நகரம் – மூன்று கவிதைகள்

வா..

அகலத் திறந்த நகர வாயினால்,
உண்ணப்படுவதன் சுவையறிவாயா?
இல்லையெனில் வந்து ஒட்டிக்கொள்,
உன் வாசலில் காத்துக் கிடக்கும்
நாவினில்.

எங்கே ஓடுகிறாய்-
இறுக இறுக இந்த சாலைப்பாம்பு
சுற்றிப்பிழியும் அந்த மலை நோக்கியா?
அதன் பின்?
மறவாதே
உன் இன்பங்கள் கீழிருக்கின்றன..
மறந்து விடாதே.. மிகவும் கீழே.

எங்கே தேடுகிறாய். உனக்கு என்ன வேண்டுமென்பதை?
விடுமுறை நாட்களை உனக்களிக்கும் நகரம்.
வண்ணப் பேருந்தின் ஊஞ்சலில் ஏற்றி
ஆட்டிவிடும் உன்னை, நீ தேடுவன நோக்கி.

இயற்கையின் பிடியை விடு.
சென்றுவரும் திசையறியா
சக்கரத்தை பற்று.
தளர்ந்த ஒரு நாள், இங்கிருந்து
புல்தேடி பயணம் போவோம்,
படுத்துருண்டு புகைப்படம் எடுத்து,
இருண்ட நம் அறைகளில்
எப்போதும் பார்த்துக்கிடப்போம்
பச்சையை.

தெரிந்து கொள்,
கானகம் – அது சொற்களாக மாறும் தருணம்,
நாமே அதை கவிதை புனைவோம்,
என்ன தயக்கம்,
வீட்டுப் பூனைக்கு
காட்டிலென்ன திருடக் கிடைத்து விடும்?
வா சீக்கிரம், வந்துவிடு..

நிசப்தம் தேடி

தலை நீக்கப்பட்ட
ஒரு விலங்கின் தசையாடும் சப்தம்
அதை பார்க்கும்போது மட்டுமே கேட்கக் கிடைக்கிறது.

எதை நம்பி கூட்டை, இப்படி விட்டுச் செல்கிறது பறவை?
யாரைக் கூப்பிட இந்த மரம், இப்படி கட்டிடம் மேல் உரசுகிறது?

ரொம்பவும் உறுத்தலாக ஆகும் முன்
ஒரு நிமிடம் கிடைத்தாலும்
இந்த நகரத்தை கழற்றி,
ஒரு உதறு உதறிடுவேன்.
காகங்களும்
பழக்கப்பட்ட புறாக்களும்
மிச்சமிருக்கும் குருவிகளும்
பறந்தோடிடட்டும் முடிந்தால்
அல்லது,
உதிர்ந்து போகிறேன்
ஒரு சிறிய தூசியைபோல் நான்.

பிடி

அந்த பறவையின் பிடியிலிருந்து
இந்த நகரம் நழுவியபோது,
இது தலைகீழாய் சரிந்து வீழ்ந்தது.
நகரமும், நாடும்,
பின் உலகமும்
நழுவுவதை கண்ட பறவை
பாய்ந்து வந்து பிடித்துக் கொண்டது
நகரை.