சீனா – கல்வியும் இடப்பெயர்வும்

கிராமப்பள்ளிகள் மூடப்படுவது சீன விவசாயிகள் இடம்பெயர்வதற்கான முக்கிய காரணமெனக் கண்டறிந்துள்ளனர். இன்னொரு காரணம், பள்ளிகள் சரியாக நடந்தாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இருக்கையில், சரியான போக்குவரத்து வசதிகளில்லாத காரணத்தினால் பல குடும்பத்தினர் இடம்பெயர்கிறார்கள். ஆக, பள்ளிக்கு நடப்பதில் அதிக தூரம் என்பது கிராமப்புறங்களில் மேம்பாடுகளின்றி இருப்பதற்குக் காரணமும் ஆகிறது. ஒரு புறம் மேம்பாடு இல்லாததால்தான் இப்படி பள்ளிகள் தூரத்தில் அமைந்திருக்கின்றன என்று நாம் பார்க்கலாம். ஆனால் பள்ளிகளுக்கு நடக்க தூரம் அதிகம் என்ற காரணத்தால் நிறைய இளைஞர்களும், சிறு குழந்தைகள் இருக்கும் குடும்பங்களும் இடம் பெயர்ந்தால் கிராமம் படிப்படியாக அதன் ஜீவனை இழந்து போய் கிழத்தனம் தட்டி நிற்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். அதுவே வளர்ச்சி, மேம்பாடு ஆகியனவற்றை மேன்மேலும் தடுக்கும்.

வீட்டிலிருந்து பள்ளியிருக்கும் தூரம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடிருக்கும் தொலைவு, தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிள்ளைகள் சேர்ந்து படிக்கவும், நிறுத்தாமல் தொடரவும் முக்கிய காரணியாகிறதென்று கண்டறிந்துள்ளனர். கிராமத்தில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவோ, பெற்றோர் கூட்டிக் கொண்டு போய் விடவோ சில கிலோமீட்டர் தூரமாவது செல்ல வேண்டியுள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தான் இது மிகவும் சிரமமாக இருக்கிறது.

சராசரியாக பள்ளிக்குப் போகும் பேருந்து நிறுத்துமிடம் 6.8 கிலோமீட்டர் தொலைவிலும், தொடக்கப் பள்ளி 3.6 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்நிலைப்பள்ளி 10.4 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கின்றன. மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இந்த தூரங்கள் சராசரியாக 7.5 கிமீ, 3.9 கிமீ மற்றும் 1.2 கிமீ. இங்கு குறிப்பிடப்படும் தூரங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் நடக்கும் போது இன்னும் தூரமாகத் தெரியும்தான். அந்த வகையில், மலைப்பாங்கான கிராமங்களைவிட சமவெளி கிராமங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு 1.2 கிமீ குறைவாகவும் ஆரம்பப்பள்ளிக்கு 1.1 கிமீ குறைவாகவும் மேல்நிலைப்பள்ளிக்கு 4.3 கிமீ குறைவாகவும் நடக்க வேண்டியுள்ளது.

நகரங்களில் இடம்பெயர்ந்தோரை வெறுத்து வேற்றுமை பாராட்டும் போக்குகள் தொடர்ந்து நீடிக்கின்றன. சட்டங்கள் சொல்வதற்கும் நடைமுறைகளுக்கும் அகல இடைவெளி இருப்பதே சீனாவின் இயல் தன்மை. சட்டப்படி குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியுரிமை உண்டு. ஆனால், உண்மையில் நடப்பதென்னவென்றால், இடம்பெயர்வோரின் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியுரிமை கூட மறுக்கப் படுகிறது. இருந்தும் பிள்ளைகுட்டிகளை நகருக்குக் கூட்டிக் கொண்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரிகிறது. இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை 7.5 – 20 மில்லியன் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

உள்நாட்டு இடப்பெயர்வுகள் குறிப்பிடும் அளவில் அதிகரிக்கத் தொடங்கிய 1980-1990களின் காலகட்டங்களில் இடம் பெயர் தொழிலாளிகள் நகருக்குப் புதியவர்கள். அவர்களின் பங்களிப்பின் மகத்துவம் உணரப்பட்டது. வருடங்கள் உருள உருள இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கண்டபடி கூடியதில் நகரில் அவர்கள் இருப்பது நகரவாசிகளால் இடைஞ்சலாகப் பார்க்கப்பட்டது. அப்போதும் இடம்பெயர்ந்தோரின் பிள்ளைகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்றதில்லை. அன்றிலிருந்து இன்று வரைக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு காட்டும் அக்கறை கிட்டத்தட்ட பூஜ்யம். அவ்வந்த வட்டார நிர்வாகமே குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பு என்பதே நிலவரம். அந்த நிர்வாகமோ உள்ளூரில் குடியுரிமை உள்ளவர்களுக்கே எந்த வசதிகளையும் கொடுக்கும், இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை.

நகரப் பள்ளிகளில் இடமில்லாமை:

சீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படைச் சட்டம். இருப்பினும், அவரவர் தம் ஊரில் குடி இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.

இடம்பெயர்ந்தோரது பிள்ளைகளை நகரில் சேர்க்க வேண்டுமானால், முதலில் தற்காலிகமாகப் பள்ளியில் பயில விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்தால் படிக்கலாம். அனுமதி கிடைத்தாலும் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது எப்போதுமே கடினம். கிடைத்தாலும் இந்தக் கட்டணங்களெல்லாவற்றையும் தவிர கூடுதலாகச் சில கட்டணங்களும் டொனேஷனும் கட்ட வேண்டியதிருக்கும். வட்டாரத்துக்கு வட்டாரம் இந்தத் தொகை மாறுபடக்கூடியதாக இருக்கிறது. கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம் என்கிறார்கள் அதிகாரிகள்.

அனுமதி கிடைக்காவிட்டால், பிள்ளைகளை என்ன செய்வதென்று மாற்றுத் திட்டம் ஒன்றும் அதிகாரிகளால் சொல்லப்படுவதில்லை. விதிமுறைகளிலும் இல்லை. அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவிட வேண்டியது தான் என்பதே மறைமுகமாகச் சொல்லப் படுகிறதோ என்கிறார்கள் குடிமக்கள். 2002ல், 6-14 வயதுடைய பேய்ஜிங்கின் இடம்பெயர் பிள்ளைகளில் பெரும்பாலோருக்கு முறையான கோப்புகள் இருக்கவில்லை. 12.5% பேருக்கு தான் நகரப்பள்ளிகளில் அனுமதி வழங்கப்பட்டது. முறையான கோப்புகள் இல்லாமலோ அனுமதியில்லாமலோ குறுக்குவழியில் இடம் கொடுக்கப் பட்டாலும் எப்போது உள்ளூர்வாசிகள் குழந்தையைச் சேர்க்கக் கூட்டிக் கொண்டு வந்தாலும், தற்காலிக அனுமதியுடன் சேர்ந்திருந்த (இடம் பெயர்ந்தோர்களின்) பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து வெளியேற்றத் தயங்கவே மாட்டார்கள்.

கல்விக்கு ஹுகோவ் என்னும் தடைக் கல்:

குறுகிய கால இடைவெளியில் வளர்ந்து விட்டதால், பல வளர்ந்த நாடுகளைவிட அதிகமாக நகரமயமாகும் பேராசை அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்டில், சீரற்ற பொருளாதார வளர்ச்சியினால் சில நகரங்களில் மட்டுமே முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் குவிகின்றன. இதன் காரணமாக அந்தப் புள்ளிகளை நோக்கிய மனித இடப்பெயர்வுகளும் கண்டபடி கூடியே வருகின்றன, குடும்பத்தோடு கிளம்பும் தொழிலாளி தனது குழந்தைகளின் இலவசக் கல்வி என்ற சலுகையைக் கிராமத்திலேயே விட்டுவிட நேர்கிறது. வேலைக்கென்று போகும் ஊரில் அவனே ஓர் அந்நியன்; அல்லது ஓர் அகதி. வேற்றூரில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி பெரும்பாலும் மறுக்கவே படுகிறது. தனியார் பள்ளிகளில் சக்திக்கு மீறிச் செலவிட்டு தான் அவன் தன் பிள்ளைகளுக்கான கல்வியை ஈட்டுகிறான்.

