விவல் அக்கா

கணபதி விஸர்ஜன் கோலாகலம் முடிந்து இன்னும் அலுப்பு தீரவில்லை எனக்கு. அதற்குள் மும்பையில் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிரில் உள்ள திடலில் அலங்காரங்கள் அமர்க்களப்பட்டன. கோவில் போன்றதொரு அலங்கார மண்டபம் திடல் ஓரத்தில்! திடலின் நடு மையமாக சங்கீத ஏற்பாடுகளுக்காகக் கோவில் அமைத்தது நம் கோவில் தெப்பக்குளத்தை நினைவுபடுத்தியது. (என்ன ஹை டெசிபல் டிரம்ஸ், மற்றும் இரண்டு கீ போர்டுகள்-தமிழாக்க நாஞ்சில் நாடன் அய்யாவை அணுக வேண்டும்), என் மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கி, நான் சிறுவனாய் இருந்த அரை கால் சராய் (டிராயர்) நாட்களை நினைவுபடுத்தியது.

அப்போதெல்லாம் நவராத்திரிக்கு எங்கள் அரைகுறை அக்ரஹாரத்து சிறுவர் சிறுமியர் அலங்கரித்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது என்ற பாகுபாடற்று சொல்லியும் பாடியும் சுண்டல் அள்ளிக் கொண்டு வருவோம். இப்படி இருந்த அக்ரஹாரத்தில் ஒரு தென்றல், ஆடவர் அனைவரையும், ஏன் பெண்டிரையும், மௌனமாக, ஆனால் ஒரு ஆழிப் பேரலையின் தீவிரத்துடன் தாக்கியது.

விஜயவல்லி அக்காதான் அது. பூர்விகம் திருநெல்வேலி, தாமிரபரணிக் கரையோர ஒரு கிராமம். தஞ்சாவூர் ஜில்லா மக்களின் பேச்சு வழக்கில் அவர்களின் சமயம், வழக்கம், பிரிவு தெள்ளத் தெளிவாகப் புலப்படும். ஆனால் விஜயவல்லி அக்கா, அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தமிழ் மொழிந்தாள். அவள் வந்த காரணம் இதுதான்: அக்கா எம்ஏ ஆங்கில இலக்கியம் திருச்சியில் முடித்திருந்தாள். அவளுக்கு பகுதி நேர ஆசிரியப்பணி பாமணி சிற்றூரின் ஒரு கரையோர, பதினோறாம் வகுப்பு வரை இருக்கும் எம் பள்ளியில் கிடைத்தது யாம் பெற்ற பாக்கியம்தான்!

விஜயவல்லி அக்காவை கணக்கு அய்யா (?) விவல் என்று சுருக்கி quadratic equation போல் வளைத்துக் கொள்ள முயன்றது தனிக்கதை; அதைப் பிறிதொரு சமயம் பகர்வேன்.

விவல் அக்கா மஞ்சள் கலந்த நிறம். அவளது கரிய பெரிய கண்களும் கன்னக் கதுப்பும் அக்கா ஆளும் தேளும் வயலும் வரப்பும் கொண்ட குடும்பத்தில் வந்ததை பறை சாற்றும். அக்காவின் தலை பின்னலிலிருந்து கால் கொலுசு வரை எல்லாமே மற்றவர்களிலிருந்து மாறுபட்டிருக்கும். அவ்வப்போது வயதான மாமிகளும், பாட்டிகளும், அக்காவைச் சுற்றி பேசிக் கொண்டிருப்பதும் அவர்கள் வீட்டு மாமாக்களும், தாத்தாக்களும் திண்ணையில் ஓரக்கண் வைத்து, முற்றத்தில் செய்தித்தாள் விரித்து படித்துக் கொண்டிருப்பதும் ஒரு சாக்குதான்.

விவல் அக்கா, அப்போதைய அழகுக் குளியல் சோப்பு போல் எங்கள் கிராமத்துக்கு பக்கத்து பெரிய ஊரான திருத்துறைப்பூண்டியிலும் இல்லாத மாற்றத்தைக் கொண்டு வந்ததென்னவோ உண்மை!

பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கு பெறுவது எம் ஊர் கண்ட ஒன்றுதான். ஆனால் விவல் அக்காவோ தானே ஒரு பஜன் பாடலுக்கு வட இந்திய நடன மங்கையர் பாணியில் ஆடை அலங்காரம் செய்து கொண்டு அபிநயம் செய்தது என் உயிர் இருக்கும் வரை என் சோர்வான போதுகளில் அசை போட்டு என்னை உற்சாகம் கொள்ளச் செய்வது. இந்த நடனத்தை அக்கா நவராத்திரி கொலுவுக்கும் ஆடியதுண்டு!

இதை நான் என் தோழர்களிடம், ஏன் என் மனைவி காஞ்சனாவிடமும் பலமுறை கூறியிருக்கிறேன். ஒவ்வொருவரும் இது குறித்து என்னைப் பரிகசித்தது பற்றி தனித்தனி கதை எழுதலாம்.

நானும் பலமுறை சென்னையிலும், கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் மும்பைத் தமிழ் கூறும் வட்டங்களிலும், பல கச்சேரி/ நடனம் கண்டும் கேட்டுமிருக்கிறேன்! இங்கு உங்களுக்கு ஒன்று தெரியப்படுத்துவது இன்றியமையாதது, நான் நல்ல ரசிகன்; ஆனால், சுத்த நிஷாதம், கைசிக நிஷாதம் ஒப்பு வேற்றுமைகளைக் கிஞ்சித்தும் அறியாத பாலகன். ஆனால் அக்காவின் ஒரேயொரு அபிநயம் ‘கரதல தால’ எனும் சொல்லுடன் அக்காவின் வலது இடது கர சங்கமிப்பு, தலைக்கு மேல் சுமார் நூற்று இருபது டிகிரி சாய்மானத்தில் கண்களை உருட்டி கால்களில் சதங்கை கிண்கிணிக்க முழு மேடையையும் ஆக்கிரமித்த அழகு! என்ன அழகு! ஏன் அந்தப் பாடலை நம் கர்நாடகத் தாரகைகளும் ஜாம்பவான்களும் பாடுவதில்லை! ஒருவேளை நாம் ஹிந்துஸ்தானி கச்சேரி கேட்க வேண்டுமோ என்று அவ்வப்போது நினைப்பதுண்டு! ஆம். இதற்கும் ஒரு காரணம் உண்டு. கிராமத்தில் விவல் அக்கா பாடிய ‘சோரி தேரா காவ் படா ப்யாரா என்ற யேசு அண்ணாவின் பாடலை என் முதல் வேலை மேற்கொண்டபோது, சென்னையில் வட இந்திய சகாக்களுடன் ‘ஹோட்டல் சாம்கோ’வில் கேட்க நேர்ந்தது. சுமார் பதித்து வருடங்களுக்குப்பின்.

இன்று காஞ்சனாவின் வற்புறுத்தலில் திருமதி அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரி சென்று திரும்பிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீடு விலே பார்லே லின்ங் ரோடு பக்கம். போக்குவரத்து நெரிசலைத் தப்பிக்க பணத்ரா குடியிருப்பு குறுக்கு வழியில் வந்து கொண்டிருந்தேன். ஓரிடத்தில் கண் கூசும் அளவுக்கு மேடை அலங்காரம்! தண்டியா/காபா நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காரை நிறுத்தி இருவரும் இறங்கி அந்த நடன சுழற்சியில் எங்களை மறந்து மேடையை நோக்கி நடந்தோம். கண் கொள்ளாக் காட்சியாக இருந்தன நடனமும் இசையும்.

ஒர் முக்கால் மணி நேரம் தாண்டி இடைவேளை! நானும் மனைவியும் வண்டியை நோக்கித் திரும்பத் தலைப்பட ஓர் மராட்டி அறிவிப்பு-குமரி மீனா அஜய் தல்வால்காரின் ஒரு நடனத்தைக் கண்டு களியுங்கள்! காஞ்சனா, “என்னங்க, ஜஸ்ட் ஃபை மினிட்ஸ். ஏதோவொரு குழந்தை ஆடப் போறாளாம், பார்க்கலாமே என்றாள். நானும் அரை மனதாகத் தலையாட்டினேன்.

மேடையில் தோன்றியது குழந்தை மீனா அல்ல; பன்னிரெண்டு வயது சிறுமி மீனா தோன்றினாள்; நல்ல களையான முகவெட்டு: சபை வணக்கம் செய்து தான் மேற்கொள்ளப்போகும் நடன அபிநயம் குறித்து பேச ஆரம்பித்தாள்.

