மூன்று கவிதைகள்

ஜன்னல் கழுகுகள்

இளைப்பாறுதல் அறியா
உயரத்தில் சுற்றித் திரிந்ததாலோ,
இன்று வானை முட்டி நிற்கும்
கட்டிடக் கிளைகளில்
முக்கால் பகலும் இளைப்பாறிக்
கொண்டேயிருக்கின்றன,
என் அலுவலின் பின்புறம்
கண்ணாடி சன்னலில்
அணிவகுத்திருக்கும் கழுகுகள்.
ஒன்று என்னைப் பார்க்க
இன்னொன்று உலகைப் பார்க்க,
நீளமான சிறகுகளை
கச்சிதமாக மடக்கிக்கொண்டு
அமர்ந்தது இன்னொன்று.
எங்கள் பார்வைகள்
ஆச்சரியத்தின் பிடியில்
சங்கலித்து,
வினவிக்கொண்டே இருகின்றன,
“நீ எப்படி இங்கே?”

உலராதவை

விழிப்பின் மூலையில்
ஊறிக் கொண்டேயிருக்கும்,
காலையில்
துவைப்பதற்கென
ஊற வைத்த துணிகள்.
பகல் உருண்டு,
இரவெழும் வேளையிலும்
வைத்த இடத்திலேயே
தவமிருக்கும்.
முடியா காரியங்களுக்கென
ஒதுக்கப்பட்ட
கனவுகளில்,
தினமும் துவைத்து
உலரப்போடும் போது
தவறாது பெய்துவிடுகிறது
மழை.

கவிஞன்

கவிஞன் என சுட்டபடாத
கவிஞன்,
யாருடன் பேசுவான்?
சொற்கள் உதிரும்
தோட்டத்தில்
தனிமையில் எதை
ரசிப்பான்?
சொல் உதிர்ந்து
பொருள் கனியும்
கணங்களை அறிவீர்களா?
ஒளியால் சுட்டப்படும்
பொருளனைத்தும்
ஒளியே என அறிவீர்களா?
ஆமெனில்,
நீங்களும் அவனும்
வேறல்ல.