பெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்

இன்று காலை கிட்டிய ஒரு மின்னஞ்சலில் பேராசிரியர் வைத்தியநாதனின் ஒரு கட்டுரை பார்வைக்கு வந்தது. வைத்தியநாதனுடைய பேட்டியும், அவர் எழுதிய கட்டுரைகளின் சில மொழி பெயர்ப்புகளும் ஏற்கனவே சொல்வனத்தில் முந்தைய இதழ்களில் வெளி வந்திருக்கின்றன. இந்தக் கட்டுரை சில வருடங்களாக அவர் இணைய உலகிலும், பல இந்திய செய்தித்தாள்களிலும் எழுதி வந்திருக்கும் ஒரு முக்கியமான விஷயம் பற்றியது.

உலக வங்கிகளில் சில நாடுகளில் ரகசியக் கணக்குகளில் குவிந்திருக்கும் பெருநிதி பற்றிய இக்கட்டுரை, அந்த வகை ரகசிய நிதி உலகுக்கு எத்தனை அபாயங்களைக் கொணர்கிறது என்று சுட்டுகிறது.  குறிப்பாக காலனியத்தினால் சுமத்தப்பட்ட பெரும் வறுமையிலிருந்து மிகவும் தத்தளித்து, மக்களின் பெரும் உழைப்பால் பையப் பைய மேலெழுந்து வரத் துவங்கி இருக்கும் சில வளரும் நாடுகளுக்கு இந்த நிதிகள் எத்தனை பேரபாயம் என்று வைத்தியநாதனின் கட்டுரை சுட்டுகிறது.  அது குறித்துச் சிறி்தே விவரமாக இங்கு பார்ப்போம்.

கணக்கில் வராத பெரும் செல்வக்குவிப்பு சில யூரோப்பிய மேலும் பல ஒதுக்குப் புறமான தீவுகளில் இருக்கும் வங்கிகளில் சேர்ந்திருப்பதைப் பற்றி பல அரசுகள் உலகரங்கில் கவலை தெரிவிக்கத் துவங்கி இரண்டு, மூன்றாண்டுகளாயின. பல பத்தாண்டுகளாகக் குவிந்து வரும் இந்த நிதி குறித்து உலக அரங்கில் பெருவலிவுடன் உலவும் சில அரசுகளுக்கு, குறிப்பாக ஜனநாயக அரசுகளுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? நிச்சயம் தெரிந்தே இருக்கும். ஆனால் இத்தனை நாட்களாக அவை இந்த நிதி குறித்து ஏதும் கவலையும் தெரிவிக்கவில்லை, இந்த நிதியைக் குவித்தவர்கள் யார், எப்படிக் குவித்தனர் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஆர்வமும் காட்டவில்லை. ஏன் என்று நாம் கேட்கலாம். அது ஒரு வகை ஆய்வாக இருக்கும்.

இந்த நிதிக் குவிப்பு என்ன விதங்களில் பயன்படுகிறது?  ஏன் அதை வைத்தியநாதன் ஒரு அபாயமாகப் பார்க்கிறார்?

உலகெங்கும் பலவித அநீதிகளுக்குத் துணை போய், அதர்ம அரசியலைப் பல நாடுகளில் ஊக்குவித்து வந்திருக்கிற சில மேலை அரசுகளே இந்த பெரும் நிதிக்குவிப்பை, அதன் கள்ளத்தனத்தை,  உலக குற்ற அலைகளில் பங்கெடுக்கும் அதன் போக்கைப் பார்த்துப் பயப்படத் துவங்கி இருக்கின்றன, அதுவும் சமீபத்தில்தான், அது ஏன்?

இந்த வகை அரசுகளில் ஒன்று அமெரிக்கா. மேலும் பிரிட்டன், ஜெர்மனி இத்தியாதி நாடுகளின் அரசுகளும். இவை இத்தனை நாட்கள் மௌனம் காத்து விட்டு இப்போது பெரும் கவலை தெரிவிக்கின்றன அது ஏன்? தவிர கவலை தெரிவித்து விட்டுப் பின் என்ன நடவடிக்கை எடுத்தன என்று பார்ப்பது இன்னொரு வித ஆய்வாக இருக்கும்.

