தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி

[இதன் முதல் பகுதி சென்ற இதழில் வெளி வந்தது. அதை இங்கே படிக்கலாம் : தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… ]

கெ லீ: சரி மேற்குக்கு நகருவோம். கீழைய அறிவாளர்களையும், ஒடுக்குமுறையை அனுபவிக்காத மேலை அறிவாளர்களையும் பிரிக்கும் பெரும் இடைவெளி உண்டு. நீங்கள் தெளிவாகச் சொன்னதுபோல்: “அவர்களின் தலைகள் புத்தகங்களினால் நிரம்பி இருந்தும், அவற்றில் ஒன்று கூட சுதந்திரமின்மை என்றால் என்ன என்பதை இம்மியளவு கூட அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்யவில்லை.” இந்த இடைவெளி, இந்த நிரந்தரமான தவறான புரிதல் நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகி விட்டதா? தலை முழுதும் புத்தகங்களால் நிரம்பியும் சுதந்திரமின்மை என்றால் என்னெவென்றே சற்றும் அறியாத உங்களது மேலைச் சகாக்களோடு நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? அவர்களுடன் உரையாட எப்படி முடிகிறது? கடந்த 20 வருடங்களில் அவர்களிடம் எப்படிப்பட்ட உரையாடலை நடத்தி வந்திருக்கிறீர்கள்?

ஹெ மு: நான் எல்லோருடனும் உரையாட முயல்வதில்லை. அபிப்பிராயங்கள் எங்குமே சந்திக்க முடியாத அளவில் வேறுபட்டு இருந்தால், உரையாடுவதில் அர்த்தமே இல்லை. பொதுவாக மேற்கில், நீங்கள் எல்லோருடனும் எல்லாவற்றையும் பற்றி பேசவேண்டுமென்றும், அப்படி நீண்டும் அர்த்த பூர்வமாகவும் போதுமான அளவு பேசினால் எல்லாவற்றையும் விளக்கி இணக்கத்தை அடையலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இது நிஜம் அல்ல. நான் பலசமயங்களில் மிக எளிமையாகச் சொல்வது இது, “இன்னின்னாருடன் நான் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.” ஆனால் இதெல்லாம் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சர்வாதிகார அடக்குமுறையை அனுபவித்திருக்கிறார்களா என்பதை மட்டுமே சார்ந்தது அல்ல. சர்வாதிகாரத்தை அனுபவிக்காத பலரும், இந்தப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டு இதை புரிந்துகொள்கிறார்கள். அதேபோல சர்வாதிகாரத்தை அனுபவித்த பலர் இதைப் பற்றி ஒன்றுமே புரியாதவர்களாய் இருக்கிறார்கள்.

கெ லீ: ஒருவேளை நீங்கள் ஜெர்மனியில் பிறந்திருந்து இங்கு (ரொமனீயாவில்) ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்படாமல் இருந்திருந்தால், உங்களுக்கும் புரிதல் குறைவாக இருந்திருக்குமா? வாழ்வையும் சாவையும் பற்றி இன்னும் குறைவாக உணர்ந்திருப்பீர்களா? உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் கிட்டியதற்கு, உங்களது துன்பம் தகுதியான விலை என கருதுகிறீர்களா?

ஹெ மு: நான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது. இன்னொருவரை இழிவுபடுத்துவதை எதாலும் நியாயப்படுத்த முடியாது. மிருகக் காட்சிசாலையில் ஒரு கூண்டின் முன் நின்று, “ நான் அதிக நுண்ணுணர்வும், அசாதாரணமான உள்ளமும் உடையவள். நான் சாதாரண மக்கள் எப்படி நடந்துகொள்கி றார்கள் என்று கண்காணிக்கிறேன்,” என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? எனக்கு இதிலேதும் புரியவில்லை. நான் கூண்டுக்குள் இருப்பவர்களில் ஒருத்திதானே தவிர. கம்பிகளின் வெளியே நின்று பார்ப்பவளில்லை. நான் என்ன செய்தேன் என்பதே கூட எனக்குப் புரியவில்லை.

