ரிஸ்க்

(சென்ற ஆண்டு சொல்வனத்தில் வெளிவந்த ‘வாழ்க்கையின் அர்த்தம்’ என்ற சிறுகதையை படிப்பது உதவியாக இருக்கும், ஆனால் அவசியம் என்று சொல்வதற்கில்லை. )

மைக்ரோஸ்கோப் வழியாக நரம்பு இழைகளை சோதித்தாள் சந்திரா ஏப்ரஹாம்.  எத்தனையாவது என்றுகூட மறந்துவிட்டது.  இன்னொன்று, அடுத்தது, அதற்கும் அடுத்தது.  அன்று காலை சபீனாவுக்கு நிறைமாதத்துக்கு மூன்று வாரம் முந்தியே பிரசவம்.  சபீனா பார்க்க வேண்டிய ஸ்லைட்களில் பாதி அவள் தலையில், இல்லை கண்களில்.  அவளைச் சொல்லி குற்றமில்லை.   ஜாக்கிரதையாகத்தான் இருந்தாள், உடம்பை அலட்டாமல், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் காரை ஓட்டாமல், குலுக்கும் எலிவேடர்களில் ஏறாமல்.  ஆனாலும் பெண் சிசுவுக்கு இருட்டிலிருந்து பிரகாசமான உலகில் பிரவேசிக்க அவசரம்.  சாதாரண நாளாக இருந்தால் சந்திரா பொறுமையைக் கடைபிடித்திருப்பாள்.  இன்று ஒரு விருந்துக்கு போக வேண்டும்.

பெத்தாலஜியில் சந்திராவைத் தவிர பதினான்கு பெண் கற்றுக்குட்டி மருத்துவர்கள்.  அவளையும் சேர்த்து நான்கு பேருக்கு திருமணம் ஆகியிருந்தது.  எட்டு ஆண்டுகள் கடுமையான கல்லூரிப் படிப்பை முடித்த ஆசுவாசத்திலும், முழு டாக்டர் ஆனபிறகு ஒத்துவருமோ வராதோ என்கிற கவலையிலும் ரெசிடென்சி பயிற்சியின்போது கர்ப்பம் தரிப்பதை பெண்கள் யோசிப்பது வழக்கம்.  அதையொட்டி சபீனா.  மற்ற இருவரில் ஒருத்திக்கு முதல் பதின்மூன்று வாரக்கட்டம், இன்னொருத்திக்கு இரண்டாவது.  சென்ற மாதம் பயிற்சியை தொடங்கிய சந்திராவுக்கும் ஆசைதான்.  கத்தோலிக்க சர்ச்சின் கொள்கைப்படி, அவள் அம்மா மேரி கருச்சிதைவை ஒட்டுமொத்தமாக எதிர்த்தாலும், கருத்தடைக்கு தடை போட்டதில்லை.  கடந்த நான்கு வருஷங்களாக சந்திரா அதை பயன்படுத்துவது அவளுக்கு தெரியும்.  மாத்திரையைக் கைவிடுமுன் கணவன் ஃப்ரெடரிக்குடன் விவாதிக்க வேண்டும்.  அவனும் தந்தையாகத் தயாரெனத் தெரிகிறது.  சென்ற வாரத்திலிருந்து எட்டு வயதுப் பெண்களுக்கு ‘சாக்கர்’ பயிற்சி கொடுக்க ஒத்துக் கொண்டிருக்கிறான்.  அதற்கு எவ்வளவு பொறுமை வேண்டும்?  பந்து ஒருபக்கம் ஓட, ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளில் ஓடும்.  கும்பலை ஒன்று திரட்டி கோச் பேச ஆரம்பித்தால், தலைக்கு தலை சம்பந்தமில்லாமல் எதாவது சொல்லும்.