உலகெங்கும் போதைப் பொருள் கடத்தல், பெண்ணடிமை வியாபாரம், போலி மருந்துகள் கடத்தல்/ தயாரிப்பு, ஆயுதக் கடத்தல் என்று துவங்கி சமீப காலமாக சாதாரண மக்களைக் கொன்று குவிப்பதை ஒரு போர்த் தந்திரமாக வைத்திருக்கும் பயங்கரவாதக் கொலைகாரர்களுக்கு நிதி உதவி என்றும் மாறி வரத் துவங்கி உலகக் குற்றக் கும்பல்களுக்கு மூலதனமாக இந்த நிதிக் குவிப்பு பயன்பட்டு வந்திருக்கிறது.

பல அரசுகளின் சதி வேலைகளுக்கும் இந்த நிதிக் குவிப்பு பயன்பட்டு வந்திருக்கிறது. பல அரசுகளே இத்தகைய நிதிக் குவிப்பில் பங்கெடுத்திருக்கின்றன. குறிப்பாக ரஷ்யா, சீனா, பல மேற்காசிய அரசுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு மேற்கு நாடுகளும் இத்தகைய நிதிக் குவிப்பில் பங்கு வகிக்கின்றன என்பது ஒரு ஐயமாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பல நாசகாரக் கும்பல்களுக்கு மேற்படி அரசுகளின் உதவி உண்டு என்பது இப்போது பொது ஊடகங்கள் சாதாரணமாகப் பேசத் துவங்கி விட்டன.  அதுதான் ஒரு பிரச்சினை. ரயில்களைக் கவிழ்த்தல், டெலிகாம் டவர்களை இடித்தல், பள்ளிக் கூடங்களை எரித்தல் என்று சில அன்னிய நாடுகளின் கைக்கூலிகள் மத்திய இந்தியாவில் தினம் நடத்தும் பெரும் நாச வேலைகள் ஏதோ அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் போக்குவரத்து விபத்து என்பது போல எடுத்துக் கொள்ளுமளவு நம் சமூகச் சிந்தனை குழம்பிக் கிடக்கிறது.

இந்த வகை நிதிக்குவிப்பின் சமீபத்திய நடவடிக்கை- உள்நாட்டு அரசியலைச் சீரழித்து, நாட்டின் பொருளாதாரத்தைக் குலைத்து, உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரும் நாசத்தைப் பரப்புவதற்கு பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தலாகும்.  அப்படி ஒரு கொடுமையான வறுமைநிலைக்குத் தள்ளப் பட்டால் மக்கள் போர்க்குணம் பெற்று இந்திய அரசைக் கவிழ்க்கும் தம் ’தொலைநோக்குத்’ திட்டத்துக்கு இணங்கி வருவர் என்று நினைக்குமளவு கயமை ஊறிய கருத்தியல் நாட்டில் விடுதலைக்கான அரசியல் இயக்கம் என்ற பெயரில் உலவுகிறது.

நிதித் துறையில் பேராசிரியராக மேலாட்சிப் படிப்புக்கான ஒரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றி, பல பத்தாண்டுகள் அனுபவம் பெற்ற பேராசிரியர் வைத்தியநாதன், இந்த அபாயத்தின் மீது நம் மக்களின், ஊடகங்களின், மத்திய வர்க்கத்தின் கவனத்தைக் குவிக்க, பல வருடங்களாகப் பெரும் முயற்சி செய்து வருகிறார். குறிப்பாக ஸ்விஸ் வங்கிகளிலும், லிஹ்டென்ஷ்டைன் என்னும் துக்கடி நாட்டிலும் ஒளிக்கப்பட்டிருக்கும் பெரும் கள்ள நிதியைக் குறித்தும் இந்திய அரசியல், அரசு, மேலும் பணச்சந்தைகளில் இந்த நிதி விளையாடி நாட்டைக் குலைப்பது பற்றியும் தொடர்ந்து எழுதி வந்திருப்பவர் திரு.வைத்யநாதன். அவருடைய இந்தச் சமீபத்துக் கட்டுரையின் சாரத்தை இங்கு தர முயல்கிறேன். கட்டுரைக்குச் சுட்டியையும் கடைசியில் கொடுக்கிறேன்.

மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடித்து அவற்றில் கிட்டும் பொக்கிஷங்களைத் தமதாக அறிவிக்கும் ஒரு நிறுவனம், அயர்லாந்தருகே ஒரு மூழ்கிய கப்பலைக் கண்டு பிடித்த செய்தியை சமீபத்தில் இந்தியச் செய்தித்தாள்களில் கண்டிருப்பீர்கள். அந்தக் கப்பல், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு இரண்டாம் உலக யுத்தத்தின் போது சென்ற கப்பல். ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றால் மூழ்கடிக்கப்பட்ட வணிகக் கப்பல். அந்தக் கப்பலில் இருப்பவை 200 மிலியன் டாலர்களுக்கும் மேல் மதிப்புள்ள வெள்ளிப் பாளங்கள்.

ஒரே ஒரு கப்பலில் பிரிட்டனின் காலனிய அரசு இந்தியாவிலிருந்து சுரண்டி எடுத்துப் போன வெள்ளியின் மதிப்பு 200 மிலியன் டாலர்கள். (ரூபாய்க் கணக்கு வேண்டுமெனில் ஒரு டாலர்=50 ரூபாய், ஒரு மிலியன்=10 லட்சம். கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.) நம் நாட்டைக் கிட்டத்தட்ட 250 வருடம் போல பிரிட்டன் ஆண்டிருக்கிறது. எத்தனை கொள்ளை அடித்திருப்பார்கள் எத்தனை ஆயிரம் கப்பல்களில் இந்த்க் கொள்ளை பிரிட்டனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்று யோசிக்கவும் நம் உடலும் மனமும் அறிவும் பதறும். 19ஆம் நூற்றாண்டில் துவங்கி 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை மேற்கில் எழுதப்ப்பட்ட பல நாவல்களில் இந்தக் கொள்ளை ஒரு சாதனை போலவே சித்திரிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏதோ அகஸ்மாத்தாகத் தம் மக்களிடம் கிட்டிய புதையல் போலவும், தம் நாட்டு நாயகர்களின் சாதனையால் இந்த வளம் கிட்டியது ஒரு சாகசக் கதை போலவும், இந்தக் கொள்ளையில் தம் நாட்டின் வளங்களை இழந்த மக்கள் காட்டுவாசிகளாகவும், அறிவற்றவர்களாகவும், நாகரீகமற்றவர்களாகவும் சித்திரிக்கப்படுவதும் நாம் காணக் கூடியவையே. இன்று யூரோப்பின் பெருஞ்செல்வத்தின் கணிசமான பகுதி யூரோப்பியர் உலகெங்கும் சில நூறு ஆண்டுகள் அடித்த காலனியப் பெருங்கொள்ளையில் வேர் கொண்டது என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அதை நினைத்துப் பார்த்து அதற்காக வருந்துமளவு, அந்த வளத்தில் ஒரு பகுதியையாவது இழப்பால் வருந்தும் நாடுகளுக்குக் கொடுத்து விடுமளவு மனச் சாட்சியெல்லாம் யூரோப்பிய நாடுகள்/ மக்களிடம் எதிர்பார்க்க முடியாது.  நம் நாடுகளில் உள்ள பெருந்தனக்காரர்கள் தம் வறிய மக்களிடம் என்ன மனச் சாட்சியுடன் நடந்து கொள்கிறார்களாம்? பின் யூரோப்பியரை மட்டும் என்ன நேர்மையோடு நாம் அப்படி ஒரு மனச் சாட்சியுள்ள நடத்தையைக் கைக்கொள்ளச் சொல்ல முடியும்?

