தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!

எங்கள் பப்லு முதன் முறையாக நடக்கக் கற்றுக்கொண்டு விரைவிலேயே ஓட ஆரம்பித்தபோது, ஒரு தீவிரமான பிரச்னை எழுந்தது: வீட்டின் எந்த அறைக்குப் போனாலும் அவன் ஏற்கெனவே அங்கே இருப்பான். ஒரு கணம் சமையல் அறையில் அரைத்து வைத்த இட்லி மாவில் காலை விடுவான். அடுத்த கணம் பாத் ரூமில் ஏதோ உடைகிற சத்தம் கேட்கும். அதே நேரம் வராந்தாவில் ஈஸி சேர் தாத்தா ‘கண்ணாடி- கண்ணாடி போச்சு !’ என்று அலறுவார்.

இப்படி ஒரே நேரத்தில் பலவாய், பல இடங்களில் இருப்பது ஆயர்பாடிக் கண்ணனுக்கு அடுத்தபடி க்வாண்டம் தத்துவத்தில்தான் சாத்தியம். ப்ராஸ்பெக்ட் மாகஸீன் இதழில் க்வாண்ட்டம் பற்றி சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது (http://www.prospectmagazine.co.uk/2011/09/quantum-theory-paradox-philip-ball-new-pursuit-of-schrodinger%E2%80%99s-cat/). அதில் சுவாரசியமான கறுப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று பார்த்தேன்: ஐன்ஸ்டைன், ஹைசன்பர்க், ச்ரோடிங்கர் என்று இயற்பியல் பரீட்சையில் எனக்கு அர்ரியர்ஸ் வாங்கி வைத்த அத்தனை விஞ்ஞானிகளும் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஒரே போட்டோவில் இருக்கிறார்கள். அந்தப் படத்தில் உள்ள 18 பேர் நோபல் பரிசாளிகள் !

க்வாண்டம் இயற்பியலுக்கு நூறு வயதாகிறது (இன்னும் புரியவில்லை). இத்தாலிய மொழியில் க்வாண்டம் என்றால் ‘எவ்ளோ?’ என்று பொருள். இந்த இயலை ஆரம்பித்து வைத்தவர்களால் விடை காண முடியாத பல கேள்விகள் இருந்தன. யாரும் பார்க்காத போது அதையெல்லாம் துடைப்பத்தால் தள்ளி பீரோவுக்கு அடியில் குவித்துவிட்டுப் போய்விட்டார்கள். உதாரணமாக, ‘ஒளியும் மின் காந்த அலைதான்’ என்று காலையில் சொன்ன அதே வாய், மாலையில் கொஞ்சம் போட்ட பிறகு ‘அது அலை அல்ல, துகள்’ என்று சொல்ல ஆரம்பித்தது.

அதட்டிக் கேட்டபோது, ‘இதுதாங்க அது’ என்று செந்தில் மாதிரி குழப்பி விட்டார்கள்.

நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பொருள்கள் யாவும் நியூட்டனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவை. ஒரு வாழைப் பழத்தை மேஜை மீது வைத்தால் அது அங்கேயே இருக்கும்; பழம் எங்கே என்று கேட்டால் பதில் சொல்ல முடியும்; தூக்கி மேலே எறிந்தால் நியூட்டனின் இயக்க விதிகளின்படி எவ்வளவு உயரம் போய்விட்டு, எப்போது கீழே விழும் என்று சொல்ல முடியும். ஆனால் அணுவின் பரிமாணத்துக்குக் கீழே இறங்கிவிட்டால், பருப் பொருள்கள் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை; எதுவுமே நாம் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை.

பொருள்களுக்கு நிலைகள் உண்டு. உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் வலம்புரியாக அல்லது இடம்புரியாகச் சுற்றிக்கொண்டு இருக்கலாம். கொஞ்சம் யுரேனியத்தை எடுத்துச் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்தால் அதிலிருந்து ஓர் அணு சிதையலாம்; சிதையாமலும் இருக்கலாம். எல்லாமே ப்ராபபிலிட்டி (நிகழ்தகவு) என்கிற சாத்தியக்கூறுகளாகத்தான் பேச முடியும்.

ஒரு துகள் – எலெக்ட்ரான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் – இப்போது எங்கே இருக்கிறது, அடுத்து என்ன செய்யப் போகிறது என்று அறுதியிட்டுச் சொல்லவே முடியாது. குத்து மதிப்பாகத்தான் பேசலாம். அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றால் அதன் உந்தம் என்பதை (நிறை x திசைவேகம்) கோட்டை விட்டுவிடுவோம். அதைப் பிடிக்க முயன்றால், இது போய்விடும். இதைத்தான் பேராசிரியர் ஹைசன்பர்க் ‘டெல்ட்டா எக்ஸ் இன்டு டெல்ட்டா பி இஸ் க்ரேட்டர் தேன் ஆர் ஈக்வல் டு எச் பார் பை டூ’ என்று பயமுறுத்தினார்; கடைசி பெஞ்சியில் இருந்து மாணவர்கள் பூனை மாதிரி கத்தினார்கள்.

