பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இரண்டாம் பகுதி

வங்கியாவது, கார்டாவது!

இணையத்தில் பலவகை நுகர்வோர் நிதி பரிமாற்றங்களை எளிதுபடுத்த முயற்சிகள் செய்து, ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். இவற்றை மூன்று வகைகளாக அலசலாம்.

1. முந்தைய அமைப்புகளின் இணைய வடிவம்
2. புதிய இணைய முறைகள்
3. செல்பேசி நிதி முறைகள்

இம்மூன்று முறைகளும் நுகர்வோருக்கு செளகரியம் அளிப்பவையானாலும் சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. முதல் வகையில் உள்ள மிகப் பெரிய பலம், அதன் பின்னணியில் உள்ள தனியார் வலையமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மை. இரண்டாவது வகையில் சில செளகரியங்கள் முதல் வகையைவிட அதிகம். ஆனால், அதன் பின்னணி தொழில்நுட்பத்தை ஆராய்ந்து முடிவெடுத்தல் அவசியம். சில புதிய முறைகள் பழைய அமைப்புகளைப் பின்னணியாகக் கொண்டு சேவை செய்யும் திறனையும் கொண்ட்து. மூன்றாவது முறை மிக சமீப காலமாக வளர்ந்து வரும் ஒரு துறை. உலகில் இணையம் பரவாத இடங்களில் செல்பேசிகள் பரவி விட்டது கண்கூடாக தெரிகிறது – இது வளரும் நாடுகளில் ரொம்ப சகஜம். செல்பேசிகள் மூலம் நிதி பரிமாற்றங்கள் வங்கிகள் இல்லாத குறையை பலருக்கு தீர்த்து வைக்கிறது. இவற்றை விவரமாக ஆராய்வோம்.

இணைய வங்கிகள் – முந்தைய அமைப்புகளின் இணைய வடிவம்

முதலில் ஒரு முக்கிய எதிர்கால ஜோஸ்யம் : 2018 க்குள் செக் (cheque) என்ற விஷயம் மறைந்துவிடும் என்று மின்னணு நிதி வல்லுனர்களால் நம்பப்படுகிறது. குறைந்த பட்சம் வளர்ந்த நாடுகளில் நிச்சயம் இது நிகழும் வாய்ப்பு உள்ளது. இதற்கு என்ன காரணம்? வங்கிகள் முக்கிய சேவைகளை இணையம் மூலம் வழங்கத் தொடங்கியதுதான். இன்று பலவித பில்கள் கட்டுவதற்கு இணையம் மூலம் வசதி உள்ளது. அதே போல கணக்கில் பாக்கியை தொலைப்பேசி மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். பண மாற்றமும் இணையம் மூலம் செய்யலாம். கணக்கு பட்டியல் (Account Statement) இணையம் மூலம். கணக்கை திறக்கக் கூட தொலைபேசி, மற்றும் தபால் மூலம் செய்து விடலாம். ஏதோ உதைக்கிறதே! வங்கி கிளை எதற்கு,  அதில் வெய்யிலில் வரிசை எதற்கு?

இணைய வங்கிகள் சக்கை போடு போடுகின்றன. ING, ஹாலண்டு நாட்டைச் சேர்ந்த வங்கி. இந்த வங்கி வட அமெரிக்காவில் முற்றிலும் இணையம் மற்றும் தொலைபேசி வைத்துக் கொண்டே அருமையாக வணிகம் நடத்தி வருகிறது. அதன் பல லட்சம் வாடிக்கையாளர்கள் எந்த கட்டிடத்தையும் நம்பி வரவில்லை. மற்ற வங்கிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் ஏ.டி.எம். -மில் பணம் எடுத்துக் கொள்ள வழி செய்கிறார்கள். தலைமையகம் என்று ஒன்று உண்டு. சில மார்கெடிங் கியாஸ்க்குகள் உண்டு. அவ்வளவுதான். இந்தியாவில் வைஸ்யா வங்கியுடன் கூட்டு முயற்சி கொண்டு வழக்கமான கிளை அமைப்புகள் மூலமும் இயங்கி வருகிறது.

இணைய வங்கிகள் பல நாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இவர்களுக்கு கட்டிட வாடகை, பராமரிப்பு போன்ற செலவுகள் கிடையாது. அதனால், சற்று அதிகம் வட்டியும் தர இயலுகிறது. முழுவதும் இன்னும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும், மெதுவாக இது மாறி வருகிறது. கட்டிடம் இருக்கும் வங்கிகள் தரும் உத்தரவாதத்தை இவர்களும் தருவதால் பொதுக் கருத்து மாறி வருகிறது.