உடனே முயற்சித்தாலும் குழந்தை வர ஒரு ஆண்டு ஆகலாம்.  அதற்குள், மற்ற இருவரும் வேலைக்குத் திரும்பி விடுவார்கள்.  பிரசவ விடுமுறைக்கு சரியான நேரம்.  சந்திராவைப்போல அவள் குழந்தையும் ஆகஸ்ட் வாக்கில் பிறந்தால் ஐந்து வயதிலேயே பள்ளிக்கூடத்தில் சேர சரியாக இருக்கும்.  அவர்கள் வசித்த பெல்வியு அபார்ட்மெண்ட்டின் குத்தகையில் சில மாதங்கள் பாக்கி.  இன்னொரு ஆண்டுக்கு புதுப்பிக்காமல் அது முடிவதற்குள் சொந்த வீடு வாங்கலாம்.  குழந்தை வளர்ப்பில் அம்மாவின் உதவி நிச்சயம்.  எந்தக்கோணத்தில் பார்த்தாலும் கருத்தரிக்கப்  பொருத்தமான சமயம்.

கணினியில் கடைசி ரிப்போர்ட் எழுதி மின் வழியே அதை அனுப்பியபோது ஆறு மணி.  ஏழுக்கு உணவகத்தில் இருக்க வேண்டும்.  ஃப்ரெடரிக்கை அழைத்தாள்.

“ஃப்ரெட்டி! இப்பத்தான் வேலை முடிந்தது.  வீட்டுக்கு வர நேரமில்லை.  நீதான் என்னை பிக்-அப் பண்ணணும்.”

“எங்கே வரட்டும்?”

“ஜிம் வாசலுக்கு.”

“ஆறு:ஐம்பதுக்கு வரமுடியும்.”

“நுழையுமிடத்தில் காத்திருப்பேன்.”

“உன் கார்?”

“இங்கேயே இருக்கட்டும்.  நாளை பார்த்துக்கலாம்.”

கைப்பையுடன் அவசரத்துக்கு என வைத்திருந்த துணிப்பையையும் எடுத்து ஜிம்மிற்கு நடந்தாள்.  அங்கே அவள் குளிப்பதை யாரும் தடை சொல்லப்போவதில்லை, இருந்தாலும் தன் திருப்திக்கு இருபது நிமிடம் ட்ரெட்-மில்லில் ஓடி மைக்ரோஸ்கோப் முன்னால் உட்கார்ந்த களைப்பை போக்கினாள்.

சந்திரா கதவைத் திறந்து காருக்குள் அமர்ந்தாள்.

ஃப்ரெடரிக் அப்பாவைப்போல ஆறடியைத் தாண்டிய உயரம்.  அம்மாவிடமிருந்து சீனக்களை.  அவனுடைய ஆடம்பரமான மாலைநேர அலங்காரத்துக்கு முன் அவள் உடை மிக சாதாரணம், இரண்டு ஆண்டுகளைப் பார்த்த வெண்ணிற ஆடை.  சாலைகளில் நெரிசல் குறைந்தாலும் போக்குவரத்து விளக்குகளை தாண்ட நேரமெடுத்தது.  ஆகஸ்ட் இறுதியென்றதால் இருள் இன்னும் கவியவில்லை.

நாஷ்வில்லுக்கு வருகை தந்த ஸ்ரீயும், ஷால்டினும் அளிக்கும் விருந்து.  ஷால்டின் ஃப்ரெடரிக்கின் தங்கை.  முன்பெல்லாம் வியாபார விஷயமாக ஃப்ரெடரிக் ஹியுஸ்டனுக்கு அடிக்கடி போவான்.  அப்போது அவர்கள் குழந்தை நசியுடன் விளையாட தவறாமல் நேரம் ஒதுக்குவான்.

“நீ நசியைப் பார்த்து மூன்று மாசம் இருக்குமா?”

“இருக்கும்.”

“இப்போது நன்றாக வளர்ந்திருப்பாள்.”

“வளர்ந்திருப்பாள்.”

“நான்கு முடிந்துவிட்டது, இல்லையா?”

