மகரந்தம்

[stextbox id=”info” caption=”அமெரிக்கர்கள் vs. லத்தீன் அமெரிக்கர்கள்”]

அமெரிக்காவில் பொருளாதாரம் இறங்குமுகமாகிச் சில வருடங்களாயின. பெரும் பண முதலைகள் தொடர்ந்து தம் குருட்டுத்தனமான பொருளாதாரக் கொள்கைகளை அமெரிக்க அரசின் மீது திணித்து, ஏழைகளையும், மத்திய வர்க்கத்தையும் மொட்டை அடித்துத் தம் பையில் எல்லாவற்றையும் போட்டுக் கொள்ளும் திட்டத்தையே அமல் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் தொழில் உற்பத்தி மெல்ல மெல்ல ஸ்தம்பிக்கிறது, அல்லது அழிந்து வருகிறது. இன்னொரு புறம் அரசு பெரும் போர்களில் பணத்தை வாண வேடிக்கையில் விட்டுக் கொண்டிருக்கிறது. இடையில் ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கணக்கில், மொத்த நஷ்டங்களுக்கும் நாட்டில் உள்ள சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைந்து வேலை செய்யும் பிற நாட்டவர்தான் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊடகங்களும், வலது சாரி அரசியல் இயக்கங்களும் எங்கும் நடத்தி வருவதால், பல மாநிலங்களில் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அமெரிக்க விவசாயம் பெருமளவும் லத்தீன் அமெரிக்கா என்று சொல்லப்படும் தென்னமெரிக்கா, மேலும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்திருக்கும் மக்களையே நம்பி இருக்கிறது. கடும் உழைப்பாளிகளான லத்தீன் அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக்ஸ் என்றறியப்படுகிறார்கள். அமெரிக்காவில் துரிதமாக வளரும் ஒரு சிறுபான்மை மக்கள் குழு இவர்களது. இன்னும் 15 சதவீதம் கூட ஆகி விடவில்லை என்றாலும் இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து 80 சதவீதத்துக்கு மேல் உள்ள வெள்ளை அமெரிக்கர்கள் பயப்படத் துவங்கி உள்ளார்கள்.

இந்தச் சட்டங்கள் முறையாக நாட்டுள் குடி பெயர்ந்து உள்நுழையாதவரைத் தேடிப் பிடித்து நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபடச் சொல்லி ஒவ்வொரு மாநில அரசையும் வற்புறுத்துகின்றன. இதனால் பல விபரீத விளைவுகள் நேரவிருக்கின்றன. ஒன்று அமெரிக்க விவசாயம் திடீரென்று பெரும் நசிவில் இறங்கப் போகிறது. உணவு உற்பத்தி வீழும். வெள்ளை மக்கள் உணவுக்குச் செலவழிக்கும் தொகை பன்மடங்காகும் என்று விவசாயம் செய்பவர்களும், பொருளாதார வல்லுநர்களும் சொல்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை ஒரு மாநிலத்தில் சில விவசாயிகள் சமீபத்தில் சந்தித்த பெருநஷ்டத்தைப் பற்றிப் பேசும் கார்டியன் செய்தித்தாள் இங்கே சொல்கிறது பாருங்கள்.

http://www.guardian.co.uk/world/2011/oct/14/alabama-immigration-law-workers
[/stextbox]


[stextbox id=”info” caption=”இயந்திர மனிதன் எழுதும் புத்தகம்”]

ஆமாம், இப்போது ரோபாட்கள் புத்தகங்கள் எழுதுகின்றனவாம். எப்படிப் பட்ட புத்தகங்கள்? ஒரு புத்தகத்தின் தலைப்பு இது என்று ரோபாட் ஒன்றின்பெயர் போலத் தொனிக்கும் பெயர் கொண்ட ஒரு எழுத்தாளர் சொல்கிறார், அது என்னவென்று பாருங்கள். “Storage Ring: Particle Accelerator, Particle Beam, Accelerator Physics, Beamline, Australian Synchrotron, Cyclotron, Dipole Magnet, Electromagnetism.” சற்று நில்லும் என்கிறது தலைப்பு. இது ஒரு பட்டியலா, புத்தகத் தலைப்பா? தலைப்புதான் என்கிறார் பாகன் கெனடி என்னும் இந்தக் கட்டுரை ஆசிரியர். உலகில் உள்ள இடங்களை எல்லாம் விட்டு விட்டு, மாரிஷியஸ் தீவுகளில் இருக்கிறதாம் இந்தப் பதிப்பகம். பல பத்து பதிப்பாசிரியர்கள் தொகுக்கும் புத்தகங்கள் இவை என்கிறார் புத்தக முதலாளி. கென்னடி அதைச் சந்தேகிக்கிறார். இவை எல்லாம் விகியில் கிட்டும் தகவல்களை வைத்துச் சும்மா தலைப்புக்கேற்பத் தொகுக்கப்படும் தகவல் திரட்டுப் புத்தகங்களே, இவற்றை சுய புத்தியுள்ள எவரும் எழுத மாட்டார், வாங்கிப் படிக்கவும் மாட்டார் என்று எரிச்சல் படுகிறார் கென்னடி.

