ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருதுகளின் ஒரு பகுதியாக பிற மொழி படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கும் விருது வழங்குகிறார்கள். ஆங்கில மொழி அல்லாத, அதிக அளவில் ஆங்கில வசனங்கள் இல்லாத, ஹாலிவுட்டுக்கு வெளியே இருக்கும் தேசங்களின் திரைப்படங்கள் ஆஸ்காருக்குப் பரிசீலிக்கப்படுகின்றன. ,அதிக அளவில் ஆங்கில வசனக் கலப்பு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியே போதும், பெரும்பாலான தமிழ் படங்கள் தள்ளுபடியாகிவிடும்! ஆஸ்காருக்கு அனுப்பப்படும் படங்கள் தழுவலாக இல்லாத ஒரிஜினல் சினிமாவாக இருக்க வேண்டும் என்ற விதியை நல்ல வேளையாக அகடமி வலியுறுத்துவதில்லை. தெய்வத் திருமகள், எந்திரன் போன்ற படங்களையும் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் துணிச்சல் நமக்கு இருக்கிறது.

இந்தியாவின் பல மொழிகளில் இருந்து ஒரே ஒரு திரைப்படத்தைசத் தேர்ந்தெடுத்து அதை சிறந்த இந்திய மொழித் திரைப்படமாகத் ஆஸ்காரின் பரீசீலனைக்கு நாம் அனுப்பி வைக்கிறோம். இதுபோல் பல்வேறு தேசங்களிலிருந்து வரும் திரைப்படங்களை அகடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் தேர்வுக் குழுவினர் பலரும் பார்த்து, அவற்றில் ஐந்து படங்களை மட்டும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்கின்றனர். அவை அனைத்தையும் ஆஸ்காரின் அத்தனை உறுப்பினர்களும் கண்டு அவற்றில் ஒரு சினிமாவை சிறந்த உலக மொழிப் படமாகத் தேர்வு செய்கிறார்கள். இந்த விருது பிற வெளிநாட்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களுக்கான விருதாக இருப்பினும் பெரும்பாலான வருடங்களில் இந்த விருதை ஐரோப்பிய நாடுகளின் சினிமாக்களில் ஒன்றே வென்று வந்திருக்கிறது. அபூர்வமாக கொரிய, ஜப்பானிய, சீன திரைப்படங்களுக்குக் கிட்டுவதும் உண்டு. இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சினிமாக்கள் இந்த விருதைப் பெற தவறினால், அது நல்ல சினிமாவை அடையாளம் கண்டு அனுப்பாத தேர்வுக் குழுவினரது குற்றம் மட்டுமே, ஆஸ்கார் விருதுக் குழுவைக் குறை சொல்ல முடியாது.

சத்யஜித் ரேக்களும், அடூர் கோபாலகிருஷ்ணன்களும், பத்மராஜன்களும் நிறைந்தது இந்திய சினிமா. ஆனால் நமது தேர்வுக் குழுக்கள் இதுவரை லகான், ஜீன்ஸ், ரங் தே பசந்த்,தேவதாஸ் போன்ற மசாலாப் படங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் உணர்ச்சிகரமாக நடித்த தெய்வ மகன், கமலஹாசனின் குருதிப் புனல் மற்றும் ஹே ராம், ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற தமிழ் சினிமாக்கள் இந்த உலகப் போட்டிக்குச் சென்றிருக்கின்றன. இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் இந்த சினிமாக்கள் பிற உலக மொழிப் படங்களுடன் போட்டியிட முடியாமல் ஆரம்ப நிலையிலேயே அடிபட்டுப் போவது ஆச்சரியமில்லை.. இத்திரைப்படங்கள் அவற்றின் தயாரிப்பாளர்களின் செல்வாக்கால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. லகான் இறுதிச் சுற்றை அடைந்தாலும்கூட அது எந்த வகையிலும் சிறப்பான இந்திய சினிமாக்களின் பிரதிநிதி அல்ல. ஆடல் பாடல்கள் நிறைந்த, யதார்த்ததிற்கு ஒவ்வாத ஒரு சினிமா மட்டுமே.