“சென்ற மாதம் பிறந்தநாள் பரிசாக பேசும் டோரா பொம்மை அனுப்பினோமே.”

“பொம்மையுடன் விளையாடி அவளும் நன்றாக பேசுவாள்.”

“பேசுவாள்.”

“உன்னைப் பார்த்ததும் குதிப்பாள்.”

“குதிப்பாள்.”

“என்னைத் தெரியுமா?”

“சந்தேகம்.  உன்னை நம் திருமணத்தின்போது பார்த்தது.  அதுவும் கொஞ்ச நேரம்தான்.”

ஒரு குன்றின் மேல் ரிவர்சைட் ரெஸ்டாரன்ட்.  காரை நிறுத்தும் பணியாளிடம் அதை ஒப்படைத்தார்கள்.  நுழைவிடத்தில் கச்சிதமாக உடையணிந்த இளைஞன்.

“கேதன்ஸ் பார்டி.”

பட்டியலில் தேடாமலே, “அவர்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள்” என்றான்.

“வந்து நேரமாகிவிட்டதோ?”

“இல்லை, மிஞ்சிப்போனால் பத்து நிமிடம்.”

மெனுவுடன் காத்துநின்ற பரிசாரகி அவர்களை அழைத்துச் சென்றாள்.  சில படிகள், திருப்பம், மறுபடி படிகள்.  கடைசி படியில் கால் வைத்ததும் எதிரில் ஜன்னலையொட்டி ஆறு பேருக்கான மேஜை.  தொலைவிலிருந்தே அந்த காட்சியைக் கண்டு சந்திராவும் ஃப்ரெடரிக்கும் திகைத்து நின்றார்கள்.  கடைசி படியை தாண்ட மனமில்லை.  பரிசாரகியிடம் மெனு புத்தகத்தை நன்றி சொல்லி வாங்கிக்கொண்டு சாமர்த்தியமாக அவளை அனுப்பினார்கள்.

ஷால்டினும், ஸ்ரீயும் கடுகடுப்புடன்.  அவர்கள் அடங்கிப்பேசினாலும் வார்த்தைகள் காதில் விழுந்து ஏதோ சரியில்லை என்பதை வெளிப்படுத்தின.  வாக்குவாதம் முற்றுவதற்குள் நசி எங்கிருந்தோ தோன்றினாள்.

கார் சிறுகுன்றின் மேல் ஏறும்போதே நசி கவனித்தாள்.  தொலைவில் நீலநிறக்கோடு.  வறட்சியில் தவித்த ஹியுஸ்டனிலிருந்து வந்த அவளுக்கு அது இனிய காட்சி.  உணவகத்தில் நுழைந்ததும் உட்காரவைக்க பரிசாரகி வரவேண்டும்.  அதில் சற்று தாமதம்.  அதற்குள் நசிக்கு அவசரம்.  இருட்டுவதற்குள் பார்த்துவிட வேண்டும்.  நழுவிச் செல்கிறாள்.  வயதுக்கு சிறிய வடிவாக இருப்பதில் ஒரு லாபம்.  யார் கண்ணிலும் படாமல் மனிதர்களுக்கு நடுவில் புகுந்து, மேஜைகளுக்கு கீழே குனிந்து ஓடுகிறாள்.  ஆறு தெரியவேண்டுமே.  எதிர்ப்புறத்தில் தடியான பிளாஸ்டிக் திரை.  அதை ஒதுக்குகிறாள்.  அங்கும் மேஜை நாற்காலிகள்.  காலியாக இருக்கின்றன.  கும்பல் சேரவில்லை.  மரச்சட்டம் வரை சென்று எட்டிப் பார்க்கிறாள்.  ஆற்றில் ஒரு சின்ன உல்லாசக் கப்பல்.  அதில் சென்றால் எப்படி இருக்கும்?  அந்தக் காட்சியை ரசித்துவிட்டு, திரையைத் தாண்டி அப்பா அம்மா இருக்கும் மேஜையைக் கண்டுபிடித்து திரும்பி வருவதற்குள் ஒரே ரகளை…

– நசி எங்கே?