நான் ரொமனீயாவில் இருந்தபோது, பகலில் நடந்தவற்றைப்பற்றி இரவில் நினைக்க ஆரம்பித்தேனானால் அவை எல்லாம் என் மண்டைக்குப் பிடிபடவே இல்லை. எனக்கு அதைவிட விரிந்த கால இடைவெளிகளைப் பற்றி யோசிப்பது என்பது சாத்தியப் படவுமில்லை. மிகக் குறிப்பிட்ட, சின்னஞ் சிறு விஷயங்களின் குவிப்பே எனக்குப் போதுமானதாக இருந்தது. எனனால் சிந்திக்க முடியவில்லை, சமாளிப்பதே பெரிய வேலையாய் இருநதது, அதுவே என் தலைக்குள் தோன்றிய அனைத்தையும் உறிஞ்சிக்கொண்டிருந்தது. எனக்கு இலக்கியமே தேடுதலுக்கான ஒரு வழிதான் என நினைக்கிறேன். நம் இந்த் வாழ்க்கை என்பதுதான் என்ன? நாம் எல்லாருமே, ஏன் நம் உடல் கூட ஒரு மர்மம்தான். நாம் எத்தனை நாள் வாழ்வோம், எந்த உடல் பாகங்கள் கெட்டுப் போகும், நம் அறிவை நம் எப்போது இழக்கத் துவங்குவோம் என்பது எதுவும் நமக்குத் தெரியாது. அதனால் இது போதும். நம் அனைவருக்குமே அதன் போக்கில் எழும் இத்தனை வாழ்க்கைப் பிரச்சினைகளிடையே, இந்த சர்வாதிகார அரசு புகுத்திய அரசியல் கண்காணிப்பை வேறு நாம் எதிர்க்க வேண்டி இருந்த நிலைமை அதனாலேயே மிகுந்த துக்ககரமானது. எனக்கு ஒன்றும் புரிந்திருக்கவில்லை. அதனால்தான் என்னையே கேட்டுக்கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். ‘அன்று என்ன நடந்தது?’ நான் புரிந்துகொண்டதெல்லாம் சுதந்திரம் முக்கியமானது என்பது மட்டுமே.

கெ லீ: “அவர்களின் தலைகள் புத்தகங்களினால் நிரம்பி இருக்கிறது ஆனால் அவர்களுக்கு சுதந்திரமின்மை என்பது பிடிபடவில்லை,” என்று நீங்கள் மேலைய அறிவாளிகளைப் பற்றிச் சொல்லும்போது, நீங்கள் தர்க்க நீட்சியாக, உலகத்தில் கடுமையான நிலையில் தள்ளப்பட்டவர்களையும், வாழ்வை மேம்போக்காக நடத்தி, சிக்கலற்ற, ரம்மியமான வாழ்வைக் கொண்டவர்களையும் வேறுபடுத்துகிறீர்கள். யாரும் அதற்காக அவர்களை கடிந்து் கொள்ளவில்லை, அது அவர்களுக்குச் சரித்திரததில் கிட்டிய நிலை. உள்ளபடிக்கு உங்களை நான் என்ன கேட்க விரும்பினேன் என்றால், கடுமையான சரித்திர காலங்களில் வாழ்ந்தவர்கள், தொல்லையில்லாத சரித்திர காலத்தில் வாழும் அதிருஷ்டம் உடையவர்களை விட, வாழ்வை அதிகம் புரிந்துகொள்கிறார்களா என்பதுதான்.

