தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்

புத்தகம் : YOGA BHOGA AND ARDHANARISWARA- Individuality, Wellbeing and Gender in Tantra
நூலாசிரியர் : Prem Saran

இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள இதன் ஆசிரியர் பிரேம் சரண் குறித்த சில முக்கியமான தகவல்களை நாம் அறிந்திருப்பது உதவும். பிரேம் சரணின் பூர்வீகம் கேரளம். பிறந்தது மற்றும் வளர்ந்தது கேரளத்துக்கு வெளியே. மத்திய உயர்மட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிரேம் சரண் தன் முதல் பதினாறு ஆண்டுகள் மும்பையின் கான்வென்ட்களில் பள்ளிப் படிப்பைப் பயின்றார். மங்களூரில் பொறியியல் பட்டப்படிப்பையும், அதைத் தொடர்ந்து கல்கத்தாவில் எம்பிஏ பட்ட மேற்படிப்பையும் நிறைவு செய்தார். பொதுச் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று அஹாமில் (அஸ்ஸாம்) இந்திய ஆட்சிப் பணியில் அமர்ந்தார். அவரது மனைவி அஹாமைச் சேர்ந்தவர். பிரேம் சரண் ஒரு பெண்ணுக்குத் தந்தை. தற்போது இவர் அஹாம் மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆணையராகப் பணியாற்றுகிறார்.

இதிலெல்லாம் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் பிரேம் சரண் ஒரு சாக்தரும்கூட. அதுவும், வாமாசாரத் தாந்திரிக சாதகராக அவர் சமாதி நிலை அனுபூதி அடையப் பெற்றவர். இவரது ஆன்மீக நாட்டம் மங்களூரில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் உருவான ஒன்று. கல்லூரி மாணவனாக கஞ்சா போன்ற போதை வஸ்துக்களைப் பழகிய அவருக்கு இந்திய இறையியல் மற்றும் தத்துவ நாட்டம் இருந்திருக்கிறது. கல்கத்தாவில் எம்பிஏ படிக்கும் காலத்தில் மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் பயின்றவர் பிரேம் சரண். அதைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுகளுக்காக பங்களூரில் பயிற்சி பெற்று வந்த நாட்களில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் உரைகளை வாசிக்கத் துவங்கியிருந்தார். அப்படி ஒரு நாள் அதிகாலை, கிருஷ்ணமூர்த்தி வாசிப்பனுபவத்தைக் கொண்டு தியானம் செய்கையில் அக அடையாளத்தின் மேற்பரப்பாக மட்டுமே தன் தனியாளுமை இருப்பதை அனுபவமாக உணர்ந்தார். பிரேம் சரணின் தனி மனித ஆளுமை, அதைவிட பன்மடங்கு ஆழமான, செறிவான இருப்பில் ஒன்றியது. அது ஒன்றிய காலத்தில் பிரேம் சரண் என்ற தனி மனிதன் இருக்கவில்லை: அது ஒரு ஒருமைப்பாடுடைய நிலை என்கிறார் அவர். அதைத் தொடர்ந்த பதினேழு ஆண்டுகளில் அவருக்கு இத்தகைய தரிசனம் பலமுறை நிகழ்ந்து, இவ்வாறான அகவிழிப்பு நிலை எப்போதும் உள்ள ஒன்றாக இன்று இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பிரேம் சரண்.

இந்த பதினேழு ஆண்டுகளில் ஒரு சாக்தரிடம் தீட்சை பெற்று தாந்திரிகத்தைப் பயின்றதோடல்லாமல் தத்துவப் பட்டப்படிப்பு மேற்கொண்டு அதில் ஆய்வுகள் செய்திருக்கிறார். இந்த ஆய்வுகளின் விளைவே நாம் பார்க்கப்போகும் புத்தகம். நேபாலியத் தாந்திரிக மரபுகள் குறித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் மானுடவியல் துறை முனைவர் பட்ட ஆய்வுக்கு அவர் எழுதிய கட்டுரையே இந்த புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.. வறட்டுப் பண்டித நடையில் எழுதப்பட்ட புத்தகமல்ல இது – இந்து மற்றும் பௌத்த சமயக் கூறுகள் ஒருங்கிணைந்த தாந்திரிக சாதகர்களின் வாழ்வனுபவத்தின் உயிர்ப்பு இந்தப் புத்தகத்தில் தென்படுகிறது.

