20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 19

01) DIE BRUCKE (தி ப்ரூக்)
(THE BRIDGE)
கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும்
இணைக்கும் பாலம் – 1905-1913

தி ப்ருக் (Die Brucke / The Bridge) இன் தோற்றம் 1905இல் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் ஹெர்மன் ஓப்ரிஸ்ட் (Hermann Obrist) என்னும் ஸ்விஸ் ஜெர்மன் கலைஞரின் கீழ் இயங்கிய நான்கு கட்டிடக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவானது. பின்னர் அவ்வியக்கத்துடன் பல ஓவியர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஃப்ரீட்ரிஹ் நீட்ஷா (Friedrich Nietzsche) என்னும் ஜெர்மன் தத்துவாளரின் ‘ஜராதுஸ்டரா இவ்வாறு பேசினார்’ (‘Also sprach Zarathustra’) என்னும் நூலில், மனித நற்பண்புகளுக்கான படிப்படியான வளர்ச்சிப் பாலமாக மனித வாழ்க்கை அமையவேண்டியதைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அதன் பாதிப்பில் அக்கலைஞர்கள் மரபு சார்ந்த கலை இயக்கத்துக்கும், நவீன அணுகுமுறை இயக்கத்துக்கும் தங்கள் இயக்கம் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என்னும் கோட்பாட்டை முன் வைத்துச் செயற்பட்டனர்.

இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் நகரின் ஒதுக்குப்புறத்தில், தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில், நகரின் பரபரப்பிலிருந்து விலகி வாழ்ந்து, படைப்பதில் ஒரு பொதுவான பாணியைப் பின்பற்றினர். அதில், பழங்காலக் கலைப்பாணியின் தாக்கம், தெளிவான வண்ணத் தேர்வு, உணர்வுபூர்வமான அழுத்தங்கள், முரட்டுக் கற்பனைகள் (Violent Imagery) ஆகியவற்றின் பயன்பாடுகள் தெளிவாகக் காணப்பட்டன.

1906 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தினர் ஓவியம் பற்றின தங்களின் நிலைப்பாட்டை ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவித்தனர். அதில் “கலப்படமற்ற படைப்புத் திறன் கூடிய, தெளிவும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு படைப்பாளியும் எங்கள் இயக்கத்தில் ஒருவர் என்றே கருதுகிறோம்.” என்று வலியுறுத்தினார்கள். வரையறுக்கப்படாத படைப்புத் திறன், ஆழ் மனதின் மர்மங்களை நேரிடையாக வெளிக் கொணரும் உத்தி, எந்தவொரு பாணியையும் பின்பற்றாத அணுகுமுறை ஆகியவை அவர்களது பொதுத்தன்மையாக இருந்தன. வரண்ட கற்பனையில் வெளிப்படும் போலியான உல்லாசங்களுக்கு அங்கு இடமிருக்கவில்லை. தினசரி வாழ்க்கையில் காணக் கிடைத்தவற்றையே அவர்கள் தமது படைப்புகளுக்கான கருப் பொருளாகப் பயன்படுத்தினர்.

தங்கள் படைப்புகள் பிற பாணிகளின் பாதிப்பு இல்லாதபடி அமைய வேண்டும் என்று அவர்கள் விரும்பிச் செயற்பட்டபோதும், மரபும் நவீனமும் அவற்றை பாதிக்கவே செய்தன. தொடக்கமாக யோகெண்ட் ஸ்டீல் (Jugend Stil) பாணி பாதித்தது. பின்னர், அவர்களது படைப்புகள் ‘பாயின்டிலிஸ்ட்’ (Pointillist) பாணியை ஒட்டி அமைந்தன. ஓவியர் எட்வர்டு மொன்க் (Edvard Munch) இன் படைப்புகள் அவர்களை ஃபொவிஸம் (Fauvism) பக்கம் நகர்த்தியது. தீர்க்கமான கோடுகள் கொண்ட வடிவங்கள், அகண்ட பரப்பை நிரப்பிய ஒளிர் வண்ணங்கள், இவற்றுடன் ஐரோப்பிய நிலம் சாராத ‘பாலாவ்’ தீவின் பழங்குடி மக்கள் (Palau Island’s Native) செதுக்கிய உருவச் சிலைகளின் (Carvings) சாயல் ஆகியவை கொண்டதாக அது அமைந்தது. இவற்றின் பயனாக, இக்குழு தனக்கான ஒரு புதிய பாணியைக் கண்டெடுத்தது. அதன் விளைவாக, நிலக் காட்சிகள், நிர்வாணப் பெண்கள், பல்வித மக்களின் முகத்தோற்றங்கள் போன்ற ஓவியங்கள் படைக்கப்பட்டன.