இப்படி நிச்சயமற்ற உலகத்திலேயே க்வாண்டம் தத்துவம் வாழ்வது பல விஞ்ஞானிகளுக்கே பிடிக்கவில்லை. இதன் ஆரம்ப கர்த்தர்களில் ஒருவரான ஐன்ஸ்டைனே ஒரு கட்டத்தில் ‘போங்கடா பைத்தியங்களா!’ என்று ஸ்டம்ப்பைப் பிடுங்கிக்கொண்டு ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார்.

-o00o-

அளக்கிறவன் அளப்பதனாலேயே, அளவிடப்படுவதன் அளவும் மாறிவிடும் என்பதுதான் ஹைசன்பர்க்கின் தத்துவம்.

இது எப்படி என்பதற்கு, கோபன்ஹேகன் விளக்கம் என்று ஒன்று இருக்கிறது: ஒரு க்வாண்ட்டம் துகள், தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை முடிவு செய்யாமல்தான் சுயேச்சை எம்.எல்.ஏ மாதிரி மதில் மேல் உட்கார்ந்திருக்கிறது. யாராவது அளக்க முற்பட்டால், அப்போதுதான் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து கட்சி தாவுகிறது. சரி. அதற்கு முன்னால் என்ன நடந்தது ?

சொல்ல முடியாது என்கிறது க்வாண்டம் இயல். அதாவது, நமக்குத் தெரியவில்லை என்ற அர்த்தத்தில் அல்ல; ஒரு சம்பவம் நடப்பதும், நடக்காததும் நாம் கவனிப்பதைப் பொருத்தது. கவனிக்காதபோது இரண்டுமே ஒரே நேரத்தில் சாத்தியம். சூப்பர்பொசிஷன் என்று பல்வேறு நிலைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து செய்த நவரத்தினா மிக்சர் அது.

‘யாருமே பார்க்காத போதும் வானம் நீலமாக இருக்குமா?’ என்பது போன்ற ஆழமான அத்வைதக் கேள்விகளை சங்கராச்சாரியார் (ஒரிஜினல்) வேண்டுமானால் கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் ‘மூட மதே’ என்று போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகளுக்கு நிரூபணம் தேவை; சமன்பாடுகள் தேவை. இப்போதைய அறிவியல் வளர்ச்சியில் அளவீட்டுக் கருவிகளும் உத்திகளும் கூர் தீட்டப்பட்டு இருப்பதால், இந்தக் கேள்வியை மறுபடி கையில் எடுத்திருக்கிறார்கள்.

1970-கள் வரையில் கூட க்வாண்டம் தளத்திற்கு இறங்கி அளவீடுகள் செய்வது சாத்தியமற்றதாக இருந்தது. இன்றைய லேசர் தொழில் நுட்பத்தில் கால தூரங்களை மிக மிக நுணுக்கமாக அளக்க முடியும். தனிப்பட்ட ஓர் ஒற்றை அணுவை காந்தச் சாமணத்தில் பிடித்து அந்தரத்தில் நிறுத்தி வைத்துக் கவனிக்க முடியும். துகள்களை மைல் கணக்கான பாதையில் மனோ வேகத்தில் சுற்றி வந்து மோத வைக்க முடியும். இதற்காக அமைச்சர்கள் போல் ஊரையே வளைத்துப் போட்டு பிரம்மாண்டமான துகள் முடுக்கி இயந்திரங்கள் அமைத்திருக்கிறார்கள்.

எலெக்ட்ரான் போன்ற மிகச் சிறிய துகள் ஒன்று, அலைக் கற்றை போல் பல பிரதேசங்களில் பரவிக் கிடக்கிறது. இந்தத் தீற்றலான வாழ்க்கையை அதன் அலைச் சார்பு (wave function) என்பார்கள். அதை நாம் அளக்க முற்படும்போது அந்த வேவ் ஃபங்ஷன் உள்ளுக்குள்ளே மடிந்து விழுந்து நல்ல பிள்ளையாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொள்கிறது.

