அந்த கிராமபோன் வாசனை

பல தமிழ் எழுத்தாளர்கள் நல்ல இசை ரசிகர்கள். இசை மற்றும் இசைக்கலைஞர்களுடனான தங்கள் அனுபவங்களை பல எழுத்தாளர்கள் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாக ‘இயலிசை’ என்ற தொடராக வெளியிட இருக்கிறோம். அத்தொடரின் முதல் கட்டுரையாக சுஜாதா எழுதிய ‘அந்த கிராமபோன் வாசனை’ என்ற கட்டுரை இங்கே இடம்பெறுகிறது. இது 9.12.2001 தினமணி இசைமலரில் வெளியானது. நன்றி: தினமணி இசைமலர்.

அந்த கிராமபோன் வாசனை – சுஜாதா

gramophone

தியாகராஜ உத்சவம் முடிந்ததும் பல வித்வான்கள் ஸ்ரீரங்கத்தில் வந்து பாடிவிட்டுப் போவார்கள். மருங்காபுரி சமஸ்தான வித்வான் கோபாலகிருஷ்ணையர் என்கிற வயலின் வித்வான் வடக்குச் சித்திரை வீதியில் இருந்தார். வயலினோடு ஃபோனோ வயலின் என்ற புதிய வாத்தியத்தையும் அவர் வாசிப்பார். அவரை வித்வான்கள் மிகவும் மதித்ததால் வடக்குச் சித்திரை வீதியில் பந்தல் போட்டுச் சங்கீதோத்சவம் நடைபெறும். அதன் பின் அது கோரத மூலைக்கு இடம் மாறியது. எங்கள் கீழச்சித்திரை வீதியில் ராத்திரியின் நிசப்தத்தில் தெளிவாகக் கேட்கும். பாட்டி வாசலிலேயே கயிற்றுக் கட்டில் போட்டுக்கொண்டு கேட்பாள். நான், “என்ன ராகம் பாட்டி?” என்று கேட்பேன். “போடா, ஏதோ ஒரு ராகம்… கேக்கறதுக்கு நன்னாருக்கு… அது போறும் எனக்கு” என்பாள். இது அப்பாவைப் பெற்ற பாட்டி. அம்மாவைப் பெற்ற பாட்டியின் பெயர் லக்ஷ்மி அம்மாள். பத்து வீடு தள்ளி இருந்தாள். என் சுவீகார விஷயமாக இரு பாட்டிகளுக்குள் பேச்சு வார்த்தை இல்லை. இருந்தும் அவ்வப்போது நான் தடையை மீறி ‘அந்தாத்துக்குப்’ போவேன். காரணம் அந்தப் பாட்டிக்குச் சங்கீதத்தில், சினிமாவில் ஆர்வம் உண்டு. வீட்டில் ஆளுயரத்துக்கு ரோஸ்வுட்டில் ஒரு கிராமபோன் இருக்கும். அதன் வாசனையே அலாதியாக இருக்கும். அதில் கீழ்ப்பகுதியில் இருந்த இரு அறைகளில் நிறைய இசைத்தட்டுகள் இருக்கும். 78 ஆர்.பி.எம் கிராஃபைட் தகடுகள். ‘ப்ளேட்டு’ என்று சொல்வார்கள். அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், டி.கே.பட்டம்மாள் போன்றோரின் இசைத்தட்டுகள் இருந்தது ஞாபகம் இருக்கிறது. எம்.எஸ் பாடிய ‘மாலைப் பொழுதினிலே’, ‘வண்டாடும் சோலைதனிலே’ போன்ற கல்கி பாடல்களின் இசைத்தட்டுகள் ரிலீசான உடனே பாட்டி வாங்கி வரச்சொல்லி விடுவாள். இதைப் போட்டு ஏழாவது தடவையுடன் ஊசி பழசாகிப் பாட்டு கரகரக்கும். ட்வின் கம்பெனியின் சிறிய மஞ்சள் பெட்டியிலிருந்து ஊசி எடுத்து மாற்ற வேண்டும். சாவி நிதானமாகக் கொடுக்கவேண்டும். பாட்டிக்குச் சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. ரேடியோவில் கச்சேரி கேட்பாள். தியாகராஜ பாகவதர் பாட்டுகள் எல்லாம் வீட்டில் இருந்தன.

