புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா?

லிஸ் தான் இருந்த கட்டடத்தை விட்டகன்றபோது, நோய்க் கட்டுப்பாட்டுத் தொழிலாளர்கள் மூலைகளில் நின்றவாறு மாத்திரைகளையும் சிறு காகிதக் கிண்ணங்களில் ’கோக்’ கையும் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்.

‘லாவெண்டர் ஃபீல்ட்ஸ் ஸ்டெரைல் மில்ட் சோப்’புக்கான விளம்பரங்கள் அச்சிடப்பட்ட காகித முகமூடிகளைக் கைநிறைய வைத்திருந்த ஒரு முதிய பெண்மணி, அவற்றை உயர்த்திக்காட்டியவாறு, “உனக்கு ஒன்று வேண்டுமா? ” என்று வினவினார். லிஸ் தன் பையில் ஏற்கனவே வைத்திருந்த ஒன்றை உருவிக்காட்டியவுடன் புன்னகைத்தார்.

சுரங்கப்பாதையில் அவள் சென்றுகொண்டிருந்த காரிலிருந்த தொலைக்காட்சி, “துணைவரோடு வெளியே செல்லும் தினத்தன்று நீங்கள் என்ன செய்யலாம்” என்பதைக் காண்பித்துக்கொண்டிருந்தது. அதில் ஓர் இளைஞனும் ஒரு பெண்ணும் கண்காட்சிக்கு இரண்டுமுறை சென்றார்கள்- முதல்முறை அவன் செய்தது எல்லாம் தவறாகச் செய்தான், மறுமுறை அவளை ரங்கராட்டினத்தில் ஏற உதவி செய்துவிட்டு, அவளுக்கு ஒரு காகித முகமூடியைக் கொடுத்த பின்னரே தானும் ஒரு முகமூடியை அணிந்து கொண்டான்.

உயர்ந்து எழும் இசையுடன் அப்படம் நிறைவுற்றது. நிறைவுறும் போது கையெழுத்து போலத் தோன்றும் வடிவில் ஒரு நினைவூட்டும் குறிப்பு தோன்றியது: துணைவரைச் சந்திக்கும் நாள் வரப்போகிறதா? உங்கள் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள்

தகவல்களுக்கான துறை, ஆறாம் தளத்தில் இருந்தது; அதன் வரவேற்பு மேஜையில்தான் லிஸ்ஸின் வேலை.

நாள்தோறும் வட்ட மேலாளர் திரு.ராண்டெல் காலையில் உள்ளே நுழையும்போது,
“அந்த கிரெக் ஓர் அதிர்ஷ்டக்கார மனிதன்,” என்பார். ” ரொம்ப மோசம், உன்னுடைய முதல் ஜோடியாகும் வாய்ப்பு எனக்கில்லாமல் போச்சு!”

வட்ட மேலாளரின் ஜோக்குகளாயிற்றே, எப்போதும் உயர்ந்தவையாகத்தானே இருக்க முடியும், லிஸ் களுக்கென்று சிரித்து வைப்பாள்.

அத் துறையின் உள்ளே நுழையும் எவரும் காணும்படியாக அவள் இடத்தின் மேற்புறத்தில், அறிமுக ஒளிப்படம் தொடர்ந்த சுழற்சியில் காண்பிக்கப்பட்டிருந்தது. தெருவில் ஒரு பெண் பல துண்டுத் தகவல்களைக் கேட்பது போலவும் அவற்றை எப்படித் தொகுத்து அறிவிப்பாக்க வேண்டும் என்பதை அவள் அறியாமல் இருப்பதாகவும் அப் படம் காட்டியது; மேலும், ஒரு மனுவைத் தாக்கல் செய்வது பற்றிய விவரங்களைப் பரிசீலனை செய்தது. அதில் மெக்கானிக் அணியும் முழுஉடல் ஆடையில் (ஜம்ப்சூட்) இருந்த ஓர் ஆண், வரவேற்பு மேசையருகில் கையொப்பம் இடுவது போலவும், பின்னர், பதினெட்டாம் தளத்திற்கு மின்தூக்கி மூலம் சென்று அங்கே புன்னகையோடிருக்கும் முகவருடன் கைகுலுக்குவது போல் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சி நெறியாளர் இறுதியில், “உங்களுக்குத் தெரிவதில் எதை நாங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்பதற்குச் சற்று முன்பு அதில் நடிக்கும் இருவரும் திரும்பிக் கேமராவைப் பார்த்தனர். அவர்களில் அந்த மெக்கானிக் உடையில் இருந்த ஆண், “நான் யோசித்ததைவிட அதிகமாகத்தான், அது மட்டும் நிச்சயம்!” என்றான்.

லிஸ்ஸுக்குத் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அதைப் பார்க்க முடியவில்லை, ஆனால் அது அவளுக்கு தேவையில்லை. அறிமுகப்பயிற்சியின்போதே அவள் அப்படத்தைப் பார்த்துவிட்டிருந்தாள்; பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவளிடம் இன்னும் ஏதோ இருக்கிறது என்று துறையைச் சேர்ந்தவர்கள் ஆலோசனை சொன்னதும் அதுவே கடைசி தடவை.

திட்டமிடப்பட்ட அவர்களுடைய சந்திப்பு நாளுக்காக, கட்டடத்திற்கு வெளியே காத்திருந்த கிரெக் அவள் வருவதைப் பார்த்துப் புன்னகைத்தான்.