– நீதானே அவளை தூக்கி வைத்துக்கொண்டாய்?

– காரிலிருந்து நீதானே இறக்கினாய்?

– அப்படியென்ன கவனக்குறைவு!

– நசி சாதாரண பெண் இல்லை என்று உனக்கு தெரிந்திருக்க வேண்டும்.

– ஏதோ ஒரு தடவை.

– அவளை இழக்க ஒரு தடவையே போதும்.  இப்படித்தான் என் அண்ணன் க்ளாட் நீச்சல் குளத்தில்…

– நம்முடன்தானே வந்தாள்?  அதற்குள் எங்கே போய்விடமுடியும்?

வேறொரு மேஜைக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் பணியாள், “எதாவது சரியில்லையா?” என்று கேட்கிறான்.

“இரட்டை சடையுடன் ஒரு நான்கு வயதுப்பெண்…” என்று ஆரம்பித்தபோது நசி அவனுக்கு பின்னாலிருந்து வெளிப்பட்டாள்.

“நசி எங்கே போனாய்?”

“நாங்கள் தவித்துப் போய்விட்டோம்.”

ஸ்ரீ நசியை நாற்காலியில் வலுக்கட்டாயமாக அமர்த்தி அவள் நழுவிச் செல்லாதபடி பெல்ட்டை இறுக்கினான்.

ஒருவழியாக அவர்கள் சமாதானம் அடைந்ததாகத் தெரிந்ததும் “ஹாய்!” என்று சொல்லியபடி அப்போதுதான் அங்கே வந்ததாகத் தோன்றும்படி ஃப்ரெடரிக்கும் சந்திராவும் மேஜை நோக்கி காலடி வைத்தார்கள்.  ஸ்ரீயும் ஷால்டினும் எதுவும் நடக்காததுபோல் புன்னகையுடன் வரவேற்றார்கள்.  அதை நசி வேடிக்கை பார்த்தாள்.  பிறகு, பரஸ்பர முகமன்கள், முத்தங்கள், தழுவல்கள், பலமுறை சொல்லப்பட்ட ‘யு லுக் க்ரேட்!’கள்.  ஸ்ரீ அரை-மாரத்தான் ஓடுவது புதிய செய்தி.  கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் ஷால்டின் ஐந்து பவுன்ட் குறைக்க முயற்சிப்பது பழங்கதை.

மேஜையில் நசிக்கு ஒரு பக்கத்தில் ஷால்டின், இன்னொரு பக்கம் ஃப்ரெடரிக்.

முதலில் மெனு புத்தகத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை பரிசாரகனிடம் சொல்ல, அவன் எழுதிக்கொண்டான்.

“நசிக்கு என் தட்டிலிருந்தே கொஞ்சம் எடுத்துத் தருவேன்.  அவளுக்கு ஒரு காலி தட்டு மட்டும்” என்றாள் ஷால்டின்.

சாப்பாடு வரும்வரையில் பேச்சு.

“ஹாய் நசி!”

“ஹாய் ஃப்ரெட்டி!”

“இது யார்?” என்று மனைவியை சுட்டிக் கேட்டான்.

“ச்சன்ட்ரா.”

பரவாயில்லை, ஞாபகம் வைத்திருக்கிறாள்.

“டோரா பொம்மையுடன் விளையாடுகிறாயா?”

நசி முகத்தை சுளித்து அதிருப்தியைக் காட்டினாள்.  அவளை வேறென்ன கேட்கலாம்?

“ப்ரீ-ஸ்கூல் எப்படி?”

சிறப்பாகச் சொல்ல எதுவுமில்லை என்று நசி கையை விரித்தாள்.  பிறகு, ஞாபகம் வந்து, “நான் அதில் இருபத்தியோராவது மாடிக்கு போனேனே” என்றாள் பெருமையாக.

