குழந்தைகளில் இருவர் காணவில்லை என்று தெரிந்ததும் பெரியவருக்கு இருப்பே கொள்ளவில்லை. கை கால்களை வேகமாக உதைத்துக் கொண்டு கடலின் மேலும் கீழுமாக நீந்தத் தொடங்கினார். அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் எப்போதும் எம்பிக் குதித்துக்குக் கொண்டிருக்கும் நீரலையின் நீலத்திற்கு செந்தூரம் இட்டுக்கொண்டிருந்தன. கிரணங்களில் ஒன்று பெரியவரின் முதுகில் விழுந்து அவரின் கபில வண்ணக் கூட்டை இன்னும் அழகாகக் காட்டியது.
பெரியவருக்கு ஏறக்குறைய அறுபத்தி ஐந்து வயது இருக்கும். அந்த ஆமைப் பொதியிலேயே அவர்தான் வயது முதிர்ந்தவர். இத்தனை ஆண்டு காலமும் அந்த நீர்ப்பரப்பில் தான் வசிக்கிறார். இருந்தாலும் அதன் பெயர் தெரியாது. மனிதனுக்குத் தான் பெயர் தேவைப்படுகிறது. நீர், நிலம், விலங்குகள், பறவைகள்,… ஏன் சக மனிதன் உட்பட எல்லாவற்றையும் பிரித்து வைத்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரையும் தந்து விடுகிறான். ஆனால், ஆமைகளுக்கு அதெல்லாம் தேவையில்லை. நீர்-நிலம், ஆண்-பெண், ஒளி-இருள் என்பன போன்ற அதிக சிக்கல் இல்லாத பிரிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு சௌகரியமாக வாழப் பழகிவிட்டன.
ஆகவே, பெரியவருக்குத் தான் வசிக்கும் நீர்ப்பரப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா கடற்கரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் மெக்ஸிகோ வளைகுடாவின் ஒரு பாகம் என்ற பூகோளம் எல்லாம் தெரிந்திருக்கவில்லை. தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது? ஒவ்வொரு பெயராக ஒப்பித்துக் காட்டினால் காணாமல் போன குழந்தைகள் தானாகவே வந்துவிடப் போகிறார்களா என்ன? இல்லையே! இவர் தான் தேட வேண்டும். நீரின் மேலும், கீழும், இடமும், வலமும், எல்லா திக்குகளிலும் நீந்தி அலைந்து தேட வேண்டும். யார் கண்டார்? நிலத்தில் ஏறிக் கூட தேட வேண்டியிருக்கலாம்.
பெரியவருக்கு திக்கென்று இருந்தது. குழந்தைகள் நிலத்திற்கு சென்றிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார். மெல்ல நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். நிலத்தில் மனித நடமாட்டம் இன்னும் குறையவில்லை. ஒருவேளை அங்கே போயிருந்தால் அவர்களிடம் சிக்கிக் கொண்டு கஷ்டப்படுவார்களே என்று பயந்து போனார். அதே நேரத்தில், நிலத்தில் ஏற விடாமல் எதோ ஒன்று தடுத்தது.
பெரியவருக்கு இதுவரை மனிதர்களுடன் ஏற்பட்ட சந்திப்புகளில் ஒன்று கூட மெச்சிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. நெருக்கத்திலும், தொலைவிலுமாக ஒரு நான்கைந்து முறை மனிதர்களை எதிர் கொண்டிருப்பார். எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு சிக்கல், பிரச்சனை, போராட்டம். ஒரு முறை தெரியாத்தனமாக கரை ஒதுங்கிய வேளையில், யாரோ நான்கு சிறுவர்கள் திடீரென்று துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடிப் போய் நீரோடு ஒளிந்து கொண்டார்.
இன்னொரு முறை தேமே என்று கடலுக்கடியில் கிடந்தவரை எங்கிருந்தோ வந்து விழுந்த மீன் வலை கவ்விக் கொண்டது. கிட்டத்தட்ட கதை முடிந்து விட்டது என்று நினைத்த நேரத்தில், யார் செய்த புண்ணியமோ கடலலையின் ஆட்டத்தால் வலை நழுவி விமோசனம் பெற்றார். அப்போது உயிர் பிழைத்ததை அவரால் இன்றளவும் நம்ப முடியவில்லை. அப்படியொரு கொடுமையான தருணம் அது! இப்போது நினைத்தால் கூட உடம்பு உதறுகிறது. தான் தப்பித்திருந்தாலும், தன் சகாக்களில் சிலரை வலையோடு விடை கொடுக்க வேண்டியிருந்தது. அன்று முதல் முறையாக இரவு முழுவதும் நீந்திக் கொண்டே இருந்தார்.