ஹெ மு: தனிநபர் தளத்தில்தான் நாம் பேசமுடியும் என்று நான் நினைக்கிறேன். எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் காணும் ’கம்யூனிஸத்துக்குத் திரும்பவேண்டும்’ என்ற அவாவை நாம் எப்படி விளக்குவது? சர்வாதிகாரத்துக்குக் கீழ்ப்பட்ட வாழ்வில் வாழும் மக்கள் ஏதேனும் படிப்பினை கற்கிறார்கள் என்றால், ஏன் இந்த திரும்பிப் போகும் ஏக்கம்? சிலர் எதையும் கற்காததின் காரணம் அவர்களே அந்த அமைப்பின் அங்கமாய் இருந்து விட்டு, அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் இருப்பது. கொஞ்சம் கற்றுக்கொண்ட மற்றவர்களும் இருக்கிறார்கள். இது தனி நபர்களைப் பொறுத்தது, யாரிடம் என்ன சொல்லப்படுகிறது அவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா என்பதையும், அவர்களின் அற மதிப்பீடுகளையும் பொருத்தது

கெ லீ: சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்ற முரண்மெய்யான நம்பிக்கையில் உங்கள் இலக்கியம் பிறக்கிறது.. நீங்கள் ஓரிடத்தில் சொன்னீர்கள்: ”சி்ந்தனையானது தனக்குள் உரையாடுகையில், சொற்களிடம் இருந்து முற்றும் மாறுபட்ட ஒரு வழியில் பேசிக் கொள்கிறது”. சொற்கள் துல்லியமானவை ஆனால் செயலோ ”மண்டைக்குள் ஓடும் ஒரு சத்தமில்லாத, குழம்பிய ஓட்டம். மேலும் சாரமான அல்லது திருகுதாளமாய் சுற்றி வளைத்த விஷயங்களை சொற்களில் வெளிப்படுத்த முடியாது.” அப்படியானால் சொற்கள் சக்தி இழந்து போனதாய் தோன்றும் தருணத்தில்தான் நீங்கள் எழுத ஆரம்பிக்கிறீர்கள். துவக்கத்திலேயே தோல்வி கண்டு விட்ட ஒரு போராட்டத்தில் நீங்கள் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். உங்களால் எப்படி எழுத முடிகிறது?

ஹெ மு : நான் சொல்ல விரும்புவதாய் நினைப்பதைச் சொல்ல சொற்களை வற்புறுத்தி எனக்கு உதவச் செய்கிறேன். ஒரு வாக்கியத்தைத் துவங்கும் போதுதான் அது என்ன சொல்ல வேண்டும் என்பதை கண்டு பிடிக்கிறேன். போகப் போக எனக்குப் புலப்படுகிறது. ஆகையால் எப்படியோ சொற்களை எனக்கு உதவ வைக்க வேண்டும், எனக்கு சரி என்று தோன்றும் வரை நான் தேடிக்கொண்டே இருக்கவேண்டும். எழுத்துக்கென்று ஒரு தர்க்கம் உண்டு, அது மொழியின் தர்க்கத்தை நம் மேல் சுமத்துகிறது. இனிமேல், ”பகல்” ”இரவு”, ”உள்ளே” “வெளியே” என்பன இல்லை. எழுவாய், வினைச்சொல், உருவகம், சொற்றொடருக்கு ஒரு தாளகதி கிட்டும் விதமாய் அமைத்தல்– இதெல்லாம் உங்கள் மேல் சுமத்தப்படும் விதிகள். ஓரு விதத்தில், மொழி என்பது என்னைச் சித்திரவதை செய்வது, என் அமைதியைக் குலைப்பது, இனி என்னால் தாளமுடியாது என்று ஆகும்வரை என் புத்தியைக் கசக்க உந்துகிறது; மறுபுறம், இப்படிச் செய்வது எனக்கு உண்மையில் உதவியாகவும் இருக்கிறது.இது ஒரு விவரிக்க முடியாத விடுபட முடியாத நச்சு வட்டம். தற்பொழுது, இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நான் ஒரு எழுத்தாளர் அல்ல. நான் என்னுடன் தனித்திருக்கும்போது மட்டுமே எழுத்தாளராகிறேன். இங்கு நாம் செய்து கொண்டிருப்பது வேறு தொழில் ஆகும்; இது ஒரு சர்க்கஸ்!

