ஆயிரம் தெய்வங்கள் – 14

புரோ மீத்தியாசின் கதை

கிரேக்க புராணத்தில் மனிதப் பண்புள்ள தேவகுமாரர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பலர் ‘தெய்வம் என்றால் அது தெய்வம். மனிதன் என்றால் அவன் மனிதன்’ என்று எண்ணும்படியான தெய்வீக மனிதர்களில் புரோமீத்தியாஸ், பண்டோரா, டியூக் காலியன், சிஸிஃபஸ், அயோ, யூரோப்பா, ட்ரோஜன்கள், தனே, லேடா, டையோஸ்க்யூரி என்று பலரைச் சொல்லலாம்.
மனிதர்களே விண்ணிலிருந்து வந்த காந்தர்வர்களாகவும் எண்ணப்படுவதுண்டு. வனதேவதைகள் அல்லது கடல்கன்னியர் மூலம் ஜன்மம் எடுத்தவர்களாகவும் உள்ளனர். கிரேக்க புராணத்தில் மனிதனாகப் பிறந்து புகழ்பெற்ற வீரன் புரோமீத்தியாஸ். புரோமீத்தியாஸ்க்கு எபிமித்தியாஸ் என்ற தம்பி உண்டு. இரவரும் ஆசியா என்றும் கிளைமின் என்றும் அழைக்கப்படும் நீர்தேவதையின் புத்திரர்கள். தந்தை அய்யாப்பீட்டஸ். அய்யாப்பீட்டஸ் ஸீயஸ்ஸின் தமையன். அய்யாப்பீட்டசுக்கு வேறு புதல்வர்களும் உண்டு. ஒருவன் அட்லஸ், மற்றொருவன் மீனோட்டியஸ். இவர்கள் இருவரும் ஸீயஸ்ஸை எதிர்த்து ஒலிம்பியா போரில் பங்கேற்று தண்டிக்கப்பட்டவர்கள். ஆனால் புரோமீத்தியாசும் எபிமித்தியாசும் ஒலிம்பஸ் போரில் பங்கேற்கவில்லை. இருவருக்கும் குணத்தில் வேற்றுமை உண்டு. அண்ணன் புத்திசாலி. தம்பி மட்டி.

புரோமீத்தியாசின் மனிதாபிமானத்தைக் குறிப்பிடும் தியோகோனி – அவனே களிமண்ணைப் பிசைந்து மனிதர்களைத் தோற்றுவித்த ஒரு புராணமரபைக் குறிப்பிட்டதுடன், அவன் ஒலிம்பஸ் போரில் ஸீயெஸ்ஸுடுடன் போராடி தண்டனை பெற்றதைக் குறிப்பிடுகிறது. மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ புரோ மீத்தியாஸ் போராடினான். ஸீயஸ்ஸோ மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை விரும்பாதவர். மிகோன் நகரில் நிகழ்ந்த விவரத்தை ஹிசையத் குறிப்பிடுகையில், ஒரு சுவாரசியமான கதை பிறந்தது.

நம்ம ஊர் கருப்பண சாமிக்குக் கிடா வெட்டுவது போல் அங்கும் கிடா வெட்டிப் பங்கு பிரித்தார்கள். அவ்வாறு பங்கு பிரிக்கும்போது கடவுளான ஸீயஸ்ஸின் பங்கு எவ்வளவு? மனிதர்களின் பங்கு எவ்வளவு என்ற கேள்வி பிறந்தது. மனிதர்களுடைய பங்கு கணிசமாக இருக்க புரோமீத்தியாஸ் ஒரு தந்திரம் செய்தான்.

