அனைத்தையும் கடந்ததைப் பற்ற நினைக்கும் கவிஞர்- டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்

2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு (Tomas Tranströmer) வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது.  இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும். ட்ரான்ஸ்ட்ரமர் தன் 40-50 ஆண்டுகால செயல்பாட்டில் அதிகம் ஒன்றும் எழுதவில்லை என்று பல இடங்களிலும் திரும்பத் திரும்பச் சுட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் எழுதிய மொத்தக் கவிதைகளையும் ஒரே புத்தகமாக அச்சிட்டால் அது 400 பக்கங்கள் கூட வராது என்று தெரிகிறது.

இவ்வளவு குறைவாக எழுதியவருக்கு ஏன் நோபெல் என்று மறைமுகமாக வாதங்கள் கேட்கக் கிட்டினவாம். யூரோப்பியப் பொருளாதார நிலை மிகவும் சரிவு நிலையில், மேன்மேலும் இறங்குமுகமாகவும் இருப்பதால் அந்த ஒன்றரை மிலியன் டாலர்/ ஒரு மிலியன் யூரோக்களை ஸ்வீடனிலேயெ வைத்துக் கொண்டு விட நோபெல் கமிட்டி தீர்மானித்திருக்க வேண்டும் என்று கூட அரசல் புரசலாக சில வாதங்கள் எழுந்தனவாம். ஆனால் இக்கவிஞரின் ஆதரவாளர்கள் பல நாடுகளிலிருந்தும் சுடச் சுட பதில் குரலெழுப்பி இந்த முடிவு மிகச் சரியான முடிவே, உண்மையான ஒரு கவிக்குரல் இவருடையது, தன் மொத்த வாழ்விலும் சமரசமற்று தனக்கு உண்மையெனப் பட்டதையும், மனிதத்துக்கு அச்சாணியான மதிப்பீடுகளையும், உலக மனித சமுதாயத்துக்கு நன்மை தருவனவற்றையுமே ட்ரான்ஸ்ட்ரமர் தன் கவிதைகளில் பேசிக் கொண்டிருந்தார் என வாதிட்டிருக்கின்றனர்.

இலக்கிய அரசியல் சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ளாது ஒதுங்கி இருந்து தன் போக்கில் கவிதை எழுதி இருக்கிற ட்ரான்ஸ்ட்ரமர் குறித்து இத்தனை சர்ச்சை எழுந்தது இதுதான் முதல் தடவை என்று கூட சொல்லலாம். ஆனால் யூரோப்பிய, மேலைக் கவிஞர்களிடையே அவருடைய கவிதைகள் குறித்து மிக உயர்வான அபிப்பிராயம் நிலவுவது இப்போது தெரிகிறது. அவர் எழுதியவை ஸ்வீடிஷ் மொழியில் அசாதாரணமானவை என்று அமைந்த போதிலும், ஸ்வீடிஷ் மக்களுக்கு எளிதில் அணுகக் கூடிய தன்மை கொண்டிருந்தன என்பதால் ஸ்வீடனில் நன்கு தெரிய வந்த கவிஞராகவே இருக்கிறார். இவருடைய கவிதைகள் பரவலாகத் தெரிய வருபவை என்பதால் மலிவுப் பதிப்புக் கவிஞரோ, பட்டி மன்றக் கவிதைகளோ என்று நாம் ஐயப்படத் தேவை இல்லை. இவருடைய கவிதைகளில், கருக்கான, சுருக்கமான சொற்பிரயோகம், இசையும் தாளமும் கொண்ட சொற்கட்டு, கூர்மையான கருத்துக் கட்டுமானம் என்று பல அவசியக் கவி குணங்களுடன் ’நவீன’ காலத்துக்குரிய பல கல்யாண குணங்களும் காணப்பட்டன என்று சொல்லப்பட்டது. [நவீன என்ற சொல் குறிப்பிட்ட அர்த்தத்துட்ன இங்கு பிரயோகிக்கப் படுகிறது.]