பெரும்பாலான இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகள் ‘விவசாய’ ஹுகோவ்வில் தான் இருப்பார்கள். என்ன துயரமான வேடிக்கையென்றால், அவர்களில் பெரும்பாலோருக்கு விவசாயம் குறித்து ஒன்றுமே தெரியாது. இளம் வயதில் பள்ளிப்படிப்பு முடித்து நகரத்துக்குப் பிழைப்புக்காகப் போனவர்கள் பலர். இவர்கள் பெற்றோரின் விவசாய அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். ஆண்டுக்கொரு முறை ‘மறுகூடல்’ விருந்துக்கு கிராமத்துக்கு பெற்றோருடன் போகும் போது தான் இவர்கள் வயல்வெளிகளையும் விவசாயச் சாதனங்களையும் வளர்ந்தவர்களின் கோணத்தில் பார்த்திருக்க வழியுண்டு.
1990களின் இறுதிகள் வரைக்கும் குழந்தைக்குத் தாயின் ஹுகோவ் தான் பின்பற்றப்படும் என்ற விதியிருந்தது. வசதியிருந்தவர்கள் இன்று போல அன்றும் குறுக்கு வழியில் ஹூகோவ்வை மாற்றினர். கிராம ஹூகோவ்வுக்கு மட்டுமல்ல பிரச்சினை. ஷாங்காய் ஹூகோவ் வைத்திருக்கும் ஒருவர் அதைப் பேய்ஜிங் ஹூகோவ்வாக மாற்ற நினைத்தாலும் இதே தான் சிக்கல். கிராமத்திலிருந்து பெருநகருக்கென்றால் வாய்ப்பே கிடையாது. சிறுநகரிலிருந்து பெருநகருக்கு ஹூகோவ்வை மாற்றுவது சற்றே சுலபம்.

ஃபிலிப்பைன்ஸ், இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளில் 80% பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு வரை கல்வியை முடித்துள்ளனர். சராசரி நபரின் வருவாயில் 30%க்கு அதிகமாக இந்நாடுகள் கல்விக்கென்று செலவிடும் வேளையில் சீனா வெறும் 3% தான் செலவிட்டு வருகிறது. ஆகவே, 99% பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு முடித்திருப்பதாக சீனா சொல்லிக் கொண்டாலும் அது உண்மை நிலவரம் இல்லை. நகரமயமாகும் மற்ற உலக நாடுகளை ஒப்பு நோக்க இந்த விஷயத்தில் சீனா பின் தங்கித் தான் இருக்கிறது. இதற்கு பல முக்கிய காரணங்களுள் ஹூகோவ்வும் ஒன்று.

சொந்த ஊர் ஹூகோவ் வைத்திருக்கும் இடம்பெயர் தொழிலாளி குடும்பத்தோடு நகரில் வந்து தங்கினால், சேமிப்பென்று ஒன்றுமே இருக்காது. பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க ‘டொனேஷன்’ கொடுக்க வேண்டும். கல்விக் கட்டணமும் அதிகம். டொனேஷனும் கல்விக்கட்டணமும் தொழிலாளி நினைத்தே பார்க்க முடியாத தொகையாக இருக்கும். இது பேய்ஜிங் போன்ற நகரங்களில் இருக்கும் 6.5 மில்லியன் இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளில் பாதிக்கு மேலானோர் பள்ளிக்குப் போவதைத் தடுக்கும் முக்கிய காரணம். “பணம் தான் பண்ண முடியல்லயே, பேசாம கிராமத்துக்கே போயிருவோம்,” என்று போய் விடும் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்திலோ, பிள்ளைகளின் கல்வித் தரத்திலோ மேம்பாடுகள் இல்லாமல் தேங்கி விடுகிறார்கள். கஷ்டங்களைச் சமாளித்து, எதிர்நீச்சலடித்து எப்படியேனும் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைப்போர், நல்ல கல்வியைக் கொடுத்து நகர ஹுகோவ் கிடைப்பதற்கான கூடுதல் வாய்ப்பையும் ஏற்படுத்தி, அடுத்த தலைமுறை மேம்படுவதற்குத் திறப்பை உருவாக்குகிறார்கள்.

கட்டணம் குறைந்த சில பள்ளிகள் இந்தப் பிள்ளைகளுக்கென்றே இயங்குகின்றன. ஆனால், இவற்றின் கல்வித்தரம் பொதுப்பள்ளிகளை விட மிகக் குறைவாக இருக்கின்றது. ஓரிரு ஆண்டுகளில் இடம்பெயர் தொழிலாளியும் குடும்பமும் கிராமத்துக்குத் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் எடுத்து நடத்தப்பட்ட பள்ளிகள் தான் அவை. ஆனால், தற்காலிக வேலையனுமதி அட்டையிலாவது நகரிலேயே இருக்க முயலும் தொழிலாளி திரும்பிப் போகும் எண்ணங்களே இல்லாமல் இருக்கும் போது தான் சமூகத்தில் பல பிரச்சினைகள் முளைக்கின்றன. ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளோ மேலும் உப்பிப் பெரிதாகின்றன.

நகரப் பள்ளிகளில் இடம் கிடைப்பது பெரும்பாடு. இதனாலேயே பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் பாதியில் விட்டு விடுகின்றனர். அல்லது மேல்நிலைப் பள்ளிக்குப் போகத் தகுதியும் வயதும் ஆனபிறகும் தொடக்கப்பள்ளியிலேயே இருக்கின்றனர். பல பத்து மில்லியன் இடம் பெயர்ந்த தொழிலாளிகளின் பிள்ளைகள் கிராமங்களிலேயே பாட்டி தாத்தா அல்லது உறவினர் பராமரிப்பில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. பெற்றோர் வசிக்கும் நகரங்களுக்குச் சென்று படித்தாலும் உயர்நிலைப் பள்ளிக்கான பொதுத் தேர்வுக்கு எப்படியும் சொந்த ஊருக்குத் தான் போக வேண்டியதிருக்கும்.

கிராமத்திலிருந்து கிளம்பும் விவசாயத் தொழிலாளி நகரில் படும் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் அவனது கல்வியறிவில்லாமை மற்றும் அதனால் அவனுக்குக் கிடைக்கவே கிடைக்காத நகர ஹூகோவ். கல்வித் தகுதி கூடும் போது இடம்பெயரும் வாய்ப்பும் கூடுகிறது. அதே போல, நகரத்தில் வேலைவாய்ப்பும் கூடும். சில ஆண்டுகளில், கிராம/சிற்றூர் ஹூகோவ்வை நகர ஹூகோவ்வாக மாற்றுவதும் எளிதாகும். எளிமையாகச் சொல்வதென்றால், இன்றைய சீனத்தில், குறிப்பாக கிராமங்களிலும் தொழிலாளர் சமூகங்களிலும் முன்பு எப்போதும் இருந்ததை விட கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூடியுள்ளதற்கு இவையே முக்கிய காரணமாகியுள்ளன.