நோய்க் கட்டுப்பாட்டுத்துறையில் ஒரு வேலைக்காக கிரெக் படித்துக்கொண்டிருந்தான். இந்தப் ’பெருவெடிப்பிற்கு’ முந்தைய காலம் அது. அவனுடைய விந்தணு இன்னமும் நன்கு செயல்பட்டதால், ’ஸி’ பகுதியின் எல்லாப் பணிகளுக்கான காத்திருப்பு வரிசைகளிலிருந்தும் அவன் நீக்கப்பட்டு விட்டான்; ஒரு சட்ட நிறுவனத்தில் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் ஜோடி சேர்க்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ” சராசரிக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் ” என்று சமூகப் பேரவையால் மதிப்பிடப்பட்டு வந்தனர். திருமணத்திற்கான வாய்ப்பு என்பது இவர்களுக்கு நூற்றுக்கு எண்பது விழுக்காட்டை எட்டும் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டிருந்தது.

உண்மையில் கிரெக் மே தினக் கொடியேற்ற விழாவின் அளவு உற்சாகத்துடன் ஓரினச் சேர்க்கையை நாடுபவனாகத்தான் இருந்தான்; ஆனால் இவர்கள் இருவரும் ஏதோ ஒப்பேற்றினர்.

ஓரளவு நெருங்கிய பின், லிஸ், “ஹலோ டார்லிங்,” எனக் கூவினாள். (சமூகப் பேரவை எப்போது கண்காணிக்கும் என்பதை ஊகிக்க முடியாது.)

அவன் புன்னகைத்தான். “என் அருமைப் பெண்ணே, இன்றைய பொழுது எப்படி இருந்தது?”

“நோய் குறித்து ஏதோ கவலை, என்று நினைக்கிறேன். படத்தயாரிப்பிலிருந்து யாரோ ஒருவர் இன்று காலை தொடர்பு கொண்டிருந்தார்; நோயின் போக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி அவர்கள் ஒரு படம் எடுக்கக்கூடும் “.

கிரெக் சீழ்க்கையடித்தான். ” அது நல்லதில்லையே.”

அவள் தலையை ஆட்டினாள். ” தாமதம் ஆவதேன் என்று எனக்குப் புரியவில்லை — ஏற்கனவே பலவாரங்களாக முகமூடிகளை அணிந்துவருகிறோம், இதற்குள் அவர்கள் ஒரு புதிய படத்தை அளித்திருக்கவேண்டும்.”

“கொடுத்திருக்க வேண்டும்தான்,” என்று கவலையைக் காட்டினான் கிரெக்.

லிஸ், தன் காதலனின் கையைத் தட்டிக் கொடுத்தாள், அந்தப் பேச்சை அதோடு விட்டு விட்டாள். அவ்வப்போது அரசாங்கமும் ஏதோ சிறிது தவறு செய்யுமே.

அவர்கள் ’மூன்று-திரை’ என்ற அரங்கில் ‘ஷிண்டிக்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தனர். அப்படத்தின் விளம்பர வரிகள் கொஞ்சம் பரபரப்பை எழுப்பியிருந்தன.(வேனும்(Vane) மர்ரியும் (Murray), ’பெருவெடிப்பை’விட அதிகம் பொறிபறக்க கலாட்டா செய்கிறார்கள்!) ஆனால் அது பாட்டுகள் கொண்ட இன்னொரு காதல் படம் அவ்வளவுதான். லிஸ்ஸுக்கு நடனங்கள் பிடித்தன. கிரெக்கிற்கு ஜோ மர்ரியைப் பிடித்திருந்தது.

காசாளர் அவர்களுடைய அனுமதிச்சீட்டுகளில் முத்திரை பதித்தார். “தயவு செய்து வெளியேறும் போதும் முத்திரை பதித்துக் கொள்ள மறக்காதீங்க, மறந்து போனா, சமூகத் துறையிலிருந்து இதற்கான பணத்தை திரும்ப வாங்க முடியாது, ” என்று அடிக்குரலில் முண முணத்தார்.

அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன், கிரெக், எல்லா ஆண்களும் தங்கள் பிரியமானவர்களிடம் செய்வது போல் தன் கரத்தை அவளைச் சுற்றிப் போட்டான். (அங்கிருப்பவரில் யார் சமூகப் பேரவையின் கண்காணிப்பாளர் என்பது தெரியவே தெரியாது.)

“இதற்குப்பின் ஏதாவது திட்டமிருக்கிறதா?”

”சரி, நீ ஜோ மர்ரியை இவ்வளவு ரசிப்பாயானால், நாம் அப்புறம் சமூக விடுதிக்குப் போகலாம், உனக்கு விருப்பமிருந்தால்”.

புரிந்துகொண்டான், அவளைப் பார்த்தான். “மருத்துவரைப் பார்க்கிற நேரம் வந்து விட்டதா?”

அவள் முறுவலித்தாள். “அவர்கள் என்னை வேறொருவருடன் இணைப்பதற்குள் நமக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.” இதை திரு.ராண்டெல் கண்டுபிடித்து, ஒரு கோரிக்கை மனுவை அனுப்பிவிட்டால் என்று யோசித்தாள், உடல் அதிர்ந்தாள். ”நான் உன்னுடன் இருப்பதே தேவலாம்.”

கிரெக் தலையசைத்து ஏற்றான். படத்தயாரிப்பில் பணியாற்றியவர்களின் பெயர்கள் திரையில் வரும்போது அவள் கையைப் பற்றிக்கொண்டான்.

