[stextbox id=”info” caption=”உருகும் சீனாவின் பனிப்பாறைகள்”]
சீன அறிவியலாளர்களின் ஆய்வு தெரிவிக்கிறது, நிறைய பனிப்பாறைகள் சீனாவின் மலைப்பகுதிகளில் உருகி விட்டனவாம். க்ளேஸியர் எனப்படும் இந்தப் பாறைகள் வெகுகாலமாக, சில ஆயிரம் வருடங்களாகக் கூட மலைகளின் உச்சிப் பகுதிகளில் நிரந்தரமாக இருந்தவை. இவற்றில் ஒரு சிறு பங்கு உருகித்தான் சீனாவின் பல பெரும் நதிகள் வருடம் பூராவும் நீரோட்டம் நிறைந்து காணப்படுவன. இந்தியாவின் பல ஜீவ நதிகளும் இப்படி இமயமலை உச்சிப் பனிப்பாளங்களில் ஒரு சிறு பங்கு உருகி வந்து ஓடுவதால் கிட்டுவனதான். இந்தப் பனிப்பாளங்கள் உருகி இல்லாமலே போய்விட்டால் ஜீவ நதிகள் என்ன ஆகும்? வற்றிப் போனால் இவற்றைச் சுற்றி உருவான பெரும் மக்கள் கூட்டங்கள், சமுதாயங்கள்? பிச்சைக்காரர்களாக, அகதிகளாக அலைய வேண்டி வரும். இன்னும் என்னென்ன பிரச்சினைகளெல்லாம் வரப்போகின்றனவோ, சீனாவுக்கும், இந்தியாவுக்கும்? இருக்கும் குறை நீருக்காகப் போர்கள் எழுமோ?
http://www.spiegel.de/international/world/0,1518,794124,00.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”இறந்த சித்தாந்தங்கள்”]
இந்தியாவில் இன்னும் மார்க்சியம், லெனினியம் என்று உளுத்து உவர் மண்ணாகிப் போன கருத்தியலைக் கட்டிக் கொண்டு அழும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் இருக்கிறார்கள். ஒரு கூட்டம் ஸ்டாலினை மேதை என்றும், மாமனிதர் என்றும் கூட விழுந்து தெண்டனிட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னொரு கூட்டம் பெரும் கொலைகாரனான மாவோவின் பதாகையை இன்னும் தூக்கிக் கொண்டு அலைகிறது. முன்னாள் சோவியத் சமூகக் குடிமக்களில் அதுவும் சிந்தனையாளர்களில் பலரைக் கேட்டால் என்ன சொல்கிறார்கள்? இங்கு ஹங்கரியின் ஒரு சிறு துண்டுப் படம் சான்றாகக் கிட்டுகிறது. படியுங்கள். இதன் முழு வடிவம் ஹங்கரிய மொழியில் உள்ளது. அதை கூகிளின் வழி மொழி பெயர்த்தால் பயங்கரமாக குழப்படியாக இருக்கிறது. இருந்தும் கொஞ்சமாவது புரிகிறது. இதோ அந்த லிங்க்.
http://www.es.hu/adam_michnik;hogyan_lehettel_ennyire_hulye;2011-10-19.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”மறைந்திருந்து தாக்கும் மர்மமென்ன?”]