இதில் ஒரு விந்தை என்னவென்றால், உலகெங்கும் எத்தனையோ உயர்ந்த விருதுகளை மலையாளத் திரைப்படங்கள் பெற்றிருக்கின்றன. ஆனால் அவற்றில் எந்தவொரு படமும் இதுவரை இந்திய ஆஸ்கார் தேர்வுக் குழுவினரால் உலக அளவில் பொருட்படுத்தத்தக்கதாகக் காணப்பட்டதேயில்லை. ஆஸ்காருக்காக இந்திய மொழி திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தேர்வுக் குழுவினர், .சாகித்ய அகதமி போன்ற இலக்கியத் தேர்வுக் குழுக்களுக்கு சற்றும் சளைத்தவர்கள அல்லர் இருந்தாலும், எப்போதாவது ஒரு முறை அவர்கள் ஒரு நல்ல இந்திய சினிமாவை தேர்ந்தெடுத்து அனுப்பி விடுவது உண்டு.. 2011ம் ஆண்டு அத்தகைய அபூர்வமான ஆண்டாக அமைந்து விட்டது. அவ்வளவாக அறிமுகமாகியிராத ஒரு சாதாரண நடிகர் நடித்த, ஒரு இளம் இயக்குனரின் முதல் திரைப்படம் இன்று இந்தியாவின் சிறந்த படமாக அடையாளம் காணப்பட்டு சினிமா ஆர்வலர்களின் ஆதர்ச போட்டிகளில் ஒன்றாகிய ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது அது பிற உலக மொழிப் படங்களுடன் ஒப்பிடப்பட்டு இறுதிச் சுற்றுக்குச் செல்லலாம், செல்லாமலும் விடுபடலாம். ஆனால், இந்திய தேர்வுக் குழு ஒரு சரியான திரைப்படத்தை அடையாளம் கண்டுகொண்டு அதை ஆஸ்காருக்கு அனுப்பி வைத்திருப்பதை நாம் இந்த ஆண்டின் ஆச்சரியங்களில் ஒன்றாகக் கருதலாம், தன் நல்ல சினிமாக்களின் பிரதி ஒன்றை ஆஸ்காருக்கு அனுப்பி அது ஒரு நல்ல துவக்கத்தை முன்னெடுத்திருக்கிறது என்று நாம் ஆறுதல் அடையலாம்.

தமிழ் தன் மாபெரும் மசாலா சினிமாக்களையும்கூட பிறமொழி சினிமாக்களில் இருந்து தழுவல்களாகத் திரையாக்கிவிட்டு அதை எந்தவித தயக்கமும் இன்றி ஆஸ்காருக்கு அனுப்ப ஒவ்வொரு வருடமும் முயன்று கொண்டேயிருக்கிறது. நம் மகத்தான படைப்புகள் உலக அளவில் அறியப்படாமல் போவது குறித்து அங்கலாய்க்கிறோம். இந்த வருடமும் அந்தக் கேலிக் கூத்து அரங்கேறியிருக்கிறது. எத்தனை சத்தம் போட்டாலும் தமிழ் திரைப்படங்களைப் பற்றி பேச பெரிதாக ஒன்றுமில்லை. ஒன்று அப்பட்டமான காப்பியாக இருக்கும். அல்லது வெறும் தொழில் நுட்பமாக மட்டுமே, அதுவும் ஹாலிவுட்டில் அடித்துத் துவைக்கப்பட்டு பல்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டுவிட்ட காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும். அசலான திறமையோ, இந்தியாவின் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை பிரதிபலிக்கும் கதைகளோ இருப்பதில்லை. இவற்றில் ஓரளவுக்கு பொருட்படுத்தப்பட்டிருக்கக் கூடிய படம் என்றால் அது ”ஆடுகளம்” என்ற திரைப்படமாக மட்டுமே இருக்கும். அதிலும்கூட, அமோரஸ் பெரோஸ் என்ற ஸ்பானிஷ் மொழிப் படத்தின் தாக்கம் ஆடுகளத்தில் இருக்கிறது என்று நேர்மையாக அதன் இயக்குனர் தனது நன்றிகளில் ஒப்புக் கொண்டிருக்கிறார். அருமையான பாத்திரப் படைப்பும், கச்சிதமான திரைக்கதையும் இருந்தாலும்கூட அது வழக்கமான தமிழ் படச் சூத்திரங்களின் ஒரு நீட்சியே. சினிமாவுக்காக சேர்க்கப்பட்ட பொருந்தாக் காதலும், நடனங்களும், அதீத வன்முறைகளும், அமோரஸ் பெரோஸின் தாக்கத்தில் (சில காட்சிகள் உட்பட) வைக்கப்பட்டிருக்கும் சேவல் சண்டைகளும் அந்தப் படத்தை இயல்பான ஒரு படமாக, தமிழ் நாட்டுச் சூழலை யதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு படமாக இருக்க விடவில்லை ஆடுகளம் பிற தரமான உலகப் படங்களுடன் நிச்சயமாகப் போட்டியிட்டிருக்க முடியாது.

ஐம்பதுகளின் நீலக் குயில், அறுபதுகளின் செம்மீன் துவங்கி இன்று வரை கேரள மண்ணின் இயல்பான மனிதர்களையும், அவர்களது அகவயமான பிரச்சினைகளையும், சமூகச் சிக்கல்களையும் சினிமா மூலமாக காட்சிப்படுத்தி வந்த மலையாள சினிமா உலகில் 90களுக்குப் பிறகு ஒரு பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தொய்வில் இருந்து மலையாள சினிமா மீட்சி காணும் என்ற நம்பிக்கை ஒளி சமீப காலத்திய இளம் இயக்குனர்களின் சில படங்களை நோக்கும் பொழுது தெரிகிறது. அத்தகைய நம்பிக்கையளிக்கும் படங்களில் ஒன்று, இயக்குனர் சலீம் அகமதின் முதல் திரைப்படமான அதாமிண்டே மகன் அபு.. இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்து சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்ணணி இசை ஆகிய பிரிவுகளில் நான்கு கேரள மாநில அரசின் சினிமா விருதுகளையும், நான்கு தேசீய அளவிலான சினிமா விருதுகளையும் பெற்றுள்ளது.