அதே போல, மற்றொரு இரவில் பெண் ஆமை ஒன்று தன் முட்டைகளை மண்ணில் இட்டுவிட்டு திரும்பிய சில நொடிகளிலேயே ஒரு மானுடக் கூட்டம் வந்து அத்தனை முட்டைகளையும் அள்ளிக் கொண்டு சென்றது. ஒன்றைக் கூட விட்டு வைக்கவில்லை பாவிகள்! தாயின் சூட்டைக் கூட இழக்காத பிஞ்சு முட்டைகள் அத்தனையையும் களவாடிச் சென்றார்கள். அந்தக் காட்சி அவரைப் பல இரவுகள் தொடர்ந்து நீந்தச் செய்தது. பல கேள்விகளை எழுப்பியது.
ஏனோ, மற்ற உயிரினங்களை விட இந்த உலகத்தில் மனிதர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. எல்லாவற்றையும் ஆட்கொள்ள எண்ணுகிறார்கள். ஆள எத்தனிக்கிறார்கள். தங்களின் இருப்பிடத்தை எப்போதும் விரிவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், இருப்பிடத்தையும் தாண்டி கோலோச்ச நினைக்கிறார்கள். இத்தனைக்கும் மனித இனம் புதுசாக முளைத்த ஒன்று. நான்கு கோடி ஆண்டுகளாக வாழும் ஆமைகள் எங்கே? வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக மட்டுமே வாழும் மனிதர்கள் எங்கே?
அது கிடக்கட்டும். எத்தனை கேட்டாலும் இவற்றுக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. இப்போது குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். கடவுளே! அவர்கள் எக்காரணத்திற்காகவும் நீரைத் தாண்டிச் சென்றிருக்கக் கூடாது. சின்னவள் ரொம்ப சாது. சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவள் நிச்சயம் இங்கே தான் எங்கேயாவது இருக்க வேண்டும். ஆனால், அவனுக்கோ வால் நீளம். எப்போதும் ஏதாவது குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பானே! கிறுக்குப்பயல் வெளியே கிளியே போயிருப்பானோ? இருக்கலாம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, இவளையும் அழைத்துக் கொண்டு போயிருப்பானோ? இருவருமே எப்போதும் ஜோடியாகத்தானே திரிவார்கள்! போயிருப்பார்களோ?
பெரியவருக்குக் குழப்பமாக இருந்தது. நீரில் தொடர்ந்து தேடுவதா? இல்லை நிலத்தில் இறங்கிவிடலாமா? மீண்டும் தலையைத் தூக்கிப் பார்த்தார்.
தன் கிரணங்கள் அத்தனையையும் சுருட்டிக் கொண்டு சூரியன் உலகின் மற்றொரு பாதியை எழுப்பப் போய்விட்டிருந்தது. நிலவோ முழுதாக வளரும் முயற்சியில் ஏறக்குறைய பாதியை சாதித்த சந்தோஷத்தில் பல்லிளித்துக் கொண்டிருந்தது. இன்னமும் மக்கள் இருந்தார்கள். முன்பை விட குறைவாகவே இருந்தாலும், இருந்தார்கள். எல்லோரும் எப்போது போவார்கள் என்று பெரியவர் யோசித்தார். அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சில தினங்கள் சீக்கிரம் போய் விடுவார்கள். சில தினங்களோ நீண்ட நேரம் ஆகியும் கூட்டம் கலையாது.
அதெல்லாம் அவருக்குப் புரிந்ததே இல்லை. பாவம்! அவர் கிழமையைக் கண்டாரா? இல்லை நேரத்தை தான் கண்டாரா? காலம், நேரம் எல்லாம் மனிதர்கள் கண்டுபிடித்தது தானே! வருடம், மாதம், வாரம், நாள், நேரம்… சே! எத்தனை குழப்பங்கள்! அவர் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் இந்த கணத்திற்குக் கூட ஒரு எண் அலகு இருக்கும். ஆனால் அது அவருக்குத் தேவை இல்லை. அவரைப் பொறுத்த மட்டிலும் அதுவரை குழந்தைகள் கூட இருந்தார்கள். இது குழந்தைகள் இல்லாத கணம். அவ்வளவே!
நீரா? நிலமா? என்று ஊசல் ஆடிக்கொண்டிருந்த அவர் மனம், மெல்ல மெல்ல வேகமிழந்து, இறுதியில் குழந்தைகளைத் தொலைத்த இடத்திற்கே மீண்டும் சென்று பார்ப்போம் என்ற நிலையில் நின்றது. அந்த இடத்தை நோக்கி நீந்தத் தொடங்கினார். அது கரையிலிருந்து தள்ளியிருந்தது. கடலுக்கு அடியில் ஆழமாகப் பொதிந்திருந்தது.