அபபடிக் காலனியாளர்களிடம் சிக்கிய பெரும் நாடுகளில் இந்தியா தலையாய ஒரு நாடு அன்று. பெரும் நிலப்பரப்பு மட்டுமல்ல, ஏராளமான மக்கள் தொகை, நிலவளம், நீர்வளம், தானியங்கள், காடுகள், உலோகங்கள், பயிர்கள் என்று செல்வம் கொழித்து உலகில் மூன்றாவது நான்காவது பொருளாதாரமாக இருந்த நாடு இந்தியா.  ஏற்கனவே மேற்காசியாவின் இஸ்லாமியக் காலனியாளர்கள் வந்து தாக்கி அழித்துச் சுரண்டி எடுத்துப் போனது போக எஞ்சியிருந்ததே உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியாவை விட்டு வைத்திருந்தது என்றால், அதற்கு முன்பு இந்தியா என்ன ஒரு செல்வக் கொழிப்பில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். செல்வக் கொழிப்பு அனைத்து மக்களுக்கும் கிட்டியதா என்ற வாதம் இங்கு உதவாது. உலகில் எந்த நாட்டிலும் அப்படி ஒரு ‘சமதர்மம்’ நிலவியதில்லை. அந்த வாதம் இன்னொரு தளத்தில், வேறு வகை உரையாடலாக நடக்க வேண்டியது.

இந்தப் பின்னணியில் அன்று வெள்ளையர் அடித்த கொள்ளையை ‘சுதந்திர’ இந்தியாவில், தம் பங்குக்குத் தொடர்ந்த இந்திய ‘சோசலிஸ்டுகளின்’ 50 ஆண்டு ஆட்சியும், இந்தக் காலகட்டத்தில் இந்தியப் பெருமுதலாளிகள் அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவங்களுக்கும், உளவு நிறுவனங்களுக்கும் ஊழியம் செய்து தம் மக்களையே அழிக்கும் வேலைக்குக் கூலியாகப் பெற்ற நிதியும், இந்திய அரசிடம் கணக்குக் காட்டாது ’ஏற்றுமதி, இறக்குமதி’ வாணிபத்தில் ஈட்டிய லாபங்களும் எல்லாம் இந்த அன்னிய வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கணக்குகளில் சிக்கி இருக்கின்றன.

50 ஆண்டுகள் யாரும் இவர்களை எந்தக் கணக்கும் கேட்காத நிலை. அரசு ஊழியர்களும், அரசை நடத்திய அரசியலாளர்களும், அவர்களுக்கு உதவிய பெருநிதியாளர்களும் நம் நாட்டின் சாதாரண மக்கள் இவர்களிடம் கொடுத்த அதிகாரத்தையும், நம்பிக்கையையும் வைத்துக் கொண்டு பெருஞ்சுரண்டலில் இறங்கி இருக்கிறார்கள். ’வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் போய் முறையிட, பசவரே’என்று புலம்பும் நிலையில் நம் மக்கள்.

இந்த நிதியின் கணக்குகளை இத்தனை வருடமாகப் பொத்தி வைத்திருந்தன யூரோப்பிய வங்கிகள். சமீபத்தில் உலகில் எங்கும் நடக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கிய யூரோப்பியரும் அமெரிக்கரும், பிரிட்டனும் பீதி கொண்டு, இனியும் பயங்கரவாதிகளுக்கு யூரோப்பிய, அமெரிக்க பிரிட்டானிய வங்கிகளில் இருந்து நிதி பாயாமல் இருக்கத் தடுப்பு முறைகளை நிறுவத் துவங்கி இருக்கின்றனர்.