இணையத்தில் கிரெடிட் கார்டுகள் – முந்தைய அமைப்புகளின் இணைய வடிவம்

அமேஸானில் எப்படி புத்தகம் வாங்குகிறோம்? அல்லது, விமான டிக்கட் எப்படி இணையத்தில் வாங்குகிறோம்? எல்லாம் கிரெடிட் கார்ட் மூலமாகத்தான். எப்படி க்ரெடிட் கார்ட் இணையத்திற்கு வந்தது? 1990 களில் இணையம் மிகவும் பிரபலமடையத் தொடங்கியதும், அதை ஏன் பல்வேறு வியாபார விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. பண விஷயங்களில் இணையத்தை பயன்படுத்த மக்களின் தயக்கம் அந்த நாட்களில் நியாயமானது. ஏனென்றால், இணையத்தில் ஒருவரின் அடையாளத்தை சரியாகச் சொல்லத் தேவையில்லை. விளம்பரத்தால் நுகர்வோரை ஏமாற்றி அவர்களின் பணத்தைச் சுருட்ட ஓட்டைகள் இருப்பதை வல்லுனர்கள் ஒப்புக் கொண்டனர். அந்த நேரத்தில் விசா போன்ற அமைப்புகளின் தனியார் வலையமைப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வளர்ந்திருந்தது. எப்படியாவது தனியார் வலையமைப்பையும் இணையத்தையும் சரியாக இணைத்தால், உலக வணிகத்தையே மாற்ற வழி இருப்பது தெரிந்தது. பூனைக்கு மணி கட்டுவதை அமேஸான் மற்றும் ஈ.பே. போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டன. அமேஸானின் ஆரம்ப நாட்களில் அந்நிறுவனம் நஷ்டத்தையே பார்த்ததற்கு இதுவும் ஒரு காரணம். புதிய வணிக அமைப்புகளை உருவாக்குவது மிகவும் ரிஸ்க் நிறைந்த, ஆனால், மிகவும் பலன் தரக்கூடிய முயற்சி. இன்று இந்த இரு நிறுவனங்களுடைய வெற்றிக்கு நஷ்டத்தையும் பாராத அவர்களின் தொலைநோக்கு குறியே காரணம் என்றால் மிகையாகாது. அத்துடன், முன்னே சொன்னது போல, மறையீடு மென்பொருள் வளர்ச்சியும் உதவியது. இணைத்தளங்கள் விசா/மாஸ்டருடன் வேலை செய்ய ஒரு நுழைவி மென்பொருள் அமைப்பை (software gateway) உருவாக்கினார்கள். இதனால், மறையீடாக இணையதளத்துடன் முதலில் தொடர்பு (encrypted internet connection) , பிறகு, விசா/மாஸ்டரின் தனியார் வலையமைப்புடன் உரையாடல் – இரண்டும் உருவாக்கப்பட்டது.

அமேஸானில் புத்தகம் வாங்குவதன் பின் இத்தனை தொழில்நுட்பமா என்று தோன்றலாம். உண்மை என்னவென்றால், பணம் என்பது எலக்ட்ரான்களாக மாறும்போது, அதைப் பாதுகாக்க இத்தனை சிக்கலான வழிமுறைகள் தேவைப்படுகின்றன. இன்று நிதித் துறையின் வெற்றிக்கு காரணம், அவர்கள் இத்தனை சிக்கல்களையும் சாதாரண நுகர்வோரிடமிருந்து வெற்றிகரமாக மறைத்து வைத்திருப்பதுதான் என்பது என் கருத்து.

இந்த முறைகளை வைத்துக் கொண்டு, வீட்டிலிருந்தபடியே கணினி/மின்னணு சாதனங்கள், வீட்டுச் சாமான்கள் என்று தொடங்கி எதை வேண்டுமானாலும் வாங்கலாம். இன்று, மேற்கத்திய நாடுகளில் இணைதளம் மூலம் வியாபாரம் செய்யும் வசதி இல்லாவிட்டால், கடையை இழுத்து மூட வேண்டியதுதான். அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஒரு வெள்ளியன்று தள்ளுபடி விற்பனை திருவிழா போல வருடம்தோறும் நாடெங்கும் நடைபெறும். இதை கருப்பு வெள்ளி (black Friday) என்கிறார்கள். சமீப காலமாக, வெள்ளியுடன் கருப்பு திங்களும் (black Monday) உண்டு. திங்களன்று இணையம் மூலம் மட்டுமே தள்ளுபடி விற்பனை. சில்லரை வியாபாரிகள் கருப்பு திங்கள் வியாபாரம் வளர்ந்து வருவதை கவனித்து வருகிறார்கள். அடித்து பிடித்துக் கொண்டு வரிசையில் குளிரில் அல்லல்படுவதைவிட க்ளிக்கினால் அடுத்த வாரம் குறைந்த விலையில் ஆசைப்பட்ட பொருளை வாங்கி விடலாம்.

