அமெரிக்காவின் மனதில் காந்தி

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரை 2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டது. அமெரிக்க அதிபர் ஓபாமாவின் இந்தியப் பயணம் முடிந்த பின் சில மாதங்களில் எழுதப்பட்டது. இக்கட்டுரையில் சில இடங்களில் ஒபாமாவின் அரசியல் குறித்துப் பேசப்பட்டாலும், அமெரிக்கர்களின் பிரக்ஞையில் காந்தி நிகழ்த்திய பாதிப்பென்ன என்பதைத் தான் இக்கட்டுரை பெருமளவில் அலசுகிறது. அமெரிக்க என்று மட்டுமல்லாமல் காந்தியை மேற்குலகம் எப்படி எல்லாம் பார்த்திருக்கிறது, ஆனால் அதை எல்லாம் மீறி, மேற்கின் சூது நிறைந்த திரிப்புகளைத் தாண்டி எப்படியோ காந்தியின் ஒரு சில கருத்துகள் மறுபடி மறுபடி மேலெழுந்து நிற்கின்றன. அவர் மீது மேலை அறிவாளர்கள் சுமத்தும் பழிச்சொற்கள், திரிப்புகள், தனிமனித அவதூறுகள் எல்லாம் அவருடைய மையக் கருத்தின் பயனுள்ள தன்மையை அழிக்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது இக்கட்டுரை. அந்த வகையில் இந்தக் கட்டுரை முக்கியமானது.

என்னுடைய இந்தத் தலைப்பு உருவகமானது மட்டுமே, நேராக எடுத்துக் கொள்ள இல்லை. காந்தி தன் வாழ்நாளில் அமெரிக்க மண்ணில் கால்வைத்ததில்லை. காந்தி எனும் ஆளுமைக்கு, அவரது கருத்துக்கள், மற்றும் அவரது செயல்முறைக்கு அமெரிக்கர்கள் காட்டும் மறுவினையே (அமெரிக்காவில்) காந்தியின் இருப்பைச் சுட்டுகிறது. ஒரு சில அமெரிக்கர்களுக்கு, அவருடைய கருத்துக்களும் செயல்பாடுகளும் முற்றிலும் அசாதாரணமானவை; மேலும் அந்நியமானவை; மற்றவர்களுக்கு கற்கவும், ஊக்கமூட்டி வழிகாட்டவும் அவை மூலாதாரமாக விளங்கின, வேறு சிலருக்கோ, காந்தி ஒரு அச்சுறுத்தல்; ஊடுருவிக் கவிழ்க்கும் கலகக்காரர்.

சமீபத்தில் முடிவுற்ற அதிபர் ஒபாமாவின் மூன்று நாள் இந்திய வருகையினால், காந்தி மீண்டும் ஒருமுறை அமெரிக்க பிரக்ஞையை தீண்டியிருக்கிறார். அத்தோடு, தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையில் (10 டிசம்பர், 2009) ஒபாமா, உலகின் நடவடிக்கைகள் குறித்த தன்னுடைய சிந்தனையில் காந்திக்கு முக்கிய பங்கிருப்பதாக சொல்லியிருக்கிறார். இது குறித்தும் நான் இக்கட்டுரையில் பேசுவேன்.

1920-ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கிட்டத்தட்ட கவிழும் நிலைக்கு தள்ளியது; அந்தத் தருணம் முதல் அமெரிக்கர்களின் பிரக்ஞையில் காந்தி இருக்கிறார். அப்போதிலிருந்தே அவர் குறித்த துதிகளும் வசைகளும் அமெரிக்காவில் இருந்துவருகின்றன. 1921-ஆம் வருடம் நியூயார்க்கில் தன்னுடைய தேவாலய கூட்டுப் பிரசங்கத்தில் ஜான் ஹெய்ன்ஸ் ஹோம்ஸ் காந்தியை “உலகின் மிகச் சிறந்த மனிதன்” என்று சொன்னார். லெனின் மற்றும் வுட்ரோ வில்சன் ஆகியோரை விடச் சிறந்த மனிதர் என்று சொன்னார். “நான் மகாத்மா காந்தி குறித்து நினைக்கும் போதெல்லாம், இயேசு கிறிஸ்துவை நினைத்துக் கொள்கிறேன்,” என்றும் சொன்னார். 1930-ஆம் வருடம், காந்தியின் இரண்டாம் ஒத்துழையாமை இயக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அனேகமாகக் கவிழும் நிலைக்கு கொண்டு சென்றபோது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரதான கருத்தாளரான வின்ஸ்டன் சர்ச்சில், காந்தி குறித்த ஒரு பிரபல வசையை உருவாக்கித் தந்தார், “அரை-நிர்வாணப் பக்கிரி”. இந்தியாவின் வறுமை குறித்தும், அதன் ஆன்மீகம் குறித்தும் இழிவாக எண்ணிய அமெரிக்கர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் சர்ச்சிலின் இந்த வசை மிகவும் உவப்பானதாக இருந்தது. அவர்கள் இந்தியாவின் வறுமை தானாக வலிய வரவழைத்துக் கொண்ட வறுமை என்றும், அதன் ஆன்மிகம் ஒரு பொய்மை என்றும் கருதியதோடு, காந்தியும் இந்தியா போன்றவரே- போலி ஆன்மிகவாதி, அவருடைய எளிமை ஒரு பொய்மை என்று கருதினர்.