marungapurigopalakrishnaiyer

மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர்

என் நண்பர்களில் சிலர் அசங்கீதக் காரணங்களுக்காக கச்சேரிக்குச் சென்று மணலில் மல்லிகாவோ, வத்சலாவோ இருக்கும்வரை உட்கார்ந்திருந்துவிட்டு அவர்கள் எழுந்ததும் இவர்களும் எழுந்துவந்துவிடுவார்கள். எனக்கு அதிலெல்லாம் கவனம் இல்லை. அப்போதிருந்தே கர்நாடக சங்கீதம் பிடிக்கும் என்று சுத்த விரும்பவில்லை. ஆனால் கர்நாடக சங்கீதம் ஸ்ரீரங்கத்தில் ஒருவாறு எங்களைப் பல வடிவத்தில் சூழ்ந்திருந்தது. பெருமாள் வீதி வலம் வரும்போது மிக அருமையாக நாயனம் வாசிப்பார்கள். எம்பார் விஜயராகவாச்சாரியாரின் பாகவதம், ராமாயணம், நந்தனார் சரித்திரம் போன்ற ஹரிகதைகள் கெடிகார ராமையா, வீணை ராமசாமி ஐயங்கார் வீடுகளின் முகப்பில் பந்தல் போட்டு அவ்வப்போது நடைபெறும். அவைகளை நான் தவறவிட்டதே இல்லை. என் கதை சொல்லும் ஆர்வத்தில் எம்பாரின் ஹரிகதா காலட்சேபங்களின் பங்கு உண்டு. எம்பார் ஒரு முழு வித்வானின் திறமைக்கு ஈடாடகப் பாட வல்லவராயிருந்தார். அவரும் பின்பாட்டுப் பாடும், மிருதங்கம் வாசிக்கும் அவர் சகோதரர்களும் சேர்ந்து இசைப்பதைக் கேட்கும்போது புல்லரிக்கும்.

எம்பார் விஜயராகவாச்சாரியாரின் ஹரிகதா

இருந்தும் அந்த நாட்களில் கர்நாடக சங்கீதம் கேட்கும் ஆர்வத்தை உண்டாக்கியதே ஒழிய கற்றுக்கொண்டு பாடவேண்டும் என்கிற ஆசை ஏற்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் அந்த நாட்களில் ஓரளவு புகழ்பெற்றவர் ராமையா அவர்கள் குமாரர் ஸ்ரீரங்கம் ரங்கநாதன். அவர் ரேடியோவில் முழுநேரக் கச்சேரி செய்கிற அளவுக்கு உயர்ந்தார். ஏஐஆரிலும் பணிபுரிந்தார். அப்போது எம்.எஸ்.கமலா என்பவர் நன்றாகப் பாடுவார். ரங்கநாதனின் சகோதரர் ஜனனி சீனிவாசன் நன்றாகப் பாடுவார். ஸ்ரீரங்கத்திலிருந்து பல வித்வான்கள் தோன்றிப் பிரபலமடைந்திருக்கிறார்கள். இன்றைக்கு வெளிநாடு எல்லாம் சென்று சிறப்பாக மோர்சிங் வாசிக்கும் எம்பார் கண்ணன் ஸ்ரீரங்கத்தில் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர். சின்னைப்பையனாக அவரைப் பார்த்திருக்கிறேன்.

கர்நாடக சங்கீதத்தில் எனக்கு ராகம் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈடுபாடு தோன்றியது சென்னை வந்தது என் அண்ணனுடன் சில கச்சேரிகளுக்குப் போனதும்தான். அண்ணன் மெடிக்கல் காலேஜ் படிக்கும்போது நான் எம்.ஐ.டி, க்ரோம்பேட்டையில் இருந்தேன். இருவரும் சந்தித்து மதுரை மணி ஐயர் கச்சேரி எங்கிருந்தாலும் போவோம். ஒருமுறை தாம்பரத்தில் அவர் செய்த கச்சேரியை மறக்க முடியாது. ஒரு சிறிய பள்ளியில் கச்சேரி. ஐந்துமணி நேரம் பாடினார். அதேபோல் அண்ணாமலை மன்றத்தில் சீஸனின்போது தமிழிசைச் சங்கம் சார்பில் கச்சேரி. செளடய்யா, பாலக்காடு மணி ஐயர் பக்கவாத்தியங்கள். காம்போதியில் ராக ஆலாபனையும், தானமும் பாடிவிட்டுப் பல்லவி எடுக்கும்போது, ‘பரிமள ரங்க’ என்று ஆரம்பித்தபோது, சிஷ்யர் அவர் காதில் சொல்ல சட்டென்று பல்லவியை, ‘மகாத்மா சொன்ன வழி நடப்போம்’ என்று தமிழுக்கு மாற்றிக் கைதட்டல் வாங்கினார்.

