காற்றிசைச்சரம்

புதுவரவு

பிறந்தநாள் பரிசாய் வந்த
காற்றிசைச்சரம் சாளரச் சட்டத்தில் அசைகிறது.
தழுவும் காற்றோடு குலுங்கும்
மணிகளின் மென்னொலிகள்
சிலநேரம் களிப்பூட்டுவதாகவும்
சிலநேரம் கிலியூட்டுவதாகவும் இருக்கின்றன.
நிகழ்கணத்தில் வாழ்ந்திருக்கும் சுவர்கடிகாரத்திற்கும்
சுயமுகமற்ற நிலைகண்ணாடிக்கும்
இந்தப் புதுவரவு பழக சில நாட்களாகும்.

இப்போதெல்லாம்
உச்சுக்கொட்டி கொஞ்சும் கடிகாரத்திற்கும்
சிணுங்கும் காற்றிசைச்சரத்திற்குமான
சில்மிஷ சம்பாஷணைகளைக் கேட்காமல்
உறக்கம் வருவதில்லை.
மௌன சாட்சியாய் விழித்திருக்கிறது
ஓர் ஆளுயரக்கண்ணாடி மட்டும்.

காற்று வீசாத போது

எதையாவது
அரற்றிக்கொண்டே இருக்கிறார்கள்
பேச்சற்று போகும் பொழுதுகளில்
உள்ளேயும் இரைகிறது,
மொழி விடுத்து
அர்த்தம் தவிர்த்து
கேட்கையில்
நனைக்கும் மழை.
காற்று வீசாத போது
ஆடாமல் அசையாமல்
ஓசையின்றி
உறைந்து கிடக்கும்
ஓர் காற்றிசைச்சரம்.