எண்பதுகளின் சினிமாக்களும் இயக்குனர்களும், கதாசிரியர்களும் மலையாள சினிமாவுக்கு ஒரு பொற்காலத்தை அளித்தனர். எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன், ஸ்ரீநிவாசன்,அடூர், லோகித தாஸ், கே ஜி ஜார்ஜ்,சிபிமலையல், சத்யன், ஜெயராஜ், ஹரிஹரன், சசி போன்ற அற்புதமான கதாசிரியர்களும், இயக்குனர்களும் மோகன்லால், மம்மூட்டி, பரத் கோபி போன்ற பெரிய நடிகர்களும், நெடுமுடி வேணு, திலகன், ஜகதி ஸ்ரீகுமார், ஒடுவில், முரளி, இன்னசண்ட் போன்ற நடுத்தர நடிகர்களும் மலையாள சினிமாக்களை இந்தியாவில் உருவாகும் தரமான திரைப்படங்களின் உச்சத்திற்குக் கொண்டு சென்றனர். இவர்களில் பலரும் இன்று முப்பதாண்டுகளுக்கும் மேலாக சகல விதமான பாத்திரங்களிலும் நடித்து, சகல விதமான பரிசோதனைகளையும் செய்து களைத்து பெரும் நிதியில் உருவாகும் மசாலா தமிழ் படங்களுடனும், புதிய தலைமுறைகளின் ரசனை வேறுபாடுகளுடனும் போட்டியிட முடியாமல் ஓய்ந்து போன வேளை இது.

ஆனால் இன்றைய மலையாளிகள் மென்பொருள் தலைமுறையினர். அரசியல் ஈடுபாடுகளிலிருந்தும் போராட்டக் குணங்களிலிருந்தும் விலகி வளமான எதிர்காலத்தைத் தேடி ஓடுகிறார்கள். நகர்ப்புறப் பண்பாட்டிலும் நுகர் நாகரீகத்திலும் வேரூன்றத் தவிக்கும் அவசர யுகத்தினர். இவர்களுக்கான, இவர்கள் பெரிதும் விரும்பும் விறுவிறுப்பும், வேகமும், ஆடல் பாடல்களும் கூடிய சினிமாக்களே பெரிதும் மலையாள சினிமா உலகை ஆக்ரமித்துள்ளன. தமிழின் மிகை உணர்ச்சியுடன் கூடிய மசாலா, காதல் வன்முறை சார்ந்த படங்கள் மலையாளிகளின் ரசனையுணர்வுகளையும் பாதித்துள்ளன.
இருந்தாலும் மலையாள மண்ணின் ரசனையின் பாரம்பரியத்துடன் கூடிய சினிமாக்களுக்கு இன்றும் கேரளத்தில் ஒரு கணிசமான வரவேற்பு இருந்தே வருகிறது. அவர்களது ஐம்பந்தாண்டு கால ரசனையுணர்வு மங்காமல் அவர்களது இயல்பான கலையுணர்வு அதாமிண்டே மகன் அபு. அபு போன்ற சினிமாக்களில் மீண்டும் மீண்டும் தலை தூக்குகின்றன. அதீத நாடகத் தன்மையில்லாத, இயல்பான, யதார்த்தத்துடன் கூடிய, மிகையில்லாத இயல்பு நடிப்பும் அவர்களது அன்றாட வாழ்க்கையைப் பற்றியும், மானுட உறவுகளின் சிக்கல்களையும் பற்றியும் பேசும் படங்கள் இன்றும் கூட ஆண்டுக்கு ஒன்றாவதாவது எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்று விடுகின்றது.. சென்ற ஆண்டுகளில் வெளியான கேரளா கஃபே, பாலேரி மாணிக்யம், ஒரே கடல், சூஃபி பறஞ்ச கதா, குட்டி ஷ்ரங் போன்ற சினிமாக்கள் மலையாளத்தின் 80களின் சினிமாக்களின் தொடர்ச்சியாக அமைந்தன.