ஐடியூன்ஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் இணைதளம். இங்கு பாடல்கள், விடியோக்கள், புதிய நிரல்கள் என்று பலவற்றை வாங்கலாம். இதுவரை இந்த இணைதளத்திலிருந்து (ஜனவரி 2011) 1 பில்லியன் தரவிறக்கங்கள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் ஒரு 200 மில்லியன் இலவச பாட்காஸ்டுகள் என்று வைத்துக் கொண்டால் கூட மற்ற 800 மில்லியன் தரவிறக்கங்கள் பணம் கைமாறிய பரிமாற்றங்கள். ஐடியூன்ஸ் கணக்கு திறந்தவுடன் உங்களுடைய கிரெடிட் கார்டு விஷயங்கள் பதிவு செய்ய வேண்டும். கேட்டு, பார்த்து, பிடித்தவற்றை வாங்க மிகவும் எளிதாக்கிவிட்டார்கள் ஆப்பிள்காரர்கள். பல இணைதளங்கள் வந்தும் இன்றும் ஆப்பிளுக்கு அதிகம் வியாபாரம் நடக்க இதுவே காரணம். அழகாக விற்கும் கலைஞரையும்/கம்பெனியையும் நுகர்வோரையும் கஷ்டமின்றி இணைக்கிறது ஆப்பிள். ஒவ்வொரு பரிமாற்றத்திலும் ஆப்பிள் காசு பண்ணுகிறது. ஐடியூன்ஸுடன் சண்டை போடுவதற்கு பதில் அதையே உபயோகித்து பல புதிய சேவைகளும் வரத் தொடங்கி விட்டன. அவற்றை இனி பார்க்கலாம்.

புதிய இணைய முறைகள்

இணையத்தின் மூலம் புதிய சேவைகளை உருவாக்குவதற்கு என்ன வாய்ப்பு? ஏன் தேவைப்படுகிறது? இந்த புதிய சேவைக்காரர்கள் இன்றுள்ள இணைய நிதி பரிமாற்றத்தில் இன்னும் கொஞ்சம் உராய்வு (friction) இருக்கிறது என்று கருதுகிறார்கள். முழுவதும் அந்த உராய்வை அவர்களது சேவைகள் நீக்கிவிடும் என்பது இவர்களது வாதம். இந்த உராய்வு விஷயம் உங்கள் கண்ணோட்ட்த்தைப் பொருத்தது.

பேபால் (www.paypal.com) என்ற அமைப்பு, ஈ.பே. தொடங்கிய காலத்திலிருந்து அந்த இணைத்தளம் மூலம் நடக்கும் வியாபாரத்திற்கு நிதி பரிவர்த்தனைகளுக்கு உதவி வந்தது. இன்று பேபால் ஈ.பே. -யின் ஒரு அங்கம். பேபால் என்பது வங்கி, கார்டுகள் போன்ற ஒரு அமைப்பு. வங்கிகள், கார்டுகளுடன் சரளமாக உரையாடும் ஒரு இணைய சேவை. முதலில் அங்கு உங்களுக்கு ஒரு கணக்கு வேண்டும். கணக்குடன் உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் உங்கள் வங்கி கணக்கை இணைத்துவிடலாம். பணம் வெளியே போகும் போது கிரெடிட் கார்டு வழியாக செல்லும். உள்ளே வரும்போது வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பேபால் நிறுவனத்திற்கு இவ்வளவு என்று ஏற்பாடு. ஈபே மற்றும் அமேஸானில் வாங்கல் விற்றலுக்கு பேபால் இருந்தால் மிகவும் செளகரியம். உலகில் விற்பவர், வாங்குபவர் எங்கிருந்தாலும் பேபால் மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொள்ளும்.

