பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இறுதிப் பகுதி

இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2

புதிய முறைகள் உயர்ந்தவையா?

இவ்வகை சேவைகளில் பிரசனைகள் இல்லாமல் இல்லை. முதலில், கிரெடிட் கார்டுகள் எல்லாம் ஒன்றல்ல, அதில் பல வகைகள் உள்ளன. அவர்களின் வட்டிகள் ஏராளமானவை. அவை கணக்கிடப்படும் விதமும் சீரானது அல்ல. ஒரு முறை உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை கட்டாமல் விட்டவர்களுக்குத் தெரியும் – எப்படி எல்லாம் வட்டி வசூலிக்கிறார்கள் என்று. சில கார்டுகள் கெடு நாளிலிருந்து வட்டி கணக்கிடுவார்கள். சில கார்டுகள் பரிவர்த்தனை தேதியிலிருந்து வட்டி கணக்கிடுவார்கள். 18% முதல் 80% வரை வட்டியுள்ள கிரெடிட் கார்டுகள் உள்ளன. விசா மற்றும் மாஸ்டர் 2% முதல் 3% வரை பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். உராய்வை குறைப்பது இலவசம் அல்ல!

க்ரெடிட் கார்டுகள் கண்டதுக்கெல்லாம் கட்டணம் வசூலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் சொன்ன காரணம், உயர்தர பாதுகாப்பான வலையமைப்பு செலவுகளை மீட்பதற்கே என்பது. இன்று வலையமைப்பு செலவு குறைந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள், இடை கம்பெனிகளான processors எல்லோரும் இணைய புரட்சியால் முன்னைப் போல கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.

எந்த ஒரு புதிய சேவை வந்தாலும், சில அடிப்படை முக்கிய கேள்விகளை நாம் கேட்க வேண்டும். இதை என் அனுபவத்தில், முக்கிய 3 வங்கி கேள்விகளாக சொல்லியிருந்தேன். 1) முதலில், சேவையின் நம்பகத் தன்மை (service reliability) ரொம்ப முக்கியம். 2) இரண்டாவது, வாடிக்கையாளர்களின் நிதி அந்தரங்கம் (consumer financial privacy). 3) மூன்றாவது, சேவையின் துல்லியம் (Transactional accuracy). இதில், இன்று பரிவர்த்தனை துல்லியம் முக்கியமில்லாமல் போய்விட்டது. பரிவத்தனைக் கட்டணம் (transactional fees) மிக முக்கியமாகிவிட்டது. எந்த ஒரு புதிய சேவையும் இலவசமில்லை. செளகரியத்திற்கு விலை என்ன என்று பார்ப்பது முக்கியம். அவரசரப்பட்டு, செளகரியமாக இருக்கிறது என்று புதிய சேவைகளுக்கு மாறத் துடிக்காதீர்கள். தீர விசாரிப்பது அவசியம். ஏனென்றால், இதில் உங்களது பண விஷயம் சம்மந்தப்பட்டது. இளைய சமூகத்தினர், சமூக வலையமைப்பு நிதி சேவைகளை சந்தேகத்துடன் அணுகுவது உத்தமம். முக்கியமாக உங்களது நிதி அந்தரங்கம் பற்றி முழுவதும் நம்பிக்கை இல்லையேல் அந்த சேவையை உபயோகிக்காதீர்கள். மேலும், ஒரு பரிவத்தனைக்கு எத்தனைக் கட்டணம் என்று தீர விசாரியுங்கள்.

அடுத்தபடியாக கரண்சி என்ற விஷயத்துக்கே இடமில்லாதபடி ஆக்கும் சில முயற்சிகளை ஆராய்வோம்.

புதிய கரண்சிகள்?

விமானப் புள்ளி கார்டுகள் பற்றி விவாதிக்கும் போது, எப்படி விமானக் கார்டு புள்ளிகளை உபயோகிக்காலாம் என்று பார்த்தோம். ஒரு விதத்தில் எல்லா விசுவாசக் கார்டுகளும் பணத்தை வேறு வடிவத்தில் கணக்கிட்டு சாதாரணப் பணத்திற்கு பதிலாக உபயோகிக்கும் வழிகளை சாத்தியமாக்கும் முயற்சிகள். இதை சற்று வேறு விதமாக யோசித்தால், இது ஒரு மாற்று கரண்சி முயற்சி. இன்று இம்முயற்சிகள் பலவாறு வளர்ந்து, பல உருவங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டன.