அங்கு கிடாவுக்கு பதிலாகப் பொலிகாளை வெட்டப்பட்டது. மாட்டுக்கறி விருந்துக்கு ஸீயெஸ் வந்திருந்தார். (இந்திய தெய்வங்கள் சைவம்) கறித்துண்டு உண்ண ஸீயெஸ்ஸுக்கு ஆசை. கறித்துண்டுகளை மக்களுக்கு வழங்க புரோமீத்தியாஸ் ஆசைப்பட்டார். இறைச்சித் துண்டங்கள் நிரம்பிய தட்டில் இறைச்சியை எலும்புகளால் மூடினார். எலும்புகள் மிகுந்த தட்டில் இறைச்சியால் மூடினார். ஸீயெஸ்ஸை அழைத்து எது வேண்டுமென்று கேட்டார். ஸீயஸ் அறியாமல் எலும்புகள் நிறைந்த தட்டை இறைச்சி அதிகம் என்று நம்பி வாங்கி ஏமாந்துவிட்ட சினத்தில் துர்வாசராகிவிட்டார். மனிதர்கள் மீதும் புரோமீத்தியோஸ் மீதும் வெறுப்புற்ற ஸீயஸ் நெருப்பு வழங்க மறுத்துவிட்டார். புரோமீத்தியாஸ் விண்ணில் பறந்து அனுமானைப்போல் சூரியனின் நெருப்புக்கோளத்திலிருந்த நெருப்புகளை அள்ளிவந்து மக்களிடம் வழங்கினார். இதனால் ஸீயஸ்ஸின் சினம் இரட்டிப்பானது. ஆகவே புரோமீத்தியாசைக் காக்கேசிய மலையில் சங்கிலியால் பிணைத்துக் கழுகுகளைக் கொண்டு அவன் உடலைச் சின்னா பின்னமாக அழியப்பணித்தார். கழுகுகள் அவன் உடலில் உள்ள ஈரலை வெளியே எடுத்தது. புரோமீத்தியாஸ் முதல் டைட்டன் ஓஷியானசின் பேரன் என்பதால் அவனுக்கு மரணம் சாத்தியம் இல்லை. கழுகுகள் அவன் ஈரலைக் கொத்தி எடுத்த பின் புதிய ஈரல் முளைத்துவிடும். பாஞ்சாலி சேலையை உருவ முடியாமல் மூர்ச்சையான துச்சாதனன் போல் கழுகுகள் செயலிழந்துவிட்டன. நீண்டகாலம் சங்கிலியால் பிணைக்கப்பட்ட புரோமீத்தியாஸ் பின்னர் ஹீராக்ளீஸ் அவனை விடுவித்து மனிதர்களுக்கு உபயம் செய்தார்.

பண்டோரா பெட்டி

மனிதர்களுக்கு தண்டனையை வழங்க ஒரு உத்தியை யோசித்த ஸீயஸ், மோகினியைப் படைக்க முடிவுசெய்தார். புரோமீத்தியாசுக்கு வழங்கப்பட்ட தண்டனை தோல்வியானதால் மோகினியாட்டம் யோசிக்கப்பட்டது. ஹெஃபெஸ்ட்சையும் எத்தீனாவையும் அழைத்து ஒரு அழகான பெண்ணைப் படைத்தார். அந்த அழகியைப் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அவளை அடைவதற்குப் போட்டி போட்டுப் பரிசுகளை வழங்குவார்கள். அப்பரிசுகளில் ஒன்று பண்டோராபெட்டி. அந்த அழகியும் பண்டோரா என்று அழைக்கப்பட்டாள். புரோமீத்தியாஸ் புத்திசாலி. மட்டியான அவன் சகோதரன் எபி மீத்தியாசுக்கு ஸீயஸ் அந்த அழகியையும் கூடவே அந்தப் பண்டோராப் பெட்டியையும் பரிசாக வழங்கினார். இதில் எதுவோ சூழ்ச்சி உள்ளதாகக் கருதிய புரோமீத்தியாஸ் தம்பியை எச்சரித்தான். ஸீயஸ் தரும் எந்தப் பரிசையும் ஏற்காதே என்று புத்தி கூறியும் பணியாத எபிமீத்தியாஸ் அம்மோகினியையும் பண்டோராப் பெட்டியையும் ஏற்றுக்கொண்டான்.