இப்போதும் கவனியுங்கள், அவர்கள் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் பல சர்வாதிகாரிகள், கொள்ளையர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பெருந்தனக்காரர்கள் தம் நாட்டு மக்களைச் சுரண்டி அந்த வங்கிகளில் பதுக்கியுள்ள பெருநிதிகளை வெளிக்கொணர்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. தம் நாட்டுப் பணம் கணக்கில் வராமல், வரி முறைகளுக்கு ஆட்படாமல் இருப்பதையும், தம் நாடுகளைத் தாக்கக் குறி வைக்கும் பயங்கரவாதிகளின் கூட்டங்களுக்கு நிதி பட்டுவாடா செய்யப்படுவதையும் தடுப்பதில் மட்டுமே இந்த நாடுகள் கவனம் செலுத்துகின்றன. பிற நாடுகளில் தாக்குதல் நடத்த பயங்கர வாதக் கும்பல்களுக்கு நிதி போகிறதா?  அதை ஒரு தகவலாகச் சேகரித்துக் கொள்வர் இந்த நாட்டு உளவு நிறுவ்னங்கள், ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். பிற நாடுகள் நிலை குலைந்து நின்றால், வெள்ளை ஏகாதிபத்தியம் வலுவாகத்தானே நிற்கும்? அதை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இவர்கள் உட்கிடை.

காட்டாக, பம்பாயில் நடத்த பயங்கரத் தாக்குதல் குறித்து அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு முன்கூட்டித் தெரியும், ஆனால் நமக்கு எந்தத் தகவலும் கொடுப்பதை அவசியமாக அவர்கள் கருதியதில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை பயனுள்ள முறையில் தருவதும் அவர்கள் வழக்கமில்லை. தெரிந்தால்தான் என்ன இந்திய அரசு உடனே இயங்கி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமா என்ன?  உள்ளூர் அரசியலில் தனக்கு ஆதாயம் இருந்தால்தான் இந்த அரசு ஏதும் நடவடிக்கை எடுக்கும். இல்லையேல் சாக்ப் போவது யாரோ ஏழை பாழைகள் நமக்கென்ன என்ற மெத்தனம் நம் நாட்டு உயர் மட்டத்தில் நன்கு பரவி இருக்கிறது. அவர்கள் நம் மக்களையும் நாட்டையும் தமது காலனி (ணி?) போலத்தான் பாவிக்கிறார்கள். இவர்களோ?  அன்னியரையும் விடக் கேவலமாகவே தம் மக்களை நோக்குகிறார்கள் என்பது இப்போது உறுதியாகி விட்டது.

இருந்தும் ஒரு முறை மேற்படி மேலை அரசுகளின் வலுக்கட்டாயத்துக்கு இணங்கித் தம்மிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. பல நாடுகள் இந்தத் தகவலைப் பெற விண்ணப்பித்திருக்கின்றனவாம்.

ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள் என்கிறார் வைத்யநாதன்.

ஆம், அது இந்தியாதான்.

இந்திய அரசு இந்தக் கள்ளக் கணக்குகள் யார் யாருடையவை, எத்தனை வருடங்களாக அங்குள்ளன, எத்தனை தொகை அதில் உள்ளது, இதை எப்படி கணக்கிட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவது என்பன போன்ற துப்புத் துலக்கும் நடவடிக்கைகளில் இறங்கச் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

இது ஏன் என்று இக் கட்டுரையில் கேட்கிறார் வைத்யநாதன்.

இனி கட்டுரையின் சுருக்கம்.

முன் சொன்ன மாதிரி, உலகில் பெரும் ஊழல்கள், சதிவேலைகள், குற்ற நடவடிக்கைகள், பயங்கரச் செயல்கள் ஆகியனவற்றுக்கு இந்த நிதிக் குவிப்பு இத்தகைய உலகவங்கிகளில் இருந்து உலகெங்கும் பாய்கிறது. இந்த வங்கிகள் எந்த அரசுக்கும் தம்மிடம் இருப்பது என்ன வகைப் பணம் யாருடையது என்று யாருக்கும் கணக்குத் தெரிவிக்கத் தேவை இல்லாத வகைச் சட்ட அமைப்பு கொண்ட நாடுகளில் உள்ளன. அந்த நாடுகளின் பொருளாதார அமைப்பே இந்தக் கொள்ளை நிதி அந்நாடுகளில் குவிந்திருப்பதை நம்பித்தான் உள்ளது என்பதால் அந்நாட்டு அரசுகள் இந்த நிதி பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