கல்வித் தரமும் இடப்பெயர்வும்:

மற்றெந்த நாட்டைப் போல சீனாவிலும் கல்விக்கும் குடும்ப இடப்பெயர்வுக்கும் இடையே நிலவும் தொடர்பு எதிர் வாகானது. சராசரிக்கு அதிகமான கல்வி கொண்ட கிராமத்தினரது குடும்பம் இடம்பெயர்வதற்கான அவசியம் குறைவு, ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மேலாகக் கிட்டும். கல்வி அதிகரிக்குந்தோறும் இடப்பெயர்வுக்கான நெருக்கடி குறைகிறது, ஆனால் ஊக்கம் கூடும். கல்வி நிலை உயருந்தோறும் தனிநபர் இடப்பெயர்வுக்கான வாய்ப்பு கூடுகிறது. அதேநேரத்தில், இடப்பெயர்வுகளால் நேரடியான விளைவுகளும் உள்ளன. குடும்ப வருவாய் கூடுகின்றது; வாழ்க்கைத்தரம் உயருகிறது. இந்த வருவாய் உயர்வால், விவசாயத்தில் இன்னும் ஈடுபட்டிருக்கும் தம் கிராம வாழ் குடும்பங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தால் உழவுச் சாதனங்கள் வாங்கும் வசதி குடும்பங்களுக்கு கூடுகிறது. இதனால் அதிகம் ஆட்களை வேலைக்கு வைக்க முடியாத போதும், இருக்கும் நபர்களை வைத்துச் செய்யும் விவசாயத்திலேயே, விளைநிலங்கள் மேலுமதிகமான விளைச்சலைக் கொடுக்கும். இதுவும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தி பெருக உதவும்.

தனிநபராகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமாகப் பார்த்தோமானால் ஒருவரது கல்வித்தகுதி எத்தனைக்கெத்தனை குறைகிறதோ அத்தனைக்கு அவர் இடம் பெயர்வது நடக்கும் வாய்ப்பு கூடுகிறது. 222 சிற்றூர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் உயர்நிலைப்பள்ளியைக் கடந்த பல்கலைப்படிப்பு அல்லது பட்டயப்படிப்புக்கு மேல் படித்தோரில் 11.07% பேர் இடம்பெயர்ந்தனர். உயர்நிலைப்பள்ளிப்படிப்பு முடித்தோரில் 11.88% பேரும் மேல்நிலைப்பள்ளி முடித்தோரில் 11.94% பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டது. தொடக்கக்கல்வி முடித்தவர்களில் 13.9% பேர் மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி வேறிடம் சென்றனர். அரிச்சுவடி மட்டுமே தெரிந்தவர்களிலும் படிப்பறிவே இல்லாதவர்களிலும் 16.52% பேர் வேறு தொழில் வாய்ப்பு தேடி இடம்பெயர்ந்தனர்.

தனியார் பள்ளிகள் எழுச்சி:

இடம்பெயர் தொழிலாளிகளுக்கு நேரமோ வசதியோ இல்லாததால் அவர்களது பிள்ளைகளுக்கு அரிச்சுவடிப் படிப்பு கூட இருக்கவில்லை என்றறிந்து அதிர்ந்து போன ஓர் ஆசிரியர் 1993ல் உள்ளூர் வசிப்புரிமை அனுமதில்லாததும் காரணம் என்பதைக் கண்டறிந்தார். அவரது முயற்சியில் சிறியளவில் அரசாங்க அனுமதியுடன் இவர்களுக்கான முதல் பள்ளி தலைநகரில் தொடங்கப்பட்டது.

சந்தையில் காலியாகக் கிடந்த அறைகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பள்ளியில் 80 மாணவர்கள் பயின்றனர். 50 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நீள்கூடம் அது. ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது சுற்றிலும் நடந்து வரவும் இடமற்றிருந்தது. ஆனால், இன்றைய கதை வேறு மாதிரியானது. சீன நகரங்களில் வாழும் 20 மில்லியன் இடம்பெயர் சிறார்களுக்கென்றே பெருநகரங்களில் தனியார் எடுத்து நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் முளைத்துள்ளன. இவை எல்லாமே இடம்பெயர்ந்து வரும் ஆட்களால் எடுத்து நடத்தப்படுபவை. நியமிக்கப்படும் ஆசிரியர்களில் நிறைய பேர் இடம்பெயர்ந்தோர். கிராமப்புறங்களிலிருந்து வந்து கற்பிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் உண்டு. சில பள்ளிகளில் பேருந்துச் சேவை வசதியுமுண்டு. 2005ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி ஷாங்காயில் மட்டும் இது போன்ற பள்ளிகள் 293 இருந்தன. 2007ஆம் ஆண்டறிக்கைப்படி பேய்ஜிங்கில் 200 பள்ளிகள் இருக்கின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் 90,000 பேர். குவாங்ஜோவ்வில் நகர அரசாங்கம் தனியார் பள்ளிகளை வாங்கி இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கென்றே நடத்துகிறது. ஹாங்ஜோவ் போன்ற வேறு நகரங்களில் பொருளாதார உதவிகள் இது போன்ற பள்ளிகளுக்குக் கிடைக்கின்றன.

2006ல் தான் இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு கல்வி அளிக்கப்படுவது முக்கியம் என்று அரசு உணர்ந்தது. பொதுப் பள்ளிகளில் அவர்களைச் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் உத்தேசித்தது. இருப்பினும், அதற்கு முன்னால் இடம் பெயர்ந்தோர் நடத்தும் பள்ளிகளை மூட முடிவெடுத்தது. அதே ஆண்டில்,  ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு முன்பு இடம் பெயர் தொழிலாளிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் நகரை விட்டுத் துரத்தும் நோக்கில் பேய்ஜிங்கில் மட்டும் 50 பள்ளிகளை மூடியது. ஷாங்காயில் இது சற்றே குறைந்த வேகத்தில் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கென்றே நியமிக்கப்பட்ட 100 போலிஸார் அதிரடியாகப் பள்ளிகளை முற்றுகையிட்டனர். 16 பள்ளிகள் மூடப்பட்டன. 2010த்துக்குள் 70% இடம்பெயர் மாணவர்களை அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும் திட்டமும் பேச்சளவில் இருந்தது. ஆனால், அதற்கிடையில் அவர்கள் நிலை என்னவென்ற மக்களின் கேள்விக்கு தான் பதிலே இல்லை.

ஹுவாங்ஸுன் குடியிருப்பில் உள்ள 2000 மாணவர்களைக் கொண்ட ஸியாங்யாங் ஹோப் பள்ளி திடீரென்று மூடப்பட்ட போது மாணவர்களும் ஆசிரியர்களும் எங்கே போவதென்றே தெரியாதிருந்தனர். சந்திரப் புத்தாண்டுக்கு முன்னர் அரசதிகாரிகள் நகரமயமாக்கலின் திட்டப்பணிகளுக்காக இடம் வேண்டும்; பள்ளிக்கூடம் இடிக்கப்படும் என்றனர். விடுமுறைக்குப் பிறகு பள்ளி நடக்காது என்றும் சொன்னார்கள். “சடாரென்று வந்தார்கள். பாடம் நடந்திட்டிருந்தப்பவே எல்லாரையும் வெளியேற்றி பள்ளிக்கூடத்தை இழுத்து மூடினாங்க. பிள்ளைங்கள்ளாம் அழுதாங்க. பெரியவர்களுக்கும் ஒரே பயம்,” என்று விவரித்தார் ஓர் ஆசிரியர். “பேய்ஜிங்கோட முன்னேற்றத்துக்காக இங்க வந்து நாங்க உழைக்கறோம். ஆனா, எங்க பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கூட கெடையாதுன்னு சொல்லுது அரசு. இனி நாங்களே தான் பாடஞ்சொல்லிக் கொடுக்கணும்,” என அங்கலாய்த்தனர் சில பெற்றோர்.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோவ் சாவ் இதற்கு முன்பு பேய்ஜிங்கின் வடகிழக்கில் இன்னொரு பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்தார். இதனால் தலைமை ஆசிரியர் மேல் முறையீட்டு மனு கொடுத்து விடுவார் அல்லது ஊடகங்களுக்கு தீனி போட்டு விடுவார் என்றஞ்சி அவரைக் காவலில் வைத்தனர். ஆனால், உள்ளூர் அரசுப்பள்ளிகளில் அத்தனை மாணவர்களுக்கும் இடமிருக்காதென்று லோவ் சாவ் மிகவும் கவலையுடனிருந்தார். பள்ளி இடிக்கப் பட்டதும், ஸியாங்யாங் ஹோப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். மாணவர்களெல்லாரும் பள்ளிகளில் சேர்ந்தார்களா, எத்தனை பேர் வேறு வழியில்லாமல் தத்தமது ஊர்களுக்குப் போனார்கள் என்பது போன்ற விவரங்களும் கிடைக்கவில்லை. அரசு தரப்பில் அதிகாரி சொல்வதே வேறுமாதிரி. ஆபத்தான சூழல், கல்விச் சாதனங்கள் இல்லாமை அல்லது தரமற்றவை, தரங்குறைந்த கற்பித்தல் முறை, முறையற்ற பாடத் திட்டம், பள்ளியை முறையாகப் பதியாதிருத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் பள்ளிகள் மூடப்படுகின்றன.

