ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும்

ரண்டு வருடங்களுக்கு முன் செங்கடற்பகுதியில் இருக்கும் ஷார்ம் எல் ஷேக் என்ற இடத்தில் நீந்தினேன். எகிப்தின் ஸினாய் தீபகர்ப்பத்தின் தெற்கு முனையில் இருக்கிறது இந்தப்பகுதி. கடலின் அகண்ட நீர்ப்பரப்பின் மேல் எனக்குள்ள பயத்தின் காரணமாய் முதல்நாள் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருப்பினும் அங்கு நீந்தினேன். பயம் என்னை 2004-ஆம் வருடத்தின் சூனாமியை நினைக்க வைத்தது.

அடுத்தநாள் நீரின் அடியில் என்ன இருக்கிறது என்று பார்க்க நீச்சலின்போது அணியும் பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு நீந்தினேன்.

snorkeling_giftun1295532

அற்புதமான பவள அமைப்புகளையும், பலவிதமான வண்ணங்களில் நீண்டதும், அகண்டதும், பெரியதும், சிறியதுமாய் இருக்கும் மீன்களையும் கண்டு வியப்படைந்தேன். சற்று நேரம் கழித்து ஸ்னோர்கெல் என்றவகை நீச்சலுக்குத் தேவையான சுவாசக்குழாய் மற்றும் ஆடையை அணிந்துகொண்டு திரும்பவும் நீரின் அடியில் இருக்கும் விந்தைகளைக் காணப்போனேன். காந்தம் போல இப்பொக்கிஷங்கள் என்னை ஈர்க்க, உயிரின் நடனத்தையும், வர்ணங்களையும் பார்த்துக்கொண்டு மிதந்துகொண்டே இருக்கவே நான் விரும்பினேன். ஆழ்கடலின் உயிரினங்களின் அற்புதத்தில் என் பயம் சிதறிப்போனது. காலை உணவுக்கு முன்பு நீந்தினேன், அதற்குப் பின்னும் நீந்தினேன், இருட்டும் வரை நீந்தினேன். ஷார்ம் எல் ஷேக்-கிலிருந்து கிளம்பும் நாளில் கூட என்னால் முடிந்த அளவுக்கு ஸ்னோர்கெல் நீச்சல் செய்தேன்.

அற்புதமான பவளங்களும், மீன்களும் என்னைக் கடல்வாழ் உயிர்களின் பல்வகைமை பற்றிய விசாரங்களுக்குக் கொண்டு சென்றன. கடலின் தூய்மைக்கேடு மற்றும் கோள வெதும்பல் (global warming) போன்றவை கடல்வாழ் உயிரினங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகச் சூழலின் மொத்த இயக்கப் பின்னலும் குலைக்கப்பட்டு கடைசியில் பேரழிவு நிகழக் கூடும். பலவருடங்களாகப் பன்னாட்டு ஆய்வுக் கூட்டங்கள் இவற்றை அலசிக்கொண்டிருக்கையில், அழிவும் அதுபாட்டுக்கு நடந்துகொண்டே இருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன் நான் திரும்பவும் நீந்தினேன், இம்முறை துருக்கியின் மத்தியதரைக் கடலோரமாய் அலன்யா என்ற இடத்தில். இம்முறை என் பயம் நிஜமாய்த் தோன்றியது. என் பயத்தை சிதற அடிக்க இங்கே பவளங்கள் இல்லை. ஆங்காங்கே சில மீன்களை மட்டும் பார்த்தேன். நில நடுக்கத்தினால் கிளப்பப்பட்டு ஜப்பானை அதிரடித்த சூனாமி என் நினைவுக்கு வந்தது. ஃப்கஷீமாவின் அணு உலை விபத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களையும், பேரளவிலான சூழல்கேட்டையும் என் மனதில் சித்திரங்களாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சோகமாய் உணர்ந்தபோதிலும் அதே நேரத்தில் கம்பீரமான சமுத்திரத்தின் மேலும், உலகை சமநிலையில் வைத்திருப்பதில் அதன் பங்கையும் நினைத்து கடல்வெளியின் மீது ஆழ்ந்த மதிப்பு ஏற்பட்டது.

