சில முக்கிய விவரங்கள்
வைரஸ் என்பது உண்மையில் உயிருள்ளது அன்று. அது கண்ணறையும் (cell- கண்ணறை) அன்று.
வைரஸ் உருவளவில் மிக மிக நுண்மையானது; மனித உடலின் கண்ணறைகளில் பல மில்லியன் (ஒரு மில்லியன்-பத்து லட்சம்) வைரஸ்கள் இடம்பிடித்துக்கொள்ளும் அளவிற்கு உருவளவில் சிறியது.
வைரஸ், உயிரணுக்களை ஆக்கிரமிக்கக்கூடிய இயல்புகொண்டதோர் ஒட்டுண்ணியாகும்.
வைரஸ், ஆதாரமாக முதலில் ஓர் உயிரினத்தின் கண்ணறைகளில் தொற்றிக்கொள்ளும்; அப்போதுதான் அவற்றால் உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.
வைரஸ், தன்னுள்ளே மரபணு செய்திகளை பொதிந்து வைத்துக்கொண்டும், புரதத்தாலான சுற்றுச்சுவரையும் கொண்டுள்ளது. புரதச்சுவர் capsid என்று அழைக்கப்படுகிறது.
உலகெங்கும் உள்ள செடிகொடிகள், மரங்கள், காளான்கள், விலங்கினங்கள், பறவைகள் ஆகிய அனைத்து உயிர்வாழ்வனவும் வைரஸால் தாக்கப்பட வாய்ப்பு உண்டு.. பெரும்பாலான வைரஸ்கள் தமக்கென்று, சில குறிப்பிட்ட ஆதார உயிர்வாழ்வனவற்றை மட்டுமே தாக்கும்; மற்றவற்றைத் தாக்காது ( host specific ) .
கம்ப்யூட்டர் வைரஸ் என்பது முற்றிலும் மாறானது. இதனுள் DNA RNA போன்ற மரபணு பொருள்களோ, புரதச்சுவரோ கிடையாது. கம்ப்யூட்டர் வைரஸ் தன்னிடம் உள்ள நிரலியின் குறியீடு மூலம் தன்னையே பல படிகளெடுத்துக்கொண்டு எல்லா கணினிகளுக்கும் பரப்பிவிடும் வல்லமை வாய்ந்தது.
தமிழில் வைரஸ், நச்சியம் என்றும், பேக்டீரியா, குச்சியம் என்று வழங்கப்படுகிறது.
இந்த நச்சியத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோம்
நச்சியம் (வைரஸ்) என்பது ஒரு வாழும் உயிரினம் கிடையாது; அதே நேரம் அது இறந்துவிட்ட உயிரினமும் கிடையாது. இது கண்ணறைகளால் (செல்) ஆக்கப்பட்டதும் அன்று என்று பார்த்தோம். அப்படியானால் இது எப்படிப்பட்டது? எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
வாழும் உயிரினம் ஒன்றை ஆதாரமாக வைத்துக்கொண்டால்தான் இந்த நச்சியத்தால் செயல்பட இயலும்; இனப்பெருக்கமும் செய்துகொள்ள முடியும் (தன்னை பன்மடங்கு எண்ணிக்கையில் பெருக்கிக்கொள்ளுதல்).
தன்னிச்சையாக வாழ இதற்கு இயலாததால் ஏதேனும் ஒரு வாழும் உயிரினத்தைப் பற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இதற்கு இருக்கிறது.
உயிரினங்களின் கண்ணறைகளைச் சார்ந்து வாழ்வதால் இதை கண்ணறை ஒட்டுண்ணி (cellular parasite) என்றும் அழைக்கலாம்.