அரசியல் மற்றும் சமூக விடுதலை பெற்ற இந்தியா, அறிவுத் தளத்திலும் மேலைக் கல்வி மற்றும் பண்பாட்டின் பாதிப்புகளை மீண்டு தன் சுயப் பார்வையைப் பயன்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார் பிரேம் சரண். இது ஏன் இன்று அவசியமாகிறது என்ற கேள்விக்கு விடை காண, பிளவுபடுத்தும் பார்வையைக் கொண்டதாக பிரேம் சரணால் அடையாளப்படுத்தப்படும் நவீன மேலைப் பண்பாடு இந்திய ஆன்மிக மரபின் அடிப்படையில் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதாகிறது.. உடல்-உலகம், தளை-லீலை, ஆண்-பெண் என்ற தளங்களில் இந்திய அநவீன மரபின்வழி மனிதன் அடையக்கூடிய நிறைவு சமகால நவீனத்துவ உலகில் கிட்ட வழியில்லை என்பது அவரது வாதமாக இருக்கிறது. ஐரோப்பிய இடைக்காலத்தைத் தொடர்ந்த மேலை நாகரிகத்தை நவீனமானதென்பதும், நவீனம் பிளவுப் பார்வை கொண்டதென்பதும், முரண்பாடுகளைச் சமன்படுத்தும் தாந்திரிகத்தைத் தன்னுள்ளடக்கிய இந்திய மரபு அநவீன மரபின் தொடர்ச்சியாக இன்றும் விளங்குகிறதென்பதும் பிரேம் சரணின் முக்கியமான வாதங்களாக இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ஜெஃஃப்ரி ஜே கிருபால் இதை ஒரு “நீடித்த புகழுடன் மேநிலை அடையத்தக்க புத்தகம் (iconic book)” என்று குறிப்பிடுகிறார். தொடர்ந்த வாசிப்பும் விவாதங்களும் பிரேம் சரணின் கருத்தாக்கங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக முனைவர் ஆய்வுக்கான கட்டுரை என்பதால் சமகால மேற்கத்திய சிந்தனையாளர்கள், குறிப்பாக மேற்கின் இந்தியா குறித்த ஆய்வாளர்கள் (Indologists), முன்வைக்கிற கோட்பாடுகளைச் சார்ந்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. எனவே உலகளாவிய அறிவுப்புலத்தில் இப்புத்தகம் தன் உரையாடலை நிகழ்த்துகிறது என்ற உணர்வு இதை வாசிக்கையில் எழுகிறது. பின்நவீனத்துவ கோட்பாடுகளைக் கையாண்டு நவீனத்துவத்தை விமரிசித்து, நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் உலக நாகரிகத்துக்கு அளித்த பங்களிப்பைவிட செழுமையான சாத்தியங்கள் கொண்ட அநவீன மரபாக இந்திய சிந்தனை மரபை முன்வைக்கிறார் பிரேம் சரண்.

ஜெஃப்ரி ஜே கிருபாலின் ஆறு பக்க அளவிலான முன்னுரை பிரேம் சரணின், “யோகம், போகம், அர்த்தநாரிஸ்வரம்” என்ற இந்த புத்தகத்தின் சாரத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கொடுப்பதாக இருக்கிறது. இந்திய நாகரிகத்தின் தொல்காலத்தில் துவங்கித் தொடரும் எதிர்கலாசாரமாக தாந்திரிக மரபு இருந்திருக்கிறது- இது உலகளாவிய பயன்பாடுடையது. பிரக்ஞை சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டு மட்டுமே பயனுள்ள ஒரு உலகளாவிய எதிர்கலாசார வெளியை அமைக்க முடியும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் மைய ஆய்வாக இருக்கிறது என்று எழுதுகிறார் கிருபால். கிருபாலின் சொற்களில் பேசுவதானால், “இந்து சமயமாகத் தோற்றம் தரும் இந்திய நாகரிகத்தை ஆசாரமும் அனாசாரமும், பிராமண இந்து சமயமும் தாந்திரிக இந்து சமயமும், தொடர்ந்து தமக்குள் நிகழ்த்திக்கொண்ட ஊடாட்டமாகப் புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்” என்பது பிரேம் சரணின் நிலையாக உள்ளது- இவை ஒன்றையொன்று உருவாக்குகின்றன. கட்டுக்கோப்பாக அமைக்கப்பட்ட சமூக அமைப்பின் அங்கமாக ஒருவன் இருப்பினும், பிரக்ஞை அடிப்படையில் முழுமையான தனி மனித சுதந்திரத்தை இந்திய மரபு அவனுக்கு வழங்குகிறது- சமூக ஒழுக்கங்கள் அனைத்தையும் தாண்டிச் செல்பவனை ஞானி என்று அங்கீகரிக்குமளவு இந்த எதிர் கலாசாரத்துக்கு இந்திய சிந்தனை மரபில் இடமிருக்கிறது என்கிறார் பிரேம் சரண்.