ஒரு வாழைப் பழம் நாம் வைத்த இடத்தில் இருப்பதற்குக் காரணம், அதற்குள் மிக ஏராளமான துகள்கள் இருப்பதால் என்று சொல்லலாம். அவற்றின் அலைச் சார்புகள் ஒன்றோடு ஒன்று குறுக்கு மறுக்காக இணைவதால், அதை நாம் மறைமுகமாக அளவீடு செய்வது போல் ஆகிவிடுகிறது. இதை டீகொஹிரன்ஸ் என்பார்கள். அலைச் சார்புகள் கெட்டிப்பட்டு உருள் மணி போல் திரண்டுவிடுகின்றன. அவற்றின் நிச்சயமின்மை மறைந்துவிடுகிறது.

-o00o-

வரலாற்றில் ஒரு பூனையை வைத்துக் குரூரமான பரிசோதனை செய்ய முற்பட்டவர்கள் இரண்டு பேர்: முதலில் தெனாலிராமன். பிறகு ச்ரோடிங்கர்.

நிச்சயமின்மைத் தத்துவத்தில் ஓட்டை போட விரும்பிய ச்ரோடிங்கர், ‘ஒரு பூனையைப் பிடித்து வாய்யா’ என்றார். ‘பூட்டிய அறைக்குள் பூனையை விடு. பக்கத்திலேயே ஒரு துளி யுரேனியம் அல்லது ரேடியம். அதிலிருந்து ஒரே ஒரு அணு சிதைந்தாலும் கண்டுபிடிக்கவல்ல ஒரு விஞ்ஞானக் கருவி. அணு சிதைந்தால், கருவி இயங்கி ஒரு சயனைடு வாயுக் குப்பியைத் திறந்து விட்டு, பூனைக்கு சாவு மணி’.

ஆனால், உண்மையில் அணுவுக்கு என்ன ஆயிற்று என்பது – நாம் பார்ப்பதால், பார்க்கும்போதுதான் தீர்மானிக்கப்படும். அது வரை அணு தன் எல்லா நிலைகளிலும் ஒரே சமயத்தில் இருக்கும். சூப்பர்பொசிஷன் ! ஆக, பூனை அறைக்குள் ஒரே நேரத்தில் செத்த பூனையாகவும் உயிருள்ள பூனையாகவும் வாழ்கிறது. அறையைத் திறக்கும்போதுதான் சூப்பர்பொசிஷன் கலைந்து பூனை சாகிறது அல்லது பிழைத்து ஓடுகிறது. இதைப் பார்வையாளனின் புதிர் (observer’s paradox) என்கிறார்கள்.

ஆனால் க்வாண்டம் முரண்பாடுகள் எல்லாம் அணுவிற்குள்ளே பரமாணு அளவில்தான் நடக்கின்றன. பெரிய பொருள்களுக்கு இது பொருந்துவதில்லை. நல்ல வேளை. உங்கள் பர்ஸ் இந்தக் கணத்தில் உங்கள் பையில் இருக்கிறதா, என் பையில் இருக்கிறதா என்பதில் குழப்பம் வந்துவிட்டால், உலக சமாதானத்துக்கு நல்லதல்ல.

ச்ரோடிங்கர் பூனை பெரிய பிராணியாக இருப்பதால் இப்படி சீர்குலைவு ஏற்பட்டுவிடுகிறது என்று வாதாடலாம். பூனைக்கு பதிலாக ஒரு சின்ன வைரஸை எடுத்துக்கொண்டு அதே மாதிரி பரிசோதனை செய்தால்? வைரஸுக்கு உயிர் உண்டா என்பது கேள்வியானால், அதை விடப் பெரிதாக, ஆனால் மிகச் சிறிதாக ஏதாவது பிராணி அகப்படுகிறதா என்று பார்த்தார்கள். நீர்க் கரடி (tardigrade) என்ற மில்லி மீட்டரை விடச் சிறிய பூச்சி சிக்கியிருக்கிறது. இந்தக் கரடி எட்டுக் காலால் நடக்கும்; எனவே உயிரோடுதான் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரியும்.

-o00o-

‘வக்கீல்களின் வெற்றியே, சட்டத்தின் நிச்சயமின்மைதான்’ என்பார்கள்.