கண்ணறைகளுக்குள் புகுந்தவுடனேயே இது செயல்திறம் பெற்றுவிடுகின்றது. முதல் வேலையாக, கண்ணறைச் சுவர்களைக் கரைத்துவிடுகிறது. பிறகு, அக்கண்ணறைகளில் உள்ள பொருள்களையேப் பயன்படுத்தி, தானும் வாழ்ந்து, இனப்பெருக்கமும் செய்கிறது. இந்த செயல்முறையினால் கண்ணறைகள் பாதிப்பு அடைகின்றன. முற்றிலும் இதுதான் நடைபெறும் என்று கூறவும் முடியாது. எந்த பாதிப்பையுமே தான் பற்றிக்கொண்ட உயிரினத்தின் கண்ணறைகளுக்கு ஏற்படுத்தாமல் இருக்கும் நச்சியங்களும் இருக்கின்றன.
நச்சியம் மிகவும் நுண்மையானது என்று முதலில் பார்த்தோம். சாதாரணமாகப் பார்த்தால் மட்டுமன்று, ஒளியியல் நுண்ணோக்கி (ஒப்ட்டிகல் மைக்ரோஸ்கோப்) மூலம் பார்த்தாலும் கண்களுக்குப் புலப்படாதது. மின்னணு நுண்ணோக்கியைப் (எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்) பயன்படுத்தினால் மட்டுமே புலப்படக்கூடியது.
இதன் உருவளவை நாம் மனக்கண்ணில் புரிந்துகொள்ள, முதலில் மனிதரின் தலைமுடி ஒன்றினை அதன் விட்டம் 7 சென்ட்டிமீட்டர் அளவு இருக்குமாறு உருப்பெருக்கிக்கொள்வதாக வைத்துக்கொள்வோம் (ஒரு தலைமுடியின் உண்மையான விட்டம் 0.07 மில்லிமீட்டர்) இப்போது நச்சியத்தின் உருவளவு ஒரு பென்சிலின் கூர்முனையால் இடப்படும் ஒரு புள்ளியளவே ஆகும்.
நச்சியம் பல்வேறு வடிவங்களிலும் உருவளவுகளிலும் உள்ளன. அவற்றுள் பொதிந்திருக்கும் மரபணு DNA அல்லது RNA ஆகும்.
நச்சியங்களை அதன் உருவவடிவங்களை வைத்தோ அவை பற்றிக்கொள்ளும் ஆதார உயிரினங்களை வைத்தோ பலவகைகளாகப் பிரிக்கலாம்.
சில நச்சிய வகைகள்
பெரியம்மை நச்சியம் (smallpox virus) :
இது தீவிரமான ஒட்டுவாரொட்டி நச்சியம்; ஏற்கனவே நோய்தொற்று இருப்பவருடன் தொடர்புகொள்வது (தொடுதல்) மூலம் பரவுவது.
போலியோ நச்சியம்:
அசுத்தமான சூழல், ஏற்கனவே நோய்தொற்று இருப்பவருடைய உடற்கழிவுகள், போலியோ நச்சியம் தாக்கிய உணவு, உமிழ்நீர், காற்று , பொருள்கள், ஆகியவற்றில் இந்த நச்சியம் பரவ வாய்ப்பு உள்ளது.( நச்சியத் தொற்று உள்ளவற்றைத் தொட்டுவிட்டு வாயில் அல்லது கண்ணில் கையையோ விரலையோ வைத்துக்கொள்வது )
போலியோ நச்சியத் தொற்று ஏற்பட்டவுடன் அது முதலில் நாசி, தொண்டை ஆகிய இருபகுதிகளில் உள்ள சளிமத்திலும் (கோழை), குடல்பகுதியிலும் தங்கிக்கொள்ளும். பின் தொண்டையின் உட்பக்கம், நாசி, குடல் பகுதிகளில் உள்ள கண்ணறைகளைத் தாக்கி பலமடங்குகளாக தன்னைப் பெருக்கிக்கொள்ளும். சிலநேரங்களில் மூளை, முதுகுவடம், இருதயம், கல்லீரல், நுரையீரல், சருமம், தசைகள், கணையம் போன்ற பல பகுதிகளையும் தாக்கும்.