மலையாளப் படங்களுக்கு பார்வையாளர்கள் குறைவு அதன் காரணமாக அது தன் சினிமாவுக்கு ஒதுக்கக்கூடிய நிதியும் குறைவு. குறைந்த நிதி அளவின் காரணமாக பிரமாண்டங்களிலும், பெரு நடிகர்களின் கவர்ச்சியிலும் முதலீடு செய்ய முடிவதில்லை. இதுவும் மலையாள சினிமா இன்றளவும் நல்ல சினிமாக்களை அளித்து வரக் காரணமாக இருககிறது. குறைந்த பொருட் செலவு என்ற நிர்ப்பந்தத்தால், வேறு வழியின்றி நல்ல கதையையும், நடிப்பையும், இயக்கத்தையும் நம்பி படம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மலையாளத் திரை உலகினர் உள்ளனர். அதன் விளைவாக ஆண்டுக்கு ஒரு சில நல்ல சினிமாக்களாவது மலையாளத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இன்று மலையாளத்தின் இளம் இயக்குனர்களான ஷ்யாம் பிரசாத், ஷங்கர் ராமகிருஷ்ணன், அன்வர் ரஷீத், லால் ஜோஸ், ப்ளஸி ஆகியவர்களும் சலீம் குமார் போன்ற நடுவாந்திர நடிகர்களும் மலையாள சினிமா உலகில் மற்றுமொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்களில் ஒரு புது வரவு இயக்குனர் சலீம் அஹமது.. டிராவல் ஏஜென்ஸி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, சினிமா ஆர்வமுள்ள சலீம் தனது முதல் படத்திலேயே தனது டிராவல் ஏஜெண்ட் வேலையின் அனுபவத்தில் தான் அவதானித்த ஒரு பயணியின் கதையைப் படமாக்கி விருதுகளைக் குவித்துள்ளார். தன் முதல் முயற்சியான ஆதாமிண்ட மகன் அபுவிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தமிழில் ஒரு பெரும் பிரச்சினை நடிகர்கள் பாத்திரங்களாக மாறாமல் அவர்களாகவே திரையில் உறைந்து நிற்பதுதான். ஒரே விதமான நடிப்பையே தங்கள் ஒட்டு மொத்த திரை வாழ்க்கையிலும் அளித்து வருகிறார்கள். அவர்களது பிருமாண்டமான பிம்பங்களில் இருந்து இறங்கி சாதாரண பாத்திரமாக மாறுவதில்லை. தமிழ் போலல்லாமல் மலையாள சினிமாக்களின் சாதாரண நடிகர்களிடம் கூட இந்த வெர்சடாலிட்டி எனப்படும் அபாரமான பன்முக நடிப்புத் திறமை நிறைந்துள்ளதைக் காணலாம். மலையாள சினிமாக்களின் பெரும் ஹீரோ நடிகர்களைப் போலவே பன்முகத் திறமையும் சிறப்பான நடிப்பாற்றலும் உடைய இவ்வகை நடுவாந்திர நடிகர்கள் ஏராளமாக உண்டு. ஜகதி ஸ்ரீகுமார், இன்னசண்ட், ஒடுவில் உண்ணிக் கிருஷ்ணன், மம்மு கோயா போல் நகைச்சுவைக்காக மட்டும் அறியப் பட்ட நடிகர்களும் சரி, திலகன், நெடுமுடி வேணு, முரளி போன்ற பண்பட்ட நடிகர்களும் சரி தம்மளவில் அற்புதமான நடிப்புத் திறமையுடைய நடிகர்களே. அப்படிக் குறைவாக அறியப்பட்ட நடிகர்களும்கூட தேசீய அளவில் சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்றவர்கள். மலையாள சினிமாவின் ஒவ்வொரு நடுவாந்திர நடிகரும் அதற்கான திறமையும், ஆற்றலும் உடையவர்களே. ஜகதி ஸ்ரீகுமார் போன்ற நகைச்சுவை நடிகர்களின் திறன் அபாரமானவை. எண்பதுகளின் பெரும் வெற்றி பெற்ற சினிமாக்களில் இவர்களது பங்களிப்பு மிகப் பெரிது.

அத்தகைய சிறப்பான நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராகவே பல படங்களில் தோன்றிருந்தும் தன் அபாரமான பன்முக நடிப்புத் திறனால் விருதுகளைப் பெற்றிருக்கும் சலீம் குமார். ஒரு சாதாரண நகைச்சுவை நடிகராக, ஒரு மிமிக்ரி கலைஞராக 2000களில் நடிக்க வந்த சலீம் குமார் தன் முன்னோடிகளின் உயரத்தைத் தொட்டு இதுவரை இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பத்தாண்டு கால நடிப்பில் இதுவரை இரண்டு மிகச் சிறந்த படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமடையவுள்ளார். ஒரு இந்துவான சலீம் குமார் தனக்கு விருது பெற்றுத் தந்த இரு படங்களில் ஒன்றில் பக்தியுள்ள கிறிஸ்துவராகவும் மற்றொன்றில் அர்ப்பணிப்புள்ள இஸ்லாமியராகவும் நடித்துள்ளது தற்செயலான ஒரு நிகழ்வே. சலீம் குமார் அச்சன் உறங்காத வீடு (http://www.tamilhindu.com/2009/10/achchanurangatha_veedu_review/) என்ற சினிமாவில் கடத்தப்பட்டு சீரழிக்கப்படும் பள்ளி மாணவியின் தந்தையாக மிகப் பிரமாதமாக நடித்து அந்த ஆண்டுகான சிறந்த நடிகருக்கான விருதை மோகன்லாலுடன் பகிர்ந்து கொண்டவர். கேரள கஃபே என்ற பத்து படங்களின் தொகுப்பில் ஒன்றான “ப்ரிட்ஜ்” என்ற குறும்படத்தில் சலீம் குமாரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்ட, அனைவரையும் கவர்ந்த நடிப்பாகும். நல்ல கதையும், பாத்திரமும் கிடைத்தால் இன்று நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் பல மலையாள நடிகர்கள் இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெறக் கூடியவர்களே.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்காருக்கும் இன்னும் பல உலக அளவிலான திரைப்படப் போட்டிகளிலும் கலந்து கொள்ளக் கூடிய தகுதி கொண்ட சினிமாக்கள் மலையாளத்தில் உருவாகின்றன. இருந்தும் இவ, பல்வேறு அரசியல்களைத் தாண்டி வெளியுலக கவனிப்பைப் பெறுவதில்லை. இந்த ஆண்டு திரைப்படத் தேர்வுக் குழு நடுவர்களில்மலையாளிகள் எவரும் இல்லாதபோதும்கூட ஆதாமிண்ட மகன் அபு, ஆஸ்கார் விருது பெறத்தகுந்த ஒரு சினிமாவாக அடையாளம் காணப்பட்டு போலித்தனமான, பிருமாண்ட மசாலா சினிமாக்களைத் தாண்டி இந்தியாவின் சிறந்த படமாக ஆஸ்கார் விருதுக்குச் செல்கிறது.. இந்தப் படம் ஆஸ்காரின் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுமானால் அது உலக அளவில் மலையாளப் படங்களுக்கு உரிய ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். அரவிந்தன், அடூர், ஷாஜி கைலாஷ், ராமு கரியத், பத்மராஜன், ஹரிஹரன், ஜெயராஜ், கே ஜி ஜார்ஜ், எம் டி போன்ற இயக்குனர்களின் சினிமாக்கள் உலக அளவில் நல்ல சினிமா விரும்பிகளின் கவனிப்பையும் வரவேற்பையும் பெறக்கூடிய நிலை தோன்றும்.