அமெரிக்கப் பிரக்ஞையில் காந்தியின் இருப்பானது பல்வேறு வரலாற்று சந்தர்ப்பங்களில் பல விதமாக இருந்ததோடு, பொதுவில் அவரது பிம்பம் என்ன நிலையிலிருந்ததோ அதை ஒட்டியும் மாறி வந்துள்ளது. காந்தி ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக, இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த ஒரு தேசியவாதியாக, ஒரு குருவாக, சத்தியத்தையும் நியாயத்தையும் தேடிச் செல்ல வன்முறையற்ற கூட்டுமுயற்சியை போதித்த உலக வரலாற்றின் ஒப்பற்ற ஆசிரியராகப் பார்க்கப்பட்டார், அவருடைய போதனையிலிருந்து ஒரு புதுவித வாழ்க்கையை, சிந்தனையை, நம்பிக்கையைப் பெறமுடியும் என்றும் கருதப்பட்டது; அதற்கும் மேல், அவர் ஒரு மகாத்மாவாக, ஒரு ஒப்பற்ற ஆத்மாவாக, துறவியாக, பிறப்பிலேயே உள்ளார்ந்த இறை-நம்பிக்கை கொண்டவராக(homo religiosus) – இந்த வார்த்தையின் பொருள் அமெரிக்கருடைய மதம் மற்றும் நம்பிக்கை குறித்த புரிதல்களுடன் இணைந்து ஒலிக்கிறது; ஒரு ஏமாற்றுக்காரானாக, தங்கள் மதம், அறம் மற்றும் அரசியலிற்கெதிராக தன்னுடைய கருத்துக்களாலும் நடைமுறைகளாலும் கலகம் புரியும் ஒரு கீழைதேசத்து ‘அன்னியனாக’, தம்முடைய எதிரிடையாகக் கண்டனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பாளன்

முதல் உலகப் போருக்குப் பிறகு, போர், ஏகாதிபத்தியம் மற்றும் கீழைதேசங்கள் குறித்த அமெரிக்காவின் பார்வையில் ஏற்பட்ட பெரும் மாற்றம், போர் எதிர்ப்பாளர்களிடையே, வேட்டி அணிந்த, திறந்த மார்பையுடைய காந்தியை ஒரு பெருநாயகனாக நிலைநிறுத்த உதவியது. அதனால் போருக்கெதிரான காந்தியின் நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமானவை என்ற கருத்து எழுந்தது. மேலும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிலவியதையும், இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் நிலவிய சிறப்பு உறவையும் எதிர்ப்போரிடையே காந்தி ஒரு நாயகனாக ஆனார். காந்தியைப் போன்ற ஒரு ஆசியரை, வன்முறையின் பாதையை விலக்கிய, மேலும் ஆன்மீகவாதியான ஒருவரை, அதே சமயம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குப் பெரும் சவாலாக விளங்கக்கூடிய ஒருவரைக் கொண்டாட அமெரிக்கர்கள் தயாராக இருந்தனர். 1920-களின் ஆரம்பத்தில், முதலாம் உலகப் போரில் நிலவிய குருட்டு வன்முறையைக் கண்டபிறகு, காந்தியின் சமரசமற்ற அகிம்சை ஒரு ஆரோக்கியமான மாற்றுவழியாகவே பார்க்கப்பட்டது.

என்ன மாதிரி மனிதராக இருந்தார் அவர்? அமெரிக்கர்கள் அவரைப் பார்த்து வியக்கவும், அவரிடமிருந்து கற்கவும், அவரை நம்பவும் வேண்டுமா, அல்லது அரசியல் மேலும் ஆன்மிகத் தளங்களில் ஒரு நம்பத்தகாத எதிரித் தாக்குதலைத் தம் நடுவில் அனுமதித்து விட்டனரா என்பன அன்றைய கேள்விகள்.

குரு

இது ஒரு ஹிந்தி வார்த்தையாக இருந்தபோதும், தற்போது பிரபலமாகி விட்ட இந்த சொல்லை, அமெரிக்காவின் பிரபல மனிதர்களை காந்தி பாதித்த விதம் குறித்துப் பேச நான் உபயோகப்படுத்துகிறேன். அமெரிக்காவின் இரு பெரும் முக்கியஸ்தர்களுக்கு காந்தி குருவாகத் திகழ்ந்தார். ஒருவர், ஜான் ஹெய்ன்ஸ் ஹோம்ஸ். இவர் முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தின் தாராளவாத புரொடஸ்டென்ட் சமூக சீர்திருத்தவாதி. இன்னொருவர், போருக்குப் பிந்தைய காலத்தில் பிரபலமாக இருந்த சமூக உரிமை இயக்கத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்). இது தவிர மற்றுமொரு பிரபல அமெரிக்கருக்கும் அவர் குருவாக இருந்தார். ரைன்ஹோல்ட் நீய்பூர் (Reinhold Niebuhr) எனும் இவர் ஒரு கிருஸ்தவ எதார்த்த இறையியலாளர் (Theologian). இவர் பொது அரங்கில் நன்கு தெரியவந்த அறிவாளரும் கூட. காந்தியை இவர் பாராட்டியது அதிக காலம் நீடிக்காவிட்டாலும், பொருளாதார வீழ்ச்சி, பாசிசம் விரைவாகப் பரவிய, மேலும் கடும் போர் எழுந்த மிக முக்கியமான காலகட்டத்தில் (1930-32), ”சம நீதி”க்கான அறம் சார்ந்த, வன்முறையற்ற கூட்டு இயக்கத்துக்கான வழியைத் தேடி, அவர் காந்தியை கண்டடைந்தார்.