அறிகுறிகளும் உள்வளர்காலமும்
ஒருவருக்குப் போலியோ நச்சியத் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகள் தென்படுவதற்கு முன் ஏழிலிருந்து பத்துநாள்களுக்குள்ளும், அறிகுறிகள் தென்பட்டபின் ஏழிலிருந்து பத்து நாட்களுக்குள்ளும் பிறருக்குப் பரவ வாய்ப்புள்ளது. இந்த காலம் போலியோ உள்வளர்காலம் (incubation period) என்றழைக்கப்படுகிறது. உள்வளர்காலம், தொற்றின் தீவிரத்திற்கேற்ப நான்கு நாள்கள் முதல் 35 நாள்கள் கூட இருக்கலாம்.
இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு, நோய்த்தொற்று ஏற்பட்டதற்கு அறிகுறிகள் முதலில் ஏதும் தெரியாமலிருக்கும் என்பதுதான். பின்னர் காய்ச்சல், தொண்டைப் புண், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல், ஃப்ளூ காய்ச்சல் போன்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய அளவில் தொற்று ஏற்பட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் போகும். அறிகுறிகள் மறைந்த பின்னும் இரண்டு முதல் ஐந்து வாரங்களுக்குள் பிறரிடம் பரவலாம்.
இருபதாம் நூற்றாண்டில் இத்தொற்றுக்குத் தடுப்பூசி மூலம் தடைபோடும் வழக்கம் வந்தது.
டெங்கு நச்சியம் :
இது ஏடீஸ் கொசுவின் கடி மூலம் பரவுகிறது. இதன் விளைவாக ஏற்படும் டெங்கு காய்ச்சல் இரத்தசோகையை ஏற்படுத்திவிடும். தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
கை,கால், வாய் நச்சியம் (hand, foot mouth virus):
இந்த நச்சியத்தின் இலக்கு சிறுகுழந்தைகள் மட்டுமே. இது, உடலிலிருந்து உமிழப்படும் திரவங்களால் எளிதில் பரவவல்லது.
ஹெபடைட்டிஸ் நச்சியம்:
இது கல்லீரலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இதில் ஐந்து வகைகள் உள்ளன. அவை ஹெபடிட்டிஸ் எ,பி,சி,டி, இ. என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனால் பரவலாக ஏற்படும் தொற்று ஹெபடிட்டிஸ் எ, பி, சி ஆகியவற்றால் உண்டாவது மட்டுமே.
ஹெச்.ஐ.வி. நச்சியம்:
இந்த ஹெச்.ஐ.வி.நச்சியம் ‘ரெட்ரோவைரஸ்’ (retrovirus) என்ற நச்சியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது Human T- cell Lymphotropic virustype III (HTLV-III) அல்லது ஹெச்.ஐ.வி. வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
இது தனது மரபணுதகவல்களை நேர்மாறாக்கிவிடுகிறதால் Retrovirus என்று அழைக்கப்படுகிது.
இதுவும், ஓர் உயிரினத்தின் கண்ணறைகளைக் கைப்பற்றியபின்னர் பலமடங்காகிக்கொண்டுவிடும்.
சற்றுமுன் நாம் கண்ட ரெட்ரோவைரஸ் என்ற ஹெச்.ஐ.வி நச்சியம் தனித்தன்மை வாய்ந்த ஓரிழை மட்டுமே கொண்ட RNA நச்சியம் ஆகும்.
ஹெச்.ஐ.வி. நச்சியம், தான் தொற்று ஏற்படுத்தும் உடலில் நீண்டகாலம் தங்கக்கூடியது. எய்ட்ஸ் நோயை உண்டாக்கக்கூடிய இந்த ஹெச்.ஐ.வி. நச்சியம் உலகில் நானூறு லட்சம் மக்களைப் பிடித்திருக்கிறது. இந்த நச்சியம், தான் தொற்றிக்கொண்டிருக்கும் ஆதார உடலின் நோய் எதிர்ப்புசக்தியை பாதிப்படையச் செய்கிறது. ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ்’ ஆக அடையாளம் சுட்டப்படுவதன் பொருள் தாக்கப்பட்டுள்ள நபரின் இரத்தத்தில் ஹெச்.ஐ.வி நச்சியத்தின் எதிர்ப்புப்பொருள்கள் இருக்கின்றன என்பதே. இதைக் கண்டுபிடிக்கவென்றே சில சிறப்பு சோதனைகள் இருக்கின்றன.