அடிப்படையில் பிரக்ஞை என்பது அகங்காரமற்ற ஒன்றாக அறியப்படுவதே இதைச் சாத்தியப்படுத்துகிறது. நாம் எங்கே இருக்கிறோம், நம் பண்பாடு எப்படிப்பட்டது, என்ற வரைகள் நம் ஆளுமையை நிர்ணயித்தாலும் அவை நம் பிரக்ஞையைத் தீர்மானிப்பதில்லை. சமூக அமைப்பாலும், பண்பாட்டுச் சூழலாலும் கட்டமைக்கப்பட்ட தனி மனித ஆளுமையின் அடிப்படையாகவும், அந்த ஆளுமையால் தன் நிறைவாக அறியப்படக் கூடிய தன்மை கொண்டதாகவும் அகப்பிரக்ஞை உள்ளது. எனவேதான் சமூக பண்பாட்டு நிர்பந்தங்களால் கட்டமைக்கப்படாத பிரக்ஞையை அறிய முற்படும், பிரக்ஞை சார்ந்த இயக்கம் எதிர்கலாசார அமைப்பு என்று சொல்லப்படுகிறது. இது இந்திய சூழலில் எப்போதும் உள்ள ஒன்று; அது மட்டுமல்ல, பிரத்யேகமான, எந்தவொரு கலாசார, சமூக வலியுறுத்தல்களாலும் உருவாக்கப்படக்கூடிய அகங்கார கட்டமைப்புக்கும் அப்பாற்பட்ட இயல்பு கொண்டதாகப் பிரக்ஞை இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்., இதனாலேயே பிரக்ஞையை மையப்படுத்தும் தாந்திரிக எதிர்கலாசாரம் உலகளாவிய பயன்பாடு கொண்ட ஒன்றாகிறது. இந்த எதிர்கலாசார இயக்கம் அடிப்படையில் ஆண் பெண் பேதங்களைப் பாராட்டாததாகவும், விளையாட்டு அல்லது லீலையைத் தன் சாதனா மார்க்கமாகக் கொண்டிருப்பதும் தன்னை அதன்பால் ஈர்ப்பதாக கிருபால் கூறுகிறார். பாலியல் வேறுபாடுகளை அச்சமின்றி தன்னில் இனங்கண்டு, அதன் விழைவுகளுக்கு இணக்கமான முறையில் பாலுணர்வை அணுகி, பிரக்ஞைச் செறிவுக்கு அணுக்கமான செயல்பாட்டால் நம் கட்டற்ற சுயத்தைக் கண்டு கொள்வது இந்திய மரபில் வரவேற்கப்படுகிறது.

சிறப்பான இந்த முன்னுரையில் ஒரு குறை உள்ளது என்பதையும் சொல்ல வேண்டும்- பிரேம் சரண் இந்திய மரபுக்குள் இருக்கும் எதிர்கலாசாரமாகவே தாந்திரிகத்தை அடையாளப்படுத்துகிறார்- 213ம் பக்கத்தில், இந்த எதிர்கலாசாரம், தெற்காசிய துணைக்கண்டம் முழுமையிலும் பிராமண, இசுலாமிய, பிரிட்டிஷ் காலனியம் ஆகிய முப்பேரொழுக்க அமைப்புகளுடன் (triple puritanisms) பிணங்கியும் இணங்கியும் இயங்கி வந்துள்ளது என்று எழுதுகிறார். ஆனால் ஜெஃப்ரி ஜே கிருபால், பிராமண, இசுலாமிய மற்றும் பிரிட்டிஷ் காலனியத்தின் ஒழுக்க- பாலியல் அடக்குமுறைக்கு உட்படாத தெற்காசிய துணைக்கண்டத்தின் புறப்பகுதிகளில்தான் தாந்திரிக எதிர்கலாசாரம் வலுவானதாக இருக்கிறது என்று பிரேம் சரண் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் (பக்கம் xiv). பிரேம் சரண் எங்கு இவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதை நான் படிக்கத் தவறி விட்டேனோ என்னவோ…

எது எப்படி இருந்தாலும், இந்திய பெருங்கலாசாரத்துக்கும் அதன் எதிர் கலாச்சாரத்துக்கும் இடையில் உள்ள வேற்றுமையை ஒரு வாதத்துக்காகவே பிரேம் சரண் முன்வைப்பதாகத் தோன்றுகிறது- அர்த்தநாரீஸ்வர உருவத்தில் உள்ள ஆண் பெண் பேதம் போன்ற ஒன்றாகவே அதை அவர் கருதுகிறார் என்று எண்ண இடமிருக்கிறது- குறிப்பாக, “நீ உன் ஆய்வைத் தொடர்கையில் நாட்பட நாட்பட புனிதத்துக்கும் செக்யூலருக்கும், சமஸ்கிருதத்துக்கும் சமஸ்கிருதமல்லாததுக்கும், மேலைமயமாதலுக்கும் இந்தியமயமாதலுக்கும், மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையே நாம் கட்டமைத்த இருமைகள் பொருளற்றவை என்பதை உணர்வாய். இவை காலனிய சூழலில் உருவாகிய முன்முடிவுகள் என்று இவற்றைச் சொல்லாவிட்டால், பிழை புரிதலில் ஏற்பட்ட அறிவுப்புல வகையினங்கள் (intellectual categories) என்றுதான் சொல்ல வேண்டும்,” என்று பி.என்.எஸ். சரஸ்வதி தன்னிடம் குறிப்பிட்டதாக அதை அங்கீகரிக்கும் வகையில் பிரேம் சரண் பதிவு செய்கிறார். ஆனால் கிருபால் இந்தக் கருத்தின் எல்லைக்குச் செல்லவில்லை என்று தோன்றுகிறது. பிரேம் சரணும் இந்தப் புத்தகத்தை அத்தகைய பார்வையில் அணுகியிருந்தால் இது முற்றிலும் மாறுபட்ட புத்தகமாக இருந்திருக்கும், அப்படியொரு புத்தகம் இன்னும் எழுதப்படக் காத்திருக்கிறது.