ஃப்ரெடரிக் திடுக்கிட்டான்.

“நான் அங்கே வந்திருக்கிறேன்.  அந்தக் கட்டடத்தில் இருபது மாடிகள்தானே.”

“சில சமயங்களில் ஒரு மாடி அதிகம்.”

கட்டடத்துக்கு மேல் இன்னொரு மாடி எப்படி முளைக்கும்?  அவனுக்கு நசி பற்றிய தன் சந்தேகம் சரியாக இருக்குமோ என்கிற அச்சம்.  பேச்சை மாற்றலாமா என்று யோசித்தான்.

“எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று அழுத்திச் சொன்னாள்.

“அதற்கு எப்படி போனாய்?”

“எலிவேடரில்.”

“அப்படியா?  ம்ம்…  அங்கே என்ன செய்தாய்?”

“யமாவை சந்தித்தேன்.”

“யார் யமா?”

“இறப்புக்கு கடவுள்.”

“வாட்?”

“சாராதான் சொன்னாள்.”

“அவனைப் பார்க்க பயமாக இல்லை?”

“அவன் ஓகே.”

“யமா என்ன செய்தான்?”

“ஊனோ விளையாடினோம்.  அவனிடம் ஊனோ அட்டைகள் இல்லை.  சீட்டுக்கட்டை வைத்து ஆடினோம்.”

ஃப்ரெடரிக்கின், “ஆர் யு ஷுர்?” என்ற கேள்வியில் அவள் சொன்னது எதையும் அவன் நம்பவில்லை என்பது வெளிப்பட்டது.  அதை நசி கவனித்திருக்க வேண்டும்.  மேற்கொண்டு அவள் பேசவில்லை.  அவனுக்கும் தீவிர சிந்தனை.  அவன் மற்றவர்களின் உரையாடலில் அதிகம் கலந்துகொள்ளவில்லை.  அங்கொன்றும் இங்கொன்றும் நைஸ், வெரி வெல் போன்ற வார்த்தைகள் மட்டுமே.  அவனுக்கும் சேர்த்து சந்திரா.

“நாஷ்வில்லில் எத்தனை நாட்கள்?”

“நாளையே ஹியுஸ்டன் திரும்புகிறோம்.”

“எதாவது வியாபார வருகையா?”  இருவருக்கும் மென்பொருள் சம்பந்தப்பட்ட வேலை என்பதை மட்டும் சந்திரா அறிவாள்.

ஸ்ரீ எப்படி பதில் சொல்வது என்று யோசித்ததுபோல் தோன்றியது.  பிறகு கேட்டான்.  “உனக்கு டாக்டர் சாரா நாதனை தெரியுமா?  அவளும் வான்டர்பில்ட்தான்.”

“ஒரேயொரு தடவை சந்தித்திருக்கிறேன்.”  ‘பல ஆண்டுகளுக்கு முன் என்னை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றினாள்.  அவள் மட்டும் அப்போது குறுக்கிடாதிருந்தால்…’

“அவள் என் அம்மாவின் சிறுவயது சினேகிதி.  சில மாதங்களுக்குமுன் ஹியுஸ்டன் வந்திருந்தபோது நசியை கவனித்துக்கொண்டாள்.  இருவருக்கும் பிடித்துப் போய்விட்டது.  நசிக்கு இடமாற்றம் அவசியமென நினைத்தோம்.  சாரா சம்மதித்ததால் நசியை அவள் வீட்டில் விட வந்தோம்.”

“நாங்கள் இருக்கிறோமே.  ஃப்ரெட்டிக்கு நசி யென்றால் உயிர்.”

“நீங்கள் இளஞ்சோடிகள்.  உனக்கு ‘ஆன்-கால்’ அடிக்கடி வரும்.  எதற்கு தொந்தரவு?”

“நசிக்கு உங்களை பிரியப்போவது தெரியுமா?”