ஹெச்.ஐ.வி. நச்சியம் உடலில் இருந்தால் உடனே எய்ட்ஸ் இருக்கவேண்டிய கட்டாயமும் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரது உடலில் இந்த நச்சியம் இருந்தால்கூட அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அது வேறு ஒருவரிடம் பரவலாம். இந்த நச்சியத்தைக் குறித்த வினோதமான தகவல் ஒன்று உள்ளது; அது, இந்த நச்சியம் 56 பாகை செல்சியஸ் வெப்பத்திலும், உடலிருந்து வெளியே வெளிப்பட்ட அரைமணிநேரத்திலும், ஆகிய இரண்டு சூழல்களிலும் இறந்துவிடும்.
ஹெச். ஐ.வி நச்சியம் (I, II) சிறிய வேறுபாட்டுடன் செயல்படுகிறது. இது கண்ணறைகளுள் புகுந்தபின் தன்னுடைய மரபணுப் பொருள்களைத் தான் தாக்கும் கண்ணறைகளில் மரபணுப்பொருள்களோடு இணைத்துகொண்டு விடுகிறது. அதன்பின் எப்போதெல்லாம் கண்ணறையின் மரபுப்பொருள் (மரபுப்பொருள் என்பது க்ரோமொசோம்- தமிழில் நிறப்புரி) பெருகுகிறதோ, உடனடியாக இதன் மரபுப்பொருளும் பலமடங்குகளாகிறது. இப்படியே பெருகிப் பெருகி, பாதிப்பு அடையாத வெண்குருதிக்கண்ணறைகளையும் தாக்குகிறது.
எய்ட்ஸ் நச்சியம் காற்று மூலமோ, பாதிக்கப்பட்டவரின் இருமல் மூலமோ பரவாது; பூச்சிகள் மூலமும் பரவாது. அவர்கள் பயன்படுத்திய பொருள்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்தினாலும் பரவாது. மேலும், கைகுலுக்குவது, அவர்கள் தொட்ட பொருள்களைத் தொடுவதன் மூலம், அவர்களுடன் ஒரே இல்லத்தில் வசிப்பது, ஒரே நீச்சல்குளத்தில் குளிப்பது போன்றவற்றால் பரவாது.
சார்ஸ் நச்சியம்
(SARS Severe Acute Respiratory Syndrome) இந்த நச்சியம் சுவாசத்தைத் தாக்குகிறது. எளிதில் பரவ வல்லது.
இன்ஃ·புளுவன்சா நச்சியம்
மனித வரலாற்றில் சில மிக பெரிய தொற்றுநோய்களுக்கு இந்த நச்சியம் காரணியாக இருந்திருக்கிறது. இதிலும் எ, பி, சி ஆகிய மூன்று வகைகள் இருக்கின்றன. பரவலாக அறியப்படுவதும் தொற்றப்படுவதும் எ வகை நச்சியம் ஆகும்.
பறவைக்காய்ச்சல் நச்சியம் (Avian flu virus)
இந்த தொற்று (H5N1)
நச்சியத்தால் பறவைகளிடையே உண்டாவது. இத்தாக்குதலுக்கு ஆளான பறவைகளிடமிருந்து பரவுகிறது.
நச்சியமும் குச்சியமும் (வைரஸ்’ உம் பாக்டீரியா’ வும்)
உடலில் எந்தெந்த கண்ணறைகளையும் திசுகளையும் நச்சியங்கள் ஆட்கொள்கின்றன என்பதைப் பொறுத்துதான் எவ்வித நோய் தாக்கும் என்பதை அறியமுடியும்.