ஆனால், பிரேம் சரண் மேலை மற்றும் இந்திய கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வலுவாகவே பேசுகிறார். மிகவும் தீவிரமான சமூக-உள பிளவுகளைத் தன்னுள் கொண்ட உலகப் பார்வையை மேற்கத்திய நவீன கலாசாரம் தரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார்: அது ஆணையும் பெண்ணையும், மனிதனையும் தெய்வத்தையும், மனிதனையும் மிருகங்களையும், மனிதனையும் இயற்கையையும், உடலையும் மனதையும், உணர்ச்சிகளையும் ஆன்மீகத்தையும், நன்மையையும் தீமையையும், புனிதத்தையும் புனிதமற்றதையும், நனவு மனதையும் நனவிலி மனதையும், மேற்கத்திய மனிதனையும் மேற்கத்தியனாக இல்லாத மனிதனையும் பார்க்கும் பிளவுபட்ட உலக பார்வையை வலியுறுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புத்தகமெங்கும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.

இதுவே அவர் அமெரிக்காவில் ஆய்வுகளை மேற்கொண்ட காலத்தில் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் காலத்தில், தான் அங்கு குடியேறலாமா என்ற கேள்விக்கு அவர் எதிர்மறை விடை காண காரணமாகிறது. அமெரிக்கா, தனது மற்றும் தன் மகளது மானுட சாத்தியங்கள் முழுமை பெறும் இடமாக இருக்க முடியாது என்று அவர் எழுதுகிறார். அமெரிக்கா மட்டுமல்ல, எந்த ஒரு மேற்கத்திய நவீன சிந்தனையின் தாக்கம் வேரூன்றிய பண்பாட்டிலும் அவரது சாக்த சமாதி அனுபவங்கள் அவரை மனநல மருத்துவமனைக்கே இட்டுச் செல்வதாக இருக்கும்- இந்தியாவில் மட்டுமே இவற்றைப் பற்றிப் பேசும் ஒருவர் இந்திய ஆட்சித்துறை பணியில் உயர்பதவி வகிக்க முடியும்.

அது மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான, பெண்மையை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பாக மேற்கத்திய அமைப்பு இருக்கிறது, அது பெண்ணை ஒரு குழந்தைத்தனமான சார்நிலையில் வைத்திருக்கிறது- மாறாக இந்திய மரபு ஆண் பெண் பேதங்களைக் கடக்க உதவுவதாக இருக்கிறது: இங்கு பெண்ணியம் என்பது ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றல்ல- தாந்திரிக மரபில் எவரும் முழுமையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பதாகக் கருதப்படுவதில்லை. தன்னில் ஆண்மையும் பெண்மையும் அகவிழிப்பு பெற்று அவற்றின் உறவாடலில் பிரக்ஞையின் உச்சம் தொடுதலே தாந்திரிக சாதனையின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் ஆண் மைய மேலைப் பண்பாடு பாலியல் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துவதாக உள்ளது- ஒருவருக்கு ஒரு பால் மட்டுமே இருக்க முடியும், அதன் அடிப்படையில்தான் பாலியல் விழைவுகள் அனுமதிக்கப்படுகின்றன; தன்னில் மாற்று பால் கலப்பு இருக்கக் கூடாது; இந்த பாலியல் எல்லையைக் கடப்பது நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்துகளை தருவிப்பதாக இருக்கும் என்று ஃபூகோவை மேற்கோள் காட்டுகிறார் பிரேம் சரண்.

ஐரோப்பியத் தொல்மரபின் தொடர்ச்சியாக உடல் வேறு உள்ளம் வேறு, உள்ளத்தால் உடலைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண், உடல் இச்சைகளைத் தூண்டுபவள் என்ற அச்சம்: இவையே இன்றும் மேற்கத்திய பிரக்ஞையை ஆக்கிரமித்துள்ளன- பெண் ஆணின் அறிவு, ஆன்மிகம், மற்றும் மன உறுதியை சோதிப்பவள், அவளை அடக்கி ஆள்வது ஒரு கடமையாகவே இருக்கிறது, என்றெல்லாம் எழுதுகிறார் பிரேம் சரண். ஆனால், இது எந்த அளவுக்கு மேலை பண்பாட்டு நிலையை விவரிக்கிறதோ இல்லையோ, இவை இந்திய மரபிலும் உள்ளதுதானே என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பிரேம் சரண் இங்கு, ரீடா க்ராஸ் என்ற இந்தாலஜிஸ்ட் இந்திய பெண் தெய்வ வழிபாட்டு மரபிலிருந்து மேலை நாட்டவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாகக் குறிப்பிடும் ஐந்து அம்சங்களைக் குறிப்பிடுகிறார்:

