நன்றி ஸ்டீவ்!

அதுவரை எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் யாரென்றே தெரியாது. ஆப்பிள் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பது தெரியும். மேக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஆப்பிளுடையது என்று தெரியாது. மேக்கைப் பற்றி தெரிந்த விஷயம் விண்டோஸில் இந்த பக்கம் இருக்கும் க்ளோஸ் பட்டன் மேக்கில் அந்தப் பக்கம் இருக்கும் அவ்வளவுதான். அப்போது எனக்கு ஐபாட் பற்றிக் கூட தெரியாது.

யாரோ ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பேசிய உரையை எனக்கு தந்தார். கேட்டேன். பிடித்திருந்தது. அதன் பிறகு நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு முன்று பேருடன் பகிர்ந்து கொண்டேன். இணையத்தில் அதிகம் சுற்றத் தொடங்கியபின் அந்த வீடியோ அடிக்கடி கண்ணில் படத் தொடங்கியது. மீண்டும் கேட்டேன். இப்போது முன்னை விடவும் அர்த்தம் புரிந்தது. பிடித்திருந்தது. எப்போதாவது கண்ணில்படும்போது கேட்பேன். அதைவிட அதை படிப்பது இன்னும் பிடித்திருந்தது.

ஜாப்ஸ் சொல்லும் மூன்று கதைகளில் இப்போது முதலாவது மட்டும் மனதில் ஏறியிருந்தது.

Again, you can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future.

“முன்னோக்கிப் பார்த்து வாழ்க்கையின் புள்ளிகளை உங்களால் கோர்க்க முடியாது அவற்றை பின்னோக்கிப் பார்த்தே இணைக்க முடியும். எதிர்காலத்தில் அந்தப் புள்ளிகள் எப்படியாவது இணையும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.”

அவர் செய்ததைப் போல் நானொன்றும் செய்துவிடவில்லை. ஆனால் என்ன படித்தாலும் கற்றுக் கொண்டாலும் என்றைக்காவது பலன் கிடைக்கும், எதுவும் வீணாகிப் போய்விடாது என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தது.

அப்புறம் கல்லூரி படிப்பு முடித்து சில நாட்கள் வெட்டியாக இருந்தபோதும், பின் நிலையில்லாத வேலையில் இருந்தபோதும், அவருடைய பேச்சை அடிக்கடி கேட்டிருக்கிறேன். கொஞ்ச நேரமே நீடிக்கப் போகிறது என்றாலும் அது தரும் ஊக்கம் தேவைப்பட்டது. ஒவ்வொரு வார்த்தையும் எனக்காகவே எழுதப்பட்டது போல் ஒரு உணர்வு.

நிறைய நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன். பல மாதங்களுக்கு பின் ஒரு நிறுவனத்தில் சேர அழைப்பு வந்தது. சேர்ந்தேன். நான் எதிர்பார்த்தது அங்கில்லை. என்ன எதிர்பார்த்தேன் என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்தது அங்கில்லை. அப்போது பயிற்சி காலம். அவர்களது வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. வேறு வழியும் இல்லை.

அங்கே சேர்ந்த இரண்டு வாரத்தில் முன்னர் விண்ணப்பித்திருந்த வேறொரு இடத்திலிருந்து அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வு முடிந்து மூன்று வாரத்தில் அந்த வேலையில் சேரும்படி அழைப்பும் வந்தது. அதற்குள் இந்த நிறுவனத்தில் முதல் மாத சம்பளமும் வாங்கியிருந்தேன். இதை விடவா? அதை விடவா? என்ற குழப்பம்.

இங்கே இன்னமும் பயிற்சிதான் போய்க் கொண்டிருந்தது. இங்கே சம்பளம் அதிகம். பெரிய நிறுவனம். வேலை நிலையானது. ஆனால் வேலை பிடிக்கவில்லை. அப்போது அங்கே பயிற்சி அளிக்க வந்த ஒருவர் சும்மா இருந்திருக்கலாம். ஒரு மதிய வேளையில் ‘உங்களுக்கு ஊக்கமளிக்கிறேன்’ என்று சொல்லி ஸ்டான்ஃபோர்டில் ஜாப்ஸ் ஆற்றிய உரையைப் போட்டு விட்டார்.

You’ve got to find what you love. And that is as true for your work as it is for your lovers. Your work is going to fill a large part of your life, and the only way to be truly satisfied is to do what you believe is great
work. And the only way to do great work is to love what you do. If you haven’t found it yet, keep looking. Don’t settle. As with all matters of the heart, you’ll know when you find it.

”நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். காதலரைக் கண்டுபிடிப்பது போல், உங்கள் வேலைக்கும் இது பொருந்தும். உங்கள் பணி உங்கள் வாழ்வின் பெரும்பகுதியை நிரப்பப் போகிறது, அதில் உண்மையான திருப்தியை அடைவதற்கான ஒரே வழி மேன்மையானது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதைச் செய்வதுதான். மேன்மையானதைச் செய்ய ஒரே வழி உங்களுக்கு பிடித்ததைச் செய்வது. அது என்ன என்று இன்னமும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், தேடிக் கொண்டேயிருங்கள். கண்டுபிடிக்கும் வரை விட்டுவிடாதீர்கள். இதயத் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் போல், காணும்போது அதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்”

அடுத்த வாரம் நான் அந்த நிறுவனத்தில் இல்லை. அந்த நிறுவனத்தை மறக்க முடியாது. நாளையிலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன் என்று ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பினேன். ஏற்றுக்கொண்டு என்னை ரீலிவ் செய்தார்கள். எந்த பிரச்னையும் இல்லை.

புதிய நிறுவனம். புதிய திட்டம். அங்கு போன பின்பு தான் அது என்ன வேலை என்றே தெரிந்தது. பெருமை கொள்ளக் கூடிய வேலை. என் படிப்பிற்கு சம்பந்தமுள்ள வேலை. இப்போது வேறு பிரச்சனைகள் முளைத்து விட்டிருந்தன. என் மனநிலை மோசமாக இருந்தது. அது யாரையும் நம்பத் தயாராயில்லை. இந்த உலகமே வேஷம் என்றது. வேலையில் எனக்கான நிலை என்ன என்பதே எனக்குத் தெரியவில்லை. நான் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லை. பத்து நிமிட சந்திப்பிற்கு ஆறு மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். அதே போல் பல மணி நேர காத்திருப்புகள். வேலை பார்க்கும் இடத்தில் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு போய் படிக்க முடியாது.

இப்போது ஜாப்ஸின் உரையை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டேன். எங்கே போனாலும் ஒரு நோட்பேடும் அதற்குள் இந்த உரையும் இருக்கும். ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை படிப்பது போல் படித்துக் கொண்டிருப்பேன்.  எப்போதெல்லாம் என்னுடைய எண்ணம் சரியான திசையில் இல்லை என்று உணர்ந்தேனோ அப்போதெல்லாம் அந்த தாளை எடுத்து படிக்கத் தொடங்கிவிடுவேன். மனம் நிலைப்படும்.

If you live each day as if it was your last, someday you’ll most certainly be right.

“இன்றுதான் உங்களுடைய கடைசி நாள் என்பதுபோல் வாழ்ந்தால், கண்டிப்பாக ஒருநாள் அது மிகச் சரியானதாக இருக்கும்”

Remembering that I’ll be dead soon is the most important tool I’ve ever encountered to help me make the big choices in life. Because almost everything — all external expectations, all pride, all fear of embarrassment or failure – these things just fall away in the face of death, leaving only what is truly important. Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. You are already naked. There is no reason not to follow your heart.

“நான் விரைவில் இறக்கப் போகிறேன் என்ற எண்ணமே என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கியத் தேர்வுகளுக்கு கருவியாய் இருந்து உதவியிருக்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகள், பெருமைகள், அவமானம் அல்லது தோல்வி பயம் இப்படி எல்லாமும் மரணத்தில் முன் விலகிவிடும், உண்மையிலேயே எது முக்கியமோ அது மட்டுமே எஞ்சி நிற்கும். நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்ற உணர்வை உங்கள் நினைவில் வைத்திருப்பதே இழப்பதற்கு எதுவும் இருக்கிறது என்ற எண்ணத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். இனி மறைக்க உங்களிடம் எதுவும் இல்லை. உங்கள் இதயத்தைத் தொடராமலிருக்கக் காரணமில்லை.”

Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma — which is living with the results of other people’s thinking. Don’t let the noise of others’ opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become. Everything else is secondary.

“உங்களுடைய நேரத்திற்கு எல்லை உண்டு,  எனவே மற்றொருவருடைய வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்காதீர்கள். சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்- அது அடுத்தவர்களின் சிந்தனையின் விளைவுகளோடு நடத்தும் வாழ்க்கை. மற்றவர்களின் அபிப்ராய இரைச்சல்கள் உங்கள் உள்ளத்தின் குரலை ஊமையாக்க அனுமதிக்காதீர்கள். அனைத்திலும்முக்கியமாக, உங்கள் இதயத்தையும் அதன் உள்ளுணர்வையும் பின்பற்றும் துணிச்சல் கொண்டவர்களாக இருங்கள். நீங்கள் உண்மையில் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை அவை எவ்வாறோ அறிந்திருக்கும். மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.”

இன்றைக்கு என்னுடைய நிலைமை ரொம்பவே மேம்பட்டிருக்கிறது. போகவேண்டிய தூரம் இன்னமும் நிறைய இருக்கிறது. ஆனால் அந்த தாள் இன்றும் என்னுடைய பையிலோ மேஜையிலோ எப்போதும் கைக்கெட்டும் துரத்தில் இருக்கிறது. எப்போதும் இருக்கும்.

ஸ்டீவ் எனக்கு விட்டுப் போயிருப்பது ஒரு பெரிய நம்பிக்கையை.

Stay Hungry. Stay Foolish.

நன்றி ஸ்டீவ் !