கெ லீ : இந்த சர்க்கஸை ஒரு கடினமான ப்ரச்சினையுடன் முடிப்போமா? கம்யூனிஸ ஆட்சியின் போது ரொமனீய எழுத்தாளர்களின் அரசியலற்ற நிலைப்பாட்டைப் பற்றி நீங்கள் அடிக்கடி பேசி, இது இழிவானது எனச் சுட்டியிருக்கிறிர்கள். எதேச்சாதிகார ஆட்சியில் அரசியல் பொறுப்புடைமை என்பதை எப்படி நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அதி்லோ, அரசியல் பொறுப்பேற்பது என்பது ஒன்றைத்தான் குறித்தது: கட்சித்தொண்டர் ஆவது அல்லது அதிகாரபூர்வமான பேச்சிலிருந்து சொற்தொடர்களை ஒப்பிப்பது. எங்களைப் போன்ற சிலர் எங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதைப் போல் நடக்காமலும் பேசாமலும் இருந்து அதன் வழியே ஒரு அடக்குமுறை சமுதாயத்தின் அடிப்படை விதிமுறையை மீறுவதாகவும், அதன் மூலம் எங்கள் அரசியல்சார்பை வெளிப்படுத்துவதாகவும் வெகுளித்தனமாய் நம்பினோம். இப்படி எங்கள் மொழியால் சோரம் போகாமல் இருந்தது மட்டும் போதாது என்று இப்போது வந்து எங்களிடம் நீங்கள் சொல்கிறீர்கள். எப்படி எழுத வேண்டுமென்று எங்களுக்குச் சொல்லப்பட்டதோ அந்த முறைக்கு மாறாய் எழுதியதும், எமக்கு விதிக்கப்பட்ட வழியிலிருந்து வேறுபட்டுப் பேசியதும், எங்கள் மனச்சாட்சிக்கு விரோதமான வார்த்தைகளை எப்போதும் பேசாததும் அரசியல் பொறுப்பேற்பது ஆகாது என்கிறீர்கள். ஆமாம், நீங்கள் சொன்ன சில விஷயங்களை வைத்துப் பார்க்கையில் எனக்குக்கூட இது குற்றமாய்க் கருதப்படக் கூடிய தவறுதல் எனத் தோன்றுகிறது.

ஹெ மு: அது போதுமானதாக இருந்திடவில்லை என்பதை நான் உணர்வது முக்கியமில்லை. அதை நீங்கள்தான் உணர வேண்டும்.

கெ லீ: ஒரு அடக்குமுறை அரசில், கருத்து வேறுபாடு கொள்வதைத் தவிர வேறு அரசியல் பொறுப்பு ஏற்பு என்பது எப்படி இருக்கும் என்று உங்களைக் கேட்டேன்.

ஹெ மு: ஒரே வகையான அரசு அமைப்பிருந்த இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ( போலந்த், ஹங்கரி, செக்கஸ்லோவாகியா, கிழக்கு ஜெர்மனியும் கூட) ரொமனீயாவை ஒப்பிட்டால், நாம் அனேக நாடுகளில் ஏதாவது பேசத் துணிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததைப் பார்க்கிறோம். ரொமனீயாவைப் பொறுத்தவரையில், ஒருமுகமாக்கப்பட்ட மாற்று வெளிப்பாடு என்று சொல்லக்கூடிய அளவில் எதுவும் இல்லை. தனிப்பட்ட சில நிகழ்வுகள் மட்டுமே இருந்தன. ராடு ஃபிலிப்பெஸ்கு, பாதிரி கால்சு-டுமிட்ரீஸ, அவரது முறை வந்த போது பவுல் கோமா. அவர்கள் தமக்கு நேர்ந்ததைத் தாமே சமாளிக்கும்படி தனியாக விடப்பட்டார்கள். யார் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்? இதர நாடுகளில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தும் இயக்கங்களும், ரகசியத்தில் கையெழுத்து/ வெளியீட்டு எதிர்ப்பு இலக்கியமும் (ஸம்யீஸ்டாட்) இருந்தன. ரொமனீயாவில் எதுவும் இருக்கவில்லை. தலையை நிமிர்த்தத் துணிந்தவர்கள் தனித்து அவரவர் விதிக்கு விடப்பட்டார்கள்.