மர்ரியும், வேனும் சந்திப்பதும்-கவர்ச்சியான நடனம் ஆடுவதும் இருந்த காட்சியில் இடையே திடீரென்று படம் திக்கித் தடுமாறி, காட்சி ஒளிச்சில்லுகளாகச் சிதைந்து அப்படியே அணைந்தது.

“பணத்தைத் திருப்பிக்கொடு!” திரை இருண்டு போவதற்கு முந்தைய கணமே யாரோ ஒருவர் கூச்சலிட்டார்.

திரை மீண்டும் உயிர்பெற்று, படம் வந்தது, பெரிய எழுத்துத் தலைப்பாக: உங்களிடம் பொய் பேசப்படுகிறது.

கிரெக்,”ஆனால் பணம் திரும்பக் கிடையாதா?” என்றான். அருகில் இருந்தவர்கள் உரக்கச் சிரித்தார்கள்.

திரையில் அடுத்தடுத்து வாக்கியங்கள் பளிச்சிட்டன. இங்கு நோய்க்கிருமிகள் ஏதும் இல்லை. இங்கு எந்த நோய்க் கட்டுப்பாடும் இல்லை.

இங்கு நோயே இல்லை.

இப்போது யாரும் சிரிக்கவில்லை.

யாரோ ஒருவர் எழுந்து திரையரங்கை விட்டு வெளியே ஓடினார்.

லிஸ், தன் கழுத்தை உயர்த்தி நீட்டி, படம் ஓளிபரப்பும் அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றாள்.

அரங்கின் பெரிய திரை குறுகி ஒரு கணினித்திரைபோல் ஆனது. நிழலுருவம் ஒன்று அதன் அருகில் அமர்ந்து, தட்டச்சு செய்தவாறு கேமராவை நோக்கிப் பேசியது.

” நாங்கள் அனாமிகள்,” என்றது- அதன் குரல் சிதைவுற்று, பாதிவேகத்தில் ஓட்டப்படும் திரைப்படம் போலிருந்தது- ”வலை இணையத்தை நாங்கள் எங்களுக்கேற்றவாறு மறுவடிவாக்கிக் கொண்டோம். இந்த ‘நோய்’ என்பது ஒரு பொய்யே என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.”

இப்போது மக்கள் முணுமுணுக்கத் துவங்கினர். இது பாதுகாப்புத் துறை வைத்த பொறி என்பது போலச் சிலர் எழுந்து வாயிலை நோக்கி விரைந்தோடினர். ஒருவேளை அது அப்படி இருந்திருக்கலாம்.

இந்தப் பயல் கூறுவது பொய்யாக இருக்கும் என்று லிஸ் எதிர்பார்த்தாள். தொற்று நோய்க்கிருமி பற்றிய எச்சரிக்கை உச்சத்தில் இருந்தபோது, அந்த அசட்டுக் காகித முகமூடியை வாரத்தில் மூன்று நாள்கள் அணிந்திருந்ததை நினைத்துப்பார்த்தது அவளுக்கு எரிச்சலைச் தந்தது.

கணினித்திரை இப்போது ஒரு மின்னஞ்சல் பரிமாறலைக் காண்பித்தது. அதன் தலைப்பு தகவல் கசிவை இடைமறிக்க சேதத் தடுப்பு நடவடிக்கை.

ஒரு குரல் “ஒவ்வொரு குடிமகனும் செயல்பட வேண்டும்,” என்றது. “நோய்க் கட்டுப்பாட்டுத் துறையின் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்!”

இப்போது அந்த நிழலுருவம் பதட்டத்தோடு, கேமராவைப் பார்த்து கைகளை ஆட்டியது. “உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: யாராவது உண்மையிலேயே நோய்ப்பட்டார்களா? இவ்வளவு சிறிய பகுதிகளில் மட்டும் எப்படி ’பெருவெடிப்பின்’ நோய்க்கிருமிகள் தாக்கமுடியும் ? அவை ஏன் எல்லைப் பகுதிகளில் மட்டுமே எப்போதும் நேர்கின்றன? நோய்க் கட்டுப்பாட்டுத்துறையால் எப்படி இவ்வளவு துரித நடவடிக்கை எடுக்க முடிகிறது? மாத்திரைகள், நம்மை செயலற்று வைத்திருக்கின்றன; ஆனால் செயல்பட வேண்டிய காலம் வந்தாயிற்று! நாங்கள் தொடர்பு கொண்டிருக்கும் நபர்—“

அவர்களுக்குப் பின்புறம் இருந்த கதவுகள் தடாலென்று திறக்கப்பட்டன. வாயிற்புறம் நிறைந்த சீருடை அணியாத பாதுகாப்புத் துறையினரும், சீருடை அணிந்த காவல்துறையினரும், கைத்துப்பாக்கிகளை ஏந்தியபடி.

“நில் அப்படியே!” யாரோ ஒருவர் கூச்சலிட்டார். காவல்துறையினர் படம் ஒளி பரப்பும் அறையை நோக்கிப் பாய்ந்தனர்.