கொல்லுவதை மட்டும் மேன்மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொலையாளிகள் மறைந்து இருந்து கொல்லும் ராட்சத யுத்தம் மேன்மேலும் பெருகி வருகிறது. மறைந்து கொல்வதை விமான குண்டு வீச்சு, ராக்கெட் குண்டு வீச்சு, பன்னாடு தாண்டித் தாக்கும் மிஸைல்கள்-இப்படிப் படிப்படியாக தூரத்திலிருந்தும், உயரத்திலிருந்தும் தாக்குவதை முனைந்து வளர்க்கிறார்கள் மேலையர். ஒரு காரணம், மிக அடிப்படையானது. இதை எத்தனை பேர் யோசித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்கில் குழந்தைகள் பிறப்பது மிகவும் குறைந்து விட்டது. போருக்குப் போய்ச் சாக இளைஞர்கள் முன்னளவு தயாராக இல்லை, அத்தனை எண்ணிக்கையிலும் அவர்கள் இல்லை. முதியோர்கள் கூட்டம் பெருத்து வருகிறது. உலக வளங்களில் பெரும்பகுதியை இன்னமும் கபளீகரம் செய்து வாழும் மேற்குக்குத் தம் வாழ்விலும் வசதி குறையக் கூடாது, தம் நிலங்களில் இதர நிலப்பகுதிகளிலிருந்து மனிதர்கள் உள்ளே நுழையக் கூடாது. அதே நேரம் பிற நிலப்பகுதிகளில் கிட்டும் கனிமங்களும் எரிபொருட்களும், தொழிலுற்பத்திப் பொருட்களும் தம் நாடுகளுக்கு மலிவு விலையில் பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இப்படிப் புலி வாலைப் பிடித்த கதை அவர்களுடையது.
எனவே போர்களில் ஆட்களை இழக்காது ஆயுதங்களால் மட்டும் தாக்க மேன்மேலும் திட்டமிட்டு சாதிக்கிறார்கள். கொல்லப்படும் மனிதரை அருகில் பார்த்தால், தொலைக்காட்சிகளில் ஊறி வளர்ந்து எதையும் உளநிலைப் பார்வையிலேயே பார்த்துப் பழக்கமான முதலியப் பண்பாட்டு மனிதர்களுக்கு மிக்க மன உளைச்சல் ஏற்படுகிறதாம். ஆனால் அதனால் கொல்வதை விடுவார்களா என்றால் அதெப்படி முடியும்? அது பண்பாட்டில் ஊறிப் போய் விட்டது. அதனால் நேரில் பார்க்காமல் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொல்வதை ஒரு பெரும் தொழில் நுட்பமாக வளர்க்கிறார்கள். ட்ரோன் என்று அழைக்கப்படும் ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மிக்க பயனுள்ளவையாக இன்று ஆகி விட்டன என்றாலும், அதையும் விட அணுக்கமாகத் தாகக வேண்டும், ஆனால் சிறிதும் குறி தவறாமல் தாக்க வேண்டும். எப்படி? ராட்சதப் போராளிகளுக்குக் கற்பனையா பஞ்சம். இந்திரஜித்தர்களாயிற்றே. எனவே இந்தக் கருவி தயாராகிறது. இது ட்ரோன்கள் குஞ்சு பொறித்தால் எப்படி இருக்கும் அது போல, முட்டையிட்டு முட்டைகளைத் தரையெங்கும் உருள விடுவது போல. உருண்டு வரும் சாவு இது. படியுங்கள், நேற்றைய அறிவியல் கதைகளில் வந்த கற்பனை உத்திகள் இன்று நிஜமாகின்றன என்பது புரியும்.
http://www.wired.com/dangerroom/2011/10/socom-warhead-drones/
[/stextbox]
[stextbox id=”info” caption=”புது வகை ஜிபிஎஸ் கருவி”]
கண்டு பிடிப்புகள் எல்லாமே பெரிய தாவலாக இருக்க அவசியம் இல்லை. தக்க தருணத்தில் ஒரு பக்கவாட்டு நகர்வு அல்லது சிறு தாவல் திடீரென்று ஒரு கருவி அல்லது ஒரு சிந்தனை வழியைப் பல மடங்கு பயனுள்ளதாக்கி விடும். க்ராஃபீன் என்ற மிக மிக மெல்லிய ஆனால் மிக்க பயனுள்ள பொருளைத் தயாரிப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால் அதை மெலிய தகடுகளாக அடுக்கினால் அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு விடுகின்றன. என்ன செய்யலாம்? அவற்றைக் காகிதத்தைக் கசக்குவது போலக் கசக்கி விட்டால்? ஒரு பிரச்சினை தீர்ந்தது, உற்பத்தி செய்து பல இடங்களுக்கு அனுப்புவது சாத்தியம். பயன்படும் இடத்தில் மெலிய தட்டையான தகடாக அது வேண்டுமென்றால் என்ன செய்வது என்பதை அப்புறம்தான் யோசிப்பார்கள் போலிருக்கிறது. இப்படிப் படிப்படியாகப் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள் என்பதே கவனிக்கத் தக்கது.