ஒரே நேரம் எதார்த்தத்தில் நன்கு கால் ஊன்றிய இவை, ’அறிய முடியாததையும், அனைத்தையும் கடந்தனவற்றையும் கைப்பற்றச் செய்யப்பட்ட முயற்சிகள்’ என்று இவர் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒரு ஆன்மீக குணம் ஏற்கனவே இருந்தது, சமீப காலமாக இது அடிக்கடி வெளிப்படத் துவங்கி இருக்கிறது என்றும் ஒத்துக் கொள்கிறார். மதஸ்தாபனங்களால் கறைப்படாத தூய கிருஸ்தவம் என்றொரு வகை இருப்பதாகக் கருதும் சில வாசகர்கள், இவருடைய கவிதைகளில் அப்படி ஒரு ஆழ்நிலைக் கிருஸ்தவம் பரிமளிப்பதாகச் சொல்கிறார்கள்.  பொதுவாக யூரோப்பியர்கள் சர்ச்சுகளுக்குப் போவது மிகவும் குறைந்து விட்டாலும், அவர்களின் கிருஸ்தவச் சார்பு சிறிதும் குறையவில்லை என்பது இத்தகைய மறுவினைகளில் தெரிகிறது எனலாம்.

இவர் தன் தொழிலில் ஒரு உளவியலாளர் என்பது இவர் கவிதைகளில் புலப்படுகிறது. சிறைச்சாலைகளில், மருத்துவ மனைகளில் நோயாளிகள், கைதிகள், போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்த அனுபவங்கள் இவருக்கு உண்டு.

இங்கிலீஷைப் பொறுத்தவரை, ட்ரான்ஸ்ட்ரமருக்குச் திறமையுள்ள சில மொழி பெயர்ப்பாளர்கள் கிடைத்திருக்கின்றனர். ஸ்வீடிஷ் மொழியில் இருந்து இங்கிலீஷுக்கு மொழி பெயர்த்துப் புத்தகங்கள் வெளிவந்த பின்னரே அவருடைய புகழ் மேற்கில் நிறையப் பரவி இருக்கிறது. இவருடைய சில மொழிபெயர்ப்பாளர்கள் தம்மளவிலேயே கூட புகழ் பெற்றவர்கள், அல்லது நன்கு தெரிய வந்த கவிஞர்கள். அவர்களில் சிலரை இங்கு பட்டியலிடுகிறோம்.

ராபின் ஃபுல்டன் (Robin Fulton) – நார்வே நாட்டில் சுமார் 38 வருடகாலமாக வாழ்ந்துள்ள இவர், ஸ்காண்டிநேவியக் கவிதைகளை இங்கிலீஷில் மொழிபெயர்ப்பதைத் தொடர்ந்து செய்கிறார். ட்ரான்ஸ்ட்ராமரின் கவிதைகளை மூலத்துக்கு மிக அருகில் வரும் மொழிபெயர்ப்பாகச் செய்திருப்பதாகப் பாராட்டப்படுகிறார். ஆனால் ஸ்வீடிஷ் மொழியும், இங்கிலீஷும் நன்றாகத் தெரிந்தால்தான் நம்மால் இதன் உண்மையை அறிய முடியும். இவர் ஒரு ஸ்காட்டிஷ் எழுத்தாளர்.  இவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு ட்ரான்ஸ்ட்ரமர் கவிதை இந்த இதழில் பிரசுரமாகிறது. அது வெர்மீயர் என்னும் ஓவியரைப் பற்றிய  கவிதை.

ராபர்ட் ப்ளை (Robert Bly) – ஒரு அமெரிக்கக் கவிஞர். புகழ் பெற்று விளங்கினார். உணர்ச்சிகரமாக எழுதுவதில் பெயர் பெற்றவர். ட்ரான்ஸ்ட்ரமரின் கவிதைகளின் சாரத்தை உள்வாங்கி அவற்றைத் தம் கவிதைகள் போல எழுதி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.  இவருடைய மொழிபெயர்ப்பில் வெர்மீயர் எனும் ஓவியர் பற்றிய ட்ரான்ஸ்ட்ரமரின் கவிதையையும் இந்த இதழிலேயே இன்னொரு பதிவாக வெளியிடுகிறோம்.

ராபின் ராபர்ட்ஸன் (Robin Robertson) – இவரும் தம்மளவிலேயே நல்ல கவிஞர் என அறியப்படுபவர். ஸ்காட்டிஷ் கவிஞர்.  இவருடைய மனைவி ஒரு ஸ்வீடிஷ் பெண், அவருடைய ஒத்துழைப்பில் தான் ட்ரான்ஸ்ட்ரமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததாகச் சொல்கிறார்.  The Deleted World என்ற தலைப்புள்ள ஒரு புத்தகமாக அவை வெளியிடப்பட்டிருக்கின்றன. அப்புத்தகத்திலிருந்து ஒரு கவிதை தமிழாக்கம் செய்யப்பட்டு இந்த இதழில் வெளியாகி இருக்கிறது.