வேலையற்ற விஞ்ஞானிகள் ஒரு பக்கம் தத்துவம் பேசி தாடிப் பிடி சண்டை போட, மற்றொரு பக்கத்தில், பிழைக்கத் தெரிந்த எஞ்சினியர்கள் க்வாண்டத்தை வைத்துக் காசு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ரகசியச் செய்திகள் அனுப்பும் தொழில் நுட்பத்தில் இப்போது க்வாண்ட்டம் க்ரிப்டோக்ரஃபி என்று ஒன்று புறப்பட்டிருக்கிறது. ரகசியமாக அனுப்ப வேண்டிய செய்தியை ஃபோட்டான் போன்ற க்வாண்டம் துகளில் ஏற்றிக் கண்ணாடி இழை வழியே அனுப்ப முடியும். இதை நடு வழியில் யாராவது படிக்க முயன்றால், படிக்க முயன்றதாலேயே துகள் நிலை மாறி, செய்தி மாறிவிடும். உடனே கண்டுபிடித்து உஷாராகிவிடலாம். 2007-ல் ஸ்விட்சர்லாந்து தேர்தல் முடிவுகள் கண்ணாடி இழை கேபிள் வழியே க்வாண்டம் பாதுகாப்பில் அனுப்பப்பட்டன.

க்வாண்டம் கணினி என்று புதிய கம்ப்யூட்டர் செய்துவிட்டோம் என்று, அரை வேக்காட்டில் எடுத்த ஒரு சாதனத்தை விற்க முயற்சிகள் நடக்கின்றன. ஒளியை ஏற்றி அணைத்தே அதி வேகமாகக் கணக்கு போடுமாம். டி-வேவ் போன்ற கம்பெனிகள் க்வாண்டம் கணினி என்று எதையோ காட்டி அரசாங்க, ராணுவத் துறைகளின் தலையில் பச்சை மிளகாய் அரைக்கிறார்கள்.

-o00o-

ப்ரின்ஸ்டன் மாணவர் எவரெட் என்பவர் 1957-ல் ‘பற்பல உலகங்கள்’ என்று ஒரு தத்துவம் சொன்னார். அப்போதைக்கு அவரை எல்லோரும் ‘அடங்குடா, லுச்சா’ என்று அடக்கிவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்துப் பேராசிரியர் டெக்மான் அதற்கு மறுபடி உயிரூட்டினார்:

ஒவ்வொரு முறை நாம் அளவிடும் போதும் ஒரு முடிவெடுக்கிறோம். அந்த முடிவை எடுக்காவிட்டால்? 12-B படத்தில் ஷ்யாமுக்கு நிகழ்ந்தது போல் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருக்கும் அல்லவா? நம் வாழ்க்கை மட்டுமல்ல; நம் சந்ததியர்கள், நாம் சந்தித்தவர்கள், நிந்தித்தவர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் திசை மாறியிருக்கும். இது போல் ஒவ்வொருவரின், ஒவ்வொன்றின் வாழ்க்கையும் கணத்துக்குக் கணம் பாதை பிரிந்து கோடிக் கணக்கான உலகங்கள் சாத்தியமாகின்றன. மாணவர் இதை டீகொஹெஷன் என்றார்.

இன்றைய கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் இதை ருசி பார்த்திருக்கலாம்: ஒவ்வொரு கணத்திலும் நாம் அமுக்கும் பொத்தானைப் பொருத்து விளையாட்டின் திரைக் கதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் டீகொஹெஷனில் எல்லா உலகங்களும் இணையாக நடந்துகொண்டே இருக்கின்றன. ஓர் உலகத்தில் வாழ்பவனுக்கு, மற்ற உலகங்களில் வாழும் தன்னுடைய ஜெராக்ஸ் பிரதிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. அதில் சில பிரதிகள் வெவ்வேறு வயதில் செத்திருக்க, மற்றவை தயிர்க்காரி, தாசில்தார் என்று வித விதமான வாழ்க்கைகள் வாழ்ந்து வருகின்றன. இதில் எந்த வாழ்க்கை உண்மை, எது பொய்? முதலில் இந்தக் கேள்விக்கே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

இங்கே, செயலுக்கும் அதன் விளைவுக்கும் இருக்கும் நேரிடையான சம்பந்தமே குலைந்துவிடுகிறது. நம் வாழ்க்கை நம் கையில் இல்லாமல், ஒரு மகா நாடகமாகத் தன் போக்கில் செல்லும் அதைச் செயலற்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது ஹைசன்பர்க் பூனை செத்ததா, பிழைத்ததா என்ற கேள்விக்கு பதில் சுலபம்: இரண்டுமே! ஏனெனில் இரண்டுமே நம் கற்பனையில் நாம் படைத்துக்கொண்ட உலகங்கள்.

இது இந்து தத்துவ இயலின் மாயா வாதத்துக்கு மிக அருகில் வருகிறது. பாரதியாரும் இப்படி சிந்தித்திருக்கிறார்: ‘நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?’

ஆக மொத்தம், இதை நான் எழுதவும் இல்லை, நீங்கள் படிக்கவும் இல்லை. கதை கட்டுரை, வாழ்க்கையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே.

One Reply to “தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!”

Comments are closed.