ஆதாமிண்டே மகன் அபு

அபு ஒரு மிக எளிமையான நேரடியான கதை. வாழ்வின் பின்மாலைப் பொழுதைத் தொட்டுவிட்ட ஒரு முஸ்லிம் தம்பதியினரின் கதை இது. தங்கள் ஒரே மகனாலும் கைவிடப்பட்ட, ஆதரவற்ற அந்த முஸ்லிம் தம்பதியர் இஸ்லாமிய பக்தி மார்க்கத்தில் ஊறியவர்கள். தங்களுடைய ஒரே லட்சியமான ஹஜ் யாத்திரையை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போவதை மட்டும் சொல்லும் மிக எளிய கதை. சிடுக்குகளும், சிக்கல்களும், திருப்பங்களும், அதீதமான நாடகீய உச்சங்களும் இல்லாத, ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்களை மட்டும் சொல்லும் ஒரு சினிமா. கடும் நகரமயமாக்கலுக்கும், நவீனப்படுத்தலும் உள்ளாகும் இன்றைய ஐ டி உலகில் காலவதியாகிப்போன நேற்றைய தொழில்களும், வியாபாரங்களும், அவற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர்களும் எத்தனை! எவ்வளாவு இந்த கோடிக்கணக்கான ஏழை சுய தொழில் சார்ந்திருப்போர்களில் ஒருவர்தான் அபு.

கத்திகளுக்கும் அருவாள் மனைகளுக்கும் சாணை தீட்டுதல், குடை ரிப்பேர் செய்தல், பூட்டு ரிப்பேர், சாம்பிராணி புகை வீசுதல், அத்தர் புனுகு போன்ற வாசனை திரவியங்கள் விற்றல் போன்ற எண்ணற்ற சுய தொழில்களில் பெரும்பாலும் ஏழை முஸ்லீம்கள் ஈடுபட்டு வந்தது ஒரு காலம். அவர்களைக் காலம் கடந்து போய்விட்ட போதும், இது போன்ற சுய தொழிகளுக்கான தேவையும் நுகர்வோரும் இல்லாமல் போய் விட்டபோதும், வேறு வழி கிடைக்காத கை வண்டிக்காரர்களை நாம் சாலைகளின் விளிம்புகளிலும், வீட்டு வாசல்களிலும் எதிர் கொண்டே செல்கிறோம். அவர்களில் ஒருவர் அபு. மசூதிகளின் வாசல்களில் அத்தர் போன்ற வாசனை திரவியங்களும் எளிய பாரம்பரிய மருந்துகளும் விற்கும் சிறு வியாபாரி அபு. திருமணத்திற்குப் பின் ஒரே மகனும் தன்னை அனாதரவாக விட்டு விட்டுப் போய்விட, சொற்ப வருமானத்தில் கடும் சிக்கனம் பிடித்து சிறுகச் சிறுகச் சேமித்து தன் வாழ்நாளின் ஒரே கனவான ஹஜ் பயணத்திற்காக காத்திருக்கும் எளிய ஏழை முஸ்லீம் அபு, சரியாகச் சாப்பிடாமல் கூட பணம் சேர்க்கிறார். யாத்திரைக்குத் தேவையான மீதப் பணத்தைத் தங்களிடம் இருக்கும் ஒற்றைப் பலா மரமும், பசுவும் பெற்றுத் தரும் என்று நம்பியிருக்கும் இந்த தம்பதியினரின் கனவு இறுதியில் சிதைந்து தீரா வெறுமையில் கரைந்து வருத்தும் முடிவற்ற ஏக்கத்தில் ஓய்கிறது.