நீய்பூருடைய முக்கியமான புத்தகம் எனக் கருதப்படும் “அறமுள்ள மனிதனும் அறமற்ற சமூகமும்”(Moran Man and Immoral Society, 1932) என்ற புத்தகத்தில் இப்படி எழுதினார்: “நல்லெண்ணத்தைக் காட்ட ஒரு வழியாக அஹிம்சையைக் கொள்வதன் நன்மை என்னவென்றால், வன்முறை நிறைந்த மோதல்கள் எப்போதும் இரு சாராரிடமும் உருவாக்குகிற வன்மங்கள் ஏற்படாமல் ஒருவரைக் காக்கிறது என்பதே. மேலும், இதைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அந்த வேறுபாட்டில் எதிராளியை விட அதிகமான துன்பத்தை இவர்களே தாங்குவதாலும், துன்பத்தைப் பிறருக்குக் கொடுக்காததாலும், அஹிம்சாவாதி வன்மம் பாராட்டாதவர் என்று நிரூபிக்கிறது, மேலும் எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாதவர் என்றும் எதிராளிகளுக்கு உறுதி செய்கிறது”. மேலும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க வன்முறையைத் தவிர்த்து, இரு தரப்பும் சேர்ந்து உண்மையைக் கண்டறிவதை வழியாகக் காணும் காந்தியின் பார்வை குறித்து மேலும் அவர் சொல்வது:

சமூக மோதலில் வன்மத்துக்கு எதிரான ஆன்மிகக் கட்டுப்பாட்டின் ஒரு முக்கிய விளைவு, அது, ஒரு சமூக அமைப்பின் தீமைகளுக்கும், ஒரு (மோதல்) நிலைமைக்கும், அதில் சிக்கிய தனிமனிதர்களுக்குமிடையே உள்ள வித்தியாசங்களை அறிந்து கொள்ளும் முயற்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதே…. தனிமனிதரான இங்கிலீஷ்காரர்களுக்கும், அவர்கள் நிர்வகிக்கும் ஏகாதிபத்திய அமைப்புக்கும் இடையே வேறுபாடுள்ளதைத் திரு.காந்தி சுட்டிக் காட்டத் தவறுவதே இல்லை.

நீய்பூர் ’அறமுள்ள மனிதனும்…’ புத்தகத்தில், காந்தி குறித்த அத்தியாத்தை முடிக்கையில் காந்தியின் பார்வையை மிக வலுவாக ஆதரித்து இப்படி முடிக்கிறார்,

மதவழிக் கற்பனைக்கு, அஹிம்சை வழியில் எதிர்ப்பை காட்டுவதெப்படி என்ற பிரச்சினையைத் தீர்ப்பதை விடப் பெரிய பிரச்சினை ஏதும் அரசியல் வாழ்வில் இல்லை. எதிராளியிடமும் சாதாரண மனித மெலிவுகள்(frailty) இருப்பதை அறிவதும், அதே நேரம், எல்லா மனித உயிர்களையும் உன்னதமான மதிப்பு கொண்டவையாகப் பார்த்து மதிக்கக் கற்பதும், சமூக மோதல்களைக் கடந்து வரவும், அதனால் பல கொடுமைகளைத் தீர்க்கவும் தேவையான சில மனச்சாய்வுகளை உருவாகின்றன. …. இந்த மனப்பாங்குகளை.. அடைய ஒரு உன்னதமான பித்து வேண்டி இருக்கிறது, அதுவே உடனடித் தோற்றங்களை அலட்சியம் செய்யவும், ஆழ்ந்த,இறுதியான ஒற்றுமைகளையே கவனம் கொள்வதற்கும் வழி வகுக்கும்.

காந்தியின் இந்த “உன்னதமான உன்மத்தம்” மேற்குலகத்திற்குக் கிட்டுமா? இந்தக் கேள்விக்கு பதிலாக நீய்புர், ஏன் காந்தியின் வழி மோதல்களில் சிக்கிச் சீரழியும் மேற்குக்குக் கிடைக்காது என்று விளக்கும்போது, அவர் பதில் கீழைத் தேசங்கள் குறித்த மேற்கின் (திரிந்த) பார்வையைத் தலைகீழாக்குகிறது : “சமகால அரசியலில் அகிம்சையின் மெய்ப்பொருளை ஒரு கீழை நாட்டு மதத் தலைவரே முன் வைக்கிறார் என்பது தற்செயலான வரலாற்று நிகழ்வல்ல”. மேற்கத்திய மனிதர் அஹிம்சை எனும் மெய்ப்பொருளை இழந்துவிட்டனராதலால், ”அவரால் வன்முறையில்லாத சமூக மோதல்களில் ஈடுபட முடியாது”. மேலை மனிதரின் ஆன்மிக வறட்சிக்குக் காரணம் அவர்களுக்கு ‘மதம் விலக்கப்பட்டிருக்கிறது’ என்பதே. அர்த்தமுள்ள மத வழி வாழ்க்கை இல்லாததால், “வெள்ளை மனிதன்”, இப்போது ”வேட்டையாடும் விலங்காகிவிட்டான்”.

