இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – கட்டுரைத் தொடர்

எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) (1905 – 1940s)

02) DER BLAUE REITER (THE BLUE RIDER) 1911-1914
நீல சவாரிக்காரன்

1909 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் மூனிச் (Munich) நகரில் ‘புதிய கலைஞர் குழுமம்’ (New Artist Assiociation) என்னும் பெயரில் ஒரு ஓவியர் குழு தோன்றியது. வாஸிலி கண்டின்ஸ்கி (Wassily Kandinsky) என்னும் ஓவியர் அதற்குத் தலைவராய் இருந்தார். ஓவியர் பவுல் க்ளீ (Paul Klee) யும் அதில் ஒரு உறுப்பினர். அந்தக் குழுவின் இலட்சியம் வெறும் உணர்வு சார்ந்த கருப் பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களைவிடவும் மற்ற தளங்களில் இயங்கும் ஓவியங்களையும் படைப்பதுதான். குழு அதன் உறுப்பின ஓவியர்களின் படைப்புகளை ஜெர்மனியிலும், மற்ற நாடுகளிலும் காட்சிப்படுத்துவதையும், பொதுக் கூட்டங்களில் குழுவின் கலை அணுகல் பற்றின விளக்க உரைகள் நிகழ்த்துவதையும் தனது மையச் செயல்பாடாகக் கொண்டு இயங்கியது. பவேரிய (Bavariya) கிராமப் பாணியால் ஈர்க்கப்பட்ட ஓவியர் வாஸிலி கண்டின்ஸ்கி Wassily Kandinsky கண்ணாடியில் ஓவியம் படைப்பது அப்போதுதான் நிகழ்ந்தது. அவரது படைப்புகளில் அரூபத் தன்மையின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது.

1911 இல் ‘புதிய கலைஞர் குழுமம்’ தனது ஓவியக் காட்சியில் வாஸ்லி கண்டின்ஸ்கி, ஃப்ரான்ஸ் மார்க் (Wassily Kandinsky, Franz Marc) இருவரது படைப்புகளையும் இக் காரணம் காட்டி ஒதுக்கியது. அது அவ்விருவரும் குழுவிலிருந்து விலகக் காரணமாயிற்று. அவ்விருவரும்தான் குழுவைத் தொடங்கி, ஒரு நோக்கத்துடன் செயற்பட்டு வளர்த்தவர்கள். அதன் விளைவாக, வாஸிலி  கண்டின்ஸ்கி  (Wassily Kandinsky) யுடன் ‘ஃப்ரான்ஸ் மார்க்’ (Franz Marc,) அகஸ்ட் மக்க, (August Macke,) அலெக்ஸெ ஃபான் யாலென்ஸ்கி (Alexcj Von Jawlensky) போன்ற ஓவியர்கள் இணைந்து ஒரு புதிய குழுவைத் தொடங்கினர். அதற்கு “The Blue Rider” என்று பெயர் சூட்டினர். ஃப்ரான்ஸ் மார்க் புரவிகளைக் கருப்பொருளாக்கி ஓவியமாக்குவதில் பெரு விருப்பம் காட்டினார் என்றால்,  வாஸிலி கண்டின்ஸ்கி யை அதன்மேல் அமர்ந்து ஓட்டும் மனிதன் ஈர்த்தான். இருவருக்குமே நீல நிறம் விருப்பமானதாக இருந்தது.வாஸிலி கண்டின்ஸ்கி, கருநீல நிறத்தில் ஆன்மீகம் சார்ந்த அதிர்வுகளை உணர்ந்தார். அது மனிதனிடத்தே என்றும் நிலைக்கும் நிலைக்கான தேடலைத் தோற்றுவிப்பதாகக் கூறினார். அவரது ஓவியம் ஒன்றின் தலைப்பு ‘த ப்ளூ ரைடர்’ (“The Blue Rider”) என்று அமைந்தது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று.