அபுவின் சிக்கனங்கள், ஏக்கங்கள், லட்சியம், அபுவின் கிராமத்தில் வாழும் மனிதர்கள், பயண ஏற்பாட்டுக்கு உதவும் டிராவல் ஏஜென்ஸியினர் போன்று அபுவைச் சுற்றி வரும் மனிதர்களும் அவர்கள் வாழும் சூழல்களும் கதையை நிறைக்கின்றன.. படத்தின் ஆரம்பத்திலேயே முடிவையும் ஊகிக்க முடிவதால் திருப்பங்களுக்கான எதிர்பார்ப்பைக் கோராத கதை. அன்பும் மனித நேயமும் நிரம்பிய பாத்திரங்கள் மட்டுமே கதை மாந்தர். எதிர்மறை சம்பவங்களையும், பாத்திரங்களையும், எந்தவிதமான மத அரசியல்களையும் அணுக விடாமல் முழுக்க முழுக்க ஒரு நற்செய்தி படமாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. அபு. அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் சிக்கல்கள், அவர் வாழும் பகுதியின் அரசியல்கள் போன்ற எவற்றையும் தொடாமல் வெறும் அபுவின் முனைப்புகளை மட்டுமே சொல்லிச் செல்கிறது கதை. எனினும் ஒன்றரை மணி நேரமும் படம் தொய்வில்லாமல் இறுக்கமாகத் தொடர்கிறது. மலையாள மலப்புர முஸ்லீம்களின் வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரத்தையும்கூட இந்தப் படம் அணுகவில்லை. கச்சிதமான எளிய கதை, அனைத்து பாத்திரங்களின் அருமையான வெகு இயல்பு நடிப்பு, உறுத்தாத பின்ணணி இசையும் படப்பிடிப்பும் இவற்றுடன் சலீம் குமாரின் நெகிழ்வான மென் நடிப்புமே இந்தப் படத்தை மாநில, தேசீய உலக அளவில் விருதுக்குரிய படமாகக் கொண்டு செல்கின்றன.

43 வயதே ஆகும் சலீம் குமார் 70களின் இறுதியில் இருக்கும் முதியவருக்கான உடல் மொழியுடன் படம் முழுக்க நடித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் ஒரு சிறு மிகை நடிப்போ, அநாவசியமான புருவச் சுழிப்போ, அதீதமான சோகமோ, மிகையான நாடகத்தன்மையோ காட்டாமல் நாம் நம் அன்றாட வாழ்வில் காண நேரும் ஒரு தெருவோர முதிய முஸ்லீம் வியாபாரியாக மட்டுமே தனக்களிக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மையை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் சலீம்.. ஹஜ் யாத்திரை நெருங்கும்பொழுது ஏற்படும் பதட்டம், சின்ன விஷயங்களுக்கும் கொள்ளும் ஆச்சரியம், இயலாமையால் வரும் ஏக்கம், அனாதரவாக விட்டுவிட்டுப் போய் விட்ட மகன் குறித்த சோகம், பசியையும் களைப்பையும் வெளிப்படுத்தும் வாட்டம், போலீஸ்காரர்களிடமும் டிராவல் ஏஜென்ஸியிலும் அடையும் மிரட்சி, தன் மத நம்பிக்கை அளிக்கும் உறுதி என்று படம் நெடுகையும் சலீம் குமார் வெவ்வேறு உணர்வுகளால் ஆக்கிரமிக்கிறார். இவர் பொதுவாக நடிக்கும் நகைச்சுவைப் பாத்திரங்களை ஒப்பிடும்பொழுது முழுதும் வித்தியாசமாக இந்தப் படத்தில் இவர் காட்டும் வேறுபாடுகளும் நுட்பமான மென் நடிப்பும் வியப்பூட்டுகின்றன.

சலீம் குமார் போலவே உடன் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகரும் வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக டீக்கடைக்காரராக வந்து சூஃபியின் மறைவால் கலங்கிப் போகும் சூரஜ் வெஞ்சரமூடு, பக்கத்து வீட்டுக்காரராக வரும் கோபகுமார், உதவி செய்யும் ஆசிரியரான நெடுமுடி வேணு, மரக்கடைக்காராக வரும் கலாபவன் மணி, அபுவின் மனைவியாக வரும் ஜரீனா பேகம் (இவர் எம் ஜி ஆரின் ஜோடியாக தமிழில் நடித்தவர்), சூஃபியாக வரும் அண்டனி என்று ஒவ்வொருவரும் மிகக் கச்சிதமான இயற்கையான சிறப்பான நடிப்பினை அளித்துள்ளார்கள். எங்கும் எவரும் சிறிதுகூட மிகையாக நடிக்கவில்லை. எவருக்கும் கன்னச் சதை துடிப்பதில்லை, புருவங்கள் ஏறி இறங்குவதில்லை, யாரும் தன் கண்களை உருட்டி மிரட்டுவதில்லை. அந்தச் சூழலில் வாழும் மக்களின் மிகத் இயல்பான வாழ்வின் தருணங்களையே அனைத்து நடிகர்களும் எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் அளிக்கிறார்கள். சிறு நடிகர்களின் இயல்பான நடிப்பே ஒட்டு மொத்தமாக இந்த சினிமாவை ஒரு நல்ல படமாக ஆக்குகிறது.