நீய்புர் மேலும் வாதிடுகிறார், மதம் சார்ந்த வாழ்க்கையை இழந்து விட்ட வெள்ளை மனிதன், “இயந்திரத்தனம் கொண்ட தன் நாகரீகத்தாலும்”, மற்றும் கிறித்துவ மதத்துள் ”வசதியும், சிறப்புரிமையும் பெற்ற கூட்டத்தால்” அறிமுகப்படுத்தப்பட்ட பசப்பு உணர்ச்சிகளாலும், அறக் குழப்பங்களாலும் தன் மதப் பாரம்பரியத்தை இழந்து வீணாகிப் போய் விட்டான் என்று சொல்கிறார்.

அகிம்சை வழிமுறையை மனிதனை மீட்டெடுக்கும் வழியாகக் கண்ட நீய்புர், அதன் வழியே சமூகத்தில் மேம்பட்ட சமதர்மமும், நியாயமும் அடையலாம் என்றும் கருதினார். அப்படிப்பட்டவர் காந்தியை பெரிதும் போற்றினார். தன்னை காந்தியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவும் செய்தார். காந்தியை ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு நாட்டை வழிநடத்தவும், பெரும் ஏகாதிபத்தியங்களை பணியச் செய்யும் அரசியல் வல்லுநராகவும் கண்டார்.

ஒரு குருவாக காந்தியின் மிகப்பெரியதும், நீடித்ததுமான வெற்றி என்பது மார்ட்டின் லூதர் கிங் (ஜீனியர்) இடம் அவருக்கு பாதிப்பு இருந்ததே. கிங்கின் மூலமாக, 1950-களின் மத்திய வருடங்களில் துவங்கி 1960-களின் மத்திய வருடங்களில் உச்சத்தை அடைந்த சமூக உரிமைப் போராட்டங்களின் நடவடிக்கைகளையும் காந்தி பாதித்தார். கிங் தன் இயக்கத்தின் துவக்கக் கட்டங்களிலேயே காந்தியைக் கண்டு விட்டார், காந்தியின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டார், தான் வாழ்வில் கடைசி வரை அவற்றுக்கு உண்மையாக நடந்தார். ஒரு கட்டத்தில் தன் கருத்துகளால் கவரப்பட்டுத் தன்னைப் பின்தொடர்ந்த பலரும் சத்தியாக்கிரஹத்தின் மீதும், அஹிம்சையின் மீதும் நம்பிக்கை இழந்து அவற்றைக் கைவிட்ட போதும், கிங் அவற்றில் பிடிப்புடன் இருந்தார்.

கிங் இவ்வாறு எழுதினார், “நான் கிறித்துவத்தின் அன்பு குறித்த கோட்பாட்டை காந்தியின் அஹிம்சை வழிமுறையில் பார்க்கிறேன். நீக்ரோ இனத்தவரின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அகிம்சை வழிமுறையே மிக வலுவான ஆயுதமாக இருக்குமென்பதை நான் அறிந்தேன். காந்தியை வாசிக்கும் முன்புவரை இயேசுவின் அறவியல் தனிமனித உறவுகளில் மட்டுமே சக்தியுள்ளது என்று எண்ணினேன். ஆனால் வரலாற்றில், இயேசுவின் அன்பு சார்ந்த ஒழுக்கவியலின் பயன்பாட்டைத் தனிமனிதர்களிடையே உள்ள உறவுகளைத் தாண்டி எடுத்துப் போய், சக்தியும், நல்விளைவுமுள்ள ஒரு சமூக சக்தியாக மாற்றிய முதல் நபர் காந்தியே.”

காந்தி தன் வாழ்நாளின் இறுதியில் பிரிவினைக் கலவரங்களின் படுகொலைகளைக் கண்டார். அது போல் கிங் தன் வாழ்நாளின் இறுதியில் மாநகரங்களில் இனக் கலவரங்களின் வன்முறையையும், வியட்நாம் போரின் விஸ்வரூபத்தையும் கண்டார். இருவரும் தங்கள் மக்களாலேயே ”உள்ளிருந்தே” இகழப்பட்டனர். காந்தி தீவிரவாத ஹிந்துக்களிடமிருந்தும், கிங் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்வைத்த கருப்பினத்தவர்களிடமிருந்தும் ”உள்ளிருந்தே” எதிர்ப்பைச் சந்தித்தார்கள். ”வெளியேயிருந்து” எதிர்ப்பாக, காந்திக்கு “இரட்டை தேசம்” கோரிய இஸ்லாமியர்களும், கிங்கிற்கு ஜே.எட்கர் ஹூவரும், வெள்ளை இனவெறியர்களும் மற்றும் இனக் கலவாமையை முன்வைத்தவர்களும் நின்றனர். இருவரும் கொல்லப்பட்டனர். புனிதப்படுத்தப்பட்ட தியாகிகளாக்கப்பட்டனர். இருவருக்குமிடையே இருந்த இத்தகைய ஒற்றுமைகளும், உறவும் காந்தியை அமெரிக்கர்களிடையே பெரிதும் பிரபலப்படுத்தியது.