சமீபத்தில் ஜெர்மன் உளவு நிறுவனம் மேற்படி வங்கி ஒன்றின் கணக்குகள் பற்றித் தகவலை உளவாகச் சொல்லிக் கொடுத்த ஒருவருக்கு சுமார் 6 மிலியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்தக் கணக்குகள் பற்றிய தகவலைச் சேகரித்தது. இந்தத் தகவலை வேறு நாடுகளின் அரசுகள் கேட்டால் கொடுப்பதாகச் சொல்கிறது ஜெர்மனியின் அரசு. எந்த நாடு இதைப் பற்றிக் கவலையே படவில்லை?

இந்தியாவும் இந்திய அரசும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும்தான் அப்படி ஒரு அலட்சியத்தில் இருக்கிறார்கள் என்கிறார் வைத்யநாதன். இது ஏன்? அரசின் உயரதிகாரிகளில் இருந்து ஏராளமான உயர் நிலை அரசியல்வாதிகளுக்கும் இத்தகைய திருட்டுக் கணக்குகளில் பெரும் செல்வம் குவிந்திருக்க வேண்டும் என்பது அவர் ஊகம்.  இல்லையேல் ஏன் இந்த மௌனம், அலட்சியம்?

இந்தச் செய்தி பொதுவில் 2009 இல் ஜெர்மன் அரசால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய தொலைக்காட்சி ஊடகங்களில் சிலவும், பத்திரிகைகளில் சிலவும் இந்தத் தகவலைப் பெற்றிருக்கின்றன. அவை எவையும் இதுவரை இந்தத் தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொடுக்கவேயில்லை. அது ஏன் என்பது திரு.வைத்யநாதனின் கேள்வி.

அண்டிகுவா, ஸ்விட்சர்லாந்து, பஹாமா தீவுகள், லைக்டென்ஷ்டைன், மான் தீவு, செயிண்ட் கிட்ஸ் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள இந்த வங்கிகளில் பல ல்ட்சம் கோடி ரூபாய்கள்,  கணக்கில் வராத பணம், இந்தியர்களின் கணக்குகளில் கொட்டி வைக்கப் பட்டிருக்கிறதென்று நமக்குத் தெரியும், ஆனால் யார் யாருடைய கணக்குகள், எத்தனை ஆயிரம் கோடிகள் எவ்வளவு வருடங்களாக அந்தப் பணம் அப்படிக் கொட்டி வைக்கப் பட்டிருக்கிறது? இன்னும் தகவல் வெளி வரவில்லை. இந்திய அரசு பெரும் மௌனம் காக்கிறது. இது ஏன்? ஊடகங்கள் ஏன் மௌனம் காக்கின்றன? இந்திய மக்கள் ஏன் இது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள்? இந்திய அரசியலில் பெரும் முற்போக்கு வேடம் தரித்து உலாவும் கட்சிகள் இது பற்றி ஏன் ஏதும் பேசுவதில்லை? சமத்துவ ஜோதிகள் தாம் என்று மார் தட்டும் இந்திய அறிவாளர்கள்? பல பெரும் மாநகரப் பல்கலைகளில் சமூக நீதியின் காவலர்களாகத் தம்மை அறிவிக்கும் அறிவுக் கொழுந்துகள்? ஏன் எவரும் போராட எழுந்து வரவில்லை?