அதிரடியாக வீடுகளும் பள்ளிகளும் அகற்றப் படுவதும் இடிக்கப் படுவதும் நகரில் ஆங்காங்கே அடிக்கடி நடப்பது தான். இதுபோன்ற சமயங்களில் நில உரிமையாளர் நல்ல காசு பார்ப்பார். சட்டென்று வேறிடம் போய் விடுவார். வாடகை மற்றும் நிலக்குத்தகைதாரர் தான் இன்னொரு இடம் தேடி அலைய வேண்டியுள்ளது. அது பள்ளி எனும் போது அவிழ்த்த மூட்டையிலிருந்து கொட்டிய நெல்லிக்காயாய் எண்திக்கிலும் சிதறுகின்றனர் இடம்பெயர் மாணவர்கள். பெற்றோர்களும் குடும்பத்தினரும் பெரும் இக்கட்டில் மாட்டிக் கொள்கின்றனர். விருதுகள் பல பெறும் அளவுக்குச் சிறப்பாகச் செய்யும் மிக முக்கியப் பள்ளிகளுக்கு கூட இந்த கதி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே அங்குள்ள நிலை. இந்தக் காரணத்துக்காகவே இடம்பெயர்வோர் தமது பிள்ளைகளை நிம்மதியாகச் சொந்த ஊர்ப் பள்ளியிலேயே சேர்த்து விட முடிவெடுக்கிறார்கள். அங்கே பள்ளி என்பது ஒற்றை ஆசிரியர் வசிக்கும் ஒற்றை அறையாகக் கூட இருக்கலாம். சாக்கட்டிகளுக்கு கூட பஞ்சமிருக்கும் சில பள்ளிகளில். ஆனால், கல்வி இலவசம்; கல்வி சடாரென்று நிற்காது. வேற்றுமைகளும் இருக்காது.

பேய்ஜிங்கின் தென் புறநகரில் கோங்யி ஸிச்சியாவ் என்ற இடத்தில் ஒரு எல்லைச் சாவடி உண்டு. அங்கெல்லாம் எண்ணற்ற தொழிற்சாலைகள் நிறுவியிருக்கும். இன்னும் சற்று தொலைவு போனால் புழுதி பூசிக் கொண்ட கிராமங்கள் பலவுண்டு. டாண்டெலியான் என்ற பள்ளி இருக்கிறது. இந்த மேல்நிலைப்பள்ளி இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கென்றே ஏற்படுத்தப்பட்டது. நகரில் இருக்கும் எண்ணற்ற இது போன்ற பள்ளிகளுக்கும் இந்தப்பள்ளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நல்ல திறனும் பட்டமும் பெற்ற ஆசிரியர்களையே நியமிக்கும் இந்தப்பள்ளி, அரசாங்கம் அங்கீகரிக்கும் பாடத் திட்டத்தையே சுமார் 650 மாணவர்களுக்குக் கற்பிக்கிறது. திறந்து கொஞ்ச காலத்திலேயே சட்டப்படியான அங்கீகாரத்தையும் பெற்றது. பாட நூல்கள், கல்விக் கட்டணம், தங்குமிடம், மூன்று வேளை சாப்பாடு எல்லாம் சேர்த்து வருடத்திற்கு 3000 வாங்குகிறார்கள். இந்தச் சிறுதொகை கூட சிலருக்குக் கட்டுப்படியாவதில்லை என்கிறார் தலைமை ஆசிரியை. மிகவும் ஏழ்மையிலிருக்கும் குடும்பப் பின்னணிகொண்டமாணவர்களுக்கு 25% கல்விக் கட்டண மானியம் வழங்குவதாக சொல்கிறார். நிறைய பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளைச் சொந்த ஊருக்கே கூட்டிக் கொண்டு போய் விடத் தீர்மானிக்கிறார்கள். குறைந்த செலவில் அங்கே வசதிகள் பல மடங்கு சிறப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள்.

சில பள்ளிகளில் வருடத்திற்கு 1,100 யுவான்கள் கல்விக்கட்டணம் வசூலிக்கிறார்கள். வசதி படைத்த சில கல்வியறிவுடனிருக்கும் இடம்பெயர் ஊழியர்களுக்கு இதொன்றும் பெரிய தொகையில்லை. ஆனால், விவசாயத் தொழிலாளிக்கு பல வாரங்களின் ஊதியமாகும். வெப்பமூட்டப் பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட அறை வேண்டுமென்றால் தங்கு விடுதியறைக்கான கட்டணம் மேலும் கூடும். மாணவர்களுக்குப் புதிய பள்ளிகளில் இடம் கொடுக்கப் படுமென்று உறுதியளித்துப் பேசினர் அதிகாரிகள். 2008ன் துவக்கத்தில் ஷாங்காய் நகர நிர்வாகம் சட்டத்துக்குப் புறம்பாக நடந்த 240 பள்ளிகளைத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டது. 2010க்குள் அவற்றை அரசாங்கப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டமும் இருந்தது. பெரும்பாலும் நகர மற்றும் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் இந்தப்பள்ளிகள் அரசு பொதுப் பள்ளிகளிலிருந்தும் பணக்காரர்களுக்கென்று நடத்தப்படும் அதிநவீன பள்ளிகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. கல்விக் கட்டணங்கள் நியாயமாகவே நிர்ணயிக்கப் படுகின்றன. சீனமொழி மற்றும் கணிதம் ஆகிய அடிப்படைப் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. சமீப காலங்களில் தான் கணினி மற்றும் ஆங்கிலம் கற்பிக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் அனைத்துப் பிள்ளைகளுமே இடம்பெயர்ந்தோர் என்பதால், வேறுபாடு இருப்பதில்லை என்பதே மிக முக்கியமான விஷயம். நகரவாசிகளின் அவமதிப்புப் பார்வைகள் இங்கில்லை.

அதே 2006 ஆகஸ்டில் பேய்ஜிங்கின் ஹைடன் மாவட்டத்தில் அதே போன்றதொரு ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆபத்துகள் நிறைந்த சூழலில் இயங்கிய முறையாகப் பதிவு செய்யப் பெறாத பல பள்ளிகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எல்லோருடைய ஒருமித்த எதிர்ப்புகள் எதுவுமே அதிகாரிகளை ஒன்றும் செய்யவில்லை. அந்த மாணவர்கள் எல்லோருக்கும் பொதுப்பள்ளிகளில் இடம் கிடைக்க வழி செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாலும், 5000 மாணவர்களின் கதி என்னவாயிற்று என்றே தகவலே இல்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த நடவடிக்கையால் மிகவும் குழம்பி பெரிய இக்கட்டில் மாட்டினர். 6700 பிள்ளைகள் படிக்கும் ஆறு பள்ளிகள் நடந்தன. ஆனால், அந்த வட்டாரத்தில் 2000 மாணவர்கள் பயிலும் ஒரேயொரு பள்ளி நடக்கத் தான் உரிமை கொடுத்திருந்தனர்.