இவற்றை அலசுமுன் சற்று சாதாரணப் பணத்தைப் பற்றிச் சிந்திப்போம். காகிதப் பணம் ஒரு நாட்டின் அரசாங்கத்தின் மூலம் அச்சடிக்கப்பட்டு, அதன் மதிப்பு உத்தரவாதப் படுத்தப்படுகிறது. இன்னொரு விஷயம் – நாட்டின் எந்த பகுதியிலும், எந்த வணிக அமைப்பிலும், எந்த சேவையையும் பெற காகிதப் பணம் உதவுகிறது. ஒரு தனி நபர் மற்றும் அமைப்பின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் அளவுகோலாக காகித பணம் உபயோகப் படுகிறது. உத்தரப் பிரதேசத்திலும், கேரளாவிலும் 100 ரூபாய்க்கு மதிப்பு ஒன்றுதான். அதே போல, காகிதப் பணத்தைக் கொண்டு அரிசியும் வாங்கலாம், அதை சமைக்க குக்கரும் வாங்கலாம். எல்லாவற்றையும்விட முக்கியம், காகிதப் பணத்தின் எளிமை. ஒருவர் 100 ரூபாயை இன்னொருவருக்கு கொடுத்தால், வாங்கியவரின் சொந்தமாகிறது அப்பணம். ஒருவர் கிரெடிட் கார்டை இன்னொருவருக்கு கொடுத்தால், வாங்கியவரின் கார்டாவதில்லை. எந்த புதிய வகை கரண்சி அமைப்பும் இந்த முக்கிய விஷயங்களை சீரியஸாக கொண்டால்தான் வெற்றிபெற முடியும். அதாவது:

1. மதிப்பு உத்தரவாதம் (value guarantee)
2. உபயோகத்தன்மை உத்தரவாதம் (usage guarantee)
3. பூகோள உத்தரவாதம் (geographic guarantee)
4. மாற்று உத்தரவாதம் (exchange guarantee)

பணத்தைப் போல மிகவும் உபயோகமான இன்னொரு விஷயம் பயணிகள் செக் (travelers cheques). பத்திரமாக பயணம் செய்வோர் எடுத்துச் செல்லலாம். தேவையான பொழுது கையெழுத்திட்டு கரண்சியாக மாற்றிக் கொள்ளலாம். இது பல வருடங்களாக இருக்கும் அமைப்பு. மதிப்பு உத்தரவாதம் இருந்தாலும், பூகோள உத்தரவாதம் இருந்தாலும், உபயோக உத்தரவாதம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் பயணிகள் செக்கை உபயோகிக்க முடியாது. ஹோட்டல் ஒன்றிற்கு சென்று சாப்பாட்டுக்கு பயணிகள் செக்கை உபயோகிக்க முடியாது. ஆனால், பத்திரத்துக்காக ஏராளமான கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஸ்மார்ட் வவுசர் (http://www.smartvoucher.com/uk/home.aspx) என்பது இங்கிலாந்தில் RBS பின்னணியுடன் தொடங்கப்பட்டுள்ள ஒரு சேவை. இந்த சேவையின் விசேஷம் என்னவென்றால், நுகர்வோருக்கு எந்த முறை பிடிக்கிறதோ அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, உங்களுக்கு காகித்த்தில் அச்சடிக்கப்பட்ட வவுசர் வேண்டுமானாலும், ப்ளாஸ்டிக் கார்டாக இருந்தாலும் சரி. இதை பல சில்லரை வியாபாரிகள் மூலமாக அவர்களது பெயரிட்ட கார்டாகவும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு சில்லரை வியாபாரத்திடம் வாங்கியதால் அந்த வியாபாரத்தில்தான் செலவு செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதில்லை. எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இதில் பணமாற்று சேவை தொடங்கவில்லை. பன்னாட்டு பணமாற்ற சேவை இவர்களது குறிக்கோள். தற்போதைக்கு உள்நாட்டில் விற்று வெற்றிபெற முயற்சித்து வருகிறார்கள். இவர்களது சேவை முறையில் மிக முக்கியமானது: 19 இலக்கம் கொண்ட எண். எவ்வளவு பணம் கைமாற வேண்டும் மற்றும் அந்த 19 இலக்கம் சரியாக இருந்தால், இதை SMS வழியாக, நேராக, இணையம் வழியாக எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். ஓரளவிற்கு முதல் மூன்று உத்தரவாதங்களும் இருந்தாலும், இந்த அமைப்பில் மாற்று உத்தரவாதம் இல்லைதான்.