இந்திய பெண் தெய்வ வழிபாட்டு மரபுகள் பெண்மையைப் போற்றுகின்றன, ஆண்மை முழுமையடைய பெண்மை இன்றியமையாததாக உள்ளதைச் சுட்டுகின்றன- தெற்காசிய பெண் தெய்வங்கள் அழகாய் இருப்பதோடல்லாமல் ஆற்றல் மிகுந்தவையாகவும் இருக்கின்றன- சிம்மம் மேல் அமர்ந்திருக்கும் துர்க்கை; இவை, முரண்கள் கூடும் இடமாக இருக்கின்றன- கோர முகம் படைத்த காளி அடிப்படையில் ஆனந்த வடிவினள்; அன்னையாயினும் ஆணுக்குப் பெண் இன்றியமையாதவளாக இருக்கிறாள்- சிவன் மேல் கால் வைத்து ஆடும் காளி; லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற தெய்வங்கள் பண்பாட்டு மதிப்புடைய செல்வங்களை அருள்பவர்களாக இருக்கின்றனர்; அர்த்தநாரீஸ்வர மற்றும் தம்பதி சமேத உருவங்களில் இவர்கள் பாலுணர்வின் புனித பிம்பங்களாகின்றனர்- சிவனைக் கலந்த நிலையில் அவன் மேல் அமர்ந்திருக்கும் காளி: இந்தக் கருத்தாக்கங்கள் தெற்காசிய துணைக்கண்டத்தில் பெண்ணை சக்தி என்று அடையாளப்படுத்தி அவளுக்குப் பேராற்றல் அளிக்கின்றன- இதனால் பெண்கள் பெண்களாக இருக்க முடிகிறது. க்ராஸ் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டுவதானால், “அவள் பெண்ணாகவே இருக்கிறாள். அவள் பெண்ணாக இருப்பதால் நான் பெண்ணாக இருப்பது அங்கீகரிக்கப்படுகிறது. அவளது எல்லையற்ற ஆற்றல் எனக்கு ஒரு மாபெரும் முன்னுதாரணமாக இருக்கிறது”. இறைவனின் துணையாகவோ, தாயாகவோ இல்லாமல், சக்தியின்றி சிவனில்லை என்ற சமநிலை இந்து சமயத்தில் மட்டுமில்லை, வஜ்ராயன பௌத்த சமயத்திலும் முக்கியமான நம்பிக்கையாக இருக்கிறது: நேபாலில் உள்ள வஜ்ராயன பௌத்தர்கள் பிரக்ஞையை பெண்ணிய இயல்பாக நம்புகிறார்கள்- நாம் பெண்ணை சக்தி என்று அழைப்பதைப் போல் அவர்கள், பெண்ணைப் பிரக்ஞை என்றழைக்கிறார்கள்.

இது எல்லாம் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? பெண்மையை ஆற்றல் மிகுந்ததாகச் சித்தரிப்பதோடல்லாமல், பெண்மையைக் கூடியே ஆண்மை நிறைவடைகிறது: தாந்திரிக வழிபாட்டின் உச்சம் சஹஸ்ர சக்கரத்தில் இந்த ஒன்று கூடுதல் நிகழும்போதுதான் அடையப்படுகிறது. ஞானத்தின் உச்சம், ஒவ்வொரு மனிதனின் இயல்பாகவும் உள்ள இருபால்களின் சமன்பாடாகக் காணப்படுகிறது. இது பெண்மையை உயர்ந்த நிலையில் இருத்துகிறது என்பது ஒரு விஷயம், அதைவிட, மனிதர்களின் பாலியல் விழைவுக்குப் புனித அடையாளம் தருகிறது என்பதைச் சொல்ல வேண்டும். வெவ்வேறு வகைப்பட்ட பன்முகத்தன்மைகளை இயல்பான ஒன்றாக, அவற்றினும் உயர்ந்த ஒன்றின் கூறுகளாகக் காணும் பண்பாட்டில் வளர்ந்த இந்தியர்களாகிய நமக்கு இது பெரிய விஷயம் அல்ல. ஆனால், ஒழுக்கமாயினும் சரி, அறிவாயினும் சரி, சமூக நடைமுறை விதிகளாயினும் சரி- ஒரு ஒற்றைத் தன்மையை நிலை நிறுத்தி, அதற்கு அந்நியமான அனைத்தையும் சிறையிட்டோ, கொன்றோ, அல்லது மன நலம் பிறழ்ந்த நோயாகவோ ஒதுக்கும் நவீனத்துவ பண்பாடுகளில், தனித்தன்மை கொண்ட மனிதனாகத் தன்னை அடையாளம் காண நினைப்பவன் தன் துணிவுக்குத் தரும் விலை மிக அதிகமாக இருக்கிறது.