நீரால் திரிக்கப்பட்ட நிலவொளி அந்த நீலக்கடலில் பல வெள்ளைப் பாதைகளை வரைந்திருக்கவே, பாதைகளில் ஒன்றை பிடித்துக் கொண்டே பெரியவரும் பயணம் செய்தார். பாதையின் முடிவில் இருந்தது அவர் குழந்தைகளைத் தொலைத்த இடம். சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கு தான் அவர்கள் தங்களின் பசியை ஆற்றிக் கொண்டார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடம்… அட்டைகளும், நத்தைகளும், சிப்பிகளும் சிதறிக் கிடக்கும் பாசி படிந்த பவழப் பாறை அது. அவர்களின் உணவுப் பெட்டகம்!
பெரியவர் ஞாபகப் படுத்திப் பார்த்தார். சர்கசம் பூஞ்சைப் பாயை விட்டு எல்லோரும் ஒன்றாகத் தான் புறப்பட்டோம். சேர்ந்தே தான் நீந்தி வந்தோம். பாறை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் போதே இந்த இரு குழந்தைகள் மட்டும் என்னையும் தாண்டி வேகமாக நீந்திச் சென்றது இப்போதும் கூட நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அதற்கு பிறகு சாப்பிடும் போது கூட அருகில் இருந்தார்கள். இருந்தார்களா? ஆம்! மற்றவர்கள் எல்லாம் அமைதியாக சாப்பிட்ட போது, அவனும் அவளும் மட்டும் சண்டைப் பிடித்துக் கொண்டே சாப்பிட்டார்களே! அப்புறம் எப்போது அவர்களைத் தொலைத்தோம்? எங்கே தொலைத்தோம்? பூஞ்சைப் பாய்க்குத் திரும்பிச் செல்லும் வழியிலா?
அவர் யோசித்துக் கொண்டிருக்கையில் அவர் மேலே இருந்த நீர் திடீரென்று கொந்தளிக்கத் தொடங்கியது. பயந்து போய் பாறையின் அடர்த்தியான பாசிக்கு மத்தியில் மறைந்து கொண்டார். தலைக்கு மேலே பூதாகாரமான ஒரு உருவம் நீந்திப் போனது. மெல்ல கழுத்தை நீட்டிப் பார்த்தார். ஒரு பெரிய சுறா வேகமாக நீந்திச் சென்றது. சுறா மீன்! சமுத்திரத்தின் ராட்சசன்! அத்தனை உயிர்களையும் விழுங்கித் தின்னும் எமகாதகன். பெரியவரின் பயம் திசை திரும்பியது. குழந்தைகள் இவனிடம் சிக்கிக் கொண்டிருந்தார்கள் என்றால்? ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் விதி அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான்!
அவர்களின் விதி மட்டுமல்ல. இயற்கையின் விதியும் அதுதான். பலமுடையவன், பலகீனமானவனை வெல்வான், கொல்வான், உண்பான். நான் இந்த நத்தைகளையும், அட்டைகளையும் விட பலமுடையவன். இவர்களை சாப்பிடுகிறேன். என்னை விட பலமுடையவன் சுறா. அவன் என்னை சாப்பிடுகிறான். ஆனால் அவனையுமே சில நேரங்களில் இந்த மனிதர்கள் அடக்கிவிடுகிறார்களே! எப்படி? அவர்கள் அவனை விடவும் பலசாலிகளா? எங்கிருந்து வந்தது அவர்களுக்கு இத்தனை பலம்? எங்களிடமிருந்து தானே? நத்தைகளிடமும், அட்டைகளிடமும் தொடங்கிய வாழ்வுக்கான போராட்டம், மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று மானுடம் என்றொரு மாபெரும் சக்தியாக பரிணமித்து நிற்கிறது. இங்கே இவர்கள் தான் வலிமையானவர்கள். இவர்கள் கையில் மற்ற உயிர்கள் எல்லாமும் நோஞ்சான்களே!
பெரியவருக்கு இயற்கையின் வடிவமைப்பு வினோதமாகத் தோன்றியது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த உலகில் உயிர்கள் வாழ்கின்றன. வாழ்ந்திருக்கின்றன. எப்போதுமே வாழ்வியலுக்கான போராட்டமும் இருந்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு போராட்டத்தையும் தாண்டி வர உயிர்கள் ஏதேனும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மாறுபவை பிழைக்கின்றன. மறுப்பவை மறைகின்றன. மாற்றம் புது இனத்தைத் தருகிறது. அது முன்னதைக் காட்டிலும் பலமாக இருக்கிறது. மீண்டும் வாழ்வுக்கான போராட்டம். மீண்டும் மாற்றம். மீண்டும் வளர்ச்சி. வளர்ச்சியின் முடிவில் மற்றொரு புதிய வலுவான உயிரினம்.