“நேற்றைய இரவு சாராவின் வீட்டில்தான் அவள் தூங்கினாள்.”

சாப்பாட்டு பில்லை ஸ்ரீ செலுத்தினான்.

“நசியை எப்போது அழைத்துப்போக வேண்டும்?”

“அடுத்த சனிக்கிழமை.  நான் மட்டும்தான் வருவேன்.”

“அப்போது எங்கள் ட்ரீட்.  எனக்கு ஒரு நல்ல இத்தாலிய உணவகம் தெரியும்.”

நசியை ஷால்டின் தூக்கிக்கொள்ள வெளியே வந்தார்கள்.  ஸ்ரீயின் வாடகைக்கார் காத்திருந்தது.

நன்றி தெரிவித்து விடைபெற்றார்கள்.  நசிக்கு கோபமோ, அதிருப்தியோ. கவனமின்மையோ, இல்லை வேறெதுவோ, யாருடனும் பேசவில்லை.

ஃப்ரெடரிக்கின் கார் தொலைவில் இருந்ததால் அது வர நேரமானது.

சந்திராவுக்கு நசியை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.  அவள் மருத்துவ சிறப்பு உடல் நோய்களைப் பற்றியது, குழந்தை வளர்ச்சி பற்றி அல்ல.  இருந்தாலும் நசி ஒரு சராசரிப் பெண் போலத் தோன்றவில்லை.  என்ன காரணம்?  ஃப்ரெடரிக் ஓய்வு அறைக்கு சென்றபோது நசிக்கு பக்கத்தில் நகர்ந்து பேச்சுக் கொடுத்ததை சந்திரா நினைத்தாள்.

“நசி! உனக்கு நிறைய நண்பர்களா?”

“ஒருத்திதான்.”

“அவள் பெயர்?”

“சாரா.”

“உன் வயதில் யாராவது?”

நசிக்கு கேள்வி புரியவில்லை.

“ப்ரீ-ஸ்கூலில்…  உன் அப்பா அல்லது அம்மாவுடைய நண்பர்களின் குழந்தைகளில்… யாரையாவது பிடிக்குமா?”

“நோபடி.”

“ஏன்?”

பதில் தெரியாமல் உதட்டை பிதுக்கினாள்.

நசியின் தோற்றத்திலிருந்து அவளுக்கு டௌன் சின்ட்ரோம் இல்லை என்பது நிச்சயம்.  அவள் மற்றவர்கள் பார்வையை சந்திக்கிறாள், தானாகவே கேட்டு சாப்பிடுகிறாள்.  அதனால், ஆடிசம் இல்லை என்றும் சொல்லலாம்.  அவளிடம் நான்கு வயது பெண்ணுக்கான பேச்சுத்திறன் இல்லை.  அது மட்டும்தானா?

கார் வேகமாக வந்து க்ரீச்சிட்டு நின்றது.  எடுத்துவந்தவன் ஐந்து டாலர் நோட்டை நன்றியுடன் வாங்கிச் சென்றான்.

நெடுஞ்சாலை அடையும்வரை காரில் கனமான அமைதி.  நசி பற்றிய பேச்சை எப்படி தொடங்குவதென சந்திரா யோசித்தாள்.

ஃப்ரெடெரிக் ஆரம்பித்தான்.  “சில நாளாக நான் யோசிக்கிறேன்.  அதைப்பற்றி உன்னுடன் பேச வேண்டும்.”

“எனக்கும் ஒரு யோசனை.”

“எதைப்பற்றி…”

“நீ முதலில் சொல்!”

அழுத்தமான விஷயத்துக்காக ஃப்ரெடரிக் கனைத்துக்கொண்டான்.

“குடும்பத்தை பெருக்கலாம் என நினைக்கிறேன்.”

“க்ரேட்!”  காரோட்டுவதில் இடையூறு இல்லாமல் அவன் கன்னத்தில் இலேசாக முத்தமிட்டாள்.  “நானும் அதைத்தான் இன்று யோசித்தேன்.  நமக்குள் என்ன ஒற்றுமை!”