பாலியல் அடையாளங்களின் எல்லையைக் கடப்பது நினைத்தும் பார்க்க முடியாத ஆபத்துகளை தருவிப்பதாக இருக்கும் என்று ஃபூக்கோவை மேற்கோள் காட்டுகிறார் பிரேம் சரண் என்பதைக் குறிப்பிட்டேன்- மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று பண்பாட்டுப் பிறழ் போக்கை வெளிப்படுத்துபவர்களை மனநோய் காப்பகங்களில் அடைத்து தன் கலாசார ஒற்றைத்தன்மையை நிறுவிக் கொண்ட ஒன்றாக மேலைப் பண்பாட்டை பூகோ விமரிசிக்கிறார்; மன நோயின் கூறுகள் பண்பாட்டில் உள்ளவை- மன நோயை மன நோய் என்று அங்கீகரிக்கும் கலாசாரத்தில்தான் மன நோய்க்கு இருப்பும் மதிப்பும் இருக்க முடியும். பிறழ்வின் வேர்கள் துயரரில் இல்லை- அவர் இருக்கும் சமுதாயத்தில் இருக்கின்றன என்றெல்லாம் சொல்லும் ஃபூக்கொவை அங்கீகரிக்கும் விதமாகவே பிரேம் சரண் மேற்கோள் காட்டுகிறார். தன் சமாதி நிலைகள் தன்னை மேலைப் பண்பாட்டில் மன நலம் பாதிக்கப்பட்டவனாகவே காட்டும் என்றும் தன் மகளின் பெண்மை நிறைவடையும் சாத்தியங்கள் அங்கு மறுக்கப்படும் என்றும் எழுதுகிறார் அவர். இதற்கு மாற்றாக தாந்த்ரிகம் ஒரு எதிர்கலாசார வெளியை அமைக்கிறது; அங்கு பாலியல் சாத்தியங்கள் விளையாட்டு போல் சோதிக்கப்பட்டு முழுமை பெறுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு எதிர்கலாசார வெளி இல்லாததே இவ்வளவு தெளிவாக மேலை நாகரிகத்தின் குறைகளை அறிந்திருந்தும் ஃபூக்கோ தன் அழிவைத் தவிர்க்க முடியாமல் தோல்வியடையக் காரணமாக இருந்தது என்கிறார் பிரேம் சரண்- மேலை நாகரிகம் பாலியல் விழைவைத் தன் மையமாகக் கொண்ட ஒன்று, தன் பாலின உறுதிப்பாட்டை நோக்கிய தேடலில்தான் மனிதனின் தன்னிருப்பு நிலைபெறுகிறது என்று விமரிசித்த பூகோவின் வாழ்வே அவர் அவ்வாறு விமரிசித்த நாகரிகத்தின் விபரீதக் குறைகளின் விளைவுகளைச் சுட்டுவதாக இருக்கிறது. அவரது வாழ்க்கையைப் படித்தால் நாம் அதில் அவருக்கும் பாலினம் குறித்த பண்பாட்டு பீடிதம் (cultural obsession with sex) இருந்தது என்பதையும் அவரும் அதன்வழி சுயத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் முனைப்பில் ஒழுங்கற்ற, முறைமைப்படுத்தப்படாத, சோதனைகளைச் செய்தார் என்றும் அறிகிறோம். இந்திய நாகரிகத்தில் இத்தகைய விழைவுகளுக்கு தாந்திரிகம் என்ற எதிர்கலாசார வெளி ஒன்றுள்ளது- அங்கு பாலியல் விழைவுகள் சுகாத்மக தியானமாக நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன- மனிதன் தன் உன்னத அடையாளங்களை அடையும் வழி காணப்பட்டு முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் மேலைக் கலாசாரத்தின் எதிர்கலாசாரம் சுகமானதாக இல்லை- வலியும் மரணமுமே சுயத்தின் எல்லைகளைக் கடந்து செல்லத் துணை செய்யும் வழிகளாக உள்ளன. ஃபூகோ, அமெரிக்காவின் ஓரின குழுக்களின் S/M சடங்குகளின் வதை களியாட்டங்களில் (’orgies of torture’) தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எய்ட்ஸ் நோயின் ஆபத்துகள் தெரிந்திருந்தும் இந்த சோதனை முயற்சிகளின வழியாகத் தன் மரண வேட்கைக்கு நிறைவு கண்டார். பூகோ தனது அனுபவங்களை தாளொணா அழகுடைய வேதனைகள் (”the most exquisite agonies”) என்றும், அவை அவரது கவித்துவ மனோபாவம் கொண்ட சுயத்தின் அடிப்படைக் கேள்விகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்.