இயக்குனர் சலீம் அஹமதும் காட்சிகளை அதிக உணர்ச்சி வெளிப்பாடு இன்றி மிக கவனத்துடன் அமைத்துள்ளார். வாத்தியாராக வரும் நெடுமுடி வேணு ஒரு இந்து என்பதை மிக நுட்பமாக அவரது வீட்டுத் திண்ணையில் ஓரமாக அமர்ந்து பாசுரம் படிக்கும் அவரது அம்மாவைக் காண்பிக்கும்பொழுது உணர்த்தி விடுகிறார். நெடுமுடி வேணுவின் பெயர் கூடச் சொல்லப்படுவதில்லை. தொடுவானமும் அதன் ஓரத்தில் இருக்கும் ஒற்றை மரமும் அபுவின் தனிமையையும், ஆதரவற்ற இயலாமையையும், சூஃபியின் ஆன்மீக இருப்பையும் ஒருங்கே எந்தவிதமான அழுகை, சோகக் காட்சியும் இல்லாமல் உரக்கச் சொல்லாமல் உணர்த்தி விடுகின்றன. தன் மீது அளவு கடந்த வெறுப்பை உமிழ்ந்து அருவாளால் வெட்டிய பக்கத்து வீட்டில் இருந்த சுலைமானை வெகு தொலைவு சென்று தேடிக் காணச் செல்லும் அபு உடல் நலன் குன்றியிருக்கும் சுலைமானைச் சந்திக்கும் இடம், அவர் நாண நன்னயம் செய்து விடும் நெகிழ்ச்சியின் உச்சம்.. இவை போன்ற தருணங்களை உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாமல் வெகு யதார்த்தமாக இயக்குனரால் அமைதியான ஆற்றொழுக்கு போல படம் முழுதும் சொல்ல முடிந்திருக்கிறது.

தன் ரத்த உறவுகளன்றி வேறு எவர் தரும் உதவியுடனும் தான் ஹஜ் யாத்திரை மேற்கொண்டால் அதை அல்லா ஏற்கமாட்டார் என்று ஹிந்துவான பள்ளி ஆசிரியரும், கிறிஸ்துவரான மரக்கடைக்காரரும், முஸ்லீமான டிராவல் ஏஜென்ஸியின் மேனஜரும் தர முயலும் பண உதவிகளை அபு மறுத்து விடுகிறார். தன்னைக் கைவிட்டுச் சென்ற மகன் ஒரு வேளை தவறான தொழில்களில் ஈடுபட்டிருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் அவனிடமும் உதவி கோர மறுக்கிறார். புனித யாத்திரை என்னும் இலக்கை விட அதை அடையும் வழியும் புனிதமானதாகவும் அப்பழுக்கற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதை அவரது பிடிவாதங்கள் உணர்த்துகின்றன. இப்படி ஒரு நம்பிக்கை சார்ந்த கட்டளை இருக்க, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஹஜ் யாத்திரைக்கான மானியங்களை வழங்குவதையும் அவற்றை முஸ்லீம்கள் உரிமையாகக் கோரிப் பெறுவதையும் இந்த படம் கேள்விக்குள்ளாக்குகிறது. ஹஜ் யாத்திரையின் மான்யத்தை முஸ்லீம் ஓட்டுக்களைக் கவருவதற்காகவே உயர்த்திய வாஜ்பாய் இன்று வரை ஹஜ்பாய் என்று கிண்டலடிக்கப்படுகிறார்.

மற்றுமொரு சமூகப் பிரச்சினையான வழக்கொழிந்து வரும் தொழில்களையும் வேறு வழியின்றி அவற்றையே நம்பி வாழ்பவர்களின் பிரச்சினைகளையும் இந்தப் படம் தொட்டுச் செல்கிறது. தெருமுனை பெட்டிக் கடைகளையும் வெளிநாட்டு பெர்ஃப்யூம்கள் ஆக்ரமிக்கும் இந்த காலத்தில் அத்தர், புனுகு விற்று பிழைப்பவர்களும் நம் கவனிப்பில் வராமல் சாலையோரம் எங்கோ வாழவே செய்கிறார்கள். காலத்தின் ஓட்டத்தில் தேங்கி விட்ட தொழில்களில் அத்தர் வியாபாரிகளும், குடை ரிப்பேர்க்காரர்களும், சாணை பிடிப்பவர்களும் ஒரு கரையோரம் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பரபரப்பான நகர வாழ்வை மையப்படுத்துவதாக அரசு கொள்கைகள் இருக்கும் நிலையில் நிதானமான, அமைதியான கேரளத்து கிராமப்புற வாழ்க்கையும் சமூகமும் ஓசையின்றி அடங்கிக் கொண்டிருப்பதை இந்த படம் காட்டுகிறது.