எத்தர்(Fraud)

1950களின் இறுதி ஆண்டுகள். இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டு வெற்றி பெற்றாயிற்று. காலனியம் ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டது. மானுட இயல்பு குறித்த பிராய்டிய கண்ணோட்டம் உண்மையென பொதுபுத்தியால் ஏற்கப்பட்டு விட்டது. 1930களில் ஸ்டாலின் மேற்கொண்ட களையெடுப்பு/ சுத்திகரிப்பு (purge) விசாரணைகளின் கொடூரத்தை அப்பட்டமாகவும் அருமையாகவும் தன் நண்பகலில் இருள் (Darkness at Noon, 1940) என்ற புத்தகத்தில் சித்தரித்திருந்த ஆர்தர் கோஸ்ட்லர் களைத்தவராய், கனவுகள் கலைந்தவராய் ஐரோப்பாவின் “படுமோசமான இக்கட்டுகளுக்கு” (deadly predicament) விடை தேடி ஆசியாவுக்குப் புறப்படுகிறார்: “பழைய சித்தாந்தங்களின் வெறுமையும் (exhaustion)….புதியவற்றுக்கான பசியும்”, அமெரிக்க மந்தைக் கலாசாரம் (mass culture) மற்றும் பொருள் மைய நாகரிகம் (materialistic civilisation) ஆகியவற்றின் தாக்கத்தில் “மேற்கு ஐரோப்பா கோகோ-காலனிய ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டது” என்பனவும் அந்த இக்கட்டுகள்.

“தாமரையும் ரோபோவும்” என்ற நூலின் முன்னுரையில், “ஒரு யாத்ரிகனின் மனநிலையில்… வேறொரு, ஆன்மிக அட்சக்கோட்டிலிருந்து… நம் குழப்பங்களுக்கும் தீர்வு தெரியாத சிக்கல்களுக்கும்” விடை தேடி “நான் இந்தியாவிலும் ஜப்பானிலும் 1958-59ல் பயணம் செய்தேன்,” என்று எழுதுகிறார் கெஸ்ட்லர் (Arthur Koestler). நான்கு ஞானிகளையும் சில ஜென் மாஸ்டர்களையும் கண்டபின் அவர் இந்த முடிவுக்கு வருகிறார்- ஆசிய மறைஞானத்திடம், “நமக்குத் தர உருப்படியான அறிவுரை ஏதும் இல்லை”

கெஸ்ட்லருக்கு காந்தி விநோதமானவராகவும் பித்துக்குளியாகவும் இருக்கிறார். அவரது தீவிரவாதமும் ஒற்றைச் சிந்தனையும் (obsessiveness), பொதுப் பேச்சில் சொன்னால், அவை நோய்ப்பட்ட நிலையாகவும், அருவருப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. சமூக அறிவியலின் மொழியில் பேசுவதானால், அவை மனநிலை பிறழ்வாக, கலாசார வக்கிரமாக இருக்கின்றன. அதே வேளை, காந்தியின் மிகைப்படுத்தல்களும் நாடகீயங்களும் அவருக்கு ஒரு ஏமாற்றுக்காரனை, மந்திரவாதியை, ஒரு மோசடிப் பேர்வழியை நினைவுபடுத்துகின்றன.

காந்தி ஒரு மோசடி என்ற கருத்தை ஈர்க்கும் இடிதாங்கியாக “காந்தி” திரைப்படம் செயல்பட்டது. 1982ல் வெளியிடப்பட்டு 1983லேயே பெருமளவும் காணப்பட்ட இந்தத் திரைப்படம், அகாடமி வரலாற்றில் முதல் முறையாக எட்டு விருதுகளை வென்றது, அந்த ஆண்டின் உச்ச அளவு பார்வையாளர்களை ஈர்த்தது, எக்கச்சக்கமான் வருவாயும் பெற்றது. சமகாலத்துக்குரிய குழுக் கனவாக (myth), ஏன், எக்காலத்துக்கும் உரியவனாக, காந்தியை ஒரு காவிய நாயகனாகச் சித்தரித்தது இந்தப் படம். பொழுதுபோக்கும் செய்தியும் ஒன்றையொன்று கட்டமைக்கின்ற இவ்வுலகில், திரை என்பது வரலாற்றைப் பிரதிபலிப்பதோடு அல்லாமல் படைக்கவும் செய்கிறது, இங்கு பொய்யும் மெய்யும் ஒன்றாக இணைய முடியும். ’காந்தி’ அருமையான பொழுதுபோக்காக இருந்தது, பெரும் வருவாயை வென்றது, ஆனால் அது ஒரு செய்தியாகவும் உலகப்பார்வையாகவும் இருந்தது. ஒரு இந்திய மகாத்மா அனுபவங்களைக் கடந்த மூலாதார உருவாக ஏற்றம் பெற்றார்.

