மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு

இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

டைகர் வரதாச்சாரியாருக்கு கண்ணன் பக்கவாத்தியம் வாசித்ததும் அதே 1935-ஆம் ஆண்டில்தான்,அலகாபாத்தில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் த்வாரம் வேங்கடசாமி நாயுடுவுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கண்ணனின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்த த்வாரம் தங்கப் பதக்கம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். மாஸ்டர் கண்னன் என்ற பெயர் இசை உலகில் பரவலாக அறியப்பட இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது எனலாம். இதற்கு முன், 1932ல் தசரா பண்டிகையில் வாசிக்க கண்ணனனுக்கு மைசூர் சமஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. அங்கு ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்கார், வீணை சுப்பண்ணா ஆகியோரின் கச்சேரிகளுக்கு கண்ணன் வாசித்தார். மைசூர் மகாராஜா கண்ணனின் வாசிப்பை பெரிதும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடன்றி தொடர்ந்து அடுத்த ஆண்டுகளிலும் கண்ணனை மைசூருக்கு அழைத்து மகிழ்ந்தார்.

kannan_4பதினெட்டு வயதாகும் முன்பே நாயனா பிள்ளையின் கச்சேரிகளில் வாசித்திருந்த கண்ணன், சித்தூர் சுப்ரமணிய பிள்ளைக்குத் தொடர்ந்து வாசித்து வந்தார்.

அதை நினைவு கூர்கையில், “லய நுணுக்கங்களைப் புரிந்து கொண்டவர்கள் சித்தூராரின் வாய்ப்பாட்டைப் புரிந்து ரசிக்க முடியும். ஆனால் நாயனா பிள்ளையின் கணக்கு வழக்குகள், விஷயம் தெரிந்தவர்களுக்கும் புதிராக இருக்கும். அவரது விவகாரங்கள் (complexities) வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், லய ஞானமில்லாதவர்கள் கூட ராக பாவத்துக்காக மட்டுமே அவரது இசையை ரசிக்க முடியும்” என்கிறார் கண்ணன். நாயனா பிள்ளையின் வாசிப்பு முறை கண்ணனின் வாசிப்பை ஆழமாக பாதித்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாயனா பிள்ளையின் சிறப்புகளாகக் கண்ணன் கூறிய விஷயங்களையே கண்ணனின் வாசிப்பின் முக்கிய கூறுகள் என்பது இசையுலக அறிஞர்களின் ஒருமித்த கருத்து.

அகில இந்திய வானொலி துவக்கப்படுவதற்கு முன்பே கண்ணன் மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோவில் பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட காலத்தில், நிலைய இயக்குனராக வீணை தனம்மாளின் பேரன் விஜிகிருஷ்ணன் இருந்தார். அவருடைய வற்புறுத்தலின் பேரில் 1943-இல் மெட்ராஸ் கண்ணன் அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராக இணைந்தார். “அகில இந்திய வானொலியில் ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகளைத் துவக்கியபோது முதல் கச்சேரியில் மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் பாடினார். அவருக்கு வாசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.” என்கிறார் கண்ணன். அகில இந்திய வானொலியின் மிக உயர்ந்த க்ரேடை அடைந்த முதல் நிலைய கலைஞர்(staff artist) என்ற பெருமையும் கண்ணனுக்கே உரியது. வானொலி வேலை அவருக்கு தடைகளை ஏற்படுத்தியதா என்ற கேள்விக்கு, “என் கச்சேரிகளைச் செய்வதற்குப் போதுமான நேரம் எனக்கு எப்போதும் இருந்தது. வானொலியால் பல இசைக் கலைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதனால் நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். பல இசை நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் வானொலி வாய்ப்புகள் தந்தது. ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகளுக்காக நான் உருவாக்கிய பல்லவிகளும் வானொலியில் ஒலிபரப்பப் பட்டுள்ளன.,” என்கிறார் கண்ணன்.