ஆனால், அந்த அமைப்பு வெறும் ஓவியர் குழு மட்டுமோ அல்லது, இயக்கம் மட்டுமோ அல்ல. அந்த சமயத்தில் ஜெர்மனியில் இயங்கிக் கொண்டிருந்த மற்றொரு இயக்கமான த ப்ரிட்ஜ் (“The Bridge”) இன் பாதிப்புதான் அது தோன்றக் காரணம். த ப்ரிட்ஜின் அடிப்படைக் கொள்கை குழுவில் ஓவியர்களை ஒன்றிணைத்து ஓவியங்கள் படைப்பது. ஆனால், ’த ப்ளூ ரைடரி’ன் அணுகுமுறை வேறானது. அது படைப்பாளிகளின் புதிய சிந்தனைகளையும், கருத்தாக்கங்களையும் வரவேற்று, அவற்றை ஓவியம், இசை, அரங்கு மூன்றிலும் ஏற்றி ஒருங்கிணைப்பதில் வெற்றி காண்பதுதான். அம்மூன்றும் ஒன்றுக்கொன்று துணையாகவும், அதனதன் வளர்ச்சிக்கு மற்றதை ஆதாரமாகவும் கொண்டிருந்தன. ஓவியர்கள் தம் படைப்புகளில் ஆன்மா பற்றின தமது கருத்துகளையும் வெளிப்படுத்தினர். அவர்களின் பாதையும், இலக்கும் வெவ்வேறாக இருந்தபோதிலும், ஆன்மீகம் என்னும் பொது அணுகுமுறை அனைவரிடமும் இருந்தது. 1911-12 களில் ஜெர்மனியின் பல நகரங்களில் குழு தன் உறுப்பினர்களின் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியது.

குழுவுக்கு வாஸிலி கண்டின்ஸ்கி’யின் பங்களிப்பு என்பது ஓவியங்கள் (Illustrations) விரவிய ‘கலைக் களஞ்சியம்’ (Almanac) தான். அதில் அன்று ஐரோப்பாவில் புகழ் பெற்றிருந்த ஓவியர்களின் படைப்புகள், அவர்கள் பின் பற்றின புதிய ஓவிய உத்திகள் பற்றின கட்டுரைகள், கிராமியம் சார்ந்ததும் தொன்மையானதுமான படைப்புகள், போன்றவற்றுடன் சிறாரின் ஓவியங்களும் இடம் பெற்றன. ‘கலையில் ஆன்மீகம்’ (‘On The Spiritual in Art’) அவரது மற்றொரு நூல். அது ஓவியத்தில் இசையின் தாக்கத்தை மையப்படுத்துவதாக இருந்தது. அவர் எழுதுவதிலும் நாட்டம் கொண்டவராக இருந்தார். பிரெஞ்ச், ஜெர்மன், ருஷ்ய மொழிகள் மூன்றிலும் ஓவியம் பற்றின கருத்துகள், கவிதைகள், நாடகங்கள் பலவற்றை எழுதினார். ‘மஞ்சள் ஒலி’ (Yellow Sound) என்னும் நாடகம் அவற்றில் புகழ் பெற்றது. ‘ஒலிகள்’ (sounds) என்னும் அவரது வசன கவிதை நூல் 1912இல் பதிப்பிக்கப்பட்டது. அதில் அவரது 56 மரச் செதுக்கல்கள் (Woodcuts) இணைக்கப்பட்டன. 1911 இல் வாஸிலி  கண்டின்ஸ்கியும், குழுவின் வேறுசில ஓவியர்களும் ‘அர்னால்டு ஷொயென்பெர்க் (Arnold Schoenberg) இன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றனர். அது அவர்களைப் பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது. இசை இத்துணை அரூப வடிவம் கொண்டிருக்க முடியுமா என்று வியந்தனர். ஓவியம் பற்றின ஒரு புதிய தளத்தை நோக்கிப் பயணப்படும் எழுச்சி அவர்களுக்கு அங்குதான் தோன்றியது.  வாஸிலி கண்டின்ஸ்கி அதன் தாக்கத்தில் ஒரு ஓவியம் படைத்து அதற்கு ‘இசை நிகழ்ச்சி’ (Concert) என்றும் தலைப்பிட்டார். அதுதான் அவரது முதல் அரூப ஓவியம் எனலாம். இசைக் கலைஞரும் ஓவியக் கலைஞரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தனர். தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களும் செய்து கொண்டனர். ஒருவரின் வளர்ச்சியை மற்றவர் கூர்ந்து நோக்கி ஊக்குவிப்பதும் நிகழ்ந்தது.