திரைப்படத்தில் அமேரிக்கா சித்தரிக்கப்படவும் இல்லை, குறிப்பிடப்படவும் இல்லை. எனினும், திரைப்படத்தின் காட்சி மொழி- திரைப்படம் ஒரு பிரதி என்ற வகையில்- அமெரிக்காவில் பிரச்சினைகளாகப் பேசப்பட்ட கருத்துகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்திக் காட்டுவதாக சிலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவில், காந்தி அமெரிக்காவில் ஒரு பரவலாக அறியப்பட்ட கருதுகோளாக மாறினார்.. சுற்றுச்சூழல் முதல் சுகாதாரம், உணவுப் பழக்கம், அமைதி என்று அடுக்கடுக்கான போராட்டங்களில் கையாளப்படக்கூடிய சிறப்புச் சுட்டு பெயராக (brand name) உருவானார்.

இத்திரைப்படம் நவீன-மரபுவாதிகளை(Neoconservatives) பதிலடிக்குத் தூண்டியது. ’கமெண்டரி’ என்ற இதழின் திரை விமரிசகரும், ஒரு காலத்தில் நாவலாசிரியராகவும் இருந்த ரிச்சர்ட் க்ரென்யே (Gernier) நவீன-மரபுவாதிகளின் தாக்குதலில் முதல்வரிசையாளராக இருந்தார். கமெண்டரியின் மார்ச் 1983 இதழில் “யாருக்கும் தெரியாத காந்தி”யைச் சித்திரித்து “காந்தி என்ற மிகுபுனைவிலிருந்து காற்றுப் பிடுங்கி விட்டு” காந்தியை ஒரு எத்தர் என்று நிறுவ முனைந்தார். குறிப்பாக, “திரைப்படத்தில் காட்டப்பட்ட காந்தி உண்மையில் ஒரு காமுகன், இனவெறியன், பசப்புப் பேர்வழி, முட்டாள், உதவாக்கரை நம்பிக்கைகளைத் துரத்துபவர் (faddist)” என்று அவர் அடித்து வாதிட்டார். திரைப்படத்தின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவை, க்ரேனியர் அவரை டிக்கி என்று அழைத்தார், இந்திய அரசின் சம்பளத்தில் இயங்கும் அரசியல் பிரச்சாரகர் என்று சித்திரித்து, (இந்திய அரசு இத்திரைப்படத்தின் செலவில் மூன்றில் ஒரு பங்கு நிதி உதவி அளித்திருந்தது). அவர் கள்ளத்தனமாக, கவனிப்பைக் கடந்து யாரும் உணர்ந்து அறியக் கூட முடியாத வகையில், தன் போரெதிர்ப்பு-அமைதி வாதத்தை, சோசலிசத்தை, சுற்றுச் சூழல் பாதுகாப்புக் கொள்கையை, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கருத்துகளை மக்கள் மனதில் புகுத்தினார் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலை நாடுகளுக்குப் புகட்டக் கூடிய பாடங்கள் என்று மதிக்கக்கூடிய எதுவும் நோயுற்று மரணப்படுக்கையில் இருக்கும், மரபுவழி ஒழுகும் ஆசியாவிடம் இல்லை என்று அறிவித்த கெஸ்ட்லரின் ’தாமரையும் ரோபாட்டும்’ நூல் வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1969-இல், எரிக் எரிக்ஸன் என்ற உள-ஆய்வாளரின், “காந்தியின் மெய்ம்மை: சமரசமற்ற அஹிம்சையின் வேர்கள் குறித்து” என்ற புத்தகம் வெளி வந்தது. எரிக்ஸன் ஒரு புகழ்பெற்ற நியோ-ஃபிராய்டியர். வாழ்வின் பல்வேறு கட்டங்கள் மற்றும் அக அடையாளம் குறித்த அவரது கோட்பாடுகள் மனித உரிமை இயக்கம் மற்றும் வியட்நாம் (போர் நடந்த காலத்) தலைமுறைகளுக்கு ஏற்புடையனவாக இருந்தன. அவர் காந்தியின் வாழ்வைத் தன் விசாரணைக்குட்படுத்தி பிராய்டின் உளப்பகுப்பாய்வும் காந்தியின் சத்தியாகிரகமும் ஒரு புள்ளியில் இணைவன என்று குறிப்பிட்டார். இரண்டுமே மனநலத்தை அடைய ஒரு சிகிச்சை முறையாக உண்மையை நாடி, அடையும் வழிகள் என்றார் அவர். முன்னது தனி மனிதரின் அளவில், மற்றது ஒரு சமூகத்துக்காண வழி என்பது அவர் கருத்து.