[டி.எம்.தியாகராஜனுடனான கச்சேரியில் வாசிக்கும் கண்ணன்]

தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன். கண்ணனுக்கும் புல்லாங்குழல் மேதை மாலிக்கும் இருந்த உறவைப் பற்றிக் கூறுகையில், “பக்கவாத்தியம் வாசிப்பவரை முழி பிதுங்க வைப்பதற்காகவே மாலி லய சாகசங்களில் ஈடுபட்டார் என்றொரு பரவலான கருத்து உண்டு. . நான் மாலிக்கு வாசித்தபோது அவர் எனக்குப் பிரச்சினை தருவதற்காக எதையும் வேண்டுமென்றே செய்ததாக எனக்குத் தோன்றவில்லை அவருடைய கற்பனைக்குத் தோன்றியதை அவர் வாசித்தார் என்றே நான் நினைக்கிறேன். நான் இளம் பிராயத்திலிருந்தே அவருக்கு வாசித்திருந்ததால் அவருடன் வாசிப்பது எனக்குக் கடினமாக இருக்கவில்லை,” என்கிறார்.

கண்ணனின் வாசிப்பைப் பெருமளவில் பாதித்தவர்கள் யார் என்ற என் கேள்விக்கு சற்று நேரம் யோசித்து விட்டு பதிலளித்தார், “நான் பல வருடங்களாக வாசித்து வருகிறேன். ஆனால் என் குருநாதரைப் போல் என்னால் இன்றுவரை ஒரு சாப்பை வாசிக்க முடியவில்லை. இந்த ஜென்மத்தில் அது முடியாது என்றே நினைக்கிறேன். தட்சிணாமூர்த்தி பிள்ளையும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் லயத்தில் புதிதாக செய்வதற்கு எதையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் என் வாசிப்பை பாதித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் சாதித்ததைத் திரும்ப வாசிப்பதற்கு மட்டுமே நான் என் வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்திருக்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். நான் இதைத் தொடர்ந்து முயற்சி செய்தால் அடுத்த ஜென்மத்தில் அங்கே செல்ல முடியுமோ என்னவோ.”

அவரோடு சமகாலத்தில் வாசித்த புகழ் பெற்ற இசைக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகையில், “மிருதங்கம் வாசிப்பதற்கென்றே பிறந்தவர்கள் இருவர் – ஒருவர் பாலக்காடு மணி ஐயர், மற்றவர் பழனி சுப்ரமணிய பிள்ளை. அவர்கள் இந்தக் கலைக்கே கௌரவம் சேர்த்தார்கள்.” என்கிறார் கண்ணன்.

80 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இசை வாழ்வில் பல விருதுகள் மெட்ராஸ் கண்ணனை சிறப்பித்திருக்கின்றன. 1955-இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் “லய ரத்னாகர” விருது வழங்கி கௌரவித்தார். 1959-இல் சுவாமி சிவானந்த சரஸ்வதி “மிருதங்க சாம்ராட்” பட்டம் வழங்கினார். ஆப்பிரிக்காவுக்கு மூன்று மாதங்கள் பயணம் சென்ற இந்தியக் கலாசாரக் குழுவில் இடம்பெற இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். எத்தியோப்பியப் பேரரசரும் லைபீரிய ஜனாதிபதியும் தங்கப் பதக்கங்கள் வழங்கி கண்ணனை கௌரவித்தனர்.

வயலின் மேதை யஹுதி மெனுஹின் 1974-ல் International Music Council President ஆக இருந்தார். அந்த வருடம் ஈமணி சங்கர சாஸ்திரியையும் மெட்ராஸ் கண்ணனையும் கவுன்சிலின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் வாசிக்கும்படி அழைத்தார். “நூற்றாண்டின் சிறந்த கச்சேரியாக” அவர்கள் செய்த கச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டது. 1978-இல் USSRல் அல்மா ஆடாவில் கூடிய சர்வதேசத் தேர்வுக் குழுவால் கண்ணன் “Asian Music Rostrum Award”-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

sankarasastry-yehudimenuhin-kannan

[சங்கர சாஸ்திரி – யெஹுதி மெனுஹின் – கண்ணன்]

emani[ஈமணி சங்கர சாஸ்திரியுடன் கண்ணன்]

“பாலக்காடு மணி ஐயர் இந்த விருதைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டு உடனே என் வீட்டுக்கு வந்து என்னை வாழ்த்தினார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இதை நான் நினைக்கிறேன்,” என்கிறார் கண்ணன்.