“இது ஜெயதேவர் இயற்றிய அஷ்டபதியின் நான்காவது அஷ்டபதி! மேலெழுந்தவாரியாக சிருங்கார ரச காவியம் போல் தோன்றினாலும் இவை வழி வழியாக பஜனை சம்பிரதாயத்தில் ஊரின தேன்பலாச் சுளைகள். ஜெயதேவர் ஒவ்வொரு அஷ்டபதியின் முடிவிலும் கண்ணனிடம் கோபியர் கொண்ட பிரதிபலன் பாரா நிபந்தனையற்ற காதல் (unconditional love) போல் பரமாத்மாவை அடைய முயற்சிக்க வேண்டும் என்று விழைகிறார்; பக்தர்கள் இச்சாதனையின் மூலம் மேன்மை அடையட்டும் என்றும் பகர்கிறார்,” என்று தங்கு தடையற்ற ஆங்கிலத்தில் கூறினாள். பலத்த கரகோஷம் எழ ஒரு சில வினாடிகள் இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள்-

“நான் ஆடப் போகும் பதம் ‘சந்தன சாச்சித’ எனும் பாடல். கண்ணன் கோபிகைகளின் ராஸக்கிரீடையைப் பாடுகிறது. இதை தற்போதைய ஊடகத் தாக்கங்களில் இருந்து விலகியிருந்து நோக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,” என்றாள் அவள்.

கரதல தாள தரள வலயாவலி கலிதகலஸ்வன வம்சே
ராஸ ரஸே ஸஹ ந்ருத்யபரா ஹரிணா யுவதி ப்ரஸஸம்ஸே

ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி காமபி ரமயதி ராமம்
பஸ்யதி ஸஸ்மித சாருதராம் அபராம் அனுகச்சதி வாமாம்

ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் அத்புத கேஸவ கேளி ரஹஸ்யம்
ப்ருந்தாவன விபினே சரிதம் விதனோது ஸுபானி யஸஸ்யம்

(“ஒருத்தி ராஸ மண்டபத்தில் எழிலுடன் பதம் வைத்து நடம் புரிந்து கொண்டு, கண்ணனின் குழலோசைக்கேற்ப கைகளினால் தாளம் போடும்போது அவள் கைகளிலணிந்த வளைகள் கலகலவென்று இசைந்து ஒலியை எழுப்புகின்றன.

“(கண்ணன்) ஒருத்தியை அணைத்துக் கொள்கிறான். மற்றொருத்தியை முத்தமிடுகிறான். மற்றொருத்தியை மகிழ்விக்கிறான். புன்முறுவலிக்கும் மற்றொரு அழகியை வியப்புடன் நோக்குகிறான். மற்றொருத்தியைப் பின் தொடர்ந்து செல்கிறான்.

“பிருந்தாவனத்தில் கண்ணனின் வியக்கத்தக்க லீலைகளை விவரிக்கும் ஸ்ரீ ஜெயதேவர் பாடிய இந்த இனிமையான பாடல் பக்தர்களுக்கு நன்மை யாவையும் பயக்கட்டும்!”)

மீனா கதக் நடன பாணியில் பம்பரமாய்ச் சுற்றியது எனக்குள் ஏதேதோ எண்ண அலைகளை எழுப்பிப் பரவ விட்டது. சுற்றும் நோட்டமிட்டவன் தனியாக அமர்ந்திருக்கும் ஒரு மாதிடம் சென்று, “விவல் அக்கா இல்ல நீங்க? இங்க எப்டிக்கா?” என்றுத் திக்கித் திணறித்தான் போனேன்! விவல் அக்காவை எங்கு, எக்கோலத்தில் பார்த்தாலும் தெரியாமல் போகுமா! அக்கா என் கைகளைப் பற்றி, “அடே, சுந்தர், நீயாலா, இங்ஙன எப்டிடே!” என்றாள். “மீனா என் மக வயத்துப் பேத்திதான்! இங்ஙனதான் நம்ம ஜாகை 1998லிருந்து,” என்றாள் விவல் அக்கா. “இதோ இரு! என் மகளைக் கூப்பிடுகேன்” என்று கீழே கிடந்த நடைபழகியை (வாக்கர்) கைகளினால் அளைந்து துழாவினாள் (அவள் வலது கரமும் கால்களும் பாரிஸ வாயுவினால் தாக்கப்பட்டிருந்தன).