அறையிலிருந்து தாவிக் குதித்த இளைஞன் ஒருவன் நடைபாதையில் தொப்பென்று விழுந்தான்; கிரெக்கின் இருக்கையை ஆதாரத்திற்குப் பற்றிக்கொண்டு எழுந்தான்- அந்தப் பையன் வயதில் இளையவனாக, வைக்கோல் நிறத் தலைமுடியுடன் காணப்பட்டான். அவன் முகம் அச்சமோ, வலியோ பீடிக்க இறுகியிருந்தது; ஒரு கணம் அவர்களையே உற்று நோக்கியவாறு கரங்களை கிரெக்கின் இருக்கையின் கைப்பிடியில் ஊன்றி நிமிர்த்திக் கொண்டான்.

சட்டென்று வெளிவாயிலை நோக்கி ஓடினான், காணாமல் போனான்.

காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் ஒளிபரப்பு அறைக்கு வெளியே இருந்த படிகளில் விழுந்தடித்து ஒருவர்மீது ஒருவர் முட்டிமோதிக்கொண்டு திரும்பி வந்தவர்கள், சிலர் வாயில்களை நோக்கியும், சிலர் அரங்கத்திலுள்ளவர்கள் பக்கமும் சிதறினார்கள்.

கிரெக்கும் லிஸ்ஸும் தமது இருக்கைகளிலிருந்து இழுத்து வெளியேற்றப்பட்டு வெளியே தரதரவென்று இழுத்து வரப்பட்டார்கள். அங்கே காவல்துறையினரின் வண்டிகள் திரண்டு வகுத்த வியூகத்துள் நிறுத்தப்பட்டார்கள்; அங்கு இதர அரங்கத்தினர் கூட்டமும் இருந்தது. தப்பியோட முயன்று தோற்றவர் சிலரை லிஸ் பார்த்தாள்.

கிரெக் அவளிடம் “எனக்கு (காவல்) நிலையத்தினுள் போக விருப்பமில்லை,” என்றான். “என் கோப்பில் அது பதிவாகி விட்டால் அவ்வளவுதான் என் கதை.”.

நோய்க் கட்டுப்பாட்டுத் துறையை ஒரு நாள், என்றாவது ஒரு நாள், நெருங்கமுடியும் என்று இன்னமும் அவன் நம்பிக்கொண்டிருந்தான்.

காவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.

கிரெக் அவர்களிடம், “இந்த விஷமத்தனமான சேட்டைக்குத் தகுந்த நஷ்ட ஈடு கேட்கப்போகிறேன், ” என்று அரைகுறையாக உறுதி தொனிக்கும் குரலில் கூறினான், “நீங்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.”

வீட்டிற்கு நடந்துசெல்லும் வழியில் அந்த துண்டுப் பிரசுரத்தை கிரெக் படித்துக் கொண்டு வந்தான்; அது வழக்கமாக விநியோகம் செய்யப்படும் பிரசுரம், தேதியின்றி இருந்தது. தேவைப்பட்டால் கொடுக்கவென்று, முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

பளீரென்று மண்டையோட்டுப் படம் வரைந்த பை ஒன்றைத் தரையில் இழுத்தவாறு முகச்சுளிப்புடன் வந்துகொண்டிருந்த ஒரு சிறுவனின் படத்தை கிரெக் விருட்டென்று காட்டினான்.

விஷமத்தனமான குறும்புகள் முட்டாள்தனமானவை; குடிமக்களின் பொன்னான நேரத்தை வீணாக்குபவை. பாதுகாப்புப் பணியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி உங்கள் அரசின் விவகாரங்களில் தலையிடுகின்றன. விஷமக் குறும்பில் ஈடுபடுபவரைக் கண்டால், உடனே உங்கள் பகுதிக் காவல்நிலையத்தோடு தொடர்புகொள்ளுங்கள்.

அதன் கீழே பெரிய எழுத்துகளில் இவ்வாறு இருந்தது, இன்று அத்துமீறுபவன் நாளைய குற்றவாளி.
“அப்படியே நில்,” என்றான் வைக்கோல்நிறத் தலைமுடி கொண்ட இளைஞன். தன் முதுகில் கத்தி முனையை லிஸ் உணர்ந்தாள்.

“அல்லது இன்றைய குற்றவாளி,” என்றாள் லிஸ்.

கிரெக் அந்த இளைஞனை நேரே நோக்கினான்.”நிதானித்துக்கொள், அனாமி. உனக்கு என்ன வேண்டும்?”

“உங்கள் கார்”

“கார் ஏது, இல்லையே.”

அனாமி முகத்தைச் சையென்று வைத்துக்கொண்டான். “ஷிட். சரி. பணத்தை எடுங்கள்,” என்றவாறு லிஸ்ஸின் தோளைத் தன் தோளால் உந்தினான் (கத்தியால் அல்ல, எனக் கவனித்தாள் லிஸ்).

“என்ன, பஸ் பாஸ் வாங்கி லோகல் சர்வீஸில் ஊரைவிட்டு ஓடிவிடப் போகிறாயா?” என்று கேட்டாள் லிஸ் . ஆனால் பணப்பையை அவனிடம் கொடுத்தாள். ” பதினேழு டாலர்கள். புகுந்து விளையாடு “.

அனாமி வெற்றாய் இருந்த மற்றொரு கையால் பர்ஸைத் துழாவினான். “என் காரை எடுத்துக்கொண்டுவிட்டார்கள்,” அவர்கள் ஏதோ நண்பர்கள் போல அவர்களிடம் சொன்னான். “இங்கிருந்து நான் வெளியேற வேண்டும். என்னைக் கொன்று விடுவார்கள்.”
அதில் லிஸ்ஸுக்கு ஐயமில்லை.