அட தமிழிலேயே இப்படிப் புத்தகங்கள் நிறைய வருகின்றனவே என்று நினைப்பீர்கள். ஆம், 50களிலேயே துவங்கியாயிற்று இந்த வகைத் தொகுப்பு. சிரஞ்சீவி என்பார் எழுதிய ‘பறக்கும் தட்டு’ என்ற புத்தகத்தை 60களில் தமிழக அரசின் மாவட்ட நூல்நிலைய அலமாரிகளில் சில மூத்த வாசகர்கள் பார்த்திருக்கலாம். கலைக்கதிர் என்ற ஒரு பத்திரிகை இப்படி அறிவியல், பொறியியல் தகவல்களைத் தொகுத்துக் கொடுத்த சஞ்சிகை. மஞ்சரி என்ற ஒரு பத்திரிகை, கலைமகள் பிரசுர நிலையத்தின் வெளியீடு, வெகு காலம் கலை, இலக்கியம், தவிர சில அறிவியல் தகவல்கள் எல்லாம் உலகச் செய்தித்தாள்களில் இருந்து பொறுக்கி எடுத்து மாதாமாதம் தொகுத்துக் கொடுத்தது. நிறைய மேலை இலக்கியத்தின் மொழி பெயர்ப்புகள், இந்திய மொழிகளில் இருந்தும் மொழிபெயர்ப்புக் கதைகள் இந்தப் பத்திரிகையில் வெளியாயின. ஆனால் இவை எல்லாம், இந்திய வழக்கத்துக்கு ஏற்றார்போல மனித பதிப்பாசிரியர்கள், கட்டுரையாளர்களால் எழுதப்பட்டவை. இன்று 21ஆம் நூற்றாண்டின் பழக்கத்துக்கு ஏற்றார்போல எந்திரங்கள் தொகுக்கும் புத்தகங்களும் வந்து விட்டிருக்கின்றன. சோவியத் பிரசுரங்கள் என்று தமிழில் வெளிவந்த பல நூறு புத்தகங்களை 70-90களில் நிறைய பார்த்திருப்பீர்கள், அவை முதலிலிருந்தே எந்திரத்தால் தயாரிக்கப்பட்டனவென்றுதான் தெரிந்தன. இருந்தும் அவை தமிழகத்தில் கொஞ்சம் பிரபலமாகத்தான் இருந்தன. நம் ஊர் இடதுசாரிகளில் பலர் இன்றும் எந்திரமய மார்க்சியம் பேசித் திரிவதற்கு இப்புத்தகங்களின் எந்திரத்தனமான கற்பனையே காரணம் என்று நாம் எளிதில் ஊகிக்கலாம்.

பாகன் கென்னடி இந்தப் புத்தகங்களை, ரோபாட்கள் தயாரிக்கும் புத்த்கங்களைப் பார்த்துச் சற்று அரண்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு செயற்கை அறிவுத் துறை நிபுணர் இவருக்கு ஆறுதல் சொல்கிறார், பாருங்கள். [அட, இந்தச் சுருக்கமே கொஞ்சம் மஞ்சரித்தனமாக, இல்லை கலைக்கதிர்த்தனமாக இருக்கிறதோ? ]

http://www.nytimes.com/2011/10/16/books/review/do-androids-dream-of-electric-authors.html?_r=1&ref=books&pagewanted=all
[/stextbox]


[stextbox id=”info” caption=”மஞ்சள் மகிமை”]
m_2மஞ்சள் பொடியின் மகிமையை அமெரிக்க மருத்துவர் மகிழ்ந்து பாடுகிறார். மஞ்சள் மட்டுமல்ல, மிளகுப் பொடியையும் சேர்த்துப் பாடுகிறார். அது உடலுக்குள் வீக்கங்களைக் குறைத்து, வலியை நிவர்த்தி செய்கிறது, குறிப்பாக மூட்டு வலிகளுக்கு மஞ்சள் பொடி பிரமாத மருந்து என்கிறார். இது எப்படி நம் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தெரிந்திருந்தது? அதை எப்படி இத்தனை நாட்களாக மேற்கத்தியர் அலட்சியம் செய்தனர்? இன்னும் நம் நாட்டில் அறிவியலே இல்லை, இந்தியா மூட நம்பிக்கைகளின் கூடாரம் என்று எத்தனை வருடங்களுக்கு நம் மகாலே புத்திரர்கள் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்? வெளிப்படையாக அறிவித்துக் கொடுத்தால்தான் அறிவியலா என்று கேட்கத் தோன்றுகிறது.

http://well.blogs.nytimes.com/2011/10/19/the-doctors-remedy-turmeric-for-joint-pain/?src=me&ref=general
[/stextbox]


[stextbox id=”info” caption=”அமெரிக்காவில் பரவும் வறுமை”]