கீழே கொடுக்கப்படும் சுட்டியில் ஒரு பிரச்சினை அழகாகத் தீர்க்கப் பட்டிருக்கிறது. ஜியொ பொஸிஷனல் ஸிஸ்டம் எனப்படும் ஜிபிஎஸ் கருவிகள், மேற்கில் பல நாடுகளில் இப்போது மிகவும் பயன்படுகின்றன. சாதாரணமாகப் புது ஊர்களில் வந்திறங்குபவர்கள் கார்களை ஓட்டத் தயங்குவார்கள் ஏனெனில் நகரங்களில் ஒரு கையில் வரைபடத்தை வைத்துக் கொண்டு கார் ஓட்டி ஒரு இடத்தை அடைவது கடினம். யாரைப் பார்க்கப் போகிறோமோ அவர்களிடம் இருந்து சரியான வழியைக் கேட்டறிந்தும் போய்ச் சேருவது கடினம். ஆனால் அப்படித்தான் வெகு காலமாக எல்லாரும் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தார்கள். நேரம் மேன்மேலும் சிக்கனமாகப் பயன்படுத்தத் தேவையான இந்தக் காலத்தில் எத்தனை கச்சிதமாக இதைச் செய்ய முடியுமோ, எவ்வளவு குறைவாக தொலைபேசி, கணினித் தொடர்பில் வழியைக் கண்டறியச் செலவழிக்க முடியுமோ அத்தனை குறைவாகச் செலவழித்து வேலைக் கருக்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக வந்தவை ஜிபிஎஸ் கருவிகள். இது ஒரு ராணுவப் பயன்பாட்டுக்கான கருவியாக இருந்தது, இன்று வணிகப் பயன்பாட்டுக்கு, பொது நுகர்வுக் கருவி ஆகி இருக்கிறது. பெரிய கருவிச் சந்தை இதற்கு. ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை. காரோட்டும்போது இந்த வரைபடம், வழி சுட்டல் ஆகியனவற்றைப் பார்த்தபடி ஓட்ட முடியாது. இதில் ஒரு அறிவிப்பாளரின் குரலில் உரக்கவே ஒரு மைல் முன்னே போய் மூன்றாவது வலது திருப்பத்தில் சற்றே இடது சாரியாகத் திரும்பு என்று சொல்லக் கேட்டாலும் கூட ஏதேதோ தவறுகள் வருகின்றன. அதைத் தவிர பலருக்கு கேட்கவும் கேட்டு, பார்க்கவும் பார்த்தால்தான் வண்டியை ஒழுங்காகச் செலுத்த முடிகிறது.
தவிர ஓட்டுபவருக்கு எத்தனை கவனச் சிதறல் குறைவாக இருக்குமோ அத்தனை குறைவாக இருப்பது நல்லது என்று கார்/ பஸ்/ ட்ரக் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக காப்பீட்டு நிறுவனங்கள் இப்படி அறிவுறுத்துகின்றன.
சமீபத்தைய கண்டு பிடிப்பு இது, இது வழிகாட்டும் விதமே அலாதி. காரின் மொத்த முன்புறக் கண்ணாடியிலேயே இது சாலையை நாம் பார்த்தபடி இருக்கையிலேயே ஒரு மெலிய ஒளிக்கற்றையைக் கண்ணாடியில் நீட்டி அதன் மூலம் சாலையை ஒரு முப்பரிமாணக் காட்சி போலாக்கி அதில் வழியைச் சுட்டுகிறது. ஓட்டுபவர் தலையைச் சாலையிலிருந்து திருப்பவோ, கண்களைச் சாலையிலிருந்து எடுக்கவோ தேவை இராது. இதை ஒரு இலேசான நகர்வில் பெரும் தாவல் என்று குறிக்கலாம் என்றே தோன்றுகிறது. இது ஏன் இத்தனை காலம் யாருக்கும் தோன்றவில்லை? 3-டி சினிமா, டெலிவிஷனுக்கான கருவிகள் கண்டு பிடித்தபின்னரே இந்த நகர்வு சாத்தியமாகி இருக்கிறது. அதுவும் இப்போது 3 டி டெலிவிஷன் திரையில் விசேஷக் கண்ணாடி அணியாமலே காட்சியை எல்லாரும் காணக் கூடிய வகை ஒளிபரப்பு முறை கண்டு பிடிக்கப்பட்டு விட்டதாலேயே இந்த நகர்தல் சாத்தியமாகி இருக்கிறது எனச் சொல்லலாம்.