என் எண்ணங்கள் ஃப்கஷீமா அணு உலை விபத்தை நோக்கி நீந்திப் போயின. அணு உலைகளைக் கடலோரம் கட்டுவதற்கான ஒரு காரணம் உலைகளை குளிர்விக்க நீர் தேவைப்படுவதாலும், உலைகளின் கழிவுகளை வெளியேற்றுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது. அணு உலை விபத்துக்கள் பல வேறுபட்ட கதிரியக்க ரசாயனங்களை வெளியேற்றக்கூடும், இவற்றில் பலவும் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்துபவை.  என் பயத்தினூடே சூனாமிக்குக் காரணமான நிலநடுக்கத்தைப் பற்றிய நினைப்பும் இருந்தது.

நிலநடுக்கங்கள் மனிதனால் தூண்டப்படக்கூடுமா?

pianeta-terra-lultima-arma-da-guerra-il-libro-l-wycamxரோஸலீ பெர்டெல் என்ற ஆய்வாளர், “Planet Earth:  the Latest Weapons of War” என்ற தனது புத்தகத்தில், ரகசிய ராணுவ ஆய்வுமுறைகள் புவிஅமைப்புக் கட்டுமானத்தகடுகளைக் குலைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பக் காரணங்கள் உள்ளன என்கிறார். ராணுவ ஆய்வுகளின் தொடக்கத்திலிருந்து நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளன, ஆனால் இது குறித்து பாதுகாப்புத் துறை சாராத மாற்றுக் களங்களில் எந்தவித விவாதங்களும் இன்றி அவை தொடர்கின்றன என்றும் அவர் சொல்கிறார். பூமியையும் அவளது வளங்களையும் இறுதியில் மானுடர்களையும் ஆபத்துக்குள்ளாக்கி இருப்பதற்கு நாமும் நமது வருங்கால சந்ததியினரும் கொடுக்கவேண்டிய விலையைப் பற்றி எண்ண ஆரம்பித்தேன்.

இதை எழுதிக்கொண்டிருக்கையில் நான் வாழ்வில் இரண்டாவது முறையாய் இந்தியாவில் 1981-இல் கல்பாக்கம் அருகே கடலில் குளித்த நினைவுகள் எனக்கு வந்தன. அங்கும் ஒரு அணு உலை இருக்கிறது. அந்த காலகட்டத்தில் எனக்கு அணுக்கதிர்வீச்சு, நிலநடுக்கம், ஏன் சூனாமியைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. சில அன்பான நண்பர்கள் கடலில் நீந்தும் அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்கள். எனக்கு அப்போது நீந்தத் தெரியாததினால் நான் அப்போது வெறுமே குளிக்க மட்டுமே செய்தேன். துக்ககரமாய் அந்த நண்பர்களில் ஒருவர் 2004-இல் கன்யாகுமரியில் சூனாமி அடித்தபோது கொல்லப்பட்டார். நம்பவே முடியவில்லை. சூனாமியின்போது கல்பாக்கம் அணு உலையின் பம்ப் மனையில் நீர் நிரம்பியது. ஆனால் அப்போது கதிர்வீச்சுக் கசிவு இருந்ததா என்று நமக்குத்தெரியுமா? அணு உலை மூடப்பட்டது. கதிர் வீச்சுக் கசிவோ அல்லது உலைக்கு எந்த சேதமுமோ இல்லை எனச் சொல்லப்பட்டது. பொதுமக்களுக்கு நேரக்கூடிய நிஜ அபாயங்களைப்பற்றி ஜப்பானளவாவது நம்மூரில் எப்போதாவது விபரங்களோடு உண்மையைச் சொல்வார்களா? விபத்தைப் பற்றிய நிஜங்கள் ஜப்பானில் கூட மெதுவாகவே இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்த வருடம் ஜூலை மாதத்தில் ஜப்பானின் கோஜு அகிபயாஷி என்பவர்,  தென்னமெரிக்க நாடான கோஸ்ட றீகாவின் தலைநகரான ஸான் ஹோஸெ நகரில் நடந்த பன்னாட்டுப் பெண்கள் கூட்டமைப்புகளின் பன்னாட்டுப் பேரவையில் (International Congress of the Women`s International League for Peace and Freedom) ஒரு சொற்பொழிவாற்றினார். உணர்ச்சிப் பெருக்கான ஒரு தருணத்தில் அவர் சொன்னார்: “எங்களால் கதிர்வீச்சுக்கு எதிராய் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அதை முகரவோ பார்க்கவோ இயலவில்லை. கதிர்வீச்சுக்கு ஒரு நிறம் இருக்க வேண்டுமென விரும்புகிறேன், ஏனென்றால் அப்போது எந்தத் திசையில் ஓடவேண்டும் என்பது எனக்குத் தெரியும்.”