இத்தகைய கேள்விகளுக்கு சுகவழியில் பதில் காணக்கூடிய எதிர்கலாசார வெளியை ஓஷோ என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷ் மேலை பண்பாட்டுக்கு அளித்தார்- அதுவே அவரது வெற்றியாகவும் அவர் நாடு கடத்தப்படக் காரணமாகவும் இருந்தது. ரஜ்னீஷின் ஆசிரமங்களில் இருந்தவர்கள் பட்டப்படிப்பு முடித்த, தங்கள் துறைகளில் வெற்றி கண்ட இளைஞர்கள். “பாலுறவே ஞான வழி” (”sex is the path of enlightenment”) என்று சொன்ன ரஜ்னீஷ் சாக்தத்தில் உள்ளது போல் தானும் பெண்மையை முன்னிலைப்படுத்தினார். அங்குள்ள உயர்நிலைப் பதவிகளில் எண்பது சதவிகிதம் பெண்கள் இருந்தார்கள்- பெண்கள் டிராக்டர் ஓட்டினார்கள்- ஆண்கள் குழந்தைகள் காப்பகத்தை கவனித்துக் கொண்டனர்.

மேலை நாகரித்தின் இரு பெரும் துயர்களான ஒற்றைக் கலாச்சாரம் மற்றும் பெண்மை மறுப்பு ஆகியவற்றுக்கு ரஜ்னீஷ் தீர்வளித்தார். அவர் அளித்த தீர்வு இந்திய மரபில் என்றும் இருப்பது என்கிறார் பிரேம் சரண். மேலை ஆய்வாளர்கள் எழுதுவது போல் இந்திய மரபில் மனிதனின் தனித்தன்மை கொண்ட சுயம் மறுக்கப்படுவதில்லை- பிரக்ஞை வழியாக தனி மனித சுதந்திரத்துக்கான இடம் அவனுக்கு உறுதியளிக்கப்படுகிறது – இன்னும் சொல்லப்போனால் சமூக ஒழுக்கங்களைத் தாண்டிச் செல்பவர்களை ஞானிகள் என்று அங்கீகரிக்குமளவு இந்திய சிந்தனை மரபு முதிர்ச்சியடைந்ததாக இருக்கிறது.

தாந்திரிகம் என்ற எதிர்கலாசாரம் இந்திய மரபில் உள்ளது- காஷ்மீர் சைவம் முதற்கொண்டு வங்காள காளி வழிபாடு, தெற்கே ஸ்ரீவித்யா உபாசனை என்று இந்தியாவெங்கும் தாந்திரிக சாதனையின் எதிர்கலாசார வெளி திறந்தே இருக்கிறது. யோகம் போகம் அர்த்தநாரீஸ்வரம் என்ற இந்தப் புத்தகம் ஒரு ஆய்வேடாக இருப்பினும், அது பல்கலைக்கழகக் கோட்பாடுகளையொ, இந்தியாவை விமரிசிக்கும் வெளிநாட்டு சிந்தனைகளையோ எதிர்கொள்வதாக மட்டும் நின்றுவிடவில்லை- இருமைகளை நிறுவும் நவீனத்துவத்தின் தாக்கங்களுக்கு எதிராக ஒரு அரண் எழுப்ப முயற்சி செய்கிறது- இந்திய மரபின் ஒருமைப்பாட்டுக்கு, தன் கூறுகளில் ஒருமை கண்டு ஒழுங்கடைந்த ஒரு முதிர்ந்த பண்பாட்டுக்கு, சமகால அறிவுத்தளத்தில் தேவையாயுள்ள ஒரு காப்பை நிகழ்த்தவல்லதாக இருக்கிறது.

இந்தப் புத்தகம் இந்து மற்றும் பௌத்த தாந்திரிக மரபுகள் தத்தமக்கென்று தனி தத்துவ அடையாளங்களற்று ஒருமையடைந்த வடிவில் நேபாலில் உள்ள சாதகர்களால் எவ்விதம் கடைபிடிக்கப்படுகின்றன, அவை அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன, சமுதாயத்தில் அவை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பனவற்றை விரிவாகப் பேசுகிறது. தாந்திரிக சாதனை பற்றிய விரிவான விவரணையையும் தருகிறது. ஆனால் அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. இந்திய அநவீன பெருங்கலாசாரம், அதன் கூறாக உள்ள தாந்திரிகம் என்னும் எதிர் கலாசாரம்: இவை மேலை நவீன கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பேசப்படும்போது தனி மனித மற்றும் சமூக விடுதலை என்ற கேள்விக்கு எத்தகைய பதிலை வைத்திருக்கிறது என்பதை உணர்த்த மட்டுமே இந்தப் புத்தக வாசிப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன்.