பிராய்டைப் போல காந்தியும் உண்மையைத் தேடவும் அடையவும் வழி கண்டார் என்று சொல்வது க்ளிஃபோர்ட் கியர்ட்ஸூக்குத்(Clifford Geertz) தாள முடியாததாக இருந்தது. 20.11.1969 ஆம் தேதியிட்ட ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் பத்திரிகையில், எழுதிய கியர்ட்ஸ் தன் கட்டுரையில் எரிக்ஸனையோ காந்தியையோ நேரடியாகத் தாக்கவில்லை. ஆயினும் அதில் காந்தியை அவர் அணுகிய விதம் எந்த சந்தேகமும் இல்லாதபடி, அவர் காந்தியை கபட வேடதாரி என்றும் உள்ளீடற்றவர் என்றும் நினைக்கிறார் என்பது விளங்கியது. குழம்பியவர், தெளிவற்றவர், முரண்கள் நிறைந்தவர், ஆன காந்தி தன் வாழ்நாளில் தனக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஆபத்தாக இருந்திருக்கிறார். காந்தி தன் மரணத்தில் ஒரு வழிபடப்படும் பேருருவாகி (icon) கெஸ்ட்லரின் ’தோற்றுப் போன கடவுளரின்’ வரிசையில் இடம் பெறத் தக்கவர். கவலைகளிலும், தீர்வு காணாக் குழப்பங்களிலும் சிக்கியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எரிக்ஸன், காந்தியைப் போற்றியதில், தானே ஒரு ஏமாளியாகவும் முட்டாளாகவும் இருந்திருக்கிறார் என்பதே கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லப்படாத செய்தி.

காந்தி கொல்லப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்(ஜனவரி 25, 1948) எடுக்கப்பட்ட படம். புகைப்படக்கலைஞர் : Max Desfor

யாரங்கே – நண்பனா பகைவனா?

1921ல் ஜான் ஹெய்ன்ஸ் ஹோம்ஸ் காந்தியை உலகின் தலைசிறந்த மனிதர் என்று பிரகடனப்படுத்தியபோது அவர் அமெரிக்க உணர்வில் முதன் முதல் உட்புகுந்தார். அன்று முதல் தடவை அறிவிப்பின் போது இருந்ததைவிட, எண்பதாண்டுகள் சென்ற பின், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இன்று, ஹோம்ஸின் பிரகடனம் சரியானதாகவே தெரியத் துவங்கி உள்ளது. நூற்றாண்டின் முடிவை ஒட்டி, 31.12.1999 அன்று வெளியான இதழில் ”டைம்” பத்திரிகை, (ஆல்பர்ட் ஐன்ஷ்டைன் மேலும் பிராங்க்லின் ரூஸ்வெல்ட்டுடன்), காந்தியை நூற்றாண்டின் சிறந்த மனிதராய் அறிவித்தது.

10.12.2009 அன்று தன் நோபல் பரிசு உரையில் தான் காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங், ஜூனியர், ஆகிய இருவரைப் போற்றுவதாகவும், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட ஒரு அமெரிக்க அதிபரின் இந்திய வருகையில் காந்தி மீண்டும் அமெரிக்க உணர்வுவெளியுள் திரும்பியுள்ளார். அதே வேளை தான் அஹிம்சை மற்றும் அதன் பயன்பாடு பற்றி காந்தி என்ன சொன்னார் என்பதை அவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவரது உரை வெளிபடுத்தியது. “ஹிட்லரின் படைகளை அஹிம்சை இயக்கம் தடுத்திருக்க முடியாது,” என்று ஒபாமா வாதிட்டார்- காந்தி அது சாத்தியம் என்று நினைத்தார் என்ற தோற்றத்தை அவரது பேச்சு தந்தது. காந்திக்கு அஹிம்சை மற்றும் வன்முறையுடன் இருந்த உறவை இது தவறாகப் புரிந்து கொள்கிறது.

ஜூலூ, போயர், முதல் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தம் என நான்கு போர்களில் காந்தி அஹிம்சை முறையில் பங்கேற்றார். ’தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ என்ற நூலில் அவர் தான் ஜூலூ மற்றும் போயர் போர்களில் பங்கேற்றது ஏன், எப்படி என்று விளக்கமளித்தார்: “ஒரு போராட்டத்தை அகிம்சை வழியில் எப்படி எதிர்கொள்வது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை எனில், உங்கள் கடமைகள் என்ன என்பதை நீங்கள் சிந்தித்தாக வேண்டும்” என்றார் காந்தி. போயர் போரில் எந்தத் தரப்பை ஆதரிப்பதில் நியாயமும் லாபமும் இருக்கிறது என்று விவாதிக்கிறார் காந்தி. போயர்கள் எளிமையான வாழ்விற்காகவும், விவிலியத்தை மதிப்பவர்களாக இருப்பதற்காகவும் அவர்களை காந்தி மதிக்கிறார், ஆனால் அவர்களது இனவெறி அவரைக் கவலைப்பட வைக்கிறது. இங்கிலீஷ்காரர்களின் இனவெறி குறித்தும் அவர் கவலைப்படுகிறார். இருப்பினும் அவர் ஆங்கிலேயரை ஆதரிப்பதென முடிவு செய்வதற்குக் காரணம், அவர்கள் சட்டத்தின் அடிப்படையிலான அராசாட்சியை முன்வைத்திருப்பதே. பிரிட்டிஷ் பேரரசின் குடிமகனாக இருப்பதை அவர் மதிக்கிறார், அதற்குப் பெருமைப்படவும் செய்கிறார். அதன் அடிப்படையில் உரிமை கோருகிறார். சொல்லப்போனால், பிரிட்டிஷ் பேரரசின் குடிகள் என்ற வகையில் சிறுபான்மை இந்தியர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட அவர் இருமுறை தென் ஆப்பிரிக்காவில் இருந்து லண்டனுக்கு பயணம் செய்கிறார். இங்கிலீஷ்காரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை, இருந்தாலும் அவர்கள் வென்றால் இந்தியர்களுக்கு போயர்களிடம் கிடைக்கும் உரிமைகளைவிடக் கூடுதல் உரிமைகள் இவர்களிடம் கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. ஜூலூ மற்றும் போயர் போர்களில் அவர் அஹிம்சை முறையில் பங்கெடுப்பதற்காக ஒரு மருத்துவ சேவை அமைப்பைத் திரட்டிப் பங்கேற்கிறார்.

முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படையில் பணிபுரிய இந்தியர்களைத் திரட்டித் தர முன்வருகிறார் காந்தி. அகிம்சையைப் பயன்படுத்தி இந்தப் போரை நிறுத்தவோ அதன் கோரங்களைத் தணிக்கவோ தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இங்கும் சொல்கிறார். அவர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார். அவரை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்ற சுகவீனம் அவரது உளச் சிக்கலால் நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள்- ஆங்கிலேய ஆட்சியும் அதன் சட்டங்களும் அவருக்குப் பாதுகாப்பளித்தன என்ற நம்பிக்கைக்கும், அகிம்சையில் அவருக்கு இருந்த பிடிப்புக்கும் இடையே எழுந்த முரண்பாடு அவரது உள்ளத்தைப் பிணித்தது என்கிறார்கள் அவர்கள்.

போர்க்காலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும், போர் முடிந்ததும் விடுதலை தருவதாகவும் பிரிட்டன் உறுதியளித்தால், இரண்டாம் உலக யுத்த போர் முனைப்பில் ஒத்துழைப்பதாக, நேரு மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களைப் போலவே காந்தியும் பிரிட்டிஷ் அரசிடம் சொல்கிறார்.

1931ல் லண்டனில் நடந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் காந்தி, டொமினியன் அந்தஸ்தில் உள்ள இந்தியா தனக்கென ராணுவம் கொண்டதாக இருக்கும் என தெளிவுபடுத்தினார். தெர்மோபிலையில்(Thermopylae) போரிட்ட பண்டைய கிரேக்கர்களுக்கு இணையான வீரத்தையும் போர்த்திறனையும் கொண்டவர்கள் ராஜ்புத்திரர்கள் என்ற ஜேம்ஸ் டாட் உடைய மேற்கோளைச் சுட்டி , அவர் இந்தியாவின் ராணுவப் பாரம்பரியத்தைக் குறித்துப் பேசினார். தன்னைக் காத்துக்கொள்ள இந்தியாவுக்கு ராணுவம் தேவையாக இருக்கிறது- இதன் நீட்சியாக, படையெடுப்பவர்களை முன் கூட்டித் தடுக்கவும் ராணுவம் அவசியமாக இருக்கிறது. தன்னைக் காத்துக் கொள்ளவும், அளவுக்கேற்றபடியும் போரிடுவது நியாயமானதே என்று தன் நோபல் பரிசு உரையில் குறிப்பிட்ட ஒபாமாவும் காந்தியும் ஒத்த சிந்தனையுடைவர்களாக இருக்கின்றனர் என்றுகூட சொல்லலாம்.

ஒபாமாவிற்கு உரையைத் தயாரிக்க உதவியவர்கள், போர் மற்றும் வன்முறைப் போராட்டங்களை அஹிம்சை வழியில் எதிர்கொள்வது குறித்து காந்தியின் கருத்துகளை மேலும் விவரமாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். சரியான சூழ்நிலைகளில் மட்டுமே அஹிம்சை நெறி முயற்சி செய்யப்பட்டு வெற்றிபெற முடியும் என்று காந்தி பலவிதமாகப் பல்வேறு இடங்களில் தெளிவாகக் கூறியுள்ளார். பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அவற்றுக்குத் தீர்வு காணவும் சத்தியாக்கிரகத்தைப் பயன்படுத்தத் தக்க சூழ்நிலைகள் எவை என்பவற்றைக் குறித்து அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார்.

(முற்றும்)

குறிப்பு : கட்டுரையாளர் லாய்ட் ஐ. ருடால்ப் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியலியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். சூஸன் ரூடால்புடன் இணைந்து இவர் எழுதிய ”பின்நவீனத்துவ காந்தி மற்றும் இதர கட்டுரைகள்” என்ற புத்தகத்தின் மூன்றாவது அத்தியாத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய சஞ்சிகைகளில் ஒன்றான எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியின் நவம்பர் 20, 2010  இதழில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது இந்தக் கட்டுரை.

(நன்றி : Economic and Political Weekly)