கன்னியாகுமரியிலிருந்து ஈ.பே. -யில் ஸ்டாக்ஹோம்மில் ஒருவருக்கு இப்படி முத்து விற்கலாம். பேபால், ஸ்டாக்ஹோம்காரரின் கிரெடிட் கார்டையும், உங்கள் ஸ்டேட் பாங்க் கணக்கையும் இணைக்கும் வேலையைப் பார்த்துக் கொள்ளும். நீங்கள் கேட்பது ஒரு முத்துக்கு 24 டாலர்களாக இருக்கலாம். ஸ்டாக்ஹோம் காரரின் யூரோ கார்டிலிருந்து உங்கள் ஸ்டேட் பாங்க் ரூபாய் கணக்கிற்கு பணம் எப்படி மாறி வநத்து என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்த கவலை நீக்கத்திற்கு (=உராய்வு) பேபால் கொஞ்சம் டாலர்கள் இருவரிடமும் கழித்துக் கொள்ளும். ஃபெடெக்ஸ் (FedEx) முத்தை ஸ்டாக்ஹோம்முக்குக் கொண்டு சேர்த்துவிடும்.

சற்று யோசித்துப் பாருங்கள். எங்கோ வசிக்கும் ஒருவர் இணையத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, விற்பவரிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, பொருள் பிடித்துப் போய் வாங்க ஆசைப்படுகிறார். சில கிளிக்குகள் மூலம் ஃபெட்டெக்ஸ் மற்றும் பேபால் இந்த நிதி/பொருள் பரிவர்த்தனையை முடித்துத் தருகின்றது. 20 வருடங்களுக்கு முன் இதற்கு எத்தனை காகிதங்கள், எத்தனை வங்கி விஜயம், எத்தனை நேர விரயம்! இதையே உராய்வாய் பார்க்கிறார்கள் புதிய சேவைக்காரர்கள். வாங்குவோரிடம் பணமிருந்தால், விற்பவருக்கு இஷ்டமிருந்தால் பரிவர்த்தனை எவ்வளவு எளிதாக முடியுமோ அவ்வளவு எளிதாக்கும் முயற்சி இந்த சேவைகள்.

பேபால் காரர்கள் 1998ல் தங்களது சேவையோடு இணைந்து வேலை செய்ய மற்ற சேவைக்காரர்களுக்கு இடைமுக வரையரைகளை (Application Programming Interface Specifications) வெளியிட்டார்கள். இதனால், மேலும் பலவகை புதிய சேவைகள் வரத் தொடங்கிவிட்டன. இந்தத் தருணத்தில், சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். அடிப்படை சேவைகள் வங்கியும் கிரெடிட் கார்டும். அதனை அடிப்படையாக கொண்ட சேவை பேபால் போன்ற சேவை. நாம் அடுத்து பார்க்கப் போவது பேபாலை அடிப்படையாக கொண்ட சேவை! பிக்பாக்கெட் காரர்கள் பாடு ரொம்ப திண்டாட்டம்தான் போங்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு இவ்வகை பரிவர்த்தனைகள் செய்யக்கூட பொறுமை இல்லையாம். ஆனால், டிவிட்டர் போன்ற சமூக வலையமைப்பு இணைதளங்களில் மேய பொறுமையுள்ளதாம். டிவிட்டர்,  அதிகம் பொறுமையாக எழுத ஆசையில்லாதவர்களின் உலகம். இங்கு பல பொருட்கள் வாங்கி விற்கவும் செய்கிறார்களாம். http://twitpay.com/ என்ற அமைப்பு டிவிட்டர் மூலமாகவே கொடுக்கல் வாங்கல்களை நிறைவு செய்ய வழி செய்கிறது. பேபால் சேவையை அடிப்படையாக கொண்ட சேவை இது.

அடுத்தபடியாக, இளைய சமூகத்தினருக்கு மிகவும் பிடித்த இன்னோரு விஷயம், ஐஃபோன். இதில் பல்வேறு உபயோகமான நிரல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அடுத்த கட்டமாக முன்னே நாம் விளக்கிய transaction terminal எவ்வளவு சின்னதாகிவிட்டது பாருங்கள். யார் வேண்டுமானாலும் merchant ஆகிவிடலாம். மேலும், இந்த புதிய சேவை, itunes என்ற ஆப்பிள் நிறுவனத்தின் சேவையை உபயோகித்து வேலை செய்கிறது. Itunes கிரெடிட் கார்டு வலையமைப்பை அடிப்படையாக கொண்டு வேலை செய்கிறது. இந்த புதிய சேவையின் பெயர் Squareup (https://squareup.com/). இந்த சேவையை விளக்கும் வீடியோ இங்கே:

http://www.youtube.com/watch?v=QSzsFAJAKHI&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=3BP5ax1qs5o&feature=player_embedded

இதை ஜப்பானிய நிறுவனம் ஒன்று இன்னும் ஒரு படி மேலே எடுத்தச் செல்ல முயற்சி செய்து வருகிறது. http://shopsavvy.mobi/ என்ற இணைதளம், கடைக்குச் சென்று பட்டைக் குறியீடு ஒன்றை ஐஃபோனில் வருடினால், அதன் குறைந்த விலை இணையத்தில் எங்கே என்று தேடிச் சொல்லிவிடுகிறது. பிடித்திருந்தால், ஐஃபோனின் மூலமாகவே பொருளை வாங்கி விடலாம். இந்த நிறுவனமும் பேபால் சேவையை அடிப்படையாக கொண்டது. இன்னும் கொஞ்சம் உராய்வு குறைவு!