எபிமீத்தியாஸ் பண்டோரா மோகினியுடன் பூமிக்கு வந்தான். வாழ்வைத் தொடங்கினான். ஆரம்பத்தில் ஒன்றும் பிரச்னை இல்லைதான். ஏனெனில் மோகினி பண்டோரா பூமிக்குள் வந்ததும் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. காரணம் எதுவெனில் நோய்கள் எல்லாம் பண்டோரா பெட்டிக்குள் சென்றுவிட்டதால் மக்கள் துன்பம் இல்லாமல் வாழ்ந்தனர்.
தெய்வம் படைத்த மோகினியை தெய்வம் தூண்டவே, ஒருநாள் ஆவல் காரணமாக அவள் அப்படி அப்பெட்டியில் என்னதான் புதையல் உள்ளது என்று திறந்த பார்க்கவே, பண்டோராப் பெட்டியில் அடைப்பட்டுக் கிடந்த அத்தனை நோய்க்கிருமிகளும் மனிதர்களைத் தாக்கின. முன்பை விட அதிகத் துன்பத்தை மக்கள் அனுபவித்தனராம். ஒரே ஒரு ஆவி மட்டும் பெட்டியிலிருந்து வெளியேறவில்லை. அதுதான் “ஹோப்”அதாவது “நம்பிக்கை”.

மனிதர்களை தண்டிக்க ஸீயஸ் கண்டுபிடித்த உத்தியே பண்டோரப் பெட்டி. பரிசு வடிவில் வழங்கப்படும் துன்பமே பண்டோரா. கிரேக்க மொழியில் பண்டோரா என்றால் பரிசு.

ஹிசையத்தின் தியோ கோனியில் விவரிக்கப்பட்டுள்ள பண்டோராப் பெட்டிக்கு வேறு விதமான விளக்கமும் உண்டு. பண்டோராப்பெட்டியில் அடைந்து கிடந்தவை நற்குணங்களே என்றும், அப்பெட்டி திறக்கப்பட்டதும் நல்லவை எல்லாம் விண்ணில் பறந்துவிட்டனவாம். நம்பிக்கை மட்டுமே பெட்டிக்குள் எஞ்சியதாம்.

சில ஆங்கிலப் பத்திரிகைகளில் “பண்டோரா பாக்ஸ்” (Pandora Box) என்று ஒரு இடம் ஒதுக்கி, சில சிக்கலான பிரச்சினைகளுக்கு வாசகர்களின் விவாதத்திற்கு விட்டுவிடுவார்கள். வாசகர்களின் கருத்துக்கள் நல்லவையா தீயவையா என்பதை நிர்ணயிப்பது யார்? ஆண்டவன் செவிக்கா? அரசாங்கத்தின் செவிக்கா?…

டியூக்காலியன்

டியூக்காலியன் என்ற மனிதனே ஹெலனின் இனத்தை உருவாக்கியவன். இவன் முதல் மனிதனாக எண்ணப்படும் புரோமீத்தியாசின் புதல்வன். தெஸ்ஸாலி என்ற கிரீஸ் தேசப்பகுதியில் புரோமீத்தியாஸ் டியூக்காலியன் பற்றிய நாடோடிப்பாடல்கள் படிக்கப்படுகின்றன. இவர்களைப் “பித்தளை மனிதர்கள்” என்று ஹிசையத் குறிப்பிட்டுள்ளார். பழைய பைபிள் – சுமேரிய ஊழி வெள்ளத்தைப் போல் – கிரேக்க தேசத்திலும் ஊழிவெள்ளக்கதை உண்டு.
தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ் மனிதர்கள் மீது மகா கோபம் பொண்டு மாபெரும் வெள்ளத்தை மண்ணில் உருவாக்குகிறார். மக்கள் வெள்ளத்தில் மடிகின்றனர். இரண்டு மனிதர்களுக்கு மட்டுமே உயிர்ப்பிச்சை வழங்குகிறார். அவர்களில் டியூக்காலியன் ஒருவன். மற்றொருவள் பைரா.(சிவப்புமுடியுள்ளவள்). பைரா பண்டோரா மோகினிக்கும் எபிமீத்தியாசுக்கும் பிறந்த அழகி. ஊழிவெள்ளத்தில் ஒரு படகைப் பிடித்து இருவரும் ஒன்பது பகல்கள் ஒன்பது இரவுகள் பயணம் செய்து முடிவில் தெஸ்ஸாலி மலையில் கரையேறினர். ஸீயஸ்ஸின் தூதுவனாக ஹெர்மஸ் அங்கு வருகிறான். உங்கள் தேவை என்ன என்று ஹெர்மஸ் கேட்க, எங்களுக்குத் துணையாக மக்கள் வேண்டும் என்று பதில் கூறுகின்றனர். அப்போது ஸீயஸ் அவர்கள் முன்தோன்றி, “பூமாதேவியின் எலும்புகளை உங்கள் தோளுக்குமேல் பின்புறமாக வீசி எறியுங்கள்” என்றார். பைரா பொருள் தெரியாமல் விழிக்க, புத்திசாலி புரோமீத்தியாசின் புதல்வனான டியூக் காலியனுக்குப் பொருள் புரிந்து புன்னகித்து அங்கு குவிந்துகிடந்த கற்களைப் பொறுக்கிப் பின்புறம் திரும்பி தோளுக்கு மேல் எறிந்தாள். அவள் எறிந்த கற்களிலிருந்து ஆண்கள் பிறந்தனர். இவ்வாறே பைரா எறிந்த கற்களிலிருந்து பெண்கள் பிறந்தனர். தெஸ்ஸாலியில் டியூக்காலியனும் பைராவும் இன்பமுடன் பொழுதைக் கழித்து நிறையக் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தனர்.