*** *** ***

rosalie-bertell-usa-r80p

ரோசலீ பெர்டெல் (2000): பூமியெனும் கிரகம், சமீபத்திய போர் ஆயுதம் – ராணுவம் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றியதொரு திறனாய்வு. தி விமென்ஸ் ப்ரெஸ் லிமிடெட், லண்டன்.

[Bertell, Rosalie (2000) Planet Earth, The Latest Weapon of War-A Critical Study into the Military and the Environment. The Women’s Press Limited, London.

ரோஸலீ பெர்டெல் 1929ல் பிறந்தவர். பயோமெட்ரிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 1969 லிருந்து அவர்  என்விரான்மெண்டல் ஹெல்த் எனப்படும் சுற்றுச்சூழல் நலம் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் கனடாவில் டொரோண்டோ மாநிலத்தில் The International Institute of Concern for Public Health என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார். போபால் மற்றும் செர்னோபில் மருத்துவ கமிஷன்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார். இவர் பெற்றுள்ள பல விருதுகளில் ஒன்று ’ The right to Livelihood Award’. முனைவர் பெர்டெல், க்ரே நன்ஸ் ஆஃப் தி ஸேக்ரெட் ஹார்ட் அமைப்பின் உறுப்பினர்.]

பெர்டெல் அவரது புத்தகத்தில் ராணுவம் பூமியையும் அவளது அமைப்புகளையும் யுத்தஆயுதங்களாய் உபயோகித்துக்கொண்டிருக்கிறது என்று விவரிக்கிறார். அவர் நிஜத்தை கற்பனையுடன் கலக்கவில்லை. பொறுமையாய் நேரமெடுத்து உண்மைகளை விளக்குகிறார். இப்புத்தகத்தில் அவர் ராணுவப் பரிசோதனைகள் பூமியின் அமைப்புகளை உபயோகித்து உலகை எப்போதும் போர்நிலையில் வைத்திருக்கும் சாத்தியம் உள்ளவை என்கிறார்.

விண்வெளி ஆராய்ச்சித்திட்டங்கள் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கவும் மற்றும் பூமியின் வரலாறு மற்றும் படிப்படியான பரிணாம மாறுதல்களைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளை உபயோகித்து இதர கோள்கள் மற்றும் சந்திரனின் கனிப்பொருள் வளங்களை நாம் வர்த்தகரீதியாய் உபயோகிக்க வழி செய்யும் என்பது ராணுவத்தின் கூற்று. இதில் எவ்வளவு உண்மை? அறிவார்வம் ஓரளவு வரை ஆரோக்கியமானது ஆனால் இத்தகைய பரிசோதனைகள் பூமி தன் வளங்களை புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றலுடன் குறுக்கிடும் பட்சத்தில் கவலை ஏற்படுத்துபவை.

பூமியில் உயிர்களுக்கு ஜீவாதாரமான காற்று, நீர், நிலம் போன்ற அமைப்புகள் வளிமண்டலத்திலும், பூமிக்குக் கீழும் 16 கி மீ அகலத்தில் நெய்யப்பட்டிருக்கின்றன. பூமியில் நுழைக்கப்படும் நச்சுப்பொருட்களை பெர்டெல் மனித உடல் உட்கொண்டு வெளியேற்ற முயலும் உணவல்லாத பொருட்களுடன் ஒப்பிடுகிறார். மனிதர்களால் உருவாக்கப்பட்ட பலவிதமான பொருட்களுடனும் கலக்கும் தன்மை பூமிக்கு இருப்பினும் சிலவிதமான ரசாயனக்கூட்டுகளுக்கும் ஐசோடோப்புகளும் இது சாத்தியமில்லாததினால் இவை பூமியின் சமநிலையை நிலைகுலைக்க வாய்ப்புண்டு. இதைத்தவிர ராணுவப் பரிசோதனைகளின் மூலம் பூமியின் வளிமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது பூமியின் நுண்ணிய சமநிலையையும், ஜீவவலையையும் தடுமாறச் செய்து குலைக்கும் என்று பெர்டெல் எச்சரிக்கிறார்.  சூரியனின் சிதறல்கள் மற்றும் விண்வெளிக் கூளங்களினின்றும் , அபாயகரமான கதிர்வீச்சுகளிலிருந்தும் பூமியைப் பாதுகாக்கும் அடுக்காகிய அயானஸ்ஃபியர் எனப்படுவதே இத்தகைய பரிசோதனைகளின் இலக்காகும்.