பத்து அரசு அதிகாரிகள் சேர்ந்து பேய்ஜிங்கின் ஷிஜிங்ஷான் மாகாணத்தில் இருக்கும் இடர்நல் ஹோப் பள்ளிக்குப் போனார்கள். நடந்து கொண்டிருந்த வகுப்புகளை டப்பென்று நிறுத்தச் சொன்னார்கள். விதிமுறைகளுக்குப் புறம்பாக நடத்தப்படுவதாக விளக்கி எழுதப்பட்ட அறிவிப்பை எல்லோரும் காணும் இடத்தில் ஒட்டினார்கள். பன்னிரெண்டு நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு கொடுத்திருந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தனர். உடனேயே, பள்ளி வாயிலிலிருந்த இரும்புக் கிராதிக் கதவை இழுத்து மூடினார்கள். கல்வியாண்டு ஆரம்பித்த பிறகும் பொதுப்பள்ளிகளில் இடம் கொடுக்கப்படவில்லை என்பதே பலரது புகார். பெரும்பாலான பிள்ளைகள் அவரவர் கிராமங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பொதுப்பள்ளியில் இடம் கொடுத்தாலும் கல்விச் செலவுகளைத் தன்னால் சமாளிக்க முடியுமா என்றே தெரியவில்லை என்று இந்தப் பள்ளியில் பயிலும் இரண்டு மகள்களைப் பெற்ற திரு.ஜாவ் வருந்தத்துடன் சொன்னார். இங்கே வருடத்திற்கு 300 தான் கட்டி வந்தார். வசதிகள், ஆசிரியர்கள், கல்வித் தரம் போன்ற அனைத்துமே சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார். “இந்த நிலைமயச் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம். இப்டி அநியாயம் பண்ணா என்ன செய்யறது சொல்லுங்க?”

இன்னொருவர் திருமதி. ஜாங். சென்றாண்டு தான் அரசு பொதுப்பள்ளியிலிருந்து தனது மகனை வெளியேற்றி விட்டதாகச் சொன்னார். அதன் பிறகு, இந்த இடர்நல் ஹோப் பள்ளியில் சேர்த்திருந்தார். ஏனென்று கேட்டதற்கு, “இடம்பெயர்ந்து வரும் குடும்பத்துப் பிள்ளைகளை இழிவாகப் பார்ப்பதும் வேற்றுமை பாராட்டுவதும் மிக அதிகம்”, என்கிறார் துயருடன். “இதுனால ஒரு மொரட்டுத்தனம் வந்திருச்சு அவனுக்குள்ள.” பெரும்பாலான நகரவாசிகள், “வெளியூர் பிள்ளைகளோட சேரக் கூடாது,” என்று தம்முடைய பிள்ளைகளிடம் சொல்கிறார்கள்.

விதிமுறைகளில் குழப்பம் ஒரு பெருந்தடை:

சீனாவின் கல்விசார்ந்த விதிமுறைகள் மிகவும் குழப்பம் நிறைந்தவை. கல்லூரியில் சேர உள்ளூர் ஹூகோவ் வைத்திருப்பவர்களுக்கு இடவொதுக்கீடு உண்டு. இதுவே பெரும்பான்மையான இடங்களை நிரப்பிவிடும். வெளியூர்க்காரர்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம். உள்ளூர் ஹூகோவ் இல்லாவிட்டால் தொடக்கல்வியும் இலவசமில்லை என்ற நிலையில் தான் சற்றே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2000ல் அரசு 10 மில்லியன் பேருக்கு நகர ஹூகோவ்வான நிரந்தரவாசத் தகுதியளித்தது; அது தவிர பேய்ஜிங்கில் 25,000 பேருக்கு கல்லூரியில் இடமும் 100 மில்லியன் நிரந்தரவாசிகள் இருக்கும் ஷான்தோங் மாகாணத்தில் 80,000 பேருக்கு கல்லூரியில் இடமும் கொடுத்ததென்று அரசு அறிவிப்புகள் வந்தன. இந்த இடவொதுக்கீடுகள் எல்லாமே உள்ளூர் ஹூகோவ் வைத்திருப்போருக்கு தான். அதிக பட்சமாக 750 புள்ளிகள் வழங்கப்படும் நுழைவுத் தேர்வில், பேய்ஜிங் மாணவர்கள் கிராமப்புற மாணவர்களைவிட 150 புள்ளிகள் குறைவாகப் பெற்றாலே கல்லூரியில் இடம் கிடைக்கும். அதாவது, ஒரு கிராமப்புற மாணவன் 650 வாங்கினால், நகர்ப்புற மாணவன் 500 எடுத்தாலே போதும். நகரவாசிக்கு இடம் கிடைக்கும்; மற்றவனுக்குக் கிடைக்காது. “அதான் வாழ்க்கை. நியாயம், அநியாயம் என்பது குறித்தெல்லாம் அதிகமாக யோசிப்பதற்கில்லை. ஏனெனில், அதான் யதார்த்தம். அதற்கு வளைந்து போய் வாழ்வது தான் புத்திசாலித்தனம்,” என்று வாழப் பழகுகிறார்கள்.

அரசு பொதுத் தேர்வெழுதி அரசு வேலை பெற்று அதன் மூலம் பேய்ஜிங் ஹூகோவ் பெறுவதொரு வழி. தேர்வெழுதாமல் குறுக்கு வழியிலும் அரசாங்க வேலையில் அமரலாம். இரண்டாவது வழி கொஞ்சம் சுலபம் என்று கருதப்படுகிறது. பேய்ஜிங் ஹூகோவ் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது. அதற்காக தன் தகுதியை வளர்த்தெடுப்பது. சிறுவயதினர் என்றால் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுதி பேய்ஜிங்கின் ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டதாரியாவது. இதுவே அனைத்து சீனச் சிறார்களின் பெற்றோர்களின் கனவாக இருக்கிறது.
ஹென்னன் ஹூகோவ் வைத்திருந்த ஜூ ஷெங்குன் தனியார் நிறுவன ஊழியர். ஹாங்ஜோவ் நகரில் வேலை செய்கிறார். உயர்நிலைப்பள்ளியில் படித்த போது அவரது பெற்றோர் பெரிய தொகை கொடுத்து காங்ஸு மாகாணத்தின் லான்ஜோவ் நகர ஹூகோவ்வை வாங்கிக் கொடுத்தனர். அங்கே வளர்ச்சி தாமதமாக இருந்தது. ஆனால், கல்விக்கூடங்களில் இடம் கிடைப்பது எளிது. ஜூவின் பெற்றோர் கல்லூரி நுழைவுத்தேர்வெழுதச் சொன்னார்கள். அவரும் சேர்ந்து படித்தார். பெருநகரங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களுள் ஒன்றில் மகன் சேர வேண்டும் என்றே விரும்பினர். கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய ஜூ அரசாங்கப் பொதுத் தேர்வு எழுத நினைத்தார். ஜியாங்ஸு, ஜேஜியாங் மாகாணங்கள் மற்றும் பேய்ஜிங்கில் தேர்வெழுத விண்ணப்பிக்க முயன்றார். உள்ளூர் ஹூகோவ் இல்லாததால், அவருக்கு தேர்வெழுதும் அனுமதி மறுக்கப்பட்டது.
அறிவுக்காகவோ, கல்விக்காகவோ, வேலைக்காகவோ, பணம்-பொருளுக்காகவோ, வளமான எதிர்காலத்துக்காகவோ கல்வியைக் கற்பதெல்லாம் போய் ஹுகோவ்வைப் பெறுவதற்காகவே கல்வி பயிலும் போக்குகள் இடம்பெயர்ந்தோரிடையே பெருகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்திருந்தால், நகர ஹூகோவ் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவே பட்டப்படிப்புக்குத் தயாராகும் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் மணமானோரும் கைக்குழந்தையோடு இருப்போரும் கூட அடங்குவர். நகருக்குள் இரண்டு மணிநேரம் பயணம் செய்ய வேண்டிருப்பதால், அந்த நேரத்தில் படித்து விட முடிவெடுத்து லியாங் என்ற இளம் பெண் படிப்பதற்காக வேலையை விட்டவர். “மூணு வருஷத்துக்கு முன்ன எக்ஸாம் எழுதற மூட் இல்ல. ஆனா, நா க்ராஜ்யூவேட்டாயிட்டா, பேய்ஜிங் ஹூகோவ் கெடைக்கறது ஈஸி. அதுக்கப்புறம் என்னோட செல்லக் குட்டிக்கும் கெடச்சுரும். இன்னும் ரெண்டு வருஷத்துல கிண்டர்கார்டன்ல சேக்கறதுலயிருந்து எல்லாத்துக்கும் ஈஸியாயிரும். அதான், எழுதறதுன்னு முடிவெடுத்து தொலைதூரக் கல்வித் திட்டத்துல படிச்சு தேர்வெழுத வந்தேன்.” அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் கிடைக்கக்கூடிய கல்வியின் தரம் உயர்வானதாக இருப்பதாலும் செலவு குறைவாக இருப்பதாலும் பெற்றோர்களுக்கு பேய்ஜிங் ஹூகோவ் பற்றிய கனவுகளும் முயற்சிகளும் தான் பாதி நேரமும்.