அமெரிக்காவில் வறுமை பரவி வருகிறது. ரோம் பற்றி எரிகையில் ஃபிடில் வாசித்தான் நீரோ மன்னன் என்று ஒரு புராணக் கதை கேட்டிருப்பீர்கள். அது போல அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையாக உள்ள லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் மக்கள் வறியோரானால் எமக்கென்ன என்று மதர்ப்பாக இன்னும் அரசின் செயல்பாட்டை எப்படிக் குறைப்பது, மிகப்பெரும் பணக்காரர்களுக்கு வரியே இல்லாமல் செய்வது எப்படி, ஏழைகளை மேன்மேலும் வரி கொடுக்கச் செய்வது எப்படி என்று சூடாக விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் வியப்பேதும் இல்லாத வகையில் அமெரிக்க மத்திய வர்க்கம், முன்னெப்போதையும் விட மூடத்தனத்தால் நிரம்பி இருப்பதால், இந்த விவாதங்களை ஆர்ப்பரிப்புடன் வரவேற்று தம் வறுமை நிரந்தரமாகவும் ஆழமாகவும் ஆக வழி செய்கிறது. தம் புதைகுழியை ஒரு மக்கள் இத்தனை ஆசையோடு தாமே தோண்டிக் கொள்வார்கள் என்பது இஸ்லாமியப் படையெடுப்புக்கு முந்தைய இந்தியாவிலும், பிரிட்டிஷ் கொள்ளையர் கைப்பற்றுமுன் இருந்த இந்தியாவிலும்தான் பார்த்திருக்க முடியும்.

இப்போது உலகைக் கொள்ளையடிப்பது எப்படி என்று அமெரிக்காவின் பெருநிதி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தபோது அதைக் கரகோஷத்துடன் வரவேற்ற அமெரிக்க மக்களின் குரல்வளையில் அமெரிக்க/ பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கோரப் பற்கள் பதிந்த நிலையில் இன்னும் அமெரிக்க மக்கள் விழிக்கவில்லை. இந்தக் கட்டுரை அமெரிக்காவின் மத்திய வர்க்கம் எப்படி உடைந்து ஏழ்மையில் ஆழத் தொடங்கி விட்டது என்பதை விவரங்களோடு சொல்கிறது. உணவு வாங்கப் பணம் இல்லை, வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டப் பணம் இல்லை என்று தெருவில் வாழ நேர்கிற நிலையில் உள்ள முன்னாள் மத்திய வர்க்கத்தினர் இன்று ஏழைகளுக்கு இலவச உணவு கொடுக்கும் சூப் கிச்சன்களில் வரிசையில் நின்ற வண்ணம் தம் நிலையை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் இன்னும் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்ற அரசியல் கொள்கையையே ஆதரிக்கிறார்கள் என்பதுதான் என்னே விசித்திரம். மாயாவாதம் என்று சொன்னால் இதைத்தான் சுட்ட முடியும். அப்படி ஒரு மூளைச் சலவை செய்திருக்கிறது அமெரிக்க முதலியம்.

http://www.nytimes.com/2011/10/25/us/suburban-poverty-surge-challenges-communities.html?_r=1&hp=&pagewanted=all
[/stextbox]


[stextbox id=”info” caption=”நயோமி உல்ஃப், கருத்து சுதந்திரம், கைது”]

உலகெங்கும் பேராசை நிரம்பிய பெரு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. மேற்குலகை, அதன் பொருளாதாரத்தை இந்தப் போராட்டங்கள் சற்றே அசைத்துப்பார்த்துள்ளன என்று தான் சொல்லவேண்டும். சமூகத்தின் பலதரப்பு அறிவுஜீவிகளும் இந்தப் போராட்டங்களில் தங்களை ஏதாவது ஒரு விதத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். எழுத்தாளர் நயோமி உல்ஃப் தனது பங்களிப்பை இந்தப் போராட்டங்களில் தர முன்வர, அவரை அமெரிக்க காவல்துறை எந்த ஒரு அடிப்படை காரணமுமின்றி கைது செய்தது. அது குறித்தும், நிதர்சனத்தில் அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் எந்தளவிற்கு நிலவுகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

http://www.guardian.co.uk/commentisfree/cifamerica/2011/oct/19/naomi-wolf-arrest-occupy-wall-street

[/stextbox]


[stextbox id=”info” caption=”50,000 மிதிகளும், நிறைய மின்சக்தியும்”]

மனிதர்களின் 50,000 மிதியால் எத்தனை மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று தெரியுமா? மழைநீர் சேகரிப்பைப் போல், மின்சாரத்தை சேகரிப்பது குறித்து சிந்தித்த ஒரு நிறுவனம், அதற்கான ஒரு அமைப்பை முன்வைக்கிறது. ஆரம்ப கட்டமாக ஒரு சில இடங்களில் சோதனை ரீதியாக இதை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது வெற்றி பெறுமா என்பதெல்லாம் போகப் போக தெரியும். இப்போதைக்கு இந்த அமைப்பு குறித்து ஒரு அறிமுகம் இங்கே :

http://www.gizmag.com/pavegen-tiles-kinetic-energy-harvesting/20235/

[/stextbox]