கோவில்களின் சுரங்க அறைகளில் கண்டு பிடித்த பொற்குவியலை உடனே அரசுடைய கையகப்படுத்து என்று பொங்கி எழும் பகுத்தறிவுக் கொழுந்துகள்  இந்த பல லட்சம் கோடி ரூபாய்க் கொள்ளைப் பணம் உள்ள அன்னிய வங்கிக் கணக்குகளை அரசு கையகப் படுத்தச் சொல்லி ஒரு முணுமுணுப்பு கூடக் காட்டவில்லை, தெருவில் இறங்கிக் கொடியும் பிடிக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ பகுத்தறிவுப் பகலவர்களான அவர்களின் தலைவர்களே இந்தக் கொள்ளையர்களின் கூட்டாளிகள் என்பது?

HSBC என்ற பெயர் கொண்ட வங்கியில் சுமார் ஆயிரம் கணக்குகள் ஸ்விட்சர்லாந்தில் இந்தியர்களின் கணக்குகள் என்று தகவல் சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. யார் இவர்கள், எத்தனை தொகை? இந்திய அரசு மௌனம் காக்கிறது. ஃப்ரெஞ்சு அரசு இந்தத் தகவலை இந்திய அரசுக்குக் கொடுத்தாயிற்று, இருந்தும் இந்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகவோ, எடுக்கப் போவதாகவோ பேசக் கூட இல்லை. ஏன்?

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நினைவிருக்கும். இதில் ஹாசன் அலி என்பார் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. . இந்தியாவின் பெரும் ‘புகழ்’ பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றின் கை இங்குள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஊழல் சம்பந்தப்பட்ட நிதியிலிருந்து சமீபத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் (2G) ஊழல் வரை உள்ள எல்லாவற்றையும் எடுத்தால் சுமார் 500 பிலியன் டாலர்களிலிருந்து 1500 பிலியன் டாலர்கள் வரை சுரண்டப்பட்ட நிதி இந்தக் கணக்குகளில் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்தக் கள்ளப் பணம் இந்தியாவை எப்படி எல்லாம் சீரழிக்க முடியும், அது ஏற்கனவே இந்தியாவில் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்று இந்தக் கட்டுரையில் திரு.வைத்யநாதன் சுட்டி இருக்கிறார்.

இந்தக் கட்டுரையை இங்கே படியுங்கள்:

http://www.firstpost.com/politics/who-is-govt-shielding-in-hsbc-liechtenstein-tax-haven-lists-97183.html

இது ஒரே ஒரு வங்கியில் உள்ள பணக்குவிப்பு. இதர வங்கிகளில் இன்னும் எத்தனை நிதி குவிந்திருக்கும் என்று யோசித்தால் நம் மூச்சு முட்டிப் போகும். இந்த நேரத்தில் திரு. சுப்ரமண்யன் சுவாமி சமீபத்தில் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருக்கு மட்டுமே 36,000 கோடி ரூபாய்களுக்கு மேல் நிதி இத்தகைய கணக்குகளில் இருக்கலாம் என்றும், அதற்கான ஆதாரங்களைத் தாம் உயர் நீதி மன்றத்தில் கொடுக்கப் போவதாகவும் சொன்னதையும் நினைவு கொள்ளுங்கள்.அடுத்த நாளே அவர் மீது ஒரு குற்ற வழக்கு பதியப்பட்டு அவரைச் சிறையிலடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இத்தனை நாளாக அவரை விட்டு வைத்திருந்தார்கள், அதுவே அதிசயம்.

இந்திய நீதி மன்றங்களில் போய்த் தகவலை வெளியிட இவருக்கு வாய்ப்புக் கொடுக்க நம் அரசியலாளர்களுக்கு எப்படி மனம் வரும்?

இன்னும் இந்தியாவின் படித்த மக்கள் கூட்டம் அமைதி காத்தால் யார் இந்தியாவைக் காக்கப் போகிறார்கள்?  லோக்பால் சட்டங்கள் நம் ஜனநாயக அமைப்பைக் காத்து விடுமா?  இத்தனை பெரும் நிதிக் குவிப்பை யார் நடவடிக்கை எடுத்துக் கலைத்து நம் மக்களுக்குச் சேர வேண்டிய நிதியாகக் கையகப் படுத்தப் போகிறார்கள்?

(முற்றும்)