நான் டிமிஷோராவில் இருந்தபோது ஒரு கிரமக் கதோலிக்கப் பாதிரி (Orthodox priest) பணம் வசூலிக்க வந்தார். எல்லா அழைப்பு மணிகளையும் அவர் ஒலித்தார். அவர் திருச்சபை வரி கேட்க வந்திருந்தார். ”(அரசாங்கத்துடன் வேறுபடுகிற) பாதிரியார் கால்சுவுக்காகப் பணம் வசூலிப்பதாக இருந்தால் மட்டுமே என்னிடம் வாருங்கள்,” என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் ஓடியே போய் விட்டார். மின்தூக்கிக்குக் கூட காத்திருக்கவில்லை. ஏதோ பேயைக் கண்டதுபோல் பயந்து ஐந்தாவது மாடியிலிருந்து படிகளிலே இறங்கி ஓடியே போனார். நமக்கு இப்போது கம்யூனிஸ ஆட்சியில் சர்ச் செய்தவைகளைப் பற்றியும் தெரியும். போலந்திலும், கிழக்கு ஜெர்மனியிலும் சர்ச்சுகளுக்குள் இயக்கங்கள் இருந்ததையும், தமது நேர்மையை அவை கடைப்பிடித்ததையும், இதோடு ஒப்பிடுங்கள்.

கெ லீ: நீங்கள் ரொமனீயாவில் இருந்தபோது உங்களை எதிர்த்து விலகியவர் (dissident) என்று நினைத்தீர்களா?

ஹெ மு: எதிர்த்து விலகியவள் என்ற முத்திரை வெளியிலிருந்து குத்தப்படுவது. நான் பொறுப்பேற்க முடியாத விஷயங்களைச் செய்யாமல், ஒரு வழமையான வாழ்க்கையை வாழ விரும்பினேன். தொழிற்சாலைகளில், கூட்டங்களில் நான் கண்ட அதிகார மோகம் கொண்ட அரசு ஊழியர்கள், இதர அற்பர்களைக்கண்டு எனக்கு அருவருப்பாய் இருந்தது… கடைகளுக்கோ, தபால்நிலையத்துக்கோ, மின்சாரக் கட்டணம் கட்டப் போகும்போதோ கூட அவர்கள் மக்களை, என்னை மன்னிக்கவும், மலத் துண்டுகள் போல நடத்தினர். இதுதான் என்னைப் புண்படுத்தியது.

கெ லீ: எங்களில் பலரையும் இது புண்படுத்தியது. நாங்களும் அருவருப்படைந்தோம்.

ஹெ மு: என்னால் வேறுவகையில் செயல்பட முடியாததற்கு இதுவே காரணம். நான் எதுவும் செய்யவில்லை, என்னால் இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே அவர்களிடம் சொன்னேன்: ”கனவான்களே, நீங்கள் எனக்கு அருவருப்பூட்டுகிறீர்கள்.” நான் வேறு என்ன செய்திருக்கமுடியும்? எனக்கு அருவருப்பூட்டும் ஒரு சமுதாயத்துக்கு நான் சேவை புரிந்திருக்கமுடியாது. மக்களுக்காக அனுதாபப்பட்டேன். ஒரு தொழிற்சாலையில் கூட வேலை செய்தேன். என் அதிருஷ்டம்- அல்லது துரதிருஷ்டம்- அறிவாளர்களில் பெரும்பாலருக்கும் கிடைக்காத ஒரு இடத்தில் நான் வேலை செய்தேன். வேலை செய்த இடங்களில் எல்லாம் என்னை வேலையிலிருந்து நீக்கியபடி இருந்ததால், சாதாரண மக்கள் பொருட்படுத்தும் விஷயங்களை அறியக்கூடிய இடங்களில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் வாழ்ந்த, வேலை செய்த இடங்களின் நிலமையைப் பார்த்து எனக்கு புத்தி கலங்கிப்போனது. தொழிற்சாலை அறை ஜன்னல்களில் கண்ணாடிகள் இல்லை. கடும் குளிர் இருந்து, அவர்கள் தொடர் கோர்ப்பு (assembly line) முறையில் வேலை செய்தனர். அவர்கள் ஊருக்கு வெளியே கிராமப்புறத்தில் வாழ்ந்ததால் வேலைக்கு விடிகாலை 4 மணிக்கு எழுந்து கிளம்பி வந்தனர். நாளைக் கடந்து முடிக்கவும், கைகள் குளிரால் விறைத்துப் போய் விடாமலும் இருப்பதற்காக அவர்கள் காலையிலேயே மது அருந்த வேண்டி இருந்தது. மின்சார வெட்டுக்கள் இருந்தனவா, அதனால் அவர்கள் நாள் முழுதும் ”திட்டத்தை நிறைவேற்ற” வேண்டி அங்கே (தொழிற்சாலை அறையில்) கழிக்க வேண்டி இருந்தது. ஆனால் அரசு மக்களை இழிவுபடுத்திக் கொண்டிருந்தபோது ”திட்டமா” முக்கியம்? இதை எல்லாம் பார்த்தபோது நான் சண்டை போட ஆரம்பித்தேன்: இயக்குனருடன், (திமிர் பிடித்த) துப்புரவாளருடன், எல்லோருடனும், தப்பு இருந்த எல்லா இடங்களிலும் நான் சண்டை போட்டேன்.