பூமியின் வளிமண்டலம் என்பது ட்ரோபோஸ்ஃபியர், ஸ்ட்ரேடொஸ்ஃபியர், மீஸொஸ்ஃபியர் மற்றும் அயானஸ்ஃபியர் என்னும் அடுக்குகளை உடையது. இதற்கு மேல் உள்ளவை வான் ஆலென் பெல்டுகள் மற்றும் மாக்னெடோஸ்ஃபியர். கீழ்நிலை அடுக்குகளும் பூமியும் மின் நடுநிலைப்பட்டவை ஆயினும் அயானஸ்ஃபியரில் இருக்கும் மின்னூட்டத்துகள்களுக்கு மின்சாரத்தை நடத்தும் ஆற்றல் உண்டு.

அமெரிக்காவின் அணுச்சோதனைகள் பஸிஃபிக் கடலில் 1946லும் நெவாடாவில் 1951லும் ஆரம்பிக்கப்பட்டன. 1956க்குள் அமெரிக்கா 86 அணுகுண்டுகளை வெடித்திருந்தது. சோவியத் ரஷ்யாவும் தன் பங்குக்கு 1956க்குள் 15 குண்டுகளை வெடித்திருந்தது. இங்கிலாந்து 9 குண்டுகளை வெடித்திருக்கிறது . வான் ஆலென் வளையங்களைப் பற்றிக் கண்டறிந்த உடனேயே, அவைகள் பூமியைப்பாதுகாக்க என்ன செய்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் முன்பாகவே, பரிசோதனைகள் ஆரம்பித்தன. உயர அணு வெடிப்புகள் வான் ஆலென் வளையங்களை சேதப்படுத்தியுள்ளன. அப்போதிலிருந்து கீழ்பட்ட வான் ஆல்லென் வளையங்கள் இன்னமும் கூட இயல்புநிலைக்குத் திரும்பவில்லை.  தம்மை திரும்பவும் சமப்படுத்திக்கொள்ள அவற்றுக்கு பல வருடங்களாகலாம். 1945க்கும் 1970க்கும் இடையில் நடந்த 300 மெகாடன் அணுவெடிப்புகளால் ஒஜோன் படலம் 4% அழிக்கப்பட்டுள்ளது என்று 1972ல் கண்டறியப்பட்டுள்ளது.

படைத்துறை சார்பற்ற விஞ்ஞானிகள் அண்டார்டிக்குக்கு மேல் இன்னொரு துளையை கண்டுபிடித்துள்ளனர். ஒஜோன் படலத்தில் 1% இழப்பு 1-3% வரை புறஊதாக்கதிர்வீச்சு பூமிக்கு வந்தடைய வழி வகுக்கும். ஒஜோன் படல இழப்பால் அதிகரிக்கக்கூடிய சருமப்புற்றுநோய் எல்லா உயிர்வகைகளையும் தாக்கும். ஓஜோன் படலத்தில் 20% சுருக்கம் ஏற்படுமானால், மனிதர்களுக்கு புற்றுநோயாக மாறும் ஆற்றல் கொண்ட தோல்கொப்புளங்கள் ஏற்படக்கூடும். குறைபட்ட நோய்தடுப்பாற்றல் சக்தி இதரவகை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