“நான் சொல்ல வந்ததை முழுக்க கேட்ட பிறகு எவ்வளவு ஒற்றுமை என்று சொல்!” என்று அவள் ஆர்வத்தில் நீர் வார்த்தான்.

“என்ன அர்த்தம்?”

“குழந்தைக்கு பல மாதங்கள் காத்திருக்கப் பிடிக்கவில்லை.  இப்போதே வேண்டும்.”

“அதெப்படி முடியும்?”

“ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்போம்.”

அஃப் கோர்ஸ், வேறெப்படி குழந்தை உடனே கிடைக்கும்?

“என் பாஸ் யுக்ரெய்னிலிருந்து பெற்றோர்கள் கைவிட்ட ஒரு பெண்ணை தத்தெடுத்து வந்திருக்கிறான்.  அவளை இன்று அலுவலகம் அழைத்துவந்தான்.  என்ன அழகு! என்ன பணிவு! என்ன புத்திசாலித்தனம்!  அவளைப்போல் ஒரு பெண் கிடைத்தால்…”

சந்திரா குறுக்கிடாததால் ஃப்ரெடரிக் தொடர்ந்தான்.

“கேரளாவில் உன் அம்மாவின் ஆதரவில் நடக்கும் அனாதை இல்லமே இருக்கிறது.  இரண்டு வயதுக்குள் ஒரு குழந்தையை சுவீகாரம் எடுக்கலாம்.  நம்முடைய ஜீன்ஸில் உருவானால்தான் பாசமா?  அன்பைப் பகிர்ந்துகொள்ள ஒரு உயிர்.  வழிகாட்ட ஒரு வாழ்க்கை.”

சந்திராவுக்கும் பரந்த மனப்பான்மைதான்.  “இரண்டும் செய்யலாமே!” என்றாள்.

சொந்தமாக குழந்தை பெறுவதில் அவனுக்கு விருப்பமில்லை.  அதன் காரணம் அவன் சந்திராவின் பக்கம் திரும்பி, “நசி மாதிரி நமக்கும் பிறந்தால்…” என்றபோது வெளிப்பட்டது.  “நாம்தான் பார்த்தோமே.  அவளால் ஸ்ரீக்கும் ஷால்டினுக்கும் அடிக்கடி சச்சரவு, ஏகப்பட்ட கவலை.”

‘நசிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?’ என்று சந்திரா யோசிக்கையில், அவனே, “எங்கள் குடும்பத்தின் மரபணுக்களில் குறை இருப்பதாக நினைக்கிறேன்” என்றான்.

“ஏன் அப்படி சொல்கிறாய்?”

“எங்களுக்கு க்ளாட் என்றொரு அண்ணன்.  நான்குவயதில் அவன் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டான் என்று சொல்லியிருக்கிறேன்.  அது விபத்து அல்ல.  அவனுக்கு காரணகாரியங்களை புரியவைக்க முடியவில்லை என்றதால், என் அம்மா எப்போதும் அவனை ஜாக்கிரதையாக காத்துவந்தாள்.  ஒருநாள் அவள் கண்காணிப்பிலிருந்து தப்பி…”

மிச்சத்தை சந்திராவின் ஊகத்துக்கு விட்டான்.

“ஐ’ம் சாரி ஃப்ரெட்டி.”

“யாரென்ன செய்ய முடியும்?  அப்படி நடந்ததால் நசியை பிறந்ததிலிருந்து கவனித்துவருகிறேன்.  முதலில், வளர்ச்சியில் கொஞ்சம் நிதானம், மற்றபடி குறையென்று ஒன்றுமில்லை என்ற நிம்மதி இருந்தது.  இன்று ரெஸ்டாரன்ட்டில் நடந்ததை பார்க்கும்போது க்ளாட் மாதிரிதான் அவள் என்று நினைக்கத் தோன்றுகிறது.”