கிரெக் அமைதியாக இருந்த தெருவை நோட்டமிட்டான். அவர்களுக்கு முன் பிரதான சாலையில், உதவித் தொகை பெற்று, நடத்தும் துணைவர் சந்திப்புகளுக்காக, மக்கள் திரண்டு நகரத்தின் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

“நீங்கள் போய்விடுங்கள்,” என்றான் அனாமி. ”என்னுடன் உங்களைப் பார்த்து விட்டார்களானால் உங்களுக்கு இக்கட்டுதான்.”

ஒரு பிரமாதமான சாகச நிகழ்ச்சியின் நடுவே இருப்பதுபோல் கிரெக் காணப்பட்டான், அனாமி தன்னைப் பார்க்காத வேளையில் அனாமியின் செதுக்கினாற் போல இருந்த முகவெட்டை கள்ளத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். கிரெக் வாயைத் திறக்கும் முன்பே என்ன நடக்கப் போகிறது என்பது லிஸ்ஸுக்குத் தெரிந்து போயிற்று. புரிந்துகொண்டாள்.

“உனக்கு என்ன தேவை?” கிரெக் கேட்டான்.

பிரதான சாலையிலிருந்தே பிரிந்து வந்த குறுக்குத்தெரு ஒன்றிலிருந்த சமூக விடுதியில் கிரெக், லிஸ் இருவரும் நுழைந்து கையொப்பமிட்டார்கள். விடுதியிலேயே தங்கிப் பணி செய்யும் பணியாளர்கள், அவர்கள் வருகையைப் பதிவு செய்து, அவர்களுடைய பத்திரங்களில் முத்திரையிட்டு, மரியாதையோடு புன்னகைத்தார்கள்.

வெளியேறும்போது முத்திரை பதித்துத்துக் கொள்வது பற்றியெல்லாம் அறிவுறுத்தல்கள் இல்லை இந்தத் தடவை- அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பது விடுதியின் பணியாளர்களுக்கு நாகரிகக் குறைவு என்பதுபோல் இருந்தார்கள்.

கதவை மூடிவிட்டு இருவரும் முதல் சந்திப்பைப் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். உடல் நலமில்லாதது போல உணர்ந்தாள் லிஸ், அவள் தோலுக்கடியில் ஒரு அரிப்பு ஓடியது, கீழே விழும்வரை நிற்காமல் ஓட வேண்டும்போல இருந்தது அவளுக்கு. தன் நிலையை கிரெக் பார்த்துவிட்டான் என்று உணர்ந்தாள்.

கிரெக் தன் கழுத்துப்பட்டையைக் கழற்றி நாற்காலி மீது வைத்தான், அவளைப் பார்த்தான். “அவர்கள், அவனைப் பின் தொடர்ந்து என் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வது? அவனை அங்கே கண்டுபிடித்தால் என்னாகும்?”

கவர்ச்சியான இளைஞன் ஒருவனை கிரெக்கின் வீட்டில் அவர்கள் பார்த்துவிட்டால் அவனுக்கு வரப் போகும் பிரச்சினை, அகதிக்கு இடம் கொடுப்பதற்காக ஏற்படும் பிரச்சினையை விடப் பெரிது என்று அவளுக்குப் புரிந்தது.

“வா இப்படி,” என்றவாறு அவனுடைய இடைவாரின் நுனியைப் பற்றி இழுத்தாள். “நமக்கு இப்போது வேலை இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு அனாமியை நினைத்துக்கொள்,” என்றாள்.

விடுதியின் வாயில் கதவருகில், கிரெக் அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு விடைகொடுத்தான். தன்னுடைய தெரு நோக்கிச் செல்வதற்குப் பதிலாக அவனுடனே அவள் நடக்கத் துவங்கிய போது கொஞ்சம் வியப்படைந்தாலும் தயங்காமல் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.

தன்னையே அவன் பார்ப்பதை உணர்ந்து, “நாகரிகச் சூழலில் அவன் என்ன செய்வான் என்று காண ஓர் ஆர்வம். மேலும் யாராவது அவனைக் கண்டுபிடித்திருந்தால், நான்தான் உனக்கு அத்தாட்சி.”

“கடவுளே, அதுதானே உண்மை,”என்றவாறு அவள் கரத்தை இன்னும் சற்று அழுத்தி தன் முழங்கை வளைவில் பூட்டிக்கொண்டான்.

கிரெக்கின் நல்ல மழைக்குப்பாயம் (கோட்டு) ஒன்றையும், குளிர்பதனப் பெட்டியிலிருந்த பால்புட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு அனாமி போய்விட்டான். அவர்களுடைய சாகச அனுபவம் முடிந்து போயிற்றே என்பதால் எழுந்த கிரெக்கின் வருத்தம், இன்னொரு விலையுயர்ந்த கோட்டு ஒன்றை வாங்கி ஈடு செய்ய வேண்டும் என்ற உண்மையால் மட்டுப்பட்டது.

“நீ என்ன நினைக்கிறாய்? எப்போதாவது அவன்,….” என்று கிரெக் ஏக்கத்துடன் கேட்டபோதே, லிஸ், அனாமியின் கதை முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டு, அவன் இன்னும் ஏதேதோ கற்பனை செய்துகொண்டு ஏங்க வேண்டாம் என்று கருதி “நடக்காது,” என்று என்று விலக்கினாள்.