இடம்பெயர்ந்து வசிக்கும் தொழிலாளர்கள் நகரிலேயே பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பல பாதகங்கள் ஏற்படுகின்றன. பல்கலைக் கழக அனுமதிக்கு முன்னால் தேசியப் பொதுத் தேர்வெழுதும் போது முறையான ஹூகோவ் இல்லாத மாணவர்கள் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொள்வர். எழுத முடியாது. தேர்வுக்கு மட்டும் ஊருக்குப் போவதும் சரிவருவதில்லை. ஏனெனில், தேர்வு முறைகளும் பாடதிட்டங்களும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடுகின்றன. நகரில் படிக்கும் மாணவன் ஊரிலிருந்து நூல்களையும் ஏடுகளையும் எடுத்து வந்து தயாராவது என்பதும் பெரிய பளுவாகி விடுகிறது. அப்படியே தயாரானாலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. பொதுத் தேர்வெழுத முறையாக பிள்ளைகளைத் தயார் படுத்தவும் பெற்றோர் பிள்ளைகளை அவ்வந்த ஊர்களில் விட்டுப் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது. இதுவும் முக்கிய காரணம். பொதுத் தேர்வுக்கு மட்டுமில்லாமல் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கும் இதே கதை தான். கல்வியையும் தாண்டி ஹூகோவ் பல பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.

சென் ஸின் பத்தாண்டுகளாக தன் கணவர் மற்றும் மகளுடன் பேய்ஜிங்கில் வசிக்கும் ஹைனன் வாசி. 100,000 யுவான்களுக்கும் மேலாக வருமான வரி கட்டியிருக்கும் இந்த தம்பதியர் மகளைப் படிக்க வைக்க, நல்ல தரமான கல்விக்காக பள்ளிகளுக்குக் கட்டிய மொத்த டொனேஷன் தொகை இன்னும் அதிகம். நகர ஹூகோவ் இல்லாத ஒரே காரணத்துக்காகத் தன் மகளுக்கு கல்லூரி நுழைவுக்கான தேசியப் பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப் பட்டதென்று வெகுள்கிறார். நுழைவுத் தேர்வை ஹைனன்னுக்குப் போய் எழுத முயற்சித்த போது, குறைந்ததும் மூன்றாண்டுகள் உள்ளூரில் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைக் காட்டி அங்கேயும் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.

இதற்குப் பிறகு, மகளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பது ஒன்று மட்டும் தான் ஒரே வழி என்ற நிலை வந்தது. பெற்றோருக்கு வெளிநாடு அனுப்பிப் படிக்க வைக்கும் செலவும் மிகப் பெரிய பாரம். இந்தப் பெண் வெளிநாடு போனாளா இல்லையா என்று தெரியவில்லை. இவளைப் போல எண்ணற்ற இளையர்கள் இதுபோன்ற இக்கட்டில் சிக்கிக் கொள்கிறார்கள். வசதியிருந்தால், வெளிநாடுபோய்ப் படிக்கிறார்கள். இல்லாத பெரும்பான்மையோர் முன்னேற வழியில்லாமல் தேங்கிவிடவே நேர்கிறது.

இளைய தலைமுறையின் நகர வாச விருப்பம்:

சீன இணைய தளத்தின் பாய்டு என்ற தேடுபொறி நிறுவனத்தில் வருடத்திற்கு 170,000 யுவான்கள் கொடுக்கக்கூடிய வேலை கிடைத்தும் ஜாங் ஃபான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், அங்கே வேலை பார்த்தால் பேய்ஜிங் ஹூகோவ் கிடைக்கும் உத்தரவாதமில்லை. இவர் ஷான்ஸி மாகாணத்தில் பிறந்து புகழ்பெற்ற கல்விக்கூடத்தில் விஞ்ஞானம் பயின்றவர். அதற்கு பேய்ஜிங் மாணவர்களைவிட அதிக உழைப்பைப் போட்டு அதிக மதிப்பெண் பெற்றவரும் கூட. பேய்ஜிங் ஹூகோவ் வாங்கித் தருவதாகச் சொல்லும் நிறுவனத்தில் தான் வேலையேற்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் இந்த யுவதி, “என்னோட குழந்தைகள் எதிர்காலத்துல என்னையப் போல கஷ்டப்படக் கூடாதில்ல,” என்கிறார். வேலையில் சேர்ந்து சில ஆண்டுகளில் திருமணம் முடித்து பிறகு பெறப் போகும் பிள்ளைகளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் வேண்டும் என்று இவரைப் போல யோசிப்போர் தான் மாணவர்களிடையே அதிகமிருக்கிறார்கள். ஹூகோவ் இல்லாததால் அவர்கள் பட்ட கூடுதல் கஷ்டங்கள் தான் அவர்களை இவ்வளவு பிடிவாதத்தில் தள்ளுகிறது. கிடைத்தற்கரிய ஹூகோவ்வுடன் கிடைக்கும் வேலைக்காக ஜாங் ஃபான்னைப் போலவே நிறைய பேர் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மெங் ஜோங்ஹுவா வரும் ஜூலையில் தான் அனைத்துலக வணிகவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் வாங்கப் போகிறார். இந்த மாணவர் ஆறாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பயிலுகிறார். “உலகப் பொருளாதாரம் சரிந்த போது  நான் ஒரு நிறுவனத்தில் பயிற்சியாளனாக வேலை (internship) செய்தேன். அன்றாடம் பாதாள ரயிலில் மூன்று மணிநேரம் பயணத்தில் செலவிட்டேன். அப்போதே பட்டம் முடித்த என் நண்பர்களில் சிலர் வேலை தேடிச் சோர்வதைக் கண்டேன்,” என்று மனந்திறந்து சொல்கிறார். முதுகலைப்பட்டம் படித்தது எப்படி உதவியதென்று கேட்டபோது, “நான் முன்பு போன அனைத்து நேர்காணல்களிலும் முதுகலைப் பட்டதாரிகளைத் தான் சந்தித்தேன். இளங்கலைப்பட்டம் எந்த நல்ல வேலையையும் கொடுக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. நிறுவனங்களுக்கு வடிகட்டி எடுக்க நிறைய முதுகலைப் பட்டதாரிகளே இருக்கிறார்களே,” என்கிறார். மெங் ஜோங்ஹுவாவின் எதிர்பார்ப்பென்ன என்று கேட்டபோது, “அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலையும், 6000-த்துக்கு குறையாத சம்பளமும், பேய்ஜிங் ஹூகோவ்வும்,” என்றார். 23 வயதாகும் இவர், பேய்ஜிங்கிலேயே தன் எதிர்காலத்தை நிறுவ விரும்புகிறாராம். “ஒரே நாளில் மூணு நிறுவன முதலாளிகள் எனக்கு மறுப்பு தெரிவித்துப் பதிலளித்தனர். கொஞ்சம் ஊக்கக்குறைவா தான் இருந்துச்சு. ஆனா, நா என்னோட எதிர்பார்ப்பைத் தளர்த்திக்கறதா இல்ல. காத்திருந்து நா விரும்பற வேலையில் அமரப் போகிறேன்,” என்று பிடிவாதமாக இருக்கிறார். “வீடோ காரோ இல்லாம பேய்ஜிங்ல வாழறதெல்லாம் என்னால நெனச்சு கூட பார்க்க முடியல்ல. அதுக்கு எவ்ளவோ சவால்களச் சந்திக்கணும்னு இப்பவே மலைப்பா தான் இருக்கு. ஆனா, நல்ல வேலையும் ஹூகோவ்வும் கெடச்சாச்சின்னா அதுப்பிறகு ஒவ்வொண்ணா ஏற்பாடு செய்ய வேண்டியது தான்.”