இது இந்தியச் சாலைகளுக்கு உதவுமா என்று தெரியவில்லை. ஆனா இங்கும் உதவக் கூடும். ஏனெனில் சமீபத்தில் பல நகரங்களில் வழி காண கூகிளின் வரைபட மென்பொருள் உதவியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இக்கருவி பற்றிய விவரணையை இங்கே காண்க:
http://www.gizmag.com/tre3dnavsystem/20278/
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஜப்பான்…அளக்க முடியாத கதிர் வீச்சு”]
சமீபத்தில் டோக்யோவில் பல இடங்களில் கதிர் வீச்சு அளவு ஏற்க முடியாத அளவு உயர்ந்திருப்பதாகத் தெரிய வந்ததும் ஜப்பானியர்கள் கொஞ்சம் அரண்டிருக்கிறார்கள். ஃப்கஷீமா அணு உலை உள்ள ஊரிலிருந்து டோக்யோ ஒன்றும் அருகில் இல்லை. பறவை பறக்கும் விதத்தில் 238.34 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலை வழியே சுமார் 274.10 கிலோமீட்டர் அல்லது 297.92 கிலோமீட்டர் தூரம். மைல் கணக்கில் இது 148.1 மைல். சாலை வழி தூரம் 170.31 மைல்களிலிருந்து 185.12 மைல்கள்.
இவ்வளவு தூரத்தில் எப்படிக் கதிர் வீச்சு கடந்தது என்று இப்போது தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள். ஒரு காரணமாக மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வருவது சொல்லப்படுகிறது. இன்னொன்று சமீபத்தில் பெய்த மழையில் இருந்த மஞ்சள் நிற நீர், இதே மகரந்தத் தூள்கள் ஃப்கஷீமா பகுதியில் இருந்து காற்றில் கலந்து மழையோடு கலந்து டோக்யோவில் பெய்திருக்கலாம் என்கிறார்கள். இதனால் ஒரு அறிவியலாளர் ஜப்பானில் இருந்து வரும் வசந்தத்துக்குள் வெளியேற முடிகிறவர்களெல்லாம் வெளியேறி விடுதல் நலம் என்கிறார். பாவம் ஜப்பானியர். உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்தி, பொறியியல் நுட்பத்தின் உச்சத்தில் உள்ள ஒரு நாட்டில் ஒரே விபத்தில் அனைத்தும் தலைகீழ் விகிதங்களாகி விட்டன.
[stextbox id=”info” caption=”சூடான் : மதம் vs. மதம்”]
உலகக் கிருஸ்தவம் யூரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இன்னொரு போர் ஆயுதம் என்று நிறைய ஆய்வுகள் சொல்கின்றன. காட்டாக, அமெரிக்கப் படையினர் தம்மைக் கிருஸ்தவப் படை என்றே பேசிக் கொள்வதாகத் தகவல்கள் அமெரிக்க ஊடகங்களிலேயே வெளியாகின்றன. அதில் நாத்திகர்கள், இதர மதத்தினருக்கு இடம் மிகக் குறைவாகவே உள்ளதாகவும், அப்படி ஒரு படபடப்பான கிருஸ்தவம் அந்தப் படையில் நிலவுவதால் தமக்கு அன்றாட வாழ்வில் நிறைய அழுத்தம் ஏற்படுகிறது, தேவையற்ற பிரச்சினைகள், உளைச்சல் என்று பல நாத்திகர்கள் அல்லது கடவுள் நம்பிக்கை/ பிரார்த்தனை போன்றவற்றில் ஈடுபாடு இல்லாதவர்கள் குறை சொல்லி இருக்கிறார்கள்.