[ஃபுல்டன், ராபர்ட்ஸன் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஒரு சர்ச்சை நடந்திருக்கிறது. அது குறித்து அடுத்த இதழில் காண்போம். ]

மைக்கல் மாக்கிரிஃப் ( Michael McGriff) – அமெரிக்கக் கவிஞர். பாட்டாளிக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பயின்றவர். தம்மளவில் சிறந்த கவிஞராக அறியப்படுபவர். ட்ரான்ஸ்ட்ராமரின் கவிக் குணங்களில் பல இவரிடமும் உள்ளன என்பதை நாம் இவர் கவிதைப் புத்தகங்கள் பற்றிய பாராட்டுதல்களை வைத்து அறிய முடிகிறது.

மே ஸ்வான்ஸன் (May Swanson) – 50 வருடங்கள் போல கவிதைகள் எழுதிய பெண் கவிஞர். ’மக்கார்தர் மேதை’ப் பரிசு பெற்றவர். 1989 இல் இறப்பதற்கு முன் பிரபலமான பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ஆண்-பெண் உறவுகள் பற்றித் துல்லியமாகவும், நேராகவும் கவிதைகள் எழுதியவர் என்று அறியப்படுகிறார். இவரும் எலிஸபெத் பிஷப் எனப்படும் இன்னொரு புகழ் பெற்ற பெண்கவிஞரும் சுமார் 30 ஆண்டுகள் நடத்திய கடிதப் பரிமாற்றங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பான கவனத்தைப் பெற்றன.

சாமுவெல் சார்டர்ஸ் (Samuel Charters)– பலருக்கு முன்னால் ‘90களிலேயே ஒரு கவிதைத் தொகுப்பை மொழி பெயர்த்தவர். இவர் தாமே 11 கவிதைப் புத்தகங்கள், நான்கு நாவல்கள் எழுதியவர். முக்கியமாக இவர் ஒரு இசை ஆய்வாளர். பல பண்பாட்டுக் குழுக்களின் இசைகளை ஆய்பவர். (Ethnomusicologist). ப்ளூக்ராஸ், ஜாஸ், பீட் இசை போன்றனவற்றைக் குறித்துப் பல புத்தகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

இவர்களைத் தவிர மேலும் பல மொழி பெயர்ப்பாளர்கள் உண்டு. லெய்ஃப் ஹொபேரி (Leif Sjoberg) என்னும் ஸ்வீடிஷ் மொழிப் பேராசிரியர் ஒருவர். இவர் தன் நீண்ட வாழ்வில் பல பெரும் கவிஞர்களுடன் ஒத்துழைத்து அருமையான மொழி பெயர்ப்புகள் மூலம் ஸ்காண்டிநேவிய இலக்கியத்தை இங்கிலீஷ் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை உடையவர் என்று தெரிகிறது. இவர் கூட்டணி வைத்து எழுதிய கவிஞர்களில் டபிள்யு. எச். ஓடனும் (W.H. Auden), மேலே குறிப்பிட்ட மே ஸ்வான்ஸனும் சிலர்.

ட்ரான்ஸ்ட்ரமரின் கவிதைகள் இங்கிலீஷில் கிட்டுகின்றன. அவை கீழ்வரும் புத்தகங்கள்:

The Sorrow Gondola (Green Integer, 2010);

New Collected Poems (Bloodaxe Books, 2011);

The Great Enigma: New Collected Poems (New Directions, 2003);

The Half-Finished Heaven (2001);

New Collected Poems (1997);

For the Living and the Dead (1995);

Baltics (1974); Paths (1973);

Windows and Stones (1972),

The Half-Finished Sky (1962);

Seventeen Poems (1954).

இவருடைய கவிதைகள், மேலும் வாழ்வு குறித்த சிறிது விரிவான கட்டுரையை அடுத்த இதழில் பிரசுரிக்க இருக்கிறோம். இந்த இதழில் இவரது சில கவிதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பை அளிக்கிறோம். அதிலும் ஒரு சோதனை முயற்சியைக் கைக்கொண்டுள்ளோம். அந்த மொழிபெயர்ப்புகளை இங்கே படிக்கலாம் : வெளியே, வெட்டவெளியில் | வெர்மீயர்