4-8 பேர் தங்கும் அறைகளும், நுழையவே முடியாத கழிவறைகளும் பெரும்பாலான சீனப் பல்கலைகழக வளாகங்களில் காணக் கூடியன. அதிகம் செலவிடத் தயாராக இருக்கும் பணக்காரக் குடும்பங்களுக்கு தனியாக அனைத்து வசதிகளுடன் தனியார் விடுதிகளுண்டு. அதே நேரத்தில் பெரிய அளவில் பணத்தைக் கொட்டி அடுக்ககங்களும் வேலைக்கு ஆட்களும் அமர்த்தும் பணக்காரப் பெற்றோர்களும் பெருகி வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு இதுபோன்ற ஏற்பாடுகளில் நாட்டமில்லை. பெற்றோர்களின் வற்புறுத்தலால் இசைகிறார்கள். மற்றபடி கூட்டமாக நண்பர் குழாமுடன் விடுதியில் வசிக்கவே விரும்புகிறார்கள். இது போன்ற மாணவர்களில் பெரும்பாலோர் நகரவாசிகள் என்றாலும் வேறு நகரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கிப்படிப்போரும் இருக்கிறார்கள். பணக்காரர்களைப் பார்த்து நடுத்தரவர்க்கத்தினரும் பிள்ளைகளுக்கு வீடு வாங்கும் போக்குகள் பெருகி வருகின்றன. கஷ்டப்பட்டு உழைத்து வாங்கும் வீட்டை பிள்ளை பெயரில் வாங்குவது அவனது தன்னம்பிக்கையை வளர்க்க என்று சொல்கிறார்கள். எதிர்காலத்தில் பேய்ஜிங் ஹூகோவ் கிடைக்க பிள்ளை பெயரில் வீடு இருப்பது உதவும் என்றும் நம்புகிறார்கள். “பேய்ஜிங்ல சொந்தக் கால்ல நிக்கறது ரொம்ப சிரமம். அதான் ஏதோ நம்மால முடிஞ்ச உதவி,..”, என்பது தான் இதற்கு பெற்றோர் கொடுக்கும் காரணம். பிள்ளைகளின் தன்முயற்சி இதனால் பாதிக்கப்படும் என்று சமூகவியலாளர்கள் விமரிசிக்கிறார்கள். “முதல் தவணையை மட்டும் செலுத்திப் பதிந்து மாதாமாதம் வீட்டுக் கடனைப் பிள்ளைகளையே அடைக்கச் சொல்லலாமே.” சில ஆண்டுகளில் விற்று விட்டு நகரை விட்டு வெளியேறி விடலாம் என்றும் பெற்றோர் சிலர் நினைக்கிறார்கள்.

குறுக்குவழிகளில் ஹுகோவ் பெறுதல்:

ஒருபுறம், திட்டங்கள் தீட்டப்படாமல் கண்ட மேனிக்கு உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களும் வீடமைப்புப் பேட்டைகளும் புழக்கமே இல்லாமல் வெறித்துக் கிடக்கின்றன. மறுபுறமோ சொத்துகள் விலையேற்றங் கொள்கின்றன. பெருநகரங்களில்
எந்தெந்தத் துறைப் பட்டதாரிகளின் தேவை இருக்கிறதோ அவ்வந்தத் துறைசார்ந்த இளைஞர்களுக்கு நிரந்த ஹூகோவ் கிடைப்பது எளிது. எந்தத் துறையினரின் திறனாளர்களின் தேவை அதிகரிக்கிறது என்பது அவ்வந்த காலத்திற்கு மாறக்கூடியதாக இருக்கிறது. நிரந்தர வேலையும் ஒரே வேலையில் நீண்டகாலம் இருப்போருக்கும் நகர ஹூகோவ் கிடைப்பது எளிது. ஒவ்வொரு பேய்ஜிங் பல்கலைக் கழகத்துக்கும் ஒதுக்கீடு உண்டு. வெளியனுப்பும் பட்டதாரிகளில் 10% வெளியூர்காரர்களை நகரில் வைத்திருக்க அனுமதியுண்டு. புதிதாக பல்கலைக் கழத்திலிருந்து வெளியேறியிருக்கும் புதுப் பட்டதாரிகளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் இல்லாவிட்டால் வேலை கிடைப்பதில்லை. தற்காலிக நகர அனுமதி கிடைக்கும். அதற்குள் ஹுகோவ் வாங்கிக் கொடுக்கும் நிறுவனத்தில் வேலையில் அமர்வது அவரவர் சாமர்த்தியம்.

நிறுவனங்கள் சில விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் வைத்திருக்கும். பல்கலைக் கழகமே நகர ஹூகோவ்விற்கு ஏற்பாடு செய்யும். அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்க நினைக்கும் பட்டதாரிகள் குறுக்கு வழியில் பேய்ஜிங் ஹூகோவ் பெற விரும்புவர். 20,000-60,000 யுவான்கள் வரை செலவிட்டு இதைச் சாதிக்க அரசலுவலகங்களில் இருக்கும் ஊழல் மிகுந்த அதிகாரிகள் உதவுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யவும் தரகர்கள் இருக்கிறார்கள். இப்படி ஹூகோவ் வாங்கி வைத்திருக்கும் பட்டதாரிக்கு எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் வேலையில் சேரவும், வேறிடம் தேடவும் சுதந்திரமிருக்கிறது.

வேறு ஊர்களிலிருந்து வருவோர் ஒருபுறமிருக்க, வெளிநாட்டுப் பட்டதாரிகள், குடிமக்களேயாயினும் தாய்நாட்டின் நகர/பெருநகருக்குள் வந்து வேலை தேட நினைக்கும் போது தத்தமது பட்டச் சான்றிதழ்களை கல்வி அமைச்சில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும். வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தவர் சென் ஸியாவ்ஸி. நகரில் வேலை தேட விரும்பும் இவர், “சீனாவுல வெளிநாட்டிலிருந்து வரவங்களுக்கு வேலையும், பேய்ஜிங் ஹூகோவ்வும் ஈஸியாக் கெடைக்குதுன்றாங்க. கண்டிப்பா, எனக்கும் ஒரு வேல கெடைக்கும்,” என்று நம்பிக்கையோடிருக்கிறார். ஆனால், உண்மையில் இந்த வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் கிடைப்பதொன்று சுலபமில்லை. வெளிநாட்டிலிருந்து வரும் முதுகலைப் பட்டதாரிகள் பேய்ஜிங் ஹூகோவ் விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது. இருப்பினும், அதற்கு பல கட்டங்களில் பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று கோப்புகளில் முத்திரை பெற்று முன்னகர வேண்டியுள்ளது. “பேசாம பேய்ஜிங் ஹூகோவ் இருக்கற பொண்ணாப் பார்த்து கல்யாணம் கட்டிக்க வேண்டியது தான்,” என்கிறார்கள் இளைஞர்கள்.
வெளிநாட்டில் பட்டம் பெறுவதற்கு முன்னாடியே வேற்று நாட்டில் இருக்கும் சீனத் தூதரகத்தில் போய் பேய்ஜிங் ஹூகோவ்வைப் பெறுவதற்கான முயற்சியைத் தொடங்கி விடுகிறார்கள். என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அவர்கள் அப்படிப் போகும் போது தான் பலருக்கும் தெரியவருகின்றன. கல்வி பயில வேறொரு நாட்டுக்குப் போகும் போதே தூதரகத்திற்குச் சென்று பதிந்தால் தான் பட்டச் சான்றிதழ் அங்கீகாரம் கிடைப்பதே உறுதியாகும். சொந்த நாட்டுக்கு வரும் முன்னர் பட்டச் சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் சீன மொழியில் மொழியாக்கம் செய்து பதிய வேண்டும். பட்டதாரி தொடர்பான பிறப்புச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களும் சீனத்தில் தான் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இதற்கெல்லாம் பல கோப்புகள், பல நடைகள், பல முயற்சிகள் தேவைப் படுகின்றன. நாடெங்கும் இவற்றைச் செய்து தர தரகர்களுண்டு.