வாஸிலி  கண்டின்ஸ்கி தமது நூலில், “கலை தனது ஆழ்நிலை ஒத்தசைவின் (Hormony) வலிமையைக் காண்போரின் உள்ளுணர்வின் மூலம் வெளிப் படுத்துகிறது. வடிவங்கள், வண்ணங்கள், கோடுகள், பல்வித அமைப்புகள் அனைத்துமே ஆழ் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒரு இசை வல்லுனர் தாளத்தையும் ஒலியையும் இணைத்து இசையை உண்டாக்குகிறாரோ, அது போலவே ஓவியர் தமது அனுபவங்களுக்கு உருக்கொடுத்து ஓவியங்களைப் படைக்கிறார்” என்று கூறுகிறார். மேலும், “வண்ணம் என்பது ஆன்மாவை நேரிடையாக பாதிக்கும் தன்மை கொண்டது. வண்ணம் ஒரு சாவி, கண்கள் சுத்தியல் போன்றவை, ஆத்மா பல தந்திகளைக் கொண்ட ஒரு பியானோ” (Colour is a means to exert a direct influence on the soul … Colour is the key. The eye is the hammer. The soul is the piano with many strings) என்றும் குறிப்பிடுகிறார்.

வாஸிலி கண்டின்ஸ்கி, பவுல் க்ளீ ஆகிய இருவருமே இசைக்கும் ஓவியத்துக்கும் உள்ள நெருக்கத்தை உணர்ந்தார்கள். இசை ஏற்படுத்தும் தாக்கம் போல காட்சிக் கலை (Visual Art) மனிதனின் உள்ளுணர்வுகளைத் தொட்டு எழுப்ப வேண்டும் என்று முனைந்தனர். அதன் தொடர்ச்சியாக, மேற்கத்திய மறுமலர்ச்சிக்குப் பின்னர் பெறப்பட்ட எண்ணங்களைத் தாண்டி ஜெர்மனி-ருஷ்ய கிராமியக் கலை, தொன்மையான ஆப்பிரிக்கக் கடல் சார்ந்த கலை வழிகள், சிறார் மற்றும் மனநிலை பிறழ்ந்தவரின் ஓவியங்கள் போன்றவற்றிலும் தமது தேடுதலை விரிவாக்கிக் கொண்டு சென்றனர். அப்போதைய கலைவழி மைய ஓட்டத்தில் இவையெல்லாம் இடம் பெற்றிருக்கவில்லை.

1914 இல் தொடங்கிய முதல் உலகப்போர் இந்தக் குழு கலையக் காரணமாகியது. ஃப்ரான்ஸ் மார்க், ஆகஸ்ட் மக்க (Franz Marc, August Macke) இருவரும் போரில் மாண்டு போனார்கள். வாஸிலி கண்டின்ஸ்கி, மரியன் வான் வொரெஃப்கின், அலெக்ஸெ ஃபான் யாலென்ஸ்கி (Marianne Von Werefkin, Alexej Von Jawlensky) மூவருக்கும் ருஷ்யக் குடியுரிமை இருந்ததால் அவர்கள் ருஷ்யா திரும்ப நேர்ந்தது. 1911-1914 க்கு இடையிலான மூன்று ஆண்டுகளே இயங்கிய அந்தக் குழுவின் படைப்புத் தாக்கம் இன்றளவும் தொடர்கிறது என்பதில் ஐயமில்லை.

[DDET படங்களைக் காண இங்கே அழுத்தவும்]1-wkandinsky2-wkandinsky3-wkandinsky4-kandinsky_orientalisches5-paulklee6-pklee7-pklee8-pklee9-fmarc10-frenz-marc11-fmarc12-august-macke13-amacke14-amacke15-alexej16-alexej[/DDET]
(தொடரும்)