ஓர் உயிரினத்தின் கண்ணறைகளைப் பாதிப்படையச்செய்வதன் மூலம் நோய் ஏற்படுகிறது என்பதை முன்னர் பார்த்தோம். பெரும்பாலான நச்சியங்கள் சில குறிப்பிட்ட உயிரினங்களில் குறிப்பிட்ட கண்ணறைகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. மூச்சுப்பாதையில் உள்ள கண்ணறைகள் நச்சியத்தால் தாக்கப்படும்போது தடுமண் (சளி) உண்டாகிறது. நச்சியங்களால் கண்ணறைகளுக்கு வெளியே தனித்து வாழ இயலாது.
அப்படியானால் இவை எப்படி உட்புகுகின்றன? இவை காற்றோட்டத்தின் மூலமாகவோ (air current) வேறு எவ்வழியாகவோ நுழைந்து உடலில் உள்ள பாய்மங்கள் (fluids) மூலம் கண்ணறைகளைக் கண்டடைகின்றன.
நச்சியத்தின் தாக்குதல் திட்டமும் செயல்முறையும்
ஒரு நச்சியம் தனக்கேற்ற கண்ணறையைக் கண்டுகொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம், உடனே அது என்ன செய்யும், முதல் வேலையாக அக்கண்ணறையின் உணர்வாய்களுடன் (receptors) ஒட்டிக்கொண்டுவிடும். இந்த உணர்வாய்களில் உள்ள வேதிப்பொருள்கள், நச்சியத்தைக் கண்ணறையுடன் ஒட்டவைத்து அதன் (கண்ணறையின்) உட்கரு அமிலத்தை உள்ளே கொணர்ந்துவிடும். இடம்மாறிய உட்கரு அமிலம் (முதலில் கண்ணறைக்குள் இருந்த அமிலம் இப்போது நச்சியத்தின் கைப்பிடியில் ) கண்ணறையினுடைய புரதம் தயாரிப்பு முறையில் குறுக்கிட்டு அதன் செயல்முறையைக் கைப்பற்றிக்கொள்ளும்.
நச்சியம் தாக்குவதற்கு முன், கண்ணறைகள் தங்கள் சொந்த மரபணுக்கள் குறிப்பிடும் புரதங்களை மட்டுமே தயாரித்து வந்தன. இந்த மரபணுக்கள்தாம் கண்ணறைகளின் பாரம்பரிய வடிவுருவங்கள் ஆகும். இவற்றினுள் இருப்பதோ உட்கரு அமிலம் (nucleic acid).
நச்சியத் தொற்றுக்குப் பின்:
நச்சியத்தொற்று ஏற்பட்டவுடன் பாதிப்படைந்த கண்ணறைகள், நச்சியத்தின் உட்கரு அமிலம் தீர்மானிக்கும் (குறிப்பிடும்) புரதங்களையே உற்பத்தி செய்யத் துவங்கும். இப்படியாக உருவாகும் புரதங்கள், நச்சியங்களைத் தம் இச்சைப்படி நூறோ ஆயிரமோ தேவையான எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்துகொள்ள உதவும்.
நச்சியங்கள் கண்ணறைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அவற்றினுள் வாழவும் கூடும் என்றும் முன்னர் கண்டோம். இது எங்ஙனம்?
பொதுவாக ஓர் உயிரினத்தின் உடல், தன்னைத்தானே பல வழிகளில் நச்சியங்கள், கெடுதலான பொருள்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்கிறது. இந்த எல்லா வழிகளையும்தான் நாம் ஒருங்கிணைத்து எதிர்ப்புசக்திக்கான அமைப்பு (immune system) என்கிறோம்.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம்.
லிம்·போஸைட்ஸ் என்று அழைக்கப்படும் வெண்குருதிக் கண்ணறைகள் (white blood cells) இரண்டு வழிகளில் பாதுகாப்பை நல்குகின்றன.
