இரண்டு கவிதைகள்

கந்தர்வர்களின் உலகம்

அங்கிங்கெனாதபடி
அனைத்தும் பார்த்தபடி
அந்தரத்தில் நிற்கிறார் சாடிலைட் கடவுள்

தேனிலவைக் கொண்டாடும்
காத்தரினும் பார்த்திபனும்
விண்படகில் மிதக்கிறார்கள் புவியை மறந்து

என்னிடமில்லாதது உன்னிடம்
என்னடி அரிதானதிருக்குதென்றாள் எமிலி
கேளுன் கணவனையென்றாள் எட்னா

கத்திக் கத்தி சமரசமானபின்
கத்தியுடனலைந்தனரிருவரும்
தலைமறைவான சைமனைத் தேடி

எப்படியிருக்குமோ என்னசெய்யுமோவென
எண்ணியெண்ணிப் படபடக்கும்
பெஞ்சமினுக்கு பல்பீர்சிங்குடனின்று முதலிரவு

ஒருபிறவியில் மறுபிறவி
சாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்
அவரவர் நல்லூழ் அவரவரறியார்

மணல்வீடுகட்டும் சிறார் மூவரில்
சோபியாவின் பிள்ளை ஒன்று
தாவூதின் பிள்ளை ஒன்று
இருவரின் பிள்ளை ஒன்று

இந்திர உருவிலிருந்த கௌதமர்
இனி கல்லாய் நில்லாள் அகலிகை
இனிது திறந்தவெளியுலகமென்றார்

அந்தரத்தில் நின்றபடி
அனைத்தையும் கேட்டபடி
அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் சாடிலைட் கடவுள்

திமிர்

முன்பதிவு அதற்கில்லை
தட எண்ணும் வரும்வழியும்
தெரியாது இங்கெவர்க்கும்
எப்போது வருமென்றும்
வந்தபின்தான் தெரியும்
இன்று வந்தால்
நாளை பால்
எலக்ட்ரிக் அடுப்பு
எங்கள் ஊருக்கு
எப்போது வருமோ
தெரியவில்லை
எதற்கும் கொடுப்பினை வேண்டும்
விறகு விரட்டி கெரசின்தான்
எனக்கு வாய்க்கும்போல
சீமெண்ணெயும் விரட்டியும்
சேர்ந்தெழுப்பும் நெடி தாங்காது
எழுந்திருப்பேன்
எலே உனக்கித்தனை திமிராவென்று
உருட்டுக்கட்டையால்
புரட்டிப்புரட்டியடிப்பான்
சுடலைமாடன்
அடிவாங்கிச் சாகவேண்டும்
அதை நினைத்தால் துக்கமாக வருகிறது