மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)

சூரியனை
– மகிழ்வோடு
வரவேற்கும் – எங்கேயும் போலான –
ஆதரவு வெளிர் வானம்.

துணை உள்ளோம், துயர் துடைக்க என
உயர்ந்திருக்கும் பெயர் தெரியா
பெருமரங்கள்.

விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.

மென் செடிகள், புதர்கள்,
தாவரங்கள், புள்ளினங்கள்,
பூச்சிகள், புழுக்கள்.

மேக உறவினர்கள்.
குளிர்ப் பச்சை.

எல்லாவற்றையும் இணைக்கும்
பூங்காற்று. வளைவில் திகைப்பூட்டும்
அருவிகள், அருவித் தடங்கள்.

தூரத்துப் புகை ஊர்கள்…..

மனித இதயம் போல்
கடிந்திருந்தாலும்
அனைத்தையும்
ஏந்தி நிற்கும் மலை.

-o00o-

இவை,
மற்றும்
மலைதனைப் பிளந்து
சாலை செய்த தொழிலாளர்
பொறியாளர்
அனைவருக்கும்
என் வணக்கம்.

-o00o-

பார்வை அமைதியைக்
குலைக்கும்
கவிதையின் சொல்லுருவைத்
தொலைத்தேன்.

-o00o-

நெஞ்சப் பனிமலையுருகி
மொத்தமாய்க் கரைந்து
பெருகிய தன்பருவி.