்றனர்; அத்தகைய முத்தம் தந்தருள்வாயாக! தெய்வயானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களையுடைய அருளின் உறைவிடமே! முத்தம் தருவாயாக!
பெரியோர்கள், தம் முன்னோர் சொல்ல அறிந்தனர் எனும் கூற்றுக்குச் சான்றாக, உரையாசிரியர் இரண்டு பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர்.
‘மாட வெண் புறவின் முட்டை வடிவெனத் திரண்ட பேழ்வாய்
கோடு கான் முத்தம் வெள்ளை நிறத்தன கொண்மூ முத்தம்
நீரு செம் பரிதி யன்ன நிறத்தது கிளைமுத்து ஆலிப்
பீருசால் நிறத்த நாவின் பெருமுத்தம் நீலத்தாமால்’
– திருவிளையாடற்புராணம், மாணிக்கம் விற்றபடலம், பாடல் எண் : 55
‘ஏனம்ம ஆரஞ் சோரி யீர்ஞ்சுவைச் சாலி முத்தம்
ஆனது பசுமைத் தாகும் பாதிரி யனைய தாகும்
மீனது தரளம் வேழம் இரண்டினும் விளையு முத்தம்
தானது பொன்னின் சோதி தெய்வதஞ் சாற்றக் கேண்மின்’
மேற்படி, பாடல் எண் 56
உண்மையில் முத்துக்களில் இத்தனை வகைகள், நிறங்கள், பிறப்பிடங்கள் இருந்தன என்பது, எமக்கு வியப்பூட்டும் தகவல். இவை விஞ்ஞான பூர்வமாக நம்பத்தகுந்தனவா, நிரூபிக்கப்பட்டனவா என்பது பற்றி எனக்குத் தகவல் இல்லை.
(தொடரும்)