விருது பெற்று சென்னைக்கு வந்த கண்ணனுக்கு மாபெரும் வரவேற்பும் பாராட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஓரு வாத்திய சேர்ந்திசை நிகழ்ச்சியை (ensemble) நடத்த வேண்டுமென்று அகில இந்திய வானொலியின் நிலைய இயக்குனர் கண்ணனைக் கேட்டுக் கொண்டார். சிவ தாண்டவத்தை உருவகிக்கும் வகையில் “பூ கைலாச வாத்திய சங்கமம்” என்ற நிகழ்ச்சியை கண்ணன் உருவாக்கினார். அந்த நிகழ்ச்சியில் சில மேற்கத்திய இசைக்கருவிகள் உட்பட பல்வேறு இசைக்கருவிகள் இடம் பெற்றுள்ளன. இந் நிகழ்ச்சி பெரிய அளவில் பாராட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

கண்ணன் பல விருதுகள் பெறறிருந்தாலும் சில குறிப்பிடத்தக்க விருதுகள் அவரைச் சேரவில்லை. 2004-இல்தான் அவருக்கு சங்கீத் நாடக் அகாடமி விருது கிடைத்தது. இதற்கு பிராமணரல்லாத பின்புலம் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஹேஷ்யத்தைக் கண்ணன் தீவிரமாக மறுக்கிறார். “தட்சிணாமூர்த்தி பிள்ளை பிராமணர் அல்லாதவர்தான். ஆனால் ஒரு மனிதருக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரும் மரியாதை அவருக்குக் கிடைத்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரு சமாதிக் கோயிலை அவர் சீடர்கள் கட்டியுள்ளனர், அவர் கடவுளாக வழிபடப்படுகிறார். இந்தக் கௌரவத்துக்கு எந்த விருதும் இணையாகுமா?” என்கிறார்.

இயல்பாகவே, கூச்ச சுபாவம் கொண்ட கண்ணனுக்கு விருதுகள் எதுவும் வரும்போது வரட்டும் என்ற மனப்பக்குவம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

[லெக்-டெம்மில் வாசிக்கும் 90 வயது கண்ணன்]

தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “என் தகுதிக்கு மேலாகவே எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்திருப்பவையெல்லாம் என் தந்தையாரின் முயற்சியாலும் குருநாதரின் அருளாலும் மட்டுமே பெற்றவை. அவர்களுடைய ஆசிகள் இன்றி நான் ஒன்றுமில்லாதவன்” என்கிறார்.

2002-இல் இசைத்துறையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்த கண்ணனை, வேலூர் கோபாலாச்சாரியார் விருது வழங்கி ஸ்ருதி அறக்கட்டளை கௌரவித்தது. அதைத் தொடர்ந்து இன்னும் பல பாராட்டு விழாக்கள் நடந்தன. ந்யூ வுட்லாண்ட்ஸ் ஹோட்டலில் நல்லி குப்புசாமி செட்டியார் விமரிசையான பாராட்டு விழா ஒன்றைஏற்பாடு செய்தார். கர்நாடக அரசு “பஞ்ச நடை கலாரத்னா” என்று பட்டமளித்து சிறப்பித்தது.

kannan_3

ஆண்டாண்டு காலமாக கண்ணன் பல மாணவர்களைப் பயிற்றுவித்து வருகிறார். இப்போது அவர்கள் கண்ணனின்புகழை உலகெங்கும் பரப்பி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ராமகிருஷ்ணன், ராஜன், ஸ்ரீநாத், சுரேஷ் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், மெட்ராஸ் கண்ணன் தன்னிச்சையாக கடிகாரத்தைப் பார்க்கிறார். “ஓ! நான் நான்கு மணி நேரமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன்?. தம்பி, நீ ஒரு வருடம் பாலக்காடு மணி ஐயருடன் இருந்திருந்தாலும் அவர் இவ்வளவு பேசி நீ கேட்டிருக்க முடியாது.. நானோ என் பெருமையை மணிக்கணக்காகப் பேசி உன்னை களைப்படைய வைத்துவிட்டேன்,” என்கிறார் ஒரு நாணப் புன்னகையை உதிர்த்த படி.

அவரிடம் விடைபெற்று வீடு திரும்பும் போது ஒரு டைம் மிஷினில் உலா வந்து மீண்ட உணர்வு எனக்குள் எழுந்தது. கண்ணனிடம் வீசிய அத்தரின் மணம் மட்டும் அந்தக் ‘கால யாத்திரையின்’ எச்சமென தொடர்ந்து கொண்டிருந்தது.

[மெட்ராஸ் கண்ணனின் மேலும் பல புகைப்படங்களுக்கு: மெட்ராஸ் கண்ணன் படங்கள்.]