கெ லீ: ஆனால், நம்மில் பலருக்கும் இது நடந்திருக்கிறது.

ஹெ மு: நீங்கள் கோபப்பட்டிருக்கவேண்டும்! நீங்கள் ஏன் கோபப்படவில்லை? நான் தினமும் கோபப்பட்டேன் அவ்வளவுதான். இது செக்யூரிடாட்டேக்கு (ரொமனீய ரகசியப் போலீஸ்) பிடிக்கவில்லை.

கெ லீ: உங்களுக்குத் தெரியுமா, எனக்கும் கோபமும்,சோகமும் இருந்தது. நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் எதேச்சாதிகாரத்துக்குட்பட்ட சமுதாயத்தின் அரசியல் சார்பைக் கேள்விக்குட்படுத்தும்போது, நம்மில் ஒவ்வொருவரும் அவரவரது வழியில் அபாயங்களை எதிர்கொண்டிருக்கிறோம், மேலும் பலர் தம்மை களங்கப்படுத்திக் கொள்ளாமல் அந்தப்பக்கத்துக்கு தாண்டி இருக்கின்றனர் என்பதையும் யோசனை செய்யலாம். ஒவ்வொருவரும் அவர்களது கதையைச் சொன்னால் ( சிலர் ஏற்கனவே அதை செய்திருக்கிறோம்) விஷயங்கள் சிலசமயங்களில் தோற்றம் தருவதை விடக் குறைவாகவே எளிமையானவை என்று புரியும். மொழியுடன் தமக்குள்ள உறவை மதித்தவர்கள், மொழியை அழித்த சமன்பாடுகளில் நுழைய மறுத்தவர்கள், அதிகாரபூர்வமான மொழியை ஒரு போதும் கடன்வாங்காதவர்கள், இவர்களா நீங்கள் குறிப்பிடும் “ஒட்டுண்ணிகள்”? அந்த காலகட்டத்தில் பிறந்த ஒவ்வொரு புத்தகமும் -சுத்தமான, நல்ல, அருமையான புத்தகம், ஒவ்வொன்றும்- நாம் வாழ்ந்த அந்த உலகை மறுக்கும் வழி என்று நீங்கள் நினைக்கவில்லையா?

ஹெ மு: இல்லை. அது அதைத் தவிர்க்கும் ஒரு வழி. ’ ஆணைக்குத் தக்கபடி’ உருவாக்கியவர்களைத் தவிர வேறு எந்த இலக்கியவாதியையும் நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால் நீங்கள் பாராட்டச் சொல்வன அவ்வளவுக்குத் தகுதி உள்ளனவாக எனக்குத் தெரியவில்லை.