செல்பேசி நிதி முறைகள்

செல்பேசி நிதி முறைகள் வளர்ந்த நாடுகளிலிருந்து வரவில்லை. அதிகம் வளர்ச்சியே அடையாத ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தொடங்கிய புரட்சி இது. வேறு எந்த வசதியும் இல்லாத்தால், செல்பேசி அமைப்பைப் பயன்படுத்தி நிதி விஷயங்களை கவனிக்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள்.

http://www.youtube.com/watch?v=ewJ-lpvWDEU

http://www.youtube.com/watch?v=jWi9hP725l8

செல்பேசி வழியாக நிதி பரிவர்த்தனைகள் எப்படி நடக்கின்றது என்பதை விடியோ விளக்குகிறது. 15 மில்லியன் நுகர்வோர் கொண்ட இந்த சேவை, ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமாகி உள்ளது. நாட்டுக்குள் மற்றும் பன்னாட்டு நிதி சேவைகள் பெருகி வருகின்றன. இது இந்தியாவுக்கு மிகவும் முக்கிய தொழில்நுட்பம். உலகில், சைனாவுக்கு அடுத்தபடியாக அதிக செல்பேசிகள் உள்ள நாடு இந்தியா. இதைப் போன்ற சேவைகள் இந்தியாவில் வேலை செய்ய வாய்ப்புகள் அதிகம். இந்தியாவைப் போல ஆப்பிரிக்காவிலும் முன்னே பணம் கட்டி (prepaid subscribers) செல்பேசியை உபயோகிப்போர் அதிகம். அத்துடன், கிரெடிட்/டெபிட் கார்டுகள் ஒரளவிற்கு நிதி ஸ்திரத்தன்மையுடையவர்களுக்கே சரிப்பட்டு வரும் நிதி கருவிகள். இந்தியா போன்ற நாடுகளில் வங்கி கணக்கில்லாதவர்கள் பல கோடி பேர்கள். இடைத்தரகர்களிடம் சிக்கி, சரியான நிதி பரிமாற்ற சேவை இல்லாது தவிப்போர் ஏராளம். கென்யாவில் உள்ளது போன்ற செல்பேசி நிதிமாற்று வசதிகள் இந்தியாவிலும் குறைந்த கட்டணத்திற்கு வந்தால் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து.

இதே ஐடியாவை ஓபோபே என்ற நிறுவனம் வட அமெரிக்காவுக்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் சூடு பிடிக்காவிட்டாலும், வளர வாய்புள்ளது போலத் தோன்றுகிறது.

https://www.obopay.com/corporate/en_US/aboutUs.shtml

மேலே உள்ள சுட்டியில் விடியோக்கள் செல்பேசி நிதி பரிமாற்றத்தை விளக்குகிறது. உதாரணத்திற்கு 5 நண்பர்கள் உணவு உண்ண ஓட்டலுக்கு செல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 1,000 ரூபாய் பில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஐவரும் ஓபோபேயில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். ஒருவர் தன்னுடைய டெபிட் கார்டு மூலம் 1,000 ரூபாயை ஓட்டலுக்கு கட்டி விடுகிறார். மற்ற நான்கு பேரும் தலா 200 ரூபாய் டெபிட் கார்டு ஆசாமிக்கு கொடுக்க வேண்டும். செல்பேசி மூலம் தங்களுடைய ரகசிய எண்ணை (PIN) உபயோகித்து ஓபோபே மூலம் உடனே அவருக்கு பணம் மாற்றம் செய்யலாம். அப்புறம் தருகிற சாக்குக்கு இடமே இல்லை. செல்பேசி தொலைந்து போனாலும் ரகசிய எண் உங்களுக்குத்தானே தெரியும். திருடனால் பணமெடுக்க முடியாது.

இந்திய ஒபோபே வீடியோ இதோ

http://www.youtube.com/watch?v=YlJFPLObCUc

புதிய முறைகள் உயர்ந்தவையா?

(தொடரும்)