549ygbs

[மதுரை மணி ஐயர் கச்சேரி ஒன்று]

கர்நாடக சங்கீதத்தில் மணி ஐயர் அந்தக் காலத்துத் தென்தூல்கர் என்று சொல்லவேண்டும். ‘சரசசாமதான’, ‘நாத தனுமனிசம்’, ‘துன்மார்க்கசரா’, ‘எப்போ வருவாரோ’ போன்ற கிருதிகளை அவர் பாடும் விதமே தனி. தன் குரலின் எல்லைகளை அதிகப்படுத்தாமல் மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு அவசரமாக ராகம் பல்லவி அனுபல்லவி பாடிவிட்டுச் சரணத்துக்குக் குறிப்பாக, கல்பனாஸ்வரங்களுக்கு விரைவார். ஸ்வரங்களை அப்படியே நம் மேல் வர்ஷிப்பார். அதன் உற்சாகம் அரங்கம் பூராவும் நிரம்பும். மதுரை மணி ஐயர் கச்சேரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர் கச்சேரிகளையும் கேட்க ஆரம்பித்தேன். ராகங்களைக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தேன். இப்போது சாயா தரங்கிணி, பூஷாவளி, பலஹம்ச போன்ற ராகங்களையெல்லாம் என்னால் கண்டுபிடிக்க முடியாது. கல்யாணி, பைரவி, காம்போதி, தோடி, கரஹரப்ரியா, மோகனம், சங்கராபரணம், பந்துவராளி, பிலஹரி, ஹம்சாநந்தி, ரேவதி, ஸ்ரீரஞ்சனி, ரஞ்சனி, காப்பி, கமாஸ் போன்ற சுமார் நாற்பது ராகங்களைக் கண்டுபிடித்துவிடுவேன். ராகம் தெரியவில்லை என்றால் கையைத் தூக்கிவிடுவேன்.

கர்நாடக சங்கீதம் என்பது ஒரு அப்பர் கிளாஸ், பிராமண, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை சமாசாரத்திலிருந்து வெளிவந்து உலகம் பூராவும் பரவிவிட்டது. இளம்பாடகர்கள் மிக அருமையாகப் பாடுகிறார்கள். இண்டர்நெட்டில் கற்கும் வசதி வந்துவிட்டது. அயல்நாட்டில் வாழும் தமிழர்களும், மற்றவர்களூம் இந்த அபார சங்கீதத்தின் நெளிவு சுளிவுகளை ரசிக்கும் மிகப்பெரிய கூட்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். டல்லஸ், ஸான்ஹோஸே, ஃப்ரீமாண்ட், லண்டன், பாரீஸ்… ஏன் நியூசிலண்டு வரை இது பரவியுள்ளது. இதை எதிர்காலத்துக்குக் காப்பாற்றக் கீழ்க்காணும் விதிகளை அனுசரிப்போம்.

1. கச்சேரிகளில் மாமா, மாமிகள் பேசக்கூடது.
2. குழந்தைகள் ஓடக்கூடாது.
3. பாதியில் எழுந்து போகக்கூடாது.
4. கச்சேரி துவங்கியதும் கதவுகளை அடைத்துவிடவேண்டும். கேண்டீனை மூடிவிட வேண்டும். எழுந்து போவதை ஒரு மிகப்பெரிய தர்மசங்கடமாக ஆக்க வேண்டும். முடிந்தால் பான்பராக், சிகரெட் போலத் தடை செய்ய ஆர்டினன்ஸ் போடவேண்டும்.
5. பாடகர் பாடப்போவதை முதலில் அறிவித்துவிடவேண்டும். சரியாக இரண்டு மணி நேரத்துக்கு மேல் பாடக்கூடாது. ஒரு வர்ணம், ஒரு சிறிய ராகம், ஒரு பெரிய ராகம், ஓரிரண்டு லைட்டான ராகத் துக்கடாக்கள் போதும்.
6. பள்ளிகளில் சினிமாப் பாட்டுகளின் கர்நாடக மூலங்களைச் சொல்லி இளைஞர்களுக்கு இதில் ஆர்வம் எழுப்பவேண்டும்.
7. ராகம் கண்டுபிடிப்பதில் போட்டி வைக்கவேண்டும்.
8. டிசம்பரில் மட்டும் நானூறு கச்சேரி என்றில்லாமல் வருடம் முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா முழுவதும் கச்சேரி நடத்த வழி வகுக்க வேண்டும்.
9. ஃப்யூஷன் மியூசிக்கைத் தடை செய்யவேண்டும்.

இவ்வாறு செய்தால் இதற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.