சுற்றம்

சற்று குனிந்தால் கூட மூக்கின் மேல் கொட்டும் நெற்றி நிறைத்த நீறு
காண்டாக்ட் லென்ஸ் பயத்தில் கண்களை சுருக்கும் நான்
இருந்தும் விடாமல் உட்கார்ந்துகொண்டே பூசும் கிருஷ்ணன் கோவில் ஆச்சி
ஓரமாய் புடவை புதிதாய் கட்டிய கூச்சத்துடன் ஏதோ ஒரு அத்தையின் தோளின் பின் எட்டி பார்க்கும் ராஜி
ப்ளாஷ் வெளிச்சத்திற்கும் அசராமல் காமிராவை பார்க்கும் சாத்தூர் சித்தி
முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை
கூடவே பணிஓய்வு பெற்ற ஆசிரியரின் கை பிடித்தபடி சிரித்த முகத்துடன் மாமனார்
(ரிசெப்ஷன் வருத்தங்களுக்கு முன்னர் எடுத்ததாயிருக்கும்)

அப்படி இப்படியென பத்திற்கு மேலேயே வந்துவிட்டது
அன்று இருந்து இன்று இல்லாதவர்களின் எண்ணிக்கை