தானே செய்ய நினைத்தால் நேரம் நிறையவே விரயமாகும். சில மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, இலக்கம் எடுத்துக் கொண்டு காத்திருக்கவும் பல மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, “ஹூஹும், சரியில்லையே,.. ப்ச. உங்க இணைப்புச் சான்றிதழ்கள மாத்தணும்,” என்றோ, “இந்த ஆவணத்தில் பிழையிருக்கிறது,” என்றோ திருப்பி அனுப்பினால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தடைய வேண்டியதிருக்கிறது. இவற்றையெல்லாம் இளந்தலைமுறையினர் மிகுந்த அலுப்போடு தான் எதிர்கொள்கிறனர். விரக்தி தான் மேலோங்குகிறது. சீனாவிலேயே வளர்ந்தவர்களுக்கு அதற்கான பொறுமை சிறுவயது முதலே வாழ்க்கைமுறை என்ற பெயரில் இயற்கையாகவே உருவேற்றப்பட்டு விடுகிறது.

பெண்கள் கல்வி:

செங்கொடி பறந்த சென்ற நூற்றாண்டில், நாட்டில் சீரான பொருளாதாரச் சமத்துவத்தைக் கொண்டு வரும் நோக்கில் பெண்களைக் கூட்டுக்குள்ளிருந்து வெளிக் கொண்டு வந்த மாவ் ட்ஸ துங், ‘பெண்ணினம் பாதி வானைத் தாங்கும்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், அதற்கு முன்பிருந்த கதையே முற்றிலும் வேறு. கம்யூனிஸம் சீனத்தில் செய்த மிகச் சில நல்லவற்றில் பெண் விடுதலையும் ஒன்று. எனினும், அங்கே பெண்களுக்கான தொடக்கம் மிகவும் தாமதம் தான். என்றபோதிலும் அப்போதே கல்வி, வேலை சார்ந்த பெண்களின் இடப்பெயர்வுகளும் தொடங்கிவிட்டன. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சீனப்பெண் விடுவிடுவென்று முன்னேறவும் பயணிக்கவும் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளில் இது நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

“முடியாது என்று எதுவுமே இல்லை இன்றைய நிலை. பெண்ணால் இன்றைக்கு எதையுமே சாதிக்க முடியும்”, என்று சொல்லும் வேயியூ என்ற பெண்மணி சிற்றூரிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் முப்பது வயதுப் பெண்மணி.

விஞ்ஞானியான இவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். “இன்றைக்கு இடம்பெயர்வதும் பெண்ணுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.” தன்னைப் போன்ற பெண்கள் சீனாவின் சமீப பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்ற முடியுமென்று மிகவும் தெளிவாக இருக்கிறார்.

லீ ஜியா ஆறுமாதமாக பேய்ஜிங்கில் ஆசிரியர் பயிற்சி பெறும் ஒரு மாணவி. தென் சீனத்தில் ஒரு சிறுகிராமத்தில் ஆங்கில மொழியாசிரியராகப் பணியாற்றிய போதே தொலை தூரக் கல்வி மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்த இளம் பெண்ணுக்கு, ‘இந்த கிராமம் மட்டுமா உலகம்? இன்னும் வேற ஏதேதோ இருக்கணும்,’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பேய்ஜிங் போய் ஆசிரியர் பயிற்சி பெற எண்ணினார். தலைமை ஆசிரியரும் பயிற்சி மற்றும் படிப்பை முடித்து விட்டு கிராமத்துக்கே திரும்பிவிடுமாறு கூறி அனுப்பி வைத்தார். பயிற்சி முடிந்த கட்டத்தில் லீ ஜியாவுக்கு குழப்பமாக இருந்தது. மாற்றமில்லாத, சவால்களில்லாத ஒரே மாதிரியான நிரந்தர ஆசிரியர் வேலைக்குத் திரும்ப அவருக்கு விருப்பமில்லை. சிற்றூர்களில் முன்னேற்றமில்லாத தேக்கம் நிலவுகிறதென்று இவர் கருதுகிறார். நகரங்களில் தான் வாய்ப்புகள் மிக அதிகம் என்று நம்பும் இவர் சுதந்திரமாகவும் வேகமாகவும் பணியாற்றி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கிறார். “என் கனவுகளையெல்லாம் இளம் வயதிலேயே நிறைவேற்றிக் கொள்ள எனக்கு நகர வாழ்க்கையே சரிவரும்னு தோணுது. அதே நேரம் கிராமத்துக்குப் போறதா, இல்ல, இங்க நகரத்துலயே என் காலை ஊனறதான்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு. இது என் வாழ்க்கைல ரொம்ப முக்கிய ரொம்பப் பெரிய முடிவில்லையா, அதான்,..”, என்கிறார். எடுக்கும் முடிவு வாழ்க்கை தான் திசை திருப்பக் கூடியதென்று சற்றே திணறுகிறார்.

இவரைப் போல இளைஞர்களுக்கு இது போன்ற குழப்பம் ஏற்பட கீழைச் சிந்தனைகளும் காரணமாகின்றன. கன்ஃயூஷியஸ் சொன்னதைப் பின்பற்றும் சீனச் சமூகம் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பதைப் போற்றுபவர்கள். மேலைக் கருத்தாக்கங்களால் பாதிக்கப்பட்ட இன்றைய தலைமுறையைச் சேர்ந்த லீ ஜியாவின் பெற்றோர் அவரை நகரில் நிரந்தரமாக விட பிரியப்படவில்லை. திரும்பி வரவே சொல்கிறார்கள். பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளையாக இருப்பதா, இல்லை தன் விருப்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதா என்று மிகவும் யோசித்து நகர வாழ்க்கையையே தேர்ந்தெடுத்து விட்டார். 21 வருடங்கள் பெற்றோர் சொல்லுக்கு மறுபேச்சு கேட்டுப் பழகியிராத லீ ஜியா பெற்றோருக்கு விளக்கிப் புரிய வைக்கவும் ஆரம்பித்து விட்டார். மிடுக்குடையில், தோளில் மாட்டிய மடிக்கணியுடன் அதிநவீன அலுவலகத்தில் வேலைக்குப் போகும் ஆசை லீ ஜியாவுக்கு.

இடம்பெயர்ந்து வந்து நகரில் வாழும் நவீனப் பெண்களின் உதாரணம் இவர்களிருவரும். இஸ்லாமியச் சமூகத்தில் இன்னமும் பெண்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இவ்விரண்டுக்குமிடையில் வரக்கூடிய இன்றைய பெரும்பாலான சீனப்பெண்களின் கல்வி வாய்ப்புகள் பல்வேறு தேர்வுகளால் நிறைந்திருக்கிறது.

Photos – http://izismile.com/2009/05/26/village_school_in_china_30_pics.html

சீனாவின் பள்ளிகள் குறித்து ஒரு ஆவணப்படம் : http://www.youtube.com/watch?v=hA_6JAgabA4

(முற்றும்)