இப்படி ஒரு பலகீனமான உயிரின் இருத்தலை நீளச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட இயற்கைத் தேர்வான மாற்றங்கள், அந்த பலகீனமான உயிர்களையே பலி வாங்கும் சக்தியாக ஒரு புதிய வலிமையான இனத்தை தோற்றுவிப்பது எதனால்? என்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.
பூஞ்சைப் பாயை நோக்கி நோக்கி நீந்தத் தொடங்கிய பெரியவர், தன் சிந்தனையில் தொலைந்து போய் கரைக்கு அருகே வந்திருந்தார். அவருக்கே ஆச்சரியம். எப்படி இங்கே வந்தோம் என்று? ஏதோ ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்த கேள்வி, பெரியவரை எங்கோ கொண்டு சென்று விட்டிருந்தது. அது கூட பரவாயில்லை. ஆனால், கரையில் அவர் கண்ட காட்சி அவரை ஸ்தம்பிக்கச் செய்தது. அவர் உயிரை உறையச் செய்தது.
கரையில் இப்போது யாருமே இல்லை, ஒரேயொரு மனிதனைத் தவிர. அவன் கடலுக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தான்… கையில் ஒரு பெரிய கண்ணாடிக் குடத்தை வைத்துக் கொண்டு. குடத்தில் தளும்பத் தளும்ப நீர். கடல் நீர். நீரில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள்தான்… இத்தனை நேரமும் பெரியவர் தேடிக்கொண்டிருந்த குழந்தைகள்!
நீள வாலுடன் அவனும், அவனைத் துரத்திக் கொண்டு அவளும், நீருக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரியவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படி அங்கே போனார்கள்? எப்படி அவன் கையில் சிக்கினார்கள்? பாவம் குழந்தைகள்! தாங்கள் சிறை பிடிக்கப்பட்டது கூட தெரியாமல், இன்னமும் கடலில் இருப்பதாக எண்ணிக் கொண்டு விளையாடி கொண்டிருக்கிறார்களே! அவர்களின் இந்த மகிழ்ச்சியில் ஆயுள் இன்னும் எத்தனை மணித் துளிகளோ? பெரியவருக்கு வருத்தமாக இருந்தது. அதை எப்படி வெளிக்காட்டுவது என்று கூட தெரியவில்லை. பாழாய்ப் போன மனிதர்கள். எல்லாவற்றிலும் கொடுத்து வைத்தவர்கள். அவர்களால் அழுது தொலைக்க முடியும்.
அவன் குழந்தைகளை எதற்காகப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான் என்று பெரியவரால் யூகிக்க இயலவில்லை. அவர்களை அவன் என்னவெல்லாம் செய்வானோ? அவருடைய மனதில் என்னென்னவோ கற்பனைகள் தோன்றின. ஒவ்வொன்றும் பயங்கரமாக இருந்தது. அவற்றை கலைக்க முயற்சி செய்து பார்த்தார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த மனிதன் திரும்பி கடலிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினான். அவன் திரும்பும் நொடியில் பெரியவர் கடைசியாக ஒரு முறை குழந்தைகளைப் பார்த்தார். அவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அவனுடைய உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்த பெரியவர், அவன் மறைந்ததும் பெருமூச்சு விட்டபடி நீருக்குள் திரும்பினார்.
கடற்கரையைத் தாண்டி சாலைக்கு வந்த அந்த மனிதன், குடத்தை பத்திரமாக ஒரு பெட்டிக்குள் வைத்து, தன் காரின் பின்புறத்தில் பாதுகாப்பாக வைத்து மூடினான். தடக் என்ற சத்தத்துடன் மூடிய கதவில் இருந்த எண் பலகையில் ஒரு ஆமையின் சித்திரம் வரையப் பட்டிருந்தது. சித்திரத்தின் கீழே “Helping sea turtles survive” என்ற வாசகமும், சித்திரத்தின் இரு புறமும் “NOA KAR” என்ற எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
கார் கடற்கரையை விட்டு புறப்பட்டு, சாலையின் வாகன கூட்டத்துடன் கலந்து விட்ட வேளையில், கடலுக்கு அடியில் பெரியவர் குழந்தைகளை எண்ணிய படியே அங்குமிங்கும் நீந்திக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், சமுத்திரத்தின் நடுவே தொலை தூரத்தில், கிட்டத்தட்ட ஆழ் கடலும் தோடுவானுமும் சேரும் அந்த இடத்தில், ஒரு எண்ணைக் கிணறு வெடித்துச் சிதறத் தொடங்கியது.