மலையாளப் படங்களில் பொதுவாக பின்ணணி இசை நாராசமாக இருக்கும். இந்த படத்தில் பின்ணணி இசையை ஐசக் தாமஸ் கொட்டுக்காபள்ளி அமைத்திருக்கிறார். படம் முழுவதும் அரபி இசையை வழிய விட்டு இது ஒரு இஸ்லாமியக் கதை என்பதை உரக்கப் பேசவில்லை. பள்ளிவாசல் வரும் காட்சிகள் போன்ற தேவையான இடங்களைத் தவிர அரபி இசையை பின்ணணியாக தேவையின்றி பயன்படுத்துவதில்லை. எளிமையான மண் சார்ந்த இசைக் கருவிகள் காட்சியின் உணர்ச்சிகளுடன் பொருந்தி வருகின்றன. இப்படத்தின் இசைக்காக சிறந்த பின்ணணி இசைக்கான மாநில மற்றும் தேசீய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். சென்ற வருடமும் இவர் இசையமைத்த குட்டி ஷ்ரங்க் தேசீய அளவில் சிறந்த பட விருதைப் பெற்றது. பாடல்களை பாடல்களுக்கு ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ரமேஷ் நாராயண் இசையமைத்து மெக்கா மெதீனா என்ற அருமையான பாடலையும் ஷங்கர் மஹாதேவனுடன் இணைந்து பாடியுள்ளார். கேரளத்தின் இயற்கை வனப்பும் பசுமையும் மலையாள சினிமாக்களில் கண்ணைக் கவரும் பின்புலனாக அமைந்து விடும். அதை கச்சிதமாக படம் பிடித்து படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது மது அம்பாட்டின் காமிரா.

மலப்புரம் பகுதியின் இன்றைய சமூக நிலையையோ, எவ்வித எதிர்மறை அரசியலையோ இந்த சினிமா பிரதிபலிப்பதில்லை என்றாலும் நேற்றய கேரளத்தின் பரபரப்ப்பில்லாத நிதானமான வாழ்க்கையையும் .சமூக நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும், பிற மதக் காழ்ப்பில்லாத ஆன்மீகத்தையும், மத வெறியின் பிடியில் மாட்டிக் கொள்ளாத வஹாபியச் சூழலுக்கும் முந்தைய சூஃபி மார்க்க, தர்க்கா வழிபாட்டு நம்பிக்கையையும் சகோதரத்துவத்தையும், பிற மத இணக்கமும் கூடிய இஸ்லாமிய சமூகம் குறித்து இந்தப் படம் ஏக்கப் பெருமூச்சு விடுகிறது. அவற்றின் மீதான நம்பிக்கையாக, தன் கனவாக இத் திரைப்படத்தை இயக்குனர் முன் வைக்கிறார்.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பாலைவனத்தில் தோன்றிய மதத்தில் அபுவின் நம்பிக்கை இருந்தாலும் எதனால் கடவுள் தன்னை அந்தப் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கவில்லை?, எதனால் தன் பயணம் தடைபட்டது?, தான் என்ன தவறு செய்தோம்? என்று இரவின் அமைதியில் ஆழமாகச் சிந்திக்கும்பொழுது, தனது புனித யாத்திரைக்காக, தன் சுயநலத்திற்காக பல லட்சம் ஜீவன்களின் உறைவிடமான அந்த மாபெரும் பச்சை பலா மரத்தை வெட்டச செய்தது ஒரு காரணமாக இருக்குமோ என்று துணுக்குறும்பொழுது. அப்புவின் அடிமனதின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் கேரளத்தின் தொன்மையான இயற்கை சார்ந்த பழங்குடி நம்பிக்கை வெளிவருகிறது. அதிகாலையில் அந்த காரணம் புலப்படும்பொழுது அபுவிடம் ஒரு தெளிவு பிறக்கிறது புனிதம் என்பது எல்லையில்லாத மனித நேயமும் எல்லா உயிர்களிடத்தும் இறைவனைக் காணும் தன்மையும் என்ற உண்மையை உணரும்பொழுது அந்த நம்பிக்கை செழித்து வளர ஒரு புதிய பலாச் செடியின் கன்றை ஊன்றுகிறார். அதே தருணத்தில் இறந்து போன சூஃபியின் ஆன்மா அங்கு உயிர்ப்புடன் உலவி அவரது எண்ணத்தை ஆசீர்வதிக்கிறது- அன்பும் நல்லிணக்கமும் இயைந்த மரபின் செழுமைகள் புத்துயிர்ப்புடன் மீளும் என்ற ஒரு புதிய நம்பிக்கைச் செடியை நடுகிறார் அபு என்பதே இந்தப் படம் சொல்லும் செய்தியாக இருக்கிறது. நம்பிக்கையின் நாற்று அமைதி எனும் நிழல் தரும் விருட்சமாக வளர எல்லாம் வல்ல அல்லா அருள் புரியட்டும்.

One Reply to “ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு”

Comments are closed.