இப்படித் தோன்றியவர்களே ஹெலனிக் இனமக்கள் டியூக்காலியனின் மூத்தபுதல்வர்கள் ஹெல்லான். ஹெல்லானுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் முறையே டோரஸ், குத்தஸ், அ யோலஸ், இவர்களில் டோரஸ் உருவாக்கிய இனம் டோரியன்ஸ். அயோலஸ் உருவாக்கிய இனம் அயோலியன்ஸ் குத்தஸ் இரண்டு புதல்வர்கள் பெற்றான். ஒருவன் அக்கீயஸ். அவன் அக்கியன் இனத்தை உருவாக்கினான். மற்றொருவன் அயோன் (Ion) அவன் அயோனிய மக்களை உருவாக்கினான். இக்குறிப்புடன் தியோகோனி முடிவுறுகிறது.

சிஸிஃபஸ்

20-ஆம் நூற்றாண்டு இலக்கியவாதிகளை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் சி ஸிஃபஸ் என்பதில் ஐயம் இல்லை. கிரேக்க புராண கதாபாத்திரத்தை மையமாக வைத்து அல்பெர் காம்யூ என்ற பிரஞ்சு இலக்கியகர்த்தா எழுதிய “மித் ஆஃப்தி சிஸிஃபஸ்”, அவருக்கு நோபல் பரிசைப் பெறவும் காரணமானது. ஃபால் (Fall), அவுட்சைடர்(out sider) அவர் எழுதிய பிறநாவல்கள். எக்ஸிஸ்டன்ஷியாலிஸ்ட் நாவலாசிரியரான காம்யூவின் தத்துவம் “அபத்தம்”(The theory of absurdity).

யாரும் ஒரு பேரழகியைப் பார்த்துவிட்டால் சாமியும் சும்மா இருக்காது. சாமியாரும் சும்மா இருப்பதில்லை. இதில் ஸிஸிஃபஸ் விதிவிலக்கல்ல. ஆண்டாள் பகவான் கிருஷ்ணரையே கணவனாக ஏற்றது போல் – எஜினா என்ற பேரழகி, ஸீயஸ்ஸைக் கண்டு தன் வசமிழந்தாள். இவள் அசோஃபசின் மகள். அசோஃபஸ் நீர் நிலைகளைக் கட்டுப்படுத்தும் தெய்வம். எட்டுவகையான திருமணங்களைப் பற்றி மதனகாமராஜர் சொல்லியுள்ளார்.

1. பிரம்ம முகூர்த்தம் – ஒரே வர்ணத்தில் முறைப்படி பெரியோர்களால் நிச்சயம் செய்து முடிவான திருமணம்.

2. தெய்வ மூகூர்த்தம் – வேள்வி நடத்திய பிராமணனுக்கு யாகம் செய்யச் சொன்ன எசமானன் – தட்சணையின் ஒரு பகுதியாகக் கன்னியாதானம் செய்வது.

3. ஆர்ஷ முகூர்த்தம் – பெண்ணுக்கு வரதட்சணைக்கு பதிலாக பசுவையோ காளையையோ மாப்பிள்ளை வீட்டுக்கு ஓட்டிவிடுவது.