1958ல் அமெரிக்க கடற்படை 3 அணுப்பிளவு வகைக் குண்டுகளை தென் அட்லாண்டிக் கடலில் வெடித்தது. வானொலி பரப்பல் மற்றும் ரேடார் செயல்பாடுகளின் விளைவுகளை அறிந்துகொள்வதற்காக 1958ல் ’ப்ரோஜெக்ட் ஆர்கஸி’ன் ஓர் பகுதியாக  மிகுந்த உயரங்களில் அணு வெடிப்புகள் நடத்தப்பட்டன. 1962ல் ’ப்ரோஜெக்ட் ஸ்டார்ஃபிஷ்’ அயானஸ்ஃபியரில் ஆரம்பிக்கப்பட்டு வளிமண்டலத்தில் அணு சோதனைகள் தொடங்கின. இதுபோல் பல திட்டங்களில் ஒன்று காஸ்ஸினி மிஷன். நாஸாவின் பணியாளர் ஒருவர் காஸ்ஸினி மிஷனை எதிர்த்தார் (காஸ்ஸினி ராக்கெட் 72.3 பவுண்ட் எடையுள்ள அபாயகரமான ப்ளுடோனியம் 238 என்னும் மூலப்பொருளை  ஏற்றிச்சென்றது. இது பி239 ஐ விட 280 மடங்கு கொடியதாகும்).  பொதுமக்களுக்கு இதைத் தெரியப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டபோது அவர் அதை மீறினார். தன் விசுவாசம் முதலில் வரிசெலுத்துபவர்களுக்கும், பின்பு நம்மில் ஒருவருக்கொருவருக்கும், நம் குடும்பங்களுக்கும் என்று அவர் கூட்டத்திடம் கூறினார்,

1963ல் வளிமண்டல அணு சோதனைகளுக்கான தடைகள் ஓரளவு செயல்படுத்தப்பட்டிருப்பினும், பூமிக்கடியில் அணுவெடிப்புகள் ஆய்வாளர்களால் நடத்தப்படுகின்றன. ராணுவ சோதனைகளை நிறைவு செய்ய அதிர்வலைத் தொழில்நுட்பத்தின் மூலம் திண்மையான நிலத்தையே சோதிக்கும் தேவை ஏற்பட்டது என்கிறார் பெர்டெல்.

விஞ்ஞானிகளின் குறிப்பின்படி பூமியின் வெளி மண்டலம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 1 கி மி குறைந்து வருகிறது. பூமியினின்று வெளியேறும் வெப்பம் பெரும்பாலும் அதன் மேற்பரப்பில் தங்கி இருக்கிறது; குறைந்த அளவு வெப்பமே வெளிமண்டலத்துக்கு வெளியேறுகிறது. இதன் விளைவுகளைப் பற்றி இப்போதைக்கு தெரியவில்லை.  க்ரீன்ஹௌஸ் வாயுக்கள் எனப்படும் கார்பன் டைஆக்சைட், மெதேன், ஸல்ஃபர், நைட்ரொஜென் டைஆக்ஸைட் வழிவரும் வாயுக்கள் மற்றும் க்லோரோஃப்லூரோகார்பன்கள் இந்த வெம்மைக்குக் காரணமாய் கருதப்படுகின்றன. இந்த வெம்மைக்கான காரணம் பொதுமக்கள் மேல் சுமத்தப்பட்டு சூழல் சார்ந்த நெருக்கடிநிலைகள் ஏற்படுகையில் அதை சமாளிக்கம் பாதுகாப்புப் படைசாராத பொருளாதாரமே நிலைமையை சீர்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டி உள்ளது என்கிறார் பெர்டெல். ராணுவப் பரிசோதனைகள் எந்த அளவுக்கு இத்தகைய சூழல் தடுமாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற கேள்வியை பெர்டெல் எழுப்புகிறார்.

பெரும்பாலான சமயங்களில் ராணுவத்தின் பணித்திட்டங்களுக்கு படைசாராத் துறைகளின், குறிப்பாய் பல்கலைக் கழகத் திட்டங்களின் பக்கபலமும் பண உதவியும் தேவைப்படுகிறது. HAARP எனப்படும் High Active Aroral Research Project என்பது அயானஸ்ஃபியரை சார்ந்த ஆராய்ச்சித்திட்டம், இது ஒரு படைசாராத்துறைத் திட்டம்.  அயானஸ்ஃபியருள் உயரலை ரேடியோ சக்தியைச் செலுத்தும் அலைபரப்பிகளின் அணிவரிசைகளைக் கொண்டது. ஹார்ப் அமைப்பு அலாஸ்கா மாநிலத்தில் ககோனா என்ற இடத்தில் உள்ளது. அயானஸ்ஃபியரைச் சூடாக்கும் இதர அமைப்புகள் வட நார்வேயிலும், புவர்டோ றீகோவிலும், ரஷ்யாவிலும் உள்ளன. [1] ஹார்ப் திட்டத்தின் ஒரு குறிக்கோள்- மிகத் தாழ் அதிர்வலைகளை உருவாக்குவதுதான் (ELF அலைகள்). இந்த ஈஎல் எஃப் அலைகள் திரட்சியான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவை. நீரில் ஆழத்தில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு வைக்க இந்த அதிர்வலைகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர். இந்த அலைபரப்பிகள் அதிர்வலைக் கற்றைகளை அனுப்பி அயானஸ்ஃபியரின் பகுதிகளைச் சூடாக்கி ஒரு குவிஆடியை உருவாக்கும் சக்தி உள்ளவை. இந்த ஆடி சக்தியை பூமிக்குத் திருப்பி அனுப்ப வல்லது, இதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும், ஹார்ப் (HAARP) அமைப்பால் வறண்ட பகுதிகளில் பெருமழையை உருவாக்க முடியும், வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் பகுதிகளில் மழையைக் குறைக்க முடியும், சூறாவளிக் காற்றுகளை விருப்பத்துக்குத் திருப்பி விட முடியும், பெரும் புயல்களையும், வருடாந்தர மழைகளையும் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த முடியும்.