உலகில் அரபு ஏகாதிபத்தியத்தின் போராயுதமாக இஸ்லாம் செயல்படுகிறது என்றால் வெள்ளையர்/ யூரோப்பிய நாகரிகங்களின் போராயுதமாக எவாஞ்சலிய/ மரபு கிருஸ்தவம் செயல்படுகிறது. இரண்டுமாகத் தமது கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியை ஏராளமாக அதிகரிக்கும் பொருட்டுத் தொடர்ந்து போர்களில் இறங்கும் ஒரு நிலப்பரப்பாக ஆப்பிரிக்கா இருக்கிறது. இவை அங்கு தொடர்ந்து செயல்பட்டு புராதன ஆப்பிரிக்க மத அமைப்புகள், நம்பிக்கைகளை வேட்டையாடி அழிக்கின்றன.
அது போதாதென்று மேன்மேலும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் வேகத்தில் தமக்குள் சண்டையிட்டு, சாதாரண ஆப்பிரிக்க மக்களைப் பலியிடுகின்றன. இப்படி ஒரு போரில் சமீபத்தில் பிளக்கப்பட்ட நாடு சூடான். சூடானின் இஸ்லாமியத் தீவிர வாதம் அங்குள்ள பழம் ஆப்பிரிக்க மதக்காரர்களையும், கிருஸ்தவர்களையும் நசுக்கி விட முயன்ற போது எழுந்த உள்நாட்டுப் போரில் கிருஸ்தவர்கள் நிறைந்த தெற்கு சூடானியர் பல வருடங்களாக லட்சக்கணக்கான மக்களை இழந்தாலும் விடாமல் போரிட்டு, சூடானின் மைய அரசைத் தம் கோரிக்கைகளுக்குப் பணிய வைத்தனர். இந்தப் போருக்கு மேற்கு நாடுகள் நிறைய உதவின என்பது சொல்லாமல் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
தெற்கு சூடானியர் தம் பகுதியை சூடான் நாட்டிலிருந்து பிரித்துக் கொண்டு விட்டனர். இந்தப் பிரச்சினையில் ஒரு முக்கிய அம்சம் வெறும் கிருஸ்தவ எதிர் இஸ்லாம் என்ற போராட்டம் மட்டுமல்ல. அரபு இனவாதம் எதிர் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் என்ற ஒரு முகமும் இந்தப் பிரச்சினைக்கு உண்டு. இப்போது இந்தச் செய்தி தெரிவிக்கிறது என்னவென்றால் தெற்கு சூடான் தன் நாட்டில் ஆட்சி மொழி, கல்வி மொழியை அரபியிலிருந்து இங்கிலீஷுக்கு மாற்றிக் கொள்வதாக அறிவிப்பதோடு, தன்னைக் காமன்வெல்த் உறுப்பினராகவும் ஆக்கிக் கொள்ளப் போகிறதாகச் சொல்லியிருக்கிறதாம். இது அரபு மொழி ஆப்பிரிக்காவில் செலுத்தும் ஆதிக்கத்தை ஒரு முனையில் முறியடிக்கும் என்பது யூரோப்பியரின் வீச்சு ஆப்பிரிக்காவில் இன்னொரு முனையில் நீள்கிறது என்பதையும் சுட்டுகிறது. அண்டை நாடுகளான உகாண்டா, கென்யா ஆகிய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இங்கிலீஷ் பெரும் புழக்கம் உள்ள மொழி என்பதும், அங்கு அரபி மொழிக்குச் செல்வாக்கில்லை என்பதும் தெற்கு சூடானின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். அந்த நாடுகளிலிருந்து தன் வளர்ச்சிக்கு முதலீட்டை தெற்கு சூடான் எதிர்பார்க்கக் கூடும் என்பதும் சில ஊகங்கள்.
http://www.nytimes.com/2011/10/30/world/africa/south-sudan-turns-toward-british-heritage.html?ref=world&pagewanted=print
[/stextbox]