4. பிரஜாபத்தியம் – பெண்ணின் தந்தை பரிசத்தையும் வாங்கமாட்டார். வரதட்சணையையும் தரமாட்டார். சமத்துவமான திருமணம்.

5. காந்தர்வம் – காதலித்து ஒருவரை ஒருவர் மாலையை மாற்றிக் கொண்டு (பின்னர் துஷ்யந்தனைப் போல் மறந்து போகாமல்) செய்வது.

6. அசுரம் – பெண்ணை விலை கொடுத்து வாங்கி விருப்பமில்லாத கட்டாயக் கல்யாணம் செய்வது.

7. ராக்ஷசம் – பெண்ணைக் கடத்திக் கொண்டு ஓடி ஒளிவது.

8. பைசாசம் – இருட்டு வேளையிலே யாரும் அறியாமலே கள்ளத்தனமாகத் தூங்கும் பெண்ணைக் கற்பழித்து, குட்டு வெளிப்பட்டுத் திருமணம் செய்தல்.

இந்த எட்டு வகைத் திருமணத்தில் ராக்ஷச முறையைத் தேர்ந்தெடுத்த ஸீயஸ், எஜீனாவைத் துõக்கிக் கொண்டுபோய் கொரீந்த் தீவுக்கு வந்து அங்குள்ள தலைவன் சிஸிஃபஸ்ஸிடம் அடைக்கலம் கோரினார். தன் பெண்ணைக் காணாமல் அசோஃபஸ் ஊர் உலகமெல்லாம் தேடிவிட்டு இறுதியில் கோரிந்த் தீவுக்கு வந்து சேர்ந்தான். அசோஃபஸ்ஸிடம் சிஸிஃபஸ் ஒரு கோரிக்கை வைத்தாள். கொரிந்த் தீவுக்குத் தண்ணீர் வழங்கினால் தான் உதவுவதாக சிஸிஃபஸ் கூறினான். சிஸிஃபஸ் நிபந்தனையை ஏற்று பைரேனா நதியை அசோஃபஸ் கொரிந்தில் ஓடவிட்டான்.

இப்போது சிஸிஃபஸ்ஸும், அசோஃபஸ்ஸஸும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஸீயஸ்ஸை எதிர்த்தனர். ஸீயஸ்ஸின் வஜ்ராயுதத்திற்கு அசோஃபஸ் பலியானான். ஸீயஸ் சிஸிஃபஸ்ஸைக் கொல்ல விரும்பாமல் ஒரு விசித்திரமான தண்டனையை வழங்கினாள்.

பாதாள உலகத்திற்கு அனுப்பப்பட்ட சிஸிஃபஸ்ஸுக்கு மிகவும் கனமான கல்லுருளை வழங்கப்பட்டது. முடிவே இல்லாத சரிவுப்பாதையின் கீழ் சிஸிஃபஸ் கல்லுருறையை உருட்டியவண்ணம் உள்ளான். சிறிது தூரம் மேட்டில் ஏறிய உருளை பின் தொடங்கிய இடத்திற்கே வரும். சாகும் வரை உருளையை உருட்டுவதுதான் அவன் பெற்ற தண்டனை.

ஸீயஸ் எஜீனாவை ஒயினான் தீவுக்கு இட்டுச்சென்று இவர்களது உறவில் அயோக்கஸ் பிறந்தான். பின்னர் அயோக்கஸ் எத்தீயசை மணந்து டெலமோன், பீலியஸ் என்று இரண்டு புதல்வர்களுக்குத் தந்தையானான். பின்னர் டெலமோன் பெற்றெடுத்த பிள்ளை அஜாக்ஸ். பீலியஸ் என்று இரண்டு புதல்வர்களுக்குத் தந்தையானான். பின்னர் டெலமோன் பெற்றெடுத்த பிள்ளை அஜாக்ஸ். பீலியஸ்ஸின் புதல்வனே புகழ்பெற்ற அக்கில்லஸ். அக்கில்லஸ் யாராலும் வெல்லமுடியாத வீரனாகப் புகழ் பெற்ற இலியத்தின் ஒரு கதாநாயகனான கதை பின்னால் வருகிறது.

(தொடரும்)