ஹார்ப் (HAARP) மற்றும் எல்ஃப்(ELF ) போன்ற சக்திவாய்ந்த அமைப்புகள் பூமியையும் அதன் வளிமண்டலத்தையும் அவதிப்படுத்தும் சாத்தியம் உள்ளவை.  பூமியடி அமைப்புகளை ஆழ நோக்கும் ஆய்வுகளிலும் (Deep Earth Tomography)  இந்த அமைப்புகளின் சக்தி உதவக் கூடியது.

நிகோலாய் டெஸ்லா எனப்படும் பிரபல விஞ்ஞானி மின்சாரத்துறை மற்றும் காந்தத்துறைக்கு பங்களித்தவர். நவீன மின்னாற்றல் தொழில் நுட்பத்துறையில் இவர் ஒரு முன்னோடி. இவரது ஆராய்ச்சிகள் நவீன மின்காந்த ஆயுதத்தை உருவாக்க உதவியுள்ளன. மின்காந்தவியல் மூலம் நிலநடுக்கங்களை உருவாக்க முடியும் என்று சாத்தியத்தை அவர் வாதித்திருக்கிறார். உதாரணமாய், 12 ஸெப்டெம்பர் 1989 ல் காலிஃபோர்னியாவில் உள்ள கோறலிடோஸ் என்னும் இடத்தில் உள்ள காந்த ஆற்றல்மானிகள் அசாதாரணமான அதிகீழ் அதிர்வலைகளைப் பதிவு செய்தன. இந்த அலைகள் அவற்றின் ஆரம்பச் செறிவுக்கு மேல் சுமார் 30 மடங்கு வரை அதிகரித்து அக்டோபர் 5ஆம் தேதிக்குள் அடங்கின. மீண்டும் அக்டோபர் 17ம் தேதி அன்று பலமான குறிகள் தோன்றின. மூன்று மணி நேரத்துக்குப் பின் ஸான் ப்ரான்ஸிஸ்கோ நிலநடுக்கம் தோன்றியது.  இதர சில நிலநடுக்கங்கள் குறைந்த அதிர்வலைகளுக்கு முன் தோன்றி இருக்கின்றன. இவை எல்லாம் வெறும் தற்செயலா? அப்படியே இருப்பினும் இவை முற்றும் விளக்கப்படவில்லை என்கிறார் பெர்டெல். நிலநடுக்கங்கள் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கின்றன என்றாலும், சமீபத்தில் அவைகளின் நிகழ்வு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஜப்பானில் இந்த வருடம் நிகழ்ந்த நிலநடுக்கம் எல்ஃப் அலைகளின் பின்விளைவோ என்னும் ஐயம் தோன்றுகிறது. பொதுவாய் நிலநடுக்கங்கள் 20லிருந்து 25 கி மி ஆழத்தில் ஏற்படும். ஆனால்  8ஆம் தேதி, ஜூன், 1984இல்  பொலிவியாவில் ஒரு நடுக்கம் பரப்புக்கு 600 மீட்டர் கீழே நிகழ்ந்ததை விளக்குவது கடினம்.

நிலநடுக்கங்களையும், இயற்கைப் பிறழ்வான வானிலை நிலைமைகளையும் தவிர, எல்ஃப் அலைகளை எழுப்பும்போதும் பரப்பும்போதும் பூமிக்கும் அயானஸ்ஃபியருக்கும் நடக்கும் இடைவினைகள் இன்னும் நேரான வானிலை விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை உடையனவாய் இருக்கக்கூடும்.

இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான நிலைமையிலிருந்து வெளியேற நாம் செய்ய வேண்டியது ராணுவங்களைப்  படைசாராத்துறையின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதுதான். ஆயுதக்குறைப்புக்கான உத்திகளைச் செயல்படுத்தி, ராணுவ மற்றும் மனித வளங்களை ஆக்கபூர்வமான, தொடர்ந்து நீடிக்கக்கூடிய வகையான வளர்ச்சியை நோக்கி செலுத்தவேண்டும். எல்லாமே அழிந்து போய்விடவில்லை. இன்னும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பல முயற்சிகள் எல்லோருக்கும் ஆரோக்கியமானதொரு கோளை உருவாக்க உதவிக்கொண்டிருக்கின்றன. பூமியும், அதன் வளங்களும் தொடர்ந்து நீடிக்கும் வகை வாழ்வுக்கான தொலைநோக்கு சாத்தியமானது. இவை ’The Earth Charter’ என்று வழங்கும் ப்ரகடனத்தில் உருக்கொடுக்கப்பட்டுள்ளன என்று முடிக்கிறார் பெர்டெல். இப்ப்ரகடனத்தைப் பின்தொடருவோம். இப்பிரச்சினைகளின் இருபக்கங்களையும் அறிய விரும்புபவர்கள் இப்புத்தகத்தைக் கட்டாயமாய்ப் படிக்க வேண்டும்.

இப்புத்தகத்தின் ஜெர்மன் பதிப்பு டிஸெம்பெர் 2011ல் வெளிவர இருக்கிறது. இது பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும். தமிழில் எப்போது வரும்?

1] இது தொடர்பான ஒரு விடியோவை இங்கு பார்க்கலாம்.

**** **** ****

பவளப்பாறைகள்

coral3

வளப்பாறைகள் மழைக்காடுகளுக்கு சமமாய் பல்வேறுவகைப்பட்ட சூழல்மண்டலத்தைக்கொண்டவை. அவை வெப்பமண்டல நீரிலும் மிதமான தட்பவெப்பமுள்ள நீரிலும் காணப்படுகின்றன. ஆழமற்ற நீரில் பாறைகள் வடக்கில் 30 டிகிரிக்கும், தெற்கில் 30 டிகிரிக்கும் இடையே உள்ள அட்சரேகைகளில் தென்படுகின்றன. உலக அளவில் பவளப்பாறைகள் வெறும் 0.1% கடல்பரப்பையே நிரப்புகின்றன. அவை 18 டிகிரி செல்ஷியஸுக்கு மேற்பட்ட வெப்பநிலைகளில் பிழைத்திருக்கின்றன.

பவளப்பாறைகளின் மாறுபட்ட நிலைகள் பல்வேறு வகைத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இயற்கையான இருப்பிடம் மற்றும் ஒதுங்கிடமாய் அமைகின்றன. இப்படி ஒதுக்கிடம் தேடுபவை கடல்பாசிகள், கடற்புற்கள், கடல்பஞ்சுகள், நத்தை, சிப்பி போன்ற உயிரினங்கள் மற்றும் பல்வேறு வகையான மீன்கள். இப்பாறைகள் கால்ஸியம் கார்பொனேட்டால் உருவானவை மற்றும் சுண்ணாம்புக்கல்லை உருவாக்கும் உயிரினங்களால் ஒருங்கிணைக்கப்பட்டவை. பவளப்பாறைகள் ஊட்டச்சத்துக்களில் குறைபட்டவையாயினும், பல்வகைப்பட்ட அடிப்படை நிலை உற்பத்தியாளர் உயிர்வகைகளின் இணைந்த செயல்பாடு, இவற்றை பூமியில் மிக செழிப்பான சூழல்மண்டலமாக்குகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பவளப்பாறைகள் மிகப் புராதனமான அமைப்புகளாகும். அவை பல்வகை மீன்களுக்கு உணவு அளிக்கின்றன. நத்தை, சிப்பி, மற்றும் இதர மீன்களை அளிப்பதன் மூலம் மனிதகுலத்துக்கும் உணவு மூலமாய், முக்கியமாய் புரதச்சத்துக்கு மூலமாய் விளங்குகின்றன.