1911இல் இக்குழு ட்ரெஸ்டென் (Dresden) நகரிலிருந்து இடம் பெயர்ந்து பெர்லின் நகரில் நிலை கொண்டது. அந்தக் காலகட்டத்தில் அதன் கலை வெளிப்பாடு மிக உயர்ந்த நிலையை அடைந்தது. அந்த இயக்கம் நகரைப் பெரிதும் பாதித்தது. அத்துடன், க்யூபிஸம், ஃப்யூசரிஸம் (Cubism, Futurism) போன்ற மற்ற இயக்கங்களின் தாக்கமும் அதன் படைப்பாக்க மேம்பாட்டுக்கு அடி கோலியது. இப்போது, தூய வண்ணங்களின் இடத்தில் கலப்பு வண்ணங்கள் இடம்பெற்றன. நகரம் சார்ந்த பல்விதக் காட்சிகள், இசை நிகழ்ச்சி, சர்க்கஸ் சாகசங்கள், நடன அரங்கம் போன்ற கருப்பொருட்களைக் கொண்ட ஓவியங்களை கிஹெச்னெர், ஹெக்கல் (KIRCHNER, HECKEL) போன்ற ஓவியர்கள் படைத்தனர். நகரத்தின் இருண்ட பகுதியின் அவலங்கள் ஓவியங்களில் இடம் பெற்றன. ஓவியர்கள் தாங்கள் கண்டதை ஒரு ரசாயன மாற்றம் செய்து தத்ரூபம் என்னும் தளத்திலிருந்து விலக்கி, அரூபவகை அடுக்குதல்களும், வண்ணங்களும் கொண்டவையாகப் படைத்த ஓவியங்களில் கலப்படமற்ற உண்மையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள். இவற்றுடன்கூட, நீர் வண்ணம், கோட்டு ஓவியம் போன்ற உத்திகளில் மட்டுமின்றி, கிராஃபிக் பிரிண்ட் (Graphic Print) என்னும் அச்சு உத்தி மூலம் படைக்கப்பட்ட பிரதிகளிலும் தமது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருபதாம் நூற்றாண்டில் கலை உலகுக்கு அது ஒரு அழுத்தமான கொடுப்பினையாகக் கருதப்படுகிறது. பெர்லின் நகரில் ஓவியர்கள் தங்களது தனித்தன்மை பற்றிய விழிப்புணர்வையும், சமூகத்தில் தங்கள் பங்களிப்பைப் பற்றிய தெளிவையும் பெற்றதும் அப்போதுதான்.

1913 இல் அதன் இயக்கம் நின்று போயிற்று. அதற்கு முதன்மையான காரணம் ஓவியர்களுக்குள் தோன்றி வளர்ந்த கருத்து வேறுபாடுகள்தான். ஆனால், உலகெங்கும் அதன் தாக்கம் அலையெனப் பரவி விரிந்தது.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்துங்கள்]
170px-einekunstlergemeinschaftartistballet-dancersdie-bruckegirl-with-dollimagesip_configkrichnernudetumbirwhite-tree-trunks
[/DDET]
(வளரும்)