ஒரு போராளி அத்துணை எளிதில் பாதுகாப்பான இடத்தை விட்டு விட மாட்டான் என்பதை லிஸ் இரகசியமாகத் தனக்குள் ஊகித்தாலும், அதெல்லாம் அவளுக்குத் தெரிந்தது திரைப்படங்கள் மூலம்தான் (“உங்கள் அண்டைவீட்டுக்காரர் ஒரு துரோகியா?”); இப்போதோ அது எதுவும் உறுதியில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

சிலசமயங்களில் அவர்கள் திரைப்படங்கள் பார்க்கையில் ஓரு காட்சியைத் தவறவிட்டுவிட்டால், கிரெக் பதற்றமடைந்துவிடுவான்; லிஸ், ஏதோ ஒரு நாள் அனாமி திரும்பி வந்து, கிரெக்கை சுத்தமாக மயக்கித் தன்னுடன் ஒரு சாகச வேலைக்கு இழுத்துச்சென்று விட்டால், நோய்க்கிருமிகள் நிறைந்த வயல்களின் நடுவே ஓர் ஆளரவமற்ற பாழ் நகரத்தில் வாழ நேர்ந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து அதீத அச்சத்திலிருந்தாள்.

லிஸ் குழுக்களாக துணைவர் சந்திப்புகளுக்கு என்று சமூக மையநிலையத்துக்குப் போக வேண்டி வரும், அங்கே அவர்கள் கண்ணாடிக்குப் பின்னிருந்து கவனிப்பார்கள், எல்லாருடைய உடல் மொழியையும் குறித்துக் கொண்டு, யாராவது ஒருவரைத் துணையாக நியமிப்பார்கள், பின்னர் லிஸ் முற்றிலும் புதிய ஒரு நபரோடு வாழக் கற்றுக்கொள்ள நேரும்.

அவள் தலைக்கு மேலே, ஒளிப்படக்காட்சியில், ஒரு பெண் மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் பின்புறம் இருந்த ஒருவன் யாரிடமோ, ” நாம் வேகமாகப் போக வேண்டும். இன்றிரவு கூட்டிச் செல்வது நடக்கிறது,” என்றான். அந்தப் பெண் ஓர் ஆப்பிளைப் பார்த்தபடி முகம் சுளித்தாள்; நிகழ்ச்சி நெறியாளர் சொன்னார், “ஏதோ ஒன்று சரியாயில்லை என்பது மேரிக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால் அவளால் என்ன செய்ய முடியும்? நாம் அனைவரும் செய்ய வேண்டியதைத்தான் அவளும் செய்ய முடியும்: ஏதேனும் ஐயப்படும்படி இருந்தால் தெரிவிப்பதுதான் அது. இன்றைய உஷாரான குடிமக்கள் நாளைய நாயகர்கள்.”

அவளுக்கு பின்னால் இருந்த திரையில், முழு உடையில் இருந்த மனிதன் வழியிலிருந்த கதவைத் திறந்து வரவேற்பு மேசையருகில் வந்து முறையிட நெருங்கினான். (அவன் உண்மையில் முறையிடவே இல்லை; லிஸ்ஸுக்கும் அது தெரிந்திருந்தது; மின்தூக்கியில் மேலே சென்று, நாள் முழுவதும், பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அங்கிருந்த ஒவ்வொரு நடிகருடனும் கைகுலுக்கினான்.)

நிகழ்ச்சி நெறியாளர் ” நல்ல குடிமகனா/ளாக இருப்பது எளிது ” என்றார். நீங்கள் அறிந்துகொண்டிருப்பதெல்லாம் எங்களுக்குத் தேவை.”

அடுத்த முறை அவள் அனாமியைப் பார்த்தபோது, அவன் ஒரு நோய்க் கட்டுப்பாட்டுத்துறை முகவர் போல் உடையணிந்து தெருமூலையில் நின்றுகொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும் முகம் வெளிறிப்போனான். தடுமாற்றத்தோடு தட்டில் தேடி ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்தான்.

“இதில் என்ன இருக்கிறது?” இரகசியமாகக் கேட்டாள். “எங்களுக்கு விஷமிடுகிறாயா இப்போது?”

அவன் அதுதான் பாக்கி என்பது போல கண்களை உருட்டினான். “மற்றவை போல்தான் இதுவும்,” என்றான். ”நோய்க்கட்டுப்பாட்டுத்துறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக இங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்.”

சரிதான், இந்த வழியில் கள்ளத்தனமாக உள்ளே நுழையப் போகிறான்.

”தகவல் துறையில் நீ வேலை செய்கிறாயா ? “

அவன் கேள்வி உறைக்கவும், அவள் கண்களை அகட்டினாள். பின் தலையசைத்து வேண்டாமென்றாள். “இல்லை அனாமி, அதைச் செய்யாதே.”

வழியில் கடந்துசென்றவரிடம் ஒரு காகித கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி, “நீ எப்படி வேண்டாம் என்று சொல்லலாம்?” என்று கேட்டான். அவ்வளவு கிட்டத்தில் அவனுடைய நீலநிறக் கண்களின் பச்சை நரம்பைக் கூட அவளால் காணமுடிந்தது.

“நீ ஒன்றும் முட்டாளில்லை,” என்றான் அவன். “நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்பது உனக்குத் தெரியும். எனக்கு உதவமாட்டாயா?”

“என்ன செய்யப்போகிறாய்?”