கெ லீ: நான் அதைப் பாராட்டச் சொல்லவில்லை, குற்றம் சாட்டவேண்டாம் என்றுதான் சொன்னேன்.

ஹெ மு: தமக்குத் தாம் உண்மையாய் இருந்ததற்கு அது ஒரு வழி எனினும் அது மிகக் குறைவானது, அது சர்வாதிகார அரசை எதிர்க்கவில்லை. அவர்கள் தங்களை மாசுபடுத்திக்கொள்ளவில்லை என்பது சொந்த விஷயம். ஆனால் அது சௌஷெஸ்கூவையோ அல்லது எங்கும் இருந்த செக்யூரிடாட்டேவையோ தொந்தரவு செய்யவில்லை. பலரும் அதை எதிர்த்திருந்தால் இந்த சர்வாதிகாரம் அத்தனை கொடியதாக ஆகி இருக்க முடியாது. கிழக்கு ஐரோப்பாவில் வேறு எங்குமே மக்கள் தங்களது தட்டச்சு இயந்திரத்தை வருடந்தோறும் போலிஸிடம் எடுத்துப் போய் அதை உபயோகிக்க அனுமதி கோரத் தேவை இருக்கவில்லை.

கெ லீ: நீங்கள் சென்றீர்களா?

ஹெ மு: நிச்சயமாய் போனேன்.

கெ லீ: நான் போகவில்லை.

ஹெ மு: நீங்கள் ஒரு எதிர்ப்பாளராக இருந்தீர்களே!

கெ லீ: அதைத்தான் இப்போது விளங்கிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் போனீர்கள்?

ஹெ மு: தட்டச்சு இயந்திரத்தை உபயோகிப்பதற்காகத்தான். அதை உபயோகித்தேன் என்பதற்காக என்னைக் கைது செய்யப் போவதாக அடுத்த நாளே அவர்கள் சொல்லாமல் இருப்பதற்காகத்தான்.

கெ லீ: நீங்கள் எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும், ஆபத்தை ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும், அவமானத்தைச் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.

ஹெ மு: நான் எதிர்ப்பாளராகக் கூட இல்லையோ என்னவோ? தூய்மையான மொழியை உபயோகித்து புத்தகம் எழுதிய அவர்கள்தான் எதிர்ப்பாளர்களோ என்னவோ. நான் எதிர்ப்பாளராக இருக்க விரும்பவில்லை. நான் செய்யாத விஷயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டி இருக்காமல், பிறரிடம் எனக்கு அருவருப்பூட்டிய விஷயங்களை செய்யாமல் இருக்கும் வகையில் வாழ முயற்சித்தேன். அது போதுமானதாய் இருந்தது.