1) சில லிம்·போஸைட்டுகள், antibodies என்றழைக்கப்படும் எதிர்ப்புப்பொருள்களை உருவாக்குகின்றன. இவை நச்சியத்தின் புரதச்சுவரை மூடி, அதன்மூலம், நச்சியம், உயிரினத்தின் கண்ணறைகளில் உள்ள உணர்வாய்களுடன் ஒட்டிக்கொள்ள இயலாதவண்ணம் செய்துவிடுகின்றன. (நச்சியம் புரதச்சுவரால் மூடப்பட்டிருக்கும் என்பதை முன்னர் கண்டோம்)
2) சில லிம்போஸைட்டுகள் நச்சியத்தொற்றுக்குள்ளான கண்ணறைகளை, அவை இனப்பெருக்கம் செய்யும்முன்பே அழித்துவிடுகின்றன.
அப்படியும் சில நச்சியங்கள் எதிர்ப்புசக்திக்கான அமைப்பின் செயல்பாட்டை மட்டுப்படுத்தி இலகுவாக தங்களை இனப்பெருக்கம் செய்துகொள்ள தாமே வழிவகுத்துக்கொள்கின்றன. இவை போன்ற நச்சியங்களுள் தட்டம்மை, இன்ஃபுளுவன்சா, எயிட்ஸ் போன்றவற்றை உண்டாக்கும் நச்சியங்களும் அடக்கம்.
இனி பாக்டீரியாவைப் பற்றி காண்போம்
இவை தமிழில் குச்சியங்கள் என்று வழங்கப்படுகின்றன.
அங்கிங்கெனாதபடி எங்குமிருப்பவை குச்சியங்களே என்று உறுதியாகச் சொல்லலாம். ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றன; அவற்றுள் பெரும்பான்மையானவை தீங்கிழைக்காதவையாகும்.
சிலவகைக் குச்சியங்கள் நோய்களை உண்டாக்குகின்றன. இத்தகையவை உண்டாக்கும் நோய்களில் சில, காலரா, குஷ்டம், நிமோனியா, எலும்புருக்கிநோய், டைஃபாய்ட் காய்ச்சல், கக்குவான் இருமல், மேகநோய், மேகவட்டை நோய் போன்றவையாகும்.
மனித உடலில் அதிக எண்ணிக்கையில் குச்சியங்கள் எவ்விதத் தீங்கும் செய்யாமல் இருக்கவும் செய்கின்றன. சொல்லப்போனால் சில குச்சியங்கள் பேருதவிகூட செய்கின்றன. மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றின் குடல்களில் சிலவகைக் குச்சியங்கள் வாழ்கின்றன. இவை செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மேலும் தீங்கிழைக்கும் நுண்ணுயிரினங்களையும் அழிக்கின்றன. குடலில் உள்ள குச்சியங்கள் மனிதருக்குத் தேவையான உயிர்ச்சத்துகளைத் (வைட்டமின்கள்) தயாரிக்கின்றன.
தீங்கிழைக்கும் குச்சியங்களின் தாக்குதல் முறையும் செயல்திட்டமும்
தீங்கிழைக்கும் குச்சியங்களின் பணி, ஆரோக்கியமாகவும் நல்ல நிலையிலும் இருக்கும் கண்ணறைகளை அழிப்பதன்மூலம் அவற்றின் செயல்பாடுகளைத் தடுப்பதுதான். சில குச்சியங்கள் நச்சுப்பொருள்களைத் (விஷங்கள்) தயாரிக்கின்றன. இவை தொண்டை அழற்சி நோய், செங்காய்ச்சல், இரணஜன்னி, விறைப்புநோய் போன்றவற்றிற்குக் காரணமாகின்றன.
குச்சியங்கள் உயிருடன் இருக்கும்போதே சில நச்சுப்பொருள்களை உண்டாக்குகின்றன. மற்றபடி, இறந்த குச்சியங்கள் கூட நச்சுப்பொருள்கள் உருவாகக் காரணமாக இருக்கக்கூடும்.
பொட்டுலிசம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒருவகை தசைவிறைப்பு நோய், உணவுப்பொருளில் உள்ள நச்சுத்தொற்று மூலம் உண்டாகிறது.