சுருக்கமாகச் சொன்னால், அநவீன இந்திய தாந்திரிக மரபு அர்த்தநாரிஸ்வர வடிவில் மூன்று உண்மைகளை உணர்த்துகிறது: மனிதன் தன்னில் தெய்வத்தைக் காணலாம்: அத்தகைய காட்சியில் தன் வாழ்வை தெய்வீகமானதாக இனங்காணலாம். ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள இந்த தெய்வங்கள் ஓருருவில் கூடிக் களித்தல், அவனுக்கு முரண்களை சமன்வயப்படுத்தும் உந்துதல் தருகின்றன. இந்த உலகம் இத்தெய்வங்களின் நித்திய கூடலின் நிகழ் வெளிப்பாடு என்ற நம்பிக்கை, உலகை இன்பமும் கொண்டாட்டமும் நிறைந்த ஒன்றாகச் சுட்டுகிறது:- பிரிந்து கூடிக் களிக்கும் தெய்வீக லீலை கணம்தோறும் நிகழும் ஒன்று என்ற நம்பிக்கை, சாதகனை நிகழ்கால வாழ்வின் முரணனுபவங்களைத் தன்னுள் சமன்வயப்படுத்திக் களிக்கும் உந்துதல் தருகிறது. இந்த தாந்திரிக சாதனை எந்த சமயத்துக்கோ தெய்வத்துகோ உரியதல்ல- பிரக்ஞையின் அடிப்படையில் சமூக, மற்றும் பண்பாட்டு கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்டவனாதலால் ஒவ்வொரு மனிதனும் அனைத்துக் கூறுகளையும் தன்னுள்ளடக்கிய தன் அகத்தில் நிகழ்த்தி, சுகவழியில் காண வேண்டிய உச்சத்தை தாந்திரிகம் உலகளாவிய மானுடத்துக்கும் உரியதாக முன் வைக்கிறது.

தன் பார்வையில் தான் காணும் எதையும் கூறுபடுத்துவது நவீனம் என்றும், தனக்கு ஏற்பாக இல்லாத கூறுகளை ஆதிக்கம் செலுத்தி ஆளவும், அது முடியாதபோது அல்லது தேவைப்படாதபோது அடக்கி ஒழிக்கவும் முனைவது நவீனத்துவ அடிப்படையில் அமைந்த மேலைக் கலாசாரம் என்றும் சொல்கிறார் பிரேம் சரண் (ஐரோப்பாவின் வரலாற்று இடைக்காலம் முற்றுப் பெற்று நவீனம் பிறந்தபோது அதற்கு முதல் பலியாக அமைந்தது பெண்கள்தான்: பல பத்தாயிரம் பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கொளுத்தப்ப்பட்டார்கள்- இதைத் தொடர்ந்து இன்றும் நவீனம் தன் கால் பட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக இன ஒழிப்புப் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. வரலாற்றளவில் உலகத் தொடர்பு குன்றிய நேபாலில் பௌத்தமும் இந்து சமயமும் தாந்திரிக ஒருமைப்பாடு கண்டு இன்றும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும், ஐரோப்பிய பாதிப்புக்கு பெருமளவு உட்படுத்தப்பட்ட இலங்கையில் அதே பௌத்தமும் இந்து சமயமும் பெரும்போரில் லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுப்பதற்கும் உள்ள வேறுபாடு என்று எதைச் சொல்ல முடியும்? நவீனத்துவம், அதன் அடிப்படையில் விளைந்த இனவாதம், சகிப்புத்தன்மை இழத்தல் என்பன ஏனைய பிற காரணங்களோடு முக்கியமானவையாக இருக்கலாம்- இங்குள்ள இரு சமயங்களிலும் தாந்திரிக மரபு எவ்வளவு பரவலான பயன்பாட்டில் உள்ளது என்பதும் ஆய்வுக்குரியது.

இந்திய தத்துவ மரபு முடங்கிப் போன ஒன்றல்ல- அது தன்னைக் காலம்தோறும் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. தாந்திரிகம் உள்ளடக்கிய பக்தி மரபு, இதன் அங்கமாக இருக்கிறது. மரபு எதையெல்லாம் புறத்தில் வைக்கிறதோ, அவற்றை அனுபூதி அடிப்படையில் ஒருங்கிணைக்கும் எதிர்கலாசாரமாக பக்தியும் தாந்திரிகமும் இயங்கி வந்துள்ளன. இந்த இந்திய தத்துவ மரபு இந்து அல்லது பௌத்த, சமண சமயங்களுக்கு மட்டும் முழுமுதல் உரிமையுடைய ஒன்றல்ல – இசுலாமும் கிருத்தவமும் இந்த மரபுக்குத் தம் பங்களிப்பைக் கொடுக்கலாம். ஆனால், நவீனத்தின் தாக்கம் இந்த மரபுக்கு இன்று ஒரு சவாலாக இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இந்த மரபு தன் எதிர்கலாசார வெளிக்கு எவ்வளவுக்கு இடம் தருகிறது என்பதைக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று தோன்றுகிறது. பக்தியை மூடநம்பிக்கையாகப் பார்க்கும், காமத்தை உடல் சார்ந்த விழைவாகக் கட்டமைக்கும், குடிமைச் சமூகத்தை ஒற்றைத் தன்மை கொண்ட ஒழுக்க விதிகளால் சமைக்கும், தனிமனித மனவளத்தை அவள் சமூக நியதிகளுக்கு உட்படுவதைக் கொண்டு தீர்மானிக்கும் நவீனத்துவத்தின் பிளவுபட்ட பார்வைக்கு பலியாகும் ஒவ்வொரு கணமும் இந்த மரபு தன் அடையாளத்தை மட்டுமல்ல, அர்த்தத்தையும் இழக்கிறது என்றே சொல்ல வேண்டும்.