பவளப்பாறைகள் பலவிதமாய் செயல்படுகின்றன. சூறாவளிக் காற்றுகளிலிருந்தும் அலைகளால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் நிலப்பரப்பைக் காப்பாற்றுகின்றன. அரிக்கப்பட்ட பவளப்பாறைகளும், பாறைகளில் வாழும் உயிரினங்களின் அரிக்கப்பட்ட ஓடுகளும் அனைத்து வெப்பமண்டல கடற்கரைகளின் மண்ணையும் உருவாக்கி உள்ளன. பவளப்பாறைகள் உறுதியான சூழல்மண்டலங்கள். ஆனால் அவை எளிதில் உடையக்கூடியவை. இவை அழிபடும் காரணங்களில் மானுட நடவடிக்கைகளே முதன்மையானவை. மின் நிலையங்களிலிருந்து சூடாக்கப்பட்டக் கழிவுகளை வெளியேற்றுவது, உப்புநீக்கம் செய்யும் விசையகங்களிலிருந்து வெளியேற்றும் உப்புக்கழிவுகளின் அதிகரிப்பு, கன உலோகம் மற்றும் கதிர்வீச்சு, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் அமைதிக் குலைவுகள் (அணுசக்தி விளைவுகள், கட்டுமானப் பணிகள் மற்றும் நில மீட்புப் பணிகள்) பவளப்பாறைகளின் அழிவுக்கு வழிவகுக்கின்றன. உலகின் பவளப்பாறைகளில் 10% சீர்செய்ய முடியாத அள்வுக்கு சிதைந்துள்ளன, 30%,  2015க்குள் அழியும் நிலையில் உள்ளன. பாறை அடுக்குகள் அவற்றின் கால்சியம் கார்பொனேட் படிமங்கள் சிதைவதால் பெரும் நீரரிப்பு, புயல் சீற்றம் ஆகியவற்றுக்கு எதிராகத் தாமளிக்கும் பாதுகாப்பைக் கொடுக்க வலுவற்றதாகின்றன. இதனால் கடற்கரைகளும், சதுப்பு நிலக் காடுகளைப் போன்ற தேங்கிய நீர் வாசஸ்தலங்களும் முன்னில்லாத அளவு வெப்பதட்ப மாறுதல்களால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. இவற்றிற்கு பெரும் அளவிலான விளைவுகள் இருக்க வாய்ப்புண்டு.

சமீபத்திய ஆய்வுகள் கடல் முன்பு நினைத்ததைவிட அதிக அளவில் கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக்கொள்கிறது எனப் புலப்படுத்தி உள்ளன. இதனால் இன்னும் கலவரமடைய காரணம் உள்ளது. சமுத்திரத்தில் அமிலத்தன்மை அதிகரிப்பது பாறைகளின் கட்டமைப்பையே மாற்றி, அவற்றின் வளர்ச்சி, கடினமாகும் வேகம் மற்றும் பெருக்கத்தை குறைக்கக்கூடும்..

ஆதாரம்

Ocean acidification (2010) A National Strategy to meet the challenges of a changing ocean, National Research Counci of the National Academies.  The National Acadimies Press, Washington, D.C..  www.nat.edu

Pickton, M  (1995)  Coral Reef Ecosystems in Encyclopedia of Environment Biology, ed. Nierenberg, W.A. Vol. 1 A-E.  Academic Press, Sandiego.

இக்கட்டுரையாசிரியர் பானுமதி நடராஜன் முன்னாள் சென்னைவாசி. சென்னைப் பல்கலையின் தாவரவியல் பட்டதாரி. ஆய்வுப் படிப்புக்கு நார்வே சென்றவர், அங்கேயே தங்கி வாழ்கிறார். சுமார் 20 வருடங்களாக விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.   இந்திய மருந்து மூலிகைகளைப் பற்றியும், இந்திய மருத்துவத்தில் அவை பயன்படும் முறைகள் பற்றியும் ஆய்வு நடத்தி இருக்கிறார். சமீபத்து வருடங்களில் பன்னாட்டுச் சூழல் நலக் காப்பு இயக்கங்களில் பங்கெடுத்து பல நாடுகளில் நடக்கும் பேரவைகளில் கலந்து கொண்டிருக்கிறார்.  இந்தக் கட்டுரை அவர் சொல்வனத்துக்கு எழுதும் முதல் கட்டுரை. ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தமிழுக்கு மொழியாக்கி உதவியவர் பானுமதி நடராஜனின் பல்லாண்டு கால நண்பர், உஷா, வை.