ஒரு முறை நான் ஒரு சிறு குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தில் வேலை செய்தேன். குழந்தைகள் தேசியப்பாடலைப் பாட வேண்டி இருந்தது, அதுவோ நீளமாகிக்கொண்டே இருந்தது. நாடு மோசமாக ஆக , அவர்கள் தேசியப்பாடலுக்கு புதுப் பத்திகள் சேர்த்துக்கொண்டே இருந்தனர். சில நாட்கள் வேலை இல்லாமல் இருந்து, பின்பு நான் அங்கு வேலைக்குப் போனதால், எனக்கு தொடர்பு விட்டுப்போயிருந்தது. சிறு குழந்தைகளின் பள்ளியில் சூழல் மேலாக இருக்கும் என்று நினைத்தேன். அவர்கள் சிறியவர்கள், சில விஷயங்களை அங்கு செய்யலாம், அதிகாரவர்க்கத்தின் குறுக்கீடு இருக்காது என்று நினைத்தேன். ஆனால் அதுவும் அத்தனை மோசமாகத்தான் இருந்தது. காலையில் அவர்கள் தேசியப்பாடலைப் பாடினார்கள். இயக்குனர் ”முதல் வேலையாய் நாம் தேசியப்பாடலை பாடுவோம், காம்ரேட்,” என்று சொன்னார். முதல் நாள் நான் குழந்தைகளுக்கு ஷ்னீஃப்லோக்சென், வெய்ஸ்ராக்சென் என்று ஒரு குட்டிப்பாட்டை சொல்லிக் கொடுத்தேன். அது ஒரு குளிர்காலப் பாடல். அன்று முழுதும் அந்தப் பாட்டை, ஷ்னீஃப்லோக்செனையும் வெய்ஸ்ராக்செனையும் திரும்பத் திரும்பப் பாடினோம். குழந்தைகளுக்கு இது பழக்கமானதாய் இல்லை. பனித்துகள்கள் எதற்கு பனி ஆடைகளை அணிகின்றன என்று அவர்களுக்கு விளக்க வேண்டி இருந்தது. அவர்கள் அது போன்ற எதையும் என்றும் கேட்டிருக்கவில்லை. வருடங்களாய் அவர்களுக்கு அரசியல் மயக்கக் குப்பையே சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களின் ‘தாயை’ப்பற்றிய பாடல்கள், அவற்றில் ’எலெனா’ என்ற பெயர் திடும் என்று மூன்றாவது பத்தியில் முளைக்கும், முதல் சில பத்திகளுக்குப் பின் வராது என நினைத்திருப்போம், ஆனால் பின்பும் வந்தே தீரும். அடுத்த நாள் நான் தேசியப்பாடலைப் பாட விரும்பவில்லை. ”ஷ்னீஃப்லோக்சென், வெய்ஸ்ராக்சென் பாட்டு உங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கிறதா?” என்று அவர்களைக் கேட்டேன். ஒரு குழந்தை சொன்னது “முதலில் நாம் தேசியப்பாடலைப் பாடவேண்டும் காம்ரேட்..” அதனால் ”சரி பாடுங்கள்,” என்றேன். எல்லோரும் அரைவட்டமாய் நின்று, உடல்களை ஒட்டித் தங்கள் கைகளை ராணுவ வீரர்கள் போல நீட்டிக்கொண்டு, பாடலை உரக்கக் கத்த ஆரம்பித்தனர். எனக்கு அழ வேண்டும்போல் இருந்தது. இத்தனை சிறியவர்கள் ஆனால் ஏற்கனவே இத்தனை தூரம் ஆட்டிப் படைக்கப்பட்டிருந்தனர். இரண்டு பத்திகளுக்குப் பிறகு ”நல்லது. இது போதும்” என்றேன். ஆனால் இன்னொரு குழந்தை ‘ காம்ரேட், முழுப்பாடலையும் கடைசி வரையில் நாங்கள் பாட வேண்டும்,” என்றது. ‘சரி பாடுங்கள்,” என்றேன். முடித்தபின் ”எங்களுடைய இன்னொரு காம்ரேட் டீச்சர் எங்களுடன் பாடுவார். நீங்கள் ஏன் பாடவில்லை” என்று என்னைக் கேட்டனர். ”நான் தொனிச் செவிடு, எனக்குப் பாட வராது, நீங்கள் பாடுவதை நன்றாய் கேட்பதற்காகத்தான் நான் பாடவில்லை,” என்று சொன்னேன்.அந்த வயதிலேயே, அந்தக் குழந்தைகள் நான் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு சூழ்ச்சிக்கு ஆட்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்தது என்னைச் சிதைத்தது.

கெ லீ: அந்தக் குழந்தைகளுக்கு இப்போது 25 வயது.

ஹெ மு: ஆமாம். அந்தச் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் எப்போதுமே மீளாமல் இருக்கலாம். அது இன்று அவர்களது பெற்றோர்களும், பாட்டி, தாத்தாக்களும், அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மற்றவர்களும் அவர்களிடம் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.

கெ லீ: அப்படியானால் இன்றைய இந்த ஸர்க்கஸுக்கும் ஒரு பயன் இருக்கிறது. அவர்களுக்கு இது சில விஷயங்களைச் சொல்லலாம்.

ஹெ மு: எனக்குத் தெரியாது, இருக்கலாம்.

(முற்றும்)