“நோய்க்கட்டுப்பாட்டுத்துறைக்குள் புகுந்துவிடப் போகிறேன்,” என்றான் அவன். நம் எல்லோரையும் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகத்தான் இது என்பதற்குச் சான்று திரட்டுவேன், அதை நாடு முழுவதும் ஒலிபரப்பி அறிவிப்பேன். மோசமான அதிர்ச்சி தரும் விழிப்பு கிட்டப் போகிறது மக்களுக்கு.”

அவன், விழிப்பூட்டி எழுப்பப் போகும் நாட்டு மக்கள் அனைவரையும் எப்படித் திட்டமிட்டு ஒருங்கிணைக்க முடியும் என்று வியந்தாள். “என்னால் உனக்கு உதவ முடியாது,” என்றாள்.

அவன் கெஞ்சலாக, “நீ எங்கு பணிபுரிகிறாய் என்பதை நான் அறிவேன்,” என்றான். “தகவலை வெளிக்கொணர எனக்கு நீ உதவ முடியும். நீ செய்யவேண்டியதெல்லாம் என்னை உள்ளே விடுவதுதான். நானாகவே மேல்தளங்களுக்குச் சென்று, அங்கிருந்து தகவலை வெளிப்படுத்தி விடுவேன்.”

அவள் ஓரடி பின்னே போனாள். “என்னால் முடியாது,” என்றாள். “அது மிகவும் ஆபத்தானது.”

“அது நீதான் என்பது யாருக்கும் தெரியாது.”

“யாரேனும் ஒருவருக்காவது தெரிந்துவிடும்,” என்றாள்-அது மட்டும் நிச்சயமென்று அவளுக்குத் தோன்றியது.

“எப்படி இவ்வளவு கோழையாக இருக்கிறாய் நீ?” அவன் இப்போது உரத்துப் பேசினான் – மிகவுமே உரக்க இருக்கவும், இப்போது மற்றொரு நோய்க்கட்டுப்பாட்டுத்துறை முகவர் கரிசனத்துடன் கவனித்தார்- அனாமி முன்னகரவும் லிஸ் ஓர் எட்டு பின்வாங்கினாள். அவன் கண்கள் கூர்மையாகவும் ஓளி வீசுவனவாகவும் இருந்தன. “உனக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையா?”

“என்னைத் தொல்லை செய்யாமல் விடு,” என்றாள். ஒரு வேளை தேவைப்பட்டால், கிரெக்கோ, வேறு யாருமோ இருந்தால் தேவலை என்று நினைத்தாள்.

பெருத்த ஒலியுடன் தட்டை அவன் கீழே போட்டான். காகிதக் கிண்ணங்கள், மாத்திரைகள் எல்லாம் லிஸ்ஸின் காலணியில் பட்டுத் தெறித்து நடைபாதையில் சிதறின.

“எல்லாம் போச்சு,” என்றான். “நீ எனக்கு உதவாவிட்டால், என்னைக் கொன்றுவிடுவார்கள். நீ என்னைக் கொன்றுவிட்டாய்.”

லிஸ்ஸால் மூச்சுவிட முடியவில்லை. தலைசுற்றியது. அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்பதே அவளுக்குப் புரியவில்லை.

அடுத்தவினாடி அவள் கைவிலங்கிடப்பட்டு தரையில் கிடந்தாள். அனாமியைத் தூக்கிக்கொண்டு (ஐந்து, அல்லது அதைவிடக் கூடுதலான காவலர்கள் இருக்கக் கூடும்) போனார்கள், அவன் கால்களை உதைத்துக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டிருந்தான், திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு வேனின் பின்புறத்தில் அவனைப் போட்டு எடுத்துப் போய் விட்டார்கள்.

இரண்டு காவலர்களால் காருக்கு லிஸ் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்கள் அந்த வேனைக் கடந்தார்கள், பரிச்சயமான இசையின் முடிவு உச்ச ஸ்தாயியில் அதன் ஒலி பெருக்கிகளிலிருந்து பெருஞ்சத்தமாகக் கேட்டது.

“துணைவருடன் சந்திப்பு நாளுக்கு உரிய காலமாயிற்றா?” அறிவிப்பாளர் அழைத்தார். “மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள்.”

திரு.ராண்டெல் துறையின் பதினெட்டாம் தளத்தில் அவளுக்காகக் காத்திருந்தார்.

அவள் பொறுத்தாள். துறையினரிடம் ஏதேனும் தகவல் கொடுக்க வந்தவர்களில் எத்தனை பேர் மீண்டு கீழே இறங்கி வந்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க முயன்றாள்.

திரு.ராண்டெல், “உன்னைப் பாராட்டி வாழ்த்த விரும்புகிறோம்,” என்றார்.

லிஸ் விழித்தாள். “மன்னியுங்கள். என்ன?”

”புதியதோர் அறிவுறுத்தும் ஒளிப்படத்துக்கான பார்வையாளர்களைக் கண்டறிய, நகர் முழுவதும் வரிசைக்கிரமமாகச் சோதனை முயற்சிகள் செய்து வந்தோம். அதில் உங்கள் அனாமி ஒருவன். மாதக்கணக்கில் விற்பனைப் பிரிவு எங்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது”.

நிம்மதி அவள் மனதில் கரைபுரண்டது. “ஓ, அப்படியா?” என்றாள்.