எவ்வித தீங்கும் இழைக்காத குச்சியங்கள் கூட, உடலின் எதிர்ப்புசக்தி குறையும்போது நோய்த்தொற்றை ஏற்படுத்துவதுண்டு. எடுத்துக்காட்டாக, தொண்டையில் உள்ள குச்சியங்கள், உடலின் எதிர்ப்புசக்தி குறையும்போது வேகவேகமாக இனப்பெருக்கம் செய்து தொண்டைகரகரப்பு, புண் போன்றவற்றை உண்டாக்குகின்றன.
நலம் விரும்பும் குச்சியங்களும் நலம் கெடுக்கும் குச்சியங்களும்
மனித உடலின் தோலில், வாய்ப்பகுதியில், குடல்களில், சுவாசப்பாதைகளில் பல குச்சியங்கள் வசிக்கின்றன. பொதுவாக உடலின் மற்ற பாகங்களில் உள்ள திசுக்களில் குச்சியங்கள் இருப்பதில்லை. செரிமான மண்டலம், சுவாச மண்டலம் போன்றவற்றைச் சூழ்ந்துள்ள சவ்வுபோன்ற மென்படலங்களும், தோலும், தீங்கிழைக்கும் குச்சியங்கள் உடலின் பிறபகுதிகளில் நுழையாவண்ணம் காக்கின்றன.
எதிர்நச்சின் பணி
அப்படியும் மீறித் தீங்கிழைக்கும் குச்சியங்கள் நுழைந்துவிட்டால், உடலின் வெண்குருதிக்கண்ணறைகள் அவற்றைச் சூழ்ந்துகொண்டு தாக்கும். மேலும் உடலில் உள்ள இரத்தம், antibodies எனப்படும் எதிர்ப்புப்பொருள்களை உண்டாக்கும். இவை குச்சியங்களை அழித்துவிடும் அல்லது அவற்றின் வீரியத்தைக் குறைக்கும். எதிர்நச்சு எனப்படும் சில எதிர்ப்புப்பொருள்கள், நச்சுகளை முறிக்கும் திறன்கொண்டவை. இதுவும் குச்சியத்தொற்றைச் சமாளிக்கும் ஒரு வழியாகும். சிலநேரங்களில் குச்சியங்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்குமளவுக்கு உடலால் அதே வேகத்திற்கு எதிர்நச்சை உருவாக்க முடியாமல் போகும். அப்படிப்பட்ட நேரங்களில் மருத்துவர் எதிர்நச்சை ஊசிமூலம் செலுத்துவார்.
தடுப்பூசி மருந்துகள்
தடுப்பூசிக்கான மருந்துகள் சோர்வுற்ற அல்லது இறந்த குச்சியங்களிலிருந்து தயாரிக்கப்படும்; இவை அதுபோன்ற குச்சியங்களை உருவாக்கி நோய்த்தொற்றைத் தடுத்துவிடும்.
தடும்பூசிக்கான மருந்துகள் உடலில் ஊசிமூலம் செலுத்தப்படும்போது, அவை உடலிலுள்ள இரத்தமானது , குச்சியங்களைத் தாக்குவதற்காக எதிர்ப்புப்பொருள்களை உருவாக்குவதற்கு வழிகோலும்.
அண்ட்டிபயாட்டிக்ஸ் என்ற உயிரிஎதிர்ப்பிகள்
அண்ட்டிபயாட்டிக்ஸ் என்றழைக்கப்படும் உயிரிஎதிர்ப்பிகள், காற்று, நிலம், நீர் போன்றவற்றிலுள்ள நுண்ணுயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படுபவையாகும். இவை நோய் உண்டாக்கும் குச்சியங்களை வலுவிழக்கச்செய்துவிடும் அல்லது அழித்துவிடும். ஆனால் மிகஅதிகளவில் அல்லது அடிக்கடி உயிரிஎதிர்ப்பிகளைப் பயன்படுத்தினால், குச்சியங்களுக்கு மருந்துகளை வென்றிடும் திறன் கிட்டிவிடும்.