மேலே சொன்ன இரு முறைகளும் மாற்று கரண்சி என்று அடித்துச் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் பின்னால் அரசாங்க கரண்சி மறைந்துள்ளது உண்மை. பல மின்னணு கரண்ஸி கம்பெனிகள் திவாலாகிவிட்டன – beenz, flooz, e-gold மற்றும் Idollars போன்றவை எங்கு மறைந்தன என்று தெரியவில்லை.

பணத்தின் எதிர்காலம்?

இணையம் வளர வளர புதிய வழிகளில் வியாபாரம் செழிக்க முயற்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்று பரவலாக மக்கள், இணைய வங்கி, கார்டுகள் மற்றும் விசுவாச கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். புதிய இணைய பணம் செலுத்தும்/பெறும் முறைகள் (பேபால், ஓபோபே) போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கிவிட்டன. பேபால் உட்பட பல அமைப்புகளும் தங்களுடைய முறைகளை புதிய கரண்சிகளாக விளம்பரப் படுத்துகின்றன. ஆனால், அரசாங்க கரண்சிக்கு இணையாக எதுவும் இதுவரை பிரகாசிக்கவில்லை. என் பார்வையில், எதிர்காலத்தில் (இன்னும் 10 ஆண்டுகளில்) பல புதிய கரண்சி முயற்சிகள் நம் முன்வைக்கப்படும். இவை வெற்றி பெறுமா என்று சொல்வது கடினம். ஆனால், இன்றைய இணைய நிதி முறைகள் பரிமாற்ற உரசல்களை கட்டணத்தைப் பொறுத்து குறைக்கச் செய்கின்றன என்பது பொதுவான முன்னேற்றம். எந்த அளவுக்கு நுகர்வோரின் நிதி அந்தரங்கத்தை இவை பாதுகாக்கின்றன என்பது கேள்விக்குறிதான். வளரும் நாடுகளில் செல்பேசி பணமாற்ற முறைகள் இன்னும் பிரபலமடையும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இணைய மாற்றங்களால், வங்கிகள் முன்போல இல்லாமல், நுகர்வோருக்கு ஒழுங்காக சேவை செய்யும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. சேவை சரியில்லையென்றால், ஒரு கிளிக்கில் நுகர்வோர் இன்னொரு வங்கிக்குத் தாவிவிடலாம்.

எந்த ஒரு புதிய சேவையை நீங்கள் தழுவும் முன்னர் நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவை:

1. எந்த அளவுக்கு உங்கள் நிதி அந்தரங்கம் பாதுகாக்கப்படுகிறது?
2. எந்த வகை மறை கட்டணங்கள் (hidden charges) வசூலிக்கப்படும்?
3. சேவையின் நம்பகத்தன்மை மற்றும் செளகரியம் தற்போதய சேவையைவிட சிறந்ததா?
4. உங்களது சொந்த நிதி தேவைகளை எப்படி பூர்த்தி செய்கின்றன?
5. 365 x 24 மணி நேரமும் சேவை உண்டா?
இவற்றைத் தவிர, புதிய சேவைகள் மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.

முடிவுரை

வங்கிகளில் வரிசையில் தவித்து நேரத்தை வீணாக்கிய காலம் இணைய வசதிகள் மூலம் மிகவும் மாறிவிட்டது. இந்திய சூழலில், அஞ்சலகங்கள் முதியோருக்கு இம்முறைகளை கொண்டு வந்தால் அவர்களது அலைச்சலைக் குறைக்கலாம். புதிய ஊடகங்களில், புதிய நிதி முறைகள் இணையத்தை உபயோகித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எந்த ஒரு முறையும் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. ஆனால், புதிய முறைகளைப் பற்றிய பொது அறிவு மிகவும் அவசியமாகிவிட்டது. அணைவருக்கும் பண விஷயங்கள் தேவையாக இருப்பதால், இவற்றைப் பற்றி அறிதல் அவசியமாகி விட்டது. வெறும் செளகரியத்தை மட்டும் பார்க்காமல், சில முக்கிய கேள்விகளை முடிவெடுக்குமுன் இதைப் படிக்கும் சிலராவது கேட்டால் நல்லது.