“நம் சிசுவுக்கு ஜெனிடிக் அனாலிசிஸ் செய்தால் போகிறது.”

“குறை கண்டுபிடிக்கப்பட்டால் அதை அழிக்க உன் அம்மா சம்மதிப்பாளா?”

“நானே கூட மாட்டேன்.”

“அதனால்தான் சுவீகாரம்.”

“ஷால்டினும், நீயும் நார்மலாக இல்லையா?”

“நம் குழந்தை குறையுடன் பிறப்பதற்கு சாத்தியக்கூறுகள் நிறைய.”

“வாழ்க்கையே ரிஸ்க்தான்.  சாலைகளில் விபத்துகள் நடக்கின்றன என்பதற்காக வீட்டுக்குள் அடைந்துகிடக்க முடியுமா?”

“உண்மைதான்.  ஆபத்தானது என்று தெரிந்தே நான் மோடர்சைகிள் ஓட்டியிருக்கிறேன்.  காற்று மேலே தழுவிச்செல்ல, ஸும் என்று நாற்பதிலிருந்து எண்பது மைல் வேகத்துக்கு பறப்பது பரவசம்.  அதெல்லாம் உன்னை சந்திப்பதற்கு முன்னால்.”

“தாங்க்ஸ், ஃப்ரெட்டி!”

“இப்போது வேண்டுமானால், நாம் ‘பஞ்ஜி-ஜம்ப்பிங்’ கூட செய்யலாம்.  அது நம் இருவரை மட்டும் பாதிக்கிறது.  குழந்தை அப்படிப்பட்ட ரிஸ்க் அல்ல.  இன்னொரு உயிரைப் பற்றியது.  அதற்கு வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டாமா?  நமக்குப்பிறகு சுயமாக வாழத்தெரியாவிட்டால்…  பூமியின் மிகையான வெப்பம், கடல் மட்டத்தின் உயர்வு, எரிசக்தியின் தட்டுப்பாடு என்று எதிர்காலத்தில் எத்தனையோ பிரச்சினைகள்.  சாதாரண குழந்தைகளுக்கே என்ன ஆகுமென்று சொல்வதற்கில்லை.  நசி போன்ற ஒருத்தியை கவனிக்க சமுதாயத்துக்கு எங்கே முடியப்போகிறது?”

“நீயே இத்தனையும் யோசித்துவிட்டாயா?” என்ற கேள்வியில், ‘என்னிடம் ஏன் இதுவரை விவாதிக்கவில்லை?” என்ற குறை அடக்கம்.

“கவலை ஆழ்மனதில் இருந்தது.  நசியை பார்க்கப்போகிறோம் என்பதால் இன்று மேலே வந்திருக்க வேண்டும்.  அவளோடு பேசிய பிறகுதான் இந்த தீர்மானம்.”

பெல்வியு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் வாகன நிறுத்துமிடம்.  அங்கு நுழைந்து கார் நின்றது.  முன் விளக்குகள் அணைந்தன.  இருவருக்கும் இறங்க மனமில்லை.  இருட்டில் இருவருக்கும் எதிர்மாறான எண்ணங்கள்.  தன் தீர்மானம் நியாயமானது, அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஃப்ரெடரிக் நினைத்தான்.  அவன் முடிவை அப்போது மாற்ற முடியுமென சந்திராவும் நினைக்கவில்லை.  ஆனால், அடுத்த குழந்தைக்கு முன், சுவீகாரக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் வளர்த்தவர்களைவிட அவர்களை பெற்றவர்களைப் பொறுத்துத்தான் அமைகிறது என்கிற அறிவியல் கண்டுபிடிப்பைச் சொல்லி அவன் மனதை மாற்றிவிடலாம் என்று சந்திரா நம்பினாள்.  ரெசிடென்சியில் இன்னும் ஐந்தாண்டு இருக்கிறதே.

(முற்றும்)