“களத்தில் இறங்கிய எங்கள் ஆள், தன்னால் இயன்றவரை தீவிரமாக முயன்றான். ஆனால் நான் அவனிடம் சொல்லிவிட்டேன்-நான் சொன்னேன், அந்தப் பெண் எதையும் யோசித்துச் செய்பவள், அவளை உனக்கு உதவ வைக்க முடியாது! அவன் இருமுறை முயன்றான்; ஒருமுறை திரையரங்கிலும், மறுமுறை தெருவிலும், ஆனால் எலிசபெத்தை மடக்க முடிந்ததா?” அவர் சிரித்தார். “என்னிடமிருந்து உதவி பெறுவது எவ்வளவு சாத்தியமோ, அதே அளவுதான் உன்னிடமிருந்து உதவி கிடைப்பதும் சாத்தியம் என்று நான் கூறினேன்.”

கிரெக்கின் வீட்டிற்குண்டான தனது சாவிகளை அனாமியிடம் கொடுத்ததை நினைவு கொண்டாள். அப்படியே அவனிடம் எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லச் சொன்னதையும், கிரெக்கின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சான்றுக்காக துணை-சந்திப்புக்குப் போனதையும் நினைத்தாள்.

இதுகுறித்து எவரும் திரு.ராண்டெல் அவர்களிடம் சொல்லவில்லை. அப்படியானால் இது ஒரு ரகசியப் பணி இல்லை; அனாமி தன்னிடம் பொதிந்திருந்த ரகசியத்துடனேயே இறந்திருக்கிறான்.

“நன்றி ஐயா,” என்றாள்.

தன்னுடைய அலுவலக மேசைக்கு மீண்டும் வந்தபோது கிரெக்கை அழைத்தாள். “திருமணம் செய்துகொள்ளலாமா?”

அவன் ஒரு கணம் மட்டுமே தயங்கினான். பின் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடன்-அதிகம் இல்லை, சிறிதே கூடுதல்-“நீ கேட்கவே மாட்டாயோ என்று நினைத்தேன்,” என்றான். ” இன்றிரவு உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன்; நாம் நகர நிர்வாக அலுவலகத்திற்கும், உன்னுடைய மருத்துவரிடமும் செல்வோம்.”

என்ன நடந்தது என்று கிரெக்கிடம் சொல்ல விரும்பினாள்; தான் அனாமிக்கு உதவி செய்ய அஞ்சியது எப்படி, இப்போது அவனுக்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை எல்லாமும் சொல்ல விரும்பினாள்.

அவன் “வருகிறேன் கண்மணி,” என்று சொல்லிக் கொண்டிருக்கயிலேயே, ”அப்ப சீக்கிரம் பார்க்கலாம்,” என்று முடித்து ஃபோனை வைத்து விட்டாள்.

மேலே ஓளிப்படம் முடிவை நெருங்கியது; இறுதிக் காட்சிகளின் துள்ளலிசைக்கேற்ப, அவள் துறையைச் சேர்ந்த நடிகர் பல்லிளித்துக்கொண்டிருந்தார்.

உங்களுக்குத் தெரிவதில் எதை நாங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்?”

______________________________________________________________________________

மூலக்கதை: ஜெனவியெவ் வாலண்டின்– இங்கிலீஷ்/  தமிழாக்கம்: மாதங்கி.

மூலக் கதையாசிரியர் ஜெனவியெவ் வாலண்டின் பற்றிய குறிப்பை அவருடைய வலைத்தளத்திலிருந்தே எடுத்தது இங்கே:

’ஜெ.வாலண்டினின் புனைவுகள் வெளியானவை/ வெளியாகப் போகிறவை- க்ளாக்ஸ்வொர்ல்ட், ஸ்ட்ரேஞ்ச் ஹொரைஸான்ஸ், ஜர்னல் ஆஃப் மிதிக் ஆர்ட்ஸ், ஃபாண்டஸி மாகஸீன், லைட்ஸ்பீட், மேலும் ஏபெக்ஸ் போன்ற தொகுப்புகள், சஞ்சிகைகளில்.  (Clarkesworld, Strange Horizons, Journal of Mythic Arts, Fantasy Magazine, Lightspeed, and Apex).  இவை தவிர ஃபெடரேஷன்ஸ், த லிவிங் டெட் 2, த வே ஆஃப் த விஸர்ட், ரன்னிங் வித் த பாக், டீத், மற்றும் பல தொகுப்புகளிலும் உண்டு. (Federations, The Living Dead 2, The Way of the Wizard, Running with the Pack, Teeth, and more)’

வாலண்டினின் இதர வகை எழுத்துகள், லைட்ஸ்பீட், டோர்.காம் (Tor.com), ஃபாண்டஸி மாகஸீன் ஆகிய பிரசுரங்களில் வெளியாகியுள்ளன. இவர் கீக் விஸ்டம் (Geek Wisdom) என்கிற புத்தகத்தின் இணை ஆசிரியர்.

இவருடைய முதல் நாவல் ‘மெகானீக்: அ டேல் ஆஃப் தெ சர்கஸ் ட்ரெசௌல்டி’ (Mechanique: A Tale of the Circus Tresaulti) மே, 2011 இல் வெளியாயிற்று.

மோசமான சினிமாக்களைப் பார்ப்பதில் தனக்கிருக்கும் ஆசை அளவற்றது என்றும், அந்த சோகம் குறித்துத் தன் ப்ளாகில் எழுதி இருப்பதாகவும் சொல்கிறார். அவருடைய ப்ளாகின் சுட்டி இதோ: http://glvalentine.livejournal.com/